ஆயிரம் பிறை கண்ட அரிமா! – ஜெயகாந்தன்

1960களின் மத்தியில் பள்ளியில் கே.பாலசந்தர், கே.எஸ்.கோபாலக்ருஷ்ணன் என்று சினிமா டைரெக்டர்கள் பற்றி பேசும் மாணவரிடையே அறிவியல் ஆசிரியர் திரு என்.எஸ். இரகுநாதன் “இதப் பத்தியெல்லாம் பேசறீங்களே, ஜெயகாந்தனைப் படியுங்கப்பா” என்று சொன்னார்.
வாழ்க்கையின் புதியனவற்றுக்கு எல்லையே கிடையாது என்கிற உண்மையில் அது பற்றி அறியவே செய்யாது திளைக்கும் சிறுவர் பருவம். சந்தேகம் கிடையாது. கடிவாளங்கள், கோட்பாடுகள் எதுவும் கிடையாது. நீடித்த கவலைகளும்தான். எனவே உடனே ஜெயகாந்தன் படிக்கத் துவங்கினோம். படிக்கத் துவங்கிக் கிடைத்த ஆனந்தத்தில், ஏதோ நாங்கள் ஒவ்வொருவருமே கண்டுபிடித்த அபூர்வமாக அவரை உணர்ந்ததில் அவரது எழுத்துகளும், பின்னர் அவரது பேச்சுகளும் அவற்றுக்கு வெகு காலத்திற்குப் பின் நிகழ்ந்த சந்திப்புகளும் ஜெயகாந்தனை எழுத்திலும், பேச்சிலும், நேரிலும் படிப்பதை வேத மந்திரம் போல் ஆக்கின.
jk
“நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி” என்றவர், “எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம் என்று நம்புகிற மக்களிடையே இத்தகைய தெய்வ லீலைகள் நிகழும்” என்று தமக்கு கிடைக்கும் அங்கீகாரம் பற்றிச் சொன்னவர் பற்றி இப்படிச் சொல்வது தகும்.
ஆனந்த விகடன் எப்போது வரும் என்று வீட்டு வாயிற்படியில் காத்திருப்போம். பெரும்பாலும் அதில் ஜெயகாந்தன் கதைகள் இருக்கும் காலம் அது. வந்த பின் படித்து, பிறகு பள்ளிக்குப் போய் நண்பர்களிடையே அதை சிலாகித்து பேசிக் கொண்டே இருப்போம்.
பின்பு ஜெயகாந்தன் எங்கெல்லாம் பேசுகிறாரோ அங்கெல்லாம் சென்று கேட்போம். அல்லது கேட்டவர்களிட்மிருந்து ஜெயகாந்தன் என்ன பேசினார் என்று கேட்டுத் தெரிந்து கொள்வோம்.
40 ஆண்டுகளுக்கு முன் யு.எஸ்.ஐ.ஏஸ். ஸில் நடந்த “நேருக்கு நேர்” நிகழ்ச்சியில் ஒருவர் “உங்கள் வாழ்வின் லட்சியம் என்ன?” என்று கேட்டபோது “Not to die” என்று அவர் சொன்ன பதில், எண்பதாம் ஆண்டு நிறைவின்போது திரு. நல்லி குப்புசாமி “ நீங்கள் நூறாண்டு வாழ்வீர்கள் “ என்று வாழ்த்தியபோது போது சொன்ன “ஆமாம்” என்கிற ஆமோதிப்பில் தொடர்கிறது. இப்படி சொல்ல, இப்படி எண்ண ஒருவர் உண்டென்றால் அது ஜெயகாந்தன்தான்.
“நான் பொழுது போனால் குடிப்பவன்” என்று காந்தி ஜெயந்தி விழாவில் பேச ஆரம்பித்தவர். தமிழாசிரியர்கள் மாநாட்டில் மிக நீண்ட முஸ்தீபுக்குப் பின் அவர்களுக்கு ‘நமஸ்காரம்’ சொன்னவர். பெரியாரின் துவேஷத்தின் அநீதியை அவர் மேடையிலேயே துணிந்து தர்க்க ரீதியாக, தர்ம ரீதியாக எதிர்த்தவர். பல வண்ணங்கள் கொண்ட சட்டையுடன் மேடை ஏறியவரை ‘பாம்பாட்டி’ என்று சொன்ன அரசியல்வாதியை, ‘மேடையில் இருக்கும் உங்களையெல்லாம் ஆட்ட வந்த பாம்பாட்டிதான் நான்” என்று பதில் சொன்னவர். நான் ‘கலைஞர் பேசுகிறேன்’ என்று ஃபோனின் மறு முனையிலிருந்து சொன்ன குரலிடம் ‘நானும் கலைஞர்தான் பேசுகிறேன்’ என்று பதிலிறுத்தவர். இராட்டை சுற்றும் பெண் என்னும் சின்னத்தினை கெவலமாகப் பேசிய மூத்த அரசியல்வாதியின் கண்களை காமப்புழு நெளியும் கண்  என்று சினந்து, உன் தாய், மகள் அவர்களை மறந்தாயா என்று கேட்டவர்.
35 வருடங்களுக்கு முன், ‘ம்யூசிக் அகாடமி’யில் நடந்த ‘மாக் பார்லிமென் ட்’ டில் இவர் ஒரு புறமும், சோ ஒரு புறமும் அமர்ந்திருக்க மேலும் பலர் பேசக் காத்திருக்கையில் “I can’t relish this nonsense” என்று இவர் அறிவித்ததும், சோ  “இவர் பேசட்டும். நாம் கேட்போம். இவர் பேசுவதை எல்லோரும் கேளுங்கள். நம் எல்லோருக்கும் நாட்டுக்கும் அது நல்லது” என்று கூட்டத்திடம் கூறினார். பின்னர் பொழிந்த ஜெயகாந்தன் “இப்போது மஹாத்மா காந்தி பிறந்திருந்தால் அவரை ஒரு சேரியில்தான் தேட வேண்டும்; அவர் மறு பிறவியில் அங்குதான் பிறக்க விரும்பினார்” என்று கூறி மிகப் பிரமாதமான உரையை நிகழ்த்தினார். மாக் பார்லிமென் ட் நடக்கவில்லை. ரொம்பி வழிந்த ம்யூசிக் அகாடமி அவ்ர் பேச்சை மட்டுமே வெகு கவனமாக பூரண ஈடுபாட்டுடன் கேட்டது.
இன்னொரு மேடையில் காந்தி வெளிநாடு செல்கையில் அவர் அன்னை ‘மது, மாமிசம், மாது’ வேண்டாம் என்று வாக்குக் கேட்டதைப் பற்றிச் சொல்கையில் என் தாய் எனக்கு ஆசை ஆசையாய் ஊட்டிய அசைவ உணவை நான் விட வேண்டியதில்லை. இதன் தாத்பர்யம் புலனின்பத்தில் உன்னை இழந்து விடாதே என்பதுதான்” என்றார்.
பாரதி, புதுமைப் பித்தன் என்கிற இரண்டு பெயர்களை எங்கள் காதுகளில் உபதேசித்தவர் ஜெயகாந்தன்தான்.
பாரதி என்னும் மஹா கவியின் உரைநடையை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அவரே.
என் கட்டுரைகளில் எல்லாம் எங்காவது ஜெயகாந்தன் வந்து விடுவார் என்று என் நண்பர்கள் சொல்வதுண்டு. இது அவரைப் பற்றிய கட்டுரை இதை எழுதுகையில் பாரதி பற்றி ஜெயகாந்தன் சொன்னதை நினைவு கூருகிறேன்.

“எனது நூல்கள் யாவும் மகாகவி பாரதியின் பாத கமலங்களில் சமர்ப்பிக்கப்படுவனவே யெனினும் இந் நூல் பாரதியின் இலக்கியச் சோலையிலிருந்து பறித்தெடுத்த மலர்களால் தொகுக்கப் பட்டது என்பதனைக் கருதிச் சொந்தத்தோடும், உரிமையோடும் அவரது சென்னியிலிதைச் சூட்டுகிறேன். (பாரதி பாடம்)“

இவரை நேரில் அருகில் பார்த்தது 1987-90 ல் நான் கல்கத்தாவிலிருந்தபோது சென்னை வந்தபோது. திரு. அசோகமித்திரனைச் சந்தித்து விட்டு ஆழ்வார்பேட்டையிலிருந்த மடத்துக்கு வந்து இவரைப் பார்த்தேன். ஒரு 15 நிமிடம் உடன் இருந்தேன்.அது சந்திப்பு அல்ல.
பின்னர் 2001ல் பொங்கல் சமயத்தில் தஞ்சாவூரில் நடந்த ஒரு விழாவுக்கு திரு. மோதி. ராஜ கோபால்* என்னையும், அவர் உயிர் நண்பர் பத்மனாபன் அவர்களையும் தன் காரில் திருச்சியிலிருந்து அழைத்துச் சென்றார். அதுதான் ஜே. கே. யுடனான முதல் சந்திப்பு.
கார் பாதி வழியில் பங்க்சர் ஆகி விட்டது. ஒரு பஸ் பிடித்து தஞ்சை சென்றோம். சா. கந்தசாமி மற்றும் ஜெயகாந்தனின் நண்பர்கள் பலரும் இருந்தார்கள். தஞ்சை அறிஞர், சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என். இராமச்சந்திரனின் ‘வழி வழி பாரதி’ என்னும் நூல் வெளியீட்டு விழா. “நாங்கள் எல்லோரும் சிரமப்பட்டு படிகளில் மெல்ல ஏறி ஓர் இடத்தை அடையப் பார்த்தால் அங்கே அனாயாசமாக உலவிக் கொண்டிருப்பவர் ஜெயகாந்தன் “ என்று சொன்னார் திரு. டி. என். ஆர்.
ஜெயகாந்தனிடம் ஃபார்மலாக என்னை அறிமுகம் செய்து வைத்தார் மோதி. அந்த அறையில் கூட சுமார் 20 பேர் இருந்தார்கள். அந்த அமைப்பை ‘சபை’ என்று சொல்வார்கள். ஜெயகாந்தன் மட்டும் பேசினார். தொடர்ந்து பேசினார். பேசிக் கொண்டே இருந்தார். அந்தப்பேச்சின் தொடர்ச்சியை மாலை மேடையில் நூல் வெளியீட்டு விழாவிலும் பேசினார். பாரதி பற்றி அவரது மற்றொரு மகத்தான உரையைக் கேட்டேன். மானசீகமாக அவரை நமஸ்கரித்தேன்.
இரவு கிளம்பும் சமயம் அவரை உண்மையிலேயே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தேன். படுக்கையில் ஒருக்களித்து அமர்ந்திருந்த அவர் நிமிர்ந்து கைகளை ஆசீர்வதிப்பது போல் செய்து ‘காட் ப்ளெஸ் யூ” என்றார். மிக இயல்பாக அந்நிகழ்ச்சி முன் திட்டம் ஏதுமின்றி நடந்தது. அதுவரை நான் எந்த பிரமுகர், மடாதிபதி, மதத் தலைவர், மூன்றாம் மனிதரையும் வணங்கியதில்லை என்பதை மோதியிடம் சொன்னேன். அதே போல் ஜெயகாந்தனும் பாசாங்காய் யாராவது எதாவது செய்தால் நிராகரித்து விடுவார். இன்று உங்களை ஆசீர்வதித்தார் என்று மோதி சொன்னார்.
Suga_Jeyakanthan_Writers_Authors_Tamil_Icons

(சுகா, ஜெயகாந்தன், வ.ஸ்ரீநிவாசன்)

மதியம் அறையில் பேசிக் கொண்டிருக்கையில், எந்த மாதிரி கதைகளை எழுத மாட்டேன் என்பது பற்றிச் சொன்னார். “ஒரு வீட்டில் ஒரு பெண் இருப்பாள். அவள் வீட்டுக்கு மத்தியான நேரத்தில் ஒரு ஆண் வந்து விட்டுப் போவார். தினமும், அந்தப் பெண்ணின் கணவர் வெளியே சென்ற பின், இது நடக்கும். ஆனால் நான் இதை எழுத மாட்டேன்” என்றார்.
தொடர்ந்து, “அக்னிப் பிரவேசம்’ கங்கா பற்றி பேச்சு வந்தது. அவளே அவனைக் கண்ணைக் காட்டி அழைத்திருக்கலாம். அவளே அவனுக்கு சைகை செய்திருக்கலாம். ஆனால் அதை நான் எழுத மாட்டேன்” என்றார். எனக்கு உடனே துணுக்குற்றது.  மாலை மீட்டிங் முடிந்து வந்ததும், உறுத்திக் கொண்டே இருந்த கேள்வியைக் கேட்டு விட்டேன்.  “அவள் குழந்தையல்லவா? அவளைப் பற்றி இப்படிச் சொல்கிறீர்களே?”  அவர் உடனே “ கண்ணைக் காட்டியோ, வேறு சைகை செய்தோ அழைத்திருந்தால் மட்டும் அவள் குழந்தை இல்லாமால் போய் விடுவாளா? அவளே மீண்டும் மீண்டும் அவனிடம் போனாலும் கூட குழந்தை இல்லாமல் ஆகி விடுவாளா? “ என்றுகேட்டார். எனக்கு கண்களில் நீர் தளும்பி விட்டது. அவரது அனைத்தையும் அரவணைக்கும் அன்பு, பாவிகளே இல்லாத அவரது உலகம் தெரிந்தது.
அவர் பல நூல்களைப் படித்திருக்கிறார். ஒரு கல்விக் கூடத்தில் பேசப்போன இவரை திடீரென்று  ‘கம்பரைப் பற்றிப் பேசுங்கள்” என்று கோரியிருக்கிறார்கள். உடனே ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியிருக்கிறார். இவர் பேசியது கம்பனின் ‘இராமகாதை’ பற்றியல்ல. “ஏர் எழுபது” பற்றி. நம்மில் எத்தனை பேருக்கு கம்பனின் இந்த நூல் பற்றித் தெரியும்? ஒரு முறை டென்னஸி வில்லியம்ஸின் ஒரு பாத்திரம் பற்றி பேச்சு வந்தது. என்னிடம் ‘அது ரோஸ் டாட்டூ’ தானே என்றுகேட்டார். நான் “ஆமாம் ஜே.கே.” என்றேன்.
மிக கம்பீரமாக எழுதும் இவர் தனிப் பேச்சிலும் கம்பீரமாய் இருப்பார். தனிப்பட்ட கண்ணியம் எல்லோருக்கும், எப்போதும் காக்கப் படும். எல்லோர் தேவைகளையும் நினைவில் வைத்திருப்பார். நகைச்சுவை எட்டியே பார்க்காமல் எழுதும் இவர் தனிப் பேச்சுகளில் கம்பீரத்தோடு சேர்ந்து பிரதானமாக இருப்பது இவரது நகைச்சுவைதான். சிரித்து மாளாது.
மோதி, திருச்சியைச் சார்ந்த பிரமுகர் திரு. எம். எஸ். நாடார் பற்றி ஜே.கே.யிடம் சொல்கையில், “இவர் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்” என்று அறிமுகமாகச் சொல்லியிருக்கிறார். உடனே திரு நாடார், “ஐயய்யோ ! நான் சொல்லும் நகைச்சுவையெல்லாம் ஜே. கேயிடமிருந்து பெற்றவைதான்” என்று சொன்னாராம்.
நான் சிகரெட், கஞ்சா, மது என்கிற எந்தப் பழக்கமும் இல்லாதவன் என்பது தெரிந்ததும் அனைவருக்கும் சுழற்சியில் தரப்படும் அவை என்னிடம் வராமல் பார்த்துக் கொள்வார். ஒரு சமயம் “நான் ஏக பத்னி விரதர்களையும், ஏகப்பதிவ்ரதாக்களையும் மதிக்கிறேன்” என்றார். இதன் பொருள் அவர்கள், குறிப்பாக குடிக்காதவர்களும், பிற பெண்கள் தொடர்பு இல்லாதவர்களும், கேலிக்கு உரியவர்கள் அல்ல என்பதே.
இவ்வளவு தொடர்ந்த பேச்சுகளிலும், ஒரு துளி வம்போ, கீழ்ததரமான கிண்டலோ யாரைப் பற்றியும் இருக்காது.
கொச்சை வர்த்தைகள் பேசுவார். ஜாதி, மத, மொழி, இன, வேறுபாடுகள் அறவே இல்லாத மனிதர். பலரை அவர்கள் ஜாதி சொல்லிக் கூப்பிடுவார். கிண்டல் கூட பண்ணுவார். ஆனால் அதில் துளி துவேஷம் இருக்காது. ஒரு முறை மோதி வீட்டுக் கல்யாணம் ஒன்றில் ஒரு நண்பர் ஜே.கே.யிடம் இன்னொரு நண்பரைப் பற்றி அவரதுஜாதியைக் குறிப்பிட்டு ‘அந்த பயல் என்றதும் “நீ . . பயல்தானே அதுதான் அப்படிப் பேசுகிறாய்’ என்றாராம்.
மோதி “போன ஜென்மத்தில் நீங்கள்தான் பாரதி நான்தான் எலிக்குஞ்சு செட்டியார்” என்றதும் தலையசைத்திருக்கிறார். ஒருமுறை பாபநாசம் சிவனின்  ‘என்ன தவம் செய்தனை?” பாடல் பற்றிச் சொல்கையில் “இதைப் பாடுவது தேவகிதான். யசோதாவிடம் தனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று பாடுகிறாள்” என்றார். “பாரதி உலகின்பக் கேணி என்று எழுதியிருக்க மாட்டான். அது உலகின்பக் கேளி” என்பார். “பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் சின்னக் கவலைகள் தின்னத் தகாதென்று” என்றுதான் எழுதியிருப்பார் என்று பாட பேதம் செய்வார்.
ஒரு முறை சபையில் “ஞானம் என்றால் என்ன தெரியுமா என்று கேட்டுவிட்டு, சுகமாய் இருப்பதுதான் ஞானம் என்று சொன்னார். சுற்றி இருந்த 20 பேரில் ஒருவர், இது பற்றி யோசித்துவிட்டு, கொஞ்ச நேரம் கழித்து, “ஆமாம் ஜே.கே. நல்லவனா இருப்பதுதான் ஞானம்” என்று சொன்னார். ஜே. கே உடனே “ நல்லவனா இருப்பது அல்ல, சுகமா இருப்பதுதான் ஞானம்” என்று அவரைத் திருத்தினார்.
தமக்குக் கிடைக்கும் பாராட்டுகள், விருதுகள் அனைத்தையும் பற்றி சொல்கையில், “பாரதிக்கு செய்யவில்லை இல்லையா? அதுதான் எனக்குச் செய்து தவறைத் திருத்திக் கொள்கிறார்கள்.” என்றும் “பாரதி பயிரிட ஆரம்பித்ததைத்தான் நான் அறுவடை செய்து கொண்டிருக்கிறேன்.” என்பார்.
இவரும் கி. வீரமணியும் ஒரே பள்ளி. பெரியார் வந்து வீரமணியை தத்து எடுத்துச் சென்றாராம். இவருக்கு அந்த வசதியான வாழ்க்கை கிடைக்கவில்லையே என்று வீட்டில் விசனப்பட்டு திட்டினார்களாம். “நல்ல வேளை தப்பித்தேன். அந்தாளோடு போய் யார் இருப்பது ” என்றார்.
எல் எல் ஏ பில்டிங்இல் ஒரு கூட்டத்தில் லா.ச. ரா வின் ஒரு கதையில் எப்படி “இன்று கிடைத்த மீனை என்ன செய்யலாம். கறி வைக்கலாமா கூட்டு வைக்கலாமா” என்று ஒரு பாத்திரம் யோசிக்கிற மாதிரி வருகிறது என்பது பற்றிச் சொல்லி, “உனக்கெதற்கு இந்த வேலை? உனக்கோ மீன் பற்றி ஒன்றும் தெரியாது” என்றார். அதே போல் இவர் எழுதிய ஒரு கதையில் பிராமண பாஷை சரியாக இல்லை என்று ஒருவர் இவருக்கு கடிதம் எழுதினாராம். பிராமண பாஷையின் ஆதென்டிசிடிக்காக நான் எழுதவில்லை என்று சொன்ன போதும் மீண்டும் கடிதம் வந்ததாம். “போடா பப்பாரப் பயலே! என்று பதில் சொல்லி விட்டேன்.” என்றார். கூட்டம் ஆர்பரித்தது. தொடர்ந்து அவர் சொன்னது “அப்படி எழுதியதற்கு வெட்கப் படுகிறேன்.”
jayakanthan_1_050408
பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா எல்லோரையும் பற்றிய அவரது விமர்சனங்கள் கூர்மையாகவும் , கடுமையாகவும் பலசமயம் சிரிப்பு வரவழைக்கக் கூடியனவனவாகவும் இருக்கும்.
“ஜேகே தமிழ் உள்ளவரைக்கும் உங்க பேர் இருக்கும்” என்று சொன்ன திரு மோதியிடம் “அதனால் எனக்கென்ன பிரயோசனம்” என்று கேட்டார்.
20 பேர் சூழ்ந்து இருக்கையிலும் யார் யாருக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு கொண்டு வரச் சொல்லுவார். கண்டபடிக்கு வாங்கி உணவு வீணாகப் போவதை விரும்பாதவர். அதே போல் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு முறை அங்கிருந்த காப்பிப் பொடி பாக்கெட்டை எடுத்துவைக்கச் சொல்லினாராம். பின் “இது இருந்தால் ஒருத்தருக்கு காப்பி போடத் தோன்றும். அதற்காகப் பால் வாங்குவார்கள். சக்கரை வாங்குவார்கள். பிறகு அவை அதிகமாகி விட்டால் அதற்கென்று மீண்டும் காப்பிப் பொடி வாங்குவார்கள்” என்று சொன்னாராம்.
ஞானத்தின் ஆக்ர்ஷிப்பின் விளைவுகளில் கலையும் ஒன்று. அதனால்தான் கலைஞர்கள் அதர்மத்தின் பக்கம் நியாயத் தராசு சாய்கையில் அதற்கெதிராக அமர்ந்து சமன் செய்வார்கள். எனவேதான் அவர்கள் கால, தேச, இன, மொழி, சாதி, பால் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாய், கலா சிருஷ்டி காலத்திலாவது, சம நோக்கோடு மட்டுமே இருக்கிறார்கள். ஜே.கே. போன்ற விவேகிகள் பல நேரம் அப்படித்தான் இருக்கிறார்கள்.
தமிழர்கள் அனைவருமே பாஸிசத்துக்குத் துணை போனவர்களோ என்று எதிர்கால சந்ததியர் ஏசாமல் இருப்பதற்காக படுகுழியில் விழ இருந்த தமிழ் மக்களை பாரதிக்குப் பின் தடுத்தட்கொண்டவர்களில் முக்கியமானவர் ஜெயகாந்தன். தமிழ் மக்களின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை நேர்மறையாக ஏற்படுத்தியவர் ஜெயகாந்தன். “உங்கள் மீது ‘ப்ரொ பிராமின்’ என்றொரு குற்றச்சாட்டு இருந்ததே?” என்கிற கேள்விக்கு “இப்போதும் அப்படித்தான். எப்போதும் ப்ரோதான் எல்லோருக்குமே ப்ரோதான்” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
நாடகம் பற்றி ஒரு கருத்தரங்கம் சத்ய மூர்த்தி பவனில் நடந்தது. சிசுசெல்லப்பா, நா.காமராசன், சோ, ஜெயகாந்தன் எல்லொரும் பெசினார்கள். ஒரு புருவத்தை உயர்த்திக் கூட நடிக்கலாம் என்று நடித்துக் காட்டினார் ஜெயகாந்தன். “தமிழில் நாடகமே இல்லை” என்று அவர் சொன்னதற்கு வேறொருவர் ” மனோன்மணியத்தை வைத்துக் கொண்டு இப்படிச் சொல்வது என் தாத்தாவுக்கு ஒன்றும் தெரியாது என்கிற மாதிரி” என்று கோபமாகப் பேசி தம் அறியாமையைக் காட்டிக் கொண்டார்.  நாடகம் என்றால் ஒரு பாடம் இருக்க வேண்டும் என்று வேறொருவர் பேசினார். அவரை அடுத்துப் பேசிய சோ ‘ அப்படி நாடகம் போட்டால் அது நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும், அந்த நாடகம் போட்டவருக்கு’ என்றார்.
துக்ளக் பத்ரிகையில் ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ தொடர் ஜெயகாந்தன் எழுதுவதற்கு முன், சோ ஒரு முன்னுரைமாதிரி எழுதி, ‘ஜெயகாந்தன் எழுதப்போகிறார். ஈஸ்வரோ ரக்ஷது’ என்று முடித்திருந்தார். ஜெயகாந்தன் ‘ஈஸ்வரோ ரக்ஷது’ என்று துவங்கி, தன் தொடரைப் பொருத்தமாக ஆரம்பித்திருந்தார். தனிப் பேச்சில் மேடையில் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சோ எப்படி ‘அனைவருக்கும் வணக்கம்’ என்று ஒற்றை வந்தனத்தில் நீண்ட அவர்களேக்களைத் தவிர்த்துப் பேச ஆரம்பித்து விடுவார் என்று நடித்துக் காட்டுவார்.
‘காரல் மர்க்ஸ் ஒரு ஹிந்து’ என்று ஒரு கூட்டத்தில் பேசினார். ‘இந்தியா ஒளிர்கிறது என்று சொல்லாமல் பின் அழுது வடிகிறது என்றா சொல்ல வேண்டும்’ என்றார். ஃபாசிசமா, இம்பீரியலிஸமா என்றால் இம்பீரியலிஸத்தின் பக்கமே இருப்போம் என்றார் மார்க்ஸ். நாமும் கறுப்பா, காவியா என்று வரும்போது காவியின் பக்கமே இருப்போம்’ என்று முழங்கினார்.
கோவையில் ஒரு முறை பேச வந்திருந்தபோது அரங்கம் நிரம்பி வழிந்தது. அப்போது சொன்னார். இங்கிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் என்னைப் பற்றி ஒரு மணி நேரம் பேசக் கூடியவர்கள் என்று. அது உண்மைதான். ஜெயகாந்தனுடன் பரிச்சயம் அவரது எழுத்து, பேச்சு மூலம் உள்ள எவரும் அவ்ரைப் பற்றி குறந்தது ஒரு மணி நேரம் பேசமுடியும். அது கான்ஷியஸாக கட்டப் பட்ட பிம்பம் அல்ல. பிம்பம் பற்றிக்கவலைப்படாமல் ஒருவர் நிஷ்காம்ய கர்மியாக இருந்ததால் எதேச்சையாக விளைந்தது.
இவரது மணிவிழா 1994ம் வருடம் சென்னை காமராஜ் அரங்கத்தில் நடந்தது. மேடையில் இருந்த மத்திய மந்திரி திரு. அருணாசலத்திடம் “தைரியமாக இருங்கள். எல்லோரையும் ஹிந்தி படிக்கச் சொல்லுங்கள்” என்றார். மந்திரி பயந்து போய் விட்டார். தொடர்ந்து, “ஏன் நம்ம பொண்டாட்டியையே, நம்ம அம்மாவையே காப்பத்திட்டு இருக்கணும். எல்லா அம்மாக்களையும் காப்பத்துவோம்” என்றார். எப்படி தான் ஒரு தேர்வுக் குழுவில் இருக்கையில் அதிகம் பேசுபவர்களைக் கொண்டிராத மொழிகளில் வந்துள்ள எழுத்துகளுக்கு பரிசளிக்க சிபாரிசு செய்தேன்” என்பதையும் சொன்னார். மணி விழாவில் கொடுக்கப் பட்ட பண முடிப்பான சுமார் 4, 5 லட்சம் ரூபாய் பற்றிக் குறிப்பிட்டு “இதை நான் என்ன செய்வேன்? குப்பைலே போடுவேன். குப்பைன்னா ‘பாங்க்” என்றார். இறுதியில் மேடையில் பேசிய பிரபலஸ்தர்களையெல்லாம் தனித்தனியாகக் குறிப்பிடாமல் “கோவிலில் மூலவரை நமஸ்கரித்தால் எல்லா சன்னிதிகளையும் வணங்கிய மாதிரி, எனவே மூப்பனாருக்கு என் நன்றி” என்று முடித்துக் கொண்டார். மறுநாள் பத்ரிகையில் “நேற்று அனவருக்கும் சரியான விதத்தில் நன்றி சொல்லாததற்கு வருந்துகிறேன்,. அனைவருக்கும் நன்றி என்று ஜே. கே. சொன்ன செய்தி பத்ரிகைகளில் கட்டம் கட்டி வந்தது.
ஒரு சமயம் ரயில்வே ஸ்டேஷனில் இவர் பெட்டியின் படிகளில் ஏறி வாயிலில் நின்று கொண்டிருந்த போது ஒரு நல்ல உடைகள் அணிந்த இளஞர் இவரிடம் ஒரு பேப்பரை நீட்டி அதில் ஆட்டொகிராஃப் கேட்டர். இவர் போட மறுத்து விட்டார். அந்த இளைஞர் “நானும் தமிழன், நீங்களும் தமிழன். போடுங்கள்” என்றர். இவர் மீண்டும் மறுத்து விட்டார்.அவ்விளைஞர் சென்றதும் “நாமென்ன இங்கிலாந்திலோ அமெரிக்கவிலோவா இருக்கிறோம், நானும் தமிழன், நீங்களும் தமிழன் என்று சொல்லி கையெழுத்து வாங்க. இங்கே கோவையில் இருக்கும் எல்லோரும் தமிழர்கள்தான். இதில் இது என்ன பேச்சு?” என்றார்.
ஒரு முறை தூங்கிப் போய் விட்டதால், கோவையில் இறங்காமல் மேட்டுப் பாளையத்தில் இறங்கி அங்கிருந்து சாவதானமாக, ஒரு பரபரப்பின்றி வந்தார். அதே போல் திருச்சியில் ரயிலைத் தவற விட்டு விட்டாராம். எல்லோரும் பதறிக் கொண்டிருக்கையில் அவர் நிச்சலனமாக இருந்ததோடன்றி ரயில்வே பிளாட்பாரத்திலேயே ஏதோ பாடி ஆடிக் காட்டி இருக்கிறார். பெரும்பாலானவர்கள் பதற்றமடையும் பல சந்தர்ப்பங்களில் அமைதியாக இருப்பவர் என்று அவர் பற்றி இதையெல்லாம் திரு மோதி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
அவர் நண்பர் திரு கே.எஸ். சுப்ரமணியம் ஒருகதையில் இப்படி வருமே என்று ஆரம்பித்து சொல்லத் தடங்குகையில் அது எந்தக் கதையில் வரும் எப்படி வரும் என்று மிகச் சரியாகச் சொன்னார் ஜே.கெ. அவ்வளவு நினைவாற்றல். கே.எஸ். செய்த மொழி பெயர்ப்பு ஒன்றை இருவரும் சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு வார்த்தையை ஜே.கே. மாற்றினார் அந்த ஆங்கில வாக்கியம் முற்றிலும் மேலானதாக பரிணமித்து விட்டது.
அவரது 74வது பிறந்த நாள் என்று நினைக்கிறேன். இளையராஜா, ரவி சுப்ரமண்யம் இயக்கத்தில் ஒரு செய்திப்படம் ஜெயகாந்தனைப் பற்றி எடுத்திருந்தார். பிறந்த நாள் விழாவில் அப்துல் கலாம் பேசினார். அந்த படத்தின் டிவிடி போட்டுக் காட்டப் பட்டது. அதில் அவர் சொல்லியிருப்பார். “கலைஞர் ‘நான் பெரியாரையும், அண்ணாவையும் பார்க்காமல் இருந்திருந்தால் ஒருகம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்’ என்கிறார். இதில் கூத்து என்னவென்றால் நான் அவர்கள் இருவரையும் பார்த்ததால்தான் கம்யூனிஸ்ட் ஆனேன்.” என்று சொல்லிச் சிரிப்பார். திரு.ரவி சுப்ரமணியம் எடுத்த ஆவணப்படம் இங்கு கிடைக்கிறது :

அரசியல் கணிப்புகளை, கணக்குகளை அவர் சரியாகச் செய்ததில்லை. சுய லாபம் தேடாததால் அவருக்கு அதெல்லாம் அவசியமும் இல்லை. எமர்ஜென்ஸி வந்தபோது அதை வரவேற்றார். அதை வரவேற்கத் தயங்கிய கண்ணதாசனையும் வரவேற்க வைத்தார். இப்போதும் மேதா பட்கர் போன்றவர்கள் செய்யும் இயக்கங்களில் ஆன்மீகம் இல்லை என்பார்.
சுந்தர ராமசாமியின் அஞ்சலிக் கூட்டத்தில் பேசத் தொடங்குகையில் சொன்னார் : “அவர் எங்கே? நான் எங்கே? அவர் உயரம். நான் குள்ளம். அவர் செல்வந்தர். நான் செல்வத்தைப் பற்றியே சிந்திக்காதவன்.
அவர் துணைவியார் ஓரிடத்தில் எழுதியிருப்பதைப் போல் “பணம் பண்ணத் தெரியாதவர் அல்ல; பணம் பண்ண விரும்பாதவர்.” ஒரு முறை மோதியிடம் பெசிக் கொண்டிருக்கும் போது உள்ளே போய் சாப்பிட்டு விட்டு வந்தராம். பின் “ரேஷன் அரிசி. உங்களுக்குப் பிடிக்காது. அதுதான் உங்களையும் சாப்பிட அழைக்கவில்லை” என்றாராம். ஆனால் ஒரு விஷயம், ஜெயகாந்தன் தருகிறார் என்றால் ஆலஹால விஷத்தைக் கூட மோதி விரும்பிச் சாப்பிட்டு விடுவார். மோதி மட்டுமில்லை. இன்னும் பல அன்பர்கள் அவருக்கு அப்படி உண்டு. அதில் குறிப்பிடத் தக்கவர்கள் பலர். எனக்குப் பரிச்சயமானவர்களில் திரு பி.ச. குப்புசாமி (வார்த்தை பத்ரிகையில் வந்த அவரது ‘ஆரம்பப்பள்ளிஆசிரியரின் குறிப்புகள்’ ஆசிரியர் பயிற்சி படிப்பில் பாடமாக வைக்கத் தகுந்தது.) இன்னொருவர் கோவையில் ‘சிவகாமி புத்தகப் பூங்கா’ திரு மணி அவர்கள். பல இலக்கியகர்த்தாக்கள் இவர் அண்மையில் இருந்தால் போதும் என்று எழுதாமல் இருந்து விட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருமே இலக்கியத் தேட்டமும், நாட்டமும் உள்ளவர்கள். ஜே. கே.யைப் பொருத்தவரை அவர்கள் போலல்ல நான். அவர்கள் ஆழ்வார்கள். நான் தெருவில் செல்கையில் கோவிலின் உள்ளே பார்த்து நெற்றியை கும்பிடாகத் தொட்டு விட்டு போபவன். ஆனால் எனக்கே அவர் பால் இவ்வளவு அபிமானம் இருக்கிறது. மோதி  “ஜே.கே.யுடன் இருக்கும் போது ராமக்ருஷ்ண பரமஹம்சர் கூட இருப்பது போல் இருக்கும்” என்பார்.
ஒருமுறை ஜே.கே.வுக்கு ஒரு பிரபல மலையாளப் பத்ரிகையிலிருந்து தொலைபேசி வந்தது. அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. ஃபோனை வைத்ததும் சொன்னார்: “தி.மு.க. அரசின் இந்த திட்டம் பற்றி என் கருத்து எதற்கு? சோவும், அசோகமித்திரனும் எதிர்க்கிறார்கள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்கிறார்கள். நான் எதற்குச் சொல்லவேண்டும். அவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். நான் எதிர்த்துக் கொண்டுதான் இருந்தேன். அப்போது காங்கிரஸும், கம்யூனிஸ்ட்களும் எதிர்த்தார்கள். இப்போ பல காலமா அவங்கல்லாம் எதிர்ப்பதை விட்டு விட்டார்கள்.அவங்களோடயே சேந்துட்டாங்க. நான் மட்டும் ஒற்றையாளாக எதற்கு எதிர்க்க வேண்டும்? அதுதான் ஒரு கருத்தும் சொல்லவில்லை.”
அவரது கதைகள் பற்றி “அவற்றைத் தாண்டி ஒன்றுமே கிடையாது” என்பவர்களும், “, unbearable, கலைத் தன்மை கிஞ்சித்தும் இல்லாதவை” என்பவர்களும் உண்டு.
ஜெயகாந்தன் கதைகள் பற்றிய என் அபிப்பிராயம் வேறு. அவரது பிரசாரத்துக்குப் பயன் பட்ட சாதனம் கதை. அவர் பிரசாரம் செய்தது ஞானம். அதனால்தான் ‘ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஞான்வானை உருவாக்குங்கள்’ என்று கூறினார். மேடை, கட்டுரை, கவிதை, கதை, எல்லாவற்றையும் அவர் தன் சிந்தனைகளைத் தெரியப்படுத்தும் கருவிகளாகவே பயன் படுத்தினார். அவரை விட சிறந்த பல கதாசிரியர்கள் தமிழிலேயே உண்டு. ஆனால் அவர்களில் தெருவில் இறங்கி பணி செய்தவர்கள் அவர் போல் யாரும் இல்லை.
அடங்காத மனைவி, வேலைக்காரி, மாமனார், மாமியார் பற்றிய ஜோக்குகளை ரசித்தும், பாலுறவை மட்டுமே பகிரங்கமாகவும், மறைவாகவும் கேளிக்கையாகக் கொண்டு தன் மனைவி மட்டுமே கற்புக்கரசியாய் இருக்க வேண்டும், அடுத்தவீட்டுப் பெண் தனக்குக் கிடைக்க மாட்டாளா என்கிற எதிர்பார்ப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பான்மையோரைக் கொண்ட ஒரு சமுதாயத்தில் அவர் இந்தக் கதைகளையெல்லாம் அந்த சமுதாயத்தைத் திருப்தி செய்யவே நடத்தப்பட்ட ஜனரஞ்சகப் பத்ரிகைகளில் எழுதினார்.
அவர் எழுதுவது எதற்காக என்று அவரே சொல்வது இங்கே :- (இந்த நீர்க்குமிழி வாழ்வில் மகத்தான விஷயங்களாபவை அவை நிகழ வேண்டுமென்பதற்காக ஒருவர் மூலம் வாழ்க்கையே சகலத்தையும் அமைத்துக் கொடுப்பதுதான்.) அதற்கு இந்த லின்க் ஒரு உதாரணம்.

அவரது கதைகள் பற்றிய அபிப்பிராயங்கள் எப்படி இருந்த போதிலும், இன்னொரு ஜே.கே. யான ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றி அவர் சொன்னது போல, “இவர் எல்லோரையும் ஏதோ ஓர் இடத்தில் தொட்டு விடுகிறார்.” அதனால்தான் இவரது அபிமான வட்டத்தில் சைவத் தமிழ் அறிஞர் சேக்கிழார் அடிப்பொடி டி. என். ராமச்சந்திரனாரும், வைணவத் தமிழ் அறிஞர் கம்ப ராமர் என அழைக்கப்பட்ட இராமராஜ ரெட்டியாரும், கி. வீரமணியும், இளையராஜாவும், கலைஞர் கருணாநிதியும், கவிஞர் கண்ணதாசனும், ஜெயமோகனும், வைரமுத்துவும்,  குடியரசுத் தலைவரும், ஆட்டோ ஓட்டுனரும் இருக்கிறார்கள்.
jeyakanthan
அவரது பெயரை சொன்னதால் எனக்கு ஆரணியிலும், திருச்சியிலும், கோவையிலும், சென்னையிலும்  80 வயதை நெருங்கும் திரு. பத்மநாபனிலிருந்து இளைஞரான சுகா வரைக்கும் நண்பர்கள் கிடைத்தார்கள்.பாரதியின் கவிதா மண்டலத்தில் ஜெயகாந்தனைச் சேர்ந்தவர்கள் நாங்கள். வாழ்க்கையைப் புரிந்துகொள்ள, நேர்மறையாக இருக்க, யார் மீதும் எதன் மீதும் துவேஷம் இல்லாமல் இருக்க, தமிழ், பாரதம் போன்ற கருத்துருவாக்கங்களின் மீது மெய்யான மதிப்பு வைக்கக் கற்றுத் தந்தவர் அவர்.
முதல் காதல் என்று ரொம்பவும் அடிபட்ட விஷயம் ஒன்றுண்டு. இது ஆண் பெண்ணுக்கு இடையில் வருவதுமட்டுமில்லை. ஓர் ஆளுமை, ஒரு கருத்து, ஓர் இடம் இவற்றோடு வருவதும் கூட. தாயாரின் சமையல் பற்றிக் கூட இப்படி எல்லோருக்கும் முதல் காதல் உண்டு. அதனால்தான் “அன்னையோடு அறுசுவை உண்டி போம்” என்றிருக்கிறது. அது போல் ஜெயகாந்தன் எங்களுக்கு முதற்காதல். முதற்காதல் என்கிற உணர்ச்சிச் சிடுக்கை நாட்பட நாட்பட, அறிவு சரி செய்கையில், கண்மூடித்தனமான உறவுகள் தவிர வேறெதிலும், உண்மை துலங்கும். அப்படி சரி செய்த பின்னும் அந்தக் காதல், வெளியில் நாம் என்ன பாசாங்கு செய்தாலும், உள்ளத்தில் மாற்றம் சிறிதுமின்றி ஒளிர்வது ஒரு சில இடங்களில்தான். அது மாதிரியான முதற்காதல் ஜே.கேயுடனானது. அவர் எழுத்துகளை அவரது பேச்சுகள் மங்கச் செய்யவில்லை. அவருடனான நேரடித் தொடர்புகள் அவர் எழுத்தால் விளைந்த அவர் மீதான நன் மதிப்பைக் கூட்டியனவேயன்றி சற்றும் குறைக்கவில்லை. உலக அளவில் அவரை விட சிறந்த கதைகளை எழுதியவர்கள் உண்டு. அவரைவிட சமூகத்தில் களப்பணி ஆற்றியவர்கள் உண்டு. சிந்தனைத் துறையில் உச்சங்களைத் தொட்டவர்கள் உண்டு. சினிமா எடுத்தவர்கள் உண்டு. ஆனால் இவ்வனைத்துத் துறைகளுக்கும் எங்களை அழைத்துச் சென்றவர் ஜெயகாந்தன். அனைத்தும் தழுவிய அந்தத் துறையை ஆன்மீகம் என்று சொல்லலாம். எங்கள் முதல் ஆன்மீக ஆசான் ஜெயகாந்தன்.
(முற்றும்)
************
#
“80 வயது நிரம்பியவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று அழைக்கிறோம். ஆயிரம் பிறை என்பதை எப்படிக் கணக்கிடுவது? ”
” 80 வயது 10 மாதம் ஆனால், ஆயிரம் பிறையை எட்டிவிடும். 80 வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். சில வருடங்களில் 13 சந்திர தரிசனம் நிகழும். 80 வருஷத்தில் 30 சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990 வரும். கருவிலிருக்கும் பத்து மாதத்தில் பத்து சந்திர தரிசனத்தையும் சேர்க்கும்பொழுது 1000 பிறைகள் நிறைவுபெறும் ”
* திருச்சியைச் சேர்ந்த திரு மோதி ராஜகோபால், ஆங்கிலத்திலும், தமிழிலும் மெத்தப் படித்தவர். தொழிலதிபர். பரம்பரையான செல்வந்தர். வாழ்வின் நுணுக்கங்களையும் சிக்கல்களையும், உலகத்தின் ஏற்ற இறக்கங்களையும். வியாபார தாத்பர்யங்களையும், நன்கு அறிந்த அறிந்த அனுபவசாலி. ஜே. கே.யின் “ஜெய ஜெய சங்கரா” தொடர் நூல்களை ‘மோதி பிரசுரம்’ என்கிற பெயரில் வெளியிட்டவர். இக்கட்டுரையில் அவரிடமிருந்து அறிந்த செய்திகளையும் ஆங்காங்கே தந்திருக்கிறேன்.

Series Navigation<< சி சு செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – நிறைவுப் பகுதி.அசோகமித்திரன் தந்த கதைப் புத்தங்களின் கதை >>

0 Replies to “ஆயிரம் பிறை கண்ட அரிமா! – ஜெயகாந்தன்”

Leave a Reply to Meenakshi BalganeshCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.