ஷார்லட் ப்ராண்டியும் ராபர்ட் சௌதியும் எழுதிக் கொண்ட கடிதங்கள்

‘இலக்கியம் பெண்களுக்கான துறை அல்ல. அவ்வாறு இருக்கவும் இயலாது. ‘

                                                                                                                                              — ராபர்ட் சௌதி

இன்று பெண் எழுத்தாளர்களைப் பற்றி இலக்கிய விமர்சன நோக்கில் எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்கு சில ‘பெண் எழுத்தாளர்களே’ எழுதி வரும் எதிர்வினைகளைப் பார்க்கும் பொழுது, மேற்கோள் காட்டப்பட்டுள்ள ‘குற்றச்சாட்டிற்கு’ ஆளான ஒரு பெண் எழுத்தாளர் நடத்திய கடிதப்பரிமாற்றம் என் நினைவிற்கு வருகிறது.
ராபர்ட் சௌதி (Robert Southey) என்பவர் ஆங்கிலக்கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் மட்டுமன்றி அரசவைக் கவிஞர் (பொயெட் லாரியேட்- Poet Laureate) என்ற பதவியையும் தாங்கியவர். பிற்காலத்தில் தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக அறியப்பட்ட ஷார்லட் ப்ராணடீ (Charlotte Bronte) என்பவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் மேற்குறிப்பிட்டபடி எழுதியுள்ளார்.
ராபர்ட் சௌதியின் அந்தக் ‘குற்றச்சாட்டு’ ஷார்லட் ப்ராண்டீயின் மனதை எவ்வாறு புண்படுத்தியிருக்க வேண்டும்? ஆனால், அவ்வாறில்லாமல் அந்த இளங்கவிஞர் தன்னைப் பற்றின விமர்சனத்தில் உள்ள உண்மையான பொருளை உணர்ந்து மேலும் அறிவுசார்ந்த உரையாடல்களைத் தொடர்ந்தது அந்த இளம் வயதிலும் அவருக்கிருந்த அறிவு முதிர்ச்சியைக் காண்பிக்கிறது. இத்தகைய அர்த்தமுள்ள கருத்துப் பரிமாற்றங்கள் எத்தகைய இலக்கியச் சூழலில் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் எப்படி விமரிசனங்களை அறிவு பூர்வமாக எதிர் கொண்டார்கள் என்பதையும் காட்டுகிறது.
robert-southey-charlotte-bronte
அத்தகைய அறிவு பூர்வமான ஒரு சூழ்நிலையே நல்ல இலக்கியத்தைப் படைக்கவும், ஊக்குவிக்கக் கூடியதாகவும் அமையும். இன்று நம்முடைய இலக்கியச் சூழ்நிலையோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் எத்தகைய இரைச்சல் மிகுந்த சூழலில் வாழ்கிறோம் என்று மிக நன்றாகவே புரிகிறது. அந்தக் கால கட்டத்தின் வாழ்க்கை முறையினை ஒற்றி பெண்களின் கடமைகள் என்று சௌதி சொல்லுவதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அத்தகைய கருத்து எவ்வாறு அறிவில் சிறந்த ஒரு பெண் எழுத்தாளரால் கண்ணியமாக மட்டுமல்லாமல் தெளிந்த நோக்குடனும் புரிந்து கொள்ளப்பட்டது என்பதைச் சுட்டவே எனக்குத் தோன்றுகிறது.
சுவையான அந்த கருத்துப் பரிமாற்றத்தினை என்னால் முடிந்த அளவிற்கு மொழி பெயர்த்துள்ளேன். வாசகர்கள் நான் சொல்ல வந்ததை புரிந்து கொண்டால் அக்கடிதங்களை எழுதிய அந்த இலக்கிய கர்த்தாக்களுக்குப் பெருமை சேர்த்ததாக நான் கருதுவேன்.

oOo

Robert Southey to Charlotte Brontë
Keswick, March, 1837.

rsமாடம்,
நீங்கள் எனக்கு டிசம்பர் 29ல் எழுதிய கடிதத்திற்குப் பதில் கடிதம் வராததில் ஏமாற்றமடைந்திருப்பீர்கள். அப்பொழுது நான் கார்ன்வால் எல்லைப் பகுதியில் இருந்தேன். என் கையில் கடிதம் கிடைக்கும் பொழுது நான் ஹாம்ப்ஷயரில் இருந்தேன்.வேலை நிமித்தமாகப் பல இடங்களுக்குச் செல்ல வேண்டியும் லண்டனில் மூன்று வாரங்கள் தங்க வேண்டியும் ஆகிவிட்டதால் உங்களுக்கு உடனே பதில் அனுப்ப முடியவில்லை. தங்களை அவமானப்படுத்தவேண்டுமென்றோ, தங்கள் கருத்துக்களை அலட்சியப்படுத்தவேண்டுமேன்றோ தாமதிக்கவில்லை. உங்களுக்குப் பதில் அளிப்பது அவ்வளவு எளிதான காரியமாகத் தோன்றவில்லை. ஏனெனில் உங்களுடைய இளமைக்கே உரிய இலக்கிய ஆர்வத்தைக் குறைக்கும் விதமாக பதிலளிப்பது மிகுந்த தயக்கத்தை தோற்றுவித்தது.
கையொப்பம் வேறு பெயரில் இருப்பதாக எனக்குத் தோன்றினாலும் உங்களின் கண்ணியமான கடிதத்தின் மூலம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை கணிக்க முடிகிறது. உங்கள் கடிதமும், கவிதைகளும் ஒரே தரத்தில் அமைந்திருந்தததையும், அவை எவ்வாறான மனநிலையில் இருந்து எழுதப்பட்டவை என்பதையும் அறிந்து கொண்டேன். நீங்கள் படித்த என்னுடைய படைப்புகளின் மூலம் என்னைப் பற்றி ஓரளவு அறிந்து கொண்டிருப்பீர்கள். என்னுடன் நேரில் பழகியிருந்தால் வயோதிகத்தில் மாறும் நம்முடைய நம்பிக்கைகளையும் ஆசைகளையும் புரிந்து கொண்டு உங்களுடைய அதீத ஆர்வத்தை மட்டுப்படுத்தி இருப்பீர்கள். இவ்வாறு கூறுவதால் வாழ்க்கையில் திருப்தி அடையாத ஒருவனாகவோ, விரக்தியடைந்தவனாகவோ என்னை எண்ணி விட வேண்டாம்.
உங்களுடைய படைப்புக்களைப் பற்றிய என்னுடைய கணிப்புகளைக் கேட்டுள்ளீர்கள்.ஆனால், என்னால் கணிப்புகளை விட அறிவுரைகளையே அதிகமாகக் கூற முடியும் என்று எண்ணுகிறேன். உங்கள் எழுத்துக்களில் ஓர்ட்ஸ்ஒர்த் (Wordsworth) கூறும் ‘கவித்திறன்’ மிக நன்றாகவே அமைந்துள்ளது. இது ஒன்றும் அரிய விஷயம் இல்லை என்று கூறுவதால் அத்தகைய கவித்திறனை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இன்று பல நல்ல கவிதைப் புத்தகங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. மிகவும் குறைவாகவே வாசகர்கள் கவனத்தை கவர்ந்து வரும் அப்புத்தகங்கள் அரை நூற்றாண்டுகளுக்கு முன் பிரசுரிக்கப்பட்டிருந்தால் நல்ல வரவேற்பை பெற்றிருக்கக் கூடும். ஆகையால் புத்தகங்கள் மூலமாக பிரபலமாக வேண்டுமென்று எண்ணுவோர் ஏமாற்றத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்.
உண்மையாகவே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் பிரபலமாவதற்காக உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது. நான் இலக்கியத்தை என்னுடைய முழு நேரத்தொழிலாக எடுத்துக் கொண்டு வாழ்கையை அதற்காகவே அர்ப்பணித்து வந்தாலும், அப்படிப்பட்ட முடிவினை ஒரு நாளும் நினைத்து வருந்தியவனாக இல்லாவிட்டாலும் , இத்துறைக்கு வர எண்ணி என்னிடம் உத்தேசம் கேட்கும் ஒவ்வொரு இளைஞரிடமும் அவர்கள் எதிர் கொள்ளக்கூடிய அபாயங்களைக் கூறி நல்வழிப்படுத்துவதையும் என்னுடைய கடமையாக நினைக்கிறேன்.
பெண்களுக்கு இவ்வித எச்சரிக்கைள், அறிவுரைகள் தேவையில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு விதத்தில் அது உண்மையாகவும் கூட இருக்கலாம். ஆனால், உள்ளார்ந்த அன்புடன் ஒன்றை எச்சரிக்க விரும்புகிறேன். கற்பனை உலகில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது ஒரு குழப்பமான மனநிலையில் உங்களை அது கொண்டு சேர்த்து விடலாம். அப்பொழுது இந்த உலகமே அர்த்தமில்லாததாகவும் நீங்கள் அதற்கு ஒவ்வாதவராகவும் உங்களை எண்ண வைத்து விடும். இலக்கியம் பெண்களுக்கான துறை அல்ல. அது அவ்வாறு இருக்கவும் இயலாது.
பெண்களுக்கே உரித்தான கடமைகளில் ஒரு பெண் ஈடுபாடு கொள்ளும் பொழுது, இலக்கியத்தில் பொழுதுபோக்கவோ அல்லது சாதனை படைக்கவோ மிகக் குறைந்த நேரமே செலவழிக்க இயலும். இன்னும் அவ்வித கடமைகள் உங்கள் வாழ்க்கையில் வரவில்லை என்றே நினைக்கிறேன். அப்படிப்பட்ட கடமைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது பிரபலமாகவேண்டும் என்ற உங்களின் ஆர்வம் குறையத் தொடங்கும். கற்பனைகளில் உற்சாகத்தை தேட மாட்டீர்கள். வாழ்க்கையே அதை அளித்து விடும் – சற்று அதீதமாகவே கூட!
உங்களுடைய திறனை குறைத்து மதிப்பிடவோ, அத்திறனை நீங்கள் வளர்த்துக் கொள்ள முயற்சிக்க கூடாது என்றோ நான் எண்ணவில்லை. உங்களுக்கு நிலைத்த நன்மையை அளிக்கும் ஒரு செயலாகவே உங்கள் எழுத்துக்களை நீங்கள் கருத வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். கவிதைப்படைப்புகளை அதன் பொருட்டே எழுத வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு மற்றவர்களைப் போல் பிரபலமாவதற்கு கவனம் செலுத்தாமல் எழுத இயல்கிறதோ அவ்வளவுக்கு ஏற்ற சிறப்புடன் உங்கள் படைப்புகள் அமையும்.அத்தகைய படைப்புகள் உங்கள் மனதிற்கும், ஆத்மாவிற்கும் இதமளிப்பதாக இருக்கும். மதத்திற்கு அடுத்த படியாக உங்கள் எண்ணங்களை உயர்த்தி மன அமைதியை உறுதியுடன் அளிக்க வல்லனவாக இருக்கும். உங்களுடைய உயரிய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிரதிபலித்து அவற்றை மேலும் வலுவுள்ளவனவாக ஆக்கும்.
நானும் ஒரு காலத்தில் இளமையில் தாங்கள் இப்போது கடந்து கொண்டிருக்கும் பாதையைக் கடந்து வந்தவன் என்ற முறையில் உங்களுக்கு இவ்வாறு எழுதுகிறேன். என்னுடைய நேர்மையான கருத்துக்களிலோ, உங்கள் மீது நான் கொண்டுள்ள நன்மதிப்பிலோ எவ்விதச் சந்தேகமும் வேண்டாம். இங்கு கூறப்பட்ட கருத்துக்களைச் சரியாக புரிந்து கொள்வது உங்கள் மனநிலையைப் பொறுத்தது. உங்களின் நீண்டநாள் அனுபவங்கள் நியாயமான இக்கருத்துக்களைப் புரிந்து கொள்ளும். என் எழுத்தின் மூலம் கருணையற்ற ஆலோசகராக தங்களுக்குத் தெரிந்தாலும் உங்களுடைய மகிழ்ச்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைக் கூறி இத்துடன் என் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.
உங்களின் உண்மையான நண்பன் ,
ராபர்ட் சௌதி

oOo

CBRichmond

Charlotte Brontë to Robert Southey
March 16 [1837].

ஸார்,
இரண்டாவது முறையும் உங்களுக்கு எழுதுவது மேலும் உங்களைத் தொந்தரவு செய்வதாக எனக்குத் தோன்றினாலும், உங்கள் கடிதத்திற்கு பதில் எழுதும் வரை என்னால் ஓய்வெடுக்க முடியவில்லை.
உங்களுடைய அன்பான ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி. உங்களின் பதிலில் தெரிந்த கனிவான குரலும், அதன் உயரிய நோக்கமும் என்னை மீண்டும் எழுதத் தூண்டின. உங்களை மேன்மேலும் முகஸ்துதி செய்து என் பேதைத்தனத்தை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
உங்கள் கடிதத்தை முதலில் படித்துப் பார்த்தபொழுது எனக்கு அவமானமாகவும், வருத்தமாகவும் இருந்தது. என்னுடைய விவேகமற்ற கவிதைகளை அனுப்பி உங்களை தொந்தரவு செய்து விட்டேனோ என்று என்மீதே எனக்குக் கோபமாக இருந்தது.
உங்கள் கடிதத்தைப் படித்த பிறகு அதுவரை எனக்கு மகிழ்ச்சியை கொடுத்த என் எழுத்துக்கள் முதலில் சங்கடத்தையும், பின்னர் ஒரு குழப்பத்தையும் அளித்தன. ஆனால், சற்றே சிந்தித்து மீண்டும் மீண்டும் உங்கள் கடிதத்தைப் படித்ததில் நீங்கள் சொல்கிற கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. நான் எழுதுவதை நீங்கள் தடை செய்யவில்லை. என் எழுத்துக்களை முழுமையாக தகுதியற்றவை என்றும் நிராகரிக்கவில்லை. புகழ் பெற வேண்டும் என்று எழுதுவது, ஒரு உற்சாகத்தின் பொருட்டு எழுதுவது என் வாழ்வியல் கடமைகளை அலட்சியப்படுத்தும் என்பதையே அறிவுறுத்தி இருந்தீர்கள். அத்தகைய கடமைகளில் இருந்து நான் விலகாத வரையில், கவிதைகள் எழுத முனைவதில் தவறில்லை என்பதாகவே கூறியுள்ளீர்கள். நானும் கடமையை உணராத முட்டாள் பெண்ணல்ல என்று கூற விரும்புகிறேன்.
என்னுடைய முதல் கடிதத்தில் சற்று பொறுப்பற்றதனமாகவும், அறிவற்றதனமாகவும் எழுதியுள்ளதை நான் அறிவேன். ஆனால், அக்கடிதம் தந்த தோற்றத்தைப் போல நான் கனவு காணும் பெண்ணல்ல.
என் அப்பாவின் பாதிரியார் வருமானத்தில் வளர்ந்த குடும்பத்தின் மூத்த பெண் நான். அவரால் முடிந்தவரை என்னைப் படிக்கவும் வைத்தார். அதனால் படிப்பு முடிந்ததுமே ஒரு ஆசிரியையாகப் பணியில் சேர்ந்து குடும்பத்திற்காக என்னுடைய பங்கினையும் அளித்து வருகிறேன். சிந்தனைகளில் அதிக நேரம் செலவழிக்க இயலாத என்னுடைய ஆசிரியை வேலையில் உடல், மனம் இரண்டையும் அதிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளேன். மற்றவர்களை பாதிக்காத மாலை வேளைகளில் மட்டும் கற்பனை உலகில் வலம் வந்துள்ளேன் என்பதை நான் மறுக்க மாட்டேன். ஆனால், என்னுடைய உலகில் நான் சஞ்சரிப்பதை மற்றவர்கள் கவனிக்காதவாறும் என்னுடைய இலக்கிய வேட்கையை யாரும் சந்தேகிக்காதவாறும் மிக்கக் கவனத்துடனே இருந்து வந்துள்ளேன்.
என் தந்தையும் உங்களைப் போன்றே அறிவான மற்றும் அன்பான தொனியிலேயே என் சிறுவயது முதல் கூறிவந்த அறிவுரைகளுக்கேற்ப ஒரு பெண்ணாக நான் செய்ய வேண்டியது என்ன என்பதை அறிய மட்டும் அல்லாமல் அவற்றில் மிகுந்த ஈடுபாடும் கொண்டுள்ளேன்.
மீண்டும் உங்களுக்கு என்னுடைய உண்மையான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரபலத்திற்காக எழுத வேண்டும், என் பெயர் பத்திரிகைகளில் வர வேண்டும் என்ற நினைவுகள் வரும் போதெல்லாம் உங்களுடைய கடிதத்தை மீண்டும் படித்து அவ்வெண்ணங்கள் எழாதவாறு மனதை அடக்கிக் கொள்வேன். நான் எழுதிய கடிதத்திற்கு சௌதி போன்ற ஒருவரிடமிருந்து பதில் வந்ததே எனக்குப் பெருமையான விஷயம். உங்கள் கடிதத்தை ஒரு பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். முப்பது வருடங்களுக்குப் பின்னரும் என் வாழ்க்கையில் அமைந்த ஒரு அழகான கனவாகவே நினைவில் கொள்வேன்.
முன்பு எழுதிய கடிதத்தில் இருந்த கையொப்பம் வேறு யாருடையதோ என்று நீங்கள் நினைத்தது உண்மையிலேயே என்னுடைய சொந்த பெயர் தான். மீண்டும், என் உண்மையான பெயரிலேயே கையொப்பம் இடுகிறேன். C. BRONTE.
பின் குறிப்பு: இரண்டாவது முறை உங்களுக்கு கடிதம் எழுதியதற்கு என்னை மன்னியுங்கள். உங்களுடைய கருணையான அணுகுமுறை, நீங்கள் எனக்குச் செய்த அறிவுரைகள் வீணாகப் போய் விடாது என்று என்னுடைய நன்றியை தெரிவிக்கவே மீண்டும் எழுத வேண்டியதாகி விட்டது.
C. B.

oOo

Robert southey to Charlotte Bronte
Keswick, March 22, 1837

rsடியர் மாடம்,
உங்களின் பதில் கடிதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. உங்களைப்பற்றி நான் சொன்ன கருத்துகள் எவ்வளவு கண்ணியமாகச் சொல்லப்பட்டனவோ அதே அளவு கண்ணியத்துடன் ஏற்றுக் கொண்டீர்கள் . உங்களிடம் இப்போது நான் கேட்டுக் கொள்வது நான் வாழும் இந்த ஏரிப்பகுதிக்கு நீங்கள் வர நேர்ந்தால் கண்டிப்பாக உங்களைப் பார்த்துப் பேச என்னை அனுமதிக்க வேண்டும். அப்படி ஒரு சந்திப்பு நிகழுமாயின் என்னுடைய அனுபவங்களால் உருவான மனநிலையினில் எந்த விதமான கடுமையும் விரக்தியும் அறவே இல்லை என்பதனை அறிந்து கொள்வீர்கள்.
கடவுளின் அருளால் நம்மை நாமே செதுக்கிக் கொள்ள இயலும் முயற்சியானது, நம்முடைய மகிழ்ச்சிக்கு மட்டுமன்றி நம்மைச் சுற்றியுள்ள பலருக்கும் மகிழ்ச்சியை அளிக்கவல்லதாக உள்ளது. உங்களுடைய அதீத உற்சாகத்தைக் கட்டுப்படுத்தி மனதை அமைதியாக்கவும் முயற்சி செய்ய வேண்டும். (உங்களின் உடல் நலத்திற்கும் ஒரு சிறந்த ஆலோசனையாக இதை எடுத்துக் கொள்ளலாம்). அப்பொழுது உங்களின் அற உணர்வுகளும், ஆன்மீக முன்னேற்றங்களும் உங்களுடைய அறிவின் வளர்ச்சிக்கு இணையாக அமையும்.
கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும். உங்களுடைய உண்மையான நண்பராக என்னை நீங்கள் நினைத்துக் கொள்ளலாம்.
ராபர்ட் சௌதி.