கவிதைகள்

சூசகம்

மண்ணின் மடியில்
அடைக்கலமான மழை நீர்
விரவியதெங்கே
வேர்கள் அறியும்

tree

வேர்களின்
உயிர்ப்பும் கிரகிப்பும்
தேடலும்
அறியும்
இலை பூ காய்

மனிதன் வீழ்த்தியோ
பருவ மாற்றமோ
காற்றின் வீச்சோ
இவை உதிரவும்
மீண்டு வரவும்
மீண்டும் மீண்டும் வரவும்
அறியும்

ஒவ்வொரு மீட்சியிலும்
வெவ்வேறாய்
வா
என என் காதில்
காலம் சொல்லும்

oOo

ஆடிகள்5b11f1ead058ed48ed579c038bc9d6cc

காட்சிகளும் கோணங்களும்
மாறியபடியே இருக்கும்
ஆடியொன்று வைத்திருக்கிறேன்
நானும்
பிரம்மம் தன் முகம்பார்த்து
இருப்பென எழுந்துவரும்
சின்னஞ்சிறு குழியாடி
காலத்தில் பின்னோக்கி நகரவும்
கனவுகளில் முன்னோக்கி புனையவும்
கூடிய குவியாடி
பூவுக்குப் பூவையும்
புன்னகைக்கும் அதையேதான்
திருப்பிக்காட்டும்
எளிய கண்ணாடிதான் என்றாலும்
காட்சிகளை மறைத்துக்கொள்ளும்
கள்ளத்தனமும் பழகியதுதான்
ஒரு சொல்லுக்குச் சிதறி
ஒரு புன்னகைக்கு மீண்டும்
புதியதாய்ச் சேரும் மாயக்கண்ணாடி
யாரும் வந்து எதையும்
வரைந்துவிட்டுப் போகும்படி நிற்கும்
நிலைக்கண்ணாடிதான் – ஆனாலும்
நான் காட்சிகளை சேமித்துவைக்கும்
கண்ணாடிக் கருவூலமும் அதுவேதான்
இந்த ஆடியில் விழும்பிம்பம்
நிலைப்பிம்பம்
காலத்தில் பின் அதுவே
நீர்ப்பிம்பமும்
வரைந்துப் பார்க்கவே
வண்ணங்களை சேர்க்கும் அது
வாழ்ந்து தீர்க்கவே
ரசமிழந்தும் போகிறது
தூரத்தையும் காலத்தையும்
தொலைவுவரை பார்க்குமென்றாலும்
தன் முகத்தை அதிலே
பார்த்துக்கொள்ள மட்டும்
தயங்கியபடியேதான் நிற்கும்.

oOo

இறந்த காலம்

வெகுகாலம் கழித்து ஒரு நல்ல பழைய புத்தகம் தட்டுப்பட்டது போல் தட்டுப்பட்டான் என் பால்ய நண்பன்.
எப்படி
வேடிக்கை காட்டி விட்டு ஒரு சிட்டுக் குருவி போல் ஓடிப் போய் விடுகிறது காலம்?
கால வீதியில்
வேறு வேறு திசைகளில் பயணித்து களைத்து நரையேறிப் போயிருப்போம்.
அவன்
எனக்குத் தெரியாத கடந்து போன அவன் காலங்களையும்
நான்
அவனுக்குத் தெரியாத கடந்து போன என் காலங்களையும்
பேசுவோம்.
குழந்தை
மிதி வண்டி ஓட்டுவது போல் பேச்சுகள்
அங்குமிங்கும் ஓடும்.
தற்செயலாய்
‘டே, நம்ம பாலன் எப்படியிருக்கானெ’ன்று நண்பனிடம் கேட்பேன்.
குழந்தையின் மிதி வண்டி சுவரில் மோதி நிற்பது போல்
நண்பன் பேச்சு நிற்கும் சற்று.
‘தவறிட்டான்டா’
சங்கடப்படுத்தும் மெளனத்தில்
அவன் கண்களில் நான் மிதந்தும் என் கண்களில் அவன் மிதந்தும்
ஆழ் நோக்குவோம்
இனி
யாருடைய கண்கள் இறந்து போன மீன்களாகும் முந்தி என்பது போல்.
கு.அழகர்சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.