பிரிவு
விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று இரட்டையராக இருந்தவர்கள் 1965ஆம் ஆண்டு எம்எஸ்வி என்றும் டி. கே. ராமமூர்த்தி என்றும் இருவராய்ப் பிரிந்தார்கள். அதைத் தொடர்ந்த பதினைந்து ஆண்டுகள் எம்எஸ்வி தமிழ்த் திரையிசையில் மெல்லிசை மன்னராய் கோலோச்சினார், ராமமூர்த்தி மெல்ல மெல்லக் காணாமல் போனார். ஆனால் அதெல்லாம் எதிர்காலத்தில்தான். 1965ஆம் ஆண்டில், திரையிசை ரசிகர்களுக்கு எம்எஸ்வி படைத்த பாடல்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
1964ஆம் ஆண்டின் உச்சங்களை 1965ல் இவர்கள் தொடவில்லை என்றாலும், அந்த ஆண்டும் நமக்குச் சில மகத்தான பாடல்களையும் என்றும் மறக்க முடியாத பாடல்களையும் கொடுத்தனர். இன்றும் அந்தப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன, இனி வரும் பல காலமும் அவை நம்மோடிருக்கும்.
இதுதான் “எங்க வீட்டுப் பிள்ளை“யின் ஆண்டு- இதில் வரும், “நான் ஆணையிட்டால்” என்ற எம்ஜிஆர் பாடல்,மிகப் பிரபலமானது என்பது மட்டுமல்ல, மிகவும் பகடி செய்யப்பட்டதும்கூட. அதன் சக்தி வாய்ந்த, தொடர்ந்து ஒலிக்கும் தாளம், டிஎம்எஸ்சின் குரல், எம்ஜிஆரின் வசீகரத் தோற்றம், பாடல் வரிகள்- அனைத்தும் ஒன்று சேர்ந்து எம்ஜிஆரின் பிம்பத்தை நம் மனங்களில் உயர்த்தி நிறுத்துகின்றன. இடையிசையில் ஸ்பானிஷ் புல்-ஃபைட்டுகளை நினைவுபடுத்தும் கிடார் இசைப்பது இந்தப் பாடலுக்கு கச்சிதமாகப் பொருந்தி வருகிறது.
(இந்தப் படத்தின் கதைக்கரு முதலில் தெலுங்கு மொழியில் “ராமுடு பீமுடு” என்ற படத்தில் வந்தது, அதன்பின் பல முறை இந்திய மொழிகளில் மீளப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, மிக வெற்றிகரமாகவே என்றும் சொல்லலாம்- ராம் ஔர் ஷ்யாம், சீதா ஔர் கீதா, சால்பாஜ், கிஷன் கண்ணையா என்று எத்தனை எத்தனை ஹிட் படங்கள்! ஏறத்தாழ இந்தியத் திரைப்படங்களின் டெம்ப்ளேட்டாகவே ஆகிவிட்ட, “மாறுபட்ட மனநிலை கொண்ட இரட்டையர்கள்” என்ற கதைக்கருவின் மூலப்பொருள் பிரெஞ்சு மொழியில் அலெக்சாண்டர் டூமாஸின் கற்பனையில் உதித்தது என்கிறது விக்கி).
இந்த ஆண்டின் மற்றொரு மறக்க முடியாத பாடல், “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்“, படம் “ஆயிரத்தில் ஒருவன்”
வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களிலிருந்து மாறுபட்ட பாடல் இது- கோரஸ் பாடுபவர்களின் பங்களிப்பு அதிகம். ஜாஸ் இசையை நினைவுபடுத்தும் டிரம்ஸ் வேறுபட்ட ஒரு கதியில் இசைக்கிறது, பியானோகூட பாடலுக்கு ரிதம் அளிப்பதாகவே இருக்கிறது. இடையிசையில் வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை இருக்கிறது, சரணத்திலும் அதைச் சொல்லலாம்- ஆனால் இசைக்கருவிகள் தொகுக்கப்பட்ட முறையில் நம்மால் ஒரு மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. அவர்களின் படைப்புலகில் பெருமைக்குரிய மற்றுமொரு பாடல்.
தமிழுள்ளவரை இந்தப் பாடலும் இருக்கும் என்று நான் சொல்வது சிறிது மிகையாகத் தெரியலாம், ஆனால் பாடல் என்னவென்று பாருங்கள் – “பஞ்ச வர்ணக் கிளி” என்ற படத்தில் “தமிழுக்கும் அமுதென்று பேர்”
விஸ்வநாதன் ராமமூர்த்தி என்றால் மென்சோகம்- இந்தப் பாடலின் முன்னிசையில் வயலின்கள் எவ்வளவு இனிமையாகச் சோக உணர்வை உருவாக்குகின்றன பாருங்கள். தேன்சொட்டும் சுசீலாவின் குரலில் பாரதிதாசன் பாடல் (தன் நடிப்புத் திறமையை எவ்வளவு குறைவாகக் காட்டியிருந்தாலும் கே ஆர் விஜயாவுக்கு முழுப் புகழும் கிடைத்திருக்கும் என்ற விஷயத்தை யாராவது அவரிடம் சொல்லியிருந்தால் இது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத பாடலாக இருந்திருக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக, நாம் இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு மட்டுமே இன்புற்று மகிழ வேண்டியதாகிறது)
“ஆயிரத்தில் ஒருவன்” படத்தில்தான் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கே உரிய பெண்குரல் பாடல் – “உன்னை நான் சந்தித்தேன்“.
இதுவரை நாம் பேசிய விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரைகள் அத்தனையும் இதில் இருக்கின்றன.
இந்த ஆண்டுதான் இன்றும் பிரபலமாய் உள்ள கண்ணன் பாடல்கள் இரண்டு பி சுசிலாவின் குரலில் வந்தன- இரண்டுமே விஸ்வநாதன் ராமமூர்த்தியின் தனித்துவம் கொண்ட மெலடி பாடல்கள்.
முதலில் “பஞ்சவர்ணக் கிளி“- “கண்ணன் வருவான்“.
மற்றொன்று, “வெண்ணிற ஆடை” படத்தில், “கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல”
1965ல் இந்த இரட்டையர் வெற்றிகரமான இசையமைப்பாளர்களாக இருந்தார்கள் என்பது தெளிவு. இதுவரை இருந்த அவர்களுக்குரிய தனிப்பாணி தொய்வடையவில்லை, மேலும் மெருகேறி இன்றும் மறக்க முடியாத பல பாடல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் இந்த ஆண்டுதான் இருவரும் பிரிந்தனர். ஏன் பிரிந்தனர் என்பது குறித்து தெளிவான சித்திரம் இல்லை. இருவரும் இதுதான் காரணம் என்று எதுவும் சொன்னதாகவும் தெரியவில்லை. நாம் பேசுவது இசைதான் என்பதால் பிரிவின் காரணம் என்ன என்று தேடப் போவதில்லை. பிரிவு எம்எஸ்வியின் இசையை எப்படி பாதித்தது என்றும் அவரது இசையில் ஏற்பட்ட மாற்றங்களையும் பார்க்கலாம்.
எம்எஸ்வி பாணி இசை என்று ஒன்று உருவான ஆண்டாக எதைக் கொள்ளலாம்? விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து செய்திருந்த சில பாடல்கள் எம்எஸ்வி பெயரில் வந்தன என்று படித்திருக்கிறேன். இதில் எத்தனை உண்மை என்று தெரியவில்லை, ஊகம் மட்டுமே செய்ய முடியும். இருவரும் பிரிவது என்ற முடிவு உடனடியாக அப்போதே நடைமுறைப்படுத்தப்பட்டது என்றால் இருவரும் இணைந்து இசையமைத்துக் கொண்டிருந்த பாடல்கள் இருந்திருக்கும் என்று சொல்ல முடியும். இதுவும் ஊகம்தான். என்றாலும் 1965, 1966 ஆகிய ஆண்டுகளில் வந்த எம்எஸ்வி பாடல்களைப் பார்க்கலாம். இதில் எந்தப் பாடல்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாணியில் இருக்கின்றன என்று பார்ப்பது சுவையான ரசனை அனுபவமாக அமையக்கூடும்.
“குழந்தையும் தெய்வமும்” என்ற படத்தில் வரும் பாடல், “அன்புள்ள மான்விழியே“. காதல் பாடல், மென்சோகம், இடையிசையில் வயலின்கள், சரளமாக இசைக்கும் சரணம். எல்லாமே விஸ்வநாதன் ராமமூர்த்தி பெயரைக் கூவுகின்றன. எம்எஸ்வி பெயரில் வந்த 1965ஆம் ஆண்டு படம் இது.
இதே படத்தில் வரும் “பழமுதிர்ச் சோலையிலே” என்ற பாடலைப் பாருங்கள். ஆபேரி ராகத்தை அடிப்படையாய்க் கொண்டு அமைந்த பாடல்- மற்றுமொரு விஸ்வநாதன் ராமமூர்த்தி மெலடி போல்தான் இருக்கிறது..
“கலங்கரை விளக்கம்” படத்தில் வரும் இந்தப் பாடலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை தாங்கிய ஒன்று- தொடர்ந்து ஒலிக்கும் தாளம், எளிய ஆனால் சரளமான சரணம், பொதுவாக இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் விதம். இதுவும் 1965ஆண்டு வந்த படம், எம்எஸ்வி இசையமைத்தது.
அடுத்தது “அன்பே வா” படப்பாடல். இந்தப் படத்தில் வரும் சில பாடல்களில் “காதலிக்க நேரமில்லை” படத்தின் சாயல்களைப் பார்க்கலாம்.
அதே போல், “நான் பார்த்ததிலே” என்ற பாடலிலும் விஸ்வநாதன் ராமமூர்த்தியை நான் பார்க்கிறேன்- இதன் இடையிசையிலும் “காதலிக்க நேரமில்லை” படப்பாடல்களின் நினைவுகள் வந்து போகின்றன.
அடுத்து, “சந்திரோதயம்” படத்தில் இந்தப் பாடல்-
இதை இருவகையாகப் பார்க்கலாம். ஒன்று, விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் சில எம்எஸ்வி பெயரில் வந்தன. இரண்டு, இவை எம்எஸ்வி பாடல்கள்தான், ஆனால் ராமமூர்த்தியின் தாக்கத்திலிருந்து எம்எஸ்வி இன்னும் விடுபடவில்லை. எப்படி பார்த்தாலும் எம்எஸ்வி தனக்கே உரிய தனித்துவம் கொண்ட பாணியை 1966ன் பிற்பகுதி, அல்லது 1967ஆம் ஆண்டில்தான் உருவாக்கிக் கொண்டார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
பாணி குறிப்புகள்
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை குறித்து பலருக்கும் உள்ள கேள்வி, ராமமூர்த்தியின் பங்களிப்பைப் பற்றியது. இருவரும் பிரிந்தபின் ஒரு சில திரைப்படங்களுக்கு மட்டுமே ராமமூர்த்தி இசையமைத்தார் என்பதும் விஸ்வநாதன் எம்எஸ்வியாக மாறி திரையிசையில் பதினைந்து ஆண்டுகள் முதன்மை வகித்ததும் நமக்குத் தெரியும்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்கும்போது யார் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. நமக்குக் கிடைத்திருக்கும் குறிப்புகள் சிலவும் முரண்பட்ட தகவல்கள் அளிக்கின்றன. இது குறித்து யாரும் பொதுவில் இதுவரை பேசியுள்ளதாகத் தெரியவில்லை. விஸ்வநாதன் ராமமூர்த்தி என்றில்லை, பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று அனைவரும் மௌனம் காக்கின்றனர். பிரிவுக்கு முன்னும் பின்னும் உள்ள இசையைக் கொண்டு ராமமூர்த்தியின் பங்களிப்பு என்னவாக இருந்திருக்கும் என்று ஊகிக்க மட்டுமே இயலும். நம்மால் எம்எஸ்வியின் பாணியில் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களையும் பார்க்க முடியும். ஆனால் இந்த முயற்சியை மிகவும் தன்னடக்கத்துடன்தான் மேற்கொள்ள வேண்டும். இருவருக்கும் இணைந்து அமைத்த இசை இருவருக்கும் உரியது என்பதை மறக்காமல் இந்தப் புரிதலை நோக்கிச் செல்ல வேண்டும்.
எனவே இந்தப் பின்னணியை மனதில் வைத்துக்கொண்டு பிரிவுக்குப்பின் எம்எஸ்வி தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டபோது அடைந்த வளர்ச்சியையும் எதிர்கொண்ட இழப்புகளையும் பார்க்கலாம்.
அதற்கு முன் சில ராமமூர்த்தி பாடல்கள். 1968ஆம் ஆண்டு வெளிவந்த “நீலகிரி எக்ஸ்பிரஸ்” என்ற திரைப்படத்தில் வரும், “நான் கலைஞன் அல்ல“, என்ற பாடல்.
“தங்கச்சுரங்கம்” என்ற படத்தில் “சந்தனக் குடத்துக்குள்ளே”
இவை இரண்டுமே இனிய மெலடிக்கள் என்பதில் சந்தேகமில்லை. ராமமூர்த்தி இசையமைத்தவற்றில் சிறந்தவை. ஆனால் இந்த இரட்டையரின் இசைக்குரிய இயல்பான வேகமும் சங்கீதமும் இதில் இல்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. பாடலைச் சற்றே நுட்பமாக இசையமைக்கவும் அதன் தாள கதியில் செறிவைச் சேர்க்கவும் ராமமூர்த்தி முயற்சி செய்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ராமமூர்த்தியின் வேறு பல பாடல்களையும் கேட்டதில், இவர்கள் இசையில் இயல்பாய் ஒலிக்கும் ட்யூனும் ஆச்சரியப்படுத்தும் மெலடியும் எம்எஸ்வியின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. “இந்த மன்றத்தில் ஓடி வரும்” என்ற பாடலையோ “நாளாம் நாளாம் திருநாளாம்” என்ற பாடலையோ நினைவுபடுத்தும் எதுவும் ராமமூர்த்தி இசையில் இல்லை. ஆனால், அவர்கள் இசையில் எதற்கும் இணையான “முத்துக்களோ கண்கள்“, “பூ மாலையில்” போன்ற பாடல்களை ராமமூர்த்தி இசையில் காண முடிகிறது.
மெலடியில் எம்எஸ்வி சிறந்து விளங்கினார் என்றால் ராமமூர்த்தியின் பங்களிப்பு என்ன? இசைக்கலைஞர்களை இயக்கி பாடலுக்கு முழு உருவம் தருவதை ராமமூர்த்தி கவனித்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களுக்கு ஒரு முழுமையான வடிவம் இருந்தது, இடையிசைப் பகுதிகள் கச்சிதமாகவும் உயிரோட்டம் கொண்டதாகவும் இருந்தன. பாடலின் ஒட்டுமொத்த அமைப்போடு முழுமையாய் பொருந்தின. இசைக்கலைஞர்களை ராமமூர்த்தி தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார், அவர்கள் உற்சாகமாக வாசிப்பது பாடலை ஆக்கிரமிக்காமல் பார்த்துக் கொள்வதை நாம் கவனிக்க முடிகிறது. ராமமூர்த்தி முறையாக இசை கற்றவர் என்பதும் இசைக்கலைஞர்களை இயக்க உதவியிருக்கலாம் பின்னர் வந்த எம்எஸ்வி பாடல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களின் கட்டுக்கோப்பில் தென்படும் மேன்மையை நாம் பாராட்ட வேண்டியதாகிறது. இதற்குச் சில உதாரணங்களைப் பார்க்கலாம். ஆனால் முதலில் சொன்னதுபோல் இது வெறும் ஊகம்தான். இப்படிதான் நடந்திருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் – “நாளாம் நாளாம் திருநாளாம்”. உற்சாகம் நிறைந்த காதல் பாடல் இது, ஆனால் இசைக்கருவிகளை இயக்கிய விதம் என்று பார்த்தால் இதில் உள்ள ஒழுங்கை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. தபலாவின் ஓசை பாடலின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அடங்கி ஒலிக்கிறது.
இது “சந்திரோதயம் ஒரு பெண்ணானது“. எம்எஸ்விக்கே உரிய ட்யூன், இதன் இசைக்கருவிகளின் தொகுப்பு பாடலின் தொனிக்கு ஏற்ப மாறுகிறது, பல்லவி முதலே தபலா உரத்து ஒலிக்கிறது, அது சரணத்திலும் தொடர்கிறது. “நாளாம் நாளாம்” பாடலில் கவனித்திருக்க முடியாத தபலாவை இங்கே கவனிக்காமல் இருக்க முடியாது.
1968ஆம் ஆண்டு “காவல்காரன்” படத்தில் வந்த இன்னொரு எம்எஸ்வி பாடல், “நினைத்தேன் வந்தாய்”
இசைக்கருவிகள் மட்டுமல்ல, பாடகர்களுக்கும் நிறைய சுதந்திரம் இருக்கிறது. இடையிசையில் முன்னளவு கட்டுக்கோப்பு இல்லை. ஒரே இடத்தில் வந்து சேர்வது போலல்லாமல், இரண்டு மூன்று இடங்களில் இணைகிறார்கள். எம்எஸ்வியின் இசையில் இந்த சுதந்திரம்தான் மிகப்பெரிய தனித்துவமாக இருக்கும்.
முருகன் பாடல்கள் இரண்டு, இரண்டுமே ஏறத்தாழ ஒன்று போன்றவை- ஒன்றில் சுசிலாவின் தனிக்குரல், மற்றொன்றில் சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் இணைந்து பாடுகிறார் (இந்த இரண்டில் எது விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் எது எம்எஸ்வி பாடல் என்று கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள். இவ்விருவரின் இசை குறித்து நான் சொன்ன விஷயங்கள் இந்த இரண்டு பாடல்களில் ஒத்து வருகிறதா என்று பார்ப்பது சுவாரசியமாக இருக்கலாம்.
இதுதான் முதல் பாடல்-
இது இரண்டாம் பாடல்-
பிரிவுக்குப்பின் எம்எஸ்வி இசையில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொன்னதுபோல், 1965லும் 1966ன் துவக்கங்களிலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி தாக்கம் இருந்திருக்கும், ஆனால் பிற்கால எம்எஸ்வி மிகவும் உற்சாகமானவர். எம்எஸ்வி மீதிருந்த தடைகள் விலகியது போல அவர் பாடல்கள் பிரகாசமாயின, வேகம் கூடின. தன பாடல்களில் மேற்கத்திய பாணி இசையை இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொண்டார், மெல்ல மெல்ல அவரது உற்சாகமான பாடல்களே எம்எஸ்வி பாணி பாடல்கள் என்றாகின. இந்த மாற்றத்தைச் சுட்டும் இரு பாடல்கள் பார்க்கலாம்.
இசைக்கருவிகள் கட்டுக்கோப்புடன் ஒலிக்கின்றன, இது சந்தோஷமான பாடல் என்றாலும் அப்படி ஒன்றும் மகிழ்ச்சி பிரவாகமாய் பெருக்கெடுத்து ஓடுவதில்லை (இந்தப் பாடலும் “குங்குமப் பொட்டின் சங்கமம்” பாடலும் ஷங்கர் ஜெய்கிஷனின் “யே ஹோ மேரா பிரேம் பத்ர பட்கார்” பாடலின் தாக்கம் கொண்டவை என்ற எண்ணம் எனக்கு உண்டு).
இந்தப் பாடலை ஒப்பிட்டுப் பாருங்கள். எந்தத் தடையும் இல்லாத பாடல், சந்தோஷமும் உற்சாகமும் கரைபுரண்டோடும் பாடல். “ஊட்டி வரை உறவு” படத்தில் வரும், “பூ மாலையில்”
இறுதியாய் இரு பாடல்கள்.
முதலில் விஸ்வநாதன் ராமமூர்த்தி. சந்தோஷமான டூயட்டிலும் மென்சோகம்.
இது எம்எஸ்வி. சோகப்பாடலிலும் மகிழ்ச்சியின் சாயல்.
கட்டுக்கோப்பான இசையையும் கச்சிதமான பாடல் அமைப்பையும் எம்எஸ்வி இழந்திருந்தால், மெலடியில் உற்சாகமும் மகிழ்ச்சியும் கூட்டி அதைச் சரிக்கட்டிக் கொள்கிறார்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி தமக்குப் பின் வந்த திரையிசையில் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம். தமிழ் மட்டுமல்ல, பிற மொழிகளிலும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பேச வேண்டும். அக்காலத்தைய இந்தி மற்றும் தெலுங்கு திரையிசை குறித்த ஒரு பார்வையும் தேவைப்படுகிறது.
(தொடரும்)