இறுதி அஞ்சலி: திரு. ஆ.ப.ஜெ அப்துல் கலாம்

apj_abdul_kalam_President_India_Kalaam

அலைகடல்
பொன்மணல்
புனித யாத்ரிகர்களின் நம்பிக்கை
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு
இவை கலந்த உருவம் நீ

என தன் அன்னையைப் பற்றி அக்னிச்சிறகுகளில் எழுதினார் திரு.அப்துல் கலாம் அவர்கள். இன்று அவற்றின் உருவமாக அவரே ஆகியிருக்கிறார். என் வாழ்க்கையே என் செய்தி எனக் கூறிய மகாத்மாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து நம் நிகழ்காலத்தின் வரலாறாகியுள்ளார் திரு.அப்துல் கலாம்.
எனது மாணவப் பருவத்தில் இந்தியா டுடே இதழின் புகைப்படங்கள் வழியாகவும் கட்டுரைகள் வழியாகவும் கலாமைப் பற்றி முதன்முதலில் அறிந்தேன். கலைமகளின் மர சிற்பம்,கச்சிதமான சிறு அறை,வீணை மற்றும் புத்தகங்கள் என அவரும் அவரது வாழிடமும் அவரது ஆளுமையும் ஏற்படுத்திய ஈர்ப்பும் தாக்கமும் அவரது மரணம் வரையிலும் இருந்தது.மரணத்திற்குப் பின்னர் மேலும் அது தீவிரமானது.திரு.கலாம் அவர்கள் உலகியலில் நமக்குள் பெருந்தன்மை இல்லாமல் பூசலிட்டு சண்டையிட்டு சத்தம் போட்டு எல்லைகளை குறுக்கிக் கொண்டு பொறுப்புகளை முழுமையாக ஏற்காமல் அடுத்தவருக்கு உதவாமல் நாம் வாழும் அதே உலகில்தான் தனது எளிமையான மேன்மையான மகத்துவம் மிக்க வாழ்க்கையை வாழ்ந்து வாழ்வின் மேலான வேறொரு சாத்தியத்தைக் காட்டியுள்ளார்.
நண்பர் அல்லிவிளாகம் திரு.பாண்டியன் அவர்களுடன் அப்துல் கலாம் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மயிலாடுதுறையிலிருந்து இராமேஸ்வரம் புறப்பட்டேன்.திரு.பாண்டியன் அவர்கள் ஆசிரியராய் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.தனது கிராமத்தில் முப்பது ஆண்டுகளாக மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை மாணாக்கருக்கு இலவச டியூஷன் வகுப்புகள் எடுத்தவர்.சாதிப்பூசல் மிகப் பெரிதாய் உருக்கொண்டிருக்கும் அப்பிராந்தியத்தில் அவரது டியூஷன் வகுப்பு ஒரு நுண் செயல்பாடாய் மெல்லிய மாற்றம் உருவாக காரணமாக இருந்தது.அவரிடம் இலவச டியூஷனில் படித்த மாணவர்கள் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கு மேல் இருக்கும்.திருமணமாகாதவர்.இப்போது இயற்கை விவசாயம் செய்கிறார்.
ஜூலை 29ம் தேதி காலை பத்து மணி அளவில் புறப்படுவதாய் திட்டமிட்டிருந்தோம்.மதியம் பன்னிரண்டு மணிக்குத்தான் புறப்பட முடிந்தது.மயிலாடுதுறையிலிருந்து முத்துப்பேட்டை சென்று கிழக்குக் கடற்கரை சாலை வழியே இராமேஸ்வரம் செல்லத் திட்டம்.பேருந்து சிறு சிறு கிராமங்கள் வழியே சென்றுகொண்டிருந்தது.எல்லா கிராமங்களிலும் மக்கள் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர்.அவரது படத்துக்கு மாலை அணிவித்து ஊதுபத்தி ஏற்றியிருந்தனர்.ஒரு கிராமத்தில் கூட இந்நிகழ்வு இல்லாமல் இல்லை.இந்திய தேசிய காங்கிரஸ்,தமிழ் மாநில காங்கிரஸ்,தி.மு.க,தே.மு.தி.க,நாம் தமிழர் கட்சி,பா.ஜ.க,பா.ம.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் சுவரொட்டிகளை பெரும்பாலான ஊர்களில் கண்டோம்.வேற்றுமையே இயல்பான அரசியல் கட்சிகள் சச்சரவின்றி கலாம் நினைவைப் போற்றியுள்ளன.ஒரு மனிதர் மேல் கொள்ளும் பிரியத்தால் இலட்சோப லட்சம் மக்கள் இணைவார்கள் என்பதைக் கண்டது ஒரு பெரும் வரலாற்று நிகழ்வின் சாட்சியமான உணர்வை அளித்தது.
அக்னிச்சிறகுகள் புத்தகத்தை  மாணாக்கருக்கு பரிசாக அளிப்பதையும் மங்கள விழாக்களில்  அன்பளிப்பாக வழங்குவதையும் ஒரு பழக்கமாகவே மேற்கொண்டவர் திரு.பாண்டியன். அப்புத்தகத்தின் பல பகுதிகளை நினைவுபடுத்திக் கொண்டு வந்தார். ஒரு எளிமையான வாழ்க்கைமுறையை அவர் தேர்ந்தெடுத்ததை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

’’வானத்துப் பறவைகளைப் பாருங்கள்;வயல்வெளி மலர்களைப் பாருங்கள்;அவை விதைப்பதுமில்லை,அறுப்பதுமில்லை களஞ்சியங்களில் சேகரிப்பதுமில்லை வானத்துத் தன்மையான் இறைவன் அவற்றை உடுத்துகிறான்;உணவளிக்கிறான்’’என்ற விவிலியத்தின் வார்த்தைகளை எண்ணிக் கொண்டேன்.

திரு.கலாம் அவர்கள் இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் நம்பிக்கையையும் பொறுப்புணர்வையும் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களையும் அளித்தவாறிருந்தார்.மொழி,சமயம் மற்றும் அற மதிப்பீடுகளை அவர்கள் மனதில் பதியச் செய்வதையே தனது பணியாகக் கொண்டார்.அவருக்கு இந்தியர்கள் அளித்த இடம் என்பது ஒரு தீர்க்கதரிசிக்குரியது.குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் பெயர் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் முன்மொழியப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்ய உங்களுக்கு உகந்த மங்களமான நாளைக் கூறுங்கள் எனக் கேட்ட போது உழைக்கக் கூடிய எல்லா நாட்களுமே எனக்கு மங்களமான நாட்களே எனத் தெரிவித்தவர் திரு.கலாம்.மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றார் திருவள்ளுவர்.சிகாகோ சொற்பொழிவுக்குப் பின் தாயகம் திரும்பி இராமேஸ்வரத்தில் உரையாற்றிய சுவாமி விவேகானந்தர் உள்ளத் தூய்மையே இறைவனுக்குச் செய்யப்படும் உண்மையான வழிபாடு என்றார்.ஒரு மனிதர் தனது நம்பிக்கையால் செயல்பாட்டால் எண்ணங்களால் பல மனிதர்களின் வாழ்வை பாதிக்க முடியும் என்பதே மானுடத்தின் ஆகப் பெரிய சாத்தியமாக இருக்க முடியும்.
அவரது இல்லத்திலிருந்து பேக்கரும்பு வரை சென்ற ஊர்வலத்தில் ஹிந்துக்கள்,கிருஸ்தவர்கள்,முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்கள் கலந்து கொண்டனர்.அவரது இறுதி ஊர்வலத்தில் பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் ஆகிய முழக்கங்கள் ஒலித்தன.இந்திய வரலாற்றில் கலாம் அவர்களுக்கு செலுத்தப்பட்ட இறுதி மரியாதை முக்கியமான மிகச் சிறப்பு வாய்ந்த அத்தியாயமாகும்.அவ்விதத்தில் அவர் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பு அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு அளித்த பங்களிப்புகளை விஞ்சியுள்ளது.ராலேகான் சித்தியில் திரு.அண்ணா ஹசாரே அவர்களை அவர் பார்வையாளர்களை சந்திக்கும் அறையில் சந்தித்து வணங்கியபோது அவ்வறையில் கலாமின் புகைப்படம் மட்டும் இருந்ததை நினைத்துக் கொண்டேன். கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த தேசியக் கொடி போர்த்தப்பட்ட அவரது சிறிய உடலை கரம் குவித்து வணங்கினேன்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

என்பது திருக்குறள்.

2 Replies to “இறுதி அஞ்சலி: திரு. ஆ.ப.ஜெ அப்துல் கலாம்”

Leave a Reply to MANICancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.