இணைய உரையாடல் – ஆள் குறைப்பு, ஐ.பி.எம்.

Fired_Layoff_Workers_Employees_Unions_Removal_HR_Human_Resources_downsizing-trashcan

பூதம் : இந்தியாவில் டி.ஸி.எஸ்ஸில் இருந்து வேலையை விட்டுத் தூக்கிய மாதிரி ஐ.பி.எம். கூட வீட்டுக்குத் துரத்த ஆரம்பித்துள்ளதாமே?
விதூஷகன் : மூன்று லட்சம் பேர் இருந்த டி.ஸி.எஸ்ஸில் இருந்து முப்பதாயிரம் பேரை நீக்கினார்கள். பத்து சதவிகிதம்தான். ஆனால், ஐபிஎம் பெரிய நிறுவனம் ஆச்சே! 25 சதவிகிதத்தினரைக் குறைக்கிறார்களாம்.
சிக்கி : அந்தச் செய்தியை இங்கு – Next Week’s Bloodbath At IBM Won’t Fix The Real Problem – Forbes படிக்கலாம்.
பேராசிரியர் கேசவன் : ஃபோர்ப்ஸ் பத்திரிகையும் பங்குச் சந்தைத் தரகு வேலை செய்யும், அதன் முதலாளியும் பங்குச் சந்தை சூதாடி என்பதால் அவர்களின் பெரும் முதலீட்டைக் காபந்து செய்யத் தக்கதாகச் செய்திகள் பிரசுரமாகும். படிக்கிற ஃபைனான்ஸ் ஆட்களில் பெரும்பாலானவர்களுக்கு ஐ.பி.ம். பெருங்காயப் பாத்திரமாகி விட்டதா, இல்லை எழுந்து வரும் அடுத்த டெக் அலையை எதிர்பார்த்து surfing செய்து மேலே மிதந்து சாகஸம் செய்யுமாங்கறதெல்லாம் கணிக்கத் தெரியாது. இந்த மாதிரி ஒரு டெக்கி ஒரு ரெண்டுங்கெட்டான் கட்டுரை ஒன்றை எழுதிப் பிரசுரித்தால் அதை ஓரளவு நம்பி ஸ்டாக் விலையை திடீரென்று இறக்கவோ, ஏற்றவோ செய்வார்கள். இறக்கினால், போர்ப்ஸ் நிதி நிறுவன ஆட்களே ஒரு பெரிய பங்கு ஸ்டாக் (ஷேர் என்று இங்கு, இந்தியாவில் சொல்லும் அதே பொருள்) குவியலை வாங்கி வைத்துக் கொண்டு ஐபிஎம்மை அடுத்த சில ஆண்டுகளில் கூறு போட்டு உலகச் சந்தையில் விற்கலாம் என்று கணக்குப் போடுவார்கள்.
தேவந்தி : இதெல்லாம் நம்ம திருபாய் அம்பானி 1982இல் செஞ்சதுதானே! இலாபத்திற்கு மேல் இலாபம் கேட்கும் பங்குச்சந்தையைத் திருப்தி செய்ய முடியாது. இன்றைக்கு 100, நாளைக்கு 110, நாளைக்கழிச்சு 120 என்று அதிகரித்துக் கொண்டே போனால் கம்பெனிக்கும் அபாயம். அதனால், தானே ஒரு வதந்தியை அம்பானி உலவவிட்டார். ‘ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அளவுக்கதிமாக மதிப்பிடப் பட்டிருக்கிறது. அது நிச்சயம் கீழே விழும்!” என தலால் தெருவில் பேச ஆரம்பித்தார்கள். Short selling எனப்படும் சூதாட்டத்தில் எட்டு இலட்சம் பங்குகள் விற்கப்பட்டன. அத்தனையும் அம்பானியாலேயே வாங்கப்பட்டது என்பது பேச்சு.
ஜேம்ஸ் : இத்தனை பங்குகளை ஏன் வாங்கினார்?
தேவந்தி : எஸ்.கே பரூவா என்பவரும் ஜே ஆர் வர்மாவும் எழுதிய The Great Indian Scam – Story of the Missing Rs 4,000 crore படிச்சுப் பாருங்க. ஃபெப்ரவரி மாதத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு 200 ரூபாயைத் தொட்டுக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் புத்தம்புதிய பங்கு வெளியீட்டை அறிவிக்கிறார் அம்பானி. உடனே, இந்த வதந்தியும் பரவுகிறது. வதந்தி உலவ ஆரம்பித்தவுடன் ரிலயன்ஸ் பங்குகள் 120 ரூபாயாகக் குறைந்து விட்டது. 120 ரூபாய்க்கு பங்குகளை வாங்கி, ரிலயன்ஸ் பங்குகள் குறையும் என்று ஆரூடத்தில் பணம் கட்டிய எல்லோரிடமும் சென்று, ரிலயன்ஸ் பங்குகளைக் கேட்கிறார்.
ஜேம்ஸ் : சூதாடியவர்களிடம்தான் ரிலயன்ஸ் நிறுவனத்தின் அசல் பங்குகள் கிடையாதே! அப்புறம் எப்படி அவர்களால் கொடுக்க முடியும்?
தேவந்தி : அதனால்தான் திருபாய் அம்பானிக்கு பெரும் லாபம் கிட்டியது. அவர் நிறுவனத்தின் பங்குகள் கீழே விழும் என்று அவருக்கு முன்பே தெரியும். இது insider tradingஐ விட அதிகப்படியான தில்லாலங்கடி.
விதூஷகன் : பங்குச்சந்தையில் தங்களுடைய பங்கு உயரவே – மேலும் மேலும் விலை அதிகரிக்கவே – இந்த மாதிரி யுத்திகளை நிறுவனங்கள் செய்கிறார்கள். செய்தியில் அடிபடுவதால், (நீங்கள் சொல்வது மாதிரி) தாற்காலிகமாக, ஸ்டாக் விலை கீழே விழும். அப்போது Puts எனப்படும் options வைத்திருப்போர் லாபமடைகின்றனர். தற்போது எண்ணெய் விலை கீழே விழுவதில் எப்படி பெரும் லாபம் ஈட்டுகின்றனர் என்பதை The Secret Club that Runs the World : Inside the Fraternity of Commodity Traders புத்தகத்தில் பார்க்கலாம்.
பேராசிரியர் கேசவன் : ஐபிஎம் ஒரு பழைய அமெரிக்க நிறுவனம் என்பதால் அமெரிக்காவிலேயே அதற்கு நிறைய நிலம் கட்டடம் எல்லாம் இருக்கும். அவையே ஓரளவு விலை பெறுமானதாக இருக்கும், அதை விற்றுக் காசு பண்ணி விட்டு, ஆட்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்புவதை பெரிய சாமர்த்தியமான முதலீட்டு நிர்வாக முடிவு என்று பணக்காரர்களுக்காக நடத்தப்படும் ஊடகங்கள் கதை பண்ணிக் கொண்டிருக்கும்.
சிக்கி : எச்.பி., ஆரக்கிள், ஐ.பி.எம் போன்ற பெரிய நிறுவனங்களுக்கோ இப்போது இதுதான் அசல் தொழில். சின்ன நிறுவனங்களை வாங்குவது. அவற்றைத் தங்கள் கண்டுபிடிப்புகளோடு ஒட்டுவது. அதன் பிறகு, அந்தத் துறை சார்ந்த இன்னொருவருக்கு அதை விற்றுக் காசு பார்ப்பது. அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, இன்னொரு குட்டி நிறுவனத்தை சல்லிசாக விலை பேசி வாங்குவது. இதே சுழற்சியில் காலந்தள்ளுகிறார்கள். எதையும் புதியதாகக் கண்டுபிடிப்பதில்லை. இவையும் தரகர்களாக, சூதாடிகளாக மாறிப் பல வருடங்களாகின்றன.
பேராசிரியர் கேசவன் : அமெரிக்க பங்குச் சந்தையில் பெரிய முதலைகளின் ராஜ்ஜியம். பலியாடுகள் சாதா டெக்கிகள், வேலைக்காரர்கள், இன்னும் சின்ன ஸ்டாக் ஹோல்டர்கள்.
விதூஷகன் : கணினி என்றால் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே நம்பகரமானவை என்பது இன்று காலாவதியாகி விட்டது. அதனால்தான், ஐ.பி.எம் வீழ்ச்சியடைகிறது. மிகக் குறைவான முதலீட்டில் நிறுவனம் துவக்கலாம் (Low barrier to entry). அதைவிடக் குறைவான ரிஸ்க் கொண்டு தனி மனித காண்டிராக்ட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கலாம். இதெல்லாம் சாத்தியப்படாத காலகட்டத்தில் தனிப்பெரும் ஓங்காரமாக ஒரேயொரு ஐ.பி.எம். இருந்தது. இப்பொழுது உலகத்தில் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் யாரோ ஒரு சின்ன பெட்டிக்கடை நிறுவனம் இன்னும் நம்பகமாக, இன்னும் சல்லிசாக இந்த பிராஜெக்டை முடிக்கிறது.
பூதம் : ஐபிஎம் உண்மையிலேயே பயனுள்ள restructuring- in anticipation of the changing tech practices in the world of information storage and retrieval, information processing etc- செய்கிறதா, அவர்களிடம் அடுத்த பத்தாண்டுக்கான எதிர்பார்ப்பும், அதற்கான தயாரிப்பும் உள்ள பயன்படு பொருட்கள் உள்ளனவா?
தேவந்தி : ஒரு ஒப்புமை செய்து பார்ப்போம். தனக்குக் கிடைக்கும் பணவரத்தில் 16 சதவிகிதத்தை ஆராய்ச்சிக்காகவும், புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும் கூகிள் ஒதுக்குகிறது. ஆனால், ஐ.பி.எம். அதில் பாதி கூட புதிய துறைகளில் மூலாதாரமான ஆராய்ச்சிக்கு ஒதுக்கவில்லை. வெறும் 6% போடுகிறார்கள்.
பூதம் : (’அன்பே சிவம்’ பாடலை முணுமுணுக்கிறது)
சதுரங்க ஆட்டத்திலே
முதலாளிகள் காய் நகர்த்த
தொழிலாளிகள் கைகள் என்ன
பூப்பறிக்குமா?
இல்லை…
காய் பொறுக்குமா?
ஜேம்ஸ் : பாதிக்கப்பட்டவனாகப் பார்க்கும்போது – ஆட்குறைப்பில் வேலை போவது லாபகரமானதே. வேலையை விட்டு நீக்கப்படுபவருக்கு ஆறு மாத சம்பளம் மாதிரி கொடுக்கிறார்கள். அதாவது அரையாண்டு ஊதியம் – உழைக்காமலே கிடைக்கிறது. ’கயல்’ திரைப்படத்தின் துவக்கத்தில் சொல்வார்கள் – ஆறு மாதம் உழைக்க வேண்டும்; ஆறு மாதம் ஊர் சுற்ற வேண்டும். அந்த மாதிரி விக்ரமாதித்தன் + பட்டி வாழ்க்கையை அனுபவிக்க இந்த மாதிரி ஆள் குறைப்புகளில் அடிபட்டு வேலை போவது உதவுகிறது.
பூதம் : அப்படியெல்லாம் ஜாலியாக சொல்ல முடியாது. அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். ’உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்றெல்லாம் பழமொழி வேற உலவுகிறது. ”வேலை ஒழுங்கா பண்ணலியா? ஒரு இடத்தில் உன்னால ஸ்திரமா இருக்க முடியாதே! புதுசா ரூபி, செஃப், பப்பட்னு வந்திருக்கே… அதெல்லாம் உனக்குத் தெரியாதா?” என்று போன் போட்டு அட்வைஸ் கொடுத்து தற்கொலைக்கே தள்ளுகிற உலகம்.
விதூஷகன் : நாம அவங்ககிட்ட ‘உன் கம்பெனியில வேலை இருக்கா?’ என்று கேட்டிருப்போம். அதற்குத்தான் அப்படி பதில் சொல்லுறாங்க.
ஜேம்ஸ் : மேலாளராகப் பார்க்கும்போது – தங்களுக்குக் கீழே வேலை செய்பவர்கள் போய் விட்டால், அந்த வேலையைத் தாங்களேதான் பார்க்க வேண்டும். மேலும், கெத்து போய்விடும். தனக்குக் கீழே ஏழெட்டு பேர் இருந்தால்தான் மேனஜருக்கு மரியாதை. யாருமே இல்லாத பிரிவில் வேலை பார்த்தால், தனக்கும் வேலை போய் விடும் அபாயம் உண்டு. எனவே, உடனடி மேனேஜருக்கும், உங்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பணும்னு ஆசையே கிடையாது. ரொம்ப மேலே இருக்கிறவங்களுக்கு இதெல்லாம் பொருட்டே இல்லை.
பேராசிரியர் கேசவன் : பன்னாட்டு நிறுவன வேலை என்பது கத்தி மேல் நடப்பு போல. சம்பளம் கூட இருக்கலாம், வேலை கடுமையாகவோ, உள் நாட்டு தொழிலாளர் நல விதிகளால் கட்டுப்படாததாகவோ இருக்கும். எளிதில் தொலையவும் செய்யும். ஆனால் அடுத்த வேலைகளுக்குச் செல்ல வழி செய்வதாகவும் இருக்கலாம். நிரந்தரமின்மை என்பது இருபதாம் நூற்றாண்டின் மன வியாகூலம். நிரந்தரமின்மைதான் இன்று நிரந்தரம். அதற்கு மன நிலையை மாற்றிக் கொண்டால் பிரச்சினை தீராது, ஆனால் மன அழுத்தம் குறையும். இது நோய் இல்லை, சாதாரணம் என்று புரிந்து கொண்டால் சுற்றமும் அழுத்தம் தராது. அரசு என்பதை நம்பி கட்டை மாட்டு வண்டி வேலைகளில் மாட்டிக் கொள்வது இதை விடப் பன்மடங்கு மன அழுத்தம் தரலாம் என்று ஏற்கலாம். அங்கும்தான் ஊழல், லஞ்சம் இவை ஆபத்தைத் தரும், அதை எதிர்த்தாலும் பிரச்சினை, எதிர்க்காவிட்டாலும் பிரச்சினை. நாம் மட்டும் வேலை செய்தாலும் பிரச்சினை, எல்லார் மாதிரி வேலை செய்வது போல நடித்தாலும் பிரச்சினை.  எத்தனை நாட்கள்தான் குப்பையை இடம் விட்டு இடம் மாற்றி வைத்துக் கொண்டு சம்பளம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போவது மன நிம்மதியைத் தரும்?
விதூஷகன் : ’ஏதாவது சாதிக்கணும்’, ‘பெரிய ஆளாக வரணும்’ என்றெல்லாம் துடிப்பு இல்லாவிட்டால்தான் இந்த மாதிரி ரெண்டுங்கெட்டான் நிறுவனங்களில் வேலை பார்க்க முடியும். அந்த மாதிரி சாகஸ லட்சியங்கள் இருந்தால், சொந்தமாக ஸ்தாபனம் துவங்கிடணும்.
பேராசிரியர் கேசவன் : 24 வயதில் படிப்பிலிருந்து ரிடையர் ஆகி, மீத 30 வருட உழைப்புக்கு அதையே மூலதனமாக வைத்துக் கொண்டு பஜனை செய்யும் வேலை வாழ்வு இனி அரசு ஊழியருக்கும், செக்குமாட்டு வேலைகளில் நிம்மதியாக இருப்போருக்கும் மட்டுமே சாத்தியம்.  கல்லூரிப் பேராசிரியர் வேலை, பள்ளி ஆசிரியர் வேலை, வங்கி காசாளர், கணக்கர் வேலை, அரசு எழுத்தர் வேலை போன்ற பற்பல வேலைகளே இத்தகைய கற்பது என்பதே கிஞ்சித்தும் இல்லாத வேலைகள். அவற்றைச் செய்து புற்றுக்குள் புதைவது எல்லாராலும் முடியாது. இவற்றையும் கருக்காகவும், துரிதமாகவும் செய்வாருண்டு. அவர்கள் வேற்றுலகத்திலிருந்து இங்கு வந்திருக்கும் அபூர்வப் பிறவிகள். சங்கர் சினிமா நாயகன் போல இல்லாமல், பிளவில்லாத மன நிலை கொண்ட ‘அன்னியர்’.
விதூஷகன் : மருத்துவராக இருந்தாலும் அவ்வப்போது, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையாவது, தங்களுடைய திறமையைப் புதுப்பிப்பிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதே போல், கணக்காளர்களுக்கும் புதிய வரிகள், மாறும் சட்டங்கள் என வருடந்தோறும் பரீட்சைகள் இருக்கிறது. ஐ.பி.எம்., டி.ஸி.எஸ். போன்ற நிறுவனங்களில் தொழில்நுட்பத்தில் வேலை பார்ப்போர் எப்பொழுது தங்களைப் புதுப்பித்துக் கொண்டார்கள்? எவ்வாறு புதிய திறமைகளையும் தற்கால கணினிமொழிகளையும் கற்றுக் கொள்கிறார்கள்?
சிக்கி : அவர்களுக்கு அலுவலில் அரசியல் செய்யவே நேரம் போதவில்லை. இதில் எங்கே புது நுட்பம் கற்பது?
பேராசிரியர் கேசவன் : பெரு நிறுவனங்களின் விசாலமான அலுவலகக் கட்டடங்கள், தொழிற்சாலைகள் போன்றன வெளிப்பார்வைக்கு ஒரு உறுதியைக் காட்டலாம். ஆனால் நுணுகி நோக்கினால் எல்லாம் மாயை, சில வருடங்களில் மொத்த நிறுவனமுமே ஆட்டம் கண்டு வீழலாம். இது இன்றைய நிலை. 100 ஆண்டு கண்ட இந்து பத்திரிகை 17 கோடி ரூபாய் போல நஷ்டக் கணக்கு காட்டி இருக்கிறதாமே சென்ற வருடம் (இதை நூனன் என்பாரின் கட்டுரையில் Troubled Mahavishnu – Livemint பார்க்கவும்). அதே போல ஐபிஎம் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க முதலியத்தின் கோட்டைகளில் ஒன்றாக இருந்தது இன்று செங்கல் செங்கல்லாகச் சரிந்து குட்டிச் சுவராகும் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது
விதூஷகன் : அப்படி தீர்மானமாக சொல்ல முடியாது. அவர்கள் மெல்ல உருமாறுகிறார்கள். உதாரணத்திற்கு ஒரே ஒரு ஐ.பி.எம் ஆக்கம் குறித்த செய்திக்குறிப்பைப் பாருங்கள் : IBM Builds a Chip That Works Like Your Brain | Re/code
பூதம் : அதே நேரம் அதிகரித்த செயல்திறன், அதிகரித்த உற்பத்தித் திறன், அதிகரித்த சந்தை இருப்பு ஆகியன கொண்ட பெரு நிறுவனங்கள் ஏன் பொருளாதாரத் துறையின் மந்திரமான cost advantage due to expanded scale என்பதை அடைய முடியவில்லை என்பதையும் யோசிக்க வேண்டும்.
பேராசிரியர் கேசவன் : ஒரு அளவில் உலகமயமாதல் என்பதுதான் 18ஆம் நூற்றாண்டின் முதலியத்துத் தாரக மந்திரமான, Perfect competition என்ற கருத்துருவின் சில கூறுகளை முன்னணிக்குக் கொண்டு வருகிறதா என்று யோசிக்கலாம். Low barrier to entry, Continuous entry and exit from market, low barrier to information transmission about market conditions and changing technologies, free mobility of capital and labor among many other factors of production (this is actually a pipe dream, given the restrictions on labor mobility, but to an extent this has become a lot easier than it has ever been in recent decades, at least for a small segment of workers.) இவைதான் அந்த 18-19 ஆம் நூற்றாண்டுடைய பொருளாதாரச் சிந்தனையிலிருந்த போதை மருந்துக் கருத்துகள். இன்றைய பொருளாதாரத் துறையாளர்கள் இதை அப்படி எல்லாம் மதிப்பதில்லை என்றாலும், வேறு கருத்துருக்களையும் அவர்களால் கட்டி எழுப்பி விட முடியவில்லை. An ideal என்பதாக இதை வைத்துக் கொண்டு, வேறு எப்படி நடைமுறை வாழ்க்கை எனும் அமிலக் கரைசலில் இந்தப் புனித நோக்கம் அழிகிறது என்று விவரிக்கிறார்கள். அடிப்படையில் மனிதர் பகுத்தறிவாளர் என்ற பொய் அனுமானம் அழியாமல் இன்னும் இருக்கிறது. அந்த அனுமானத்தையே கைவிட்டால்தான் தற்காலப் பொருளாதாரம் என்ற அறிவுத் துறைக்குச் சிறிதாவது எதார்த்தம் கை கூடும். ஆனால் அதைக் கைவிட்டால் பெருவாரி நவீனச் சமூக ஆய்வுத் துறைகள் எல்லாமே உளுத்து உதிர்ந்து விடும். இருதலைக் கொள்ளி நிலை என்பார்களே, அதில் தற்கால சமூக ஆய்வுத் துறைகள் சிக்கி இருக்கின்றன.
ஜேம்ஸ் : என்னுடைய வேலை நாளைக்கு இருக்குமா என்பதுதான் கணினி நிரலாளியின் கவலை. ஐ.பி.எம் எக்கேடு கெட்டுப் போனாலும் அவளுக்கோ, அவனுக்கோ எந்தப் பிரச்சினையும் இருக்காது.
பூதம் : வர்ச்சுவல் ரியாலிட்டி, ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அல்லது ஆக்மெண்டட் ரியாலிட்டி போன்ற விஷயங்களைப் பேசி இவை வருங்கால சாதனம் சூழ் எதார்த்தமாகப் போகிறது என்று ஒரு விடியோ/ பாட்காஸ்ட் இருக்கிறது. The dawn of augmented and virtual reality technologies – Tech Weekly podcast | Technology | The Guardian என்பது போல் அன்றாடம் நூறு புதிய கண்டுபிடிப்புகளைப் பார்க்கிறோம். வழக்கம்போல இது ஹைப் (உயர்வு நவிற்சி?) என்று வைத்துக் கொள்வோம். ஆனால் இன்னும் ஐந்தாண்டுகளில் வராமல், 10-15 இல் பாதிக்கு மேலாவது இப்படி ஒரு எதார்த்தத்தை நம் முன், நாம் தேர்ந்தெடுத்தால், உருவாக்கக் கூடிய சாதனங்கள் கிட்டும் என்று என் ஊகம். அறிவியல் நவீனங்கள் இப்படி ஒரு உலகே முழு இயக்கம் கொண்ட உலகாக இருக்கும் என்பது போல ஒரு கனவுலகைக் கட்டி எழுப்புகின்றன.
விதூஷகன் : அது சும்மா ஊதிப் பெருக்கல்.
பேராசிரியர் கேசவன் : இத்தகைய தொழில்நுட்பங்கள் ஒரு புறம் பல்கலைகளிலும், பல துவக்க நிலை நிறுவனங்களின் சோதனைக் கூடங்களிலும் மிக்க சூதாட்ட முதலீட்டோடு உருவாகின்றன. இவற்றில் எது எல்லாம் வெற்றி பெறுகின்றனவோ அவை இன்றைய முகப்புத்தகம்/ ட்விட்டர்/ வாட்ஸ அப்/ கூகிள் போல நாளைய பெருவெற்றி பெறும் நிறுவனங்களாக அமைய வாய்ப்பு அதிகம். பற்பல ஆயிரம் நிறுவனங்களில் ஒன்றிரண்டுதான் இப்படி வெற்றி பெறும் என்றாலும், ஒவ்வொன்றும் ஒரு மெகா நிறுவனமாகும். இப்படிப்பட்ட தாவல்களை ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் ஏன் சாதிக்க முயல்வதில்லை?
தேவந்தி : இதெல்லாம் விற்கக்கூடியதாக, முழுப் பொருளாக பேக்கேஜ் செய்ய வேண்டும். அதெல்லாம் நடந்து கொண்டுதானிருக்கும். ஜெப்பர்டியில் கலந்து கொண்ட வாட்ஸனை வைத்து உடல்நலம், காப்புறுதி என பல துறைகளில் விதவிதமாக விற்கிறார்கள்: Inside Watson, IBM’s Jeopardy Computer – InformationWeek
விதூஷகன் : இருங்க… வாட்ஸ்ஸப்பில் முன்னாள் ஐ.பி.எம்மர் ஏதோ சொல்லுறார்…

ஓராண்டுக்கு முன்னர் நேரடியாகவே பலரை பணி நீக்கம் செய்தார்கள். எனக்கு தெரிந்தவரை, ஐ.பி.எம்-இன் பெரும்பகுதி லாபம், ஐ.டி சேவைகள் பிரிவிலிருந்தே கிடைத்தது. ஆனால், அதில் ஒரு பங்குகூட எங்களுடன் பகிரப்படவில்லை.
மறைமுகமாக இந்த சேவைகள் பிரிவை அவர்கள் குறைக்கவே முயன்று கொண்டிருந்தார்கள். இரண்டாண்டுகளாக ஊதிய உயர்வே இல்லை. நல்ல ரேட்டிங் கொடுக்கப்பட்ட சொற்ப ஜனங்களுக்கும் 1% சதவிகித ஊதிய உயர்வுதான் கொடுத்தார்கள். பல வசதி குறைப்புகள் நடந்தன. பெண்களுக்கான போக்குவரத்து வசதிகளிலிருந்து பலவற்றைக் குறைத்தார்கள்.
பொதுவாகவே ஐ.பி.எம்-இன் நிறுவன அமைப்பு ஒரு ‘பிரிட்டிஷ் ராஜ்’ போல பல அடுக்குகள் கொண்டது. நான்கு பேர் கொண்ட குழுவாக இருந்தாலும் இரண்டு மேலாளர்களாவது இருப்பார்கள். பணியாளர்களுக்கு தங்கள் பிரச்சனைகளை விருப்பு/வெறுப்புகளை வெளிப்படுத்த ஒரு சரியான கட்டமைப்பு இல்லை. HR-Employee பேச்சுவார்த்தைக்கு ஒரு வழியே கிடையாது. உங்கள் பிராஜக்ட் மேலாளரேதான் உங்கள் HR மேனேஜரும். இத்தனைப் பெரிய நிறுவன மாற்றத்திற்கு அவர்கள் தம்முடம் இருக்கும் பணியாளர்களையே அரவணைத்து organic-ஆக வளரலாம். அவ்விதக் கல்வி மற்றும் பயிற்ச்சிக்கு இங்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. ஆனால், அவ்விதம் நிகழவில்லை. தடாலடியாகத்தான் ஏதோ செய்கிறார்கள். அங்கு வெளியேறிக்கொண்டிருப்போரின் எண்ணிக்கையை கணக்கிட்டால், அவர்கள் அக்காலியிடங்களை நிரப்ப எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவுதான். பெரும்பாலும் சிறிய staffing கம்பனி மூலம் தற்காலிக ஊழியர்களைதான் எடுக்கிறார்கள். அதற்கு அவர்கள் நேரடியாகவே அறிவிக்கும் சம்பளம் கேலிக்குரியதாகவே இருக்கிறது.

ஜேம்ஸ் : பெங்களூர் ஐபிஎம். 2001. அப்போது ஐபிஎம் இந்தியாவில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் குறைவான ஆட்கள். கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேர் சர்வீஸஸ் துறையிலும் ஹார்ட்வேரிலும் இருந்தனர். ஐபிஎம் பற்றி எத்தனை குறை இருந்தாலும் அக்காலகட்டத்தில் cutting corners செய்யாத மிகச் சில நிறுவனங்களில் அதுவும் ஒன்று. கிட்டத்தட்ட இந்திய சர்வீஸ் கம்பெனிகளுக்கு நேர் எதிரான பாலிசிகளைக்கொண்டு வந்தார்கள். வாரத்துக்கு ஒரு நாளாவது வீட்டிலிருந்து வேலை செய்யலாம், மதிய உணவு கிட்டத்தட்ட இலவசம், அலுவலகத்தில் விளையாடவும் ஓய்வெடுக்கவும் இடங்கள், ஐபிஎம் சார்பாக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கான்ஃபரன்ஸ் பயணங்கள், செல்லுமிடமெல்லாம் 7 ஸ்டார் தங்குமிடம், ஹெச் ஆருடன் ஒரு நாள் என ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பிற கிளைகளுடன் சுற்றுலா என பணத்தை தண்ணி போல செலவு செய்தார்கள். நான் கன்சல்டண்டாக கொரியா செல்லும்போதெல்லாம் என் தனிப்பட்ட சுற்றுலாவுக்காக சிங்கப்பூருக்கு வார இறுதிக்குச் செல்ல அனுமதி என எல்லாம் இந்திய நிறுவனங்களில் பார்க்காத ஒன்றாகவே இருந்தது.
சிக்கி : இராமர் வனவாசம் போன மாதிரி! பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால்…
ஜேம்ஸ் : ஆனால் அதே சமயத்தில் சர்வீஸஸ் பெரிதாக வளரத் தொடங்கியது. ஐபிஎம் எனப் பெயரைக் கேட்டாலே மஹாராஷ்டிரா சண்டிகர் அரசு அலுவல்களில் வேலைகள் தன்னால் கிடைத்த காலம் போய்விட்டது. இன்ஃபோசிஸ், டிசிஎஸ்,சிடிஎஸ் என பலத்த போட்டி. அதே சமயம் மூன்றே வருடங்களில் 2005 இறுதியில் ஐம்பதாயிரம் நபர்கள் கொண்ட நிறுவனமாக அது மாறியது. பல மடங்கு லாபம். லெனோவா பிரிந்ததும் லாபம். ஆனால் இந்திய சேவை நிறுவனங்கள் போல cutting corners செய்யத் தொடங்கிவிட்டனர். விப்ரோவிடமிருந்து, இன்ஃபோஸிசிடமிருந்து ரெட் டேப் முறையைக் கடைபிடிக்கத் தொடங்கினர்.
சிக்கி : விப்ரோவில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து இருப்பவர்களை இனம் காண, நீல நிற ஐடி கார்டும், புதியவர்களை இனம் காண சிகப்பு நிற ஐடி கார்டும் கொடுப்பர். ஒருவர் உங்களைப் பார்த்ததும் முதலில் ஐடி கார்ட் நிறத்தைத்தான் நோட்டம் விடுவார், அதன்படி தான் உங்கள் சொல்லுக்கான மதிப்பு. இந்திய நிறுவனங்களிடமிருந்து ஐபிஎம்,ஹெச்பி போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு பலத்த போட்டி. கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டனர்.
ஜேம்ஸ் : இது இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் இதே நிலைமை. என் அண்ணன் ஒருவர் கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஐபிஎம் ஆஸ்டினில் இருக்கிறார். கொஞ்சம்கொஞ்சமாக வேலைகள் இந்தியாவுக்கு வந்ததோடு மட்டுமல்லாது, இந்தியர்களால் பல சொகுசுகளும் குறைக்கப்பட்டுவிட்டதாக விளையாட்டாக என்னைக் குற்றம் சொல்லுவார். இது ஒரு உலகலாவியப் பிரச்சனை தான். இந்தியாவில் வெளிப்படையாக ஒப்பிட்டுப்பார்க்க முடிகிறது.
சிக்கி : நான் ஐ பி எம்மில் வேலை பார்த்ததில்லை. அதனால் அதன் தனிப்பட்ட பிரச்சினைகள் பற்றி எனக்கு தெரியாது.பொதுவாக கணினி துறையில் நிகழ்ந்து வரும் போக்கு என்று சில நாட்களுக்கு முன் ஜேம்ஸ் ஒன்றை குறிப்பிட்டார். automation. (இயந்திரமயமாக்கல்?) பக்கம் பக்கமாக கோட் அடிக்க வேண்டிய காலங்கள் மலையேறிப் போய் பல வருடங்கள் ஆகின்றன. இப்போது எல்லா இடங்களிலும் தேவைகளுக்கேற்ப பிரத்யேகமான packaged products கிடைக்கிறது. இதைத் தேவையான முறையில் configure செய்தால் மட்டுமே போதுமானது. இதைச் செய்ய விசேஷமான திறன்கள் எதுவும் தேவையில்லை. நான் வேலை செய்து வந்த டெக்னாலஜியில் நான் கோட் செய்து கொண்டிருந்த ஒன்று கண் எதிரே packageஆக மாற்றப்பட்டு பயனர்களே அதை configure செய்து கொள்ளும் நிலையில் இன்று இருக்கிறது. இந்த automation நேரடியாக ஆட்களின் தேவையை குறைத்து விடுகிறது.
ஜேம்ஸ் : இதன் பக்க விளைவாக,  அதிக அனுபவம் என்பதற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டது. ஐந்து வருடங்கள் மட்டுமே அனுபவம் உள்ள மருத்துவரை விட பதினைந்து வருடம் அனுபவம் உள்ள மருத்துவருக்கு மதிப்பு அதிகம். ஆடிட்டர், வக்கீல்,கட்டட பொறியாளர் என்று எல்லோருக்கும் இதைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஆனால் பதினைந்து வருடம் அனுபவம் உள்ள கணிப்பொறியாளர் ஐந்து வருட அனுபவஸ்தரை விட மேலானவராக இருப்பார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் பதினைந்து வருடம் தொடர்ந்து கற்று அறிவை விரிவாக்கிக் கொள்ள எல்லாம் இதில் எதுவும் இல்லை.
சிக்கி : இதனால் எழு-எட்டு வருடங்களுக்கு பின் அவரை manager ஆக்கி விடுகிறார்கள் . அதன் பின் ப்ராஜக்ட் மேனேஜர், ப்ரோக்ராம் மேனேஜர் என்று பல அவதாரங்களில் அவர் ஒய்வு பெறும் வரை தொடர வேண்டும்.ஆனால் நிறுவனத்தின் பிரமிட் அமைப்பு நிறைய பேரை மேலே வைத்திருக்க விடாது. ஆக மேலே செல்லவும் முடியாமல் கீழே இறங்கவும் முடியாமல் மாட்டி கொண்ட middle managers பலர் இந்த ஆட்குறைப்புகளில் மாட்டிக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
பூதம் : இது ஐபிஎம் மில் உலகெங்கும் உள்ள பிரச்சினையா அல்லது அமெரிக்கா அல்லாத இடங்களில் உள்ள பிரச்சினையா? இதில் என்ன அளவு மிக்க உயர் கல்வி பெற்றவர்களின் ஆதிக்கம் உள்ளது? நேற்று உயர்கல்வித் தகுதி பெற்றவர்களின் தகுதிகள் இன்று பயனற்றவையாக ஆகும் நிலை பல துறைகளில் பல தொழில் முகங்களில் ஆகி விட்டது. காட்டாக கெமிகல் ஃபிஸிக்ஸ் அல்லது ஆர்கானிக் கெமிஸ்ட்ரி என்ற துறைகளில் முனைவர் பட்டம் வாங்கியவர்கள் இன்று கிட்டத்தட்ட வேலைக்காகாதவர்களாகப் பல கெமிகல் நிறுவனங்களிலும், மருந்துதயாரிப்பு நிறுவனங்களிலும் பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் குறுக்கு வெட்டாக இருக்கும் பல இன்றைய தொழில் நுட்பத்துறைகளுக்குப் பக்கவாட்டிலோ, மேல் நோக்கியோ தாவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
ஜேம்ஸ் : ஐ.பி.எம் ஏற்கனவே பேபி பெல் போல் பிரிக்கப் படப் பார்த்த நிறுவனம். மைக்ரோசாஃப்ட் போல் அந்த உடைப்பைத் தவிர்த்துவிட்டது. (பார்க்க – IBM and Microsoft: Antitrust then and now – CNET News) இப்பொழுது கூகிள் இதே போல் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து இருக்கிறது. கணினி தயாரிப்பு, கணினி இயங்குதளம், கணினி நிரலி, கணித் தேடல், கணினி விளம்பரம், கணினி பொழுதுபோக்கு – இப்படி… அவர்களை எப்பொழுது கூறு போடப் போகிறார்கள்?
பூதம் : Who Says Elephants Can’t Dance? என்று அப்போதை சி.யீ.ஓ. புத்தகம் எழுதினார். இப்போதைய ஜின்னி ராமெட்டி எழுதப் போகிற புத்தகத்திற்கு என்ன பெயர் வைப்பாங்க?
தேவந்தி : ஆட்குறைப்பு என்பதும் சகஜமாகிப்போய்விட்டது. பிராஜக்ட் இல்லாத பட்சத்தில் இத்தனை திறமைசாலிகளை என்ன செய்யச் சொல்வது? பொதுவாக புது தொழில்நுட்பமோ, காலகட்டமோ உருவாகும்போது அந்த புதுக் கருவிகளை உபயோகப்படுத்தும் கூட்டம் இருப்பதுபோல, அந்த புதுக் கருவிகளைக்கொண்டு மேலும் என்ன புதுசாகச் செய்யலாம் என நினைப்பவர்களுக்கான நிறுவனங்களும் இருக்கும். இரும்பு யுகம், பண யுகம், பசுமைப் புரட்சியுகம், தொழிற்சாலை வளர்ச்சி யுகம் என எல்லாவற்றிலும் உற்பத்தியும், ஆய்வுகளும் நடந்தபடியே தான் இருக்கும்.
பேராசிரியர் கேசவன் : ஆனால் இந்தியாவின் சேவைத் துறை அளவுக்கு புது தொழில்நுட்ப ஆய்வுகள் வளரவில்லை. பண முதலீட்டாளர்கள் சேவைத் துறையில் வரும் பன்மடங்கு லாபத்தை மட்டுமே குறிவைத்தார்கள். அசுரர்களான இன்ஃபோசிஸ், டிசிஎஸ், சிடிஎஸ் என எந்த நிறுவனமாவது புது பிராடக்ட் உருவாக்கி தொழில் நுட்பத்தில் எல்லையை விஸ்தரித்திருக்கிறார்களா? ஓபன் சோர்ஸில் அதற்கான முயற்சிகள் பெங்களூரில் நடந்தது. எனக்குத் தெரிந்த நல்ல வல்லுனர்கள் பலர் திறந்த நிறலியை நம்பி வேலையைத் துறந்து தனி ஆய்வுகள் செய்தனர். இது 2002-2003 ஆம் ஆண்டுகளில். அவர்களது ப்ளாகைத் தொடர்ந்து வாசித்து ஆச்சர்யப்படுவேன். Atul Chitnis, Kiran Jonnalagadda, Kalyan Verma எனத் திறமையான இளைஞர்கள். தாத்ஸ் எனும் சுதாகர் சந்திரசேகர் என் ஆதர்சமாகவே இருந்தார். திறந்த நிரலியில் மட்டுமே இந்தியாவின் எதிர்காலம் உள்ளது என சத்தியமாக நம்பியவர்கள். ஆனால் இன்று இவர்கள் எங்கிருக்கிறார்கள்? சர்வீஸஸும், பன்னாட்டு நிறுவனங்களும் இவர்களை விழுங்கிவிட்டன. RMS மட்டும் எத்தனை காலம் சண்டை போடுவார்? Cathedral and Bazaar சக்கைபோடு போட்டது. ஆனால் சந்தை வென்றது. ஐபிஎம் ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள் திறந்த நிரலிகளை ஸ்வாஹா செய்யத் தொடங்கினர். மிகச் சிறந்த தத்துவமாகத் தொடங்கிய மாடல் முளையிலேயே கிள்ளப்பட்டது.
தேவந்தி : சரி, இன்றும் இந்த நிறலிகளையும் தொழில்நுட்பங்களையும் கொண்டு புதிதாகப் படைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நமது படைப்பாளிகள் போல இது தனிப்பட்டவர்களின் அர்ப்பணிப்பு மட்டுமே. நிறுவனங்கள் முன்னெடுக்காத எதுவும் இன்று நிலைக்கமுடியாது எனும் நிலை. ஆட்குறைப்பு என்பது ஒரு சுழற்சிதான். ஆனால் புதுத் தொழில்நுட்பங்கள் விளையாமல் நாம் எப்போதும் இத்துறையில் சாதிக்கமுடியாது. ஆய்வுகளுக்கு நிதி அளிக்காத எந்த தொழில்நுட்பமும் காலப்போக்கில் இந்த நிலைமைக்கு மட்டுமே வரும். இப்போது தனிப்பட்ட முதலீட்டாளர்கள் சிறு நிறுவனங்கள் மூலம் பிரத்யேகமான மென்பொருட்களைச் செய்கிறார்கள். ஷங்கர் திறமையான புது ஆட்களுக்கு பணம் போட்டு படம் எடுக்கச் சொல்வது போல, இந்த பன்னாட்டு நிறுவனங்கள் புல்லுக்கும் கொஞ்சம் புசிய வைக்க வேண்டும். இந்த விளைநிலத்தை மறப்பது வானை மறந்திருக்கும் பயிரைப் போல் ரெண்டாவது போகத்திலேயே சத்தை இழந்துவிடும் அபாயம் உள்ளது.

தொடர்புள்ள கட்டுரை: ஐ.பி.எம். – ஒரு யானை எலி ஆகிறதா?

0 Replies to “இணைய உரையாடல் – ஆள் குறைப்பு, ஐ.பி.எம்.”

  1. //சின்ன நிறுவனங்களை வாங்குவது. அவற்றைத் தங்கள் கண்டுபிடிப்புகளோடு ஒட்டுவது. அதன் பிறகு, அந்தத் துறை சார்ந்த இன்னொருவருக்கு அதை விற்றுக் காசு பார்ப்பது. அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு, இன்னொரு குட்டி நிறுவனத்தை சல்லிசாக விலை பேசி வாங்குவது. இதே சுழற்சியில் காலந்தள்ளுகிறார்கள். எதையும் புதியதாகக் கண்டுபிடிப்பதில்லை. இவையும் தரகர்களாக, சூதாடிகளாக மாறிப் பல வருடங்களாகின்றன // மிகவும் சரியான அவதானிப்பு. இது கணனித்துறை என்றல்ல, பல தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆராய்ச்சித்துறையை மூடிவிட்டு, கம்பெனிகளை வாங்கி விற்று அதில் லாபத்தைக் காட்டுகின்றன. ஃபார்மா, ஆய்வுக்கருவிகள் என்பனவும் இதில் அடங்கும்.

Leave a Reply to சுதாகர் கஸ்தூரிCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.