வெண்முரசு – ஒரு பார்வை

0000 VENMURASU HEADER 01

வெண்முரசு- ஒரு பொதுப்பார்வை

நேற்றுதான் தொடங்கியது போல் இருக்கிறது ஜெயமோகனின் மகாபாரத ஆக்கமான வெண்முரசு. அவரே கூறியிருக்கும்படி, இது 10 வருட செயல்திட்டம். ஆண்டுக்கு ஒரு புத்தகம் என்ற கணக்கில் பத்து புத்தகங்கள் வர வேண்டும். ஆனால் தொடங்கிய 7 மாதங்களிலேயே 3 புத்தகங்கள் வந்துவிட்டன. சுமார் 2500 பக்கங்கள் அளவுக்கு எழுதியாயிற்று. இதற்கிடையே பல கட்டுரைகள், கேள்வி பதில்கள், விவாதங்கள், வெண்முரசு பற்றிய கேள்விகளுக்கென்றே தனியாக ஒரு தளம், இலக்கியச் சந்திப்புகள் மற்றும் நெடும்பயணங்கள். ஜெயமோகனின் ஆற்றலும் உழைப்பும், அனைத்துக்கும் மேலாக புறச்சூழல் எப்படி இருந்தாலும் கவனம் குலையாத அவரது படைப்பூக்கமும், இதுதான் யோக மரபில் சொல்லப்படும் ஏகாக்கிரக நிலையோ என்று பிரமிக்க வைக்கின்றன.
இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு புத்தகம் வந்தால் அது குறித்த ஒரு பார்வை முக்கியமான இதழ்களில் வருவதற்கு ஆகும் காலத்தை எழுத்தாளன் கணக்கில் எடுத்துக் கொண்டால் எழுதுவதை விட்டு விடலாம் என்றே தோன்றும். ஆனால் ஜெயமோகன் அப்படி விடக்கூடியவரல்லர். மேலும், அவர் எழுதுவதைத் தொடர்ந்து வாசித்து, உடனடி எதிர்வினையாற்றும் தீவிர வாசகர்கள் இருப்பதும் ஒரு மிகப்பெரிய பலம். ஏன், அவரை ஒவ்வொரு நாளும் வாசிப்பவர்களில் நானுமே ஒருவன். என் அன்றாட நிகழ்ச்சி நிரலில் காலை ஆறரையிலிருந்து ஏழு மணிக்குள் நிச்சயமாக வெண்முரசு பாராயணம் உண்டு. அந்த அரை மணி நேரத்தில் சமையற்கட்டு பக்கமிருந்து எத்தனை சத்தம் வந்தாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை.
எத்தனை முறை படித்தாலும், நாடகமாகவோ திரைப்படமாகவோ பார்த்தாலும் அலுக்காத ஒன்று மகாபாரதம். நவீன காலத்தில் அது பல இந்திய மொழிகளில் பலவாறு மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் நான் மொழியாக்கங்கள் வழியே படித்திருப்பவை கன்னடத்தில் பைரப்பாவின் பர்வம், மலையாளத்தில் இரண்டாமிடம் (எம் டி வி), இனி நான் உறங்கலாமா (பி.கே பாலக்ருஷ்ணன்) மராத்தியில் யயாதி (காண்டேகர்).
ஆனால் ஏனோ மகாபாரதம் தமிழ் இலக்கியவாதிகளைப் பெரிதும் கவரவில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் ராஜாஜி எழுதியது வியாசபாரதத்தின் சுருக்கமான நேரடி தமிழாக்கம், ராஜாஜியின் தனிக்கற்பனை கலவாத நூலென்பதால் அதை மறு ஆக்கம் என்று சொல்ல முடியாது. எம். வி வெங்கட்ராமின் நித்யகன்னி ஒரு நாவல்தான், ஆனால் பாரதத்தின் ஒரு சிறு பகுதியைத்தான் அவர் தொட்டிருக்கிறார். எஸ்.ராவின் உபபாண்டவம் நான் மேலே சொன்ன மறு ஆக்கங்களின் தரத்திலும் வரிசையிலும் வைக்கத் தகுந்த படைப்பாகவே தோன்றவில்லை. பாரதம் பற்றிய சிற்சில சிறுகதைகளும் தமிழில் உண்டு. இவற்றுள் ஜெயமோகனின் திசைகளின் நடுவே, இறுதி விஷம், பத்ம வியூகம், களம், அதர்வம், நதிக்கரையில் ஆகிய மகாபாரதச் சிறுகதைகளே நான் தமிழில் படித்த மகாபாரத மறு ஆக்கங்களில் சிறந்தவை என்று கருதுகிறேன்.
ஒருவிதத்தில் அந்தச் சிறுகதைகள் எல்லாமே ஓர் ஒத்திகைதான், ஜெயமோகன் முழு மகாபாரதத்தையும் தன் மொழியில், தன் பாணியில் எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட சிறு முயற்சிகளே அவை என்று சொல்லலாம். அவர் முழு பாரதத்தையும் எழுதுவது காலப்போக்கில் தவிர்க்க முடியாத நிர்பந்தம் என்றே எப்போதும் தோன்றும். ஆகவே அவர் வெண்முரசு என்ற பெயரில் அந்தப் பணியைத் துவங்கியது மிகவும் இயல்பாகவே இருக்கிறது. தற்காலத் தமிழ் எழுத்தாளர்களில் அவரிடம் மட்டுமே அதற்கான மொழிவளமும் சொல்லாக்கத் திறனும் நடையும் அமையப் பெற்றிருக்கிறது. அவை அவரது பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியினாலும் அவருக்கே உரிய இயல்பான தனித்திறனாலும் அமைந்தவை. சுந்தர ராமசாமி போன்ற ஓர் அசல் நவீனத்துவ எழுத்தாளரோடு முரண்பட்ட பார்வை கொண்டவராகத் தன்னை அவர் நிறுவிக் கொண்டதும் இதற்கு ஒரு காரணியாக இருக்கலாம். நவீனத்துவத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டவர் ஜெயமோகன்.
அவருக்குச் சற்றே முந்தைய தலைமுறையில் நாஞ்சில் நாடனுக்கு தமிழின் பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி அதிகமும் உண்டு. அவர் இது போன்ற ஒரு முயற்சி செய்திருக்கலாம். ஆனால் வியப்பளிக்கும் வகையில், அவர் மகாபாரதம் குறித்து அவரது கட்டுரைகளில்கூட ஏதும் எழுதியதாகக் எனக்கு நினைவில்லை. அவர் மனம் கம்பனில் தோய்ந்தது. ஆக, ஜெயமோகனும் வியாசனுமே ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள்.
வெண்முரசு பற்றிப் பேசும்போது மனதில் எழும் முதல் கேள்வி, ஒரு படைப்பு முழுமையடைவதற்கு முன் அதற்கு விமர்சனம் எழுதுவது சரியாகுமா? ஆனால் அப்படிப் பார்த்தால் வெண்முரசுக்கு இன்னும் 10 வருடங்களுக்குப் பின்தான் விமர்சனம் எழுத வேண்டும். இதுவரை வெளிவந்துள்ள மூன்று புத்தகங்களுமே, நடையிலும் உள்ளடக்கத்திலும் வெவ்வேறு தொனியைக் கொண்ட தனித்தனி நாவல்கள் என்றே ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆகையால் ஒவ்வொரு புத்தகமும் நிறைவடைந்த உடனேயே அதைப் பற்றிய பார்வைகள் வருவது இயல்பானதே, அதில் தவறொன்றுமில்லை.
நானறிந்தவரை மகாபாரதம் மூன்று வகைகளில் மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது (20ம் நூற்றாண்டில்). ஒன்று, மிகவும் சாமானிய யதார்த்த தளத்தில் அதன் அமானுஷ்ய, நம்ப முடியாத நிகழ்வுகளை முற்றிலும் அகற்றிவிட்டு எழுதப்பட்ட மகாபாரதம். இதன் சிறந்த உதாரணம் பைரப்பாவின் பர்வம். பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரத நாடகமும் அதன்பின் வந்த திரைப்படமும்கூட இந்த வகையைச் சார்ந்தவை. மகாபாரதத்தை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் கோணத்தில் பார்த்து மனித உணர்ச்சிகளின் போராட்டக்களமாகவும் அறச் சிக்கல்களைப் பேசுவதாகவும் பார்ப்பது இரண்டாம் வகை அணுகல். எம்டிவியின் இரண்டாமிடம் மற்றும் பி. கே. பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும் இவற்றுக்குச் சிறந்த உதாரணங்கள். மூன்றாவது பார்வை, மார்க்சிய பொருள்முதல்வாத வரலாற்றுவாத அணுகுமுறை. இது ராகுல் சாங்கிர்த்யாயன் வழி, அவர் நானறிந்த வரையில் பாரதத்தை முழுமையான ஒரு படைப்பாக எழுதவில்லை என்றாலும்கூட. தமிழில் அருணன் எழுதிய பூரு வம்சம் இந்த வகையின் அவ்வளவாக வெற்றி பெறாத ஓர் உதாரணம். திரைப்படங்கள் மெகா சீரியல்கள் தனி வழி. ஆனால் அவற்றிலும் சோப்ராவின் மகாபாரதத்தில் மாசூம் ராஜாவின் உரையாடல்கள் குறிப்பிடத்தகுந்த இலக்கிய அந்தஸ்து கொண்டவை. அதை வெங்கட் அழகாகவே தமிழாக்கம் செய்துள்ளார்..தமிழில் வந்த கர்ணன் மாயா பஜார் போன்ற திரைப்படங்களும் ரசிக்கத் தக்கவயாகவே இருந்தன. இவை தவிர, மிக அண்மையில் சோ, மகாபாரதத்தை ஓர் இந்து தர்ம நூலாக மிகச் சிறந்த முறையில் விவாதித்து எழுதியிருக்கிறார்.
இவற்றில் ஜெயமோகனின் வெண்முரசு எந்த வகையைச் சேரும்? ஒரு கோணத்தில் இது ஒரு தனிவகை, இன்னொரு கோணத்தில் மேற்சொன்ன அத்தனை வகைகளையும் உள்ளடக்கியது.
ஜெயமோகன் பெரிதினும் பெரிது படைப்பதையே தனது லட்சியமாகத் தொடர்ந்து முன்வைப்பவர். சின்னஞ்சிறு கதைகள் பேசுவதில் விருப்பமில்லாதவர். அதனால் அவரது மகாபாரதம் நிச்சயமாக ஒரு மிக விரிந்த தளத்தில் இருக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியது. அவர் அதைத் தனி மனிதர்களின் நுட்பமான உணர்ச்சிப் போராட்டங்களின், அறச்சிக்கல்களின் அரங்கமாகவும் மிக நுட்பமான, உக்கிரமான அரசியல் சூதாட்டக்களமாகவும் பெரும் குலக்கலப்புகளின், போட்டிகளின், வரலாறுகளின் மூலம் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கான இந்தியச் சமூகத்தின் அடிப்படை கட்டுமானங்கள் உருவாவதை சித்தரிக்கும் சான்றாவணமாகவும் பேரரசுகள் உருவாவதற்கு அடிப்படையான வணிகப் பொருளாதாரச் சக்திகளின் எழுச்சிகளையும் போட்டிகளையும் காட்டும் சமூக வரலாற்று அறிவியல் பார்வையும் கொண்ட பல வகைகளிலும் முழுமையடைந்த மிகப்பெரும் படைப்பாகவே வெண்முரசைப் படைக்க எண்ணுகிறார் என்பதை இந்த முதல் மூன்று நாவல்களிலிருந்து நாம் கண்டுகொள்ளலாம்.
அதனாலேயே இதுவரை எழுதப்பட்ட மறு ஆக்கங்களில் இல்லாத அளவுக்கு பாரதத்தின் நிலப்பகுதிகளையும், பருவ நிலைகளையும், கனிம வளங்களை எல்லாமும்கூட சித்தரித்துக் காட்டக்கூடிய ஒன்றாகவே இந்த நாவல்கள் உருவாகி வருகின்றன. இதில் எவ்வளவு தூரம் அவர் வெற்றிப் பெற்றிருக்கிறார் என்பதே கேள்வி. இதற்கான விவாதங்கள் ஒவ்வொரு நாவலையும் முன்வைத்து ஓரளவேனும் விரிவாகச் செய்யப்பட வேண்டும் – ஒரு முதல் முயற்சியாக முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் ஆகிய மூன்று நாவல்களையும் இந்த இதழில் உள்ள பிற கட்டுரைப் பகுதிகளில் தனித்தனியாகப் பேசியிருக்கிறேன். இங்கு இது குறித்துச் சில அடிப்படை கருத்துகளை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
புனைவாகவோ தொன்மமாகவோ நின்றுவிடாமல் அதற்கப்பால் இந்திய வரலாற்று ஆய்வுகளையும் அறிவியல் தரவுகளையும் இந்திய நிலவியலையும் கருத்தில் கொண்டு இந்திய சமூக வரலாற்றுச் சித்தரிப்பாக வாசிக்கப்படக்கூடிய மெய்ம்மை கொண்டதாக எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான் வெண்முரசின் தனித்தன்மை. பொதுவாகப் புனைவுகளில் தகவல் பிழைகள் போன்றவை முக்கியமானவை அல்ல என்ற ஒரு கருத்து உண்டு. அது ஓரளவுக்குத்தான் நியாயம் என்பேன். அதிலும் பிற புனைவுகளைக் காட்டிலும் முழுமையை நோக்கிச் செல்லும் வெண்முரசு போன்ற ஒரு நாவலுக்கு, அது தன்னுள் கொண்டிருக்கும் நம்பகத்தன்மை மிக முக்கியமானதாகிறது.
எந்த ஒரு புனைவிலும் அதன் படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையே குறைந்தபட்ச புரிந்துணர்வு ஒன்று உண்டு. வாசகன் அவனது தரப்பிலிருந்து தன் சுயவிருப்பத்தின் பேரில் அவநம்பிக்கையைத் தளர்த்திக் கொண்டு அந்தப் படைப்புக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கிறான் (Willing Suspension of Disbelief). ஒரு புனைவில் இது இவ்வாறாக, இந்தக் காலத்தில், இந்த இடத்தில் நிகழ்ந்தது என்று படைப்பாளி காட்டும்போது அதை வாசகன் அதிக அளவில் கேள்விகள் கேட்காமல் ஏற்றுக்கொண்டு அந்தப் புனைவின் உலகில் திளைக்கும்போதுதான் படைப்பு அந்த வாசகனின் மனதில் வெற்றிகரமான ஒன்றாக நிலை பெறுகிறது. மாறாக இது இவ்வாறு, இந்தக் காலத்தில் இந்த இடத்தில் நிகழ்ந்திருக்க சாத்தியமில்லை என்று ஒரு வாசகன் மனதில் ஐயம் எழ இடம் கொடுக்குமேயானால் அங்கு புனைவின் ரசவாதம் நிகழ்வதில்லை. இது போன்ற ஐயங்கள் எழ இடம் கொடுக்காவண்ணம் படைப்பை எழுதிச் செல்வதே ஒரு படைப்பாளியின் முன் உள்ள முதன்மைச் சவால். வெண்முரசு நாவலில் சில இடங்களில் இந்த willing suspension of disbelief கூடுதலான சோதனைக்கு உள்ளாகிறது என்பது என் எண்ணம். இந்த இடங்கள் நாவலை ஒரு செவ்வியல் காவியம் என்ற உயர்நிலையில் இருந்து, என்னளவில் ஒரு சாகசப் புனைவு என்ற நிலைக்கு ஆங்காங்கே இறக்கிவிடவும் செய்கிறது.
ஆனால் இது போன்ற இடங்கள் சிலவே. மேலும் இந்த ஐயங்கள் வினாக்கள் எல்லாமே என் தனிப்பட்ட ரசனையிலிருந்தும் அறிதலில் இருந்தும் எழுபவை. இன்னொரு வாசகருக்கு இவை முழுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகவும் இருக்கலாம். அதேபோல் எனக்கு இதில் பிடித்து மற்றவர்களுக்கு ஓரளவுக்குப் பிடிக்காமல் போகக்கூடிய ஒன்றையும் நான் சொல்லலாம் என்று நினைக்கிறேன்- சிலருக்கு இந்த மூன்று புத்தகங்களுமே வார்த்தைப் பெருக்கு கொண்டவையாகத் தோன்றலாம். ஆனால் இது போன்ற ஒரு நாவலில் அதற்கு இடமுண்டு என்றே நினைக்கிறேன். இந்த மூன்று நாவல்களிலுமே பல வரிகள் மேற்கோள்களாகப் பயன்படுத்தக்கூடிய அழகுடன் தனித்து நின்று மின்னுகின்றன. இதைச் சொல்லும்போது அ.முத்துலிங்கம் சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோ சொல்வதாகச் சொன்ன ஒன்று நினைவுக்கு வருகிறது. ஆலிஸ் மன்றோ கதையை எழுதி முடித்தபின் மீண்டும் படிக்கும்போது ஏதாவது ஒரு வரி தனி அழகோடு இருப்பது போல் தோன்றினால் உடனே அதை நீக்கி விடுவாராம். எல்லாருக்கும் இப்படி இருக்க வேண்டியதில்லை. என்னைப் பொறுத்தவரை, ஜெயமோகனின் மொழி அழகு தீசலில் உள்ள ருசி போல் படிப்பதற்குக் கிறக்கமாகவே உள்ளது. அதிலும் இப்போது வரும் நீலம் தொடரின் மொழி மூச்சுத் திணற வைக்கிறது.
இந்த மூன்று நாவல்களில் முதல் இரண்டும் புத்தகங்களாக வெளிவந்துவிட்ட நிலையில் இவற்றை தமிழ் இலக்கிய உலகம் எதிர்கொண்ட விதம் என்ன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. முதற்கனல் வெளிவந்து நான்கைந்து மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை ஒரு நல்ல விமர்சனம்கூட வரவில்லை என்பது வருத்தமளிக்கக்கூடியது. வந்திருக்கும் விமர்சனங்கள் எல்லாம் என் போன்ற வலைப்பதிவர்கள் செய்ததுதான். நான் எதிர்பார்ப்பது மகாபாரதத்தில் நல்ல வாசிப்புள்ள, பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி பெற்ற, இந்திய தத்துவ இயலில் நல்ல பரிச்சயம் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்வினைகள். ஆனால் அப்படி எதுவும் இல்லை.
தமிழின் முன்னணி இலக்கியப் பத்திரிக்கைகளோ இப்படி ஒரு நிகழ்வு நடப்பதாகவே காட்டிக் கொள்வதில்லை. ஜெயமோகன் இதைத் துவக்கியபோது வாழ்த்து தெரிவித்த, ஆரம்ப அத்தியாயங்கள் குறித்துப் பாராட்டி எழுதிய தமிழ்ப் படைப்பாளிகள் யாரும் முழுமையான ஒரு விமர்சனம் எழுத இதுவரை முன்வரவில்லை என்பது வியப்பும் ஏமாற்றமும் தருகிறது. இத்தனைக்கும் ஜெயமோகன் தொடர்ந்து தமிழில் வரும் நல்ல படைப்புகளைக் கவனப்படுத்திக்கொண்டும் நிறைய சந்தர்ப்பங்களில் முழுமையான விமர்சனங்களையும் எழுதிக் கொண்டே இருப்பவர். காவல் கோட்டம், ஆழிசூழ் உலகு, மணல் கடிகை போன்ற நாவல்களுக்கு அவர் எழுதியுள்ள விமர்சனங்கள் காலம் கடந்து நிற்கும் வலிமை பெற்றவை. ஆனால் கடந்த 5-6 ஆண்டுகளில் வெளிவந்துள்ள அவரது படைப்புகள் குறித்த ஆழமான, காத்திரமான விமர்சனங்கள் வந்திருக்கிறதா என்று தேடிப் பார்க்கவேண்டிய நிலைதான் உள்ளது. அண்மையில் வெளிவந்த காலச்சுவடு செப்டம்பர் இதழில் அசோகமித்திரன் தன நேர்காணலில் வெண்முரசுப் பற்றி கூறியிருக்கும் கருத்தைப் பார்க்கும்போது இப்படியான விமர்சனங்கள் வராமலிருப்பதே மேல் எனவும் தோன்றிவிடுகிறது.
எது எப்படியாயினும் பத்து வருடங்களில் பத்து புத்தகங்கள் என்று ஆரம்பித்தது – முதல் வருடம் முடியும் முன்னரே நான்கு (ஐந்து?) புத்தகங்கள் வெளியாகிவிட்ட அதிசயத்தைக் கண்ட வியப்புடன் 10 வருடங்களின் முடிவில் என்னென்ன நிகழுமோ என்று பார்க்கப் பேராவலாகத்தான் உள்ளது.

oOo

முதற் கனல்- உரைநடையில் ஒரு காவியம்

Mudhal_Kanal_VennMurasu_Jeyamohan_Mahabharath_Books_Tamil_Literary_Fiction

ஜெயமோகனின் பாரதமான வெண்முரசின் முதல் நாவலான முதற் கனல் ஜனமேஜெயனின் சர்ப்ப சத்ர யாகத்தை நிறுத்தவரும் ஆஸ்திகன் தன அன்னை மானசா தேவியின் வேசர நாட்டிலிருந்து புறப்படுவதில் துவங்கி அவன் வெற்றியுடன் தாயிடம் திரும்புவதில் முடிகிறது. இடையில் வைசம்பாயனரின் சொல்லில் விரிகிறது பாரதம். வியாச பாரதத்தில் உள்ள பகுதியைப் பொறுத்தவரை சந்தனுவின் மரணத்தில் துவங்கி சிகண்டி பீஷ்மரை இன்னாரென்று அறியாமல் சந்தித்து தன்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள இறைஞ்சும் இடத்தோடு முடிகிறது.
வெண்முரசு நாவல் வரிசையில் முதல் புத்தகமாகிய முதற்கனலை நிச்சயமாக ஒரு காவியப் படைப்பு எனக் கூறலாம். காவியத்துக்குரிய கம்பீரம், நளினம், பாத்திர வார்ப்பு, தத்துவச் செறிவு, சொற்சுவை என பல வகைகளில் பிரம்மாண்டமான ஒரு படைப்பு இது.
இதன் கம்பீரம் மற்றும் பிரம்மாண்டம். இந்தப் பிரம்மாண்டம் என்பதை ஒரு திரைப்படம் குறித்துச் சொல்லும்போது எளிதில் விளக்கிவிடலாம். ஆனால் எழுத்தில் சற்று கடினம்தான், ஓர் உள்ளுணர்வாக வேண்டுமானால் உணர முடியும். இந்த உணர்வு தோன்றுவதற்கு ஒரு முக்கிய காரணம், ஆஸ்திகனின் அஸ்தினபுரி பயணக் காட்சிகள், கங்கையின் தோற்றம், விந்திய சாரலின் தோற்றம், சப்தசிந்துவின் வர்ணனை, பீஷ்மரின் தேசாந்திரக் காட்சிகள், சிகண்டி பீஷ்மரைச் சந்திக்கும் பாலை நில விவரணைகள் என்று பல நிலவியல் காட்சிகளின் சித்தரிப்பைச் சொல்லலாம். சிறுவயதில் டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென் ஹர் போன்ற படங்களில் திரையில் பார்த்த பிரம்மாண்டம் இங்கு வார்த்தைகளில் விரிவதைக் காண முடிகிறது.
காவியத்தன்மையின் மற்றொரு இயல்பைப் பார்த்தால், பாத்திரங்களின் சித்தரிப்பு அதியற்புதமாக அமைந்திருக்கிறது. பீஷ்மர், அம்பை, வியாசர், சிகண்டி, ஆகியோர் மீது புது வெளிச்சம் விழுகிறது என்றால், மகாபாரதத்தில் மிகச் சிறிய பாத்திரங்களாக வருபவர்கள் விரிவடைந்து துலக்கம் பெறும் அழகு குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய அம்சம்.
உதாரணமாக, விசித்திர வீரியன். முகலாய வரலாற்றில் பாபருக்கும் அக்பருக்குமான ஒரு காற்புள்ளியே ஹுமாயுன் என்று சொல்லப்படுவதுண்டு. அதைப்போல் சந்தனுவுக்கும் திரிதிராஷ்ட்ரன் மற்றும் பாண்டுவுக்கும் இடையே உள்ள காற்புள்ளி போலத்தான் வியாச பாரதத்தில் விசித்திரவீரியன் பாத்திரம் அமையும். ஆனால் முதற் கனலின் விசித்திர வீரியன் ஓர் அசாத்தியமான கற்பனை வீச்சுடன், மறக்க முடியாத ஒரு பாத்திரமாக, ஒளிமிகுந்த ஒரு வால் நட்சத்திரம் போல் ஜ்வலித்து அடங்குகிறான். முக்கியமாக அவன் தன் அணுக்கரான ஸ்தானகருடனும் அம்பிகையுடனும் நிகழ்த்தும் உரையாடல்களில் உள்ள கைப்பும் நகைச்சுவையும் அபாரம்.
அம்பையின் தாய் புராவதியின் துயரம். நான் படித்த எந்த பாரதத்திலும் அம்பையின் தாய் சித்தரிக்கப்பட்டதில்லை. ஆனால் முதற் கனலில் அம்பையின் தாய் புராவதியின் பாத்திரமும் அவரது துயரமும் முடிவும் மனதை அசைக்கின்றன. பிறகு அம்பையின் பூசகனாக வரும் படகோட்டி நிருதன்.
பாத்திரங்களுக்கிடையேயான உறவுகளின் நுட்பமும் தன்மையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. பீஷ்மருக்கும் அம்பைக்கும் இடையே இருப்பது ஆழமான வெறுப்பா அல்லது காதலா? சத்யவதிக்கு சித்ராங்கதன் எப்படி பொருள்படுகிறான்? சிகண்டிக்கும் பீஷ்மருக்குமான உறவு வியாசருக்கும் சுகருக்கும் இடையே உள்ளது, என்று அசைபோட வைக்கும் அம்சங்கள் ஏராளம்.
அம்பிகை மற்றும் அம்பாலிகையுடன் கூடியபிறகு வியாசர் கொள்ளும் ஆழமான மனக்கிலேசம் இதுவரை இலக்கியப் படைப்புகளில் காட்டப்படாத ஒன்று. தமிழகத்திலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கும், அஜீவக கருத்தின் ஊற்றினைப் போல காட்டப்படும் சாத்தன் எனும் முனிவருடனும் தன மகன் சுகருடனும் இது குறித்து அவர் மேற்கொள்ளும் உரையாடல்கள் மிக உயரத்தில் நிற்கின்றன. இதைப் போலவே அம்பை முதலான இளவரசிகளை விசித்திர வீரியனுக்காகச் சிறை கொள்ள, தான் போவதை பற்றி பீஷ்மர் கொள்ளும் தடுமாற்றம், அது குறித்து வியாசருடன் அவர் மேற்கொள்ளும் உரையாடலும். வியாசர் அங்கு சிபியின் கதையைச் சொல்வதும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் சித்திரகர்ணி என்னும் சிம்மம் கந்தினி எனும் பசுவுடன் யுகம் யுகமாக தான் கொள்ளும் உறவினை நினைவு கூர்ந்து அதை வேட்டையாடுவதும் அந்த நிகழ்விலிருந்து பீஷ்மர் அடையும் தெளிவும் ஓர் அற்புதமான தனி சிறுகதையாகவே உள்ளது.
காவியத்துக்குரிய தத்துவ ஆராய்ச்சி என்று எடுத்துக் கொண்டால், சித்திரகர்ணி, குஹ்யஜாதை என்ற சிங்கம் மற்றும் கழுதைப்புலியின் உரையாடல்கள் மற்றும் அவை உணர்த்தும், உண்பதும் உண்ணப்படுதலுமே இப் பிரபஞ்சத்தின் முடிவுறாத விளையாட்டு என்ற தரிசனம் உருவாகி வருவதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அதே போல் சுகப்பிம்ம ரிஷியும் வியாசனும் சந்திக்கும் இடம். விந்தய மலைப் பிரதேசத்தில் எங்கோ இருப்பதாகக் கூறப்படும் அந்த இடத்தின் வர்ணனையில் ஒரு புது உச்சத்தைத் தொடுகிறார் ஜெயமோகன். விசித்திர வீரியனின் நோய்தீர்க்க வரும் அகத்தியர் மரபில் வந்த ஒரு தென்னக முனிவரின் பாத்திரமும் குறிப்பிடத்தக்கது.
நாவலில் ஜெயமோகனின் எழுத்தில் கவித்துவம் ஒரு உச்சத்தை தொட்டு அங்கேயே தங்கி நிற்கிறது. எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். எனக்கு மிக மிகப் பிடித்த ஒன்று பீஷ்மனிடம் காதல் கொண்டு அவனிடம் திரும்பும் அம்பையுடன் சுவர்னை, சோபை, வ்ருஷ்டி என்று சொல்லப்படும், பெண்ணின் மாறும் பருவத்துக்கு உரிய தேவதைகள் ஊடாடும் தருணங்கள்.
இதில் ஜெயமோகன் புதிதாக உருவாக்கியிருக்கும் தமிழ் சொற்கள் குறித்தே தனியாக எழுதலாம். பிரசவ அறை என்பதற்கு ஈற்றரை, ஒப்பனை அறை என்பதைச் சொல்லும் அணியறை, சாபம் என்பதற்கு தீச்சொல், ஜாதகம் என்பதற்குப் பிறவி நூல், அமாவாசையை குறிக்கும் கருநிலவு நாள், மௌன விரதம் என்பதற்கான பேசா நெறி என்று உடனடியாக நினைவுக்கு வருவது தவிர இன்னும் நிறையப் புதுச் சொற்களை உருவாக்கிக் கையாள்கிறார் ஜெயமோகன். மேலும் அத்தியாயங்களின் பெயர்களுமேகூட கவித்துவமும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளும் கொண்டவை.
இறுதியாக, ஆனால் முக்கியமாக குரு வம்சத்தை அழிக்கும் பெருவல்லமை கொண்ட பெருநெருப்பாகிய பெண்ணின் வஞ்சினம் என்பதைக் குறிக்கும் முதற் கனல் என்ற அந்தத் தலைப்பு. மொத்தத்தில் முதற்கனலில் காவியத்தன்மை முழுமையாகக் கைவரப் பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.
இவற்றைச் சொன்ன அதே சமயம முதற் கனலில் எனக்குக் குழப்பம் ஏற்படுத்திய, புரிந்துகொள்ள முடியாத சில அம்சங்களும் உண்டு.
சிகண்டி அம்பையின் மறுபிறவியாக இல்லாமல் வளர்ப்பு மகனாக ஏன் இருக்க வேண்டும்? இதை மர்மம் கலைத்தல் என்று எடுத்துக் கொள்வதா?
இது குறித்துக் கொஞ்சம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. நிறைய இடங்களில் ஜெயமோகன் யதார்த்தத்தை மீறிய இடங்களைச் சித்தரிக்கும்போது அவற்றின் மீயதார்த்த அம்சங்களை நீக்கவே செய்கிறார். ஆனால் அது ஓர் ஒழுங்கமைவு பொருந்தப்பெற்ற அணுகுமுறையாக இருப்பதில்லை. உதாரணமாக, சிகண்டியை அம்பையின் மறுபிறப்பாகக் காட்டுவதை அவர் தவிர்ப்பதற்கு அது யதார்த்தத்தை மீறிய ஒன்று என்பதுதான் ஒரே காரணம் என்று புரிகிறது. ஆனால் சிங்கங்களும் கழுதைப்புலிகளும் நாகங்களும் உயர் தத்துவமேகூடப் பேசும் ஒரு படைப்பில் இது மட்டும் ஏன் தவிர்க்கப்பட வேண்டும்? இந்தச் சிக்கல் முதற் கனலைவிட அடுத்த நாவலான மழைப்பாடலில் இன்னும் அதிகம்.
மீண்டும் மீண்டும் வரும் நாகர்கள். பாரதத்தில் நாகர்கள் கணிசமாகவே குறிப்பிடப்படுகிறார்கள், புராதன இந்தியாவில் அவர்கள் ஒரு தனி இனம் என்று கொள்வதற்கும் இடம் உண்டு. இருப்பினும் முதற் கனலில் வரும் நாகர் பாத்திரங்கள் ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தது போல், இது மகாபாரதமா அல்லது நாகபாரதமா என்றே கேட்க வைக்கிறது. உதாரணமாக தாக்ஷாயனியின் தந்தை தக்ஷன் உட்பட பலரும் ஏன் நாகராக இருக்க வேண்டும்? இந்த இடத்தில் ஜெயமோகன் பிரஜாபதியான தட்சனையும், நாக அரசனான தக்ஷகனையும் குழப்பிக் கொள்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. ஆஸ்திகன் ஜனமேஜெயனிடம் தானம் கேட்குமிடத்திலும் தக்ஷகனின் உயிர் என்பதற்குப் பதிலாக தட்சனின் உயிர் என்றே வருகிறது.
யஜ்னசேனன் என்னும் துருபத மன்னனின் பாத்திரம். நான் படித்தவற்றுள் எல்லாம் இவன்தான் சிகண்டி, திரௌபதி, திருஷ்டத்யும்னன் உட்பட 11 மக்களின் தந்தை. ஆனால் ஜெயமோகன் படைப்பில் ஏனோ சிகண்டி யஜ்னசேனனின் சகோதரன் முறையாகக் காட்டப்படுகிறான்.
வியாச பாரதத்தில் இருப்பது போலவே எழுத வேண்டும் என்பதோ அல்லது அதிலிருந்து விலகவே கூடாது என்பதோ அல்ல. ஆனால் அத்தகைய விலகல்களுக்கு, அதிலும் குறிப்பாக முக்கியமாக உறவு முறைகளையேகூட மாற்றுவதற்கு மிக வலுவான காரணங்கள் தேவை. அது பொருந்தியும் வர வேண்டும். உதாரணமாக, அம்பை பீஷ்மன் மேல் காதல் கொள்வதாகக் காட்டியிருப்பதும் பீஷ்மனும் நிலைதடுமாறுவதும் பின் இறுகி தன்னிலைக்குத் திரும்புவதுமாக இருப்பதும், நிராகரிக்கப்பட்ட காதல் பெரும் வன்மமாக மாறுவதும் பொருத்தமானதாகவே இருக்கிறது. ஆனால் சிகண்டி- துருபதன் உறவு முறையை மாற்றியது குறித்து இதுவரை எழுதியுள்ளதில் அப்படியான எந்த காரணமும் எனக்குத் தெரியவில்லை.
நாவல் ஆஸ்திகன் தன் இருப்பிடம் திரும்புவதோடு முடிவதில் ஒரு முழுமை இருந்தாலும் வைசம்பாயனரின் பாரதக் கதை முடியும் இடம் (பீஷ்மர்- சிகண்டி சந்திப்போடு) சற்றே ஏமாற்றம் தருவதோடு வலிந்து செய்தது போலவும் இருக்கிறது. இது ஒரு புறமிருந்தாலும் ஒரு முறை படித்து முழுவதும் அள்ளி விடமுடியாமல் பலமுறை படித்துத் திளைக்க வேண்டிய ஒரு படைப்பு இது என்று நிச்சயமாகக் கூறுவேன்.

oOo

மழைப்பாடல் – பெண்குரல்கள்

Maha_Bharat_Ven_Murasu_Malai_Paadal_Jeyamohan_Book_Tamil_Fiction_Lit_Covers
மகாபாரதத்தில் ஸ்திரீ பர்வம் என்ற ஒரு தனி பர்வமே உண்டு, யுத்தம் முடிந்ததற்குப் பின்னால். ஆனால் ஜெயமோகனின் வெண் முரசு இரண்டாவது புத்தகத்தையே ஸ்திரீ பர்வம் என்று கூறலாம். அந்த அளவுக்கு மழைப்பாடலில் பெண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பீஷ்மன் தன் தேசாந்திரத்தை முடித்துக்கொண்டு அஸ்தினபுரி திரும்புவதில் துவங்கி பாண்டுவின் மரணத்துக்குப் பின் சத்யவதி, அம்பை, அம்பாலிகை ஆகியோர் வனம் புகுவதில் முடியும் மழைப்பாடல் முழுக்க முழுக்க சத்யவதி,அம்பிகை, அம்பாலிகை காந்தாரி மற்றும் குந்தி ஆகியோருக்குரிய களம்தான்.
முதற் கனல் நாவலிலிருந்து நிச்சயமாக ஒரு வேறுபட்ட தொனியில்தான் இதை எழுதியிருக்கிறார் ஜெயமோகன். இதில் மகாபாரதம் நடக்கும் நிலவியல் மற்றும் காலம் குறித்த விரிவான நுணுக்கமான சித்தரிப்புகள் வருகின்றன. முதற் கனல் மலையிலிருந்து ஆர்பரித்துக் கொட்டும் அருவி என்றால் மழைப்பாடல் சமவெளியில் விரிந்து பரந்து எளிதில் கண்டுகொள்ள முடியாத வேகமும் ஆழமும் கொள்ளும் பெரும் நதி என்று சொல்லலாம்.
இந்த இரண்டாவது நாவலில் ஜெயமோகன் ஒரு மிகப் பெரும் சவாலை ஏற்றுக் கொள்கிறார். ஒன்று, அஸ்தினபுரியின் அரண்மனை மனிதர்களின் தனிப்பட்ட ஆசைகள், போட்டிகள், உறவுகள், பிணக்குகள் ஆகியவற்றின் சித்திரம். இன்னொன்று, மகாபாரதத்தை அதன் காலகட்டத்தின் நிலவியல் அரசியல் பொருளியல் மற்றும் சமூகப் பின்னணிகளோடு பொருத்திப் பார்க்கும் ஒரு பார்வை. இதற்கு முன்னான மறு ஆக்கங்களில் இந்த இரண்டையும் இணைத்துப் பார்க்கும் பார்வை இல்லவே இல்லை என்றே சொல்லலாம்.
மேலே சொன்ன இந்த இரு சவால்களில் முதலாவதில் முழு வெற்றி அடைகிறார் ஜெயமோகன். வியாச பாரதத்தில் வெறும் அடிக்குறிப்புகள் போலவே காணப்படும் அம்பிகை, அம்பாலிகை ஆகிய இரு பாத்திரங்களும் சரி, ஓரளவுக்குச் சித்தரிக்கப்பட்டிருக்கும் சத்யவதியின் பாத்திரமும் சரி, ஜெயமோகனின் பெரும் கற்பனையால் தமிழ் புனைவுலகில் இதுவரை வந்துள்ள எந்த பெண் பாத்திரங்களுக்கும் இணையாகத் தனி பெரும் இருப்பை அடைகிறார்கள். மீனவர் குலத்தில் பிறந்து அஸ்தினபுரியின் க்ஷத்ரிய குலத்தில் வாழ்க்கைப்படும் சத்யவதியின் கனவுகளும் லட்சியங்களும் மனவுறுதியுமே அஸ்தினாபுரியின், பாரதத்தின் வரலாற்றைச் செலுத்தும் விசைகளாகும் சித்திரம் அற்புதமாக வளர்ந்து வந்திருக்கிறது. பீஷ்மனும்கூட மீற முடியாத மிகப் பெரும் ஆளுமையாக சத்யவதி உருவாகியிருக்கிறாள். இவ்வளவு உறுதியும் தன்னம்பிக்கையும் இலட்சிய வேகமும் ராஜ தந்திரமும் கொண்ட சத்யவதியினுள் அழியாமல் இருக்கும் எளிமையான மீனவப் பெண்ணும், வயதானவருக்கு வாழ்க்கைப்பட்ட ஒரு இளம் பெண்ணும் இருப்பதைப பார்க்க முடிகிறது. பின், கடைசியில் வனம் புகுவதற்கு முன் முற்றிலும் கணிந்து ஒரு எளிய மூதன்னையாகவே தோற்றமளிப்பதும் அதே சத்யவதிதான் என்று எண்ணுகையில் பிரமிப்பு ஏற்படுகிறது.
பீஷ்மரால் வென்றெடுக்கப்பட்டு அஸ்தினாபுரிக்குள் முதிரா இளம் பெண்ணாக வரும் அம்பிகையும், தன் மூத்த சகோதரியின் கை பற்றி கிட்டத்தட்ட ஒரு சிறுமியாகவே விரிந்த விழிகளுடன் வரும் அம்பாலிகையும், ஒருவொருக்கொருவர் பார்த்துக்கொள்ளக்கூட விரும்பாதவர்களாக ஆவதும் பின் பாண்டுவின் மரணம் ஏற்படுத்தும் பெரும் வெறுமையில் தாம் அதுவரை கொண்ட பெரும் பகைமை ஒழிந்து மீண்டும் தாயும் சேயும் ஆவதும் மானுட அகங்களின் ஆழங்கள் நாம் ஒருபோதும் இதுவே இறுதி என்று அறியவொண்ணாத ஆட்டங்கள் நிகழும் களம் என்பதையே காட்டுவதாகும். அவர்கள் தங்கள் மைந்தர்களான திருதுராஷ்ட்ரனிடமும் பாண்டுவிடமும் கொள்ளும் உறவும் விலகலும் அவர்களிடம் காந்தாரியும் குந்தியும் ஏற்படுத்தும் மாற்றங்களும் அப்படியே.
நிச்சயமாக, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு பாத்திரப் படைப்பு குந்திதேவி. ஒரு அழுமூஞ்சிக் கதாபத்திரமாகவேதான் இதுவரை குந்தியைப் படித்தும் பார்த்தும் இருக்கிறேன். ஆனால் ஜெயமோகன் படைத்திருப்பது ஒரு ஆண்மகனின் கம்பீரம் சற்றே கலந்த பேரழகியான குந்தி தேவியை.
ஐராவதி கார்வே தன் மகாபாரதக் கட்டுரைகளில் (யுகாந்தா) குந்தியயைப் பற்றிக் ஒருபோதும் தன் வாழ்வைத் தானே தீர்மானித்துக்கொள்ள முடியாத ஒரு பெண் என்று குறிப்பிடுவார். ஆனால் ஜெயமோகனின் குந்திதேவி அப்படியல்ல. கர்ணனைக் கருக்கொள்வதிலிருந்து, பின் அக்கருவை அழிக்க முற்படுவதில் தொடர்ந்து, பாண்டுவோடு காட்டுக்குப் போய் தன் மற்ற மைந்தர்களை பெறுவதிலும், மாத்ரியுடனான உறவிலும் மிக மிக உறுதியான, தீர்க்கமான இலட்சியமிக்க பெண்ணாகவே மாற்றிப் படைத்திருக்கிறார் ஜெயமோகன். நம் நேசத்துக்குரிய குந்தி என்று சொன்னாலும் மிகையாகாது. இதில் விதுரனுக்கும் குந்திக்கும் இடையேயான உறவு ஒரு தனி நுட்பமான இழை. அறியப்படாமலேயே இதுவரை இருக்கும் விதுரனின் தாயான சிவையின் சித்தரிப்பும் சிறப்பித்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்று.
இப்படி ஒவ்வொரு பாத்திரமுமே தனித்தன்மை கொண்டு மிளிர்வதைச் சொல்லிக்கொண்டே போனால் அதற்கு நாமும் ஒரு வெண் முரசுதான் எழுதவேண்டியிருக்கும்- அளவில். அது சாத்தியமற்ற ஒன்று. எனவே, இதில் வரும் ஆண் பாத்திரங்களில் திருதிராஷ்ட்ரனும் பாண்டுவும் சகுனியும் விதுரனும் நாம் வழக்கமாகப் பார்த்திருக்கும் தன்மை கொண்டவர்களாக இல்லை. அதிலும் எப்போதும் துவக்கத்திலிருந்தே எதிர்மறை பத்திரமாகவே வரும் சகுனி இதில் மிகச்சிறந்த அரசியல் மதியூகியாகவும் சகோதர பாசத்தின் இலக்கணமாகவும் காட்டப்படுகிறான். மாறாக எப்போதும் ஒரு தர்மாத்மாவகவே காட்டப்படும் விதுரன் சற்றே scheming politician போலக் காட்டப்படுதலும் சுவாரசியத்தை கூட்டுகிறது என்பதை மட்டும் கூறி முடித்துவிடுகிறேன்.
அதேபோல் இதில் வியாசரிடமிருந்து விலகி ஜெயமோகன் படைத்திருக்கும் பல விரிவான நிகழ்வுகளும் கதைமாந்தர்கள் ஒருவொருக்கொருவர் கொள்ளும் உறவுகளும் படித்து அனுபவித்து விரித்துப் பேசப்பட வேண்டியவை. இவற்றுக்குச் சிறந்த உதாரணங்கள் பீஷ்மர் மேற்கொள்ளும் காந்தாரப்பயணம், அங்கு நிகழ்பவை, பீஷ்மருக்கும் சகுனிக்குமான உறவு, காந்தாரி அஸ்தினபுரிக்குள் நுழைந்ததும் நிகழும் குருதி மழை, கர்ணன் பாண்டவர்கள் மற்றும் துரியோதனனின் பிறப்புகளை விவரிக்கும் விதம், குந்தியின் சுயம்வரத்தில் போட்டி விவரங்கள் என்று பலவற்றைச் சொல்லலாம் .எதைச் சொல்லி எதை விட என்ற பெரும் திகைப்பே ஏற்படுகிறது.
மேற்சொன்ன அனைத்துமே அற்புதம் என்று ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டு எனக்கு திருப்தியளிக்காத சில அம்சங்களைச் சொல்கிறேன்.
திருதுராஷ்ட்ரன் தோற்றம் மற்றும் அவன் உடல் மொழி சித்தரிக்கப்படும் முறை அதிருப்தி அளிகிறது. மிகப் பெரும் பலசாலியாகவும் கட்புலன் இழப்பிற்கு ஈடு செய்யும் வகையில் நுட்பமான செவிப் புலன் கொண்டவனாகவும் காட்டப்படும் திருதுராட்ரன் சமயத்தில் ஹல்க் மற்றும் கிங்காங் போலக் சித்தரிக்கப்படுகிறானோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே போல் அவன் பீஷ்மரைப் போருக்கு அழைப்பதும், பின்னர் காந்தாரத்தில் அவன் தனி ஒருவனாக கிட்டத்தட்ட 50 காந்தார வீரர்களைக் கொன்றுவிட்டு, நேராக காந்தாரி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையின் கதவுக்கு முன் சென்று அதை உடைத்துத் திறந்து அவளைத் தோளில் தூக்கி வரும் காட்சியும். இந்தச் சம்பவங்கள் இந்நாவல் தொடர்ந்து இயங்கி வரும் ஒரு மிக உயர்ந்த தளத்திலிருந்து குப்புற விழுந்து ஒரு சராசரி சாகசக் கதைப் பாணியில் அமைந்துவிடுகின்றன. இவை தவிர்க்கப்பட்டிருந்தாலும் கூட நாவலுக்கு எந்தக் குறைவும் இல்லை என்பதே என் பார்வை. அதேபோல் குறைப் பிரசவம் போல் காட்டப்படும் பீமன் பிறப்பும் பலவீனமும், பின் அவன் குரங்குகளால் பாலூட்டி வளர்க்கப்படும் விதமும் டார்ஜான் கதை படிக்கும் உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது. பீமன் பிறப்பு குறித்த எந்த பாரதக்கதையிலும் இல்லாத ஒன்று இது என்றே நான் நினைக்கிறேன்.
இப்போது நான் சொன்ன அந்த இரண்டாவது சவாலுக்கு வருவோம். இன்று நம்மிடையே புழங்கும் பலவேறு மகாபாரதப் பிரதிகளிலுமே பாரதம் நடைபெற்ற காலம், நிகழ்ந்த இடங்கள் மற்றும் பத்திரங்களின் வயது ஆகியவை மிகவும் குழப்பமானவைதான். இதில் ஜெயமோகன் துணிந்து தன் படைப்பில் ஒரு திட்டவட்டமான் கால இட பின்னணியைப் படைத்திருக்கிறார். ஆனால் அதில் சில இடங்கள் கேள்விக்குரியவையாக அமைந்து விடுகின்றன. முக்கியமாக, நான் அறிந்தவற்றில் இருந்து சொன்னால் சில தகவல் பிழைகளும் உள்ளன. இவை எல்லாமே கதையோடு தொடர்பற்ற, தேவையற்ற கவனச் சிதறல்களாக இருக்கின்றன என்றும் சொல்லலாம்.
ஐதீகப்படி மகாபாரதம் நடைபெறுவது, துவாபர யுக- கலி யுக சந்தியில். பாரதத்தின் பெரும் போர் முடிந்து தருமன் 36 வருடங்கள் அரசாண்டபின் கிருஷ்ணனின் அவதாரம் முடியும்போதுதான் த்வாபர யுகம் முடிவுக்கு வந்து கலி யுகம் பிறப்பதாக ஐதீகம். ஆனால் ஜெயமோகன் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திரேதா யுகம் முடிந்து துவாபர யுகம் பிறப்பதைப் பார்ப்பதாக பாத்திரங்களின் உரையாடல் மூலம் சொல்கிறார். மேலும் வெண் முரசுக்கான விவாதங்கள் நடைபெறும் தனி இணையதளத்தில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போதும் பாரதம் திரேதா யுக துவாபரயுகச் சந்திப்பில் நடப்பதாகவே கூறுகிறார்.
பீஷ்மர் காந்தார தேசத்துக்குப் பயணம் போகும்போது இடையில் மொஹஞ்ச தாரோ (நேரடியாக இந்தப் பெயர் வராவிட்டாலும்கூட அந்தப் பெயரின் பொருள் வருகிறது) இடிபாடுகளைக் கண்டு போவதாக வருவது ஒரு பெரிய காலக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மொஹஞ்ச தாரோவின் காலம் கிட்டத்தட்ட முடிவான ஒன்று. ஆனால் பாரதத்தின் காலம் அப்படியல்ல, இதிஹாச காலத்தையும் வரலாற்று காலத்தையும் குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். மேலும் இது எந்த வகையிலும் நாவலின் ஓட்டத்திற்கு உதவவில்லை. இந்தப் பகுதி இல்லாமல் போனாலும் நாவலுக்கு ஒரு குறைவும் நேராது.
தவிர கதையின் உள்ளேயே வரும் காலக் கணக்குகளும்கூட நம்ப முடியாததாக இருக்கிறது. பீஷ்மர் தன தேசாந்திரத்தை முடிக்கும் இடமான கூர்ஜரத்தில் சிராவண மாதம் முதல் வாரம் இருக்கிறார் என்று வருகிறது. அங்கிருந்து அவர் அஸ்தினபுரி சென்று பின் காந்தாரம் சென்று வருவது, மீண்டும் திருதுராஷ்ட்ரன் காந்தாரி திருமணத்திற்காக காந்தாரம் சென்று திரும்புவது, அந்த வருடத்தில் மிகத் தாமதமாக தென்மேற்குப் பருவமழை வருவது என்று சம்பவங்களுக்கு ஒரு கால இட, பருவ நிலை சார்ந்த பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தத் தாமதமான மழைக் காலத்திலேயே குந்தியின் அறிமுகம் அவள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் நடக்கிறது. பிறகு கர்ணன் பிறப்பு சூரியன் உச்சத்தில் இருக்கும் (கோடை) சித்திர மாதம் விசுவா ராசியில் என்று வந்தபின் கர்ணனை குந்தி தொலைப்பது மீண்டும் ஒரு மழைக்காலத்தில் என்றும் பாண்டு குந்தியின் சுயம்வரத்திற்கு கிளம்புவது மீண்டும் மழைக்காலத்தில் என்றும் வருவது நிச்சயமாக ஒரு சரியான, துல்லியமான காலவரிசையில் அமையவில்லை என்றே நான் நினைக்கிறேன். இந்தக் காலக் கணக்குகள் இவ்வளவு மெனக்கெட்டு காட்டப்பட்டிருக்கக்கூட வேண்டாம் என்றே தோன்றுகிறது. தவிர அம்பிகை அம்பாலிகைக்கு இடையே தோன்றும் பகை உணர்வின் தோற்றுவாயான சம்பவங்களின் நாடகீய சித்தரிப்புக்காக காலக் கணக்குகள் சௌகரியம் போல இழுக்கப்படுவதும் நிகழ்கிறது. உதாரணமாக அடுத்தடுத்த நாட்களில் கருவமையும் திருதராஷ்ட்ரன் பிறப்புக்கும் பாண்டுவின் பிறப்புக்கும் இடையேயான கால இடைவெளி- அதுவும் ஒரு பிளாஷ் பேக் உத்தியில் சொல்லப்படுவது செயற்கைத்தன்மை கொண்டதாக உள்ளது.
இந்தக் கால, பருவ நிலைக் குழப்பம் உச்சம் கொள்வது குந்தி அர்ஜுனனை கருக்கொண்டு பெற்றெடுக்கும் சம்பவத்தை விவரிப்பதில்.. குந்தி மழைக்காலத்தில் கருவுருகிறாள் என்று வருகிறது. அதற்குப் பின் கோடையின் சித்தரிப்பும் கோடை முதிர்ந்தபின் பனிக்காலம் வருவதாகவும் வருகிறது.அதன் இறுதியில் பங்குனியில் அர்ஜுனனின் பிறப்பு.நிகழ்கிறது. இந்தியப் பெரு நிலத்தில் எந்த ஒரு பகுதியிலுமே (சொல்லப் போனால் உலகெங்குமே) கோடைக்குப் பின் தான் பருவ மழைக்காலம்.பின்பு ஒரு சிறு autumn பின்புதான் தான் பனிக்காலம்.இந்த எளிமையான பருவகால வரிசையில் ஜெயமோகனை போன்ற ஒரு இயற்கை அவதானிப்பாளர் குழம்புவது ஆச்சரியமாக உள்ளது. ஒரு சாதாரண எடிட்டிங் இந்தக் குறையை நிவர்த்தி செய்து விடும். ஆனால் ஏனோ அது நிகழவில்லை.
பொதுவாகவே ஜெயமோகனின் பலம் அவர் தனிமனிதர்களின் ஆழ் மன ஓட்டங்கள், மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகளின் உளவியல் சிக்கல்கள், புரிந்துகொள்ள முடியாத மனிதச் செய்கைகளின் மூலமான நனவிலி ஊற்றுவாய்கண்கள் ஆகியவற்றை சித்தரிப்பதில் உள்ளது. இதில் அவர் கரைகண்டவர். ஆனால் இவற்றுக்கு அடிப்படையாக வரும் பிண்ணணி களத்தின் கால-இட சித்தரிப்பில் தடுமாறுகிறார் என்ற எண்ணம் எனக்குண்டு. அவரது சமீப ஆக்கங்களான உலோகம், அனல்காற்று, இரவு ஆகிய படைப்புகளிலும் இந்தக் குறை உண்டு என்பதை நான் அவற்றை வாசிக்கும்போதும் உணர்ந்தேன்.
மேலே சொல்லும் இந்தக் குறைபாடுகள் மழைப்பாடலை முதற் கனலின் உயரத்தை அடைவதிலிருந்து தடுக்கிறது என்றாலும் நான் முதலில் கூறிய நேர்மறை அம்சங்கள் இந்த நாவலின் வாசிப்பை ஒரு சிறந்த அனுபவமாக்குகிறது என்றே சொல்ல வேண்டும். வழக்கம் போல சண்முகவேல் ஜெயமோகன் வார்த்தைகளில் விவரிப்பதை எல்லாம் தன டிஜிட்டல் தூரிகையில் சிரமம் தெரியாதவண்ணம் தீட்டிவிடுகிறார் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

oOo

வண்ணக்கடல் – பாரத நெடும்பயணம்

Jeyamohan_Mahabharat_Books_Fiction_Literary_Bharatham_VennMurasu_vannakkadalமூன்றாவது நாவலான வண்ணக் கடல் எதிர்பாராத இடத்திலும் விதத்திலும் துவங்குகிறது. தென் தமிழ்நாட்டில், சொல்லப்போனால் குமரி நில நீட்சியில், தென் மதுரையில் ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன், ஐந்நிலத்தையும் தன் வெண்குடை நிழலில் ஆளும் அரசன், மூவேந்தரும் அடிபணியும் மூத்தோன், தென்கடல் தொட்டு வடமலை ஈறாக மண்ணளக்கும் தண்கோலேந்திய கொற்றவன், தென்முடி என மணிமுடி சூடிய மன்னன் சேந்தூர் கிழான் தோயன்பழையன் எனும் அரசனைப் பகடி செய்து பாடி மூன்று செம்புக் காசுகள் பரிசில் பெறுவதில் துவங்குகிறது. சட்டென்று,நாம் வெண் முரசின் 3 நூலைப் படிக்கிறோமா அல்லது இது புதிதாக வேறு எதாவதா என்றே ஐயம் வருகிறது.
பின்னர்தான் தெளிவாகிறது, இந்த மூன்றாவது நூல் முற்றிலும் வேறு பாணியில் எழுதப்படுகிறது என்பது. இளநாகன் தென்மதுரை வரும் வடபுலத்துப் சூதர்களின் பாடல்களில் பேசப்படும் அஸ்தினபுரியின் கதைகளைக் கேட்டு அதை நேரில் காண பயணம் செய்கிறான். இந்தியாவின் பல்வேறு இடங்கள் வழியாக அவன் பல்வேறு சூதர் குழுக்களுடன் அஸ்தினபுரிக்கு பயணம் செய்யும்போது அவர்கள் ஒவ்வொருவரும் கூறும் கதைகள் வழியாக விரிகிறது வெண் முரசு வழியே கௌரவ- பாண்டவர்களின் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்கள். உடன், தென்கோடியில் இருந்து அஸ்தினபுரி வரை நீளும் அன்றைய பாரதத்தின் நிலக் காட்சிகளும் அவற்றின் வரலாறுகளும்.
இறுதியில் இளநாகன் அஸ்தினபுரி சேர்ந்தானா, அவன் கேட்டறிந்த அஸ்தினபுரி நிகழ்வுகள் எல்லாம் உண்மையில் நடந்தவையா, நடந்தவை என்றால் அண்மைய அல்லது பழங்காலத்திலா, அஸ்தினபுரி என்பதே உண்மைதானா என்ற ஒரு மயக்க நிலையுடன் முடிவடைகிறது நாவல்.
இந்த வடிவம் குறித்து பிறகு பார்க்கலாம். இந்த நாவலில் சூதர் பாடல்கள் மூலம் விரியும் வியாச பாரதக் கதை பாண்டுவின் மரணத்துக்குப் பின் பாண்டவர்களோடு குந்தி அஸ்தினபுரி சென்றடைவதில் துவங்கி இளம் பாண்டவர்களும் கௌரவர்களும் அரங்கேற்றம் செய்யும்போது அங்கே கர்ணன் பிரவேசித்து தன் திறமைகளைக் காட்டி அர்ஜுனனை போட்டிக்கு அழைத்து அவமானப்படுத்தப்பட்டு, பின் துரியோதனனால் அங்கநாட்டு அரசனாகப் பட்டம் சூட்டப்படுவதோடு முடிகிறது.
பெயருக்கேற்றார்போல் கதாபாத்திரங்களின் பல்வேறு குணநலன்களின், ஆசாபாசங்களின் வண்ணக் கலவையாகவும், இந்தியாவின் நிலவியலின் வண்ணக் களஞ்சியமாகவுமே விரிந்திருக்கிறது இந்நாவல். இளம் பாண்டவர்களின், கௌரவர்களின் வளர்ச்சியை, அவர்களின் உறவின், பகையின் வளர்ச்சியை விவரிக்கும் நாவலில் மிகச் சிறப்பாக உருவாகி வருவது துரோணரின் பாத்திரம். ஒரு திரஸ்கரிக்கப்பட்ட, க்ஷத்ரியனா பிராமணனா என்ற அடையாளச் சிக்கலில் என்றென்றும் சிக்கியிருக்கும், தன மகன் அச்வத்தாமனின் நல்வாழ்வைத் தவிர எதுவும் பெரிதில்லை என்று நினைக்கும், மிகச் சிக்கலான பாத்திரமாக துரோணரை உருவாக்கியிருக்கிறார் ஜெயமோகன். பல படைப்புகளில் வெள்ளை வெளெரென்று பழுத்த பழமாக துரோணரை பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு இதில் வரும் கருத்த இறுகிய குறு உருவம் படைத்த துரோணர் முற்றிலும் புதியவர்.
துரியோதனனும் பீமனும் இணைபிரியாத தோழர்களாக சிறிது காலம் வலம் வருவதும் ஜெயமோகன் உருவாக்கும் ஒரு சுவாரசியமான விலகல். ஒருவரின் ஆடிப்பிம்பமாகவே இன்னொருவரைக் காணும் இரண்டு பேருக்கும் இடையே நிகழும் விலகல், முக்கியமாக துரியோதனன் மனதில் பீமன் மீது விழும் குரோதத்தின் விதை முளைவிடும் அந்தச் சம்பவம் மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது.பீமன் மற்றும் துரியோதனன் கரங்களை நாகங்களின் வடிவங்களாக , உறைவிடமாக சித்தரிப்பது ஒரு மகத்தான கற்பனை.
பீமனின் மடைப்பள்ளி ஆர்வமும் முதுபெரும் சமையற்காரரின் சிநேகமும் அன்னத்தின் வழியாக பிரம்மத்தை அறியவரும் அவனுக்கேயான ஞான மார்க்கமும் புதிய திறப்புகள். பீமனுக்கு அன்னம் போல் அர்ஜுனனுக்கு அம்பு. உலகின் மாபெரும் வில்லாளியாகும் அர்ஜுனனின் துவக்கப் பாடங்கள் விரிவது அற்புதம். தனுர்வேதம் குறித்த விவரங்கள் உண்மையிலேயே ஜெயமோகன் தனுர்வேதத்தை எங்கு கற்றார், எப்படி கற்றார். என்று அசர அடிக்கின்றது. எவ்வளவு உழைப்பு, எவ்வளவு அறிதல்கள், அதைச் சொல்வதில்தான் என்ன அழகு!
பின் கண்டிப்பாக கர்ணன். அதிகம் பேசாத, தன் பேரழகால் சூதர்கள் நடுவே தனித்து தெரியும், எப்போதும் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் ஆழமான ஒரு ஆளுமையாக கர்ணனை படைத்திருக்கிறார் ஜெயமோகன். அதேபோல் ஏகலவ்யன். துரோணர் ஏகலவ்யனின் கட்டை விரல் காணிக்கை பெறும் அந்தக் கட்டம் பிரமிக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிகம் அறியப்பட்டிராத ஏகலவ்யனின் தாய் பாத்திரமும் இன்னொரு உச்சமான சிருஷ்டி. இவர்களுக்கெல்லாம் இணையாகவே மிகச் சிக்கலான ஆளுமையாக உருவாக்கப்பட்டிருக்கிறான் துரியோதனனும்.
பிரமிப்பு ஏற்படுத்தும் வர்ணனைகளுக்கும் காட்சிகளுக்கும் பஞ்சமேயில்லாத படைப்பு இது. குறிப்பாக, குந்தி தன் மைந்தர்களுடன் வனத்திலிருந்து அஸ்தினபுரி செல்லும் வழியில் கார்க்கோடகனைச் சந்தித்து கர்ணன் குறித்து உரையாடல் நிகழ்த்தும் கனவு போன்ற காட்சி, பீமன் மீது கொண்ட குரோதத்தால் காட்டில் தனித்தலையும் துரியோதனன் ஒரு கந்தர்வனைக் கண்டு தன மென்மை நீங்கி பூரண வலிமை அடையும் காட்சி, துரோணர் துருபதனால் அவமதிக்கப்பட்டு பாஞ்சாலம் விட்டு நீங்கும் இடம், பீமன் நாகலோகம் சென்று விஷம் அருந்தி மீளும் காட்சிகள், மற்றும் நாவலின் இறுதியில் அரங்கேற்றக்களம் காட்சியில் இளம் பாண்டவர்கள் பயிற்சிக் களத்தில் பொருதுவதும், கர்ணனின் பிரவேசமும் பின் நடப்பவையும் என்று பல கட்டங்களைச் சொல்லலாம். இந்த களம் காட்சி ஏற்கனவே ஜெயமோகனின் களம் சிறுகதையில் விவரிக்கப்பட்ட ஒன்று. ஆனால் இம்முறை பீம-துரியோதனன் யுத்தப் பயிற்சிக்கு மாறாக பீமன்- துச்சாதனன் மோதுவதாக வருகிறது.
இவையனைத்தும் இந்நாவலை மிக உயர்ந்த தளத்தில் வைக்கும் என்றால் விவாதங்களுக்கும் சர்ச்சைக்கும் உரிய இடங்களும் கணிசமாகவே உண்டு.
வண்ணக்கடலின் மிகவும் முக்கியமான குறையாக அதன் வடிவத்தை, இளநாகனின் கதைமூலமாக பாரதக்கதை விரிவதை நான் சொல்வேன். இளநாகனின் அஸ்தினபுரி நோக்கிய பயணத்தில் சில அற்புதமான காட்சிகள் உண்டு என்றாலும் இரு பகுதிகளும் ஒட்டவேயில்லை. பாரதச் சம்பவங்களை நேர்க்கூற்றாகவே கூறியிருக்கலாம் என்றும் இளநாகன் பகுதிகள் இல்லாவிட்டாலும் ஒரு சேதமும் இருக்காது என்பதுமே என் அவதானிப்பு.
பின் மீண்டும் கதையின் காலம் மற்றும் அக்கால இந்திய நிலவியல். மழைப்பாடலில் மொஹஞ்ச தாரோ என்றால் வண்ணக்கடலில் குமரி நிலம் (கண்டம்?). இளநாகனின் ஊர் எழபனைநாடு என்பதும் இதில் சொல்லப்படும் மதுரை நெல்வேலிக்கு தெற்கே என்பதும் குமரிநில நீட்சியில் அல்லது குமரி கண்டத்தில் என்று ஆகிறது. இது மகாபாரதத்தின் இணைகாலமென்றால் மகாபாரதக் காலத்தில் குமரிக் கண்டமும் மொஹஞ்ச தாரோவும் சம காலம் என்று ஆகிவிடுகிறது. போகட்டும் என்றால், வெண்முரசு துவக்கத்தில் (முதற் கனலில்) வியாசர் குமரி முனையில் அம்மன் பாதத் தடம் பதிந்த பாறையில் அமர்ந்து ஊழ்கத்தில் ஈடுபட்டார் என்ற குறிப்பும் இப்போது வண்ணக்கடலில் குமரிக்கோட்டின் (மலையில்) உச்சியில் அமைந்திருக்கும் அன்னையின் ஆலயம் இருப்பதைக் குறிப்பிடுவதும் ஒன்றுக்கொன்று முரண் ஆனது. இந்த இரண்டும் ஒரே காலகட்டத்தில் எப்படி இருக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறது.
வியாச பாரதத்தில் இருந்து ஒரு மாபெரும் விலகலாக ஜெயமோகன் செய்திருப்பது கர்ணனின் பிறப்பு குறித்த ரகசியம். வியாச பாரதத்தில் அவன் குந்தியின் மைந்தன் என்பது குந்தி மற்றும் கிருஷ்ணனுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று என்றே அமைகிறது. அல்லது வேறு யாருக்கும் தெரிந்திருப்பதைப் பற்றி ஏதும் இல்லை. ஆனால் ஜெயமோகன் கர்ணனைச் சுற்றி அஸ்தினபுரியின் ஒற்றர்கள் இருந்ததாகவும் அவனிடமே அஸ்தினபுரியின் முத்திரை மோதிரம் ஒன்று இருப்பதாகவும் எழுதுகிறார். மேலும் பீமனுக்கு ஓர் உள்ளுணர்வாக (தர்மனுக்குத் தோன்றாத) குந்தி கர்ணன் உறவு முறை தெரியும் என்பது போல் ஊகிக்க இடம் தருகிறார். இது கதையின் ஓட்டத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பலமான முடிச்சு. இதை எப்படி கொண்டுபோகப் போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் மழைப்பாடல் நாவலில் கர்ணன் பிறப்பின்போது கவச குண்டலங்கள் இருப்பது போல் காட்டப்படுவதில்லை. இந்த நாவலில் கர்ணனின் 12வது வயதில் சூரியனின் அருள் பெரும் இடத்திலிருந்து அவன் கவச குண்டலங்கள் பெறுவதாக வருவது ஒருபிற்சேர்க்கை என்றே தோன்றுகிறது.
மேலும் ஜெயமோகன் திகைக்க வைக்கும் அளவுக்கு இதில் தகவல்களைக் கொட்டுகிறார். இதில் எவ்வளவு சரியாக அமைந்துள்ளது என்று காண்பதற்கு பல மகாபாரதங்களில், இந்து மத தரிசனங்களில் மிக விரிவான ஞானம் வேண்டும். ஆனாலும் கணிசமான அளவுக்கு பல்வேறு பாரதங்களை படித்ததுண்டு என்ற முறையில் நான் அறிந்த இடங்களில் சில பிழைகள் அல்லது விடுபடல்கள் உள்ளன என்று கண்டு கொள்ளும்போது நான் அறியாத பகுதிகளில் ஆசிரியரின் எழுத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்வதில் ஒரு தயக்கம் ஏற்படுகிறது.
இதற்கு ஒரு உதாரணம், பலிச்சக்கரவர்த்தியின் கதை நிகழும் பகுதியாக ஏறக்குறைய இன்றைய ஜார்க்கண்ட் பகுதியைக் காட்டுவது. இன்றைய இந்தியாவில் மகாபலி எங்காவது கொண்டாடப்படுகிறார் என்றால் அது கேரளாவில் மட்டும்தான்(அந்தப் புராணத்திலும் சில பொருத்தமின்மைகள் உண்டுதான்). அப்படியிருக்க ஏன் ஜெயமோகன் ஜார்க்கண்ட் அருகே இதை வைக்கிறார்? இன்னொன்று விஷ்ணு புரம் நாவலின் ஞான சபை விவாதங்களை நினைவு படுத்தும் பிரஹலாதன்-ஹிரன்ய கசிபு விவாதத்தில் அசுர ஞானத்தின் தந்தையாக ஆங்கிரச ரிஷியின் மகனான ப்ருஹஸ்பதி கூறப்படுகிறார். இங்கு கூறப்படும் அசுர ஞானம் என்பது சார்வாகம் என்று புரிகிறது. இதன் ஆசிரியர் ப்ருஹஸ்பதிதான் என்பதும் சரிதான். ஆனால் ஆங்கிரசரின் புதல்வரான ப்ருஹஸ்பதி அல்ல என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் ஆங்கிரச ரிஷியின் மகனான ப்ருஹஸ்பதி தேவர்களின் குரு.மற்றொன்று இளநாகனின் பயணங்களில் அவன் சமண மதத்தின் முதல் ஐந்து தீர்த்தங்கரர்களை வழிபடும் வணிகர்களை சந்திப்பது. இது சமண மதம் மகாபாரதக் காலத்திலேயே இருந்ததாக குறிப்பாக சொல்வது. இது போன்ற கேள்விகள் எழும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன.
இதுபோன்ற பல ஐயங்கள், கேள்விகள் மற்றும் நாவலின் வடிவம், அதில் இடம் பெரும் மீயதார்த்தக் காட்சிகள், அவ்வாறான காட்சிகள் காட்டப்படாமை குறித்தெல்லாம் ஜெயமோகன் வெண்முரசு விவாதத் தளத்தில் பதிலளிக்கிறார். குறிப்பாக இதன் வடிவம், கூறுமுறை என்பது குறித்து இது தான் உருவாக்கும் puranic realism என்ற பதத்தையும் குறிப்பிடுகிறார். பௌராணிக யதார்த்தம் என்ற அளவில்தான் வெண்முரசு நிற்கப்போகிறதா என்ற கேள்வி அதன் அனைத்து பகுதிகளும் எழுதி முடிக்கப்படும்வரை தொடரும் என்றுதான் நினைக்கிறேன். வெண்முரசு வாசிப்பில் இந்தக் கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் பொருட்படுத்தத்தக்க முக்கியத்துவம் உண்டு என்றே தோன்றுகிறது. இதைச் சொல்லும் அதே நேரத்தில் வாசிப்பின் இன்பத்தை வழங்குவதில் எந்தக் குறையும் இம்மூன்று நாவல்களும் வைப்பதில்லை என்பதையும் அழுத்திச் சொல்ல வேண்டும்.

oOo

0 Replies to “வெண்முரசு – ஒரு பார்வை”

 1. எனக்கு ஜெமோ வின் மகா பாரதத்தில் பிடித்த விஷயம், (அல்லது நான் தவறாக/சரியாக உள் வாங்கிய விஷயம்) பக்தியைத் திணிக்க வில்லை.
  பெரும்பாலான ராமாயண, மகாபாரத படைப்புக்களில் மறைமுகமாக /நேர்முகமாக பக்தி திணிப்பு இருக்கும்.
  அதைத் திணிக்க ஜெமோ இதுவரை விரும்பியதாகத் தெரிய வில்லை.

 2. திரு. ஜெயமோகனின் ஆற்றல் அடிக்கடி நான் பிரமிப்பது தான். இருந்தாலும்
  தங்களின் இந்தக் கட்டுரை ஏனோ எந்தக் காலத்திலோ நான் எழுதிய கவிதை ஒன்றை இன்று நினைவு படுத்தியது. இந்தக் கவிதையை இந்தக் கட்டுரைக்கான மறுமொழியென்று நேரடியான அர்த்தம் கொள்ள வேண்டாமெனினும் தங்களின் ரசனைக்காக அந்தக் கவிதை கீழே:
  சொற்களின் பிரயோகத்தில்
  சொக்கி விட்டேன் என்றார்
  எத்தனை எடுத்துக் காட்டுகள்
  எத்தனை விஷய ஞானம்
  அத்தனையும் அற்புதம் என்றார்
  விரல் நுனியில் விவரங்கள்
  வைத்திருப்பதை வியப்பதா
  ஏற்ற இறக்கத்தோடு அத்தனையும்
  எடுத்துச் சொன்னதைச் சொல்வதா
  எதைச் சொல்வது
  எதை விடுவதென்பது
  தெரியவில்லை என்றார்.
  எதைப் பற்றிச் சொன்னார் என்றால்
  எதைப் பற்றி என்பதா முக்கியம்
  யார் பற்றிச் சொல்கிறேன்
  என்பதல்லவா முக்கியம் என்றார்
  அந்த யாரும் யார் பற்றியாவது
  சொல்லியிருக்க வேண்டுமல்லவா
  அந்த யார், யார் என்றாவது
  சொல்லுமேன் என்றேன்
  இது மாதிரி இவர் சொன்னது
  புது மாதிரி இருந்ததே இவர் சிறப்பு
  எது குறித்து இவர் சொன்னாலும்
  அது சிறப்பு பெறும் அவ்வளவே என்றார்
  சொன்னவர் சொன்ன சிறப்பில்
  சொன்னதெல்லாம் சிறப்பானது என்றார்
  கதா காலட்சேபத்திற்குப் போய்
  கடவுளின் கதை கேட்டு வந்தவர்
  கதை இது.
  பலநேரங்களில் இப்படித்தான்
  பெருமைக்குரிய பெருமை எல்லாம்
  அந்தப் பெருமையைப் பேசுவோருக்குப்
  பெருமை சேர்ப்பதாய் போய்விடுகிறது..
  — ஜீவி

 3. //இந்த மூன்று நாவல்களில் முதல் இரண்டும் புத்தகங்களாக வெளிவந்துவிட்ட நிலையில் இவற்றை தமிழ் இலக்கிய உலகம் எதிர்கொண்ட விதம் என்ன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. முதற்கனல் வெளிவந்து நான்கைந்து மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை ஒரு நல்ல விமர்சனம்கூட வரவில்லை என்பது வருத்தமளிக்கக்கூடியது. வந்திருக்கும் விமர்சனங்கள் எல்லாம் என் போன்ற வலைப்பதிவர்கள் செய்ததுதான். நான் எதிர்பார்ப்பது மகாபாரதத்தில் நல்ல வாசிப்புள்ள, பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி பெற்ற, இந்திய தத்துவ இயலில் நல்ல பரிச்சயம் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்வினைகள். ஆனால் அப்படி எதுவும் இல்லை.
  தமிழின் முன்னணி இலக்கியப் பத்திரிக்கைகளோ இப்படி ஒரு நிகழ்வு நடப்பதாகவே காட்டிக் கொள்வதில்லை. ஜெயமோகன் இதைத் துவக்கியபோது வாழ்த்து தெரிவித்த, ஆரம்ப அத்தியாயங்கள் குறித்துப் பாராட்டி எழுதிய தமிழ்ப் படைப்பாளிகள் யாரும் முழுமையான ஒரு விமர்சனம் எழுத இதுவரை முன்வரவில்லை என்பது வியப்பும் ஏமாற்றமும் தருகிறது. இத்தனைக்கும் ஜெயமோகன் தொடர்ந்து தமிழில் வரும் நல்ல படைப்புகளைக் கவனப்படுத்திக்கொண்டும் நிறைய சந்தர்ப்பங்களில் முழுமையான விமர்சனங்களையும் எழுதிக் கொண்டே இருப்பவர். காவல் கோட்டம், ஆழிசூழ் உலகு, மணல் கடிகை போன்ற நாவல்களுக்கு அவர் எழுதியுள்ள விமர்சனங்கள் காலம் கடந்து நிற்கும் வலிமை பெற்றவை. ஆனால் கடந்த 5-6 ஆண்டுகளில் வெளிவந்துள்ள அவரது படைப்புகள் குறித்த ஆழமான, காத்திரமான விமர்சனங்கள் வந்திருக்கிறதா என்று தேடிப் பார்க்கவேண்டிய நிலைதான் உள்ளது. அண்மையில் வெளிவந்த காலச்சுவடு செப்டம்பர் இதழில் அசோகமித்திரன் தன நேர்காணலில் வெண்முரசுப் பற்றி கூறியிருக்கும் கருத்தைப் பார்க்கும்போது இப்படியான விமர்சனங்கள் வராமலிருப்பதே மேல் எனவும் தோன்றிவிடுகிறது.
  – See more at: http://solvanam.com/?p=35582#sthash.DolzbjSg.dpuf//
  இதுதான் எனது ஏக்கமும். தமிழில் ஒருவர் பகீரத முயற்சியை ஆரம்பித்து சிறப்பாக செய்துகொண்டிருக்கும்போது அதை பாராட்ட மனசு வராத மக்களை என்ன சொல்வது.?
  ஒரேடியாக பாராட்டுப்பத்திரம் வாசித்து வழங்காமல் நிறைகுறைகளை சேர்த்தே சொல்லி இருப்பது அருமை.
  வெண்முரசு தொடருக்கு கிடைத்த அருமையானதோர் விமர்சனமாக இந்த கட்டுரை என்றும் நினைவில் நிற்கும்.
  நான் மூன்று புத்தகங்களையும் செம்பதிப்பாகவே வாங்கி விட்டேன். விஷ்ணுபுரம் போல தமிழ் இலக்கியத்தில் நிலைத்து நிற்கப்போகும் புத்தகங்கள் இவை என்பதில் எனக்கு ஐயமில்லை.

 4. ஆழமான அருமையான அலசல் சுரேஷ். பல நுட்பமான இடங்களையும் தொட்டுக் காண்பித்திருக்கிறீர்கள். புரிந்து கொள்ள முடியாத, குழப்பம் ஏற்படுத்திய இடங்கள், விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உரிய இடங்கள் குறித்தெல்லாம் நீங்கள் வைத்துள்ள கறாரான விமர்சனம் முக்கியமானது, சரியானது என்றே நானும் கருதுகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நமது பண்பாட்டுப் பரப்பில் வேர்கொண்டு ஆழ்ந்து விட்ட ஒரு இதிகாசத்தின் மறு ஆக்கத்தை “எந்த விதமான கட்டுப்பாடுகளும் இன்றி” முற்றிலும் புதிய படைப்பு என்ற நிலையில் வைத்து வாசிப்பது சாத்தியமே அல்ல.
  // நான் எதிர்பார்ப்பது மகாபாரதத்தில் நல்ல வாசிப்புள்ள, பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி பெற்ற, இந்திய தத்துவ இயலில் நல்ல பரிச்சயம் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்வினைகள். ஆனால் அப்படி எதுவும் இல்லை //
  நீங்கள் சொல்லும் தகுதிகள் எந்த அளவுக்கு உண்டு என்று தெரியவில்லை. ஆனால், முதற்கனல் நாவல் வந்து கொண்டிருந்த போதே நான் ஒரு விரிவான கட்டுரையை எழுதியிருந்தேன் – http://www.tamilhindu.com/2014/02/வான்-பறக்கும்-மதகரி-ஜெயம/
  மற்றபடி, இவ்வளவு நாட்களாகியும் விமர்சனங்கள் வரவில்லையே என்றெல்லாம் கவலைப் படத் தேவையில்லை. சாதாரணமாகவே, ஜெயமோகனின் எழுத்து வேகம் அசுரத் தனமானது. அதுவும், இந்த நாவலில் பாய்ச்சல் எடுத்து ஓடுகிறது. தமிழ் வாசகப் பரப்பில் அதனுடன் ஈடுகொடுக்க முடிந்தவர்கள் உங்களைப் போன்று மிகச் சிலரே. மற்றவர்களுக்கு அதிக நேரமும் அவகாசமும் தேவைப் படும். நான் இன்னும் மழைப்பாடலையே முடிக்கவில்லை. அதற்குப் பிறகு இரண்டு நாவல்கள் வந்து விட்டன.
  வெண்முரசு நாவல்கள் வாழ்நாள் முழுவதும் படித்துத் தீரவேண்டியவை. தேடலும் ரசனையும் கொண்ட எந்தத் தமிழ் வாசகரும் தவிர்க்கவே முடியாத, கடந்து செல்ல முடியாத ஒரு மகத்தான இடத்தின் இந்த நாவல்கள் நின்று கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.

 5. முதற்கனல் மற்றும் மழைப்பாடலின் 38 வது அத்தியாயம் வரை படித்தேன். பெரிய அளவில் கவரவில்லை. அவரின் எல்லா எழுத்துகளையும் படித்திருக்கிறேன். நான் எதிர்பார்ப்பது இலக்கியம் ஆன்மீகம் அல்ல. ஆன்மீகம் வேறு இலக்கியம் வேறு. இதை பக்தி இலக்கியத்தில் அடங்குவார்களா எனவும் தெரியவில்லை. கட்டுரையில் சொல்லியிருப்பதுபோல துறைசால் வல்லுனர்களின் (மஹாபாரத உபன்யான்சகர்கள், சொற்பொழிவாளர்கள்) விமரிசனத்தை எதிர்பாத்தேன். ஆனால் வந்ததெல்லாம் ஆன்மீகத்திலும் ஜேகே, ஓஷோ மற்றும் ஜக்கி போன்றோரின் தொடர்ச்சியாய் ஜெமோவைப் பார்த்துப் பிரமிக்கிற வாசகர் கடிதங்களையும் அவற்றின் சற்றுப் பெரியவடிவமான வலைப்பூப் பதிவுகளையும் தான். இவ்வளவு மக்கட்தொகை கொண்ட தமிழகத்தில் மிக அதிக அளவு தரமான இலக்கியவாசகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் அவரவர் வாசிப்பின் நிலை சார்ந்து அடுத்த கட்ட வாசிப்பைத் தேர்ந்தெடுப்பர். உதாரணம்: வண்ணநிலவனை வாசித்தவர்கள் வண்ணதாசனை தொடவே முடியாது. ஆனால் வண்ணதாசன் வழியாக வண்ண நிலவனுக்கு வரலாம். சுராவையும், புதுமைப்பித்தனையும், அசோகமித்திரனையும் வாசித்தவர்கள் பாலகுமாரனின் எழுத்தைக் கொண்டாட இயலுமா என்ன? அதுபோலவே கடந்த 10 வருட வாசிப்பனுபவம் (பெரும்பாலும் இணையத்தில்) கொண்டவர்கள் மிகக்குறுகிய இலக்கியப் படைப்புகளை மட்டுமே வாசிதறிந்திருப்பர். பரவலான இலக்கிய வாசிப்பனுபவம் பெறவில்லை. ஏகப்பட்ட இணையத்தள விமரிசனங்கள் மூலம் மிக எளிதாக இணையத்தில் மட்டுமே முன்நிறுத்தப்படும் படைப்புகளை மட்டுமே நல இலக்கியம் என வகைப்படுத்தி வாசித்தறிந்துள்ளனர். சுய அறிதல் மூலம் நல்ல இலக்கியத்தைக் கண்டுணரும் ஞானம் வாய்க்கவில்லை. எனவே பிறர் இலக்கியம் என எதைச் சொல்லுகிறார்களே அதை அப்படியே நம்பி உண்மையெனநம்பி பரவலான இலக்கிய அனுபவம் கிடைக்கப் பெறாதவராய் உள்ளனர். இது கிட்டதட்ட எம்ஜிஆர் மற்றும் சிவாஜி ரசிகள்கள் தங்கள் நிலைபாட்டை எவ்விதத்திலும் விட்டுக் கொடுக்காத மனநிலையைப் போன்றது. எனக்குத் தேவை நல்ல இலக்கியம் அது யார் எழுதினால் என்ன என்ற தெளிவான தேடல் இல்லாமல் எனக்குப் பிடித்தவர் எது எழுதினாலும் அதுதான் இலக்கியத்தின் உச்சம் என எண்ணுகிறார்கள் மேலும் தொடர்சியாக அதை அவர்கள் நம்பக்கூடிய அளவிற்கு அது போலியாகத் திணிக்கப்படுகிறது. விஷ்ணுபுரம் காலாவதியாகி எவ்வளவோ நாளாகிவிட்டது. ஜேஜே சில குறிப்புகளுக்கு கிடைத்த இடத்தில் பத்தில் ஒரு பங்கு இடம் கூட கிடைக்காமல் ஆகிவிட்டது. ஜேஜே சில குறிப்புகளாவது சில பத்தாண்டுகள் பார்வையில் இருந்தது. மரபும், கலாசாரமும், ஆன்மீகமும் மற்றும் அறமும் மட்டும் உடையதல்ல இலக்கியம் அதன் பரிமாணமும் அதன் இலக்குகளும் வேறு பலவும் உள்ளடக்கியவை.

 6. அருமையான ஆய்வு. ஒட்டுமொத்தமாகப் பார்த்து மதிப்பிட்டிருக்கிறார். நான் பார்க்காத பலவிஷயங்களைத் தொட்டுக்காட்டியிருக்கிறார். திரு ஜடாயு அவர்களின் விமர்சனத்தையும் இந்த இணைப்பு வழியாக வாசித்தேன். அதுவும் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. ஒரு பெரிய முயற்சியை அதேயளவுக்கு கனமாக ஆய்வுசெய்திருக்கிறார்கள். மகாபாரதத்தின் அமைப்பையும் விளக்கத்தையும் அறிந்துகொள்ள இந்தக்கட்டுரைகள் முக்கியமாக உதவின.சுரேஷ் ஜடாயு இருவருக்கும் நன்றி
  ஆனால் பாலா ஆர் என்பவர் என்னதான் எழுதியிருக்கிறார் என்றே புரியவில்லை. எல்லாவற்றையும் வாசித்துவிட்டவர் அப்படி வாசித்ததனால்தான் இப்படிக் குழம்பிப்போயிருக்கிறாரா என்று தெரியவில்லை. விஷ்ணுபுரம் காலாவதியாகிவிட்டது என்கிறார். நான் தாசில்தார் ஆபீசில் கேட்டவரை அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னார்கள். இப்படியெல்லாமா இலக்கியவிமர்சனம் செய்வது? ஒரு படைப்பை ஏன் ஏற்கிறேன் ஏன் மறுக்கிறேன் என்று சொல்ல தெரியாவிட்டால் ஏன் வாசிக்கவேண்டும்?
  வெண்முரசு விஷ்ணுபுரம் போன்ற நூல்கள் அதற்கான ஒரு தகுதி உள்ளவர்களுக்கே புரியும். அனுபவமாக ஆகும். அது கொஞ்சம் பொறுமையாக வாசிக்கும் பழக்கம். அதோடு நம்மில்பலபேர் நம் கண்முன் அன்றாட அனுபவமாக உள்ளவற்றைத்தான் இலக்கியத்திலும் ரசிக்கப் பழக்கப்பட்டிருக்கிறோம். symbolic ஆக சொல்லப்பட்ட கவித்துவமான விஷயங்கள் உறைப்பதில்லை. அவர்கள் தங்கள் விமர்சனங்களைச் சொல்லுவதில் தப்பில்லை. ஆனால் கொஞ்சம் தெளிவாக யோசித்து சொன்னால் நல்லது இல்லையா?

 7. Basavaraj: உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. எனது கருத்து உங்களுக்குப் புரியாதது எனக்கு வருத்தமே. சுருக்கமாகச் சொன்னால், இணைய வாசிப்பை மட்டும் கொண்டவர்கள், ஜே.கே, ஓஷோ மற்றும் ஜக்கியின் நீட்சியாக ஜெயமோகனைப் பார்ப்பவர்கள், ஜெயமோகனைப் பார்த்துப் பிரமிப்பவர்கள் மட்டுமே ஜெயமோகனின் எல்லா எழுத்துகளையும் கொண்டாடுகிறார்கள். அசோகமித்திரன், சுரா, வண்ணநிலவன் மற்றும் இன்னும் பலர் ஜெயமோகனின் விமரிசனம் மீது கறாரான் விமர்சனம் செய்திருக்கிறார்கள். (ஆதாரம்: ஜெயமோகன் எழுதிய “சுரா நினைவின் நதியில்”, அசோகமித்திரனின் பேட்டி, வண்ண நிலவனின் பேட்டி) ஜெயமோகனின் கதைகளில் உள்ள தகவல்கள் கற்பனையை ஒழுங்குபடுத்தாமல் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதைக் கவனித்திருக்கிறீர்களா? இடம், அவ்விடத்தின் அமைப்பு, கதை சொல்லுகிறவரின் தொனி போன்றவை அடிக்கடி முரண்படுவது கற்பனையின் விஸ்தாரணத்தைத் தடுப்பதில்லையா உங்களுக்கு. புறப்பாடு கதையில் இறந்து போன பசு மீண்டும் அடுத்த அத்தியாயத்தில் மேய்துகொண்டிருப்பதாக வருவது உதாரணம். துறைசார் வல்லுனர்களின் விமரிசனமே ஏற்கத்தக்கது. மகாபாரத சொற்பொழிவாளர்கள், உபன்யாசகர்கள், கதாகாலேச்சபர்கர்கள் போன்றவர்களின் விமரிசனம் ஏதும் வந்துள்ளதா?
  வெண்முரசு படிப்பதற்குக் கடினமான புத்தகம் அதற்கான தகுதி உள்ளவர்களுக்கே புரியும் என்கிறீர்கள். வெண்முரசை வாசிப்பதில் என்ன கடினம் உள்ளது. விஷ்ணுபுரம் தகவல்கள், மரபுகளின் களஞ்சியம். இலக்கியம் என்பது கலைக்களஞ்சியமோ ஆன்மீகமோ அல்ல. வெண்முரசு பல கிளைக்கதைகளையும் உள்ளடக்கியதுதான். இலக்கிய அனுபவம் என்பது வேறல்லவா? மன எழுட்சியையும், புதிய தரிசனத்தையும் கொடுப்பதது அது. பொன்னியின் செல்வன் வாசகர்கள்களைப் பொறுத்தவரை அது இலக்கியம். ஆனால் சுரா புதுமைப்பித்தன் ஜெயமோகன் அசோகமித்திரன் மொனி … வாசகர்களுக்கு?
  விஷ்ணுபுரம் பற்றி தாசில்தார் அலுவலகத்தில் விசாரிக்க வேண்டாம். சிம்பாலிக்காக கவித்துவமாக சொல்லப்பட்ட பிரமிளின் கவிதையோ ஆத்மாநாமின் கவிதையோ புரியாமலா இருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால். வெண்முரசு மிக எளிதாக எந்தவிதக் குழபமும் இல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. இப்படியாம அளவீட்டை வைத்தால் எல்லாப்படைப்பையும் இதில் கவித்துவம் உள்ளது உனக்குப் புரியாது என ஒதுக்கிவிடலாம். இங்கே படித்துப் புரியாமல் யாரும் நிராகரிக்கவில்லை. படித்து இலக்கிய அனுபவம் கிட்டாமலே நிராகரிக்கப்படுகிறது. உங்களின் தகவலுக்காக: விஷ்ணுபுரம் சுரா வால் முழுவதும் நிராகரிக்கப்பட்ட புத்தகல். வண்ணநிலவன் ஜெயமோகனின் ரப்பர் கதை மட்டுமே தன்னைக் கவர்ந்ததாகச் சொல்லியுள்ளார். இவர்களெல்லாம் சாமான்யர்களா? இத்தகைய விமரிசனன்க்களைக் கவனத்தில் கொள்ளாமல் ஜெயமோகனின் எல்லாப் படைப்பும் உயர்ந்தது எனச் சொல்பவர்களுக்கும் ரஜினி எம்ஜியார் ரசிகள்களுக்கும் என்ன வித்தியாசம். ஜி.நாகராஜனின் கதையுலகம் அழுக்கானதென்றாலும் அது இலக்கியமல்லவா? விஷ்ணுபுரம் வெண்முரசு வாசிப்பதற்கான தகுதி என எதைக் குறிப்பிடுகிறீர்கள்? நீங்கள் சொல்லும் தகுதியின் படி ஓஷோவின் புத்தகங்களனைத்தும் உலக இலக்கியமாக அல்லவா வகைப்படுத்த வேண்டியிருக்கும். ஜெயமோகனின் எழுத்துகள் கடந்தகாலத்தில் கையாளபட்ட ஒன்று எனப் புரியவில்லையா. எழுத்தினை வாள் வீச்சினைப்போல நயம்பட கையாண்டு புதிய உச்ச இலக்கிய அனுபவத்தைத் தருகிறது எனக் கருதுகிறீர்களா என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.