மேரி கோச்ரன் அறைகளை விட்டு வெளியேறி வந்தாள். அப்பாவுடன் அவள் ஜாகை அது. ஞாயிறு மாலைவேளை ஏழு மணி. ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எட்டு ஜுன். மேரியின் பதினெட்டாவது வயது. தன் டிரமாண்ட் தெருவில் இருந்து பிரதான சாலை நோக்கி அவள் நடந்தாள். ரயில் தண்டவாளங்களைக் கடந்தால் மேடேறும் ரஸ்தா. அந்தப் பகுதியில் அடையடையாய் பெட்டிக்கடைகள், வரிசையாய் பங்கரைகளின் குடிசைகள். ஞாயிறு ஆனால் ஜிலோன்னு ஒரு மாதிரி உம்மென்று கிடக்கும் அந்தப் பகுதி. வீடுகளில் யாரேனும் இருக்கிறார்களா என்றே தெரியாது.
அப்பாவிடம் சர்ச்சுக்குப் போய்விட்டு வருவதாகத்தான் சொல்லிவிட்டு வந்தாள். என்றாலும் அந்த மாதிரி யோசனை அவளிடம் இல்லை. நிஜத்தில் அடுத்து அவள் செய்ய என்கிறதாய் எதுவும் யோசனையே அவளிடம் இல்லை. இப்படியே காலாறப் போய்க் கொண்டேஅடுத்த சோலியை யோசிக்கலாம்… என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொபண்டபடி நடந்து கொண்டிருந்தாள். ஆ… இந்த இரவு… எப்படியானாலும் ஒரு மாதிரி மௌன இறுக்கமான சர்ச்சில் இந்த ராத்திரிப் போதில் முடங்குவது அபத்தம். யாராவது உபதேசமாய், உத்தேசமாய், அவளது பிரச்னைக்கு சம்மந்தமே யில்லாமல் என்னமாவது பேசிக் கொண்டிருப்பான். ஒரு நெருக்கடி அவளுக்கு வந்து கொண்டிருக்கிறது. தன் வருங்காலம் பற்றி அவள் தீவிரமாக யோசிக்க ஆரம்பிக்க வேண்டிய வேளை இது.
அன்றைக்கு சாயந்தரம் அப்பாவுடன் அவள் பேசியது அவளை ரொம்ப யோசிக்க வைத்திருந்தது. திடுதிப்பென்று அப்பா, தனக்கு இதய நோய், என்று சொன்னார். எப்ப வேண்டுமென்றாலும் எனக்கு சாவு வரலாம் இவளே, என்றார். தனது நோயாளிகளை கவனிக்கிற அறையில் வைத்து அந்த குண்டைத் தூக்கிப் போட்டார். அந்த அறையின் பின்பகுதியிலேயே அவர்கள், அப்பாவும் பெண்ணும் வசித்து வந்தார்கள்.
அவள் மருத்துவம் பார்க்கிற அறைப்பக்கமாய் வந்தாள். இருட்டு திரள ஆரம்பித்திருந்தது. தனியே அப்பா மட்டும் உட்கார்ந்திருந்தார். இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஹன்ட்டர்ஸ்பர்க் ஊரின் ஒரு பழைய மோஸ்தர் கட்டடம் அது. அதன் ரெண்டாவது தளத்தில் தான் அவர்கள் ஜாகை. தெருவைப் பார்க்கிற வசத்தில் ஒரு சன்னல் பக்கமாய் அவள் நின்றிருந்தாள். அருகில் அப்பா. ஊரின் சனிக்கிழமை இரவின் கட்டு தளர்ந்த கிசுகிசுப்பான ஒலிகள் தெரு ஓரத்தில் அடங்கிக் கேட்டன. ஐம்பது மைல் தாண்டி சிகாகோ நகரம். கிழக்கே அதை நோக்கி ரயில் இப்பதான் போனது. லிங்கோன் தெருவில் இருந்து விடுதி பஸ், டிரமாண்ட் தெரு வழியே போகிற இரைச்சல். கீழூர் பக்கமாக வேறு விடுதி நோக்கி. குதிரைகள் காலை உதறிக் கொண்டதில் சலனமற்ற காற்றில் சிறு புழுதி எழும்பிப் பறந்தது. பஸ் கடந்த வழியில் சில பேர் வழியெங்கிலும் அவர்களை அழைக்கும் விளம்பரக் கம்பங்களைப் பார்த்தபடி போகிறார்கள். தெருவெங்கும் வாகனங்கள் அடைந்து கிடந்தது. சம்சாரிகளும் அவர்களது சம்சாரங்களுமாய் மாலைநேரமாய்க் கடை கண்ணிக்கோ அரட்டையடிக்கிற உற்சாகத்துக்கோ ஊருக்குள் வந்திருந்தார்கள்.
டவுண் பஸ் போனதும் மூணு நாலு வண்டிகள் தெருவில் நுழைந்தன. ஒரு வண்டியில் இருந்து இளைஞன் ஒருவன் தன் கண்ணாட்டியை அதில் இருந்து இறங்க ஒத்தாசை செய்தான். அந்தக் கரத்தை அவன் தாங்கிப் பிடித்த ஒயில். அதில் தெறித்த அவன் விரகம். அப்படியொரு உணர்ச்சியை மேரி நிறையத் தரம் அனுபவித்திருக்கிறாள். அந்த ஞாபகங்களை ஊடாக வெட்டி அப்பா சொன்னார், ஏ பெண்ணே மரணம் என்னை நோக்கி கிளம்பி வந்திட்டிருக்கிறது…
இங்கே இவர், டாக்டர் பேச ஆரம்பிக்கிறார். எதிர்வாடையில் பார்னி ஸ்மித்ஃபீல்ட்… அவர்கள் வீட்டுக்கு நேர் எதிர்ப்பக்கமாய் அவனது குதிரை பொது பராமரிப்பு லாயம். அப்பொழுதுதான் மாலை உணவை முடித்துக்கொண்டு தன் வேலையிடத்துக்கு வந்தான். எதோ கதையளக்க என்று அவன் நின்றான். லாய வாசப்பக்கம் நிறைய ஆட்கள் ஜமா சேர்ந்திருந்தார்கள். ஹோவென சந்தோஷக் கும்மாளம் கேட்டது. அந்தத் தெரு மைனர்களில் ஒருத்தன் திடகாத்திரமான உடல் கொண்டவன். கட்டம் போட்ட சூட். ஜமாக் கூட்டத்தில் இருந்து தனிப்பட்டு அந்த லாயக்காரனுக்கு எதிரே வந்தான். மேலிருந்து அவனை மேரி ஏறிட்டாள் என்று தெரிந்ததும் அவன் அவளை வசீகரிக்கிற உந்துதல் பெற்று உற்சாகமானான். தன் பங்குக்கு அவன் ஒரு கதையை எடுத்துவிட ஆரம்பித்தான். கையை காலை அசைத்து அவன் செய்கிற உதார்கள். லாயக்காரனின் தோளுக்கு மேலே அதோ மாடி ஜன்னலில்… அவள் நிற்கிறாளா, என்னை கவனிக்கிறாளா என்று அடிக்கடி ஒரு நோட்டம்.
மரணம், மரணம் என்னை நோக்கி வந்துட்டிருக்கிறது மகளே… உணர்ச்சியற்ற அதிராத குரலில் அப்பா சொன்னார். அந்த வயசில் அவருக்கு எந்த விஷயத்திலும் அப்படி ஒரு விட்டேத்தி நிலை தான்…. என அவள் நினைத்தாள். ”எனக்கு இதயத்தில் ஒரு வியாதி இவளே….” நேரடியாகச் சொன்னார் அவர். ”எனக்கே அப்படியொரு சந்தேகம் இருந்திட்டு தான் இருந்தது. போன வியாழன்… நான் சிகாகோ போயிருந்தேனே, அப்ப ஒரு சோதனை எடுத்துக்கிட்டேன். உண்மை என்ன என்றால் நான் எப்ப வேணா செத்திறலாம். சொல்ல வேணான்னு தான் பார்த்தேன். ஆனால் ஒரு விஷயத்துக்காகச் சொல்லிறலாம்னு பட்டது. என் காலத்துக்குப் பிறகு உனக்குன்னு நான் விட்டுப்போக பெரிசா ஒண்ணும் பணம் கிடையாது. உன் எதிர்காலம் பத்தி நீ தான் என்னமும் வகை செஞ்சிக்க வேண்டியிருக்கு. நீண்ட நாள் வாழ்வதற்கு இப்பொழுதெல்லாம் இதய நோய் வந்தால் போதும் என்று இப்பொழுது எல்லோரும் கிசுகிசுக்கிறார்கள்.”
அவள் கம்பியில் கை வைத்து நின்றிருந்தாள். ஜன்னலை எட்டி கிட்ட வந்தார் அப்பா. அவரது பிரகடனம்… அவள் நிறம் சற்று வெளிறினது போலிருந்தது. கம்பியைப் பிடித்திருத் கை சிறிது நடுங்கியது. என்னதான் சலனமற்று இருக்கிறாப் போலக் காட்டிக் கொண்டாலும் அவருக்கு அவளை இன்னும் ஆசுவாசப்படுத்த வேண்டுமாய் இருந்தது. ”அதை விடு… எல்லாம் காலப் போக்கில் சரியாயிரும். இதில் அலட்டிக்க என்ன இருக்கு? நான் மருத்துவத் தொழிலைப் பண்ணியே முப்பது வருஷம் கிட்ட ஆயிட்டது. இன்னாலும்… இந்த மாதிரி ஹேஷ்யங்கள்… அவை எல்லாமே அபத்தம் தானே? இதய நோய் வந்து பல வருடங்கள் வாழ்ந்த ஆட்கள் இருக்கத் தான் செய்யிறாங்க.” ஒருமாதிரி சங்கடமான சிரிப்பு ஒன்றை சிரித்தார். ”நான் கேட்டிருக்கிறேன்… ஆயுசு நீடிக்கணும்னால் இதய வியாதியோட இருக்கலாம்! அடிக்கடி டாக்டர் மருந்துன்னு அதுபாட்டுக்கு ஓடும்… இல்லையா?”
சொன்னார். அப்படியே அந்த கூடத்தை விட்டு வெளியே அவர் போய்விட்டார். தெருவுக்கு இறங்குகிற மரப்படிகளை நோக்கி அவர் வெளியேறினார். பேசியவாக்கில் அவளை மெல்ல தன் தோளோடு அணைத்துக் கொள்ள அவர் நினைத்தாலும் என்னவோ சங்கோஜத்துடன் அதைத் தவிர்த்து விட்டார். அவருக்கும் அவளுக்குமான அகழியை, தன்இறுக்கத்தை தளர்த்திக்கொள்ள ஏனோ அவரால் முடிகிறதே யில்லை.
அப்படியே தெருவைப் பார்த்தபடியே ரொம்ப நேரம் மேரி நின்றிருந்தாள். கட்டம் போட்ட சூட்டுக்காரன், டியூக் யேட்டர் அவன் பெயர், அவன் விட்ட கதையை முடித்துவிட்டாப்ல இருந்தது. அவர்களின் ஹுங்காரம் கேட்டது. திரும்பி அப்பா இறங்கிப்போன அந்தக் கதவை வெறித்தாள். ஏனோ லேசான பயம் வந்தது. அவள் மொத்த வாழ்க்கையிலுமே அவளுக்கு இதமாகவோ, அனுசரணையாகவோ எதுவுமே இல்லாது போயிற்று. அந்த கதகதப்பிலும் அவளுக்கு குளிர் போல நடுக்கியது. பெண்ணியல்பான சிறு கண் சுழிப்பு.
பயம் வந்தால் பெண்கள் அப்படி பாவனை காட்டுகிறார்கள். ஆனால் கீழே டியூக் யேட்டருக்கு அவள் தன்னைப் பார்த்து கண் சிமிட்டினாப் போல அது கிளர்ச்சி தந்தது. அவள் கையையும் தன்னைப்போல மேலே சிறிது தூக்கின மாதிரி வைத்திருந்தாள். பேச்சில் ஆட்டுகிறாப் போல ஆனால் மற்றவர் அறியாதபடி அவன் அவளைப் பார்க்க கீழே வரும்படி சைகை காட்டினான். வா பெண்ணே நாம சந்தித்துக் கொள்ளலாம்…
மேட்டுப் பாங்கில் இருந்து அந்த ஞாயிறு மாலை நடந்தபடியே அவள் வில்மோட் பக்கமாக, குடிசை போட்டிருக்கிற தொழிலாளத் தெருவுக்குத் திரும்பினாள். சிகாகோவில் இருந்து மேற்குப் புறமாக ஹன்ட்டர்ஸ்பர்க் வரை புல்முளைத்துக் கிடக்கிற கட்டாந்தரைகளில் வரிசையாய்த் தொழிற்சாலைகள் எழும்ப ஆரம்பித்திருந்தன. அசமந்தமான கிராமாந்தரம் பக்கமாக ஒரு சிகாகோ முதலாளி மேசை நாற்காலி செய்யும் பட்டறை போட்டார். நகரத்தில் என்றால் சங்கம்ன்றான், சட்டம்ன்றான். இங்கே அந்த மாதிரி வில்லங்கங்கள் இராது என அவர் நினைத்தார்.
ஊரின் மேட்டுப் பகுதியில் வில்மோட், ஸ்விஃப்ட், ஹாரிசன், செஸ்ட்நட் தெருக்களில் வகைதொகை யில்லாமல் கட்டப்பட்ட மரக் குடில்களில் அநேகத் தொழிலாளிகள் வசித்து வந்தார்கள். கோடைகால மாலைகளில் அவர்கள் வீட்டு வெளி முற்றங்களில் ஆசுவாசப் பட்டார்கள். அவர்களின் குழந்தைகள் தெருப்புழுதியில் ஆட்டம் போட்டன. நாற்காலியில் சரிந்தபடி காலர் இல்லா வெள்ளை டி சட்டைகளில். சிலர் புல்தரையில், கட்டாந்தரை வெளிகளில் அப்படியே உருண்டு சுருண்டு கிடந்தார்கள். மனைவிமார்களோ ரெண்டு வீட்டுக்கும் இடைப்பட்ட வேலிப் படல் எல்லையில் கூடி வம்பு பேசினார்கள். சலசலவென்று தூரத்து நதியோட்டமாய் அவர்களின் உசாவல் வெதுவெதுப்பான சந்து இடுக்குளில் கேட்டது. திடுதிப்பென்று அவளுகளில் ஒருத்தியின் குரல் ஓங்கித் தனியே கேட்கும்.
தெருவில் ரெண்டு பிள்ளைங்களுக்கு இடையே ஒரு முட்டு மோதல். பரந்த தோளுடைய ஒரு செவத்த முடிப் பையன். கொஞ்சம் கச்சலான, மூக்கு முழியான பையனை தோளில் அடிக்கிறான்.. மத்த பிள்ளைகள் ஓடி வருகிறார்கள். பெரிய சண்டை உருவாகும் போலிருந்தது. அதற்குள் அந்த முரட்டுப் பையனின் அம்மா ”விடுறா ஜானி. விடுன்றேன்ல… கழுத்துலயே அடிப்பேன் நாயே…” என அலறி சமாதானத்துக்கு ஓடிவந்தாள்.
அந்த சோப்ளாங்கி மெல்ல எதிரியிடமிருந்து விலகிப் போனான். மேரி கோச்ரனை அவன் நிதானமாய்த் தாண்டிப் போகையில், அந்த வெறுப்பு உமிழும் கண்கள் அவளை ஒருதரம் பார்த்து மீண்டன.
மேரி விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள். அந்தப் புதுக் குடியிருப்புப் பகுதியில் எப்பவுமே சத்தமும் சந்தடியும் என இருப்பது அவளுக்குப் பிடிக்கும். அவளுடைய சுபாவத்திலேயே ஒரு இனம் புரியாத இருளும் சோகமும் கவிந்து கிடந்தது. தனிமையும் இருளும்… இந்தப் பிரதேசமோ லேசான உள் இருளுடன் ஆனால் எகிறி திமிறி குமுறிக் கொண்டிருக்கிறது.
அவள் அப்பா எப்பவுமே உம். அதிகம் பேசுகிற ஆள் அல்ல அவர். அப்பா அம்மா இருவரது திருமண வாழ்க்கை சந்தோஷமானதாய் அமையவில்லை. இதனால் அவளால் ஊரின் மத்த சனங்களோடு இயல்பாய் அணுகிப் பேச இயலாமல் ஆயிற்று. எப்பவுமே தனிமையே வரமாயிற்று. வாழ்க்கை சார்ந்த எந்த விஷயத்தையும் அவள் யாரோடவும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல், தன் போக்கில் ஒரு நாயலைச்சலாய், வந்தது வரட்டும் என்கிற அசட்டையுடன் அணுக வேண்டியதாயிற்று. அவளிடம் திட்டங்கள் இல்லை.
ஆனாலும் இதனால்… ஒரு அசட்டுத் துணிச்சலும், எதையாவது பண்ணிப் பார்த்துவிடுகிற குறுகுறுப்பும் அவளிடம் இருந்தது. காட்டில் வேட்டையாடப்பட்ட மிருகத்தின் குட்டி போல தனித்து விடப்பட்டிருந்தாள் அவள். என் உணவுக்கு நானே அலைகிற மட்டில் வாழ்க்கை தேவைகளை சதா நினைவூட்டி அதையிட்டே பதட்டப்பட வைக்கிறதாயிற்று.
பத்து தரம், இருபது தரம் இப்படி அவள் வெளியே தனியே உலாவக் கிளம்பி யிருக்கிறாள். எப்பவுமே இந்தப் புதுப் பிரதேசம்… வேகமாக வளர்ந்து வருகிறது இது… மாலைகளில் இங்கே இப்படி நடை அவளுக்கு வேண்டியிருந்தது. அவளுக்கு இப்போது வயசு 18. வளர்ந்த பெண்ணின் அடையாளங்கள் வந்திருந்தன. அவளையொத்த பிரயாத்து மத்த பெண்களானால் இப்படி இந்தப் பிரதேசத்தில் அதுவும் தனியே நடக்கத் துணிய மாட்டார்கள். ஆனால் இதையிட்டு அவளுக்கு ஒரு பெருமிதம் தான். எப்பவுமே ஒரு நிமிர்ந்த நடையுடன் அவள் போனாள்…
வில்மோட் தெருவின் தொழிலாளிகளில் அந்த மரவேலை செய்கிற கம்பெனி முதலாளி கூட்டி வந்த ஆண்களும் பெண்களும் இருந்தார்கள். ஒவ்வொருவரின் பாஷையும் ஒவ்வொரு மாதிரி. வித்தியாசமான அந்த சப்த சூழலில் நடக்க அவள் விரும்பினாள். இங்கே இப்படி நடந்து போவது தன் ஊரை உலகத்தை விட்டே வேறொங்கோ நடமாடுகிற பிரமையைத் தந்தது.
பள்ளத்தில் பெரிய தெருக்களிலோ, கீழ்ப் புறத்தில் சனங்கள் வசிக்கும் தெருக்களிலோ, அந்த சனங்களை அவள் முகப் பரிச்சயம் உள்ளவள்… வியாபாரிகள், குமாஸ்தாக்கள்… வழக்கறிஞர்கள், கொஞ்சம் வசதியான அமெரிக்க ஊழியர்கள்… ஹன்ட்டர்ஸ்பர்க்கில் அவர்கள் வேலை செய்கிறார்கள். அவளையிட்டே அவளுக்கு ஒரு கசப்பு இருந்தது. தன்னைப் பற்றி தனக்கேயான கசப்பு அல்ல அது. அது அவளுக்கே தெரியும். என்னன்னால் அவள் தன் எண்ணங்களை யெல்லாம் அப்படியே உள்ளேயே போட்டு வைத்திருக்கிறாள். யாரோடும் அவள் பகிர்ந்து கொண்டதே யில்லை. அதுதான் விஷயம். அதன் முடை நாற்றமே இந்தக் கசப்பு. இந்த லோகம் பற்றி அவள் அதிகம் அறிந்து அனுபவப் பட்டவளும் அல்ல. அவள்… அவள் அவள்அம்மாவுக்குப் பிறந்தவள்… அந்த அம்மாவால் அவளுக்கு விளைந்தது இந்தத் தனிமை, இந்தக் கசப்பு… என தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். அதனால் தன்னைத் தெரிந்த பிரதேசங்களில் போய் வருவதை அவள் தவிர்த்தாள். உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது.
என்றாலும் இப்படி வில்மோட் தெருவில் அடிக்கடி அவள் போகிறதால் அந்தப் பகுதி நபர்களுக்கும் அவளைத் தெரிய ஆரம்பித்திருந்தது. ஊரின் எதோ விவசாயக் குடும்பத்துப் பொண்ணு போல… இப்படியே திரிஞ்சி பழகினவளா யிருக்கும், என அவர்கள் பேசிக் கொண்டார்கள். இடுப்பு பெருத்த ஒரு சிவத்த தலைப் பெண் வீட்டை விட்டு வெளியே வந்தவள் லேசாக அவளைப் பார்க்கத் தலையாட்டினாள். சிறு புல்தரையிட்ட பக்கத்து வீட்டில் மரத்தில் சாய்ந்து இளைஞன் ஒருவன் உட்கார்ந்திருந்தான். புகைக் குழாயை வாயை விட்டு எடுத்தபடி அவளைப் பார்த்தான். இத்தாலியன் போல. அந்தக் கேசம், கண்கள்… அடர் கருப்பு. ”நெ பெல்லால் ஸி ஃபாய் அன் ஒனோர் எ பாசாரே தி க்வா…” அவன் அழைத்தபடி கையசைத்துப் புன்னகை காட்டினான்.
மேரி வில்மோட் தெருவின் கோடிக்கு வந்திருந்தாள். ஒரு பராமரிப்பில்லாத தெருப் பக்கமாக அவள் நடந்தாள். இப்படிக் கிளம்பி வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டாப் போல ஒரு பிரமை. உண்மையில் அது நடந்து கொஞ்ச நிமிடங்களே ஆகி யிருந்தன. பககவாட்டில் சிறு குன்று. அங்கே ஒரு பாழடைந்த கட்டடம். முன்வழியிலேயே எரிந்த மரத் துண்டுகள். ஒரு காலத்தில் அந்தக் கட்டடம் பயன்பட்டிருக்கலாம். உள்ளே நுழைகிற பொந்தை ஒருச்சாய்த்து கற்குவியல். அதன்மேல் கொடிகள் படர்ந்திருந்தன. அந்தத் தளத்துக்கும் வீட்டுக்கும் முற்ற வெளிக்கும் இடையே ஒரு மரம். கசகசவென்று கொடியப்பிக் கிடந்தது மரம்.
லாலி பீலி என்று தொங்கிக் கொண்டிருக்கும் கொடிகளை ஒதுக்கிப் போனாள். கொடிகளில் ஆங்காங்கே பூக்கள் கொல்லென்று மலர்ந்து கிடந்தன. ஒரு பழைய ஆப்பிள் மரத்தடியில் முட்டுக் கொடுத்தாப் போல் போட்டிருந்த பாறை ஒன்றைப் பார்த்துவிட்டு அதில் போய் உட்கார்ந்தாள். அந்தக் கொடிகளில் அவள் உருவம் பாதி மறைந்திருந்தது. தெருவில் போவோருக்கு அவரது தலை மாத்திரமே தெரிவதாய் இருக்கும். கொடிகளுக்குள் அவள் அமுங்கிக் கொண்டதாய் இருந்தது கோலம். வளர்ந்த புல்லுக்குள் பதுங்கிக் கொள்ளும் மிருகம் போல. எதும் சத்தம் கித்தம் கேட்டால் சுதாரித்து எட்டி, சுற்றிலும் கூர்ந்து பார்க்கும் சிறு விலங்கு.
மருத்துவரின் மகளான அவள் அந்தப் பாழுக்கு அநேக தரம் வந்திருக்கிறாள் தான். மலயடிவாரத்தில் இருக்கும் அதில் இருந்துதான் தெருக்களும், ஊருமே கூட உருக் கொள்கிறது. இங்கிருந்து வில்மோட் தெருவின் சந்தடிகளையும் இரைச்சல்களையும் ஒலிக் கசிவுகளாகக் கேட்க முடியும். சின்ன வரப்புவேலி மலைப் பக்க வயல்களில் இருந்து அந்தப் பொட்டலைப் பிரித்திருந்தது. மரப் பக்கமாக உட்காரவே அவள் நினைத்தாள். வெயில் சாயும் வரை அப்படியே அமர்ந்து எதிர்காலம் பற்றி எதாவது யோசிக்கலாமாய் இருந்தது. சீக்கிரமே அப்பா காலம் முடிந்து விடும், என்ற சேதியே நிசம் போலவும், பொய் போலவும் இருந்தது அவளுக்கு. என்றாலும் அவரை பிணமாக நினைத்துப் பார்க்க முடியவில்லை. இறுகி விரைத்த அந்த உடலம் இனி புதைக்கப்பட வேண்டியது… அப்படியான உணர்வு தாட்டவில்லை. எங்கோ பயணம் போகப் போகிறேன், என்று கிளம்பிய அவரை அவள் பிரிகிறாள்.
அவளைத் தனியே விட்டுவிட்டு அவள்அம்மா எப்பவோ இதே மாதிரி பிரிந்து போய்விட்டாள். அப்படி நினைத்துக் கொள்வதில் ஒரு தயக்கமான இணக்கம், அது அப்படித்தான், என்கிற பாவனை அவளுக்குக் கிடைத்தது. ம்… என தலையாட்டிக் கொண்டாள். என் நேரம் வந்தால் நானும் கிளம்ப வேண்டிதான். நானோ ‘இங்கே’ இந்த சூன்யத்தில் இருந்து வெளியேறுவேன்… உலகத்துள் நுழைவேன்.
அப்பாவும் அவளுமாய் ஓரிரு நாட்கள் சிகாகோ போய்த் தங்கியும் இருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் நான் சிகாகோ போகிறேன்… என்று சிறு யோசனை. புன்னகை வந்தது. நல்ல ஊர் அது. நீள ராஜபாட்டைகளில் ஆயிரக் கணக்கில் சனங்கள் நடமாடுகிறார்கள். அவளுக்கு யாரையுமே தெரியாது. என்ன அருமையான அனுபவம் அது. கொதிக்கும் பாலைவனத்தில் இருந்து குளிர்ந்த புல் பூண்டு காலில் தட்டும் ஜில்லென்ற காட்டு வெளிக்குள் வந்தாப் போல.
இங்கே ஹன்ட்டர்ஸ்பர்க்கில் ஒருமாதிரி மேக மூட்டத்துக்குள் போலவே அவள் இருந்தாள். இப்ப வளர்ந்த பெண்ணாக உலகம் தெரிய ஆரம்பிக்கையில் தனது இந்த ஒட்டாத நிலை மேலும் மேலும் அவளை இறுக்கி இம்சைப் படுத்துகிறதாய் இருந்தது. வெளிப்படையான நெருக்கடி, பிரச்னை என்று இல்லைதான். என்றாலும் அந்த தெரிந்த வட்டாரத்தில் அவளுக்கு ஒரு கறைப்பட்ட முகம் இருக்கவே செய்தது. அவள் குழந்தையாய் இருந்த போதே ஊருக்குள் வதந்தி… அவள் அப்பாவும் அம்மாவும் பற்றியது அது. மொத்த ஊரிலுமே அதுவே பேச்சாய் இருந்தது. அவளைக் குழந்தையாய்ப் பார்க்கும் அவர்களின் கண்களில் இரக்க பாவனையுடனான கேலி. ரொம்பப் பாவம் இது… என்பார்கள்.
ஒரு கோடைகால மாலை, மேக மூட்டாய்த்தான் இருந்தது, அப்பா ஊருக்குள் போயிருந்தார். அவள் மாத்திரம் அப்பாவின் மருத்துவ அறை ஜன்னல் பக்கமாய் உட்கார்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். ”டாக்டர் கோச்ரனோட மகள் நல்ல பொண்ணு…” யாரோ ஆம்பளைக் குரல். கூட இருந்த பொம்பளை சிரிக்கிறாள். ”அவ பெரிய பெண்ணா வளர்ந்தாச்சி. இப்ப ஆம்பளைகளைத் தூண்டில் போடுகிற பருவம். நீ உன் கண்ணை அலைய விடப்டாது. கூடிய சீக்கிரமே அவ கொணத்தைக் காட்ட ஆரம்பிச்சிருவா… தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை”
மரத்தடிக் கல்லில் ஒரு பத்து பதினைந்து நிமிடம் போல அப்படியே உட்கார்ந்திருந்தாள் மேரி. தன்னையும் அப்பாவையும் பற்றி ஊர் என்ன நினைக்கிறது… ஊரார் அவளையும் அவரையும் சேர்த்தே பேசுகிறார்கள், என தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவர்கள் இருவர் மேல் கவிந்து கிடக்கும் இந்த மூட்டம்… அப்பாவின் மரணவாடையில் விலகிப் போகுமா? அந்த நிலையில் அப்பாவை மரணம் நெருங்குவதே கூட அவளுக்கு அத்தனை கொடிய விஷயமாய்ப் படவில்லை. அந்த மரணம், அவளுக்கும் அப்பாவுக்குமே விமோசனத்தையே, நல்லதையே கொண்டு வரும், என்று பட்டது. தன் சார்ந்த இளமை முறுக்கத்தில் அவள் தன் எதிர்கால யத்தனங்களை எண்ணமிட ஆரம்பித்தாள்.
மேரி அசையாது உட்கார்ந்திருந்தாள். அவள் உள்ளே வந்ததில் அடங்கிவிட்ட பூச்சிகள் நீண்டு தொங்கும் கொடி அடைசலில் திரும்ப இரைய ஆரம்பித்தன. ஒரு ராபின் பறவை அவள் அமர்ந்திருந்த மரக் கிளையில் இருந்து சிறகடித்து கீழே வந்தது. க்றீச் என ஒரு பயத்துடிப்பான அலறலை வெளியிட்டது ராபின். தூரத்து மனித ஒலிகள் தேய்ந்து கேட்டன. தேவாலயத்து மணிகள் போல. ஏ பிரார்த்தனை நேரம் இது, வாருங்கள், என அவை அழைக்கிறாப் போல. அவளுக்கு என்னவோ நிகழ்ந்தாப் போலிருந்தது. சின்ன நெஞ்சில் ஒரு சிலுங். கைகளால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கினாள். அந்த ஹன்ட்டர்ஸ்பர்க் மனிதர்களின் உயிர்த்துடிப்பான ஒலிகள் அவளை அப்படி ஏங்கி அதிரச் செய்தன.
அப்போது தான் தெருப் பக்கமிருந்து ஒரு அழைப்பு… ”ஏ, அங்க, பாப்பா…” சட்டென ஒரு துள்ளு துள்ளினாள். அதுவரை அவளிடம் இருந்த துயரச் சாயல் பறந்து சிறு சீற்றம்.
அது டியூக் யேட்டர். அவன் தான் அவள் ஞாயிறு மாலை நேர உலா என்று வெளியேறியதைப் பார்த்து விட்டு பின் தொடர்ந்து வந்திருந்தான். இப்படி ஒதுக்குப் புறமாய் பெரிய மேட்டுத் தெரு வழியாக அவள் புதிய தொழிற்சாலைகள் எழும்பும் பகுதிக்குப் போனாள், என்றால்… ஆ அவளது தேவை அவனுக்கு விளங்கி விட்டது. அட என் கூட சேர்ந்து வர அவளுக்கு இஷ்டம் இல்லை, அதுதான் இப்படி… என தனக்குள் சொல்லிக் கொண்டான். அதனால பரவாயில்லை. நான் அவளைத் தொடர்ந்து வருவேன்னு அவளுக்கு நல்லாவே தெரியும். ஆனால் மத்த சி«நெகிதர்கள் முன்னாடி என்னை அவள் நேரடியாக அழைக்க விரும்பவில்லை. கொஞ்சம் உம்மணாமூஞ்சி தான். சுதி யேத்தி விடணும்…. ஆனால் எனக்கென்ன அதைப் பத்தி? அவளே தன் இயல்புக்கு மாறா, எனக்கு இந்த வாய்ப்பு அளிக்கிறாள்… ஒருவேளை அவள் அப்பாவை நினைத்துக் கூட என்னிடம் தயக்கம் காட்டியிருக்கலாம்.
தெருவில் இருந்து அந்த கற் குவியலில் ஏறியபோது அதன் கொடிகளிலும் எசகுபிசகிலும் தடுமாறி கீழே விழுந்தான். அப்படியே எழுந்துகொண்டு அசட்டுச் சிரிப்பு சிரித்தான். அவன் தன் இடம் வரை வர மேரி காத்திருக்கவில்லை. அவளே அவனைப்பார்க்க வந்தாள். அதுவரை அங்கே நிலவிய அந்த அமைதியை அவன் சிரித்துக் கலைத்தபோது, அவனைநோக்கி அவள் பாய்ந்து கையை வீசி அவன் கன்னத்தில் பளாரென்று விட்டாள் ஒரு அறை. கால்கள் கொடி சிக்கி அவன் நிற்க அவன் தெருவைப் பார்க்க வேகமாக நடந்தாள். ”என்னைத் தொடர்ந்து வந்தாலோ, எதுவும் பேசினாலோ உன்னை ஆள வெச்சே கொன்னுருவேன்…” என்று கத்தினாள்.
இறங்கி திரும்ப வில்மோட் தெருவைப் பார்க்க நடக்க ஆரம்பித்தாள். ஊரில் வதந்தியாய் உலா வந்த அவள்அம்மா பற்றிய கதைகள் அப்போது அவள் காதில் ஒலித்தன. ஒரு கோடைகால இராத்திரி, வெகு காலம் முன்னால் அம்மா காணாமல் போனாள். அவள் வீட்டு எதிரே இருந்த குதிரைப் பராமரிப்பு நிலையம், அதன் வாசலில் கூடிக் கும்மாளமிடும் ஒரு வெட்டிக்கும்பல் ரௌடிகளில் ஒருவனுடள் அவள் ஓடிப் போனாள். இப்ப, இவன்… என்னைப் பெண்ணாள நினைக்கிறான்… அவளுக்கு ஆத்திரம் குமுறியது.
கையில் எதும் ஆயுதம் எடுத்து வந்திருக்க வேண்டும். அவன் முகத்தில் தழும்பு அடையாளம் வர்றாமாதிரி அவனைச் சாத்தி யிருக்கலாம். ஏற்கனவே நொந்து கிடக்கும் அப்பா, சாவு வர அவர் காத்திருக்கிறார்… அவர் இதைக் கேள்விப்பட்டால்… என நினைத்துப் பார்த்தாள். ”ஏ எங்கப்பா உன்னை மாதிரி ஒத்ததனைப் போட்டுத் தள்ளணும்னு தான் காத்திட்டிருக்கார்…” என்று திரும்ப கத்தினாள். ”நீங்க தானேடா அம்மா பத்தி இப்பிடி இல்லாததும் பொல்லாதுதமா பேசித் திரியறீங்க?”
அவளுக்கு இப்போது கொஞ்சம் வெட்கமாய்க் கூட இருந்தது. கண்களில் கண்ணீர் வழிய அவள் விறுவிறுவென்று போனாள். தலை துவளக் கெஞ்சியபடி கூட வந்தான் டியூக். ”ஐயோ உன்னை பலவந்தப் படுத்த நான் வரவில்லை மிஸ் கோச்ரன்… இதை உங்க அப்பாகிட்டச் சொல்ல வேண்டாம். இது சும்மா… வேடிக்கை. பாரு, நான் உன்னை பலவந்தப் படுத்த நினைக்கவே யில்லை… நினைக்கவே யில்லை.”
வில்மோட் தெருவில் அந்தி சூழ வெளிச்சம் உள்வாங்க ஆரம்பித்திருந்தது. வீட்டின் தாழ்வாரத்தில் அல்லது காம்பவுண்டு அருகில் குழுமி நின்றிருந்த சனங்களின் முகங்களில் இருள் படிந்து விளிம்புகள் மாத்திரமே தெரிந்தன. குழந்தைகளின் ஒலிகள் இருளில் தணிந்து கேட்டன. அவர்களும் ரெண்டாய் மூணாய்த் தான் நின்றிருந்தார்கள். அவளை முகம் நிமிர்த்தி பேச்சில்லாமல் வெறித்துப் பார்த்தார்கள். ”இந்தப் பெண் இந்தப் பக்கம் தான் எங்கியோ பக்கத்தில் இருக்கிறாள்… ரொம்ப பக்கத்தில்…” யாரோ ஆங்கிலத்தில் சொன்னது கேட்டது. திரும்பிப் பார்த்தாள். நிறையப்பேர் கருத்த ஆண்கள் தான் தட்டுப் பட்டார்கள். எதோ வீட்டுக்குள்ளிருந்து குழந்தையைத் தூங்கப் பண்ண ஒரு பெண் பாடுவது கேட்டது.
அந்த இளம் இத்தாலியன், முதலில் அவளை அழைத்தவன், இப்ப அவன் வெளியே உலாவலுக்கு என வந்திருந்தான்… அவள் பக்கமாக அவன் நடந்து வந்தான். அவளைத் தாண்டி விறுவிறுவென்று இருட்டில் மறைந்தான் அவன். ஞாயிறு உடை தட்டையான கருப்புத் தொப்பி. விரைத்த வெள்ளைக் காலர், கழுத்துப்பட்டி. அந்தக் காலரின் பளபளப்பில் அவனது பழுப்பு நிறமே கருப்பு காட்டியது. ஒரு வாலிபப் புன்னகையுடன் தொப்பியை அசட்டுத் தனமாய் உயர்த்திக் காட்டினாலும் அவன் எதுவும் பேசாமல் போனான்.
திரும்ப¤ப் பார்த்தாள். டியூக் பின்தொடரவில்லை என உறுதி செய்துகொண்டாள் மேரி. அந்த வெளிச்ச மசங்கலில் அவன் தட்டுப்படவில்லை. ஆசுவாசப்பட்டாள்.
வீடு திரும்ப அவளுக்கு மனசில்லை. நேரமாகி விட்டது, இனி சர்ச்சுக்கும் போக முடியாது. மேட்டுப் பெரிய தெருவில் இருந்து ஒரு குட்டித் தெரு கிழக்குவசத்தில் போகும். ஒரு ஓடையும் பாலமுமான பிரதேசம் நோக்கி அது நீளும். அந்தப் பகுதியில் அதற்கு மேல் ஊர் வளர முடியாது, என்கிற எல்லை அது. பாலம் வரை அவள் நடந்தாள். பொழுது விழுந்து கொண்டிருந்தது. ரெண்டு பையன்கள் ஓடையில் தூண்டில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
தெரு வழியே கெட்டித் துணிகள் அணிந்த ஒருவர், மார்புகள் விரிந்து பரந்திருந்தன… பாலத்துப் பக்கமிருந்து அவளுடன் அவர் பேசினார். ஒரு அப்பாபாவனையில் அந்த ஊரில் அப்போது தான் முதல் குரலை அவள் கேட்கிறாள். ”ஏம்மா நீ டாக்டர் கோச்ரனின் பொண்ணுதானே?” என்று தயக்கமாய் அவர் கேட்டார். ”உனக்கு என்னைத் தெரிய நியாயமில்லை. ஆனா உங்க அப்பாவுக்கு என்னைத் தெரியும்.” நாணல் வளர்ந்து கிடக்கும் ஓடைக் கரையைக் காட்டினார். கையில் தூண்டில்களுடன் அந்த இரு பையன்கைளைக் காட்டியதாகத் தெரிந்தது. ”அவங்க என் பிள்ளைங்கள். இவர்கள் தவிர எனக்கு நாலு குழந்தைகள்” என விளக்கினார். ”இன்னொரு பையன், மூணு பெண்கள். அவங்கள்ல ஒருத்தி ஒரு கடையில் வேலைக்குப் போறா. அவ உன் வயசுதான்…”
டாக்டர் கோச்ரனுக்கும் அவருக்குமான பழக்கம் பத்தி அவர் பேசலானார். அவரும் விவசாயியாகத்தான் இருந்தார். பட்டறை வேலைக்கு என்று இந்தப் புது கம்பெனிக்கு வந்து விட்டார். இப்பதான்… போன குளிர்காலத்தில் அவருக்கு ரொம்ப நாளா ஜுரமாய் இருந்தது. கையில் பணங் கிடையாது. அவர் படுக்கையில் கெடக்காரு, அவரோட ஒரு பையன் வேலை செய்கையில் லாயத்தின் மேல் பலகையில் இருந்து விழுந்து வெச்சான். தலைல செம கீறல்.
”உங்கப்பா தினசரி எங்களைப் பார்க்க வருவார். டாமின் தலைக்கு தையல் போட்டது அவர்தான்.” தலைத் தொப்பியைக் கையில் எடுத்தபடி தூரத்துப் பையன்களைப் பார்த்தபடியே நின்றார். ”நான் எதுக்கும் லாயக்கில்லாதவனாய் இருந்தேன். உங்க அப்பா என்னையும் பிள்ளைங்களையும் மருத்துவம் பண்ணியது மாத்திரமில்லை. என் பொண்டாட்டி கிட்டயும் பலசரக்கு வாங்க, மருந்து வாங்கன்னு பணங் குடுத்துட்டுப் போவாரு.” தணிந்த குரலில் அவர் பேசினார். அதைக் கேட்க என்று மேரி லேசாய்க் குனிந்து கொடுக்க வேண்டியிருந்தது. அவள் முகம் கிட்டத்தட்ட ª பரியவரின் தோளை உரசியது.
”நல்ல மனுசன் அவர். ஆனால் அவர் சந்தோசமா இல்லைன்னு தான் எனக்குப் படுது…” பெரியவர் தொடர்ந்தார். ”நானும் பையனும் உடல் தேறினோம். எனக்கு இங்க வேலை கிடைசசது. ஆனால் செலவழிச்ச பணத்தை உங்க அப்பா திருப்பி வாங்கிக்கவே யில்லை. ஏ வெச்சிக்கப்பான்னாரு. குழந்தைகள், மனைவி எல்லாரோடவும் சேர்ந்து வாழறது பெரிய பாடு அப்பா. அவங்களை சந்தோஷமா வெச்சிக்கத் தெரியுது உனக்கு. பணத்தை அவங்களுக்காகச் செலவு பண்ணு போன்னுட்டாரு.”
பாலத்தைக் கடந்து ஓடைப்க்கமாக பையன்கள் மீன்பிடிக்கும் இடத்துக்குப் போனார் அவர். பாலத்தின் கம்பியைப் பிடித்தபடியே மேரி மெல்ல அதில் ஓடும் தண்ணீரைப் பார்த்துக்கொண்டு நின்றாள். பாலத்தின் கீழே நிழல்பாங்கில் தண்ணீர் கிட்டத்தட்ட கருப்பாகவே தெரிந்தது. அப்பாவின் வாழ்க்கையும் இதைப் போலத்தானே மர்மமாகவே இருக்கிறது, என நினைத்தாள் அவள். ஓடுவதே தெரியாமல் நிழல்பாங்கிலியே அவர் வாழ்க்கையும் ஓடுகிறது. வெளிச்சத்துக்கு அது வந்ததே கிடையாது… என் வாழ்க்கை… அதுவும் இப்படியே பூடகமாக ஓடி அடங்கிவிடுமோ… என நினைக்கையில் பயமாய் இருந்தது. அப்பாமேல் இப்போது புதுசாய் ஒரு பரிவு சூழ்ந்தது. அப்பாவின் அரவணைப்பில் இருக்கிறதாக ஒரு நினைப்பு வெட்டியது.
சிறு பிராயத்தில் அப்பா அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டு கொஞ்சுவது போலவெல்லாம் அவளுக்கு கனவுகள் இருந்தன. எல்லாம் இப்ப திரும்ப அவளிடம் வந்தாப் போலிருந்தது. ரொம்ப நேரம் அவள் அந்த ஓடையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது ஆசை, கனவு – அப்பாவைக் கட்டிக் கொள்வது, இந்த ராத்திரி அது கிடைக்க வேண்டுமாய் இருந்தது அப்போது. அது இல்லாமல் முடியாது போலிருந்தது. ஓடையில் அந்த ஓரத்தில் தொழிலாளி சிறு நெருப்பு மூட்டியிருந்தார். ”இந்தப் பக்கம் புல்ஹெட்ஸ் வகை மீன் கிடைக்கும்…” என்று அவளை அழைத்தார். “நெருப்பு வெளிச்சத்துக்கு அவை கிட்ட கரைப்பக்கமா வரும். நீ கூட வந்தால் பையன்க கிட்ட ஒரு தூண்டில் வாங்கி மீன் பிடிக்கலாம்.”
”ஓ, நன்றி. இன்னிக்கு வேணாம்” என்றாள் மேரி. அழுது விடுவாள் போலிருந்தது. பெரியவர் திரும்ப எதும் பேசினால் பதில் சொல்லக் கூட முடியாமல் போய்விடும். ”குட் பை.” ஒரே சமயத்தில் அவர்கள் மூவருமே அப்படிக் கூவியது அவளது இறுக்கமான மன நிலையில் குபீரென்று உற்சாகத்தைக் கிளர்த்தியது.
பெண் கிளம்பிப் போனதும் டாக்டர் கோச்ரன் ஒரு ஒருமணி நேரம் போல தனது மருத்துவ அறையில் அமர்ந்திருந்தார். இருட்டு கவியத் துவங்கி, எதிர் லாயத்துப் பக்கம் நாற்காலி போட்டு அல்லது கிடைத்த பெட்டிகளில் உட்கார்ந்து கதையளந்து கொண்டிருந்த கும்பல் கலைந்து எல்லாரும் ராத்திரிச் சாப்பாட்டைப் பார்க்கப் போய்விட்டார்கள். வெளி சந்தடிகள் அடங்கி சில சமயம் ஐந்து பத்து நிமிடங்கள் வரை சத்தமே அற்றிருந்தது. எதோ ஒரு குழந்தை எங்கோ அழும் சத்தம். சர்ச் மணிகள் முழங்கின.
டாக்டர் ரொம்ப சுத்த பத்தமான ஆள் எல்லாம் இல்லை. சிலப்ப பல நாட்கள் சவரம் பண்ணாமலேயே கூட விட்டுவிடுவார். மெலிந்த நீண்ட கைகளால் நாடி சொரசொரப்பைத் தடவி விட்டுக் கொண்டார். அவரது தேகநிலைமை… அவர் தன்னைப் பற்றி நினைத்ததை விட அதிகமாகவே அவரை பாதித்திருக்கிறதாக நினைத்தார். இந்த உடலை விட்டு மனம் மாத்திரம் வெளியே மிதந்து போகிற மாதிரி முயற்சி செய்கிறதோ? இப்படி உட்கார்ந்திருக்கிற சந்தர்ப்பங்களில் அவரது கைகள் மடிமேல் கிடக்கும். அவற்றை ஒரு குழந்தைப் பார்வை பார்த்தார். என் தேகம்… விநோதமான விஷயம். இத்தனை வருஷமா இந்த தேகத்தோடு நான் வாழ்கிறேன். ஆனால் இந்த தேகத்தை நான் அசைக்கவாவது செய்தேனா… கிடையாது. இப்ப… இது, இந்த தேகம், அழியப் போகுது. பயன்படுத்தப் படாமலேயே செல்லரிச்சிப் போகப் போகுது. இதுல வேற யாராவது குடியிருக்க இது முயற்சி கியற்சி செஞ்சிருக்கலாம்!…
விரக்தியாய் தன் நினைப்பில் தானே சிரித்துக் கொண்டார். என்றாலும் தொடர்ந்து அவர் சிந்தனை ஓடியது. ம். சக மனிதர்களைப் பத்தி எனக்கு யோசனைகள், அபிப்ராயங்கள் இல்லாமல் ஒண்ணும் இல்லை. இந்த நாக்கு, இந்த உதடுகள்… அவை எதையும் சட்டென வெளியே விடாமல், பெரும்பாலும் வாளாவிருந்தன. என்னுடைய எல்லென், அவள் என்னுடன் இருந்தவரை நான் அழுத்தமானவன், கல்லுளிமங்கன், உணர்ச்சிகளை அவை எத்தனை வலியாய் இருந்தாலும் வெளியே காட்டாதவன், அந்த உள் சிடுக்கைக் கிழிக்க வம்பாடு படுகிறவன், என்றுதான் அவளை நினைக்க வைத்தேன்.
வாலிப வயசில் இதே அலுவல் அறையில் அவளுடன் அமைதியாய் உட்கார்ந்திருந்த நாட்கள்… அருகே அவள்… என்றாலும் அந்தக் கையைத் தூக்கி அவளை ஸ்பரிசிக்க, அந்தக் கைகளை, முகத்தை, கூந்தலை வருட… நீட்டவே முடியாமல் கனத்தன அவை.
ஊரில் எல்லாவனுமே சொன்னதுதான்… ஐய இந்தக் கல்யாணம்… தேறாது! அவள் ஒரு நடிகை. ஹன்ட்டர்ஸ்பர்க்குக்கு வந்த நாடகக் கம்பெனியுடன் அவள் வந்தாள். கம்பெனி அங்கேயே கலகலத்து விட்டது. அவளுக்கும் உடம்பு சுகமில்லாமல் போய், விடுதியில் கூட பணங் கட்ட முடியாத அளவு பண முடை. இளம் மருத்துவர் இவர் தான் போய்ப் பார்த்தது. அவள் உடல் தேறியதும் தனது சாரட்டில் அவளை வெளியே அழைத்துப் போனார். அவ வாழ்க்கையே அப்போது தத்தளிப்பாய் ஆகியதில், இந்த ஊர், இந்த வாழ்க்கை, இதுவே பரவாயில்லை என அவளுக்குப் பட்டது.
கல்யாணம் ஆகி, குழந்தையும் வந்த பின்னால், இந்த அமுக்குணியுடன தொடர்ந்து என்னால் வாழ முடியாது என்று திடுதிப்பென்று அவளுக்குத் தோணியது. ஒரு சலூன்காரனின் மகனுடன் அவள் ஓடிப்போனதாக ஊரில் வதந்தி உண்டு. அதே சமயத்தில் அவனையும் காணவில்லை, என்றதால் அப்படிப் பேச்சு. ஆனால் உண்மை அதுவல்ல. லெஸ்தர் கோச்ரன் தானே அவளை சிகாகோ வரை அழைத்துப் போய் விட்டார். மேற்கு மாநிலங்களில் தூரமாய்ச் செல்லும் கம்பெனி ஒன்றில் அவளுக்கு வேலை அமைந்தது. அவளை அவளது தங்கும் விடுதிவரை அவர் அழைத்துப் போய் விட்டார். அவள் கையில பணத்தை வைத்து அழுத்தினார். பிறகு அமைதியாக, சம்பிரதாய முத்தம் கூட இல்லாமல் முதுகைத் திருப்பிக்கொண்டு வெளியேறினார்.
அந்த நினைவுகளில் ஆழ்ந்தபடியே டாக்டர் தன் நாற்காலியில் அமர்ந்திருந்தார். இன்னவும் பிறவுமாய் அவர் உள்ளே அதிர்ந்து கொண்டிருந்தார் எனற்£லும் வெளியே அவர் எதையுமே காட்டிக்கொள்ளாத அபார அமைதியுடனும், சகஜ பாவனையுடனும் இருந்தார். அவளுக்கு என் நினைப்பு இருக்குமா, என்று யோசனை ஓடியது. இந்தக் கேள்வியை எத்தனை முறை அவர் தனக்குள் கேட்டுக் கொண்டிருப்பார். அவரை அவள்விடுதியில் கொண்டு விட்டுவிட்டு வந்தபின் அவளிடமிருந்து கடிதமே வரவில்லை. ஆளே இருக்காளோ இல்லையோ, என்றும் ஆயிரமாவது முறையாகத் தோன்றியது.
ஒரு வருடமாக அதே நினைவுகளின் அல்லாட்டம். மனைவியின் உருவம் லேசாய்க் கலைந்து, பெண்ணின் உருவத்தோடு கலந்தாப் போல. எது யார் என்று தெரியாமல், தனியே அம்மா என்றும் மகள் என்றும் அவரால் அந்த ஒட்டியஉருவத்தைப் பிரித்தறிய, தனியே நிறுத்திப் பார்க்க முடியாது போயிற்று. தலையை லேசாகத் திருப்பினார். இள மங்கையொருத்தியின் வெள்ளை உருவம், அவளும் பெண்ணும் வசிக்கும் அறையில் இருந்து வெளியே வருவதாக பிரமை தட்டியது. அந்த உள்ளறைக் கதவு வெண்மையாய்ப் பெயின்ட் அடிக்கப் பட்டு, ஜன்னல் வழியே வந்த காற்றில் அசைந்தாடுகிறது. ஓரத்தில் கிடக்கும் காகிதங்களும் அப்போது லேசாய் அதிர்ந்தன. பெண்ணின் ஆடை சரசரப்பு போன்றிருந்தது அது. சட்டென பரபரப்புடன் எழுந்து நின்றார். என்ன அது? அது மேரியா, எல்லென் நீயா?.. என இரகசியம் போல முணுமுணுத்தார்.
தெருவில் இருந்து யாரோ மாடியேறி வரும் ¢கனமான அதிர்வுகள். வெளிக் கதவு திறக்கிறது. பலவீனமான அவரது இதயம் இன்னும் பதறியதில் அப்படியே நாற்காலியில் திரும்பச் சரிந்தார்.
ஒரு மனிதன் உள்ளே வந்தான். ஏற்கனவே அவரிடம் வந்து போகிறவன் தான். அறை நடுவுக்கு வந்து ஒரு தீக்குச்சியைக் கிழித்தான் அவன். அதை அவன் அவர்முகத்துக்கு நேரே பிடித்தபடி சத்தங் கொடுத்தான். ஐயா. ஹ்ரும், என நாற்காலியை விட்டு அவர் எழுந்ததில் அவன் பதட்டப்பட்டான். அந்தத் தீக்குச்சி அப்படியே அவன் காலடியில் வீழ்ந்து மஙகலாய் அதன் ஒளி துடித்தது.
அந்த இளம் விவசாயியின் உறுதியான கால்கள் கனமான கட்டடத்தின் தூண்கள் போலிருந்தன. அவன் தவற விட்ட தீக்குச்சியின் ஜ்வாலை வெளிக் காற்றுக்குப் படபடத்து அடங்கியபோது எதிர் சுவரில் நிழல்கள் அலைக்கழிந்தன. டாக்டரின் குழம்பிய மன நிலையில் அது மேலும் மயக்கம் தந்தது. சுவரில் துடிக்கும் அந்த ஒளியின் படபடப்பு அவருக்கு முந்தையதொரு நிமிடத்தினை மனசில் எழுப்பியது. அவர் திருமணம் முடித்த முதல் வருடம். அது ஓர் கோடையின் மதியம். சாரட்டில் எல்லென் கூட அவர் ஊருக்குள் போயிருந்தார். வீட்டுக்கு சாமான்கள் சேர்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஒரு சம்சாரி வீட்டில் பழைய ஆடி பார்த்து வைத்திருந்தாள் இவள். அவர்கள் பயன்படுத்தாமல் வீட்டு ஷெட்டில் மாட்டி வைத்திருந்தார்கள். அதன் சட்டத்தின் அழகு போல எதுவோ இவளுக்குப் பிடித்திருந்தது. சரி எடுத்துக்கோங்க, என்று அந்த சம்சாரியின் மனைவியும் தந்து விட்டாள்.
வீடு திரும்பும் வழியில் அவள் அவரிடம் தான் முழுகாமல் இருப்பதைச் சொன்னாள். சட்டென உள்ளே சிலிர்த்தது அவருக்கு. அதுவரை அனுபவித்திராத உணர்வு. வண்டியை அவள் ஓட்டிவர அவர் முட்டிமீது தாங்கியபடி அந்த ஆடியைப் பிடித்து எடுத்து வந்தார். வயல்களைப் பார்த்தபடியே அவள் அந்தச் செய்தியைச் சொன்னாள்.
இந்த நோயுற்ற மனசிலும், இவ்வளவு காலமாய் அழுந்தப் பதிந்த காட்சி… சோளமும் ஓட்சும் விளைந்து கொண்டிருக்கும் வயலில் மாலை சூரியன் விழுந்து கொண்டிருக்கிறது. நீண்ட வயல்வெளி கருத்துக் கிடந்தது. அவ்வப்போது சில மரங்களின் ஊடாக வண்டி கடந்தாலும் மரங்களே இருட்டுருவங்களாய் நின்றன.
அவர் மடியில் வைத்திருந்த ஆடியில் விடைபெறும் சூரிய கிரணங்கள் பொன்மினுங்கலாய் வயல்களிலும் மரங்களிலும் சலனமிட்டன. இப்போது இந்த சம்சாரி தன் முன் வந்து நிற்கையில் அந்த ஒளிச் சலனங்களோடு மனம் குழப்பிக் கொண்டுவிட்டதாய் உணர்ந்தார். தன் கல்யாணம் பத்தியும், தன் வாழ்க்கையின் தோல்வி பத்தியும் அந்த இளம் சம்சாரி ஞாபகப் படுத்தி விட்டான். அந்த நேரம்… மனைவி வாழ்க்கையில் அடுத்து வரப்போகிற சுவாரஸ்யங்களைச் சொல்கிறாள், அவரோ தன் மனசில் என்ன எண்ணங்கள் ஓடின என்பதை வெளியே பேச முடியாமல், பேசாமல் அப்படியே மௌனம் காக்கிறார். என்னவோ தனக்குள்ளேயே சுருங்கிய ஒரு தன்மை. அப்ப நானே சொல்லிக் கொண்டேன்… வார்த்தைகள் இல்லாமலேயே அவள் என்னைப் புரிந்து கொண்டாள்… மேரி பத்தியும் இதே மாதிரிதான் நான் என் வாழ்க்கை பூராவிலும் எனக்குள் சொல்லி வநதிருக்கிறேன்… சொல்லாமலேயே அவர்கள் என்னை அறிந்து கொள்வார்கள். நான ¢ஒரு மடையன். கோழை. மட சாம்பிராணி. என்னைப் பத்தி எனக்கே கெத்து. கோழை நான்…
ஆ இன்னிக்கு ராத்திரி… நான் செய்வேன். ஐய இது என்னை சாவடிக்குது. என் பெண்ணோடு நான் இன்னிக்கு ராத்திரி மனம் விட்டுப் பேசுவேன்.. சத்தமாய்ச் சொன்னார் அவர். மனசில் பெண்ணின் உருவம். அவள் எதிரில் நிற்பது மாதிரி பாவனை வந்தது.
ஏ என்னாச்சி, என்று அந்த சம்சாரி கேட்டான். கையில் தொப்பியைப் பிடித்தபடி அவன் அவர்முன் நின்றிருந்தான். தான் வந்த காரணத்தை இன்னும் அவன் பேச ஆரம்பிக்கவில்லை.
எதிர் லாயத்தில் இருந்து தனது குதிரையை எடுத்துக் கொண்டார் டாக்டர். ஊருக்குள் அந்த சம்சாரியின் மனைவியை கவனிக்க என்று கிளம்பினார். அவளுக்கு பிரசவ வலி கண்டிருந்தது. முதல் குழந்தை. அவள் ஆளே ஒல்லி. இடுப்பும் ஒடுக்கமானது. ஆனால் குழந்தை நல்ல வளர்ச்சியுடன் பெரிதாய் இருந்தது. உடல் படபடப்போடு தான் ஆனாலும் மருத்துவர் அவள் அருகில் துணை யிருந்தார். உடம்பு முடிந்தும் முடியாமலும் அவர் அவளுக்கு வைத்திய ஆலோசனைகள் சொன்னார். அந்தப் பெண்ணோ பயந்திருந்தாள். முனகினாள். உடம்பைப் போட்டுத் திருகினாள். அவள் புருஷன் உள்ளே வருவதும் வெளியே போவதுமாய் இருந்தான். கூட ஒத்தாசை என்று பக்கத்து வீட்டுப் பெண்கள் ரெண்டு பேர் வந்து ஏவல்களுக்குக் காத்திருந்தார்கள். அவள் பிரசவம் ஒருவழியாக ஆகி டாக்டர் கிளம்பும் போது மணி பத்து தாண்டியாகி விட்டது.
சம்சாரி போய் அவரது குதிரையை அவிழ்த்து அவரிடம் கொண்டு வந்தான். டாக்டர் வீடு திரும்புகையில் ஒரு மாதிரி தெம்பே இல்லாதது போல் உணர்ந்தார். அதே சமயம் அலுப்பாகவும் இல்லை. இனி அவர் செய்யப் போகிற காரியம், பெண்ணிடம் மனம் விட்டுப் பேசுவது, எவ்வளவு எளிமையாகி விட்டது அது, என நினைத்துக் கொண்டார். அவர் வீடடையும் போது பெண் தூங்கிப் போயிருக்கலாம். எழுப்பினல் ஆச்சு. என் அலுவல் அறைக்கு அழைத்துப் பேசலாம். முழுக் கதையும் பேசிறலாம். என் கல்யாணத்தில் தொடங்கி, அது ஏமாற்றமாய் முடிந்ததையும் விளக்கி, ஆனால் அதில் அவர் ஆடிப் போய்விடவில்லை என்பதாகவும் பேசுவார். உனக்குத் தெரியுமா இவளே, என் எல்லென் கிட்ட அருமையானதும் அழகானதுமான ஒரு விஷயம் இருந்தது. அதை மேரிக்கு நான் புரிய வைக்க வேண்டும். அவளும் அழகாய் விகசித்துப் பிரகாசிக்க அது உதவும்… ஆமாம். எல்லாம் போட்டு உடைப்போம், என நினைக்கவே ரொம்ப உற்சாகமாய் இருந்தது.
லாயத்துக்கு வந்து கதவருகே குதிரையை நிறுத்தினார். மணி பதினொண்ணு. பார்னி ஸ்மித்ஃபீல்டும், டியூக் யேட்டரும், இன்னும் ரெண்டு பேருமாய் அங்கே அரட்டை யடித்தபடி இருந்தார்கள். பார்னி அவரது குதிரையை வாங்கிக்கொண்டு உள்ளே லாயத்தில் அதன் இடத்தில் கட்டப் போனான். அந்தக் கட்டடத்தின் சுவரில் லேசாய்ச் சாய்ந்தபடி டாக்டர் நின்றார்.
ஊரின் கூர்க்காவும் அங்கே கதவருகே இருந்தான். அப்போது டியூக் யேட்டரும் அவனும் எதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அதொண்ணும் அவர் கவனிக்கவில்லை. வார்த்தைகள் இங்கும் அங்குமாக அலைந்தன. கூர்க்காவின் கோப இரைச்சலைக் கண்டு டியூக்கின் பெருஞ்சிரிப்பு. அவர் தன்யோசனையாய் இருந்தார். சற்று உள் பதுக்கமாய் இருந்தார்.
பிரியமாய் அவர் ஒரு காரியம் செய்ய நினைத்தார். ஆனால் நினைவில் எட்டாததாய் இருந்தது இப்போது. அது அவர் மனைவி எல்லென் பற்றியதா, பெண் மேரி பற்றியதா என்பது கூட குழப்பமாகிப் போனது. அந்த ரெண்டு உருவங்களும் இப்போது திரும்ப ஒன்றுகலந்து குழம்பின. இப்போது மூணாவது உருவமும் மனசில் நிழலாடியது. அந்த பிரசவக்காரியின் முகம் அது. எதுவுமே தெளிவற்றிருந்தது.
மெல்ல தெருவைக் கடந்து தன் மாடிக்கு ஏறப் போனார். தெருவில் ஒரு கணம் அப்படியே நின்றார். எதையோ கொள்கையில்லாமல் வெறித்தார். பார்னி அவரது குதிரையை விட்டுவிட்டு லாயத்தின் கதவைச் சாத்தினான். கதவில் மாட்டியிருந்த லாந்தர் இங்கும் அங்குமாக ஆடியது. சுவர்ப் பக்கமாக நின்றபடி சண்டையிட்டுக் கொண்டிருந்த எல்லார் முகங்களிலும் உருவத்திலும் விநோத நிழலை மாற்றி மாற்றி வீசியது லாந்தர்.
அப்பா திரும்பி வர மேரி சன்னல் பக்கமாகப் பார்த்தபடி காத்திருந்தாள். கீழே டியூக் யேட்டர் தெருவில் என்னமோ பேசிக் கொண்டிருந்தாலும் அவளுக்குக் காதில் விழவில்லை. அவள் ரொம்ப தன் யோசனையாய் இருந்தாள்.
அவனைத் திரும்ப முதலில் இதே தெருவில் பார்த்த போது அவளுள் கோபம் சுர்ரென்று ஏறியது. அந்தப் பொட்டலில் அவளைப் பார்த்து ஒரு ஆம்பிளையின் அசட்டுச் துணிச்சலுடன் பல்லிளித்தபடி வந்தது ஞாபகம் வந்தது. அது மெல்ல மறைந்து இப்ப அவளுள் அப்பாவின் ஞாபகமே ஆக்கிரமித்திருந்தது. அவளது சின்ன வயசு ஞாபகம் ஒன்று இப்போது உள்ளே நிழலாலட்டம் போட்டது. அது ஒரு மே மாத மதியம். அவளுக்கு வயசு பதினைந்து. ஊருக்குள் போய்வரலாம் என்று அப்பா அவளைக் கூடக் கூப்பிட்டார். ஒரு பண்ணை வீட்டில் ஐந்து மைல் தொலைவில் யாரோ பெண்ணுக்கு உடல் சுகமில்லை.
நல்ல மழைபெய்து தெருவே கசகசவென்று கிடந்தது. அங்கே போய்ச் சேர இருட்டி விட்டது. சமையல் கூடத்துக்குள் சென்று குளிர்ந்து விரைத்த உணவை அங்கேயே வைத்துச் சாப்பிட்டார்கள். அன்றைக்கு என்னவோ அப்பா ரொம்ப இளமை உற்சாகமாய் இருந்தாப் போலிருந்தது. வரும் வழியிலேயே அவர் அவளோடு கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தார். அந்த வயசிலேயே மேரி உயரங் கொடுத்திருந்தாள். உடம்பும் திரள ஆரம்பித்திருந்தது. அந்த ஆறிப்போன உணவைச் சாப்பிட்ட பின் அவரும் அவளும் அந்த வீட்டைச் சுற்றி நடந்தார்கள்.
அவள் ஒடுக்கமான ரேழியில் உட்கார்ந்து கொண்டாள். அப்பா அவள் முன்னால் வந்து நின்றார். தன் கால் சராய் பைக்குள் கை விட்டார். தலையைத் தொங்கப் போட்டபடி ஹா ஹா என்று சிரித்தார். ”ஏ நீ என்னமா வளர்ந்துகிட்டு வரே. கூடிய சீக்கிரம் நீ பெண்பிள்ளையா உணர ஆரம்பிச்சிருவேன்றதே வேடிக்கையா இருக்கு” என்றார். ”நீ பெரிய பெண்ணா ஆனால் என்னவெல்லாம் நடக்கும்னு நினைக்கிறாய்? சொல்லு பாப்பம்… எப்பிடியெல்லாம் உன் வாழ்க்கை அமையும்னு யோசிக்கிறாய்? உனக்கு என்னவெல்லாம் நடக்கணும்னு ஆசைப்படுகிறாய்?”
அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார் அப்பா. அப்படியே அவளை அணைத்துக் கொள்ளப் போகிறார் என அவள் நினைத்தாள். ஆனால் அவர் சட்டென எழுந்துகொண்டு வீட்டுக்குள்ளே போய்விட்டார். மேரி அந்த இருளில் தனியே விடப்பட்டாள்.
அப்பா நெருங்கி வந்த கணங்கள். அப்பா அமைதியாய் ஆனால் தனக்குள் அவளை நெருங்கிவர முயற்சி செய்கிறதாகவே அவள் உணர்ந்தாள். அப்பா அல்ல, அவளே கூட இப்படியாய் அவர்களுள் நிலவும் இடைவெளிக்குக் காரணமாக இருக்கலாம், என்று பட்டது அவளுக்கு. பாலத்துப் பக்கம் பார்த்தாளே, அந்தத் தொழிலாளி, அவர் அப்பாவை அப்படி ஒதுக்கமான ஆளாய்ப் பார்க்கவில்லையே. என்? ஏன்னால், அந்தத் தொழிலாளி அவரே இதமான தன்மையான ஆள். தனது உடல்நலக் குறைவு நேரத்திலும், கஷ்ட காலத்திலும் தன்மேல் பிரியம் காட்டுகிற மனுசாளிடத்தில் பிரியம் செலுத்தத் தெரிஞ்சவர் அவர்… அந்தத் தொழிலாளி.
அப்பா சொல்லி யிருந்தார். அந்தத் தொழிலாளி, அவருக்கு அப்பா ஸ்தானம்னால் என்னன்னு தெரியுது. அந்தப் பையன்களும் ஓடைப்க்கம் இருந்து அவளிடம் எத்தனை பிரியமாய் விடை கொடுத்து அனுப்பினார்கள். அவளைப் பிரிந்து அவள் இருட்டில் வந்து கலந்தாள்… அவங்க அப்பா அப்பாவா இருந்தார் என்றால், அந்தப் பிள்ளைங்கள் அவரோட அப்பா அப்பான்னு அப்பிடி ஒட்டிக் கொண்டதாகக் கூட இருக்கலாம், என நினைத்துக் கொண்டாள். தன் மேலேயே வெட்கம் வந்தது அவளுக்கு. நானும் இனி அப்பாவிடம் ஒட்டுதல் காட்டுவேன்… இந்த ராத்திரியில் இருந்தே…
அந்த ராத்திரியில் அவர்கள் திரும்ப¤வருகிறார்கள். அப்போது இன்னொரு தடவை அப்பா அவர்களிடையே இருந்த சுவரான மௌனத்தைச் சுத்தியலால் அடித்துடைக்க முயன்று தோற்றார். பெய்த மழைக்கு ஓடைகள் பெருகி ஊடே கடக்கவே சிரமமாய் இருந்தது. கிட்டத்தட்ட ஊரை எட்டியிருந்தார்கள். ஒரு மரப்பாலத்தில் டாக்டர் குதிரையை நிறுத்தினார். குதிரை பயத்தில் சிறிது தடுமாறியது. ஆனால் டாக்டர் அதன் கயிறுகளை இறுகப் பற்றியிருந்தார். அதனோடு எதாவது பேசவும் செய்தார். பாலத்தின் கீழே புது வெள்ளம் ஹுங்காரமிட்டு இரைந்தோடியது. தெருவின் கரைகளில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அந்நேரம் மேகங்களில் இருந்து நிலா வெளியே வந்திருதந்து. காற்று புறப்பட்டு தேங்கிய தண்ணீரில் சிறு அலைகளை ஏற்படுத்தியது. தேங்கிய குட்டையில் ஒளி நாட்டியமாடுவது போல் மினுங்கியது.
”நான் என்னையும் உங்க அம்மாவையும் பத்தி இப்ப பேசப் போறேன்…” அவர் குரல் ரகசியம் போல ஒலித்தது. ஆனால் அந்த நேரத்தில் மரப் பாலத்தில் க்ரீக் என எதோ முறிகிறாப் போல சத்தம. குதிரை முன்னே தாவியது. அப்பா அதைச் சமாளித்து நிலைக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது… அதற்குள் ஊரின் தெருக்களுக்கு வந்திருந்தார்கள். அப்பா திரும்ப தன்னுள் அமைதியாய் அடங்கி யிருந்தார்.
ஜன்னல் வழியே மேரி பார்த்தாள். அப்பா குதிரையில் அந்தத் தெருவுக்குள் நுழைவது தெரிந்தது. குதிரையை லாயத்தில் விட்டானதும், அவர் பழக்கமே அப்படி, உடனே அவர் மாடிக்கு வந்துவிடவில்லை. எதிர்ப்பக்க லாயத்தின் கதவருகிலேயே கொஞ்சம் நின்றார். தெருவைக் கடந்தார். இருட்டுக்குள் போய்விட்டார். அதற்குமேல் இங்கிருந்து தெரியவில்லை.
அங்க இருந்த ரெண்டு பேரும் ஒரு ரெண்டுமணி நேரமாய் வில்லங்கமில்லாமல் எதோ வாயாடிக் கொண்டிருந்தார்கள். ஊரின் கூர்க்கா ஜாக் ஃபிஷரோடு சிறு வாக்குவாதம் கிளம்பியது. யுத்தம் ஒன்றில் அவன் சண்டை போட்ட கதையை அவன் சொல்லிக் கொண்டிருந்தான். டியூக் யேட்டர் அதை நக்கல் பண்ணிப் பேச ஆரம்பித்தான். கூர்க்காவுக்குக் கோபம் வந்துவிட்டது. கைகுச்சியை உயர்த்தி ஆட்டியாட்டி ஆவேசப்பட்டான். அதை கண்டுக்கவே கண்டுக்காமல் டியூக் மேலடி அடித்தான் ”யார் கூடடா நீ சண்டை போடப்போறே? எவனாவது ஏப்பை சாப்பையா உனக்குக் கிடைச்சானா? அவன்கூட சண்டை போட்டு அவன் திங்க வெச்சிருந்ததைப் பிடுங்கித் தின்னுருப்பே… நானும் அப்பிடித்தான்ங்கறேன்… ஹி ஹி.” டியூக் யேட்டர் பெரிதாய் சத்தமாய் இளித்தான். ¦நீ அப்பிடியான தின்னிமாடுதான்… அது என்னமோ வாஸ்தவம்.” டியூக்கை எகிறியடிக்க முடியாமல் குமுறலாய் கூர்க்கா பதில் சொன்னான்.
அந்தக் கூட்டத்தின் பகிடியைத் தாள முடியாமல் அந்த பழைய சிப்பாய் விலகிப் போனான். பார்னி ஸ்மித்ஃபீல்ட் குதிரையை உள்ளே விட்டுவிட்டு லாயத்தின் கதவைச் சாத்தினான். கதவின் லாந்தர் முன்னும் பின்னுமாய் அசைந்தாடியது. டாக்டர் கோச்ரன் அப்படியே தெருவில் நின்றவர் திரும்ப தெருவைக் கடக்க நகர்ந்தார். மாடிப்படியின் முதல் படியை அவர் எட்டவும் திரும்பி அந்த சனங்களைப் பார்த்துக் கத்தினார். ”நல் இரவு.” உற்சாகமாய்த் தான் சொன்னார்.
கோடையின் காற்று அவள் சிகையைக் கலைத்து கன்னத்தில் வருடியது. இருட்டில் யாரோ தன்னைத் தொட்டாப்போல அவள் துணுக்குற்று சட்டென எழுந்துகொண்டாள். ஒரு நூறு தடவையாவது அப்பா குதிரைப் பயணம் போய்த் திரும்ப வருவதைக் கண்டிருக்கிறாள். அந்த வெட்டி வீரமணிகளிடம் ஒருநாளும் அவர் பேசியதே இல்லை. அவர் விடைகொடுத்து விட்டதால் அப்பா மாத்திரம் தான் மாடியேறி வருவார் என்று அவளுள் சிறு திருப்தி.
மர மாடிப்படிகள் அதிர்ந்து முனங்கின. அப்பாவின் அந்த மருந்துப் பெட்டி, அதை அவர் படியில் வைக்கும் சத்தம். உற்சாகத்துக்குக் குறைவில்லை என்றாலும் மனசில் ஒரு படபடப்பு. இருட்டில் அவர் வந்து நிற்கும் உருவத்தை மனசால் வரைந்தாள் மேரி. ”பிரசவம் ஆச்சி…” என்கிற அவரது குரல் மட்டும் மேலே வந்தது. ”யார் பிள்ளை பெற்றது? அது எல்லெனா? என் குட்டி மேரி, அவள்தானோ?”
அவரிடம் இருந்து வார்த்தைகள் வரிசையிட்டன, ஒரு குரோதத்துடன். ”யாருக்குக் குழந்தை? எனக்குத் தெரிஞ்சாகணும்… யார், பிரசவித்தது யார்? இந்த வாழ்க்கையின் சிக்கல்கள்… இதில் குழந்தைகள் ஏன் பிறந்து தொலைக்குது?” அவர் கேட்டார்.
அவரது சிரிப்பு கேட்டது. இங்கே மகள் அப்படியே குறுகி குனிந்து நாற்காலியைப் பற்றிக்கொண்டாள். ”ஒரு குழந்தை பிறந்திருக்கிறது…” என்றார் அவர் மீண்டும். ”ஹா ஹா, என் மேல மரணம் ஏறி அழுத்திட்டிருக்கு. வேடிக்கை, நான் ஒரு குழந்தை வெளிவர பிரசவம் பார்க்கிறேன்.”
டாக்டர் கோச்ரன் அந்த மரப்படியை அழுத்தி மிதித்தார். ”அங்கே அந்த உயிர் வெளிவந்திட்டது. எனக்கு இந்தக் கால்… மரத்து உயரற்றுப் போச்சு… ஹா” என்றார். ”அப்ப அவள் போராடினாள், இப்ப நான் இங்க அல்லாடறேன்.”
இன்னொரு முறை படி அதிர்ந்தது. பிறகு அமைதி. கீழே தெருவில் இருந்து டியூக் யேட்டரின் அதிரடிச் சிரிப்பு.
டாக்டர் கோச்ரன் அப்படியே பின்பக்கமாய் ஒடுக்கமான படிகளில் விழுந்தார். ஒரு முனகல் இல்லை. படிகளில் அவரது ஷுக்கள் போடும் சத்தம். மிக மெல்லிசாய் உடல் சரியும் சத்தம்.
மேரி நாற்காலியை விட்டு அசையவில்லை. கண்ணை மூடியபடி அவள் காத்திருந்தாள். அவள் இதயம் முட்டி மோதியது. அப்படியே ரத்தம் வத்திப் போனாப் போலிருந்தது. அவள் உடம்பெங்கும் குறுகுறுத்தது, பூச்சிகள் ஓடினாப் போல.
டியூக் யேட்டர் தான் இறந்த மனிதரை மாடிக்குத் தூக்கி வந்தது. அலுவல் அறைக்குப் பின்னால் இருந்த ஒரு அறைப் படுக்கையில் அதைக் கிடத்தினான். கீழே இவனுடன் வாயாடிக் கொண்டிருந்த ஒருத்தன் கை பதற கூட வந்தான். கையில் அவன் சிகெரெட் பற்ற வைத்திருந்ததையே மறந்திருந்தான். அதன் நெருப்பு அந்த இருளில் மேலும் கீழுமாய் மினுங்கிக் கொண்டிருந்தது.
இதன் ஆங்கில மூலத்துக்கு: “Unlighted Lamps” by Sherwood Anderson