பாரத் தர்ஷன்

The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
Robert Frost

ஆலமர் கடவுள் வீற்றிருக்கும் மயிலாடுதுறை வள்ளலார் கோவிலில் வழிபாடு செய்து எங்கள் பாரத் தர்ஷன் பயணத்தைத் துவக்கினோம்.முதல் நாள் இரவு ரயிலில் பயணம் செய்து ஜீவா வந்திருந்தார். நண்பர்கள் வெங்கடேஷும் பாண்டியன் ஜியும் வழியனுப்ப வந்திருந்தனர்.அன்று முழுநிலவு நாள்.எங்கள் வாகனம் ஹீரோ ஹோண்டா சி.டி டீலக்ஸ்.
இந்தியாவின் ஆன்மாவை தரிசிக்க வேண்டும் என்பதே பயணத்தின் நோக்கம்.பெரும் தொலைவை மோட்டார் சைக்கிளில் கடப்பது என்பது இதுவே முதல் முறை.நடைமுறை சிக்கல்களைத் தாண்டி பயணம் கிளம்பி விட வேண்டும் என்ற துடிப்பு இருவரிடமும் இருந்தது.வாகனத்தை திரு.வெங்கடேஷ் வழங்கினார்.முதல் நாள் வாகனக் காப்பீடு செலுத்தி சான்றிதழ் பெற்றேன்.என்ஜின் ஆயில் மாற்றினேன்.ஃபோர்க் ஆயில் மாற்றினேன்.வண்டியை சர்வீஸ் செய்தேன்.வாகனம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் நிலையில் இருந்தது.எங்கள் இருவரின் பைகளும் ஒரு பெரிய பையில் வைக்கப்பட்டு வாகனத்தின் பின்பக்கம் நைலான் கயிற்றால் கட்டப்பட்டது.
tanjore temple
மணல்மேடு வழியாக கொள்ளிடம் ஆற்றைத் தாண்டி கங்கை கொண்ட சோழபுரம் சென்றோம்.தமிழ்நாட்டில் ஒரு நிலையான மக்கள் நலம் நாடும் அரசை நீண்ட காலத்திற்கு வழங்கிய சோழர்களின் தலைநகரங்களில் ஒன்று.பலமுறை பார்த்தாலும் சலிக்காத ஆழ்மனதில் தங்கிவிட்ட சிற்பங்கள். துவாரபாலகர்கள், உமையொருபாகன், பைரவர், சண்டிகேஸ்வரர் பட்டாபிஷேகம். தென் நிலத்திலிருந்து பாரதம் காண புறப்படுவதால் பிரகதீஸ்வரரின் ஆசியைக் கோரினோம்.
உடையார்பாளையம் தாண்டியதும் நைலான் கயிறு நெகிழ்ந்து பயணப் பை ஆடத் துவங்கியது.ஒரு ஹார்டுவேர் கடையில் தடிமனான நூல் கயிறை வாங்கினோம்.அங்கு வந்திருந்த எலெக்ட்ரீஷியன் ஒருவர் ஸ்க்ரூ டிரைவரை பயன்படுத்தி ஒரு முடிச்சு போட்டு பையைக் கட்டினார். யதார்த்தமாக டெல்லி வரை சென்றாலும் கட்டு அவிழாது என்றார்.அவருக்கு நன்றி கூறினோம். பயணங்களில் இதைப் போன்ற சந்தர்ப்பங்களே முக்கியமானவை என்பது எனது எண்ணம்.தயக்கம் என்பது சிறிதும் இன்றி உதவ முன்வருபவர்கள் மனிதர்கள் மேலும் வாழ்க்கை மேலும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்.கோடை வெயில் உக்கிரமாக இருந்தது.மாரியம்மன் கோவில்களில் சித்திரைப் பௌர்ணமி வீதி உலா வழி நெடுக நிகழ்ந்து கொண்டு இருந்தது.முந்திரிக்காடுகளின் இளம்பச்சை விழியெங்கும் நிறைந்திருந்தது.
லால்குடியில் மதிய உணவு முடித்து கரூர் நோக்கி சென்றோம்.காவேரிக்கரையிலேயே திருச்சியிலிருந்து பயணம்.காவேரி வறண்டு போயிருந்தது.தண்ணீர் நிரம்பிய காவேரியை வருடத்தில் சில நாட்கள் மட்டுமே காண முடிகிறது.முறை வைத்து விடுவதால் கிளை நதிகளில் பாயும் போது காவேரியில் நீர் பாயாது.சமவெளி மனிதர்கள் செய்ய வேண்டியது மழைக்காலத்தில் பாயும் நீரை குளம்,குட்டை,ஏரி மற்றும் கிணறுகளில் சேமிப்பதுதான்.சோழர்கள் எங்கெல்லாம் கோவில் அமைத்தார்களோ அங்கெல்லாம் குளம் வெட்டினார்கள்.வாய்க்கால்கள் அமைத்து பாசன வசதியை விரிவுபடுத்தினார்கள்.ஆண்டுக்கொருமுறை தூர் வாரி நீர் சேமிப்பை உறுதிப்படுத்தினார்கள்.இன்று தஞ்சை பகுதிகளில் பூமியின் மேல்மட்ட ஊற்றுகளிலிருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்யும் பழக்கமே இல்லை.200 அடிக்கு கீழேயிருந்து தண்ணீர் எடுக்கின்றனர்.
sadasiva_brahmendra
கரூர் அருகிலிருக்கும் நெரூரை அடைந்தோம்.சதாசிவ பிரும்மேந்திரர் சந்நிதியை அடைந்து வணங்கினோம்.சாரை சாரையாக மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.சேலத்திலிருந்து வந்திருந்த ஒரு குழு அன்னதானம் அளித்தனர்.உணவுண்டு அங்கிருந்த அக்கிரகாரத்தில் பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் இரவு உறங்கினோம்.காலையில் பயணத்துக்கு ஆயத்தமானோம்.
ஈரோடு பகுதியில் ஒரு விவசாய நிலத்தில் இருந்த கிணற்றைக் கண்டோம்.பாசனத்துக்கு பயன்படுத்திய நீர் மணல் வழியே கீழே இறங்கி மீண்டும் கிணற்றுக்கு சென்று கொண்டிருந்தது.மேல்மட்ட ஊற்றை தக்க வைத்துக் கொள்ள இது ஒரு சிறந்த முறை.நிறைய கறையான் புற்றுகள் இருந்தன.கண்ணெதிரில் வளர்ந்து நிற்கும் புற்று ஒரு பொறியியல் அற்புதம்.சிவ லிங்க வழிபாட்டின் துவக்கப் புள்ளிகளில் ஒன்றாக புற்று வழிபாடும் இருந்திருக்கக் கூடும் என எண்ணிக் கொண்டேன்.
சத்தியமங்களத்தில் ஒரு மெக்கானிக்கிடம் வண்டியின் பேட்டரியையும் இக்னிஷன் மற்றும் பெட்ரோல் டேங்க் சாவியையும் மாற்றச் சொன்னோம்.இரண்டு மணி நேரமானது.இப்போது அனைத்தும் சரி செய்யப்பட்டிருந்தது.கானகப் பகுதிக்குள் நுழைந்தோம்.
கானகத்தில் பயணிக்கும் போது பறக்கும் அணிலைக் கண்டேன்.மான் கூட்டங்கள் தென்பட்டன.யானைகளைக் கண்டோம்.சில்வண்டுகளின் ரீங்காரம் செவியெங்கும் நிரம்பி மனதை இளகச் செய்தது.கொண்டை ஊசி வளைவுகளில் வளைந்து வளைந்து சென்றது கிளர்ச்சியான அனுபவமாயிருந்தது.கருநாடக பகுதிக்குள் நுழைந்தோம்.
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலம் செல்லும் போது மக்களின் பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களில் சமூக,சமய,பொருளாதார மற்றும் பண்பாட்டுக் கூறுகளைக் காண முடியும்.ஒரு பயண அனுபவத்தில் இவ்வகையான அவதானிப்புகள் முக்கியமானவை என்பது எனது எண்ணம்.நாங்கள் நுழைந்த மலைப்பகுதியில் வானம் கருசூல் கொண்டு லேசாக தூறலை சிதற விட்டிருந்தது.சற்று முன்னர்தான் கொடும் வெயிலில் வெந்திருந்தோம்.அந்திப் பொழுதில் நஞ்சன்கூடு சென்றோம்.ஸ்ரீகண்டேஸ்வர சுவாமி ஆலயம் சென்றோம்.விடம் உண்ட கண்டன்.எது தடையோ அதையே உணவாகக் கொள்பவன்.அதனால் எதனாலும் தடுக்க முடியாதவன்.அனைத்தையும் உண்பவனாதலால் நெருப்புமயமானவன்.ஹொய்சாள கட்டிட முறைப்படி ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது.வில்வ மாலைகள் மற்றும் மலர்ச்சரங்களால் நஞ்சுண்ட சாமி அலங்கரிக்கப்பட்டிருந்தார்.அனைத்தையும் செரித்து முன்னகரும் ஆற்றலை வேண்டினேன்.வழிபாடு முடித்து வெளியே வந்தோம்.இரவு தங்குவதற்கு இடம் தேடினேன்.சிருங்கேரி மடம் இருந்தது.அதன் மேலாளரிடம் எங்கள் பயண நோக்கத்தைத் தெரிவித்தேன்.ஒரு பணியாளரை அழைத்து கல்யாண மண்டபத்தின் அறையை தயார் செய்து வழங்குமாறு கூறினார்.அறை பெரிதாக தூய்மையாக இருந்தது.இரவு மடத்தில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டேன்.நூறு பேருக்கு மேல் கலந்து கொண்டிருந்தனர்.பெருமளவில் பெண்களும் பங்கெடுத்தனர்.கோயம்புத்தூரில் உள்ள சிருங்கேரி மடத்தின் சாரதா ஆலயத்திற்கு சென்றிருக்கிறேன்.திருச்சியில் உள்ள கோவிலுக்கும் சென்றிருக்கிறேன்.சிருங்கேரி மடத்தின் ஆலயங்கள் தூய்மையுடன் உள்ளன.பூஜை பிரசாதத்துடன் அறைக்கு வந்தேன்.ஜீவாவுடன் சேர்ந்து உண்டேன்.தூக்கம் சுழற்றி வந்தது.எனது வழக்கப்படி படுத்ததும் உறங்கினேன்.மறுநாள் காலை மேலாளரிடம் நன்றி தெரிவித்து விட்டு சோம்நாத்பூருக்கான மார்க்கத்தைத் தெரிந்து கொண்டு கிளம்பினோம்.
somnathpur
சோம்நாத்பூர் இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.பேளூர் ஹளிபேடு ஆலய தோற்றங்களை ஒத்தது.பூசனைகளோ வழிபாடோ இல்லை.சிறப்பான சிற்பங்கள் இருந்தன.பெருமளவு நேரம் அவற்றைக் கண்டோம்.ஜீவா புகைப்படமாக எடுத்துத் தள்ளினார்.மொத்தம் எவ்வளவு எடுத்தீர்கள் என்று கேட்டேன்.முந்நூறு என்றார்.எங்கள் திட்டப்படி அடுத்து தர்மஸ்தலா செல்ல வேண்டும்.மைசூர் சென்று செல்ல வேண்டும் என வழி சொன்னார்கள்.மைசூருக்குப் பின் மோட்டார் சைக்கிளை ஜீவா ஓட்ட ஆரம்பித்தார்.
நிதானமாக வண்டி ஓட்டுவது என்னுடைய பழக்கம்.சராசரியாக மணிக்கு 40-45 கி.மீ வேகத்தில் செல்வேன்.வாகனம் ஓட்டும் போது என் மனதின் தாள கதிக்கு ஏற்ப வாகனத்தின் வேகத்தையும் அமைத்துக் கொள்வேன்.காட்சிகளை முழுமையாக உள்வாங்குவேன்.மனிதர்களை கிராமங்களை வேடிக்கை பார்ப்பேன்.சில இடங்களில் முழுமையாக நின்று அப்புதிய இடத்தின் சூழலை கிரகிப்பேன்.ஜீவா வேகமாக வண்டி ஓட்டுவதில் ஆர்வம் காட்டுபவர்.என்னால் எவ்வளவு வேகமாக வண்டி ஓட்டுபர்கள் பின்னாலும் எந்த அல்லலும் இல்லாமல் அமர்ந்து கொள்ள முடியும்.எப்படி வாகனத்தை இவ்வளவு வேகமாக இயக்குகிறார்கள்  என ஆச்சர்யப்படுவேன்.வாகனத்தின் விரைவுக்குத் தக்கவாறு காட்சிகளை உள்வாங்கி பயணிப்பேன்.மதியம் 2 மணிக்கு ஒரு சாலையோர உணவகத்தில் உணவருந்தினோம்.குழம்பும் ரசமும் மோரும் கிடைத்தது.உணவு சுவையாக இருந்தது.சில மணி நேரப் பயணத்தில் திபெத்தியர்களைக் கண்டோம்.அவர்களிடம் உரையாடிய போது ஒரு பௌத்த மடாலயம் அருகே உள்ளது என்ற தகவலைக் கூறினர்.அங்கே சென்றோம்.சீனா திபெத்தை ஆக்கிரமித்தபோது திபெத்தியர்களுக்காக இந்திய அரசு உருவாக்கித்தந்த குடியேற்றங்களில் இதுவும் ஒன்று.அனைத்தும் பௌத்த முறைப்படி அமைக்கப்பட்டிருந்தன.இளம் லாமாக்களை காண்பதற்கே வாஞ்சையாக இருந்தது.அறுபது அடி உயரமான பிரும்மாண்டமான புத்தர் சிலை முன் அமர்ந்திருந்தோம்.புத்தருக்கு அருகில் 58 அடி உயரத்தில் பத்மசாம்பவா மற்றும் அமிதயூஸ் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.புத்தரை பார்த்துக் கொண்டே இருந்த போது அழுகை வந்தது.கருணையே வடிவானவர்.எப்போதும் அன்பு செலுத்துபவர்.ஞானத்தின் பாதையைக் காட்டுபவர்.பிரியத்துடன் அழைப்பவர்.பூரண ஞானம் பொலிந்த நன்னாடு;புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு என்ற பாரதியின் வரிகள் ததாகதர் முன் அமர்ந்த போது மனதில் மந்திரமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.
குடகு மலைப்பகுதிகளில் பயணித்தோம்.கண்களுக்கு இதமளிக்கும் காட்சிகள்.குளுமையான காலநிலை.பாக்கு மரங்களின் பசுமை.மிளகின் நறுமணம்.சிறுசிறு ஓடைகள்.வாழ்வில் நான் பார்த்த காட்சிகளிலேயே மிக அழகானவை அப்பிராந்தியத்தில் இருந்தன.மெக்காராவைக் கடந்து  சென்றோம்.மாலை 6 மணிக்கு மழை பிடித்தது.ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை.மழை விட்டதும் கிளம்பினோம்.மாலை 6 மணிக்கு மேல் பயணிக்கக்கூடாது என்பது எங்களுக்குள் ஒரு விதி.ஆனால் ஜீவா இரவு தர்மஸ்தலா சென்று விடலாம் என சொன்னார்.நான் வற்புறுத்த விரும்பவில்லை.எங்கள் பயணத்திலேயே மிக அபாயமான ஒரு கட்டம் அன்றைய இரவு யாத்திரை.கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கு மேல் பயணித்து தர்மஸ்தலா அடைந்தோம்.பைக் ரைடர்ஸின் பலமே பகலில் தான்.நிறைய மனித நடமாட்டம் இருக்கும்.மெக்கானிக் ஷாப் திறந்திருக்கும்.ஏதேனும் கோளாறு என்றால் சரி செய்ய முடியும்.செல்லும் ஊருக்கான வழி சொல்ல ஆட்கள் இருப்பார்கள்.இரவில் இவை எவையும் சாத்தியமல்ல.ஜீவா எந்த யோசனையும் இன்றி வாகனத்தை இயக்கினார்.பயணத்தின் போது பூசலிடுவதை நான் விரும்புவதில்லை.எதுவும் பேசாமல்  இருந்தேன்.தர்மஸ்தலாவில் ஆலய நிர்வாகத்திடம் யாத்ரி நிவாஸ் இருந்தது.அங்கே சாவி பெற்றுக் கொண்டு அறைக்குச் சென்றோம்.மணி இரவு 11 இருக்கும்.பசிக்கிறது சாப்பிடலாம் என்றார் ஜீவா.நீங்கள் சாப்பிட்டு விட்டு வாருங்கள் எனக் கூறி விட்டு படுத்து உறங்கி விட்டேன்.
காலையில் மஞ்சுநாத சுவாமியை வணங்கினோம்.பலவிதமான வழிபாடுகள்.அங்கப்பிரதட்சணம்,துலாபாரம்,அர்ச்சனை.ஒரு காலத்தில் முக்கியமான ஜைன ஆலயமாக இருந்தது என்பதை நினைத்துக் கொண்டேன்.அங்கிருந்து சிருங்கேரி புறப்பட்டோம்.நெடிந்துயர்ந்த மலைகள்-பசுமை கொண்ட மரங்களினூடாகப் பயணித்தோம்.அழகான மலை sringeriகிராமங்கள்.சில்வண்டுகளின் ரீங்காரம்.நிழலின் அடர்த்தியால் குளுமை .கொள்ளும் காற்று.இயற்கையின் கருணை முன் பணிந்து நின்றோம்.இவற்றைக் கடந்து செல்கிறோமே என மனம் விம்மியது.இங்கேயே வாழ்ந்து விடலாமே என எண்ணிணோம்.ஆங்காங்கே நிறுத்தி மதியத்தில் சிருங்கேரி சென்றோம்.மடத்தின் மேலாளர் மன்னார்குடிக்காரர்.என்னுடைய ஊர் மயிலாடுதுறை எனச் சொன்னதும் ரூ.100 வாடகையில் ஒரு அறையை வழங்கினார்.இரவு சிருங்கேரி மடாதிபதி செய்யும் சந்திர மௌலீஸ்வர பூஜைக்கு வந்து விடுங்கள் எனச் சொன்னார்.சிருங்கேரி ஆலயம் அழகாக தூய்மையாக பராமரிக்கப்பட்டிருந்தது.துங்கபத்திரா நதிக்கரையில் எழுந்துள்ள இந்த சிற்றூர் இந்தியாவின் சமய வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் ஆற்றியுள்ள பங்களிப்பு மிகப் பெரிது.விஜயநகர சாம்ராஜ்ய ஸ்தாபிதத்திற்கு காரணமான வித்யாரண்யர் சிருங்கேரி மடத்தின் துறவியே.உலகில் எந்த பேரரசையும் விஜயநகருக்கு ஈடாக சொல்ல முடியாது.
உலக வரலாற்றில் ஒரு சுவையான விஷயமுண்டு.எண்ணிப் பார்க்க வேண்டிய ஒரு விஷயமிது.பல பேரரசுகள் சில போர்களால் சின்னாபின்னமாகின்றன்.வெற்றி கொண்ட அரசர்கள் போர் வெற்றிக்காக நினைவு கொள்ளப்படுகிறார்களே தவிர சிறந்த ஆட்சியாளர் என பெயரெடுப்பதில்லை.ஒரு பேரரசு பல வருட முயற்சியின் விளைவாக மக்களிடம் ஒருங்கிணைப்பை உருவாக்குகிறது. விவசாயிகள், கைவினைஞர்கள், கலைஞர்கள், கொல்லர்கள், தச்சர்கள், இசைவாணர்கள். புலவர்கள், பூசாரிகள், வியாபாரிகள், ஆயர்கள், போர்வீரர்கள் என பலதரப்பட்டவர்களை இணைத்து அவர்களுக்குள் சகஜத்தன்மையை உருவாக்கி ஒரு அரசை நிறுவும் போதே அது பேரரசாகிறது.பேரரசாகும் தோறும் செல்வ வளம் பெருகுகிறது. அனைவரும் அந்நாட்டின் செல்வத்தை மட்டுமே காண்கின்றனர்.அதன் செல்வத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துக்காகவே ஒரு ராணுவம் உருவாகிறது. கொலைவெறி கொண்ட கொள்ளையையும் படுகொலைகளையுமே இலட்சியமாய் கொண்ட ஒருவன் அந்த ராணுவத்துக்கு தலைமை ஏற்கிறான்.அந்நாடு வெற்றி கொள்ளப்பட்டு நிர்மூலமாக்கப்படுகிறது. மக்கள் அராஜக ஆட்சியாளனால் ஒருங்கிணைக்கப்படுவதில்லை.சிதறிப் பிரிகின்றனர்.கைவிடப்படுகின்றனர். அவர்களை இணைக்கும் ஒரு நல்ல அரசனுக்காக காத்திருக்கின்றனர்.சில சமயம் அது நிகழ்கிறது.பல சமயம் நிகழாமல் போகிறது.
விஜயநகர சாம்ராஜ்யம் உலகம் கண்ட மகத்தான கனவு.அது அழிந்த விதம் இன்றும் ஒரு கொடுங்கனவாக எஞ்சுகிறது.
கல்விக்கான தெய்வமான சாரதாம்பிகையை வணங்கினோம்.சிருங்கேரி மடம் அமைந்திருக்கும் நரசிம்ம வனம் பகுதியில் சுற்றினோம்.இரவு உணவை மடத்தில் உண்டு விட்டு பூஜைக்குச் சென்றோம். 50 பேர் கூடியிருந்தனர். இரு இளம் பெண்கள் அற்புதமாகப் பாடினர். பூஜை இரவு 10.30 வரை நீடித்தது.பூஜை முடிந்ததும் அறைக்கு வந்து படுத்ததும் உறங்கினேன்.
மறுநாள் அதிகாலை துங்கபத்திராவில் குளித்தோம்.மலைத்தண்ணீர் அடர்த்தியாக இருந்தது.கிருஷ்ண தேவராயரை ஹரிஹர புக்கரை வித்யாரண்யரை நீராடும் போது நினைத்துக் கொண்டேன்.காலை உணவு முடித்து உடுப்பிக்குப் பயணமானோம்.வழியில் ஆகும்பே மழைக்காடுகளைக் கண்டோம்.வசீகரமான பிரதேசம்.வனப் பகுதியைத் தாண்டி சமவெளி அடைந்து கடல்புறம் நோக்கிச் சென்றோம்.
உடுப்பி கிருஷ்ணர் ஆலயத்தில் வழிபட்டோம்.யட்சகானம் பற்றிய ஒரு விரிவுரை ஆலயத்தின் ஒரு பகுதியில் நிகழ்ந்து கொண்டிருந்தது.மக்கள் கவனத்துடன் ஆர்வமாக அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.நாங்களும் கேட்டோம்.மற்றொரு பகுதியில் பரத நாட்டியம் நடந்து கொண்டிருந்தது.ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் தமிழ் பாடல்கள் ஒலித்தன.ஊத்துக்காடு எங்கள் ஊருக்கு பக்கம் என்று ஜீவாவிடம் சொன்னேன்.
ஒரு ஆலயத்தின் பல்வேறு சாத்தியங்களைப் பற்றி யோசித்தேன்.கல்வி,இசை,நாட்டியம்,ஓவியம்,சிற்பம் ஆகிய விஷயங்களுக்கான இடத்தை ஆலயங்கள் வழங்கினால் என்ன?ஆலயத்தில் இசையும் நாட்டியமும் நிகழ வேண்டும்.சிற்பங்களை விரும்புபவர்களுக்கான ஒரு வெளியை ஆலயங்கள் உருவாக்கித் தர வேண்டும்.திருமண நிகழ்வுகளை ஆலயங்களில் ஒரு கட்டணத்தை வசூலித்துக் கொண்டு அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்குவித்தால் ஆலயங்களுக்கும் வருமானமிருக்கும்.திருமண நிகழ்வுகள் எளிமையாக நிகழ ஒரு வாய்ப்பு உருவாகும்.உடுப்பி ஆலயம் இந்த எண்ணத்தை உருவாக்கியது.மதிய உணவை ஆலயத்திலேயே உண்டுவிட்டு கார்வார் நோக்கி புறப்பட்டோம்.
நிலமும் கடலும் இணையும் ஒரு புள்ளியில் அரபிக்கடலின் அழகையும் விரிவையும் கண்டோம்.மெய் சிலிர்த்தது.கடல் காற்று அலைமோதும் என் –ஹச்- 17ல் விரைந்து சென்றோம்.அன்று வாகனத்தை நான் தான் ஓட்டினேன்.கடலோரத்தில் முருதேஷ்வர் என ஒரு கோயில்.கோபுரத்தின் உச்சிக்கு லிஃப்டில் அழைத்துச் சென்று காட்டினார்கள்.கான்கிரீட் ஆலயங்களில் என் மனம் ஈடுபடுவதில்லை.நாம் உருவாக்கும் கட்டுமானம் அப்பகுதியின் ஏதேனும் ஒரு தன்மையைப் பிரதிபலிக்க வேண்டும்.ஹொய்சால ஆல்யங்கள் தடாகங்களைப் போன்ற அமைப்பைக் கொண்டவை.மைய ஆலயம் தாமரை. சுற்றியிருப்பவை அல்லி.கேரள ஆலயங்கள் வனக்குடில் போன்ற அமைப்பைக் கொண்டவை.ஆலயங்கள் பிரார்த்தனைக் கூடங்கள் மட்டும் அல்ல.நாம் உருவாக்கும் இடத்தில் இறைமையைக் கொண்டுவரச் செய்யும் பிரயத்தனம்,புதிய ஆலயங்களை உருவாக்குபவர்கள் இதனை மனதில் இருத்துவது நலம்.
இரவு கார்வார் சென்று அடைந்தோம்.ஒரு லாட்ஜில் அறை கேட்டோம்.மின்விசிறி இயங்காத ஒரு அறை ரூ.600 வாடகையில் எங்களிடம் தள்ளி விடப் பார்த்தனர்.வேண்டாம் என மறுத்து விட்டு மற்ற லாட்ஜ்களில் விசாரித்தோம்.இரண்டாயிரம் ரூபாய் வாடகை என்றனர்.கடற்கரைக்கு அருகில் இருந்த நகராட்சி மைதானத்தின் பொதுக்கூட்ட மேடையில் போர்வையை விரித்து படுத்து விட்டோம்.மனப்பிறழ்வுக்கு உள்ளான ஒருவர் மேடையின் ஒரு கோடியில் படுத்திருந்தார்.இரவு 11 மணிக்கும் கடற்படை அதிகாரிகள் குடும்பத்துடன் வந்து கடல் மணலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.சற்று நேரத்தில் நான் நன்றாக உறங்கி விட்டேன்.நள்ளிரவில் விழித்துப் பார்த்த போது ஜீவா உறங்காமல் விழித்திருந்தார்.அதனைப் பார்த்து விட்டு நான் மீண்டும் தூங்கி விட்டேன்.காலை 5 மணிக்கு விழித்து ஜீவாவையும் எழுப்பினேன்.இரவு உறங்கவில்லையா என வினவினேன்.3 மணிக்கு படுத்ததாகக் கூறினார்.பல் தேய்த்து முகம் கழுவிவிட்டு புறப்பட்டோம்.கருநாடக எல்லையை விட்டு நீங்குவதற்கு முன்னர் வாகனத்திற்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் பெற்றோம்.
கோவா சின்னஞ்சிறு மாநிலம்.மக்கள் காலை நேரத்திலேயே சுறுசுறுப்புடன் இயங்கத் துவங்கியிருந்தனர்.அந்த உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது.பயணங்களில் உத்வேகம் மிக்க காலைப் பொழுதுகளும் ஆர்வ்மூட்டும் மாலைப் பொழுதுகளும் முக்கிய்மானவை என்பது எனது அனுபவம்.தமிழ்நாட்டில் சிறுமிகளும் யுவதிகளும் உற்சாகமாக பள்ளிக்கோ கல்லூரிக்கோ புறப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் தங்களுக்குள் மெல்ல பேசிச் சிரித்தபடி தங்களுக்குள் சீண்டியவாறு காத்திருப்பார்கள்.மடிப்பு கலையாத சீருடைகள் மல்லிகை மலர்ச் சரங்களுடன் பாடம் படிக்க புறப்படுவார்கள்.அவர்கள் மாலை நேரத்தில் மெல்ல நடந்து வீடு திரும்புவதையும் கண்டிருக்கிறேன்.கோவாவில் ஆண்களும் பெண்களும் பேருந்துக்காக காத்திருந்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.தொழில் துறையிலும் உள் கட்டுமானத்திலும் கோவா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.பல புதிய கட்டுமானங்கள் எழுப்பப்படுவதை எங்கள் 4000 கி.மீ பயணத்தில் கோவாவில் மட்டும்தான் பார்த்தோம்.திரு,மனோகர் பாரிக்கர் திறன் மிக்கவர் என எண்ணிக் கொண்டேன்.
xavier church goaபழைய கோவா சென்று அங்கிருந்த நான்கு தேவாலயங்களைப் பார்த்தோம்.அப்பிரதேசத்தில் அதிகம் கிடைக்கும் செம்மண் பாளங்களைக் கொண்டு கட்டுமானத்தை உருவாக்கியிருந்தனர்.சுற்றுலா பயணிகளால் கோவா நிரம்பி வழிந்தது சேவியர் தேவாலயம்,காஜதான் தேவாலயம்,சீ கதீட்ரல் மற்றும் ரோஸரி தேவாலயம் ஆகியவற்றுக்குச் சென்றோம்.உயரமான சுவர்களுக்கு இடைப்பட்ட பெரும் வெளியில் காற்றும் நிசப்தமும் சுழன்று வர தேவாலயத்தின் குறியீடுகளைக் கண்டவாறு அமர்ந்திருந்தோம்.அகஸ்டின் தேவாலயம் அழிந்த நிலையில் இருந்ததைக் கண்டோம்.  .மதியம் மூன்று மணிக்குப் புறப்பட்டோம்.ஒரு மணி நேரத்தில் மகாராஷ்ட்ர எல்லையை அடைந்தோம்.நேற்றைப் போல ஏதாவது ஒரு பொது இடத்தில் தங்கிவிடலாமா என்று ஜீவாவிடம் கேட்டேன்.இரவு தூக்கம் வரவில்லை எனவே லாட்ஜில் ரூம் எடுப்போம் என்றார்.கனகவள்ளி என்ற ஊரில் அரசு விருந்தினர் மாளிகை இருந்தது.அதற்குப் பொறுப்பானவர் திரு.ஏ.ஜே.ரானே என்பவர்.அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு தங்குவதற்கு ஏதேனும் வசதி செய்து தர முடியுமா எனக் கேட்டேன்.மிக மிகக் குறைந்த வாடகையில் ஒரு பெரிய அறையை எங்களுக்கு வழங்கினார்.வழக்கப்படி படுத்ததும் உறங்கினேன்.காலை எழுந்து தயாராகி திரு.ரானே அவர்களுக்கு நன்றி கூறி விட்டு அன்றைய பயணத்தைக் கிளம்பினோம்
சத்ரபதி சிவாஜி மற்றும் கனோஜி ஆங்கரேயின் கடற்கோட்டைகளைக் காண்பதே அன்றைய பயணத்தின் நோக்கம்.எனக்கு 7 வயதாயிருக்கும் போதே சிவாஜியின் கதைகளைக் கேட்டிருக்கிறேன்.என்னை சிவாஜியின் தளபதிகளில் ஒருவராக கற்பனை செய்து கொள்வேன்.சிவாஜி என்னிடம் புதிதாக கைப்பற்ற வேண்டிய கோட்டைகளைப் பற்றி கூறுவார்.நான் அவற்றை படையுடன் சென்று வென்று வருவேன்.சிவாஜிக்கு தாணாஜி என்ற தளபதி இருந்தார்.அவருடைய உடும்பின் பெயர் வைஜயந்தா.மராட்டியர்கள் உடும்புகளைப் பயிற்றுவித்து அவற்றைப் பயன்படுத்தி இரவு நேரத்தில் கோட்டை மீது ஏறி கெரில்லா தாக்குதல் நடத்தி வெல்வார்கள்.ஒரு யுத்தத்தில் தாணாஜி கொல்லப்படுவார்.கோட்டை பிடிபட்டது ஆனால் என் சிம்மம் வீழ்ந்து விட்டது என சிவாஜி சொல்வார்.அவர் என்னைப் பற்றி சொன்னதாகவே சிறு வயதில் எண்ணிக் கொள்வேன்.விஜயதுர்க்கம் தேவகட் ஆகிய கோட்டைகளைப் பார்த்தோம்.உலகியல் இச்சைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாலேயே மாமனிதர்கள் இயக்கப்படுகிறார்கள் என எண்ணிக் கொண்டேன்.சிவாஜியின் கோட்டைகளைப் பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டேன்.15 கோட்டைகள் இருந்தன.இவற்றைக் காண தனியாக ஒரு பயணம் கிளம்பி வர வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.தேவ்கட் கோட்டையின் உச்சியிலிருந்து அரபிக்கடலைக் கண்ட போது உணர்ச்சி மேலிட்டு அழுதேன்.
திரு.கிரண் கசாரே என்ற கட்டிடப் பொறியாளரை சந்தித்தோம்.எங்கள் பயண விபரம் பற்றி கேட்டதும் kohlapurஆச்சர்யப்பட்டார்.அவரிடம் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.பின்னர் கோலாப்பூர் நோக்கி புறப்பட்டோம்.அது ஒரு திகைப்பூட்டும் மலைப் பயணம்.மிக அபாயமான கொண்டை ஊசி வளைவுகள்.வானம் கறுத்து பேய்க் காற்று வீசியது.காற்றின் வேகம் வண்டியையே சாய்த்து விடுமோ என பயந்தேன்.அடர் மழை பெய்யத் துவங்கியது.ஜீவா உற்சாகமாக மிக வேகமாக வண்டியை ஓட்டினார்.இனிமேல் வழி கேட்கும் போது சமவெளிப் பாதையா அல்லது மலைப் பாதையா என்பதையும் கேட்டுக் கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.லாரிகளும் டிரக்களும் கார்களும் பாறையில் முட்டிக் கொண்டு நின்றன.ஜீவா கண்ணில் இவை பட்டதாகவோ அவர் கவனத்தில் கொண்டதாகவோ எண்ணுவதற்கான எந்தத் தடயமும் இல்லை.சமவெளிப்பாதையை அடைந்ததும் மெல்ல ஜீவாவிடம் சொன்னேன்.’’ஜி! ஏன் இவ்வளவு வேகமாக ஓட்டுறீங்க.நிதானமாக போங்க.வீடு இருந்தாத்தான் ஓடு மாத்த முடியும்.நாம எந்த பெரிய விபத்தும் இல்லாமல் வீட்டுக்குப் போனால்தான் அடுத்த முறை மோட்டார் சைக்கிள் பயணத்துக்கு தயக்கமின்றி அனுமதி தருவார்கள்.இவ்வாறான பயணங்களில் நாம் பழக வேண்டியது நிதானத்தை.பயணத்தில் நாம் பெறும் முக்கியமான அனுபவமும் இதுதான்”என்றேன்.ஜீவா ஆக்சிலரேட்டரை இன்னும் திருகி வேகத்தைக் கூட்டி ஊ ஊ ஊ என்றார்.மேட்டுத்தெரு ராமசாமி ஊ என கவுண்டமணி சொல்வது போலிருந்தது.பேசி முடித்த 15 வினாடியில் எதிரே அதிவேகத்துடன் ஒரு லாரி வந்தது.ஜீவா இடது பக்கம் ஓரங்கட்டினார்.சாலை ஒரத்தில் இருந்த சேறில் டயர் வேகத்துடன் இறங்கியதும் வண்டி ஸ்லிப் ஆகி இருவரும் வண்டியுடன் விழுந்தோம்.வண்டி சாயும் போது ராம்கிருஷ்ணஹரி என கடவுளை அழைத்தேன்..எழுந்து வண்டியை நிமிர்த்தினோம்.ஜீவா நாடியில் நல்ல அடி ரத்தம் வருகிறது என்றார்.நாடியில் ரத்தம் வருகிறது எனச் சொன்னதும் தமிழ் திரைப்பட கதாநாயகிகள் காதலுக்காக அல்லது காதலனுக்காக அல்லது பெற்றோருக்காக அல்லது தங்களுக்காக மணிக்கட்டுக்கு அருகில் நாடி நரம்பை அறுத்துக் கொண்டு ரத்தத்தில் மிதக்கும் காட்சி நினைவுக்கு வந்தது.ஜி கைகளைக் காட்டுங்கள் என்றேன்.கையில் ஒன்றுமில்லை நாடியில் தான் அடி என மீண்டும் சொன்னார்.நாடி கையில் தானே ஜி இருக்கிறது என அப்பாவியாகக் கேட்டேன்.முகவாயைக் காட்டினார்.ஜி இது நாடியில்லை தாடை என்றேன்.நன்றாக ரத்தம் வந்தது.வாட்டர் பாட்டிலை எடுத்து முகம் கழுவச் சொன்னேன்.கர்சீஃபால் தாடையில் ஒற்றிக் கொள்ளுங்கள் எனச் சொன்னேன்.உனக்கு எதுவும் அடியா என்று கேட்டார்.என் உடலை பரிசோதித்தேன்.முட்டியில் லேசாக சிராய்த்திருந்தது.வண்டியை நான் ஓட்டுகிறேன் எனக் கூறி நான் ஓட்டினேன்.அடுத்தடுத்து செய்ய வேண்டியது என்ன என திட்டமிட்டுக்கொண்டேன்.ஃபார்மஸி தென்பட்டால் முதலுதவி செய்ய வேண்டும்.கோலாப்பூரில் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டும்.மிக மெதுவாக வேறு எங்கும் ஸ்லிப் ஆகாமல் செல்ல வேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.நல்ல வேளையாக இரண்டு கி.மீ க்குள் ஒரு பார்மஸி இருந்தது.அங்கே சென்றோம்.மருத்துவர் பார்ம்ஸிக்கு எதிரிலேயே இருந்தார்.ஜீவாவைப் பரிசோதித்து இன்ஜக்‌ஷன் போட்டார்.விரல்களைப் பரிசோதித்து விட்டு 99% எலும்புமுறிவாக இருக்காது.எதற்கும் ஒரு எக்ஸ்-ரே எடுத்துவிடுங்கள் என்றார்.சார் மருத்துவமனையின் விலாசத்தை மராத்தியில் எழுதிக் கொடுங்கள் எனக் கேட்டு வாங்கிக் கொண்டேன்.ஒரு வாரத்துக்கான மருந்தை எழுதிக்கொடுத்தார்.ஆண்டிபயாடிக் மாத்திரைகள்,ஆயிண்மெண்ட். பணிவுடன
நன்றி கூறினேன்.அமைதியாக, இது என் கடமை என்றார்.அம்மருத்துவரின் பெயர் டாக்டர்.சந்தீஃப் ஹெக்டே.
கோலாப்பூர் ரங்கா ஸ்டாண்டுக்கு அருகில் அம்மருத்துவமனை இருந்தது.எக்ஸ்-ரே எடுத்து விட்டு இடது கை கட்டை விரலில் எலும்பு முறிவு என்றனர்.உள்ளங்கையிலிருந்து எல்போ வரை மாவுக்கட்டு போட்டு விட்டனர்.ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ஒரு லாட்ஜில் ரூம் போட்டோம்.நன்றாக ஓய்வெடுங்கள் எனக் கூறி விட்டு அசதியால் நன்றாக உறங்கி விட்டேன்.மறுநாள் காலையில் விழித்து உறங்கினீர்களா எனக் கேட்டேன்.இரவு முழுதும் நல்ல வலி தூங்கவே இல்லை என்றார்.இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.கையைத் தூக்கவே முடியவில்லை வலிக்கிறது என்றார்.ஊருக்குப் போகிறீர்களா எனக் கேட்டேன் .நான் ஊருக்குப் போகவில்லை நாம் பயணத்தைத் தொடருவோம் என்றார்.ஜி இங்கே உங்களுக்கு ஒரு ஆரம்ப கட்ட சிகிச்சையே தரப்பட்டுள்ளது.நாம் சொன்னதை அவர்கள் எவ்வளவு புரிந்து கொண்டார்கள் என்ற ஐயம் எனக்குள்ளது.நாம் ரிஸ்க் எடுத்தால் உடல்நிலை மேலும் பாதிக்கப்படலாம்  என்றேன்.முதல்நாள் கட்டு போட்ட மருத்துவமனைக்கு மீண்டும் சென்று ஜீவா பயணம் தொடரலாமா  எனக் கேட்டோம்.அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்றால் தாராளமாகப் பயணிக்கலாம் என்றனர்.துறவிகள் கர்ம வினையின் சங்கிலிகளை அறுத்தெரிவதைப் போல ஆக்சிடெண்ட் நினைவுகளைத் துறந்து விட்டு அடுத்த பயணத்திற்கு சித்தமானோம்.பயணப்பையில் அடிக்கடி எடுக்க அவசியம் இல்லாத பொருட்களைப் போட்டு ஒரு பைண்டிங் கடைக்காரரை அழைத்து வந்து நிரந்தரமாக கட்டினேன்.கோலாப்பூர் முழுதும் அலைந்து ரூ.100 விலையில் இர்ண்டு ரெக்சின் பை வாங்கினோம்.துணிகளை அதில் அடுக்கினோம்.அந்த இரண்டு பைகளையும் நான் முன்னால் வைத்துக் கொண்டேன்.வண்டியின் பின்னால் பயணப்பை இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது.ஜீவாவுடைய ஒரு கையில் கட்டு மற்றொரு கையில் கேமராப்பை.ஒரு இந்திய அரசு நிர்வாகம் அல்லது காங்கிரஸ் போன்ற அமைப்பாக எங்கள் பயண ஏற்பாடு இருந்தது.மதியம் 1 மணிக்கு விட்டால் போதும் என கோலாப்பூரிலிருந்து கிளம்பினோம்.கோலாப்பூர் பூனா தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தோம்.உக்கிரமான கோடை வெயில் தாக்கிக் கொண்டிருந்தது.அன்று மட்டும் 200 கி.மீ க்கு மேல் ஓட்டினேன்.ஷிண்டேவாடி என்ற ஊரில் –அது பூனாவுக்கு 40 கி.மீ முன்னால் இருந்தது-தங்கினோம்.லாட்ஜ் ரூமுக்குள் நுழைந்ததும் நான் படுக்கையில் விழுந்தேன்.ஜீவா கீழே சென்று சாப்பிட்டு விட்டு வாழைப்பழம் வாங்கி வந்தார்.விழித்துப் பார்த்து அவற்றை விழுங்கி விட்டு மீண்டும் தூங்கினேன்.மறுநாள் காலை பூனா சென்று ஒரு கோட்டையைக் கண்டோம்.பண்டார்கர் ஆய்வு மையம் செல்ல வேண்டும் என்ற எங்கள் ஆவல் நிறைவேறவில்லை.ஓஷோ ஆஸ்ரமம் சென்றோம்.ஆஸ்ரமத்துக்குள் செல்ல ஒரு நாளுக்கான நன்கொடை ரூ.1000 என்றனர்.முதல்நாள் மருத்துவமனை செலவாக இரண்டாயிரத்து ஐநூறு ஆகியிருந்தது.எனவே ஆஸ்ரமத்தின் பதிப்பக பிரிவுக்கு சென்றோம்.ஓஷோவின் வீடியோ டிஸ்பிளே இருக்க வாய்ப்புள்ளது என எண்ணினோம்.முன்னர் இருந்தது.இப்போது அது இல்லை என்றனர்.இங்கே வாங்குவதும் விற்பதும் மட்டுமே நிகழ முடியுமா என்று கேட்டேன்.ஆம் என்றனர்.நூல்கள் சொற்சமாதிகள்-அவை நுகர்வு இன்பத்தை உருவாக்குகின்றன என்ற ஓஷோ கற்பனைப் பேட்டியின் வரியை நினைத்துக்கொண்டேன்.பதிப்பகத்தின் பொறுப்பில் இருந்த துறவி எங்களைப் பற்றி விசாரித்தார்.ஆஸ்ரமத்தில் அனுமதிக்க இயலாதது குறித்து மிகவும் வருந்தினார்.நீங்கள் இங்கே உள்ள சூழலை புரிந்து கொள்வீர்கள்.இது சுற்றுலாத் தலமல்ல.சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதில் எண்ணிப் பார்க்க முடியாத சிக்கல்கள் உருவாகின்றன.எனவே தான் முழுமையாக பார்வையாளர்களைத் தடை செய்தோம் என்றார்.ஆகஸ்டில் மான்சூன் திருவிழா ஆஸ்ரமத்த
ல் நடக்கும்.அப்போது அவசியம் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.குடிக்கத் தண்ணீர் வேண்டுமா எனக் கேட்டார்.நீர் அருந்திவிட்டு விடை பெற்றோம்.
anna hazareஅஜந்தா எல்லோரா சிற்பங்களைக் காண்பதே அடுத்த இலக்கு.பூனாவிலிருந்து ஔரங்காபாத் செல்லும் சாலையில் ரலேகான் சித்தி என்ற பெயர்ப்பலகையைக் கண்டோம்.அண்ணாவை சந்திப்பது அதற்கு வாய்ப்பு இல்லை எனில் அவரது கிராமத்தில் ஒரு நாளாவது தங்கியிருப்பது என முடிவெடுத்தோம்.என்னுடைய 15வது வயதில் ஒரு கர்மயோகியின் கிராமம் என்ற நூலை வாசித்திருக்கிறேன்.அது அண்ணா மற்றும் ரலேகான் சித்தியை அறிமுகப்படுத்தும் நூல்.தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை போராடிப் பெற்றவர் அண்ணா.உலகின் மிகப் பெரும் ஊழல் அரசுகளில் ஒன்றான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2க்கு எதிராக ஜந்தர் மந்தரில் பத்து நாட்கள் தன் மக்களுக்காக நாட்டின் அடுத்த தலைமுறைக்காக விழுமியங்களுக்காக உண்ணாநோன்பிருந்து தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய மாவீரர் அண்ணா ஹசாரே.வரலாற்றில் அண்ணாஜியைப் போன்றவர்கள் அபூர்வம்.அவரை தூரத்திலிருந்து பார்க்க நேர்ந்தால் கூட பெரும் பேறு என எண்ணிக் கொண்டோம்.ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்டின் அலுவலகத்தின் ஒரு பகுதியில் மக்களை சந்தித்துக் கொண்டிருந்தார் அண்ணாஜி.கல்லூரி மாணவர்கள் சிலர் அவரைச் சந்திக்க வந்திருந்தனர்.சுவாமி விவேகானந்தரைப் பற்றி அண்ணா பேசிக் கொண்டிருந்தார்.அடுத்து எங்களை அனுமதித்தனர்.நெடுஞ்சாண்கிடையாக என் முழுதுடலால் அண்ணா ஹசாரேஜி அவர்களை வணங்கினேன்.அண்ணாவை வணங்கியவன் என்பதே எனது தகுதி.கண்களில் நீர் நிரம்பியது.மகாத்மாவை நாங்கள் நேரில் பார்த்ததில்லை உங்களுடைய ரூபத்தில் காண்கிறோம் என்றேன்.எத்தனை பேர் இதனைச் சொல்லி அவர் கேட்டு சலித்திருப்பார்.எவ்வளவு சலித்தாலும் எத்தனை பேர் திரும்ப திரும்ப சொன்னாலும் அது உண்மையல்லவா!எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டார்.அச்சிறு அறையில் திரு.கலாமும் அண்ணாஜியும் உரையாடும் ஒரே ஒரு புகைப்படம் இருந்தது.அப்புகைப்படத்தைச் சுட்டிக் காட்டி தமிழ்நாட்டிலிருந்து என்று சொன்னேன்.கலாம் நினைவு எழுந்ததும் மிகவும் மகிழ்ந்தார்.ஷிருடி அருகில் உள்ளது அங்கே அவசியம் செல்லுங்கள் என்றார்.வெளியில் பலர் காத்துக் கொண்டிருந்தனர்.அருகே சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்கினோம்.ஜீவாவின் தலையில் அண்ணாஜியின் கரம் பட்டது.ஜீவா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.மெல்ல அவரைத் தேற்றி அழைத்து வந்தேன்.அன்று ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்டின் அலுவலகத்தில் தங்கிக் கொண்டோம்.மறுநாள் மீடியா செண்டருக்கு சென்று அண்ணாஜியின் பணிகளைப் பற்றிய புகைப்பட கண்காட்சியைக் கண்டோம்.அவர் தங்கியிருக்கும் யாதவ பாபா ஆலயம் சென்று வழிபட்டோம்.அண்ணாவின் சொல்படி ஷிருடிக்குப் பயணமானோம்.
அண்ணா ஹசாரே சாதித்தது என்ன என்று சிந்தித்தேன்.அவர் ஒரு கிராமத்தின் மனிதர்களை இணைத்திருக்கிறார்.மனிதர்கள் இணைக்கப்படும் போதே முன்னேற்றம் அனைவருக்கும் நிகழ முடியும் என்பதை புரிய வைத்துள்ளார்.மராட்டியத்தின் அவ்வறண்ட பிரதேசத்தில் தடுப்பணைகள் மூலம் நீர் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.தண்ணீர் அபூர்வமானது என உணரும் சமூகம் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும்.அச்சிக்கன உணர்வு வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் விரிவடையும்.ஒருங்கிணைந்து செயல்படும் தன்மை பழக்கமாக உருவெடுக்கும்.இயல்பாக அவர்கள் முன்னேறிச் செல்வர்.ஒரு மேம்பட்ட வாழ்க்கையை அடுத்த தலைமுறைக்கு கையளிப்பர்.
எனக்கு ஒரு சீன மேற்கோள் நினைவிலிருக்கிறது;

மக்களிடம் செல்
மக்களோடு வாழ்
மக்களை நேசி
மக்களிடமிருந்து கற்றுக் கொள்
அவர்களுக்கு என்ன தெரியுமோ அங்கிருந்து பணி தொடங்கு
அவர்களைக் கொண்டே நிர்மாணி

ரலேகான் சித்தியும் அண்ணாஜியும் இந்த மேற்கோளுக்கான நடைமுறை விளக்கங்கள்.
அவரது கிராமத்துக்கு திரு.நரேந்திர மோதி வருகை தந்திருக்கிறார்.திரு.சந்திரபாபு நாயுடு,திரு.நவீன் பட்நாயக்,திரு.சரத் பவார்,திரு.விலாஸ்ராவ் தேஷ்முக்,திரு.அஷோக் கெலோட்,திரு.திக்விஜய் சிங் ஆகியோர் ரலேகான் சித்தி வந்து அவ்வூரின் செயல்பாடுகளை பார்த்துச் சென்றுள்ளனர்.மதிநுட்பம் மிக்க ஆட்சிப் பணியாளர்கள்,திறன் மிக்க காவல்துறை,மேலிருந்து கீழ் வரை பரவும் நிர்வாக வலைப்பின்னல் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவு ஆகியனவற்றின் பின்புலமும் வலிமையும் அவர்களுக்கு இருந்தும்,இவை எதுவுமின்றி சூட்சுமமான ஏதோ ஒன்றால் அண்ணா ஹசாரே என்ற வாமனரின் விஸ்வரூபத்தை அவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.இன்று இந்தியாவின் தேவை மக்களின் ஒற்றுமையும் ஒருங்கிணைப்புமே.
அண்ணா ஹசாரேக்கள் ஒரு கிராமத்தில் இருக்க அராஜகம் செய்பவர்களை, ஊழல் செய்பவர்களை,சுயநலம் தவிர வேறெதையும் அறியாதவர்களை தலைவர்களாய் ஏற்கும் வெகுஜன மனநிலையைப் பற்றி எண்ணிக்கொண்டேன்.
ஷிருடி சாயி சம்ஸ்தான் சென்றோம்.சாயி சத் சரிதத்தில் சில அத்தியாயங்கள் படித்திருக்கிறேன்.பாபாவுடைய ஆடை அவருடைய சூஃபி தன்மை எளிமை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்.அவர் செயல்பாடுகளுக்கு ஒரு நூதனத் தன்மையும் குறியீட்டுத்தன்மையும் இருக்கும்.அவர் ஒரு மசூதியில் தங்கியிருந்தது அங்கே தீபம் ஏற்றியது,கோதுமை மாவு அறைத்து அதை ஊர் எல்லையில் தூவுவது என்று அவரது செயல்கள் மறைத்தன்மையுடன் இருக்கும்.
ஷிருடியிலிருந்து ஔரங்காபாத் புறப்பட்டுச் சென்றோம்.மறுநாள் காலை எல்லோரா கிளம்பினோம்.வழியில் தேவகிரி கோட்டையைக் கண்டோம்.1000 ஆண்டுகள் ஆன கோட்டை.முகம்மது-பின் –துக்ளக் நினைவுகளுடன் ஒட்டிக் கொண்டு நினைவுகூரப்படுகிறது.அரசியல் மிகவும் வித்யாசமான சுவாரசியமான ஒரு துறை.அத்துறையை முழுமையாக அறிந்தவனோ தெரிந்தவனோ மட்டும் வெற்றிகரமாக செயல்பட முடியும் என எந்த நிபந்தனையும் இல்லை.யோசித்துப் பார்த்தால் இதில் அதிகம் தெரிந்தவர்கள் மிகக் குறைவாகவே சாதித்துள்ளனர்.அரசியல்வாதிகள் லட்சோப லட்சம் மக்களின் தினசரி நடைமுறை வாழ்வுடன் சம்பந்தப்பட்டுள்ளனர்.அவர்கள் செய்ல்பாடுகளின் நன்மை தீமைகளை மக்களின் விருப்பு வெறுப்புகளே தீர்மானிக்கும்.இதனை உணர்ந்தவன் சூழலை எப்போதும் அவதானித்துக் காத்திருப்பான்.நாட்கள் செல்ல செல்ல காத்திருப்பு இல்லாமலாகி அவதானம் மட்டுமே நிகழத் துவங்கும்.அவ்தானம் கைகூடுவதால் சூழல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கத் தொடங்கும்.துக்ளக் அவசரப்பட்டிருப்பாரா?சரித்திர ஆசிரியர்கள் சொல்லும் அளவுக்கு முடிவுகளை மாற்றியிருப்பாரா?அவரது முடிவுகள் உருவாக்கிய சேதத்தையும் இழப்பையும் கண்டு அஞ்சியிருப்பார்.அதனை சரி செய்ய மறைக்க வேறொன்றைச் செய்திருப்பார்.பிழைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றிருக்கும்.அவரது காலம் முடிவுக்கு வந்திருக்கும்.தலைநகரை மையப்பகுதிக்கு கொண்டு வருவது நல்ல முடிவா?அவ்வாறெனில் பின்னால் வந்த அரசுகள் அதனை பின்பற்றியிருக்குமே.இந்தியாவிற்கு வடமேற்கு பகுதியிலிருந்தே தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் நிகழ்ந்துள்ளன.வடமேற்கை கட்டுப்படுத்த நமது தலைநகர் வடக்கே இருப்பதே நல்லது.ஒரு தலைநகர் நாட்டின் பிறபகுதி மக்களுக்கு ஒரு அடையாளம்.அவர்கள் அடைய வேண்டிய ஒரு யதார்த்தம்.தங்கள் மகனோ மகளோ சண்டிகரிலோ சிம்லாவிலோ பணிபுரிவதை விட தில்லியில் பணிபுரிவதையே அனைவரும் விரும்புவர்.ஒரு தமிழன் ராஷ்ட்ரபதி பவனில் குடியரசுத் தலைவராக அமர்ந்தால் தங்களுக்கான அங்கீகாரத்தை தேசம் வழங்கியதாக பெருமைப்படுவர்.தில்லியின் நினைவுகள் மக்களின் ஆழ்மனத்தில் உள்ளன.பிரிட்டாஷாரால் இந்தியா நீண்ட காலத்திற்கு கல்கத்தாவிலிருந்து ஆளப்பட்டது என்பது இன்று எத்தனை கல்கத்தா வாசிகளுக்குத் தெரியும் என்பதுடன் தலைநகர் மாற்றம் குறித்து யோசித்துப் பார்க்கலாம்.
எல்லோரா குடைவரைக் கோயில்கள் பாரதம் கண்ட மகத்தான கனவு.இப்படிப் பட்ட கனவைக் கண்டவர்கள் மண்ணில் மனிதர்களாகத்தான்  பிறந்து வளர்ந்தார்களா?சில குடைவரைகளில் பத்து தலைமுறையாக இதற்கான பணி நடந்தது என எழுதியிருந்தார்கள்.குறைந்தபட்சம் 200 ஆண்டுகளுக்கு வேலைகள் நடந்திருக்கும்.அங்கே ஒரு குடைவரையில் புத்தர் சிலை முன் அமர்ந்தேன்.கதறி அழுதேன்.34 குடைவரைகளில் நடுவில் இருக்கும் பேராலயம் பிரமிப்பாக இருந்தது.திகைத்துப் போய் திக்கு முக்காடினேன்.புகைப்படங்களில் பார்ப்பது என்பது வேறு நேரில் காண்பது என்பது வேறு.வான் நோக்கி உயர்ந்துள்ள ஸ்தம்பம்,இரு புறமும் இருக்கும் யானைகள்,கைலாத்ததைத் தூக்க முயற்சிக்கும் இராவணன்,ஆலயத்தின் அடித்தளத்தில் அமைக்கப்ப்ட்டுள்ள யானைகள்….நாள் முழுக்க இருந்து விட்டு மாலையில் கிளம்பி அஜந்தா சென்த்றோம்.
அஜந்தா அப்சரஸ்களாலும் கந்தர்வர்களாலும் போதிசத்வர்களாலும் புத்தர்களாலும் நிரம்பியிருந்தது.சயன கோலம் கொண்ட புத்தர்,அமர்ந்த புத்தர்,மலர்ந்த புத்தர் என எங்கும் புத்தர்.அஜந்தாவைக் கண்ட அன்று இரவு ஒரு கனவு கண்டேன்.குடைவரைச் சிற்பங்கள் அனைத்தும் உயிர் கொண்டு அக்குகைகளில் வாழத் தொடங்குகின்றன.நானும் அவர்களோடு வாழ்ந்து வருகிறேன்.அவர்கள் உடல் கல்லால் ஆனதாகவே இருக்கிறது.என் உடல் மனிதர்களைப் போலவே இருக்கிறது.உருவத்தில் மிகப் பெரியவர்களாக அவர்கள் இருந்தனர்.அவர்கள் சொல்வதை நான் கேட்கிறேன்.அவர்களுடன் இணைந்து செயல்படுகிறேன்.ஆனால் ஒரு குழப்பத்தில் இருக்கிறேன்.இப்படி ஒரு கனவு.
அஜந்தாவைப் பார்த்தவுடன் அங்கிருந்து புறப்படுவது என முடிவு செய்தோம்.வீடு திரும்ப 1800 கி.மீ க்கு மேல் பயணிக்க வேண்டியிருந்தது.தினமும் 300 கி.மீ சென்றாலே 6 நாட்களாகும்.அஜந்தா அருகே கேரளா பெட்ரோல் பங்க் என தமிழில் எழுதப் பட்ட பெயர்ப் பலகை இருந்தது.திரு.முரளி நாயர் என்பவர் அதன் பொறுப்பாளர்.அவர் தமிழ்நாடு திரும்பும் மார்க்கத்தைக் கூறினார்.அஜந்தாவிலிருந்து ஜால்னா-ஜால்னாவிலிருந்து ஷொலாப்பூர்-ஷோலாப்பூரிலிருந்து பீஜப்பூர்-சித்திரதுர்கா-தும்கூர்-பெங்களூரு என விரிந்தது அம்மார்க்கம்.ஜால்னாவில் எஞ்சின் ஆயில் மாற்றினோம்.விகாஸ் என்ற மெக்கானிக்கின் ஷெட்டுக்கு சென்றோம்.விகாஸ் எங்கள் வண்டி நம்பர் பிளேட்டைப் பார்த்ததும் மிகவும் உற்சாகமாகி விட்டான்.அவனது நண்பர்களிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் மண்ணிலிருந்து வந்திருப்பதாக அறிமுகப்படுத்தினான்.அனைவரும் தோனி தோனி என ஆர்ப்பரித்தனர்.எங்கள் வாகனத்தின் என்ஜின் ஆயில் கொதிப்பதாக விகாஸ் சொன்னான்.பாபா சாகேப் என்ற பெயருடைய ஒரு நண்பன் விகாஸுக்கு உதவுகிறான்.அவர்கள் எட்டாம் வகுப்பு வரையே படித்துள்ளனர்.சொந்தமாக மெக்கானிக் ஷாப் வைத்துள்ளனர்.நண்பர்கள் பட்டாளத்துடன் உற்சாகமாக இருக்கின்றனர்.ஆர்வத்துடன் செயினுக்கு கிரீஸ் வைத்தனர்.ஏர் செக் செய்தனர்.பிரியத்துடன் வழியனுப்பி வைத்தனர்.இவர்களிடமிருந்து ஒரு புதிய இந்தியா புறப்பட்டு வரும் என எண்ணிக்கொண்டேன்.  நான்கு நாட்கள் தொடர்ந்து பயணித்தோம்.ஊர் ஞாபகமும்,அண்டை வீட்டுக் குழந்தை மர்ஃபியின் குரலும் முகமும் வீட்டின் நினைவுகளும் வரத் துவங்கின.உன் மழலை மொழியன்றோ என் வீடுபேறு என்று மனதில் ஒரு வரி மர்ஃபியை நினைத்து உருவானது.அம்மனநிலையும் உற்சாகமாகவே இருந்தது.ஜீவா வழியில் சில இடங்களாவது பார்ப்போம் என்றார்.கிளம்புவதாய் முடிவு செய்து விட்டோம்.சென்று சேர வேண்டிய இடத்தை விரைவில் அடைவதே நலமாக இருக்கும் என்று சொன்னேன்.கருநாடகத்தில் கூடலசங்கமம் என்ற தலம் உள்ளது.சமூக சீர்திருத்தவாதியான பசவரின் வாழ்வில் முக்கியமான ஒரு இடம். அங்கு சென்று வழிபட்டோம்.அன்று இரவில் குடிலி என்ற ஊரில் தங்கினோம்.மறுநாள் மாலை பெங்களூரு சென்று அங்கிருந்து ஹோசூரு சென்றோம்.மழை கொட்டித் தீர்த்தது.தொப்பலாக ஈரம் சொட்ட சொட்ட இருந்தோம்.எங்கள் பயணப்பை,ரெக்சின் பை அனைத்தும் ஈரம். மழை நல்ல விஷயம் தானே என எண்ணிக்கொண்டேன். நகரின் உள்ளே நுழைந்ததும் ஒரு டிராவல்ஸ்க்கு சென்று ஜீவாஜிக்கு மதுரை செல்ல ஒரு டிக்கெட் பதிவு செய்தேன்.வண்டி இரவு 10.30க்கு என்று சொன்னார்கள்.அக்கா வீட்டுக்குச் சென்றோம்.சமீபத்தில் அவர்கள் வீடு மாறியிருந்தார்கள்.புதிய வீடு எனக்குத் தெரியாது.ஜி.எச் அருகில் எனக் கேட்ட ஞாபகம் இருந்தது.அங்கு சென்று வீட்டைக் கண்டறிந்தோம்.நாங்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததைப் பார்த்து திகைத்து விட்டார்கள்.எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டார்கள்.சுருக்கமாக விபரம் சொன்னேன்.பயணப்பையில் ஜீவா அவருடைய பொருட்களை எடுத்துக் கொண்டார்.இரண்டு ரெக்சின் பைகளில் என்னுடைய உடைகளை நான் எடுத்து வைத்துக் கொண்டேன்.ஜீவா இரவு 10 மணிக்கு பேருந்துக்குச் சென்றார்.நான் படுத்து உறங்கினேன்.காலை எழுந்ததும் குளித்துத் தயாரானேன்.அக்கா ஆர்வத்துடன் பயண விபரங்கள் கேட்டார்கள்.ஒரு மணி நேரம் சொல்லிக் கொண்டிருந்தேன்.காலை உணவருந்தி விட்டு மயிலாடுதுறை புறப்பட்டேன்.ஹோசூரு-பாலக்கோடு-தருமபுரி-சேலம்-ஆத்தூர்-விருத்தாசலம்-சிதம்பரம் மார்க்கமாக மயிலாடுதுறை அடைந்தேன்.ஆலமர் கடவுள் வீற்றிருக்கும் வள்ளலார் கோவிலின் இறைவனுக்கு பயணத்திற்கு துணை நின்றதற்கு நன்றி கூறி வணங்கி  விட்டு வீடு திரும்
ினேன்.

0 Replies to “பாரத் தர்ஷன்”

  1. திரு. மைலை பிரபு,
    வாழ்த்துக்கள்.. உங்கள் எழுத்து உங்க கூடவே பயணம் செய்த ஒரு மாய அனுபவத்தை கற்பனையில் கொண்டுவந்தது. அதன் பாதிப்பு நானும் முடியும் போதே இப்படி ஒரு பயணத்தை செய்துவிடனும் என்று தோன்ற செய்தது.

Leave a Reply to GokulCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.