எம்.கோபாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்

IMG_20141213_152642தாராளமயமாக்கல் கொள்கையைத் தொடர்ந்து, ஒரு சிற்றூராய் இருந்த திருப்பூர் தொழில் நகரமாய் மாற்றம் காண்கையில் பொருளாதார, சமூக, கலாசார, தனி மனித உறவுகள் என்று மானுட அனுபவத்துக்கு உட்பட்ட அனைத்து தளங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களைப் பதிவு செய்யும் மணல் கடிகை, சென்ற நூற்றாண்டில் இந்தியாவில் எழுதப்பட்ட மிக முக்கியமான புனைவுகளில் ஒன்று. சிறுவர்கள், பெண்கள், சுற்றுச்சூழல் என்று உடைமையாய் உணரப்பட்ட அனைத்து வளங்களும் சுரண்டப்பட்ட நுகர்வு கலாசாரத்தைக் கறாராக விமரிசித்த இந்நாவலில் கட்சி அரசியல் வெளிப்படையாய் பேசப்படாத போதும், இதன் அடிநாதமாய் சாதிய ஒடுக்குமுறையின் துயரமும் இருக்கிறது; அக முரண்களை விலகி நின்றுச் சித்தரிக்கிறது எனினும், மணல் கடிகையின் கதைக்களமும் லட்சியமும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகத்தான ரஷ்ய நாவல்களுடன் ஒப்பிடத்தக்கன. இவ்வாண்டு இரண்டாம் பதிப்பு கண்டிருக்கும் இந்நாவல், எதிர்காலத்தில் இன்னும் பல பதிப்புகள் காணும்; வரும் தலைமுறைகள் எம். கோபால்கிருஷ்ணனின் எழுத்தை, நம்மைக் காட்டிலும் உயர்வாய் மதித்துப் பேசும்.
சூத்ரதாரி என்ற பெயரில் முதலில் அறியப்பட்ட எம். கோபாலகிருஷ்ணன்.நட்பார்ந்த குரலில் தன் கருத்துக்களை உறுதியாக வெளிப்படுத்துபவர். சமகால தமிழ் இலக்கியத்தின் முக்கிய இரு நாவல்களான மணல் கடிகையும், அம்மன் நெசவும் இவரது பேர் சொல்லும் படைப்புகள். தவிர இரண்டு சிறுகதைத் தொகுதிகள் மற்றும் சில முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களும் இவரது ஆக்கங்களில் உண்டு.பொதுக் காப்பீட்டுத் துறையில் அதிகாரியாக பணியாற்றும், கோபால் என்று எங்களால் அழைக்கப்படும் இவர் பொள்ளாச்சியில் அலுவலகம் கோவையில் வசிப்பு என்று இருக்கிறார்.
மணல் கடிகை வெளிவந்து ஏறக்குறைய 10 வருடங்கள் ஆகிவிட்ட சூழலில் இன்னொரு படைப்பு இவரிடமிருந்து வருமா என்று கேள்விகள் பலப்பட்ட நிலையில், இதோ வரும் ஜனவரியில் இவரது அடுத்த நாவல் வெளிவருகிறது. அது குறித்தும் பொதுவான இலக்கிய விஷயங்கள் குறித்தும் அவரிடம் நாங்கள் எப்போதும் சந்தித்து உரையாடும், கோவை தியாகு புத்தக நிலையத்தில் சென்ற சனிக்கிழமை அவருடன் நடத்திய உரையாடலிலிருந்து சில பகுதிகள்.
நண்பர்கள், அமரநாதன்,மித்திரன், டி.கோபாலகிருஷ்ணன்,அன்பழகன், சிவக்குமார்,சுப்பராமன், த. கண்ணன், சுரேஷ் மற்றும் எப்போதுமே அதிகம் பேசாமல், புன்னகை மற்றும் பார்வையின் மாற்றங்கள் மூலமுமே தன கருத்துகளை வெளியிடும் எங்கள் புரவலரான தியாகராஜன் ஆகியோர் இந்த உரையாடலில் பங்கு கொண்டவர்கள்.

கோபால், மணல் கடிகை வந்து 10 வருஷமாச்சு. அடுத்த நாவலுக்கு ஏன் இவ்வளவு காலம்?
ரொம்ப எளிமையான காரணம் என்று சொல்லப்போனால் சோம்பேறித்தனம். சற்று யோசித்துப் பார்த்தால் இந்த காலகட்டத்தில் பணிமாறுதல் காரணமாக கும்பகோணத்தில் 4 ஆண்டுகள் இருந்தேன். புதிய ஊர் புதிய மனிதர்கள். நிறைய கோயில்களை ஊர்களை சுற்றிப் பார்த்திருக்கிறேன். இன்னொரு முக்கிய காரணம் என் மகளுடன் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறேன் என்றும் தோன்றுகிறது. குழந்தைகளாக இருக்கும்போது மட்டுமே அவர்களோடு நம்மால் நேரத்தை செலவிட முடிகிறது. இப்போது அவளுக்கு வயது 8. என்னுடன் இருக்கும் நேரம் குறைந்துகொண்டே வருகிறது. ஆனால் இப்போது திரும்பிப் பார்க்கும்போது சின்னச் சின்ன வேலைகளைத்தான் செய்திருக்கிறேன் என்று தெரிகிறது. நிறைய எழுதியிருக்கலாம்.
இவ்வளவு வெளிப்படையா சொல்வீங்கன்னு நினைக்கல. சரி, இப்போது வரப்போகும் நாவலின் பெயரென்ன?
நாவலின் பெயர் மனைமாட்சி. வழக்கம் போல தமிழினி வெளியீடுதான்.
மனைமாட்சி. தலைப்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. உங்க முதல் இரண்டு நாவல்களில் தனிப்பட்ட மனிதர்களின் தனி அக வாழ்க்கையை விவரித்து இருந்தாலும், அவர்கள் மூலம் ஏற்படும் மற்றும் அவர்கள் காணும் சமூக மாற்றமுமே முக்கிய இடம் பிடித்தன என்று நினைக்கிறோம் . ஆனால் இந்தப் பெயர்… இது வேறு மாதிரி இருக்கும்னு தோணுதே ?
ஒருவகையில் உங்க ஊகம் சரிதான். இந்த நாவல் கணவன் மனைவி உறவினை, முக்கியமா இல்லறத்தின் சிக்கல்களை, வெவ்வேறு பின்னணிகளில் வைத்துப் பேசும் ஒன்றாக இருக்கும்.
மணல் கடிகையில் ஐந்து நண்பர்களின் வாழ்வின் மூலமாக ஒரு சமூகம் அடையும் மாற்றம் காண்பிக்கப்பட்டதே அது மாதிரியா?
இந்த நாவலில் ஐந்து கணவன் மனைவிகள் ஐந்து வெவ்வேறு ஊர்களின் பின்னணிகளில் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் இதில் அவர்களின் தனிப்பட்ட வாழ்வின் மீதான அழுத்தமே அதிகம் விழுந்திருக்கும். குறிப்பாக நாம் இந்த நாட்களில் அதிகம் பார்க்கும் மண முறிவு குறித்து இந்த நாவல் விவாதிக்கிறது.
IMG_20141213_124800_1
 
மணமுறிவு என்றாலே உடனே ஐ.டி செக்டார்தான் நினைவுக்கு வருகிறது.
(புன்னகையுடன் ) நல்ல வேளையாக இதில் வரும் தம்பதிகள் யாரும் அந்தப் பிரிவினர் இல்லை.
சரி. இந்த மணவுறவுகளின் பிணக்குகள் அப்படின்னு சொல்லும்போது ரொம்ப டாபிகலா இருக்குமோ. இப்போ இந்த காலகட்டத்துல அதிகம் நடைபெறும் மணமுறிவுகள் பத்தியா? இதப் பத்தி நிறைய விவாதங்கள் நாளிதழ்கள் தொலைக்காட்சிகள்ல எல்லாம் நடந்துட்டிருக்கு இல்லையா? நீங்கள் இதில புதிதாக கண்டடைவது என்ன?
மணமுறிவை சாதாரண ஒன்றாக பார்க்கும் மனநிலைக்கு நாம் வந்திருக்கிறோம். ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பு அப்படியில்லை. அப்படியில்லை என்பதால் அது இருக்கவேயில்லை என்று பொருள் இல்லை. திருமணம் இரண்டு தனிநபர்களை இணைப்பது. இரண்டு ஈகோ ஸ்டேட்ஸ், முழுமுற்றாக ஒத்துப்போவது என்பது சாத்தியமில்லை. கூடியவரையில் அனுசரித்துப்போவது என்பதுதான் உள்ளது. நம் இந்தியக் குடும்ப அமைப்பின் சாதனை அதுவே. அனுசரித்துப் போக முடியாதபோதுதான் மணமுறிவு. அதற்கான காரணங்களை மற்றவர்கள் எடைபோடவே முடியாது என்பதுதான் முக்கியமானது. நமக்கு சின்னவிஷயங்களாகத் தெரிவது சம்பந்தப்பட்டவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது என்பதால்தான் பிரச்சினை. இதை வெவ்வேறு கோணங்களில் சித்தரிக்க முயன்றிருக்கிறேன்.
ஆனால் இந்த மண முறிவுகள் என்பவை இப்போதுதானே மிக அதிகமாகக் காணப்படுகின்றன?
சட்ட ரீதியான பிரிவினைகள் அதிகம் என்று சொல்லலாம். ஆனால் மணங்களுக்குள் மன முறிவுகள் என்பவை எப்போதுமே உள்ளதுதான். அவை வெளிப்படையாக சட்ட ரீதியான பிரிவுகளாக ஆகாமல் தடுத்து வைப்பது குடும்பமும் குழந்தைகளும்தான். சமூக அந்தஸ்து உறவுகள் என்று இன்னும் சில காரணங்களைச் சொல்லலாம்.
மணமுறிவுகளுக்கு இன்றைய பெண்களின் பொருளாதார சுதந்திரமும் ஒரு முக்கிய காரணம் இல்லையா?
வெகு நிச்சயமாக. கடந்த இருபது ஆண்டுகளாக சமூகத்தில் பெண்கள் அடைந்து வரும் பொருளாதார சுதந்திரம் அவர்களுக்கு பிடிக்காத மண உறவுகளிலிருந்து வெளியேறும் துணிச்சலை தன்னம்பிக்கையைத் தந்து உதவுகிறது. ஆணைச் சார்ந்திருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. எதையும் சமாளிக்கும் துணிச்சலான மனநிலைக்கு பொருளாதார சுதந்திரமும் முக்கியக் காரணம்.
ஆனால் சட்ட ரீதியான விலக்கு பெறாமலேயே ஒருவொருக்கொருவர் பேசாமலேயே முழு வாழ்வையும் வாழ்ந்து முடித்த நிறைய சம்பவங்களும் உள்ளன.இல்லையா?
எனக்குத் தெரிந்து பல தம்பதிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலே குடும்பம் நடத்தி வருகிறார்கள். குழந்தைகள் பெற்று வளர்த்து ஆளாக்கிய பின்னும் என்றோ ஒரு நாள் எதனாலோ ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக கடைசிவரை பேசாமல் இருந்திருக்கிறார்கள். நான் அறிந்த பல குடும்பங்களில் கணவர்களின் தவறுகளை கடைசிவரை மன்னிக்காத மனைவிகளை நான் கண்டிருக்கிறேன். அத்தகைய ஆண்களின் மரணம் கூட அவர்களை அசைத்ததில்லை என்பதையும் பார்த்ததுண்டு.
கோபால், இப்போ வேறு ஒரு விஷயத்துக்குப் போவோம். நிச்சயமாக இந்த நாவல் நீங்கள் கூர்ந்து கவனித்து வந்த சிலரது வாழ்க்கையிலிருந்து எடுக்கப் பட்டதாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். இல்லையா?
எழுத்தும் இலக்கியமும் வாழ்க்கையிலிருந்துதான் உருவாக முடியும். இதிலும் அப்படித்தான்.
அப்படியிருக்கும்போது அவர்களின் வாழ்வின் இறுதி முடிவு உங்களுக்குத் தெரியும் இல்லையா. அப்ப நாவல் எழுதும்போது முன்கூட்டியே அனுமானிக்கத்தக்க முடிவை நோக்கி போவதாத்தானே இருக்கும். அப்படியில்லாமல் படைப்பு உங்களையும் மீறி தன் வழியில் சென்றிருக்கிறதா?
எழுத்துத் தன்னைத்தானே எழுதிக்கொள்வது என்பது படைப்பில் நிகழும் படைப்பாளிக்கே தெரியாத ஒரு அதிசய நிகழ்வு நான் எழுதப் போகும் கதை எனக்குத் தெரியும் என்று நான் சர்வ நிச்சயமாக நினைக்கும் போதே அந்தக் கதை தன்னாலேயே வேறு ஒரு உருக்கொள்வதும் பாத்திரங்கள் தம் போக்கில் வளர்ச்சி கொண்டு படைப்பாளி முன் எப்போதும் சிந்தித்திராத இடத்தை, பரிமாணத்தை அடைவதும், படைப்பின் சிருஷ்டி விசித்திரங்களில் ஒன்று என்றே சொல்ல வேண்டும்.
ஒருவகையில் கதை தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது?
ஆமாம். இது எப்போதும் வியப்பூட்டுவது.. சலிக்காதது. நம் சூழலில் எழுத்து எழுதுவது என்பது சோர்வளிக்கக்கூடிய ஒன்று. யாரும் படிக்கமாட்டார்கள். கண்டுகொள்ளமாட்டார்கள். ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் கிடையாது. ஆனால் அத்தனை எதிர்மறையான அம்சங்களையும் தாண்டி ஒரு எழுத்தாளன் மீண்டும் மீண்டும் எழுதுவது எழுத்தில் இருக்கும் இந்த விசித்திரத்திற்காகத்தான். எழுத்தின் வழியாகக் கண்டடையும் அற்புதமான அனுபவம் அது. ஒருவித பித்துநிலை. அதை விவரிக்க முடியாது. ஆனால் எழுதி முடித்த பின் வாசிக்கும்போது அப்படியொரு பித்துநிலையில் எழுதியப் பகுதியே சிறப்பாக வெளிப்பட்டிருப்பதை உணரமுடியும். தேர்ந்த வாசகனும் அதை நிச்சயம் அடையாளம் கண்டுகொள்வான்.
இது தீவிர இலக்கியத்தில்தான் சாத்தியமா?
ஆமாம். ஏனென்றால், பொழுதுபோக்கு இலக்கிய வகையில் ஒரு புனைவின் முடிவு நிச்சயமாக முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. அப்படியே எழுதவும் படுகிறது. துப்பறியும் நாவல்களுக்கு இது மிகவும் பொருந்தும். மற்ற ஜனரஞ்சகமான நாவல்களும் ஒரு குறிப்பிட்ட கருத்தை ஏதாவது ஒரு வகையில் வலியுறுத்துவதாகவே இருப்பதால். முடிவைத் தேடிக் கண்டடைய வேண்டியதில்லை.
சொல்லப்போனா பொழுதுபோக்கு இலக்கியத்துக்கும் தீவிர இலக்கியத்துக்கும் இது ஒரு முக்கியமான வேறுபாடுன்னு சொல்லலாமா? உங்க பார்வையில் இது ரெண்டுக்குமான முக்கிய வேறுபாடு என்ன?
எளிமையான கேள்வி. எப்போதும் கேட்கப்படுகிற கேள்வி. ஆனால் பதில் சிக்கலானது. பொழுதுபோக்கு இலக்கியம் பொதுவாக மனிதர்களின் எல்லா பக்கங்களையும் தன்மைகளையும் அலசுவதில்லை. பெரும்பாலும் தட்டையாகவே காண்பிக்கும். ஒரு படைப்பு வாழ்வின் ஏதேனும் ஒரு தருணத்தின் வழியாக ஒட்டுமொத்த வாழ்வைக் குறித்த உங்கள் பார்வைக்கு கூடுதலான ஒரு பரிமாணத்தைத் தரவல்லதாக இருக்கவேண்டும். இதுவரைக்குமான உங்கள் பார்வையில் புதிய ஒரு கோணத்தை சாத்தியப்படுத்தவேண்டும். பாத்திரங்களின் உள் மனவோட்டங்களையும் ஆழமாக முன் வைக்கவேண்டும். அப்படியொரு படைப்பே தீவிர இலக்கியம் சார்ந்ததாக இருக்கமுடியும்.
தீவிர இலக்கியம்னு ஒரு வகையைப் பத்திப் பேசும்போது உங்களுக்கு அதன் அறிமுகம் எப்படிக் கிடைச்சுதுன்னு சொல்ல முடியுமா? உங்க வாசிப்பு எப்படி துவங்கிச்சு?
எல்லாரையும் போலவே நானும் பொழுதுபோக்குப் பத்திரிக்கைகள் வழியாகவே வாசிக்கத் தொடங்கினேன். அப்பா குமுதம் வாசகர். என் வாசிப்பு குமுதத்திலிருந்துதான் தொடங்கியது. பத்தாம் வகுப்பு விடுமுறையில் அத்தனை சாண்டில்யன் நாவல்களையும் படித்தேன். பிறகு கண்ணதாசனின் எழுத்துக்கள். அதே சமயத்தில் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், இர்விங் வாலஸ், ஜெப்ரி ஆர்சர் என்று ஆங்கில நாவல்களையும் தொடர்ந்து படித்தேன். கவிதைகள் எழுதினேன். கல்லூரி நண்பர்களுடன் ‘எண்ணங்கள்‘ என்ற பெயரில் கையெழுத்துப் பிரதி நடத்தினேன். அப்பொழுதுதான் நண்பரின் மாமா பக்தவத்சலத்தைச் சந்தித்தேன். பக்தவத்சலம் கவிஞர். சூத்ரதாரி என்ற பத்திரிக்கை நடத்தியவர். அவர்தான் முதன்முதலாக என்னிடம் கவிஞர் .விக்கிரமாதித்யனோட ஆகாசம் நீல நிறம் ங்கற கவிதைத் தொகுப்பைத் தந்து வாசிக்கச் சொன்னார். அதுதான் தீவிர இலக்கியத்தின் பக்கமாக என்னைத் திருப்பியது.
 நீங்க முதல்ல எழுதனது கதையா கவிதையா?
கவிதைகள்தான்.
ஆனா உங்க கவிதைகள் அதிகமா வெளிவந்ததா தெரியலையே? தனித் தொகுப்பு ஏதும் உண்டா?
1999ல் “குரல்களின் வேட்டை“ என்ற பெயரில் தொகுப்பு வெளியானது. அதன் பிறகு நான் கவிதைத் தொகுப்பு வெளியிடவில்லை. வெளியிடும் எண்ணமும் இல்லை.
அப்ப இப்பவும் தொடர்ந்து கவிதை எழுதறீங்களா?
கோ: எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். அதை விட முடியாது. கவிதை எழுதுவதுதான் சவாலான காரியம்.
ஏன்?
கவிதை, சிறுகதை, நாவல் இலக்கியத்தோட இந்த மூன்று வடிவங்களுமே நாம் நினைப்பதை வெளிப்படுத்தும் கருவிகள்தான். வடிவங்கள்தான். ஆனால் கவிதையே மொழியின் உச்சபட்ச சவால். சொல்நேர்த்தியும் கச்சிதமும் அதைவிட கவித்துவமும் அமைந்து வரவேண்டும். ஒப்புநோக்கும்போது நல்ல ஒரு கவிதை எழுதுவதைவிட ஒரு நாவல் எழுதறது சுலபம்னு தோணுது.
IMG_20141213_125752
நாவலுக்கான உழைப்பு அதிகம் இல்லையா?
ஒரு நாவலை எழுதுவது என்பது கடுமையான உழைப்பைக் கோருவது. ஆனா அதே சமயத்துல சுதந்திரமானது. நாவலின் வடிவம் அப்படிப்பட்டது. அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கட்டமைத்துக் கொள்ளலாம். ஆனால் மண்ணில் பானை வனைவது மாதிரிதான் கவிதை எழுதுவது. ஒரே வாய்ப்புதான். எல்லாமே கூடிவரவேண்டும்.
நாவலுக்கான உழைப்புன்னு சொல்லும்போது, இப்ப உங்களோட அலுவலக பொறுப்பு பதவி போன்றவை எழுத்தாளனாக இருக்கிறதுக்கு தடைதான் இல்லையா? முக்கியமா நெறைய நேரத்தை எடுத்துக்குமில்லையா?
நேரத்தையும் எனர்ஜியையும் சுத்தமா உறிஞ்சிடும்ங்கறது உண்மைதான். ஆனால் அதையும் தாண்டி எழுதமுடியும்னுதான் தோணுது. எழுதறதுக்கு உக்கார்றதுதான் சிரமமான காரியம். நம்ம சோம்பலையும் இல்லாத காரணங்களையும் தூக்கிப் போட்டுட்டு உக்காரணும். எழுத ஆரம்பிக்கணும். அதுக்குள்ள நெறைய தடைகள் வரும். பேஸ்புக், மெயில்னு நிறைய இடையூறுகள். அத்தனையும் தாண்டி எழுதியாகணும்ங்கற எண்ணத்தோட இருந்தா மட்டும்தான் நாவல் சாத்தியம். கடுமையான வேலையை முடிச்சுட்டு ஓஞ்சுபோய் வந்தாக்கூட எழுத முடியாம போனதில்லை. எழுத நெனச்சதே அப்பிடியே விட்டுட்டு படுத்தா தூக்கம் வராது.
இப்ப ஒரு விஷயம் நினைவுக்கு வருது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நீங்க கும்பகோணத்தை மையமா வெச்சு ஒரு தற்கால வரலாற்று நாவல் ஒன்னு எழுதறதா சொன்னீங்க. இப்ப இது வேறையா இருக்கே? அது என்ன ஆச்சு?
சரிதான். இந்த நாவல் வேறொண்ணு. அந்த நாவலை இன்னும் எழுதி முடிக்கலை. அதுல இன்னும் வேலையிருக்கு.
IMG_20141213_124857
கோபால், இப்ப இன்னொரு விஷயம். பொதுவா எழுத்தாளர்களுக்கு குடும்பத்தில அவ்வளவு மரியாதை இல்ல அப்படிங்கிற மாதிரி ஒரு தோற்றம் இருக்கு. உங்க விஷயத்துல எப்படி? உங்க மனைவி குழந்தைகள் எப்படி பாக்கறாங்க? கல்யாணத்துக்கு முன்னால பெற்றோர்கள், சகோதரர்கள்? அப்புறம் அலுவலக வட்டாரம்?
நீங்க சொல்றது ஒரு பொதுவான போக்காக இருக்கலாம். ஆனா அந்த விஷயத்தில எனக்கு குறையில்ல. என் பெற்றோர், சகோதரர்கள், அப்புறம் என் மனைவி எல்லோருக்குமே நான் எழுத்தாளன் அப்படிங்கிறதுல சந்தோஷந்தான். உண்மையிலே வீட்டிலே ஏன் இப்பல்லாம் முந்தி மாதிரி எழுதலைன்னுதான் கேட்டுட்டே இருப்பாங்க. அலுவலகத்தைப் பொருத்தவரை, மிக நெருக்கமான நண்பர்கள் தவிர வேறு யாருக்கும் நான் எழுதறதே தெரியாது.
பரவால்ல, கொடுத்துவச்சவர்தான். உங்க குடும்பத்துல வேற யாரும் உங்களுக்கு முன்னோடி உண்டா?
இல்ல நான்தான் முதல் எழுத்தாளன். மேலும் நான்தான் முதல் பட்டதாரி.
இப்ப இந்த நீண்ட இடைவெளி பற்றி பேசினாலும், நடுவுல நீங்க மொழிபெயர்ப்புகளைச் செஞ்சுருக்கீங்களே? சிவப்புத் தகரக் கூரை மற்றும் ரேமண்ட் கார்வர் கதைகள்னு. அத பத்தி?
ஆமாம். ஹிந்தி நாவலாசிரியர நிர்மல் வர்மாவோட சிவப்புத் தகரக் கூரையும் ரேமண்ட் கார்வேரோட தேர்ந்தெடுத்த சிறுகதைகளும் போன வருடம் வெளிவந்தது.
இதுல சிவப்புத் தகரக் கூரை நேரடியாக ஹிந்தியிலிருந்து பண்ணினது இல்லையா? நீங்க ஹிந்தி படிச்சிருக்கீங்களா?
ஆமாம். ஹிந்தில M .A முடிச்சிருக்கேன்.
இந்த இரண்டு நூல்களுக்கும் வரவேற்பு எப்படி இருந்தது?
ரேமன்ட் கார்வரின் “வீட்டின் மிக அருகில் மிகப் பெரும் நீர்ப்பரப்பு“ சிறுகதைத் தொகுப்பு நண்பர் செங்கதிரின் தொடர்ந்த முயற்சியால் உருவானது. நண்பர்கள் செங்கதிர், மோகனரங்கன், விஜயராகவன் ஆகியோருடன் நானும் சேர்ந்து மொழிபெயர்த்தது. நல்ல கவனிப்பு இருக்குன்னுதான் தோணுது. விற்பனையும் பரவாயில்லைன்னு கேள்விப்பட்டோம். இதெல்லாம் எங்களுக்கு இரண்டாம்பட்சம்தான். முன்னுரையில சொல்லிருக்கற மாதிரி இந்த மொழிபெயர்ப்பு மூலமா நாங்க கத்துக்கிட்டது நெறைய. தமிழ் சிறுகதைச் சூழல்ல ஒரு முக்கியமான தொகுப்புன்னுதான் நாங்க நம்பறோம். நிர்மல் வர்மாவோட நாவல் பத்தி ஒண்ணும் தெரியலை.
ரேமன்ட் கார்வர் நூலில் இருக்கும் சரளமான வாசிப்புத்தன்மை இதில இல்லயோன்னு நெனெச்சோம் உள்ள நுழையறது கொஞ்சம் கடினமாவே இருக்கும் நூல் அது.
இரண்டையும் ஒப்பிட முடியாது. ஒரே ஒற்றுமை மொழிபெயர்ப்புங்கறது மட்டுந்தான். கார்வரோடது நேரடியான யதார்த்தமான சித்தரிப்பு. அதுக்குள்ள இருக்கிற சூட்சுமம். ஆனா நிர்மல் வர்மாவோட நாவலோட வடிவமே சிக்கலானது. பதின்பருவத்தில் இருக்கும் சிறுமியின் அலைகழிப்புகள், பயங்கள், ஆச்சரியங்கள், ரகசியங்கள், ஆர்வங்கள்னு நாவல் முழுக்க தாவித் தாவிப் போகும். நாவல் சொல்லப்பட்டிருக்கிற மொழி கனவும் கவிதையும் கலந்தமாதிரி இருக்கும். இது சொல்லிருக்கற விஷயம் தமிழுக்குப் புதுசுங்கறதுனாலதான் மொழிபெயர்த்தேன். படிக்க ஆரம்பிச்சு ஓரிரண்டு அத்தியாயங்கள் தாண்டிட்டா சுலபமாயிடும்னு நெனெக்கிறேன்.
மறந்தே போச்சு. நீங்க ஒரு இதழும் நடத்தியிருக்கீங்க இல்லையா? சொல்புதிது. அது முதல் இதழ்லேரிந்து நிற்கும் வரை தொடர்ந்து படிச்சிருக்கேன். கணையாழி மற்றும் சுபமங்களா நேர்காணல்களுக்கு ஈடான நேர்காணல்கள் அமைந்த பத்திரிகை அது. அதைப் பற்றி சொல்லுங்க.
1998ம் ஆண்டு. அப்போது நான் ஈரோட்டில் இருந்தேன். திருமணமான புதிது. உதகை நாராயண குருகுலத்தில் குரு நித்யாவுடனான சந்திப்புகள் அடிக்கடி நடந்திருந்த காலகட்டம். இரண்டு அல்லது மூன்று நாட்கள் குருகுலத்தில் இருப்போம். தொடர்ந்த உரையாடல்கள், விவாதங்கள். ஜெயமோகன், சேலம் ஆர்.குப்புசாமி, மோகன், செங்கதிர், கோவிந்தராஜ் என்று நண்பர்கள் பலரும் பங்கேற்பார்கள்.

குரு நித்யா உதகையில் வசித்தபோதும் தமிழகத்தில் அவ்வளவாக தெரியாத ஒரு பெயர். அவரைப் பற்றியும் அவரது கலை, இலக்கிய, தத்துவ விசாரங்கள் பற்றியும் வெளிப்படுத்துவதற்கென்று ஒரு இதழை நடத்தவேண்டும் என்று உணர்ந்து அதைப் பற்றி குரு நித்யாவிடம் ஜெயமோகன் பேசினார். ஆனால் அவர் அந்தத் திட்டத்தை கறாராக மறுத்துவிட்டார். ஒரு படைப்பாளி பத்திரிக்கை நடத்துவதென்பது அவனது படைப்பாற்றலையும் உழைப்பையும் பெருமளவு உறிஞ்சிவிடும் என்று எச்சரித்து எந்தக் காலத்திலும் அப்படியொரு வேலையில் இறங்கிவிடக்கூடாது என்று அறிவுறுத்தினார். அப்போதைக்கு அத்திட்டம் கைவிடப்பட்டது.
ஆனாலும் ஒரு பத்திரிக்கை நடத்தவேண்டும் என்ற கனவு நண்பர்களிடையே இருந்தது. அதுவே சொல்புதிது இதழாக உருவெடுத்தது. அப்போது தமிழில் வெளிவந்து கொண்டிருந்த இலக்கிய இதழ்களைப் போலவே சொல் புதிதும் இருக்கலாகாது என்பதை கவனத்தில் கொண்டு தமிழ்ச் சூழலில் ஒரு மாற்று இதழாகவே அதை வடிவமைத்தோம். இந்திய கலை இலக்கிய தத்துவ மரபும் மேற்கத்திய கோட்பாடுகளும் உரையாடும் விவாதிக்கும் களமாக அமைந்தது சொல் புதிது. தனி நபர் வம்புகளுக்கும் சச்சரவுகளுக்கும் இடம் தரலாகாது என்பதை கவனத்தில் கொண்டோம். கவிதைகளுக்கும் புனைகதைகளுக்கும் இணையாக கட்டுரைகளும் புத்தக விமர்சனங்கள், மதிப்புரைகள் இடம் பெற்றன. இதழின் முகப்பில் தத்துவ அறிஞர்களின் இலக்கிய ஆளுமைகளின் முகங்களை இடம் பெறச் செய்தோம். எழுத்தாளர்களின் முகங்களை அட்டையில் போட்ட முதல் இதழ் சொல் புதிதே. ஒவ்வொரு இதழிலும் ஏதேனுமொரு தலைப்பை மையமாகக் கொண்ட புத்தகப் பகுதியும் இடம்பெற்றது. மொழி, விஞ்ஞான புனைக்கதைகள், படிமங்கள் என்று பல்வேறு தலைப்பிலான புத்தகப் பகுதிகள் வெளியாயின.
இப்போது திரும்பிப் பார்க்கும்போது சொல்புதிது இதழும் அதன் பணிகளும் தந்த அனுபவங்கள் சந்தோஷமானவையாகத்தான் உள்ளன.
கோபால், இப்ப உங்க புனைவுலகத்தை பாக்கும்போது அனேகமா சமகாலத்தின் புனைவுகளாகவே இருக்கு. கஜுராஹோ சிறுகதைகயைத் தவிர. மரபான படைப்புகளை மீள் உருவாக்கம், அல்லது வரலாற்றுகாலத்தில் அமைந்த படைப்புகள்னு எதும் எழுதுற எண்ணம் உண்டா? இன்னொரு வகையில கேட்டா உங்க எதிர்கால படைப்புகள் குறித்த திட்டங்கள் என்ன?
இன்னும் சில கதைகள்கூட எனக்கு ஞாபகம் வருது. மண்வீணை, கோட்டை, பிறிதொரு நதிக்கரைன்னு சொல்லலாம். வரலாற்றுப் புனைவு எழுத நிச்சயமா விருப்பம் உண்டு. குறிப்பா ஹம்பியை மையமா வெச்சு நாவல் எழுதத் திட்டம் இருக்கு.
ஏன் ஹம்பியைப் பத்தின்னு சொல்லமுடியுமா?
நண்பர்களோட நெறைய தரம் ஹம்பிக்குப் போயிருக்கேன். அதுவொரு மாயாலோகம். அந்த எடத்துக்கு போயிட்டாவே வேற ஒரு உலகத்துக்குள்ள போயிர்வோம். மறக்கவே முடியாது. நான் பார்த்த எடங்கள்ளயே என்ன ரொம்ப பாதிச்ச எடம் அது. அதை மையமா வெச்சு கிருஷ்ண தேவராயர் காலத்தில் நடக்கற மாதிரி ஒரு வரலாற்று நாவல் எழுதனும்ங்கறது என்னோட பெரும் கனவு. அதுக்கான தரவுகளையும் சேகரிச்சுட்டு இருக்கேன். நெறைய தடவை அங்க போகணும். நெறைய படிக்கவேண்டி இருக்கு. அதே போல கோயம்புத்தூர் பின்னணிலயும் ஒரு நாவல் எழுதணும்னு நினைக்கிறேன்.
நிச்சயமா நீங்க இத ரெண்டையும் கூடிய விரைவில் எழுதணும், தவிர அந்த கும்பகோணம் நாவல் அதையும் விட்ராதீங்க. இன்னும் நிறைய படைப்புகள எதிர்பார்க்கிறோம். All The Best.
 

*

மின் அஞ்சல் வழி கேட்கப்பட்ட துணைக் கேள்விகள்
இன்றைக்கு கம்யூனிஸம் எப்படி இருக்கு? உங்களோட ஊர் திருப்பூர் அல்லவா… கட்சியும் கொள்கையும் அடித்தள மக்களின் வாழ்வை எப்படி மாற்றியது? இன்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய அத்தகையவர்களுக்கு உதவுமாறு பொருத்தமாக தொழிற்சங்க இயக்கம் நடக்கிறதா? இது குறித்து தங்கள் பார்வை என்ன?
என்னைப் பொறுத்தவரையில் எல்லா மட்டங்களிலுமே தொழிற்சங்கங்கள் வலுவிழந்துவிட்டன என்றுதான் தோன்றுகிறது. திருப்பூரும் அதில் விதிவிலக்கல்ல. ஆனால் திருப்பூரில் பனியன் தொழிலாளிகளுக்கான அடிப்படை உரிமைகளை அமைத்துக் கொடுத்ததில் தொழிற்சங்கங்களுக்கு பெரும் பங்கு உண்டு. தொழிலாளர்களுக்கு இன்று சாத்தியமாகும் ஒவ்வொரு விஷயத்திலும் சங்கங்களின் பங்களிப்பு என்பது முக்கியமான ஒன்று. இன்றும் பின்தங்கியவர்களுக்கு உதவும் வகையில் நடக்கிறதா என்ற கேள்விக்கு அவசியமே இல்லை. மணல்கடிகை நாவலில் இதைப் பற்றிய எனது பார்வை தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.
பொருளாதாரம் குறித்து… இன்றைய இந்தியாவின் வர்த்தக் கொள்கை குறித்தும் தமிழ் நாட்டின் நிதிவளம் குறித்தும் தனியார் மயமான வேலைவாய்ப்பு குறித்தும் என்ன நினைக்கிறீர்கள்?
பொருளாதாரம் சுபிட்சமாக இருக்கிறது. வல்லவன் மட்டுமே வாழ்வான் என்பதை வலியுறுத்துகிறது. ஏறக்குறைய எல்லோரையும் கடனாளியாக்கியுள்ளது. வர்த்தகக் கொள்கை என்பது உள்ளவை எல்லாவற்றையும் விற்றுவிடுவதும் அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுப்பதும்தான். வேலைவாய்ப்பு தனியார்மயமாகியிருப்பதைப் பற்றி பொதுவாக எல்லோரும் கொண்டாடுகிறார்கள். அது அத்தனை சந்தோஷமான விஷயமல்ல என்றுதான் நினைக்கிறேன்.
உங்கள் முதல் நாவல் வெளி வந்த சமயத்தில் எழுதிக் கொண்டிருந்த க.வை. பழனிச்சாமி, சி.எம். முத்து போன்றவர்களின் படைப்புகளை வாசித்திருக்கிறாரா? அப்பொழுதைய தமிழ் படைப்புலகத்தையும் இன்றைய காலகட்டத்தையும் ஒப்பிட இயலுமா? வாசக உலகம், பதிப்பாளர்களின் மனநிலை, புத்தக விற்பனை, ஃபேஸ்புக் விமர்சனக் கலாச்சாரம் என இப்பொழுது வாசிப்பு மாறிவிட்டதா?
வாசித்திருக்கிறேன். படைப்புலகம் அப்போதும் இப்போதும் எப்போதும் ஒன்றுதான். அன்று எழுதியதை வெளியிடுவது பெரும் சிரமம். இன்று அப்படியில்லை. மற்றபடி எழுத்துக்கான மரியாதை என்பது அன்றுபோலவேதான் இன்றும் உள்ளது. வாசிப்பு மாறிவிட்டதா என்றால் மாறித்தான்விட்டது. இளைய தலைமுறைக்கு வேறு விஷயங்கள், கவனங்கள், ஊடகங்கள் உள்ளன. அவர்களை வாசிக்கத் தூண்டும் விஷயங்களை தமிழில் நாம் தருவதில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்களை குறைசொல்ல முடியாது.
தஞ்சாவூர் பற்றி எழுதிக் கொண்டிருந்த நாவல் பற்றி குறிப்பிடுகிறீர்கள். , அதை நிறுத்தி விட்டு மனைமாட்சி எழுத உந்துதல் என்ன? இப்படி ஒரே நேரத்தில் இரு (அல்லது அதற்கு மேலும்) கருப்பொருள்கள் உங்கள் நேரத்தை/கவனத்தை கோருவது அடிக்கடி நடப்பதா?
எழுதும்போது சாதாரணமாக நடக்கக்கூடியதுதான். ஒரு சில மன நிலைகளில் எழுதிக் கொண்டிருப்பதை தொடர முடியாது. வேறு விஷயங்களை எழுதத் தோன்றும். அப்படி நடந்ததுதான் இதுவும். ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதவும் முடியும். எழுதும்போது எல்லாமே ஒரே கதைதான். ஒரே நாவல்தான்.
மணல்கடிகை திருப்பூர் வளர்ச்சி பெற்ற/இன்னும் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை விவரிக்கிறது. இந்த 10 ஆண்டுகளில் பனியன் தொழில் நசிவு அடைய ஆரம்பித்திருக்கும் நிலையில், அதன் தொடர்ச்சியைஅதே பாத்திரங்களை வைத்து எழுதும் எண்ணமுள்ளதா?
மணல்கடிகை எழுதி முடித்தபோதே இக்கேள்வி எழுந்தது. அந்த நாவல் வெளியானபோது திருப்பூர் உச்சத்தில் இருந்தது. அடுத்த சில ஆண்டுகளில் வியாபாரம் சரியத் தொடங்கியபோது எனக்குள் வருத்தமாக இருந்தது. ஒருவித குற்றவுணர்ச்சியும்கூட. அதன் வீழ்ச்சியை இப்போதுள்ள நிலையை எழுதலாம். எழுத முடியாமலும் போகலாம்.
சொல்புதிது இதழை நடத்தியதைப் பற்றிச் சொல்லி உள்ளீர்கள். இன்று தமிழ் இணைய இதழ்கள் வர ஆரம்பித்துள்ளன, அவற்றை/அவற்றின் உள்ளடக்கத்தை எப்படி பார்க்கறீர்கள்?
உள்ளடக்கம் அச்சு இதழ்களைப் போலவேதான் உள்ளன. அனுபவம் இல்லாதவர்களால் உருவாகும்போது அதில் ஒருவித புதுமை சாத்தியம். எழுத்தில் புதியவர்கள், அனுபவசாலிகள் என்றெல்லாம் சலுகைகள் தேவையில்லை. படைப்பு மட்டுமே தீர்மானிக்கும். இணைய இதழ்கள் வழியாக நல்ல படைப்புகள் நிறைய வெளியாகின்றன. விரிவான அளவில் வாசகர்களை சென்றுசேர்வதும், சுலபமாக வாசிக்கக் கிடைப்பதும் இதன் முக்கிய அம்சங்கள். எதிர்காலத்தில் இணைய இதழ்கள் மட்டுமே வாசிக்கக் கிடைக்கும். அதன்வழியாக மட்டுமே இலக்கியப் பங்களிப்புகளும் வாசிப்பும் தொடரும். தமிழில் வெளியாகும் இதழ்கள் பலவும் குழு மனப்பான்மை, இலக்கிய அரசியல், தனிநபர் வம்புகள் போன்ற அன்றைய சிறு பத்திரிக்கைகளின் தவிர்க்க முடியாத அடையாளங்களைத் துறந்து ஆரோக்கியமான போக்குடன் வெளியாகின்றன. இது இணையத்தின் மூலம் முகமறியாமல் நடத்துவதின் அனுகூலம் என்றே தோன்றுகிறது.
 

***

‘மனைமாட்சி’ நாவலிலிருந்து ரு பகுதியை இங்கே வாசிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.