ஸ்நேகிதி

இதோ இவன்தான் அனிதாவின் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கியவன். அந்த அமெரிக்கப் பெருநகரத்தில் திடுமென அவள் எதிரில் நிற்கிறான்.

அவனுடைய அரைக்கை சட்டைக்குக் கீழே மணிக்கட்டில் இன்னமும் அந்தத் தழும்பு ஒரு கருப்புக் கோடாய் அப்படியே இருக்கிறது.

நியாயமாய் அவள் பார்வையில் கோபத் தீ பற்றி எரிய வேண்டும். அல்லது வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போயிருக்கவும் செய்யலாம். ஆனால் முன்வரிசைப் பற்கள் பளிச்சிட அழகாய்ச் சிரிக்கிறாள். பெரிய கண்களை இன்னும் விரித்து ஆச்சரியமாய்க் கூவுகிறாள். இது அனிதாவின் சுபாவம். அவளுக்குக் கோபப்படத் தெரியாது. இந்தச் சுபாவம்தான் அவள் வாழ்க்கையைக் கலைத்துப் போட்டது.

“டேய் ரஞ்சித்? அமெரிக்காவிலா இருக்கே? எப்படா வந்தே?”

சான் ஃபிரான்சிஸ்கோ நகர மையத்தில் மாஸ்கோன் செண்ட்டர் வாசலில்தான் ஜனத்திரளோடு திரளாய் அவனைப் பார்க்க நேர்ந்தது. ஒரு பன்னாட்டு ஐ.டி. கம்பெனியின் வருடாந்திர மாநாடு மூன்று நாட்களாய் நகரை உலுக்கி எடுக்கிறது. உலகம் முழுக்க நூறாயிரம் பேராவது வந்திருந்து நகரை அல்லோலகலப்படுத்துகிறார்கள். ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றன. ஹோவர்ட் தெரு ரங்கநாதன் தெரு போலானது. இந்த மாதிரி சமயத்தில் அனிதா நிறைய இந்திய முகங்களைப் பார்ப்பாள்.

ஆனால் ரஞ்சித்தைக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

லேசான குற்ற உணர்ச்சியுடன் அவளைப் பார்த்து சிரிக்க முயன்றான். கழுத்துப்பட்டையில் தொங்கும் மாநாட்டு பேட்ஜைத் தொட்டு, “கான்ஃபரன்ஸுக்காக வந்தேன். நாலு நாள் அஃபிஷியல் பயணம்.”

இவனுடைய தொல்லை ப்ளஸ் டூ படிக்கையில்தான் ஆரம்பித்தது.

பத்து தெரு தாண்டி சைக்கிள் எடுத்துக் கொண்டு வந்து விடுவான். வடகோடிக்கும், தென்கோடிக்கும் சலிக்காமல் பெடல் பண்ணிக் கொண்டிருப்பான். கொடியில் துணி உலர்த்தும் பக்கத்து வீட்டு மாமி அம்மாவைக் கூப்பிட்டுக் கிசுகிசுத்தாள்.

“உங்க வீட்டை கிராஸ் பண்றப்போ எல்லாம் பெல் அடிக்கிறான். அனிதா கிளாஸ்மேட்தானே? அவன் பெல் அடிக்கிறப்போ அவ ஜன்னல்ல எட்டிப் பார்க்கிறாளான்னு பாரு. அப்படித்தான் ஆரம்பிக்கும்.”

அடுத்த நாள் ஸ்கூல் மரத்தடியில் அவனைப் பிலுபிலுவெனப் பிடித்து விட்டாள். “ஏண்டா எங்க தெருவுக்கு வந்து என் மானத்தை வாங்கறே?”

“ப்ளீஸ் ப்ளீஸ் அனிதா. என்னால முடியல. மைண்ட் ரொம்ப டிஸ்டர்ப் ஆகுது.”

“உன் மைண்ட் டிஸ்டர்ப் ஆகிறதுக்கு நான் என்ன பண்ன முடியும்? இதெல்லாம் வேணாம். நிறுத்திடு.”

“சரி இனிமே சைக்கிள்ல அலைய மாட்டேன். பக்கத்து வீட்டுக்காரங்க கண்ணில் படலை. போதுமா?” என்றான்.

எப்படிச் சொன்னவுடன் நல்ல பிள்ளையாய்க் கேட்டுக் கொண்டான் என்று அனிதா சந்தேகப்பட்டது சரியானது. சாயந்தரம் ட்யூஷன் விட்டு வந்தால், கூடத்தில் உட்கார்ந்து ஹிண்டுவையும், டைம்ஸ் ஆஃப் இண்டியாவையும் புரட்டிக் கொண்டிருக்கிறான்.

“டேய் ரஞ்சித், என்னடா பண்றே இங்கே?”

பேப்பரில் இருந்து தலையை எடுத்து ஒரு திருட்டுப் பார்வை பார்த்தான். “ஹிண்டு, டைம்ஸ் ஆஃப் இண்டியா எல்லாம் உங்க வீட்ல வாங்கறிங்க. அப்பாதான் தினமும் கொஞ்ச நேரம் படிச்சுட்டு வரச் சொன்னார். இங்கிலீஷ் நாலேட்ஜ் டெவெலப் பண்ணணும்.”

பல்லைக் கடித்தாள் அனிதா. “ஓ, டெவெலப் பண்ண வந்திருக்கிங்களா?”

“அனிதா, ப்ளீஸ் ப்ளீஸ் கோபப்படாதே.”

பின்கட்டில் முகம் கழுவிக் கொண்டு திரும்பினால், துண்டுடன் வந்து நிற்கும் அம்மா, “என்னடி இவன் அப்பவே இருந்து பசை போட்ட மாதிரி அப்படியே உக்காந்திட்டிருக்கான். நீ வந்ததும் அவன் கிட்டே பல்லைக் காட்டி இளிச்சுப் பேசறே?”

“அம்மா, நானா அவனை வரச் சொன்னேன்? எல்லார் கிட்டேயும்தான் பல்லைக் காட்டிப் பேசறேன். என் மேல ஏன் கோபப்படறே? நீயே அவனைப் போகச் சொல்லேன். மிக்சர் காபியெல்லாம் குடுத்து எதுக்கு உபசாரம் பண்ணிட்டிருக்கே?”

“உன்னை செல்லம் குடுத்து வளர்த்த உங்கப்பாவைச் சொல்லணும். கலீக் பையன் படிக்கத்தானே வந்திருக்கான்னு விவரம் புரியாம வக்காலத்து வாங்கறார். எதிர் வீட்டு லதிகாவைத் தேடி யாராச்சும் பசங்க வராங்களா? நீ யாரைப் பார்த்தாலும் இப்படி இய்ய்ன்னு இளிச்சுப் பேசறதைக் கொஞ்சம் நிறுத்து.”

“ஆன்ட்டி, கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்றான் ரஞ்சித்.

அம்மாவிடமிருந்து டம்ளரைப் பிடுங்கிக் கொண்டு அனிதா அவனிடம் சென்று கிசுகிசுத்தாள். “டேய் ரஞ்சித், எல்லாரும் என்னை சந்தேகப்படறாங்கடா. மரியாதையா நீ போய்டு.”

கெஞ்சினான். “அனிதா, ப்ளீஸ்… நீதான் ஹெல்ப் பண்ணனும். லதிகாகிட்டே எனக்காகப் பேசு.” லதிகா தெரிகிறாளா என்று திருட்டுத்தனமாய் எதிர் வீட்டை எட்டிப் பார்த்தான்.

லதிகாவும், இவளும் ஆருயிர்த் தோழிகள். ஸ்கூட்டியில் ஓயாமல் ஊர் சுற்றுவார்கள். சினிமா, கோயில், ஃபேன்சி ஸ்டோர் என சகல இடத்திலும் பார்க்கலாம். லதிகா இவளைப் போலக் கலகல பேர்வழி இல்லை. படு அமைதி. எந்த ரியாக்’ஷனும் காட்ட மாட்டாள். பையன்கள் லேசாய் வழிந்தாலே கடுகடுவென முகத்தை வைத்துக் கொள்வாள். அவளுடைய அப்பா செக்யூரிட்டி ஆஃபிசர் வேறு. அதனாலேயே பசங்களுக்கு அவளிடம் பேச பயம். ரஞ்சித் உட்பட. அவளிடம் நேரடியாய் எதையாவது சொல்லப் போய் பெரிய கலாட்டா ஆகி விடுமோ என்று பயப்படுகிறான்.

இளிச்சவாய் அனிதாதான் கிடைத்தாள். லதிகாவுக்காக இவளையே சுற்றிச் சுற்றி வருகிறான். எப்படியாச்சும் ‘ஐ லவ் யூன்னு அவளைச் சொல்லச் சொல்லு’ என்று கெஞ்சுகிறான். கொஞ்ச நாளாய் மிரட்டவே ஆரம்பித்து விட்டான்.

“என்னை மாட்டி விட்டுராதேடி.” என்று திட்டவட்டமாய் மறுக்கிறாள் லதிகா. இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படுபவள் அனிதா.

காலேஜ் போன பின்னும் அவன் தொல்லை குறையவில்லை. என்.சி.சி கேம்ப்புக்காக ரயிலில் போகிற போது – அவர்களின் கோச்சைத் தேடிப்பிடித்து வந்து விட்டான். “அவ மேல பைத்தியமா இருக்கேன். அவ இல்லாம என்னால உயிர் வாழவே முடியாது. உன் க்ளோஸ் ஃப்ரெண்ட்தானே? அவ கிட்டே சொல்லி சேர்த்து வை. இல்லேன்னா உன் பேரை எழுதி வெச்சிட்டு தற்கொலை பண்ணிப்பேன்.”

அனிதா திடுக்கிட்டாள். “டேய் லூஸாடா நீ? என்னை ஏண்டா இதிலே இழுக்கறே?” அந்த வயசுக்கு ரொம்பவே பயமாயிருந்தது. நெஞ்செல்லாம் படபடத்தது.

ஓடும் ரயில் பெட்டியில் லதிகா ஜாலியாய் ஜன்னலில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வர – இவள் பதட்டத்தோடு பாத்ரூம் அருகே நின்று அவனிடம் வாதாடிக் கொண்டிருந்தாள்.

“என்னை நம்ப மாட்டே இல்லே? இங்க பார்.” சரக்கென்று பிளேடால் கையை அறுத்துக் கொண்டான். ரத்தம் குபுகுபுவெனப் பீரிட்டது. ஒளிவு மறைவாய் இவர்களை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடியே வந்து விட்டார்கள்.

அந்தச் சம்பவம் டி.வி நியூஸ் மாதிரி ஆகி விட்டது. லதிகாவைக் காட்டிக் கொடுக்க ஃப்ரெண்ட்ஷிப் இடம் தரவில்லை. நான் லவ் பண்ணவேயில்லை என்னும் அனிதாவை வீட்டுக்குள் யாரும் நம்பத் தயாராயில்லை. இதற்கு மேல் விட்டால் ஏடாகூடமாகி விடும் என்று சொல்லி பாட்டி அப்பாவிடம் பிரஷர் போட்டாள். அமெரிக்காவிலிருந்து லீவுக்கு வந்திருந்த தூரத்து உறவுக்காரப் பையனுக்கு சூட்டோடு சூடாகக் கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்கள்.

woman-with-cap-1934

ரஞ்சித்துக்கு இப்போது புசுபுசுவென்று பெரிய மீசையெல்லாம் இருப்பது பார்த்து குபுக்கென்று சிரிப்பு வந்தது.

அவன் சங்கடம் வழிகிற குரலில் கேட்டான். “எப்படி இருக்கே அனிதா? ஐயாம் வெரி ஸாரி. என்னாலதான் படிப்பை பாதியில் நிறுத்தி, கல்யாணம் பண்ணி வெச்சு உன்னை அமெரிக்காவுக்கு அனுப்பிட்டாங்க. இப்ப நினைச்சா ஏண்டா அப்படிப் பண்ணினோம்ன்னு இருக்கு. எல்லாம் வெறும் இன்ஃபாட்சுவேஷன்.”

“ஆமாடா, உங்க இன்ஃபாட்சுவேஷனுக்கு தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு மிரட்டுவீங்க. பொண்ணுங்க மூஞ்சில ஆசிட் அடிப்பீங்க. நாலு ஃப்ரெண்ட்சைக் கூட்டிட்டு வந்து பலாத்காரம் கூட பண்ணுவிங்க.”

“சிரிச்சுகிட்டே திட்டற பழக்கம் இன்னும் உனக்குப் போகலை.”

“ரோட்லயே எவ்வளவு நேரம் பேசறது? வா வீட்டுக்குப் போலாம். இங்கிருந்து முப்பது நிமிஷ டிரைவ்தான். அப்புறமா நானே உன்னை ஹோட்டல்ல டிராப் பண்றேன்.”

ரஞ்சித் தயக்கமாய் அவளைப் பார்த்தான். “பரவால்ல அனிதா. சம்பந்தமே இல்லாத உன்னைப் படாதபாடு படுத்தியிருக்கேன். இப்ப கல்யாணம் ஆகி குழந்தை குட்டியோட நிம்மதியா இருக்கும் உன்னோட லைஃப்ல என்னால் குழப்பம் வேண்டாம்.”

“குழந்தை குட்டியா? அதெல்லாம் ஒண்ணுமில்லை. பண்ற குழப்பமெல்லாம் அப்பவே பண்ணியாச்சுடா. இனிமே குழப்ப ஒண்ணுமில்லை. கார்ல ஏறு சொல்றேன்.”

நெடுஞ்சாலை நூற்றியொன்றில் கலந்து விரைந்தது கார். சான் ஃப்ரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலம் மாலை வெளிச்சத்தில் தங்கத்தில் இழைத்தது போல மின்னியது.

ஸ்டீரிங்கை லாகவமாய் வளைத்துக் கொண்டே அனிதா சொன்னாள். “எனக்கு கல்யாணம் ஆச்சு. ஆனா ஒரே வருஷத்தில் விவாகரத்தும் ஆச்சு. என்ன ஷாக்கா இருக்கா? அதுவும் உன்னாலதான். பிரசித்தி பெற்ற மர்மமான நாம பண்ணாத நம்ம காதல் கதை அவர் காதுக்கும் எட்டிருச்சு. நான் யார்ட்டயும் சிரிச்சுப் பேசினா பிடிக்காது. என் சுபாவத்தை எப்படி மாத்திக்க முடியும்? குத்தலா பேச ஆரம்பிச்சார். என் இமெயிலை திருட்டுத்தனமா படிக்க ஆரம்பிச்சார். ஃபோன் கால், எஸ்.எம்.எஸ் எல்லாம் செக் பண்ண ஆரம்பிச்சுட்டார். எவ்வளவு கொடூரமான மிருகத்திடம் வேணா வாழ்ந்துடலாம். ஆனா ஒரு சந்தேகபிராணியோட மட்டும் சேர்ந்து வாழவே முடியாது. எனக்கு விவாகரத்தைத் தவிர வேற வழி இருக்கலை.”

கவலையுடன் அவளைப் பார்த்து, “அஞ்சு வருஷம் இருக்குமா அனிதா? வேற கல்யாணம் பண்ணிக்கலையா?” என்று இழுத்தான்.

“சம்பிரதாயமான கல்யாணத்து மேலயும், இந்த ஆம்பளைங்க மேலயும் சுத்தமா நம்பிக்கை போயிருச்சுடா. இன்னொரு தடவை ரிஸ்க் எடுக்கத் தயாரா இல்லை.”

டிரைவ் வே-யில் போய் நின்றது கார். ஆளசைவை உணர்ந்து முகப்பு விளக்குகள் தானாக எரிந்தன. பிரம்மாண்டமான அந்த சிங்கிள் ஃபேமிலி வீட்டை பிரமிப்புடன் பார்த்தான் ரஞ்சித்.

“இவ்வளவு பெரிய வீட்டில் நீ தன்னந்தனியாவா இருக்கே அனிதா? யு ஷுட் மூவ் ஆன்.”

“நான் தனியா இருக்கேன்னு நீயா கற்பனை பண்ணிக்காதேடா. ஐயாம் நாட் லிவிங் அலோன்.” – அனிதா புன்னகைத்த போது – கதவைத் திறந்து லதிகா எட்டிப் பார்த்தாள்.

“இட்ஸ் லீகல் இன் கலிஃபோர்னியா.” என்றாள் அனிதா.

0 Replies to “ஸ்நேகிதி”

  1. சத்யராஜ் சார்…
    உங்களுடைய பழைய கதைகளை படித்திருக்கிறேன். இந்த கதை வேறு ஒரு முடிவை சொல்வதாக அமைந்திருக்கிறது. கடைசி வரி வரையிலும் இந்த முடிவை யாருமே யோசிக்காத வகையில் அமைத்திருக்கிறீர்கள்…
    சிரிக்கத் தோன்றுகிறது… இங்கு பாதிக்கப்பட்டது அவன் அல்லது அவள் ஆ என்று…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.