வாழ்க்கைக்கு மிக அருகிலானது

James_Woord_Nearest_Thing_to_Life_Books

 
குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்ட ஒரு கதைக்கு நான் கடந்த இருபது ஆண்டுகள் போல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்திருக்கிறேன், அந்தக் கதையை எழுதிய ஆன்டன் செகாவுக்கு அப்போது வயது இருபத்து ஏழு. கதையின் பெயர் “முத்தம்“. ராணுவ வீரர்களைக் கொண்ட ரெஜிமெண்ட் ஒன்று கிராமப்புற சிற்றூர் ஒன்றில் முகாமிட்டிருக்கிறது. தேநீர் அருந்தி, நடனக் கூடுகையில் பங்கேற்க அந்த ஊரின் மிகப்பெரிய வீட்டுக்குரியவர் ராணுவ அதிகாரிகளை அழைக்கிறார். அவர்களில் ஒருவன், ஸ்டாஃப் காப்டன் ரயபோவிச் வெள்ளந்தியானவன், தன்னம்பிக்கை மிகுந்த தன் சகாக்கள் போல் அவனால் அவ்வளவு எளிதாக பெண்களுடன் நடனமாட முடிவதில்லை. அவன், “குள்ளமானவன், சரிந்திருக்கும் தோள்கள் கொண்டவன், கண்ணாடி அணிந்திருப்பவன், அவனது மீசை காட்டுப்பூனையின் மீசை போலிருக்கும்“. தன் சக அதிகாரிகள் பெண்களுடன் இயல்பாகப் பேசி சல்லாபம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். “தன் வாழ்நாளில் அவன் ஒரு முறைகூட நடனமாடியதில்லை, கௌரவமான பெண்ணொருத்தியின் இடையை வளைத்து அவன் கை போட்டதுமில்லை… ஒரு காலத்தில் அவன் தன் சகாக்களின் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் கண்டு பொறாமைப்பட்டு மன வேதனையடைந்திருக்கிறான்; தான் பயந்த சுபாவம் கொண்டவன், தன் தோள்கள் சரிந்திருக்கின்றன, தான் உற்சாகமற்றவன், தனக்கு காட்டுப்பூனை போல் மீசை இருக்கிறது, இடுப்பே இல்லை என்றெல்லாம் உணர்ந்திருந்தது அவனை ஆழக் காயப்படுத்துவதாக இருந்தது, ஆனால் ஆண்டுகள் செலவழிந்தொழிந்ததில் அவன் இதையெல்லாம் தாங்கிக் கொள்ளப் பழகி விட்டான்; இப்போது அவன் தன் சகாக்கள் ஆடுவதையும் உரக்கப் பேசுவதையும் பார்க்கும்போது அவன் மனதில் பொறாமையில்லை, சற்றே ஏக்கம் பொருந்திய பெருமதிப்பே அவனது உணர்வாய் இருந்தது“.
தன் சங்கடத்தையும் அலுப்பையும் மறைத்துக் கொள்ள அவன் அந்தப் பெரிய வீடெங்கும் சுற்றிப் பார்க்கப் போகிறான், அதில் வழிதவறி ஓர் இருட்டு அறைக்குப் போய் நிற்கிறான். இங்கு, என்று எழுதுகிறார் செகாவ், “பால்ரூம் போலவே ஜன்னல்கள் விரிந்து திறந்திருந்தன, பாப்லர், லைலக், ரோஜாக்களின் மணம் கமழ்ந்தது“. திடீரென்று அவன் தனக்குப் பின்னால் விரைந்து வரும் காலடியோசைகளைக் கேட்கிறான். ஒரு பெண் அவனை நெருங்கி வந்து முத்தமிடுகிறாள். அவர்கள் இருவரும் பெருமூச்செறிகிறார்கள், இருவரும் அவள் தவறானவனை முத்தமிட்டு விட்டாள் என்பதை உடனே உணர்ந்து கொள்கிறார்கள்; அவள் வேகமாக வெளியேறுகிறாள். ரயபோவிச் பால்ரூமுக்குத் திரும்புகிறான், அவனது கைகள் நடுங்குகின்றன, அவனுக்கு என்னவோ ஆகிவிட்டது. “அவனது கழுத்து, மென்மையான, மணம்வீசும் கரங்களால் இப்போதுதான் அணைக்கப்பட்ட கழுத்து, தைலம் தேய்த்துக் குளித்தது போலிருந்தது; அவனது கன்னத்தில், இடது மீசைக்கருகில் ஓரிடத்தில் அடையாளமற்ற அந்தப் பெண் முத்தமிட்டிருந்தாள், அந்த இடம் மெலிதாய், இனிதாய், குளுமையாய்ச் சிலிர்த்துக் கொண்டது- பெப்பர்மிண்ட் தைலமிட்டது போன்ற ஒரு சிலிர்ப்பு அது, அந்த இடத்தை அவன் தேய்க்கத் தேய்க்க அந்தச் சிலிர்ப்பு இன்னும் தீவிரமாகி, உச்சம் முதல் உள்ளங்கால் வரை புதிய, வித்தியாசமான உணர்வொன்றாய் நிறைந்து வளர்ந்து, வளர்ந்து சென்றது… அவனுக்கு ஆட வேண்டும் போலிருந்தது, தோட்டத்தில் ஓட வேண்டும் போலிருந்தது, சத்தம் போட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது…
அந்த இளம் வீரனின் மனதில் இந்த நிகழ்ச்சியின் அளவும் முக்கியத்துவமும் பெருகிக் கொண்டே செல்கிறது. அவன் இதற்கு முன் ஒரு பெண்ணை முத்தமிட்டதே கிடையாது. பால்ரூமில் ஒவ்வொரு பெண்ணையும் மாற்றி மாற்றிப் பார்க்கிறான், அவளேதான் அது என்று தன் நம்பிக்கையை உறுதி செய்து கொள்கிறான். அன்றிரவு உறங்கச் செல்லும்போது, அவன் உணர்வுகள், “யாரோ அவன்பால் பரிவு கொண்டு அவனை மகிழ்வித்தது போல், வழக்கமில்லாத ஒன்று, அபத்தமானது, ஆனால் மிகுந்த நன்மையும் ஆனந்தமும் நிறைந்தது அவன் வாழ்வில் நிகழ்ந்துவிட்டது” போலிருக்கின்றன.
மறு நாள் முகாம் கலைகிறது, வேறு இடம் செல்கிறது. ரயபோவிச்சால் முத்தத்தை மறக்க முடிவதில்லை, சில நாட்களுக்குப் பின்னர், இரவுணவின்போது, சக அதிகாரிகள் ஏதேதோ பேசிக் கொண்டும் செய்தித்தாள் படித்துக் கொண்டும் இருக்கும்போது, தன் கதையைச் சொல்வதற்கான துணிச்சலை வரவழைத்துக் கொள்கிறான். அவன் அதைச் சொல்லவும் செய்கிறான், ஒரு நிமிடம் சென்றபின் மௌனமாகிறான். ஏனெனில் அதைச் சொல்ல ஒரு நிமிடமே ஆயிற்று. ரயபோவிச் திகைத்திருந்தான், என்று எழுதுகிறார் செகாவ், “அந்தக் கதையைச் சொல்ல அவ்வளவு நேரம்தான் ஆயிற்றா என்று திகைத்தான்.. இரவெல்லாம் அந்த முத்தத்தைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்க முடியும் என்று அவன் நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறான்.” அவனது தோல்வி உணர்வை அதிகரிப்பதுபோல், அவனது சக அதிகாரிகள் அவனது குட்டிக் கதையைக் கேட்பதில் ஆர்வமில்லாதவர்கள் போலவோ, அதன் உண்மையை நம்பாதவர்கள் போலவே இருக்கிறார்கள். சில காலம் சென்றபின் அந்த நிகழ்வு நடைபெற்ற சிற்றூருக்கே ரெஜிமெண்ட் திரும்பி வருகிறது. அந்தப் பெரிய வீட்டுக்கு இன்னொரு முறை அழைப்பு கிடைக்கும் என்று ரயபோவிச் ஆசைப்படுகிறான். ஆனால் அப்படி எதுவும் நடப்பதில்லை, அவன் அந்த வீட்டின் அருகிலிருக்கும் ஆற்றோரமாக நடந்து செல்கிறான், நம்பிக்கை வரண்டவனாய்.தன் கனவுகள் அத்தனையும் கலைந்தவனாய், பாலத்தின் கைப்பிடிக் கம்பிகளில் படுக்கை விரிப்புகள் சில தொங்கிக் கொண்டிருக்கின்றன, “ஒரு காரணமுமில்லாமல்,” அவன் அவற்றில் ஒன்றைத் தொடுகிறான். “என்ன ஒரு அபத்தம்.. அத்தனையும் என்ன ஒரு முட்டாள்தனம்” என்று நினைத்துக் கொண்டே தண்ணீரைப் பார்த்தபடி நிற்கிறான்.
இந்தக் கதையில் தீக்கோலால் தொட்டது போன்ற இரு வாக்கியங்கள் இருக்கின்றன: “அந்த நிமிடத்தில் அவன் அத்தனையையும் சொல்லி முடித்து அந்தக் கதையைச் சொல்ல அவ்வளவு நேரம்தான் ஆயிற்றா என்று திகைத்தான். இரவெல்லாம் அந்த முத்தத்தைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்க முடியும் என்று அவன் நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறான்.”
இந்த வரிகளை எழுத ஓர் எழுத்தாளன் எவ்வளவு தீவிர அவதானிப்பு செய்பவனாக இருக்க வேண்டும். செகாவ் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்பவர் போலிருக்கிறார். நாம் நமக்குள் சொல்லிக் கொள்ளும் கதைதான் முக்கியமானது என்பதை அவர் காண்கிறார்- ஏனெனில் நாம் உள்ளூர விரிவாக்கம் செய்பவர்கள், நகைப்புக்குரிய பெருங்கனவு காண்பவர்கள். ரயபோவிச்சைப் பொறுத்தவரை அவன் கதை மேலும் மேலும் பெரிதாக வளர்ந்து கொண்டே வந்து கடைசியில் யதார்த்த காலத்தில் வாழ்வின் லயத்தோடு ஒன்றிவிட்டிருக்கிறது. ரயபோவிச்சின் கதையைக் கேட்பதற்கு ஆட்கள் தேவைப்படவும் செய்கிறார்கள் தேவையில்லாமலும் இருக்கிறார்கள் என்பது அவனின் துன்பம் என்று செகாவ் அறிந்திருக்கிறார். மேலும், தன் போலன்றி, ரயபோவிச் அவ்வளவு தேர்ந்த கதைசொல்லியல்ல என்றும் செகாவ் நகைக்கிறார் எனக் கொள்ளலாம். ஏனெனில் செகாவின் கதையிலேயே தப்பிக்க முடியாத ஒரு நகைமுரண் இருக்கிறது- சொல்வதற்கு ஒரு நிமிடம்தான் ஆகும் அந்தக் கதையைப் படிக்க நமக்கு மாலை முழுதும் தேவைப்படுவதில்லை: அவரது சிறுகதைகள் பலவற்றையும் போலவே இது விறுவிறுப்பாகவும் சுருக்கமாகவும் இருக்கிறது. இந்தக் கதையை செகாவ் சொல்லியிருந்தால், எல்லாரும் கவனமாகக் கேட்டிருப்பார்கள். ஆனாலும நாம் இப்போது படித்து முடித்த கதையும்கூட- செகாவின் குறுகிய கதை- ரயபோவிச்சின அனுபவத்தை முழுமையாய் விவரிப்பதில்லை என்று உணர்த்துகிறார் செகாவ். ரயபோவிச் எல்லாவற்றையும் சொல்லத் தவறியதுபோல், செகாவும் தோற்றிருக்கக் கூடும். ரயபோவிச் என்ன சொல்ல நினைத்தான் என்பது இப்போதும் புதிராகத்தான் இருக்கிறது.
முத்தம்” ஒரு கதையைப் பற்றிய கதை என்று சொல்லலாம், ஒரு கதை எப்போதும் இன்னும் பல கதைகளை உத்பவிக்கிறது என்பதே சிறுகதைக்கான வரையறைகளில் ஒன்று என்று அது நினைவூட்டுகிறது. கதை கதையாம் காரணமாம். இங்கு செகாவின் கதை இருக்கிறது; ரயபோவிச்சுக்குச் சம்பவிக்கும் சிறுநிகழ்வு இருக்கிறது; அந்த நிகழ்வைக் கொண்டு ரயபோவிச் மனதில் உருவாக்கியும் உருவாக்க முடியாமல் தோற்கும், சொல்லப்படாத, அடியாழம் காணப்பட முடியாத கதையும் இருக்கிறது. எந்த ஒரு தனிக்கதையும் தனக்குத் தானே விளக்கமாக முடியாது: கதையின் இதயத்தில் இருக்கும் இந்தப் புதிரே ஒரு கதை. கதைகள் குட்டி போடுகின்றன, தம் உயிரணுக்களின் பிளவுகள், முழுக்கதையையும் சொல்ல முடியாத முதற்கட்ட இயலாமையின் கையாலாகாத அவதாரங்கள்.
மிகைகள் மற்றும் போதாமைகளின் இயங்கு ஆற்றல் கொண்ட கூட்டுத்தோகைகளே கதைகள் என்று நாம் சொல்ல முடியும். ஒரு வகையில், மிகை என்பது மிகக் கூரான ஏமாற்றம். கதை முடிவற்றது, தன் தர்க்கத்தால் மட்டுமே துவங்கி முடிவதற்கு மாறாய் கதைசொல்லியால் வலியுறுத்தப்படும் வடிவமே அதன் துவக்கமும் முடிவுமாகிறது; எழுத்தாள வடிவத்தால் புகுத்தப்படும் தன் மரணத்துக்கு அப்பால் செல்ல முயலும் வாழ்வின் தூய மிகைதான் கதை. ஓர் ஆதர்ச உலகில் ரயபோவிச் சொல்லக்கூடிய கதை, வெறும் ஒற்றை நிமிடமல்ல, மாலைப்பொழுது முழுதும் சொல்ல எடுத்துக்கொள்ளும் கதை, அவன் வாழ்வின் முழுக்கதையாய் இருக்கலாம்- செகாவ் நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கும் கதை போலொன்று- ஆனால் சந்தேகத்துக்கு இடமின்றி அதைக் காட்டிலும் நீண்டதாகவும் வடிவ கச்சிதமற்றதாகவும் இருக்கும் ஒன்று. அது இருட்டு அறையில் நடந்ததை மீண்டும் சொல்வதோடு மட்டும் நில்லாது, அது ரயபோவிச்சின் கூச்ச சுபாவம் பற்றியும் சொல்லும், பெண்கள் விஷயத்தில் அவனுக்கு எதுவும் தெரியாதிருப்பதைச் சொல்லும், சரியும் அவனது தோள்களைச் சொல்லும், அவனது காட்டுப்பூனை மீசையைச் சொல்லும்; செகாவ் குறிப்பிடத் தவறியவற்றை அது நினைவுகூரலாம், நாவல் இடம்கொடுக்கும் சம்பவங்கள் போன்றவற்றைச் சொல்லலாம்- அவனது பெற்றோர் (அப்பா அவனை எப்படி மிரட்டி வைத்திருந்தார், அம்மா எவ்வளவு செல்லம் கொடுத்தாள்); ராணுவத்தில் சேர முடிவெடுத்ததில் அவனுக்கு தன் தந்தையை மகிழ்விக்க வேண்டும் என்ற விருப்பமும் இருந்தது, மற்றபடி ரயபோவிச் தன்னிச்சையாய் அதில் விருப்பம் கொண்டவனல்ல என்பதை; அவன் தன் சக அதிகாரிகளை எவ்வளவு வெறுக்கிறான், இல்லை, அவர்களைப் பார்த்து எவ்வளவு பொறாமைப்படுகிறான் என்பதை; ஓய்வு நேரங்களில் அவன் கவிதை எழுதுகிறான் என்றாலும் யாரிடமும் ஒற்றை வரியைக் கூட இதுவரை பகிர்ந்து கொண்டதில்லை எனபதை; தன் காட்டுப்பூனை மீசையின் முடிகளை அவன் வெறுக்கிறான் என்பதையும் ஆனால் அம்மைத் தழும்பு விழுந்த அவனது முகத்தின் சருமத்தை மறைப்பதால் அவனுக்கு அவை தேவைப்படுகின்றன என்பதை.
ஆனால் ரயாபோவிச்சின் நிமிஷக்கதை சொல்லத் தகுந்ததல்ல என்பதைப் போலவே, அது உண்மையில் ஒரு கதையே அல்ல என்பதைப் போலவே, எந்த உருவமற்ற கதை மாலை முழுவதும் சொல்லப்படக்கூடியதோ அது மிகவும் உருவமற்றிருக்கும், வேண்டிய கதையை அது சொல்லாது. ரயபோவிச்சிற்குத் தேவையானது, நுண்விவரங்களைக் காணும் செகாவியக் கண் என்று நாம் இப்போது சந்தேகிக்கிறோம், சரியாகவும் தீவிரமாகவும் அவதானிக்கும் திறமை, சொல்ல வேண்டியதைத் தேர்ந்தெடுப்பதில் மேதைமை. தன் சக அதிகாரிகளிடம் கதை சொன்னபோது ரயபோவிச் இதைச் சொல்லியிருப்பான் என்று நினைக்கிறீர்களா- இருட்டு அறை லைலாக், பாப்லர் மற்றும் ரோஜா மணம் கமழ்ந்திருந்தது என்று? அந்தப் பெண் தன்னை முத்தமிட்டபோது பெப்பர்மிண்ட்டின் தூண்டல் போல் கன்னம் வெம்மையாகிச் சிலிர்த்துக் கொண்டது, என்று ரயபோவிச் சொல்லியிருப்பான் என்று நினைக்கிறீர்களா? ஆனால் ஒரு கதையின் ஜீவன் அதன் மிகையில் இருந்தால், அதன் அதீதங்களில் இருந்தால், சீர்மைக்கும் வடிவ நேர்த்திக்கும் அப்பாற்றபட்ட விஷயங்களின் கலவரத்தில் இருக்கின்றது என்றால், ஒரு கதையின் ஜீவ-மிகை அதன் நுண்விவரங்களில் இருக்கிறது என்றும் சொல்ல முடியும். பெப்பர்மிண்ட் பற்றிய நுண்விவரம், ரயபோவிச் தன் கன்னத்தில் உணரும் சிலிர்ப்பு, நமக்காக தங்கி நிற்கிறது; அந்த இடத்தை நாம் தேய்த்துக் கொண்டால் போதும்.
நுண்விவரங்களே ஒரு கதையை அந்தரங்கமானது ஆக்குகின்றன. கதைகள் நுண்விவரங்களால் ஆனவை; நாம் அவற்றில் சிக்கிக் கொள்கிறோம். கதைகள் என்ன என்பது, இல்லை, இப்படிச் சொல்லலாம், கதைகளின் என்னத்தனம் நுண்விவரங்கள்தான். ஹென்றி கிரீனின் கடிதங்களில் ஒன்றில் ஓர் அற்புதமான சொற்றொடர் உண்டு. வரலாற்று நாவல் எழுதிய காரணத்துக்காக சாரா ஓர்ன் ஜுவட்டைக் கண்டிக்கும் கிரீன், நாவல்கள், “நிதர்சன நிகழ்-அந்தரங்கம்” எதுவோ, அதையே பேச வேண்டும் என்கிறார். நுண்விவரங்களே அந்த “நிதர்சன அந்தரங்கத்தை” அளிக்கின்றன. ஹென்றி கிரீனின் லவிங் (1945) என்ற நாவல் ஆங்கிலோ-ஐரிஷ் கிராமப்புற வீடு ஒன்றில் நிகழ்கிறது, பெரும்பாலும் அதன் காக்னி பணியாளர்கள் வாழ்வை விவரிக்கும் நாவல் இது. செகாவின் தி கிஸ் சிறுகதையில் உள்ளது போன்ற ஒரு கணம் இதில் உண்டு (சேகாவை மிகுந்த கவனத்துடன் வாசித்தவர் கிரீன்)- அந்த வீட்டில் உள்ள இளம் வேலைக்காரி ஈடித்,  தன் எஜமானி திருமதி ஜாக்கின் அறையினுள் நுழைகிறாள். அறையின் சன்னல் திறைகளைத் திறந்து விட்டு, காலையில் குடிப்பதற்கான டீயைக் கொண்டுவரப் போகிறாள். ஈடித்துக்கு அங்கே அதிர்ச்சி காத்திருக்கிறது, ஈடித் தன் அறையில் காப்டன் டாவன்போர்ட்டுடன் படுத்திருக்கிறாள், அவன் அவளது கணவனல்ல. காப்டன் டாவன்போர்ட் வேகமாக போர்வைகளுக்குள் மறைகையில், திருமதி ஜாக் நிமிர்ந்து உட்கார்கிறாள். அவள் நிர்வாணமாக இருக்கிறாள், ஈடித் அந்த அறையைவிட்டு வெளியே ஓடிவிடுகிறாள். கிரீன் மறக்க முடியாத ஒரு சொற்றொடரை எழுதுகிறார், அவள் திருமதி ஜாக்கின் “மகோன்னதமாய் பிரகாசிக்கும் மேலுடல்“-ஐப் பார்த்துவிட்டாள், “அதில், திசைதவறிய, கருத்த, மேல்நோக்கி எழுந்த, உலர்ந்த இரு காயங்கள் அவளை நோக்கி ஆடிக் கொண்டிருந்தன“. எடிட் அதிர்ச்சியடைந்திருக்கிறாள், ஆனால் உள்ளூர அவள் ஆனந்தமடைந்திருக்கிறாள்.- அதற்கான ஒரு காரணம், இது அவளுக்கு மட்டுமே உரிய அனுபவம்; இன்னுமொரு காரணம், கள்ளம் கபடமற்ற ஓர் இளம் பெண் அவள், இந்தக் காட்சி அவளுக்கு ஒரு தீட்சை போலிருக்கிறது, (கிரீன் வெளிப்படையாகச் சொல்வதில்லை எனினும்) வளர்ந்தவர்களுக்குரிய பாலுணர்வு சார்ந்த உறவுகளின் வசீகர உலகம் சற்றே தொலைவில் அவளுக்குத் தெரிய வந்திருக்கிறது; அவளது விகசிப்பின் இன்னுமொரு காரணம், அங்கு பட்லராய் இருக்கும் சார்லி ரான்ஸ் உடனான சந்திப்புகளில், அவனோடு அவள் நாளுக்கு நாள் நெருங்கிப் பழகி சல்லாபித்துக் கொண்டிருக்கிறாள், அவனிடம் உரையாடப் பயன்படுத்தத் தகுந்த விஷயமொன்று அவளுக்குக் கிட்டியிருக்கிறது., .
ரயபோவிச் விஷயம் போலவே ஈடித்தின் கதையும் அவளுக்கு ஆழமான முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது, பதுக்கி வைத்துக் கொள்ளவும், வேறு வழியின்றி போக்கிடவும் வேண்டிய புதையல் இது. “என்ன ஒரு அதிர்ச்சி தெரியுமா,” என்று சார்லி ரான்ஸிடம் பெருமையடித்துக் கொள்கிறாள், “எனக்கென்று இது நேர்ந்தது…. இத்தனை வருஷங்களுக்கு அப்புறம்”. சார்லி, பால்வசீகரப் பாதையில் ஈடித் ஓரடி முன்செல்கையில் எப்போதும் எச்சரிக்கையைக் கடைபிடிக்கும் சார்லி, அவள் அளவுக்கு சந்தோஷப்படுவதாயில்லை. “சரி, உனக்கு சந்தோஷம்தானே?” என்று அவள் மீண்டும் மீண்டும் கேட்கிறாள். “இல்லை, இதையும் என்னிடமிருந்து பறித்துக் கொள்ளப் பார்க்கப் போகிறாயா நீ?”
ஏன், உனக்கு எத்தனை கதைகள் சொல்லக் கிடைத்திருக்கின்றன என்று தொடர்கிறாள், டார்ஸெட்டில் ஓரிடத்தில் கதவைத் திறந்ததும் நீ பார்த்தது, வேல்ஸில் பாத்ரூம் ஜன்னல் வழியாக உன் கண்ணில் பட்டது என்று என்னென்னவோ இருக்கிறது, இப்போது எனக்கு அந்த மாதிரி ஒன்று நடந்திருக்கிறது. ஒரே படுக்கையில் பக்கத்தில் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்தார்கள். அதை உன் நாற்றம் பிடித்த பழைய பைப்பில் போட்டு புகைத்துப் பார்.
ஈடித்தின் அனுபவத்தின் தனித்தன்மையை மறுக்க முயற்சிக்கிறான் ரான்ஸ்- இதற்கு முன்னர் பட்லராய் இருந்த திரு எல்டன், அவரும் திருமதி ஜாக்கையும் அவளது காதலனையும் ஒரே படுக்கையில் கையும் களவுமாகப் பிடித்திருக்கிறார் என்று சொல்கிறான் அவன், அப்போது ஈடித் அற்புதமாய் வெடிக்கிறாள்::”அவர்களை திரு. எல்டன் எப்போதோ பார்த்து விட்டாரென்று சொல்லிக்கொண்டு நிற்கிறாயே? நான் பார்த்த மாதிரியா இருந்தது அது? நான் பார்க்கும்போது, அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள், அவளது முன்பாகங்கள் அவனைப் பார்த்து இரண்டு வாத்துகள் மாதிரி தலையைத் தூக்கி ஆடிக் கொண்டிருந்தன, அதுபோலவா இருந்திருக்க முடியும்?” இது அழகிய சீற்றம்: அருமையான, ஏறத்தாழ ஷேக்ஸ்பியரையே தொடும் “முன்பாகங்கள்” என்ற புதுவழக்கை உன்னால் அவ்வளவு எளிதாய் மறக்க முடியாது, அல்லது, மார்பகங்கள் ஒரு ஜோடி வாத்துகள் போல் தலை தூக்கி ஆடிக் கொண்டிருந்தன என்கிற கற்பனையை மறக்க முடியாது.
விவரம் என்பது எப்போதும் எவருக்கோ உரிய நுண்விபரமாகவே இருக்கிறது. ஹென்றி கிரீனின் நடையே ஆற்றல் வாய்ந்தது, கவித்துவமானது, தனித்துவங்களைக் கூர்ந்து நோக்குவது. இலக்கிய எழுத்தாளராக, நவீனத்துவ படைப்பாளியாக, மூன்றாம் மனிதனாக அவர் திருமதி ஜாக்கின் மார்பகங்களை, “உலர்ந்த, மேல்நோக்கிய காயங்கள்” என்று விவரிக்கிறார். இதனால் அவர் கெட்ட அர்த்தத்தில் எதுவும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். ஒரு நல்ல ஓவியரைப் போல், அவர் நம்மை வழக்கத்தைக் காட்டிலும் கவனமாக முலைக்காம்பை உற்று நோக்கச் செய்கிறார்- அதைச் சுற்றியுள்ள கருவளையம் ஆறாத வடுவின் தழும்பு போலிருக்கக்கூடும் (எனவேதான் “காயங்கள்”). ஆனால் ஈடித் நுண்விபரங்களை அவதானிப்பதால், தனக்கேயுரிய சொற்களையும் உவமைகளையும் பயன்படுத்துவதால், இந்தக் கதையைத் தனக்குரியதாக்கிக் கொள்கிறாள், இந்தக் கதையைத் தனக்கு மட்டும் உரியதாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவளது தீவிர தேவை நம்மை நெகிழச் செய்வதாய் இல்லையா? தன்னிடமிருந்து அதை ரான்ஸ் பறித்துக் கொள்வான் என்று அவள் அஞ்சுகிறாள், திரு ரான்ஸின் டார்ஸெட் மற்றும் வேல்ஸ் புறத்துக் கதைகளுக்குச் சமமான கதையாய் தன் கதையும் இருக்க வேண்டும் என்று அவள் விரும்புகிறாள்; அவளது மொழியின் வேகமே, திரு எல்டன் என்ன பார்த்திருந்தாலும் சரி, தான் கண்டதை அவன் காணவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியாக இருக்கிறது- ஏனெனில், அவளைப் போல் உயிர்ப்புடனும் உறைப்புடனும் அவன் பார்த்திருக்கவில்லை.
ரயபோவிச்சையும் ஈடித்தையும் போல் நாமும் நம் நுண்விபரங்களின் கூட்டுத்தொகைகள் (அதைவிட, நம் நுண்விபரக் கூட்டுத்தொகைகளைக் காட்டிலும் நாம் மிகுதியாயிருக்கிறோம் என்று சொல்லலாம்). நுண்விபரங்களே கதைகள்; மினியேச்சர் வடிவில் கதைகள்; நமக்கு வயதாக ஆக, இந்த நுண்விபரங்களில் சில மங்கிப் போகின்றன, மற்றவை, முரண்படும் மெய்ம்மை பொருந்தியவையாய், கூடுதல் உயிர்ப்பு கொள்கின்றன. நாம் அனைவரும், ஒரு வகையில், உள்ளூர புனைவெழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் இருக்கிறோம், நம் நினைவுகளைத் திருத்தித் திருத்தி எழுதிக் கொண்டேயிருக்கிறோம்.
தமிழாக்கம்: என். ஆர். அனுமந்தன்
இதன் இங்கிலீஷ் மூலம் இங்கு வெளியானது. நன்றி: The Nearest Thing To Life ‹ Literary Hub

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: செகாவ் என்று தமிழில் எழுதிப் பழகி இருப்பதால் அதை இங்கு பயன்படுத்தி இருக்கிறேன். இந்தப் பெயரை ரஷ்ய மொழியில் Че́хов என்று எழுதுகிறார்கள். இதன் சரியான உச்சரிப்பு சியகொஃப் என்பது. Chekov என்று இங்கிலீஷில் எழுதுவதை இங்கிலீஷ் பேசும் மக்கள் செகொஃப் அல்லது செகாஃப் என்று உச்சரிக்கிறார்கள். நாம் வழக்கமாகத் தமிழில் எழுதுவது இரு யூரோப்பிய மொழிகளிலும் உச்சரிப்பாக இல்லை. சியகொஃப் என்று எழுதுவது ரஷ்ய மொழி உச்சரிப்புக்கு அருகில் இருப்பதால் அதைப் பயன்படுத்துவது உசிதமாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.