ராஜம் கிருஷ்ணன் – தமிழ் இலக்கியப்பாதையில் பதிந்த அடிகள்…

Writer_rajam_krishnan_1

ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் திரு யு ஆர் அனந்தமூர்த்தி காலம் சென்றபோது தற்செயலாக நான் மங்களூரில் – அதிலும் அவர் பிறந்த ஊரான உடுப்பியில் இருந்தேன். அப்போது வெளிவந்த உள்ளூர் நாளிதழ்கள்-எல்லாவற்றிலுமே  முதல் பக்கத்தில் வெளியான படமும் தலைப்புச் செய்தியும் அனந்தமூர்த்தி குறித்தவைதான். மதிப்புக்குரிய தன் மண்ணின் எழுத்தாளருக்காக ஒரு நாள் அரசு விடுமுறையும் அறிவித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக்கொண்டது கர்நாடக அரசு .

அனந்தமூர்த்திக்குக் கொஞ்சமும் சளைக்காத சிறப்புக்களையும் விருதுகளையும் [ஞானபீடம் ஒன்று தவிர] கொண்டிருந்த தமிழ் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அண்மையில் காலமானபோது தமிழகத்தில் காணக்கிடைத்த மிகக்குறைவான எதிர்வினைகளே மேற்குறித்த தமிழக – கர்நாடக ஒப்பீட்டைச் செய்யத் தூண்டுபவை.  இத்தனைக்கும் தமிழ்நாட்டில் ஆண்ட இரு முதலமைச்சர்களும் ராஜம் கிருஷ்ணனை அங்கீகரித்துப் பெருமைப்படுத்தியவர்கள்தான். ஒருவர் தன் ஆட்சிக்காலத்தில் ராஜம் கிருஷ்ணனுக்கு திரு வி க விருது அளித்தார்; மற்றொருவர், ராஜம் கிருஷ்ணனின் படைப்புக்களை நாட்டுடைமையாக்கினார். ஆனாலும் எந்தத் தலைவரிடமிருந்தும் இந்த இலக்கியவாதியின் மரணத்துக்கான இரங்கல் செய்தி இல்லை.

அரசியல்வாதிகள் அப்படி என்றால் நாளிதழ் போன்ற அச்சு ஊடகங்கள், திரைக்கலைஞர்களின் மறைவுக்கு ஒதுக்கும் மிகுதியான இடத்தைக்கூட ராஜம் கிருஷ்ணனின் மறைவுச்செய்திக்கு ஒதுக்க முன் வரவில்லை என்பது வேதனையளிப்பது. அச்சு ஊடகங்களிலும் இணைய அஞ்சலிகளிலும் வெளியான ஒரு சில கட்டுரைகளிலும் கூட ராஜம் கிருஷ்ணனின் இறுதிக்காலத் துன்பங்கள் முன்னிறுத்தப்படும் அளவுக்கு அவரது வாழ்நாள் சாதனைகள் அதிகமாக நினைவு கூறப் படுவதில்லை.

முதுமையில் வஞ்சனைக்கு ஆளாகி வறுமையும் நோயும் பீடித்த வாழ்நிலை அமைந்து விடும்போது அறிஞர்களும் மேதைகளும் கூடக் குழந்தைகளாகிப் போய் விடுவது இயல்பானதே.. ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு நேர்ந்ததும் அது போன்றதொரு சூழல்தான்.அது அவர்களின் அந்திம வாழ்வின் ஒரு சிறிய காலகட்டம் மட்டுமே. அப்போதும் கூட அவரிடம் அன்பு கொண்ட பலர் அவருக்கு  உற்ற துணையாக இருந்திருக்கிறார்கள்; முதுமையின் வெறுமை,தனிமை இவற்றைத் தவிர அவரைச் சுற்றியிருந்த மருத்துவ மனைச் செவிலிகள் உட்பட அவரது ‘தன்மதிப்பு’  பழுதுபடாமல்தான் அவரைப் பேணியிருக்கிறார்கள்.தனது இறுதி ஆண்டுகளில் அவர் எழுதிய அனுபவத் தொகுப்பான ‘காலம்’என்ற நூலே அதற்கான ஆவணம். தன்னிடம் அன்பு காட்டியவர்களுக்கும், தான் தங்கியிருந்த  மருத்துவ மனைக்கும் தன் நன்றியை செலுத்தும் முறையில் ‘என்பும் உரிய’ராய்த் தன் உடலை தானமாய் வழங்கிச் சென்றிருக்கும் ராஜம் கிருஷ்ணனின் வாழ்வு ஒரு நிறை வாழ்வு மட்டுமே.

பெண்கள் மிகக்குறைவாகவே எழுதிக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தமிழ்ப்புனைவெழுத்தில் கால் பதித்து வழக்கமான வணிகப்போக்குக்கு மாறான தீவிரம் கொண்ட சமூக விமரிசனங்களாகத் தன் நாவல்களை உருவாக்கியவர் ராஜம் கிருஷ்ணன் . பெண் எழுத்தாளர்களில் அவரைப்போல அகலவும் ஆழவும் உழுதிருப்பவர்கள் வேறு எவரும் இல்லை. தன் உச்சபட்சப்படைப்பின் காலகட்டத்திலேயே சாகித்திய அகாதமி,பாஷா பரிஷத்,நேருசோவியத் லேண்ட்,இலக்கிய சிந்தனை போன்ற நிறைவான பல அங்கீகாரங்களைப்பெறும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்ற பெண் எழுத்தாளரும் அவர் ஒருவர் மட்டுமே.

பொறியாளராகப் பணி புரிந்த தன் கணவரின் அலுவல் காரணமாக இந்தியாவின் பல  பகுதிகளிலும் வாழ நேரிட்டபோது   ஆங்காங்கே. நிலவும் பண்பாடுகளையும் ,அரசியல்,சமூகச். சிக்கல்களையும் ஆழமாக உள்வாங்கிக்கொண்டு அவற்றைத் தன் படைப்புகளில் எதிரொலிக்க முயன்றதால் தொடர்ந்து வெவ்வேறு களப்பின்னணி கொண்ட நாவல்கள் [குறிஞ்சித் தேன்’- படகர் வாழ்க்கை, ‘முள்ளும் மலர்ந்தது’ -சம்பல் கொள்ளைக்காரர்களின் வாழ்வுப்பின்னணி] பலவும் அவரிடமிருந்து உருப்பெற அந்த அனுபவமே அவருக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது.

தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் நிலை குறித்த ’கூட்டுக் குஞ்சுகள்’, உப்பளத் தொழிலாளர்களின் அவலம் கூறும் ’கரிப்பு மணிகள்’ ஆகிய இரு நாவல்களையும் படிக்கும்போது அன்றாட வாழ்வில் மிக எளிதாகப் பயன்படுத்தும் தீப்பெட்டிக்கும் உப்புக்கும் பின்னால் இருக்கும் கண்ணீர்க்கதைகள் நம்மை ஆழ்ந்த துயரத்துக்குள் கொண்டு சென்றுவிடும் வல்லமை கொண்டவை; தொடர்ந்து அந்தப் பொருட்களைக் கையாளும்போதெல்லாம் ஒரு குற்ற உணர்வையும் தயக்கத்தையும்  நம்முள் கிளர்த்துபவை.

மார்க்சியப் பார்வை கொண்டிருந்த ராஜம் கிருஷ்ணனைப்போல் உழைக்கும் வர்க்கத்தினர் வாழ்நிலையை மெய்யான கரிசனத்தோடு பதிவு செய்திருக்கும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை குறைவானதே. அது போலவே அரசியல் போராட்டங்களில் பெண்களின்  பங்களிப்பை வலியுறுத்தும் நாவல்களை அதிகமாக எழுதியவரும் அவர் ஒருவர்தான்.

அவருக்கு சாகித்தியஅகாதமி விருதைப் பெற்றுத்தந்த ‘வேருக்குநீர்’ [காங்கிரஸ் பின்புலம்], ”ரோஜா இதழ்கள்’ [தமிழக அரசியலில்  திராவிடக்கட்சிகளின் பின்புலம்], கோவா விடுதலைப் போராட்டம் பற்றிய ‘வளைக்கரம்’ எனப் பல நாவல்களும் இந்தப்போக்கில் அமைந்தவையே.  கம்யூனிச இயக்கத்தோடு தன்னைப்பிணைத்துக்கொண்ட மணலூர் மணியம்மையின் உண்மை வாழ்வைப்  ‘பாதையில் பதிந்த அடிகள்’என்ற தலைப்பில் புனைவாக்கியவர் அவர்.

கள ஆய்வு செய்து தரவுகளைத் திரட்டி ஒரு ஆய்வேட்டைப்போன்ற விரிவான ஆயத்தங்களுடன் நாவல்களைப்படைப்பது ராஜம் கிருஷ்ணனின் தனித்துவம் என்று கூறலாமே தவிர அந்த ஒரு எல்லைக்குள் மட்டுமே அவரது ஆளுமையையும் ,அவரது எழுத்துக்களையும் முற்றாகவரையறை செய்து விட முடியாது.

வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்விடுதலைப்போராளியாகவே வாழ்ந்தவர் ராஜம் கிருஷ்ணன்.  அது,அவரது குறிப்பிடத்தக்க மற்றுமொரு சிறப்பான முகம். பெண்ணினம் சார்ந்த பிரச்சினைகளில் ஆக்க பூர்வமான – தீர்வை நோக்கிய ஈடுபாடு காட்டி வந்த ராஜம் கிருஷ்ணன் ,’காலந்தோறும் பெண்’ ,’காலந்தோறும் பெண்மை’, இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை’ ,”பெண் விடுதலை’ போன்ற ஆழமான கட்டுரை நூல்கள் பலவற்றை எழுதியிருக்கிறார் .தமது சிறுகதைகள் , மற்றும் நாவல்களிலும் அந்தக்கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அலுவல் மகளிர் சிக்கலைப்பேசும் ‘விலங்குகள்’ , ’ஓசைகள் அடங்கிய பிறகு’ , பெண் சிசுக்கொலை பற்றிய உசிலம்பட்டிப்பின்னணி கொண்ட‘மண்ணகத்துப்பூந்துளிகள்’ , தேவதாசி முறையிலிருந்து விடுபட எண்ணி அதிலிருந்து வெளிவந்து தனக்கென ஒரு வாழ்வை அமைத்துக்கொள்ளும் பெண்ணைப்பற்றிப்பேசும் ‘மானுடத்தின் மகரந்தங்கள்’ , இதிகாச மறு ஆக்கமாக சீதையின் வாழ்வை மீட்டுருவாக்கிய  ‘வன தேவியின் மைந்தர்கள்’ ஆகிய பெண் சார்ந்த இவரது புனைவுகளைப்பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம் என்றபோதும் அவற்றுள் மிக முக்கியமானதொரு படைப்பு அவரது ’வீடு’.

‘’இந்த நாவலுக்கு முன்னுரை தேவையில்லை என்று நினைக்கிறேன்’’

என்ற அவரது சிறு குறிப்போடு வெளியிடப்பட்ட அவரது ’’வீடு’’  நாவலில் – தன் ஐம்பதாவது வயதில் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கும் நடுத்தர வர்க்கத்துப் பெண் ஒருத்தியின் அக  புற போராட்டங்களைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார் அவர். இந்திய மரபில் பெண் விடுதலை என்பது எத்தனை போராட்டங்களுக்குப் பிறகு சாத்தியமாகக் கூடியது என்பதை மிக நேர்மையாகவும் சரியாகவும் காட்டிய நாவல் அது என்று அந்த நாவலை மதிப்பீடு செய்திருந்தார் ஈழத் தமிழ்த் திறனாய்வாளரான கா.சிவத்தம்பி. ஐரோப்பாவில் பல அதிர்வுகளை ஏற்படுத்திய  இப்சனின் பொம்மை வீட்டோடு [ DOLL’S HOUSE ] ஒப்பிடுகையில் அதைப்போன்ற வீரியம் ‘வீடு’ நாவலுக்கும்  இருந்தபோதும் தமிழ் வாசககர்களுக்கு நடுவே அத்தகையதொரு அதிர்வை அது உருவாக்காமல் போனதற்கு வாசகப்பிழையே காரணம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

பெண்ணினம் சார்ந்த பிரச்சினைகளில் ஆக்க பூர்வமான – தீர்வை நோக்கிய ஈடுபாடு காட்டி வந்த ராஜம் கிருஷ்ணன், பெண்விடுதலை இயக்கங்கள் பலவற்றிலும் நேரடியாகவே பங்கேற்றிருக்கிறார்.; போராடியும் இருக்கிறார்.

தமிழ் இலக்கியமும் தமிழ்ச்சமூகமும் காலத்துக்கும் மறக்க முடியாத இரண்டு சம்பவங்களை இங்கே எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கக்கூடும்.

பிரபல எழுத்தாளர் தி. ஜானகிராமனின் ‘சக்தி வைத்தியம்’என்னும் சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது; அந்தப்படைப்பின் சில பகுதிகள் பெண்ணை மலினப்படுத்தும் கருத்தியல் கொண்டதாக இருப்பதாக  ராஜம் கிருஷ்ணன் கருதியதால் அந்த நூல் விருது பெறுவதை எதிர்த்துத் தன் எதிர்ப்புக்குரலைப்பதிவு செய்ய அவர் தவறவில்லை.. பிற்போக்கான கருத்து வெளிப்பாடுகள் எங்கிருந்து வந்தபோதும் அவற்றைத் தீவிரமாக எதிர்க்கும் நிலைப்பாடு அவருடையது. தினமணி ’97 தீபாவளி மலரில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் , விதவைப் பெண்’ணைப்பற்றி ‘ஒன்றும் விளையாத தரிசு நிலம்’ என்று கருத்து வெளியி ட்டபோது அதைக் கடுமையாக விமரிசித்து ‘தரிசுக்கோட்பாடு’என்ற தலைப்பில்  ராஜம் கிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதியதும்  தினமணி நடுப்பக்கத்திலேயே அது வெளியானதும் வரலாற்று நிகழ்வுகளாகப் பதிவு பெற்ற மறக்க முடியாத நிகழ்வுகள்.அவரது உச்சபட்சத் துணிவை உரக்கச்சொல்லும் இன்னொரு சம்பவம் அது..

டாக்டர் ரங்காச்சாரி , பாரதி [பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி] ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களும் இவரது ஆக்கத்தில் உருவாகியிருக்கின்றன.

தமிழ் இலக்கியத்தின் பல களங்களிலும் தமிழ்ச்சமூகத்தின் பல தளங்களிலும் அழுத்தமாய்ச் சுவடு பதித்திருக்கும் காலடிகள் ராஜம் கிருஷ்ணனுடையவை. வீடுகளும்….கூடுகளும் பறிக்கப்பட்ட மனுஷியாய் மட்டுமே அவரைக் கண்டு கழிவிரக்கம் கொள்வதைப்போன்ற அபத்தம் வேறெதுவும் இல்லை.செங்கல்லாலும் சிமிண்டாலும் கட்டிய ஸ்தூலமான வீட்டை அவர் இழந்திருக்கலாம். தன் எழுத்துக்களால்… உறுதியான தன் பெண்ணியச்சிந்தனைகளால் அவர் கட்டி எழுப்பியிருக்கும் ‘வீடு’ நாவலும் அவரது பிற ஆக்கங்களும் அவரை என்றென்றைக்குமாய் சாஸ்வதப்படுத்திக்கொண்டிருக்கும்.