இந்தியப் பருவமழையும் காரணிகளும்

இந்தியப் பருவமழை என்பது வருடாவருடம் விவசாயிகளால் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டு, வானிலை ஆராய்ச்சியாளர்களால் பல்வேறு கணிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு, பொருளாதார நிபுணர்களாலும் அரசாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஒரு நிகழ்வாக ஆகிவிட்டது. இதற்கு விவசாயத்தை பெருமளவு அடிப்படையாகக் கொண்டுள்ள இந்தியப் பொருளாதாரத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் ஒரு முக்கியக் காரணம். பருவமழை பொய்த்துப் போகும் வருடங்களில் வறட்சியை ஏற்படுத்தி பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் வல்லமை படைத்தது என்பதால், மழைக்காலம் துவங்குவதற்கு மூன்று மாதங்கள் முன்னரே அடுத்து வரும் பருவமழைப்பொழிவு எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய அறிவிப்புகள் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தாலும் பல்வேறு தனியார் வானிலை ஆராய்ச்சி நிறுவனங்களாலும் வெளியிடப்படுகின்றன. வானிலையைப் பாதிக்கும் பல காரணிகளை, அதிநவீன கணினிகள் மூலம் ஆராய்ந்து வெளியிடப்படும் இந்த முன்னறிவிப்புகள் பல தடவை தவறுவதும் உண்டு.

rainyseason

கடந்த சில வருடங்களாகவே பருவமழையின் அளவு ஒரே சீராக இல்லாமல், சில இடங்களில் வழக்கத்தை விட அதிகமாகவும் சில இடங்களில் வழக்கத்தை விட குறைவாகவும் பெய்து வருகின்றது என்பது பல நிபுணர்களின் கருத்து. புவி வெப்பமடைந்து வருவதை இதற்கான காரணமாக அவர்கள் சுட்டுகின்றனர். ஆனால், மற்றும் சிலர், குறிப்பிட்ட காலகட்டங்களில் இவ்வாறு நிகழ்வது இயல்புதான். வழக்கமாக நடைபெறும் வானிலை மாற்றங்களில் ஒன்றே இது என்று கூறுகின்றனர். கடந்த வருடத்தை எடுத்துக்கொண்டால், வானிலை ஆராய்ச்சி மையத்தின் முன்னறிவிப்பு, மழைப் பொழிவு வழக்கம்போல் தான் இருக்கும் என்று கூறியது. ஆனால், பருவமழையளவு வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது. நாட்டின் பல பகுதிகள் சரியான மழையளவைப் பெறவில்லை. இதற்கு வானிலை ஆராய்ச்சி மையம் பல காரணங்களைக் கூறினாலும்,  பசிஃபிக் பெருங்கடலில் நடைபெறும் எல் நீன்யோ என்ற வானிலை நிகழ்வு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. இந்த வருடம் வானிலை ஆராய்ச்சிமையத்தின் முன்னறிவிப்பு விவசாயிகளுக்கும் மற்றவர்களுக்கும் உற்சாகத்தைத் தருவதாக இல்லை.
வழக்கமான அளவில் 66% தான் நாட்டின் பருவமழை இருக்கும் என்று சில வாரங்களுக்கு முன் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த வருடமும் பருவமழை குறையக் காரணமாக இருப்பது எல் நீன்யோ என்ற நிகழ்வுதான் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதற்கேற்றாற்போல் வழக்கமாக ஜுன் 1ம் தேதி கேரளத்தில் துவங்கும் பருவமழை வழக்கத்தை விடத் தாமதமாக 8ம் தேதிதான் துவங்கியது. அதுமட்டுமல்லாமல், அது நாட்டின் மற்ற பகுதிகளுக்கு வழக்கமான தேதிகளில் முன்னேறவும் இல்லை. இது போன்ற பாதிப்புகள் ஏன் நிகழ்கின்றன? இது பற்றி நிபுணர்களின் கருத்து என்ன? இந்த நிலை மாறுவதற்கு வருங்காலத்தில் வாய்ப்புண்டா என்பது நம் முன் எழுந்து நிற்கும் கேள்விகள்.
தென்மேற்குப் பருவக்காற்று
பருவமழையைப் பாதிக்கும் காரணிகளைக் காணும்முன், பருவமழைப் பொழிவு நடைபெறும் விதத்தைப் பார்ப்போம். இந்தியாவின் பெரும்பகுதிக்கு மழைக் கொடையளிப்பது தென்மேற்குப் பருவக்காற்று என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம். இந்த வானிலை நிகழ்வு எவ்வாறு நடைபெறுகின்றது என்பது பற்றி பல்வேறு கோட்பாடுகள் உண்டு. அதில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்ட கோட்பாட்டை இங்கு பார்ப்போம்.
மார்ச் முதல் மே வரையிலான கோடைக்காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் வெப்பமடைகிறது. வெப்பத்தினால் காற்று விரிவடைவதால் துணைக்கண்டத்தில் காற்றழுத்தமும் குறைகிறது. முக்கியமாக நாட்டின் வடகுதிகளில், தார் பாலைவனத்தை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்தம் வீழ்ச்சியடைகிறது. மாறாக, இந்தக் காலகட்டத்தில் இந்தியப் பெருங்கடலின் வெப்பம்,   நிலத்தைவிடக் குறைவாக இருக்கிறது. இந்த மாறுபாட்டைச் சமன் செய்ய கடலிலிருந்து காற்று ஈரப்பதத்துடன் நிலத்தை நோக்கி வீசி மழையைப் பொழிய வைக்கிறது.   புவியின் தென் கோளத்தில் (Southern Hemisphere) கிழக்கிலிருந்து மேற்காக வீசும் இந்தக் காற்று, வடபகுதிக் கோளத்தை அடைந்தவுடன், புவியின் சுழற்சி காரணமாக, தென்மேற்கிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்தை நோக்கி வீசுகிறது. துணைக்கண்டத்தின் தென்முனையான குமரியில், இந்தப் பருவக்காற்று இரண்டு பிரிவாகப் பிரிந்து, ஒரு பிரிவு அரபிக் கடலோரமாகச் சென்று இந்தியாவின் மேற்குக் கரையோர மாநிலங்களான கேரளா, மஹாராஷ்ரா போன்ற மாநிலங்களில் மழை பொழியச் செய்கின்றது. மேற்குக் கரையோரமாக நீண்டிருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலை இந்தக் காற்றைத் தடுத்து மழையை பொழிய வைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இதன்காரணமாகத்தான் மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்கிலிருக்கும் தமிழகம், தென்மேற்குப் பருவக்காற்றின் போது மழையைப் பெறுவதில்லை. ‘வெறும் காத்துதாங்க வருது’ என்று காற்றடிகாலமாகவே இந்த மாதங்கள் தமிழகத்தில் அழைக்கப்படுகின்றன.
இன்னொரு பிரிவான, வங்காள விரிகுடாப்பிரிவு அந்தமான் தீவுகள், வங்கக் கடலின் கிழக்கிலுள்ள பர்மா, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றிற்கு மழைப்பொழிவை அளிக்கின்றன. அரபிக்கடல் பிரிவில் மேற்குத்தொடர்ச்சி மலை செய்த வேலையை இங்கு இமயமலை செய்கிறது. அதுமட்டுமல்லாமல், அதனால் திருப்பி விடப்படும் காற்று, வங்கக்கடலை மீண்டும் கிழக்கிலிருந்து மேற்காகக் கடந்து ஈரப்பதத்தைச் சுமந்துகொண்டு கங்கைக்கரைச் சமவெளிமாநிலங்களான பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய இடங்களுக்கு மழைப்பொழிவை அளிக்கின்றது. ஆக மொத்தம், தமிழகத்தையும், ஆந்திரத்தின் தென்பகுதியையும் தவிர இந்தியாவின் மற்ற எல்லா இடங்களும் தென்மேற்குப் பருவக்காற்றால் மழையைப் பெறுகின்றன. இவையெல்லாம் ஒரு சில நாட்களில் நடந்துவிடும் நிகழ்வுகளல்ல. இந்தியா முழுவதையும் பருவமழை சென்றடைய ஏறக்குறைய ஒன்றரை மாத காலமாகும்.  நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை சென்றடையும் தேதிகளைக் கீழே காணலாம்

Rain

(நன்றி – இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்

 

வடகிழக்குப் பருவமழை

ஜூன் மாத முதலாக சுமார் நான்கு மாத காலத்திற்கு பொழியும் தென்மேற்குப் பருவமழை, செப்டம்பரிலிருந்து குறைய ஆரம்பிக்கிறது. தொடர்ச்சியான மழையினால், இந்தியத் துணைக்கண்டம் குளிர்ந்து அதன் வெப்பம் கடலின் வெப்பத்தை விட குறைந்துவிடுவதால், காற்று அதுவரை வீசியதற்கான நேரேதிர் திசையில், அதாவது நிலத்திலிருந்து கடலுக்கு வீச ஆரம்பிக்கிறது. வடகிழக்கிலிருந்து வீசும் இந்தக் காற்று நிலத்திலிருந்து வீசுவதால், அதிக மழையைக் கொண்டுவருவதில்லை. ஆனாலும் வங்காள விரிகுடாவிலிருந்து ஈரப்பதத்தைச் சுமந்து வரும் இந்தப் பருவக்காற்று, தென்மேற்குப் பருவக்காற்றால் பயன்பெறாத தமிழகத்திற்கும், ஆந்திரத்தின் தென்பகுதிக்கும் மழையை அளிக்கிறது.
இந்தியத் துணைக்கண்டம் சூடாவது வருடம்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வுதானென்றாலும், அதைச் சமன் செய்ய கடலிலிருந்து வீசும் காற்றின் அளவும், வீசும் காலகட்டங்களும் பல்வேறு காரணிகளால் பாதிப்படைகின்றன. அதில் முக்கியமான சில, பசிஃபிக் பெருங்கடலில் ஏற்படும் எல்-நீன்யோ என்ற நிகழ்வு, அதனோடு இணைந்த தென்பகுதி அலைவு,  இந்தியப் பெருங்கடலின் இருமுனைவுறுப்பு (ஐஓடி) ஆகியவை.

எல்-நீன்யோ

பெருங்கடல்களை நாம் பல்வேறு பெயரிட்டு அழைத்தாலும் அவையெல்லாம் ஒன்றோடொன்று இணைந்தவையே. அதனால், பெருங்கடல்களில் ஓரிடத்தில் ஏற்படும் பாதிப்பு, மற்றோரிடத்தில் அது தொடர்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றுதான் எல்-நீன்யோ.  இந்தோனேசியாவைக் கிழக்கெல்லையாகவும் தென்னமெரிக்காவை மேற்கெல்லையாகவும் கொண்டு பரந்து விரிந்திருக்கும் பசிஃபிக் கடலின் வெப்பம் ஒவ்வோரு இடத்திலும் வேறுபட்டு இருக்கும். வழக்கமாக இந்தோனேசியப் பகுதியின் வெப்பநிலை தென்னமெரிக்காவின் பெரு நாட்டிற்கருகிலுள்ள பசிபிக் கடல் பகுதியின் வெப்ப நிலையை விட சுமார் 8° செல்ஷியஸ் அதிகமாக இருக்கும். ஆனால், இரண்டிலிருந்து ஏழு ஆண்டுகள் இடைவெளியில், இந்த வெப்ப நிலை வித்தியாசத்தில் மாறுதல்கள் நிகழ்வதுண்டு.  அந்தச் சமயங்களில், பெரு நாட்டின் அருகில் வெப்பநிலை அதிகரிக்கும்.
இவ்வாறு வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகரிக்கும் நிகழ்வு டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி ஏற்படுகிறது என்பதை கண்டறிந்த வானிலையாளர்கள், குழந்தை ஏசுவின் ஸ்பானிஷ் பெயரான எல்-நீன்யோ என்ற பெயரால் அந்நிகழ்வை அழைத்தனர். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (US NOAA) தோராயமாக மூன்று மாதத்தில் 0.5 செல்ஷியஸ் அளவிற்கு கிழக்கு பசிபிக்கில் வெப்பம் அதிகரித்தால் எல்-நினோ நிகழ்வு உருவாகிறது என்று குறித்தனர். இவ்வாறு ஒருமுறை வெப்பம் அதிகரித்தால் அது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப ஒன்பது மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை ஆகும். இதனோடு தொடர்புடைய இன்னொரு வானிலை நிகழ்வு தென்பகுதி அலைவு (Southern Oscillation) . இது ஃப்ரஞ்ச் பாலிசீனியத்தீவில் உள்ள தஹிதிக்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வினுக்கும் இடையேயான வளிமண்டல அழுத்த வேறுபாட்டை வைத்துக் கணக்கிடப்படுகிறது. கிழக்குப் பசிபிக்கில் வெப்பம் அதிகமான சமயங்களில் தஹிதியில் காற்றழுத்தம் குறைவாகவும் டார்வினில் அதிகமாகவும் இருக்கும். ஆக எல்-நினோ நிகழ்வுகள் நடைபெறும் சமயங்களில் தென்பகுதி அலைவுக் குறியீடு (Southern Oscillation Index) பூஜ்யத்திற்கு கீழாகவே இருக்கும். சரி கிழக்கு பசிபிக் பகுதியில் வெப்பம் அதிகரித்து காற்றழுத்தம் குறைவதால் என்ன நிகழும் ? நாம் முன்னரே பார்த்த, புவியின் தென்பகுதியில் பசிபிக் கடலிலிருந்து வீசும் வணிகக் காற்றின் அளவு குறைகிறது. அதனால் வடபகுதியில் திருப்பிவிடப்பட்டு வீசும் தென்மேற்குப் பருவக்காற்றின் அளவும் குறைவதால் பருவமழை அளவும் குறைகிறது. துணைக்கண்டத்தின் வெப்பமும் குறையாததால், அந்தப் பகுதிகள் வறட்சியைச் சந்திக்கின்றன. இங்கு மட்டுமல்லாது, ஆஸ்திரேலியாவிலும் வறண்ட வானிலையே எல்-நினோவினால் ஏற்படுகிறது. மாறாக பசிபிக் பெருங்கடலின் பல பகுதிகளில் கடும் புயல்கள் தோன்றுகின்றன. வானிலை நிபுணர்கள் இந்த இரு நிகழ்வுகளையும், அதாவது எல்-நினோ மற்றும் தென்பகுதி அலைவு இந்த இரண்டையும் இணைத்து என்சோ (El-Nino Southern Oscillation -ENSO ) என்று இந்த விளைவுக்குப் பெயரிட்டிருக்கின்றனர். என்சோவின் அளவு எப்போதும் சீராக இருப்பத்தில்லை. சில சமயம் பலமாகவும், சில சமயம் சராசரியாகவும், ஏன் பலவீனமாகக்கூட இந்த விளைவு தோன்றக்கூடும்.
எல்-நினோவிற்கு நேர்மாறான நிகழ்வு, அதாவது இந்தோனேசியாவின் பகுதிகளில் வெப்பம் வழக்கத்தை விட அதிகரித்து பெருவில் வழக்கத்தை விடக் குறைவாக இருக்கும் நிலை, லா-நினா (எல்-நினோவின் பெண்பால்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின்போது தென்பகுதி அலைவு பூஜ்யத்தைவிட அதிகமாக இருக்கும். அது பசிபிக்கிலிருந்து வீசும் வணிகக்காற்றுகளின் அளவை அதிகரித்து, இந்தியாவில் தென்மேற்குப் பருவமழையின் அளவையும் அதிகரிக்கும்.

SouthAmerica

(நன்றி : அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்

 
வழக்கமாக டிசம்பரில் தோன்றும் எல்-நினோ, இவ்வருடம் மே மாதமே தான் உருவாவதற்கான அறிகுறிகளைக் காட்டத்தொடங்கிவிட்டது. மேலே உள்ள படம், இந்த வருடம் எல்-நினோ தோன்றுவதைச் சுட்டுகிறது. பல்வேறு வண்ணங்களில் பெருங்கடல்களின் வெப்பநிலை குறிப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தில், தென்னமெரிக்காவின் அருகில், பூமத்திய ரேகைப் பகுதியில் அதிக வெப்பத்தைக் குறிக்கும் சிவப்பு வண்ணம் அதிகரித்திருப்பதைக் கவனியுங்கள்.
எல்-நினோ நிகழ்விற்கும்  இந்தியப் பருவமழைக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த வானிலையாளர்கள், பெரும்பாலும் எல்-நினோ நிகழும்போதெல்லாம், இந்தியாவில் பருவமழை பாதிக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், என்சோவின் அளவைப் பொறுத்து வறட்சி ஏற்படுகின்ற சாத்தியக்கூறுகள் மாறுபடுகின்றன. உதாரணமாக கடைசியாக, 2009ல் எல்-நினோ தோன்றியபோது, பருவமழை பொய்த்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. “எல்-நினோ தோன்றும்போதெல்லாம், பருவமழை பாதிக்கப்பட்டு அதனால் விவசாய உற்பத்திக் குறைவும் விலைவாசி உயர்வும் ஏற்படும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.15% வரை குறையக்கூடும்” என்று இதன் விளைவுகளை ஆராய்ந்த பால் காஷின், காமியர் மொகடெஸ், மெஹதி ரைஸி ஆகிய நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
 

இந்தியப் பெருங்கடல் இருமுனைவுறுப்பு (Indian Ocean Dipole)

எல்-நினோ மட்டுமே இந்திய பருவமழையை நிர்ணயிக்கும் காரணி அல்ல என்று விவாதிக்கும் வானிலையாளர்களும் உண்டு. எங்கோ தோன்றும் நிகழ்வை விட, அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல் வெப்ப நிலை மாறுதல்கள்தான் பருவமழை அளவின் வேறுபாட்டிற்கான காரணம் என்பது இவர்களின் வாதம். அதற்கான அளவீடாக பயன்படுத்தப்படுவது இந்தியப் பெருங்கடல் இருமுனைவுறுப்பு என்னும் இந்தியப் பெருங்கடலின் வெப்ப நிலை வேறுபாடு. எவ்வாறு எல்-நினோ பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை மாறுதலைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, அதுபோன்றே ஐஓடியும் இந்தியப் பெருங்கடலின் வெப்ப மாறுதல்களைக் குறிக்கப்பயன்படுத்தப்படுகிறது. இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் (அதாவது இந்தியாவின் அருகில்) வெப்பம் அதிகமாகவும் கிழக்குப் பகுதியில் வெப்பம் குறைவாகவும் இருக்கும் நிலை பூஜ்யத்திற்கு அதிகமான ஐஓடியாகவும் அதன் நேர்மாறான நிலை பூஜ்யத்திற்கு குறைவான ஐஓடியாகவும் அளவிடப்படுகிறது. எப்போதெல்லாம் ஐஓடி பூஜ்யத்திற்கு அதிகமாக இருக்குமோ அப்போதெல்லாம் பருவமழை நல்ல அளவில் இந்தியாவில் இருக்கும்.
இப்போது இந்த வருடத்திற்கான பருவமழை முன்னறிவிப்பை மீள்பார்வை செய்வோம். இந்திய வானிலை நிறுவனத்தின் படி இந்த வருடம் மே மாதமே எல்-நினோ தோன்றுவதால் பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே பொழியும் என்று அறிவித்துள்ளது. ஆனால் ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை நிறுவனம் இதை மறுத்து பருவ மழை வழக்கமான அளவில்தான் இருக்கும் என்று அறிவித்துள்ளது. ஸ்கைமெட் இதற்கான காரணமாக கூறுவது ஐஓடி பூஜ்யத்தை விட அதிகமாக இருக்கும் என்ற அடிப்படையில்தான். ஆனால், எல்-நினோ நிகழ்வையும் ஐஓடி அளவையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டும் ஒரே ஆண்டில் நிகழும்போது எல்-நினோவின் பாதிப்பே அதிகமாக இருக்கும் என்பதைக் காண முடிகின்றது. கடந்த சில ஆண்டுகளில் 1997ல் மட்டுமே எல்-நினோ நிகழ்வின்போது பூஜ்யத்திற்கு அதிகமான ஐஓடியினால் பருவமழை அதிகமாக இருந்தது. தவிர இந்திய வானிலை நிறுவனம், இவ்வருடம் பூஜ்யத்திற்கு அதிகமான ஐஓடி இருக்கும் என்பதையும் மறுதளித்துள்ளது. ஐஓடி சமனிலையில்தான் இருக்கும், எனவே எல்-நினோவின் பாதிப்புதான் அதிகம் என்பது அதன் வாதம்.
 

வெப்பமண்டலக் காற்றிடைப் பகுதி

இந்தியப் பருவமழையை விளக்கப் பயன்படும் மற்றொரு கோட்பாடு வெப்பமண்டலக் காற்றிடைப் பகுதியான Inter-Tropical Convergence Zone (ITCZ) ஆகும். பூமியின் தென்பகுதியில் வீசும் வணிகக்காற்று கிழக்கிலிருந்து மேற்காகவும் வடபகுதியில் மேற்கிலிருந்து கிழக்காகவும் வீசுகிறது என்று பார்த்தோம். இவை இரண்டும் சந்திக்கும் எல்லைக்கோடே ITCZ என்று அறியப்படுகிறது. இந்தப் பகுதியில் காற்றழுத்தம் குறைவாகவே இருக்கும். அதனால் மழைப் பொழிவும் அதிகமாக இருக்கும்.  பெரும்பாலும் பூமத்தியரேகைப் பகுதியிலேயே இருக்க வேண்டிய இந்த எல்லை, சூரியனின் வடக்கு மற்றும் தெற்கு நகர்தலால், புவியின் வட பகுதியிலும் தென்பகுதியிலும் மாறி மாறி நகர்கிறது. சூரியன் பூமியின் வடபகுதியில் சஞ்சரிக்கும் காலத்தில் அந்தப் பகுதியில் வெப்பம் அதிகரிப்பதால், இந்த எல்லை வடக்கு நோக்கி நகர்கிறது. எனவே தென்பகுதியிலிருந்து காற்று இந்தப் பகுதியில் அதிகமாக வீசி பருவமழையைப் பொழிய வைக்கிறது. பருவமழைக்காலத்தின் போது இந்திய துணைக்கண்டத்தின் நடுவே இந்த எல்லைக்கோடு இருக்கிறது. கடக ரேகையிலிருந்து மகர ரேகைக்கு சூரியன் நகர்ந்த உடன், இந்தக் கோடும் பூமத்திய ரேகைக்குத் தென்புறம் சென்று விடுகின்றது.
நாம் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், ஜூனில் தொடங்கும் பருவமழை தொடர்ந்து மழைப் பொழிவைத் தந்து கொண்டிருப்பதில்லை. பருவமழையில் அவ்வப்போது ‘இடைவேளை’ விடப்படுவது உண்டு.  இந்த இடைவேளைகளுக்குப் பிறகு பருவமழை மீண்டும் துவங்குவதில் காற்றிடைப் பகுதியின் நகர்வு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது என்பது நிபுணர்களின் கருத்து.
இப்படி அடிக்கடி இடம்மாறும் இந்தப் பகுதியை ஆராய்ந்த நிபுணர்கள், புவி வெப்பமடைதல் நிகழ்வினால், சூரியன் வடபகுதியில் சஞ்சரிக்கும் போது, இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் வெப்பம் அளவிற்கு அதிகமாக இருப்பதையும், அதனால், இந்தக் காற்றிடைப் பகுதியும் வடக்கில் வெகுதூரம் நகருகின்றது என்றும் கணித்துள்ளனர். இதனால், இந்தியத் துணைக்கண்டத்தில் மழையளவு அதிகரித்து வெள்ள அபாயம் நேரிடுகின்றது என்றும், இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்தோனேசியா போன்ற நாடுகளில் வறட்சி நிலவுகிறது என்றும் தெரிவிக்கின்றனர். இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மொத்தத்தில் புவி வெப்பமடைவது கடல் நீரின் வெப்ப மாறுபாடுகளையும் அது தொடர்பான காற்றழுத்தத்தையும், அதனால் ஏற்படும் மழையளவுகளையும் பாதிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. காற்றிடைப் பகுதியை மட்டுமல்லாது எல்-நினோ நிகழ்வுகளையும் இது பாதிக்கின்றது என்பது நிபுணர்களின் கருத்து. கடந்த சில தசாப்தங்களாகவே எல்-நினோ நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன என்பதை அந்நிகழ்வை ஆராய்ந்துவரும் வானிலையாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், புவியின் வானிலையைப் பொறுத்தவரை இது மிகக்குறைவான காலகட்ட அளவே. எனவே இது தொடர்பான அறுதியான முடிவு இன்னும் எட்டப்படவில்லை.
எத்தனை விதமான ஆராய்ச்சிகள் நிகழ்ந்தாலும், புதிய காரணிகள் கண்டறியப்பட்டாலும், இயற்கை ஏதாவது ஒரு மர்மத்தை தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது. இதனால், பருவமழையை பற்றிய முன்னறிவிப்பை எப்போதும் துல்லியமாகக் கணிக்க முடிவதில்லை. ஒரே பருவமழைக் காலகட்டத்தைப் பற்றி பல்வேறுவிதமான அறிவிப்புகளை   வானிலை ஆராய்ச்சிமையங்கள் தந்ததை மேலே பார்த்தோம். ஒருதடவை சரியாக அமையும் கணிப்பு மற்றொரு தடவை அதேபோல் அமைவதில்லை. எனவே, வானிலை முன்னறிவுப்புகளைப் பொறுத்தவரை அதை ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளலாமே தவிர, அவைகளை உறுதியான முடிவுகளாக கருதுவது தவறான பாதைக்கே இட்டுச்செல்லும்.

0 Replies to “இந்தியப் பருவமழையும் காரணிகளும்”

Leave a Reply to chndrasekaranCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.