சஞ்சாரம் – நாவல் விமர்சனம்

sanjaaram-1-800x800

தமிழக வேளாண்பல்கலைக் கழகத்தின் இணையதளம் தமிழ்நாட்டின் மண் வகைகள் பெரும்பிரிவுகளாக நான்கு என்று சொல்கிறது; செம்மண், கரிசல் மண், செம்பொறை மண், கடற்கரை மண். இன்றைய சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் கரிசல் மண். அதைத் தொட்டுக்கொண்டிருக்கும் மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களின் பகுதிகளிலும் கரிசலுண்டு. இந்த மண்ணின் எழுத்துக்களே கரிசல் இலக்கியம். நாவலில் ரத்தினமும் பக்கிரியும் இணைந்து நாதஸ்வரம் வாசிக்கும் கரிசல் மண்ணின் கலைஞர்கள். ரத்தினம் வயதில் மூத்தவர். குடும்பஸ்தர். சாதியின் பேரால் ஏற்படும் அவமானங்களைச் சகித்துக்கொள்ளப் பழக்கப்பட்டவர். பக்கிரி இளரத்தம். தனிக்கட்டை. பதிலுக்குபதில் கொடுத்துவிடாமல் அவனால் அடங்கமுடிவதில்லை. அப்படி அவன் ஆவேசத்தில் பொங்கி எழும் சந்தர்ப்பத்தில் செய்யும் ஒரு தன்னிலைமறந்த காரியம் சில உயிர்கள் பலியாவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. அவர்கள் இருவரும் போலீஸுக்குப் பயந்து பல ஊர்களுக்குப் பயணமானபடி இருக்கிறார்கள். இந்தப் பயணத்தில் அவர்கள் நினைவுகளின் வழியாகக் கலையும், கலைஞர்களும், கரிசல் மண்ணும் நமக்கு அறிமுகமாகிறது. அதிகமான இந்த ஃப்ளாஷ்பேக்குகளால் கதையோட்டத்தில் உண்டாகும் தொய்வை ஈடுகட்டுவதற்காகவே அமைக்கப்பட்டதுபோல் அவர்கள் தப்பியோடும் விறுவிறுப்பான மையக்கதை. கரிசல் மண்ணின் நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வைப் பதிவுசெய்யும் நாவல் என்ற ஒற்றைவரியில் சஞ்சாரத்தை வரையறுப்பது கடினம். வாசித்து முடித்ததும் நாவலின் மைய நோக்கம் கூடுமானவரைக் கரிசல் மண்ணின் செவிவழிக் கதைகளைப் பதிவு செய்துவிடுவதுதானோ என்றுகூடத் தோன்றியது. கதைக்களத்தை ஆசிரியர் – விருதுநகரில் பிறந்தவர் – இதற்காகவே அங்கு அமைத்துக்கொண்டிருக்கிறார் போலும்.
மண்ணுடன் மனிதனுக்கு நேரடித் தொடர்பிருந்தபோது அது தனக்கேற்றபடி மனிதர்களை மாற்றியமைத்தது. அதில் விளையும் பயிர்கள், கால்நடைகள், தொழில், மொழி, தெய்வங்கள் என எல்லாத்துக்கும் தனித்த அடையாளமிருந்தது. நாவலை வாசிக்கும் நம்மில் அனேகம்பேர் அந்த அடையாளங்களை விட்டு விலகித் தாங்கள் வெகுதூரம் வந்திருப்பதை உணரக்கூடும்.
ஊரோடிப் பறவைகள் கூட்டம்கூட்டமாகக் கரிசல் மண்ணின் மீது பறக்கையில் ‘மண்ணு வேணுமா, பொன்னு வேணுமா’ என்று கேட்டதையும், மக்கள் மண்ணு வேணும் என்று கேட்டவரைக்கும் அவர்கள் தந்த நெல்லைத்தின்று மழை தந்ததையும், பிறகு யாரும் மண் கேட்காததால் பறவைகள் இறங்கமுடியாமல் பசியோடு அலைந்ததையும், வெயிலூத்து கிராம மக்கள் மட்டும் மண்கேட்டுவிட்டு ஆனால் அரிசியில்லா சாவி நெல்லைச் சாப்பிடத் தந்ததால் ஊரோடிகள் சாபமிட்டுப் பறந்ததையும், பிறகு ஒரு சொட்டு மழையில்லாமல் வறட்சியின் உச்சியில் அனைவரும் வருந்தி அழைத்தபிறகு ஒரேயொரு ஊரோடி வந்திறங்கித் தான் மட்டுமே மிச்சமிருப்பதாகவும் தன்னால் மட்டும் மழையைக் கொணர முடியாது என்று சொல்லித் தன் கண்ணீரில் ஒரேயொரு வேப்பமரத்தை மட்டும் பிழைக்கச்செய்து போனதையும், பிறகு அம்மரம் தழைத்துத் தன் குளிர்ச்சியால் மழையைக் கொண்டுவந்ததையும், அதனாலேயே இன்று கரிசல்மண் வேம்புகளால் நிரம்பியிருப்பதையும் சொல்கிற நாவலில் வரும் ஒரு கதை ஒருவேளை ஒருகாலத்தில் கரிசலின் தாத்தாபாட்டிகள் அனைவருக்கும் தெரிந்ததாக இருந்திருக்கக்கூடும். ஒருவேளை அடுத்த தலைமுறையில் யாருக்குமே தெரியாததாகவும் போகக்கூடும். இரண்டு சிறுவர்கள் வானத்தைப் பார்த்துக்கொண்டு ‘மொதல்ல வானம் தலையில இடிக்கிற உயரத்துலதான் இருந்துச்சாம்’ என்றும் ‘வானத்துல இருக்கறவங்க நூலேணியைப் போட்டு பூமிக்கு எறங்குவாங்களாம்’ என்றும் பேசிக்கொள்வதாக நாவலில் வரும் இடம் முப்பது வருடங்களுக்கு முன் இதே வரிகளை என் பாட்டி சொன்னதை நினைவூட்டியது. அன்று அந்தக் கற்பனை என்னைப் புளகாங்கிதம் அடையச்செய்தது. நான் பழைய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். ஆக இவை கரிசல் மண்ணின் கதைகள் மட்டுமல்ல, தமிழ்மண்ணின் கதைகள்.
நம் தலைமுறை இந்தக் கதைகளைக் கையளிக்கும் தொடர்ச்சியின் கடைசிக் கண்ணியாக இருக்கவேண்டாம் என்ற முனைப்பில் ஆசிரியர் இக்கதைகளை கிடைத்த இடங்களிலெல்லாம் நாவலில் நுழைத்துவிட்டிருக்கிறார். இவற்றால் மையக்கதையின் தொடர்ச்சி அறுபடுவதாக முதலில் களைப்பும் சலிப்பும் அடையும் வாசக மனது, பிறகு இக்கதைகள் காட்டும் மண்ணின் விரிந்த சித்திரம் மையக் கதையையே சித்திரக்குள்ளனாக ஆக்கிவிடுவதை உணர்ந்துகொள்கிறது. இக்கதைகளை குழந்தைகளுக்குச் சொல்ல இன்று நம் பகுத்தறிவு தடுக்கிறது. காந்தி ஓரிடத்தில், ‘பத்துதலை ராவணன் வருகிறான் என்பதற்காக ராமாயணத்தை அறிவுக்குப் புறம்பானதாக ஒதுக்கவேண்டியதில்லை. சிங்கமும் நரியும் பேசிக்கொள்ளும் ஈசாப்பின் நீதிக்கதைகள் குழந்தைகளை முட்டாளாக்குவதில்லை, மாறாக அறிவாளிகளாக்குகிறது’ என்று எழுதுகிறார். மனிதர்கள் ஆதிகாலந்தொட்டே தான் காணும் அனைத்துக்கும் விளக்கமளிப்பதில் முனைப்பாக இருந்துவந்திருக்கிறார்கள். அறிவியலும் உத்தேசக் கருதுகோள்களை (hypotheses) உருவாக்கி அவற்றை மெய்ப்பிப்பதன் அல்லது பொய்ப்பிப்பதன் வழியாகவே இன்றும் முன்னகர்கிறது.
800 வருடங்களுக்கு முன் மாலிக்கஃபூர் படையெடுத்து வந்தபோது அரட்டானம் என்ற கரிசல் கிராமத்தில் கோவிலைக் கொள்ளையடிக்கப் படைகளுடன் நுழைகிறான். ஊரே காலிசெய்து ஓடிவிட நாயனக்காரர் லட்சய்யா மட்டும் கோவிலில் நாதஸ்வரத்தை மெய்மறந்து வாசித்தபடி இருக்கிறார். தன் வாழ்நாளில் கேட்டறியாத அந்த இசை மாலிக்கஃபூரை மூச்சடைக்க வைக்கிறது. அவர் வாசிப்பில் கல்லால் செய்யப்பட்ட யானைச்சிலையும் காதை அசைப்பதைப் பார்த்து பிரமிக்கிறான். அவரைத் தன் எஜமான் அலா-உத்-தின் கில்ஜிக்குப் பரிசாக அளிக்க டெல்லிக்கு அழைத்துச் சென்றுவிடுகிறான். கஃபூரும் கில்ஜியும் நாதஸ்வர இசை ஒலிக்க சல்லாபிப்பதையும், பிறகு படிப்படியாக அந்த இசையே அவர்களை அழிப்பதையும், இதெற்கெல்லாம் காரணமான நாதஸ்வரம் இனி வடக்கே வரவே கூடாது என்று தடைவிதிக்கப்பட்டதையும், அதனால் இன்றுவரை எந்த வட மாநிலத்தவரும் நாதஸ்வரம் கற்காததையும் நாவலில் வாசிக்கையில் எது வரலாறு எது புனைவு என்று பிரித்தறிவது கடினம். அசோகமித்திரன் சொன்னதுபோல் புனைவுகள் அரை நிஜங்களைக் கொண்டது. அரை நிஜங்கள் நிஜங்களாகாது. ஆனால் அவைகளே புனைவுகளுக்கு உயிரூட்டுகின்றன.
பவுன் இருபது ரூபாய் விற்ற காலத்தில் ஒரு கலைஞன் கச்சேரிக்கு ஆயிரம் ரூபாய் வாங்க வழிசெய்த முதல் இசைக்கருவி இந்த நாதஸ்வரம்தான். ஆனால் அதற்கு இன்று பலதலைமுறைகளாக வித்தையைத் தங்கள் வாரிசுகளுக்குக் கையளித்துவந்த இசைவேளாளர்களின் குடும்பங்களிலேயே தொடர்ச்சியற்றுப் போகும் நிலை. கரிசலில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்குமே இதுதான். கோவில்களில் தினப்படி பூஜைகளுக்கு பதிவு செய்யப்பட்ட இசையே போதுமானதாக இருக்கிறது. சுவாமி புறப்பாடுகளின்போது வாசிக்கப்படும் மல்லாரியும் விரைவில் பதிவு செய்யப்பட்ட இசையிலிருந்தே ஒலிக்கக்கூடும். திருமணங்களில் வாசிப்பது மட்டும் இன்றும் சம்பிரதாயமாகத் தொடர்ந்தாலும் வாழ்வையே அர்ப்பணித்துக் கற்றுக்கொண்ட ஒரு கலையை வயிற்றுப் பிழைப்புக்காக மட்டும் நிகழ்த்த வேண்டியிருப்பதும், ஏதோ இதுவும் ஒரு சத்தம் என்று அங்கு அவரவர்கள் அவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டும் பேசிக்கொண்டுமிருப்பதும், சினிமாப்பாட்டு வாசிக்கச்சொல்லி வற்புறுத்தப்படுவதும் ஒரு கலைஞனுக்கு எவ்வளவு மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதை நாவலில் உணரமுடிகிறது. வருமானம்தான் சொற்பமென்றாலும் நாலு ரசிகர்கள் ரெண்டு பாராட்டுக்கள் இருந்தாலாவது அவர்கள் தங்கள் கலைக்கும் வாழ்க்கைக்கும் ஆறுதலைத் தேடிக்கொள்ள முடியும். இன்று அதுவும் அபூர்வம். வாசித்துமுடிந்ததும் ஒருமுறை ஒரு கோவிலில் நாதஸ்வரக்காரரிடம் ஜகஜனனி இனிமையாக இருந்தது என்று சொன்னபோது அவர் கண்களில் மின்னலடித்தது எனக்கு நினைவிலுள்ளது.
வெறும் பெயரைத் தவிர வேறு அனைத்தையும் இழந்துபோன ஒரு ஜமீன் தன் வீட்டிற்கு வரவழைத்து நாதஸ்வரத்தை வாசிக்கச் சொல்லிக் கேட்டுப் பாராட்டிவிட்டு, என்னிடம் மிச்சமிருப்பது இதுதான் என்று வெள்ளைக்காரர்கள் ஒருகாலத்தில் அளித்திருந்த பதக்கங்களை அக்கலைஞர்களுக்கு அணிவித்துக் கைச்செலவுக்குக் காசுகொடுத்து அனுப்புவது நாவலில் நெகிழ்ச்சியான தருணம். ஜெயமோகன் ஒருமுறை மூப்பனாரைக் குறித்து எழுதியிருந்ததை இது நினைவூட்டியது. திருமணத்தில் பங்கேற்க வரும் மூப்பனார் யாரும் கண்டுகொள்ளாமல் வெளியே நின்று வாசித்துக் கொண்டிருந்த நாதஸ்வரக் கலைஞரிடம் இரண்டு கீர்த்தனைகளை வாசிக்கச்சொல்லி, கண்மூடி இருபது நிமிடங்கள் ரசித்துக் கேட்டபின் சால்வை ஒன்றைப்போர்த்தி அவர் கையில் இரு நூறு ரூபாய்த் தாட்களைத் திணித்ததையும் அந்த நாதஸ்வரக் கலைஞர் கண்ணீர்மல்கி நின்றதையும் அக்கட்டுரையில் எழுதியிருந்தார். ஒருவேளை அதுவே அக்கலைஞர் முதலும் கடைசியுமாகப் பெற்ற அங்கீகாரமாக இருக்கலாம் என்றும் நிலப்பிரபுத்துவ காலத்தின் எதிர்மறை அம்சங்களை கணக்கில் கொள்கையில் சாதகமான அம்சங்களை மறந்துவிடுகிறோம் என்றும் எழுதியிருந்தார். சஞ்சாரம் இதை உறுதிசெய்கிறது. மண்சார்ந்த வாழ்விலிருந்து மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ளும் முயற்சியில் பெறும் வெற்றிக்கு ஈடுகொடுக்கும் வேகத்தில் கிராமங்கள் நகரங்களாக மாற்றம்பெற முடியாமற் போவதால் நகர மக்களடர்த்தி சமாளிக்க முடியாத வேகத்தில் வளர்வது ஒருபுறம், கிராமங்கள் கைவிடப்படுவது மறுபுறம். நாவலில் பொம்மக்காபுரம் என்ற கிராமம் கிட்டத்தட்ட முழுமையாகவே கைவிடப்பட்டுக் கிடக்கும் காட்சி கிராமப்பின்ணணியுடைய எந்த வாசகரையும் அசைத்துவிடக்கூடியது.
சொல்லவேண்டியதுதான் என்று தோன்றிய ஒரு குறைவும் ஒரு குறையும் நாவலில் உண்டு. பதினைந்து வருடங்களுக்கு முன்னரே இந்த நாவலுக்கான விதை விழுந்துவிட்டதாக முன்னுரையில் ஆசிரியர் எழுதுவதால் நாதஸ்வரத்-தவில் கலைஞர்களின் இனவரைவியல் தகவல்களை ஊடுபாவாக அதிகம் எதிர்பார்த்தேன். சீவாளி செய்யப்படுவதன் சுருக்கமான குறிப்பைத்தவிர நாவலில் வேறு ஏதுமில்லை. தவிலைப்பற்றி சுத்தமாக எதுவுமேயில்லை. குறையாகப்பட்டதும் ஒன்றுண்டு. புனைவாசிரியர்கள் கதைமாந்தர்களை மெல்ல மெல்ல வாசகருக்குள் இறங்கவிட்டுவிட்டுக் கூடியமட்டும் விரைவாக மறைந்துவிடுவது வழக்கம். அதுவே வாசிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே புனைவு அவர்களின் குண, மன நிலைகளுக்கேற்ப முற்றிலும் வெவ்வேறான தனிப்பட்ட அனுபவங்களைக் கொடுக்கிறது. ஆனால் சஞ்சாரத்தில் பாத்திரங்களுக்கும் வாசகருக்கும் இடையில் ஆசிரியர் நடந்துவந்து பேசியபடியே இருக்கிறார். இதனால் எல்லா இடத்திலும் ஒரு கதை சொல்லியின் திறமையையும், கதை என்பதன் இனிமையையும் உணரமுடியும் அதேநேரத்தில் பாத்திரங்களின் உலகத்தில் சஞ்சரித்து, தன்னிலை மறந்து, அவர்களோடு கலந்து, உணர்ச்சி மேலீட்டால் உச்சங்களைத் தொடும் வாய்ப்புகளை வாசகர் இழக்க நேரிடுகிறது. பாத்திரப் படைப்புகளின் வழியாகப் படைப்பாளி பேசுவதற்குப் பதிலாக படைப்பாளியின் வழியாக பாத்திரங்கள் பேசுகின்றன. இதனால் நறுக்கென்ற சிறுகதைகளும், செறிவுள்ள கட்டுரைகளும் கலந்துங்கட்டியுமாக வருவதைப் போன்ற உணர்வு தொடர்ந்து ஏற்பட்டது. கரிசல் கலைஞர்களின் வாழ்க்கையை இப்படி நினைவுகளில் மலரும் துண்டுக்கதைகளின் கோர்வையாக இல்லாமல் ஒரு பெரிய கதைக்களத்தில் காலமாற்றத்தின் தொடர்ச்சியுடன் அமைத்து இன்னும் உணர்சிகரமாகச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது.
எது இலக்கியம் என்பதில் சர்ச்சைகள் எப்போதும் இருந்தாலும் இலக்கிய ரசனை என்பதில் வாசகர்களுக்குக் கிடைக்கும் ஒருவிதமான நிறைவே அவர்களைத் தொடர்ந்து வாசிக்கச்செய்கிறது. அதன் போதாமையே அவர்களை எழுதத் தூண்டுகிறது. இலக்கிய ரசனை என்பது ஒருபக்கமிருக்க எஸ்ராவின் எழுத்துக்களை ‘ரசனை இலக்கியம்’ என்று வகைப்படுத்தலாம். கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், சிறுவர் இலக்கியம் என்று அவர் பயணித்துக் கொண்டிருக்கும் அனைத்திலும் ஆர்ப்பாட்டமில்லா ரசனை இழையோடியபடி இருக்கிறது. அதற்கு சஞ்சாரமும் விதிவிலக்கல்ல. இதற்குமுன் நாதஸ்வர இசையை ஒருமுறையாவது கேட்டு ரசித்திருந்தவர்கள் நாவலை வாசித்தவுடன் மீண்டும் அவ்விசை மயக்கத்தில் ஒருமுறை சஞ்சாரம் செய்ய விரும்புவர் என்பதற்கு உத்தரவாதமுண்டு.

சஞ்சாரம் (நாவல்)
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பக்: 375
முதல் பதிப்பு: டிசம்பர் 2014
உயிர்மை பதிப்பகம்
ரூ.370

One Reply to “சஞ்சாரம் – நாவல் விமர்சனம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.