கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது.
சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார். தமிழ் மீது பற்றுகொண்ட அவர் “கொச்சையான வார்த்தைப் பயன்பாடுகள் கொண்ட இந்தச் சிறுகதையைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்தது மட்டுமல்லாமல் “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்ற ஆதங்கத்தையும் பதிவு செய்திருக்கிறார். மென்பொருள் துறையில் திட்ட மேலாளராக வேலை செய்யும் அவர் தமிழ்ச் சூழலிலிருந்து எவ்வளவு விலகி இருக்கிறார் என்பதை அவர் முன் வைக்கும் கோரிக்கைகளே தெரியப்படுத்துகின்றன.
கிழக்கு பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த “மொழி பெயர்ப்பு – ஒருநாள் கருத்தரங்கம்” – 2014 ஏப்ரல் மாதம் 31அன்று நடந்தது. புனைவிலக்கிய மொழிபெயர்ப்பின் சாத்தியக் கூறுகளைப் பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் ஜி. குப்புசாமி. அதில் tovias wolff எழுதிய “Hunters in the snow” என்ற சிறுகதையைக் குறிப்பிட்டு “இக்கதையை வாசித்து அதிலுள்ள நுட்பங்களை அனுபவிக்கலாம். ஆனால் இந்தக் குறிப்பிட்ட கதையை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில் அக்கதை முழுவதும் வசவுச் சொற்களால் கட்டமைக்கப்பட்டது. வட்டார வசவுச் சொற்களை மொழிபெயர்ப்பது சவாலான காரியம்” என்ற காரணத்தைக் கூறினார். உலகின் எல்லா மொழிகளிலும் வசவுச் சொற்கள் குவியலாகக் கிடக்கின்றன. “கெட்ட வார்த்தைகள்” என்று சபை நாகரிகம் கருதி நாம் பேச மறுக்கும், பேசத் தயங்கும் வார்த்தைகளின் வேர்களைத் தேடிச் சென்றால் அப்பயணம் சுவாரஸ்யத்தையே ஏற்படுத்துகிறது. பெருமாள்முருகன் அதைத்தான் தனது தொடர் கட்டுரையொன்றில் செய்திருக்கிறார்.
பா. மணி என்ற புனைபெயரில், “இறக்கை”, “மணல்வீடு” ஆகிய சிற்றிதழ்களில் பெருமாள்முருகன் எழுதிய “கெட்ட வார்த்தை பேசுவோம்” என்ற தலைப்பிலான கட்டுரைகள் கலப்பைப் பதிப்பகத்தின் வழியாக நூலாக வெளியாயிற்று. அபுனைவுப் பிரிவில் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கனடா இலக்கியத் தோட்டம் பரிசு வழங்கியது. அந்நூல் சற்றே விரிவுபடுத்தப்பட்டு இப்போது காலச்சுவடு பதிப்பகம் வழியாக இரண்டாம் பதிப்பாக வெளியாகியுள்ளது. இந்நூலை வாசித்தபோது திலீப்குமாரின் “கடவு” என்ற சிறுகதைதான் முதலில் நினைவிற்கு வந்தது. ஆபாசம் பொதிந்த பாலியல் வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்றாலும் மறைமுகப் பொருள்படும்படி கதை முழுவதும் இரட்டை அர்த்தத்தில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பார்.
க்ரியா பதிப்பகம், 2010-ல் வெளியிட்ட எழுத்தாளர் திலீப்குமாரின் சிறுகதைத் தொகுப்பில் “கடவு” முதல் கதையாக இடம்பெற்றுள்ளது. கங்குப் பாட்டி தான் கதையின் மையப்பாத்திரம். நரைகூடிக் கிழப்பருவம் எய்தி எமனிடம் போகும் நாளுக்காகப் பாட்டி காத்திருக்கிறாள். குஜராத்திக் கிழவியான கங்கு பெஹ்ன் – 13 வயதில் திருமணமாகி, 15 வயதில் புஷ்பவதியாகி, 22 வயதிற்குள் 6 குழந்தைகளைப் பெற்றெடுத்து, 27 வயதில் கணவனை இழந்து விதவையாகி நிற்கிறாள். அந்தச் சமயத்தில் ரேனிகுண்டா மிலிட்டரி ‘பாரக்ஸ்’ சோல்ஜர்களால் கடத்திச் செல்லப்பட்டுக் கங்கு சீரழிக்கப்படுகிறாள். பலநூறு நபர்கள் அவளை வன்புணர்ச்சி செய்கிறார்கள். அவளை நான்கைந்து வருடங்களாகத் தேடி – பம்பாயிலுள்ள பூலேஷ்வர் என்ற இடத்திலுள்ள ஒரு தெருவில் கர்ப்பவதியாகக் கண்டெடுக்கிறார்கள் அவளது உறவினர்கள். திக்பிரமை பிடித்த அவளுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறார்கள். பதினோரு வருடங்கள் கழித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணமடைகிறாள் கங்குப் பாட்டி.
கதையில் வரும் பாத்திரங்கள் எல்லோரும் கங்குப் பாட்டியிடம் தோழமை பாராட்டுகிறார்கள். ராண்ட்நா (தேவிடியா மகனே, அவுசாரி மகனே) என்று உரிமையுடன் பாட்டி அழைக்கும் ரஜ்னியைத் தவிர உதிரிப் பாத்திரங்கள் பெரும்பாலும் குஜராத்திப் பெண்கள் தான். சிறுமிகள் முதல் நடுத்தர வயதுள்ள குடும்பத்தலைவிகள் வரையுமுள்ள எல்லோரும் பாட்டியிடம் மனம் திறந்து பேசுகிறார்கள். கங்கு இவர்கள் எல்லோருக்கும் பட்டப் பெயர் சூட்டுகிறாள். “சின்ன டேக்ஸா, பெரிய டேக்ஸா, வெள்ளைப் பன்னி, ஒட்டடைக் கொம்பு, டபுள் ரொட்டி, ஸ்டைல் மாமி” என்பன போன்ற இரட்டை அர்த்தப் பெயர்கள். போலவே, பாலியல் உறுப்புகளுக்கும் கூடச் சங்கேதப் பட்டப் பெயர்களைச் சூட்டுகிறாள். ஆண்குறியை “வஸ்து” என்றும் பெண்குறியைக் “கபிலவஸ்து” என்றும் புட்டத்தை “டேக்ஸா” என்றும் குறியீட்டுப் பெயர் வைத்து ஓய்வு நேரத்தில் பேசிக் கதையாடுகிறார்கள்.
இந்தச் சங்கேதப் பாலுறுப்புப் பெயர்களைக் கொண்டு அன்றாட வாழ்வின் நெருக்குதல்களை எள்ளல் தன்மையில் இந்தச் சிறுகதையில் வெளிக்கொண்டு வந்திருப்பார் எழுத்தாளர் திலீப்குமார். கதைமாந்தர்களில் ஒருத்தி கல்லூரி மாணவி. ஊட்டிக்குச் சுற்றுலா சென்று திரும்பியவள் பாட்டியிடம் பின்வருமாறு உரையாடுகிறாள். (பக்கம்: 27)
“வாடி, காலேஜ் டூரெல்லாம் எப்படியிருந்தது?”
“ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாட்டி. ஒரு வாரம் பயங்கர சந்தோஷமாக இருந்தது.”
“ஊட்டியெல்லாம் நன்றாகச் சுற்றிப் பார்த்தாயா?”
“ஊட்டி என்ன, உலகத்தையே பார்த்துவிட்டு வந்திருக்கேன் பாட்டி.”
“என்னடி சொல்கிறாய்?”
“பெண்களுக்கு இனி வஸ்துவே தேவையில்லை என்று நிரூபித்துக் காட்டிவிட்டாள் அவள்.”
“யாரவள்?”
“அகிலாண்டேஸ்வரி. என் கூடப் படிக்கிறவள்.”
“என்னடி செய்தீர்கள்?”
“எல்லாமே… அதையெல்லாம் வாயால் சொல்ல முடியாது. அனுபவித்துப் பார்க்க வேண்டும்.”
“அடியே, சுத்தபத்தமாக இருந்துகொள்ளுங்கடி.”
“எனக்கு ஒரு பயமும் கிடையாது. யார் தயவும் வேண்டாம் இனி எனக்கு. அகிலா ஒருத்தி போதும்.”
“உன் அம்மாக்காரி சும்மா விடுவாளாக்கும். நிலத்துக்கேத்த உழவனைக் கூட்டி வந்துவிட மாட்டாளா?”
என்பது போல இவர்களது அந்தரங்க சம்பாஷனை நீள்கிறது. தொடர்ந்து பாட்டியிடம் அந்த மாணவி கேட்கிறாள்:“சரி பாட்டி. இதப்பத்தி நீ என்ன நினைக்கிறாய்?”
“அடி நாசமாய்ப் போனவளே, நானே ஒரு ஆத்திர அவசரத்துக்கு என் டேக்ஸாவைச் சொரிந்து விடக் கையை மடக்க முடியாமல் கிடக்கிறேன். என்னிடமா கேட்கிறாய்? நான் சொன்னால் சட்டம் போட்டுவிடுவார்களாக்கும்… சனியனே…” என்கிறாள் கங்குப் பாட்டி.
பின்னாளில், “உமாவும் ராமாவும்” என்ற லெஸ்பியன் நாவலை திலீப்குமார் எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தமிழின் முதல் லெஸ்பியன் நாவல் இதுவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறன். போலவே, குடும்பத்தலைவி ஒருத்தி பாட்டியிடம் ஒரு சந்தேகம் கேட்கிறாள் (பக்கம்: 24):
“பாட்டி உலர்ந்த – மாங்காய் ஊறுகாய் போடுவதற்கு மிளகாய் எவ்வளவு பாகம்.”
“அது உன் டேக்ஸாவின் எரி- எதிர்ப்புத் திறனைப் பொறுத்தது.” (இப்படிக் கூறினாலும் பாட்டி சபை முடிவில் மிளகாயின் சரியான அளவைச் சரியானபடி கூறிவிடுகிறாள்.)
மலத் துவாரத்தின் வழியே இயற்கைக்கு முரணான வகையில் உறவுகொள்ள விரும்பும் தனது கணவனின் காம வேட்கையைப் பற்றிக் கூறிப் பாட்டியிடம் யோசனை கேட்கிறாள் ஒருத்தி. பாட்டி அவளுக்கு ஆலோசனை கூறுகிறாள் (பக்கம்: 30):
“பாட்டி, வஸ்துவை டேக்ஸாவில் போட வேண்டுமாம்.”
“உன் புருஷன்தானே, அந்த அக்கிரிமி செய்தாலும் செய்வான். சரி, விடு. அப்படியும்தான் ஒருநாள் இருக்கட்டுமே.”
“பாட்டி, என்ன நீ சுத்த கூறுகெட்டவளாக இருப்பாய் போலிருக்கிறதே!”
“அடியே, வீணாகப் பதறாதே. உலகத்தில் எதுவுமே புனிதமானது இல்லை. நிச்சயமாக உன் டேக்ஸா புனிதமானதே இல்லை. இந்து மதம் என்ன சொல்கிறது – உடல் தூய்மையற்றது; அழியக் கூடியது என்று. அழியக்கூடிய உடலிலிருந்து இப்படி ஒரு சந்தோஷம் கிடைக்கிறது என்றால் கிடைக்கட்டுமே.”
“நீ சரியான வக்கிரம் பிடித்தவள். உன்னிடம் வந்தேன் பார்!”
“வெளிப்படுத்திவிடுகிற வக்கிரத்தைவிட, தேக்கி வைத்திருக்கிற வக்கிரம் அபாயமானது. தவிர, வக்கிரம் எதில்தான் இல்லை? பார்க்கப்போனால் எல்லாமே வக்கிரம்தான். என் பேச்சைக் கேள். உனக்கு நிச்சயமாக விருப்பம் இல்லையென்றால் தீர்மானமாக மறுத்துவிடு. ஆனால், நீ அரைமனத்துடன் இருந்தால் பரீட்சித்துப்பார். அதனால் உனக்குச் சில அனுகூலங்களும் ஏற்படலாம்.”
“கிழவி, நீ நாசமாய்த்தான் போவாய்.”
இன்னொரு நடுத்தர வயதுக் குடும்பத் தலைவியின் நிலையோ இதனினும் சிக்கல் நிறைந்தது. பர்மா பஜாரில் விற்கும் செக்ஸ் டாய்ஸ் பற்றிய குறிப்பு ஓரிடத்தில் வருகிறது. கங்குப் பாட்டியிடம் குடும்பத் தலைவி முறையிடுகிறாள் (பக்கம்: 31):
“முன்பு மாதிரி வஸ்துவுக்குக் கபிலவஸ்துவுக்குள் நுழைய முடியவில்லை பாட்டி.”
“ஏன், என்ன ஆச்சி?”
“ஒரு நிமிடத்துக்குள் வழுக்கிவிடுகிறது.”
“அடப் பாவமே, பழைய ஜபர்தஸ்து போய்விட்டதாக்கும்… நாப்பத்தைந்து வயதுக்குள்ளாகவா… உன் புருஷன் பாஸ்கட் பால் ப்ளேயராட்டும் நெடுநெடுவென்று லட்சணமாக இருப்பானே. அவனுக்கா இப்படி? சரி சரி, அதற்காக வேறு வஸ்துவைத் தேடி நீ போய்விடாதே. உன் புருஷன் அப்பாவி.”
“ஆமாம் பாட்டி, பர்மா பஜாரில் வஸ்து மாதிரி மிஷினெல்லாம் கூடக் கிடைக்கிறதாமே!”
“பர்மா பஜாரில் நிஜ வஸ்துவே கிடைக்கும். நான் சொல்வதைக் கேள். மிஷின் கிஷின் எல்லாம் சரிப்பட்டு வராது. விலையும் ஜாஸ்தி. அப்புறம் உன் மாமியாருக்குத் தெரிந்தால் உன் டேக்ஸாவைக் கிழித்து விடுவாள். உசிதமானது – மாதத்திற்கு ஒருமுறை கபிலவஸ்துவுக்குள் வஸ்து வரட்டும். மற்ற சமயத்தில் கைப்பக்குவமாக ஏதாவது செய்து கொள்ளுங்கள்.”
“பாட்டி, உனக்கு அபார மூளை.”
“ஏண்டியம்மா திடீரென்னு என் மூளையைப் பாராட்டுகிறாய்?”
“நான் நினைத்ததை நீ அப்படியே சொல்லிவிட்டாய்.”
“அப்படியா! எவ்வளவு சமத்துடி நீ! ச்சீ நாயே. உன் டேக்ஸாவில் தீயை வைக்க… இவள் நினைத்தாளாம். நான் சொல்லி விட்டேனாம்!”
தனியாகவும், சபையாகவும் கூடிக்கூடி இதுபோல, இந்தச் சிறுகதையில் கதையின் மாந்தர்கள் பேசுகிறார்கள். வசவுச் சொற்கள் ஆங்காங்கு எட்டிப் பார்க்கும் நவீனப் படைப்புகள் நம்மிடம் நிறையவே உண்டு. ஆனால், கதை முழுவதுமே வசவுச் சொல்லைப் பகடியாக வைத்து நகரும் “கடவு” தவிர்த்த வேறேனும் கதை தமிழில் வெளிவந்துள்ளதா என்று தெரியவில்லை. தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பரிமாறிக்கொள்ளும் பாலியல் குறுஞ்செய்திகளை வெட்டி, ஒட்டிக் கதை வடிவில் செதுக்கியதுபோல இந்தச் சிறுகதையின் வடிவம் அமைந்திருக்கும்.
KVP
“கெட்ட வார்த்தை பேசுவோம்” – தொகுப்பில் “ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு, உறுப்புகள் புணரும்போது பொருள்படும் வழக்கிலுள்ள ஒற்றைச் சொல்லின் பெயர்கள்” எனப் பல சொற்களையும் – கூத்துக்கலை முதற்கொண்டு, சங்க இலக்கியத்தில் அச்சொற்களின் பயன்பாடுகள் என்று நுட்பமாக அணுகிச் சமூக யதார்த்தத்தில் அதன் பயன்பாடுகள் மற்றும் மதிப்பீடுகள் குறித்த கேள்வியை எழுப்புகிறார் பெருமாள்முருகன்.
பெண்களின் முலைகளையும் இடையையும் சங்ககாலம் தொட்டுக் கவிஞர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். போலவே, பெண்ணுறுப்பை “அல்குல், பருமம், சிதி, கருமுகன், மாடம்” என்று இலக்கியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். புண்டை என்றும் கூதி என்றும் தற்காலத்தில் குறிப்பிடப்படுகிறது. “யோனி” என்ற வார்த்தையின் பயன்பாடு புதுக்கவிதைகளிலும் நவீனப் படைப்புகளிலும் நிறையவே பார்க்க முடிகிறது. கூதி என்ற வார்த்தையைக் காளமேகப் புலவர் தமது வெண்பாவில், பதினைந்தாம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தியுள்ளதை ஆதாரத்துடன் தமது கட்டுரைகளில் பெருமாள்முருகன் எடுத்துக் காட்டுகிறார். சிவனுக்குச் சிலேடையாகக் காளமேகப் புலவரால் இயற்றப்பட்ட கீழ்க்கண்ட வெண்பாவை அதற்கு உதாரணமாகக் காணலாம். (கெட்ட வார்த்தை பேசுவோம் – பக்கம் 77 & 85)
கூதிக்கெட் டேழும் குலைந்து நடுநடுங்கிப்
பூதிக்கொப் பாகவன்றோ போய்விடுமே – ஆதி
நரக்காட் டகவரியை நற்சரப மாகிச்
சுருக்கா விடினஞ் சுணி.
இதனைக் “கூ திக்கு எட்டு ஏழும்” என்று சீர் பிரித்துப் பார்க்கும்பொழுது – ‘கூ’ என்றால் பூமி என்று பொருள்படுகிறது. பூமியின் திசைகள் ‘எட்டும்’ உலகம் ‘ஏழும்’ என்று அடுத்தடுத்துப் பொருள் கொள்ள வேண்டும். இங்கு “கூ திக்கு” என்ற வார்த்தைகள் இணைந்து “கூதி” என்ற சொல் வரும்படி வெண்பா இயற்றப்பட்டிருக்கிறது.
நஞ்சை உண்டவனாகிய சிவன் வலிமையான சிம்புள் பறவையாகித் திருமாலாகிய நரசிங்கத்தை அடக்காமலிருந்தால் பூமியில் எட்டுத் திசைகளும் ஏழு உலகங்களும் நரசிங்கத்தின் கோபத்தால் வெறும் புழுதியாகிப் போய்விடும் என்பது சிவன் பற்றிய கருத்தாகப் பாடலில் அர்த்தம் பொதிந்துள்ளது. யோனியும், ஆணுறுப்பும் சேர்ந்ததின் வடிவம் என்றுதானே லிங்கத்தைச் சொல்கிறார்கள். வட்டார வழக்குச் சொற்கள் பதினாறாம் நூற்றாண்டிலேயே இலக்கியத்திற்குள் நுழைந்திருக்கிறது என்பதற்கு இந்த வெண்பாவே ஆதாரம்.
போலவே, “குஞ்சு, பெல்லா, தம்பி, புடுக்கு” போன்ற பல்வேறு சொற்களில் அர்த்தப்படுத்தப்படும் ஆணுறுப்பிற்கு நிகரான சொல்லின் பயன்பாடு செவ்விலக்கியத்தில் அதிகம் காணப்படவில்லை என்று வருத்தப்படுகிறார் பெருமாள்முருகன். எனினும் பிற்காலச் செவ்வியல் தொகுப்பு ஆக்கங்களில் “செம்பின், சுனி, சுணி, சுண்ணி, கோசம், மாணி, மாணீ” போன்ற சொற்களின் பயன்பாடானது ஆணுறுப்பையே குறிக்கிறது என்றும் கூறுகிறார்.
ஜெயமோகனின் ‘காடு’ நாவலில் “குப்புறத் தொங்கும் பெருச்சாளி போல அவனது குறி” என்று ஆணுறுப்பைப் பற்றிய வர்ணனை வருகிறது. எனினும் அதன் வெளிப்படையான சொல் பயன்படுத்தப்படவில்லை. (காடு – தமிழினி வெளியீடு – பக்கம்: 134). பி.ஏ. கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ நாவலின் எட்டாவது அத்தியாயத்தில் கோடைகால இரவுகளில் கிணற்றிலும் ஆற்றிலும் நண்பர்களுடன் நீந்திவிட்டு ஈரக் கால்சட்டையுடன் வீட்டிற்கு வரும் கண்ணனிடம் “உன் காலுக்கிடுக்கில இருக்கில்லயா ரெண்டு கோலிக்காய். அது முதல்ல எலுமிச்சம் பழம் ஆகும். அப்பறம் டென்னிஸ் பந்து மாதிரி ஆயிடும். நடக்கும்போது தொடைல அடிச்சிக்கும்” என்று அவனது அப்பா சொல்கிறார் (காலச்சுவடு வெளியீடு – அத்தியாயம்: 8 பக்கம்: 184). இந்த இடத்தில் அப்பா மகனிடம் பேசுவதால் சங்கேத வார்த்தைகளில் பேசுகிறார் என்றேகூட வைத்துக்கொள்ளலாம். ஆனால், இதே நாவலில் கண்ணன் சுய இன்பம் அனுபவிக்கும் ஓர் இடம் வருகிறது. அந்த இடத்தில் கூட ஆண்குறியைக் குறிக்கும் சொல் வரவில்லை. ரெஜாக் தன் லுங்கியை முழுதும் மேல் தொடை மீது சுருட்டிவிட்டுத் தன் குறியை இழுத்து இழுத்து வேடிக்கைக் காட்டினான். (ரத்த உறவு – பக்கம் 13). பாலபாரதியின் மூன்றாம் பாலினத்தவர்களைப் பற்றிய “அவன் + அவள் = அது” நாவலிலும் ஆண்குறியைக் கத்தரித்துவிட்டுப் பெண்ணாக மாறும் சடங்கினைப் பதிவு செய்திருக்கும் இடத்தில் கூட நேரடிச் சொல் பயன்படுத்தப்படவில்லை.
ஆண்குறியின் பெயர் நேரடியாக முதன்முதலில் வெளிப்படையாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது தமது “ஏறுவெயில்” நாவலில்தான் என்கிறார் பெருமாள்முருகன். முதன்முதலில் ஜட்டிபோடும் மகனைப் பார்த்து“இதில்லாம சுனி நிக்க மாட்டீங்குதா?” என்று தாய் கேட்பதாக ஓரிடத்திலும், “எஞ்சுனிக்குப் பொறந்தவன் நீ”என்று தந்தை கேட்பதாக மற்றொரு இடத்திலும் இந்நாவலில் பதிவு செய்திருக்கிறார். “குண்டி மசுரு” என்ற வசவு வார்த்தையைப் பல எழுத்தாளர்களும் தமது படைப்புகளில் பயன்படுத்தியிருகிறார்கள். லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய உப்பு நாய்கள் நாவலில் வரும் ஒருபால் உறவில் விருப்பமுள்ள உதிரிப்பாத்திரம் “இப்போ உங்கப் பூலக் காட்டுவிங்களா?” (உயிர் எழுத்து வெளியீடு – பக்கம் 27) என்று குழைவது போல ஒரு வசனம் வரும். போலவே, ராஜ்கௌதமனின் “சிலுவைராஜ் சரித்திரம்” என்ற நாவலில் சுருள்சுருளாக உடலில் ரோமங்கள் முளைத்த பள்ளி மாணவனை – அவனது ஆசிரியர் தண்டிக்கும் இடத்தில் “பிரம்பக் கொண்டு அவந் தொடையில தடவிக்கிட்டே டவுசர்குள்ள கொண்டு போவார். கொண்டு போறவர் சும்மா இருக்காம அவங் குஞ்சாங்கிட்ட பிரம்ப வச்சிச் சுத்தி முறுக்குவார்” என்று கதைசொல்லியான சிலுவைராஜ் பகிர்ந்துகொள்வதுபோல ராஜ்கௌதமன் பதிவு செய்திருப்பார். சாருநிவேதிதா, வா.மு.கோமு போன்றவர்களும் தமது பெரும்பாலான படைப்புகளில் வட்டாரப் பயன்பாட்டு வசைச்சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தியிருப்பார்கள். “யோனியில் ஆணி அடித்ததுபோல வலித்தது” போன்ற வார்த்தைப் பயன்பாடுகளை அம்பையின் சிறுகதைகளில் காணலாம். இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். “வண்ணநிலவன், கண்மணி குணசேகரன்” எனப் படைப்பாளிகளை வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம். “நவீனப் படைப்புகளில் பாலுறுப்பு வார்த்தைகளின் பயன்பாடு” என்ற தலைப்பில் யாரேனும் ஆராய்ச்சி செய்ய முன்வந்தால் இன்னும்கூடச் சிறப்பாக இருக்கும். இன்றைய கல்விப் புலச் சூழலில் “கொச்சை வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள், வசவுச் சொற்கள்” சார்ந்த வட்டார வழக்கு ஆராய்ச்சிகள் சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது.
வார்த்தைகளுக்கு “நல்லவை X கெட்டவை” என்ற சாயத்தை நாம் தான் பூசிவிடுகின்றோம். எனினும் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் பேசும் பொழுதும், கையறு நிலையின் கோபத்தை வெளிப்படுத்தும் பொழுதும் – “கெட்ட வார்த்தைகள்” எனச் சமூகம் அடையாளப்படுத்தியிருக்கும் வார்த்தைகள் தான் வாயிலிருந்து அருவிபோலக் கொட்டுகின்றன. ஆங்கிலம் பேசுபவர்கள் “FUCK” என்ற வார்த்தையைப் பல்வேறு பாவங்களில், பல்வேறு உணர்வு நிலைகளின் வெளிப்பாட்டில் வினைச்சொல்லைப் போலப் பயன்படுத்துவதை ஒரு திரளான கூட்டத்தில் ஓஷோ (ரஜனீஷ்) பகிர்ந்து கொள்வார். அதன் காணொளி YouTube-ல் காணக் கிடைக்கிறது. “ஒத்தா எங்கடா போயிருந்த?”, “ஒத்தா சீ… மூட்றா வாய?”, “ஓத்தா ஜஸ்ட் மிஸ்டா” என நாமும் “FUCK”-க்கு நிகரான வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். எல்லா மொழிகளிலும் இதுபோன்ற சொற்கள் இருக்கத்தானே செய்கிறது. “ஒலு, ஓழி, ங்கொக்காலோழி, கண்டாரோலி, ங்கொய்யாலோலி, தாயோலி (Mother Fucker)” போன்ற பாலியல் வட்டார வசவுச் சொற்களின் பயன்பாடும் யதார்த்தப் புழக்கத்தில் அதிகமாகவே உள்ளது. ஆனால் படைப்பிலக்கியங்களில் அவையாவும் சென்சார் செய்யப்படுகின்றன. அப்படியே பயன்படுத்தினாலும் சர்ச்சைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “காக்க காக்க” திரைப்படத்தில் வரும் வில்லன் கதாப்பாத்திரம் “ங்கோத்தா” என்ற வார்த்தையைச் சேர்த்துத் தான் ஒவ்வொரு வசனத்தையும் பேசுவான். அதனை “த்தா” என்ற ஓசையில் திரைப்படம் முழுவதும் பயன்படுத்தியிருப்பார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். ஏனெனில் சென்சாரில் அந்த வார்த்தைகளை வெட்டிவிடுவார்கள் என்ற நியாயமான பயம் இயக்குநருக்கு இருக்கிறது. ஆங்கில, ஹாலிவுட் திரைப்படங்களில் ஏற்ற இறக்கங்களுடன் “FUCK” என்ற வார்த்தையை, மற்ற எந்த வசனத்தையை விடவும் காதுகுளிர மிகத் தெளிவாகக் கேட்க முடியும். கலாச்சாரக் கொடியைத் தூக்கிப் பிடிக்கும் இந்தியச் சூழலில் இதெல்லாம் சாத்தியமே இல்லை. இந்தத் திரைப்பட சென்சார் போர்டு செய்த வேலையைத் தான் சங்ககால இலக்கியத்தை ஆரம்ப காலங்களில் பதிப்பித்தவர்கள் செய்திருக்கிறார்கள். “அல்குல், சிதி” போன்ற வார்த்தைகள் வரும் இடங்களில், அர்த்தத்தைத் திரித்து விளக்கம் எழுதியிருக்கிறார்கள். அல்லது பாடலையே கத்தரித்துத் தொகுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அதுபோன்ற விடுபடல்களைப் பற்றித் தான் பெருமாள்முருகன் இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள் முழுவதும் அலசியிருக்கிறார்.
தினமணி நாளிதழில் (1988) “மதம் – எழுத்து – சமூகம்” என்ற கட்டுரையில் சல்மான் ருஷ்டியைப் பற்றி அசோகமித்திரன் எழுதும்போது “சமூக அமைதிப் பொறுப்பை ஏற்கிறவர்கள் உயர்ந்த இலக்கிய ரசனையும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. எமெர்ஜென்சி காலத்தில் ஒருமுறை சென்னை வந்த இந்திரா காந்திக்கு நல்ல உச்சி வேளையில் பிரபல தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட குழு ஒன்று கூட்டம் கூட்டியது. அதன் தலைவர்கள், அவர்கள் ஆபாசம் என்று கருதும் படைப்புகளையும் படைப்பாளிகளையும் அரசு தடை செய்ய வேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்கள்” என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார்.
“இம்மாதிரி விஷயங்களில் தயவுசெய்து அரசாங்கத் தலையீட்டை வற்புறுத்தாதீர்கள். பொதுவாகவே அரசாங்கங்கள் சற்று ரசனைக் குறைவாகத் தான் எப்போதும் இருந்திருக்கின்றன” என்று சமயோசிதமாக இந்திராகாந்தி அதற்கு பதில் சொல்லியிருக்கிறார். சில பத்தாண்டுகளுக்கு முன்பே இந்த நிலையில் தான் இலக்கியச் சமூகம் இருந்திருக்கிறது.
வார்த்தைகள் ஒவ்வொன்றும் மொழிக்கு வளமை சேர்க்கின்றன. உண்மையில் கெட்ட வார்த்தைகள் என்று எதுவுமே இல்லை. இவையெல்லாம் சமூகத்தின் கற்பிதங்கள் மட்டுமே. பெருமாள்முருகனின் “கெட்ட வார்த்தை பேசுவோம்” – அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரைத் தொகுப்பு. தமிழிலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கும் சரி, மொழி ஆர்வலர்களுக்கும் சரி தீனி போடக்கூடிய சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பு இது. சாப்ஃட்வேர் என்ஜினியர்கள் கூடப் படிக்கலாம். “மாமரம்” சிறுகதையைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த, சிபிஎஸ்ஸி பாடத்திட்டத்தில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியின் தந்தையைப் போன்று ஒற்றைத் தளத்தில் சிந்திக்கும் மேல்தட்டு மனோபாவம் கொண்டவர்கள் முக்கியமாகப் படிக்க வேண்டும். ஒருவகையில் இவையாவும் வரலாற்று ஆவணம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். எளிய மக்களின் மொழியானது தேவையில்லாத சினிமாக் காட்சிகளைப் போலத் துண்டித்து எறிய வேண்டிய ஒன்றல்ல. இந்த வட்டார மொழி ஒருசார் மக்களின் வாழ்வியல் கூறு. அதனைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் படைப்பாளிகளுக்கு இருக்கிறது. ஏனெனில், படைப்புகள் யாவும் காலத்தின் கண்ணாடி. ரசம் உதிராக் கண்ணாடிகள் எல்லாவற்றையும் பிரதிபலிக்க வேண்டும். உலக இலக்கியங்கள் யாவும் அதைத் தான் பிரதிபலிகின்றன.

***

(கெட்ட வார்த்தை பேசுவோம், பெருமாள்முருகன், இரண்டாம் பதிப்பு காலச்சுவடு பதிப்பகம்.)

0 Replies to “கெட்ட வார்த்தை பேசுவோம்”

 1. நேற்று ஒரு நண்பருடன் உள் டப்பியில் உரையாடிய பொழுது சொன்னது . ஒன்பதாம் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு சுய இன்பம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்தும்
  நீண்ட தூரப் பேருந்து , ரயிலில் ஏறும் முன் கண்டிப்பாக அனைத்து பயணிகளும் சுய இன்பம் செய்து விட்டே ஏற வேண்டும் என்ற முறைகளைக் கொண்டு வர வேண்டும் என்றார் .
  பல கிறித்துவ தேவாலய பள்ளிகளில் கட்டாய சுய இன்பப பாடங்கள் உண்டு என்றார் .
  அது போலவே , பெருமாள்முருகனின் “கெட்ட வார்த்தை பேசுவோம்” – அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரைத் தொகுப்பு. தமிழிலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கும் சரி, மொழி ஆர்வலர்களுக்கும் சரி தீனி போடக்கூடிய சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பு இது –

 2. கெட்ட வார்த்தை பேசாதீர்
  தமிழ்நாட்டு இலக்கியங்களில் காணப்படும் மைதுன உறுப்புகளை இந்தப் பதிவு பட்டியலிடுகிறது. ஆனால், மைதுன உறுப்புகளின் பெயர் ஏன் “கெட்ட” வார்த்தையானது என்பது பற்றி பெருமாள் முருகனோ, இப்பதிவின் ஆசிரியரோ யோசிக்கவில்லை.
  கிராமங்களில் நடைமுறையில் சகஜமாகப் பேசப்படும் பாலியல் சொலவடைகள் பற்றி கி. ராஜநாராயணன் உட்படப் பல உண்மையான இலக்கியவாதிகள் பேசி இருக்கிறார்கள். அவற்றை கெட்ட வார்த்தைகளாக இந்தக் கிராமத்து மக்கள் உணர்வதில்லை.
  அதனால்தான் 15ம் நூற்றாண்டு காளமேகப் புலவன் பல இரட்டுற மொழிதல் கவிதைகளை இயற்ற முடிந்திருக்கிறது. பாலியல் வார்த்தைகள் கொண்டு சிவனைப் பற்றிப் பாட்டெழுத முடிந்திருக்கிறது. புரவலராக இருந்த சிறு சிறு ஜமீந்தார்கள் பற்றியும் இப்படிப் பாலியல் சிலேடைகளுடன் காளமேகப் புலவர் கவிதைகள் வடித்திருக்கிறார்.
  தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த எவருக்காவது அவர்களது ஆண்டவர்களான மார்க்ஸ், மாவோ, லெனின் போன்றோர் பற்றி “கெட்ட வார்த்தை” பேசும் பாலியல் சுதந்திரம் இருக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறி. அல்லது, சக முற்போக்கு ஆண்-பெண் எழுத்தாளர் பற்றிக் “கெட்ட” வார்த்தைக் கதைகள் பேசுவார்களா?
  இதே தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்தான், மதுரையில் சாருநிவேதிதா நடத்திய நாடகம் ஒன்றின் சுயமைதுனக் காட்சி ஒன்றைக் கண்டு பொறுக்காமல் அவரை அடித்து உதைத்தார்கள். உதைத்து முடித்துவிட்டு, பாலியல் சுதந்திரம் பற்றிக் கதைகள் எழுதி புரட்சி செய்வார்கள்.
  காளமேகப் புலவரின் இப்பாட்டைக் குறிப்பிடும் இப்பதிவின் ஆசிரியருக்கு இந்த மைதுன உறுப்புகள் எப்படிக் கெட்ட வார்த்தை ஆயிற்று என்கிற கேள்வி எழுந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.
  எந்தவொரு வார்த்தையும் வெறுப்பின் குறியீடாக ஆகும்போது மட்டுமே கெட்ட வார்த்தையாகிறது.
  காமத்தை வெறுக்காத இந்திய, இந்து சமூகம் காமத்தை முதல் பாவமாகக் கருதியவர்களிடம் அடிமையானபோது, காமத்தைத் தீயதாக சொல்லும் கருத்துகள் திணிக்கப்பட்டன.
  இந்த உண்மையை வெளிப்படையாக இந்த எழுத்தாளர்களால் முன்வைக்க முடியாது. பிழைக்க முடியாது. இவர்களது கட்டற்ற புனைவுச் சுதந்திரம், புஸ்வாணமாகிப் போய்விடும் தந்திரம்தான் எஞ்சுகிறது.
  ஆபிரகாமிய எல்லைக் கோட்டை ஏற்கும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த பெருமாள் முருகன் உட்பட எவருக்கும் இலக்கியவாதியின் எல்லையற்ற புனைவு சுதந்திரம் எழுந்திருக்காமல் சுருங்கித் தொங்கும் நிலையில்தான் இருக்கிறது.
  அதனால்தான் பெருமாள் முருகனின் கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது: “இந்து மதம் என்ன சொல்கிறது – உடல் தூய்மையற்றது; அழியக் கூடியது என்று.”
  சிவபெருமானும் பார்வதியும் சேர்ந்து நடத்திய, காமத்தை புனிதமாக்கும் உரையாடல்தான் விஞ்ஞான பைரவ தந்திர சாத்திரமாக இருக்கிறது.
  புராணங்களும், காமசூத்திரமும் காமத்தைப் புனிதமானவையாகக் காட்டுகின்றன. உடல்சார்ந்த காமம் அன்றி வேறு இன்பங்களை அறியமுடியாதவர்களைத்தான் பட்டினத்தாரும் பழிக்கிறார்.
  எதைப் பற்றியும் துளிக்கூட புரிதல் இன்றி, வறண்ட கற்பனையில் வார்த்தைகளை அள்ளி இறைப்பவர்கள் இலக்கியவாதிகள் என்று அழைக்கப்படுவது தமிழ்நாட்டின் தலைவிதி போல.
  பெருமாள் முருகனின் இப்புத்தகம், கிராமங்களில், இந்து சமூகங்களில் இயல்பாக இருக்கும் பாலியல் சுதந்திரம் பற்றியது அல்ல என்பதை இப்பதிவின் ஆசிரியர் கவனித்திருக்க வேண்டும்.
  இந்தப் புத்தகம் மட்டுமல்ல. பெருமாள் முருகனின் எந்தப் புத்தகமும் அப்படிப்பட்டதல்ல. அவை அனைத்தும் நடைமுறையில் இல்லாத கற்பனை சார்ந்த பிறழ்காமப் பிதற்றல்கள்.
  தமிழின் முதல் லெஸ்பியன் கதை என்று இப்பதிவின் ஆசிரியர் குறிப்பிடும் கதையானது, ஒரு ஆண் மையப் பார்வையாக இருப்பது அயர்ச்சியையே உருவாக்குகிறது.
  பெருமாள் முருகனுக்கு முன்பே இதைப் போன்ற ஆண்களால் கற்பனை செய்து, ஆண்களின் பார்வையில் எழுதப்படும் பல லெஸ்பியன் கதைகள் தமிழ்நாட்டில் உலா வந்திருக்கின்றன. அவற்றில் பலவற்றிற்கு ஆசிரியரின் பெயர் ‘சரோஜா தேவி’. அந்தக் கதைகளில்கூட பல சமயங்களில் இருக்கும் இலக்கிய நயம், பெருமாள் முருகனின் கதைகளில் கிடையாது என்பது இவ்விரண்டுவகை புரட்ச்ச்ச்ச்ச்சி இலக்கியங்களையும் படித்த நண்பர் சிலரின் கருத்தாக இருக்கிறது.
  பெருமாள் முருகனின் கதைகளில் இருப்பவை கோஷம் போடுகிற வக்கிரக் கற்பனைகள். நடைமுறையில் எந்த லெஸ்பியனும் இங்கனம் காமத்தை வெறும் அரசியல் கோஷமாகச் சுருக்கிக்கொண்டு ஒருவித வன்முறையுடன் கொண்டாடுவார்களா? எனக்குத் தெரியாது. வன்முறையுடன், வெறுப்புடன் நட்த்தும் இந்தக் கோஷங்களின் தொகுப்பை கதை என்று இப்பதிவின் ஆசிரியர் நம்புவது ஆச்சரியமாக இருக்கிறது.
  மார்க்ஸியர்களால் நடத்தப்படும் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த பெருமாள் முருகனுக்கு லெனின், மாவோ, ட்ராட்ஸிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட லிபர்ட்டேரியன் மார்க்ஸியத்தின் தோல்வி தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது. அங்கே லிபர்ட்டேரியன் மார்க்ஸிஸம் ஆக்கிரமிக்கும் அரசாங்கத்தின், வலிமை மிக்க அதிகார வர்க்கமாகிப் போன கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக உருவானது.
  ஆனால், பெருமாள் முருகன் போன்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு, வலிமை மிக்க அதிகார வர்க்கத்தின் காலனியப் பார்வையின்படி, இந்து சமூகங்களை, முக்கியமாகக் கிராமத்து சமூக அமைப்புகளை வக்கிரமான அமைப்புகளாகத் திரித்துப் பொய் சொல்வதற்கு மட்டுமே எழுத்துக்கள் பயன்படுகின்றன.
  அதிகாரவர்க்கத்துக்கு ஆதரவாக, அதிகாரங்கள் இல்லாத, கையறு நிலையில் இருக்கிற, வலிமையற்ற, வெறும் ஓட்டுவங்கிகளாக மட்டுமே இருக்கிற சாதிகளை அசிங்கப்படுத்துவதுதான் இந்தப் புரட்ச்ச்சியாளர்களின் கோழைத்தன வெளிப்பாடாக இருந்து வருகிறது.
  உலகெங்கும் புரட்சியாளர்கள் வலிமையற்ற சமூக அமைப்புகளுக்கு ஆதரவாக, அதிகார வர்க்கங்களை எதிர்த்துக் குரல் எழுப்பி செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தத் திருநாட்டில்தான் அதிகாரவர்க்கங்களுக்கு ஆதரவாக, அடித்தள மக்களை அசிங்கப்படுத்தி, பரபரப்பு உருவாக்கி சொத்துபத்துக்களை வாங்கிப் போடுவதுதான் புரட்சியாகத் தெரிகிறது. பரபரப்பு உருவாக்கி விற்காத புத்தகங்கள் விற்கும் வெற்று குயுக்திதான் இங்கே புரட்சி !
  கற்பனைகளும் உண்மைகளும் வறண்டுபோன வக்கிரப் பார்வையின் பிறழ்தல் மொழிகளும் ஒருவகை இலக்கியம்தான். உளவியல் ஆய்வுக்குப் பயன்படும்.
  பாலியல் மொழிகள் கெட்ட வார்த்தைகள் இல்லை. காமத்தை குட்டையாய் தேக்கி, சாக்கடையாக்கி, அதைத் தாண்டி வெளிவர முடியாதவரின் எழுத்துக்களும் பாலியல் மொழிகள் இல்லை. வாழ்வின்மேல் வெறுப்பில்லாத இந்து சமூகங்களின் இயல்பான, வெள்ளந்தியான வெளிப்பாடுகள் அவை.
  இந்து சமூகங்களை அழித்துவிட்டு, கோஷத்தை பாலியலாகப் புரிந்துகொள்வது பரிதாபத்துக்கு உரியது.
  கெட்ட வார்த்தைகள் பேசாதீர். பாலியல் வார்த்தைகளை இயல்பாகப் பேசுங்கள்.

 3. Straight to the point, is it fair to compare someone’s request to avoid slang words in a children’s textbook and society’s contempt for bad/swear words?
  First of all, it is a textbook, so unless it is a lesson on regional dialects(வட்டார வழக்கு) or literature, slangs can be avoided in children’s textbook. IMO it should be avoided because textbooks are meant to teach the right way. Slang words are not formal speech but conventional.
  I’m all in for the use of slangs and even taboo/swear words in our serious literature if it serves the message the literature trying to convey. But it is whole different ball game isn’t it?
  You won’t be suggesting the above translation of “Hunters in the snow” in a children’s textbook, will you? It can be part of a Tamil literature course at college level but not schools.
  PS: Sorry i couldn’t type the entire thing in tamil. Cheers.

 4. எளிய மக்களின் அன்றாட பேச்சுவழக்கில் இந்த ‘கெட்ட சொற்கள்’ புழங்குவது மிகவும் தெரிந்ததே. கையறு நிலையில் ஒரு மேட்டுக்குடி ஒருவர் பேச்சிலும் இக்கெட்ட சொற்கள் அவரின் உணர்வுகளை வடிக்க உதவுகின்றன என்பதை நான் நேரே கேட்டிருக்கிறேன். பெரிய அரசு அதிகாரிகள் தன் சக அதிகாரி ஒருவரை இப்படி பிற அதிகாரி நணபர்களிடம் உரையாடும்போது இச்சொற்கள் வரும். ஆக, எல்லாருக்குமே இச்சொற்கள் உதவுகின்றன. அவர்களின் மேலதிகாரி ஒரு பெண்ணாக இருந்துவிட்டால், இந்த ஆண் அதிகாரிகள் – அமெரிக்காவில் படித்துவிட்டு வந்தவனாக இருந்தாலும் – அவரைப்பற்றித் திட்டிப்பேசுவது, கீழ்த்தட்டு மக்களையே பின்னுக்குத் தள்ளிவிடும். பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போதும், அல்லது வயதானவுடன் இப்படி பேசுவது கேட்கலாம்.
  சிறுவயதில் நான் தொழிலாளிகள் நிறைந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபின், அவர்கள் நிற்குமிடத்தில் இருந்த போது கேட்டது:
  //காலைப்புண்டையிலிருந்து, மாலைப்புண்டை வரைக்கும் வேலைப்புண்டை பாத்து கூலிப்புண்டை கேட்டா கோபப்புண்டை வருது//
  என்று சொல்லி ஒரு ஆள் அழுதார்.
  இங்கே அந்த கெட்ட சொல் முக்கியமில்லாமல் போகிறது. அவரின் வேதனைதான் பெரியதாகிப்போகிறது. ஏன் இந்த சொல் அவருக்கென்றால், அவர் வாழும் சமூகச்சூழ்நிலை இச்சொல்லை ஒரு உணர்ச்சிகரமான சொல்லாகத்தான் பார்க்கிறது. கெட்ட்ச்சொல்லாகன்று.
  ஆனால், அச்சொல்லை கெட்டச்சொல்லாகப் பார்க்கும் சமூகத்தவன், இச்சொல்லக்கேட்கும் போது அதிர்ச்சியடைவான்.
  இப்படிப்பட்ட சொற்களை ஆராய்வதும் மொழி ஆராய்ச்சியே. எனினும் கூச்சப்படுவார்கள். தவிர்ப்பார்கள். எப்படி நம் வீட்டில் கக்கூஸ் அசுத்தமாக இருக்கிறதென்றால், அதற்கு நாம் முதல் கவனம் கொள்ளாமல், we don’t even like to talk about வரவேற்பறைக்கே முதலிடம் கொடுப்பது போல. வாழ்க்கையென்றால் நடிப்புதுதான். அதில் இஃதொன்று.
  எனினும், இந்த ஆராய்ச்சி மனப்பக்குமடைந்த வயது மாணவர்களுக்கு – பலகலைக்கழகங்களில் – வைத்தால் நன்று. சிறார்களுக்கு வேண்டாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.