மகரந்தம்

வல்லவருக்குப் பூச்சியும் லாபம் ஈட்டும்!

மண்புழுக்கள் எந்தக் குப்பையையும் பொன் போன்று மதிப்புள்ள சத்து மண்ணாக மாற்றும் என்று நாம் படிக்கிறோம். மண்புழுக்கள் எருவாக மாற்றிய குப்பைக் கூளங்களுக்கு இந்தியாவிலும், தமிழகத்திலும் சந்தையில் விலை அதிகம் கிட்டுகிறது. மண்புழுக்களை வளர்ப்பதும், அவற்றை உயிரோடு வைத்திருப்பதும் எளிது என்றாலும், சில சிறு பிழைகள் அவை மரித்துப் போய்,  இழப்பிற்கும் வழி வகுக்கும் என்பதால் இவற்றைக் கொண்டு எருக்குழியை சத்து மண்ணாக்கச் சிறிது தொழிலறிவும், நல்ல பராமரிப்பும் தேவைப்படும்.

இப்போது வேறொரு பூச்சி மூலம் இதே விதமான சத்து மண்ணை அந்த அளவு பராமரிப்பு கூட இல்லாமல் உருவாக்க முடியும் என்று இங்கொருவர் சொல்கிறார். அந்தப் பூச்சி என்னவென்று கேட்டால் நமக்குக் கொஞ்சம் திடுக்கிடும். ஆனால் மரபு இந்துப் பழக்கங்களிலும், நம்பிக்கைகளிலும் இந்தப் பூச்சிக்கு நல்ல பெயர் உண்டு என்பது நம்மில் பலருக்குத் தெரியாமலிருக்கலாம். இந்தப் பூச்சி இருக்குமிடத்தில் செழிப்புக்கான தேவியான லக்ஷ்மி இருப்பாள் என்று மரபுவாதிகள் சொல்லிக் கேட்டிருப்பீர்களோ என்னவோ? நவீனர்களான நமக்கு இந்த வகை நம்பிக்கையைக் கேட்டாலே உடல் கூசுவதோடு, இப்படி யோசிப்பவர்களின் புத்திக் கருக்கு பற்றிய தீவிர ஐயப்பாடும் நம்மிடம் எழவே வாய்ப்பு அதிகம்.

எதிலும் மேற்கு ஏதும் செய்து காட்டினால் நவீனர்களான நமக்கு உடனே அதை ஆஹா என்ன அருமை என்று புளகிக்கச் சொல்லுமே. அதுவும் ஃப்ரெஞ்சு, ஜெர்மன், யூரோப்பியராக அந்த சோதனையைச் செய்து காட்டினால் நமக்கு உடனே புல்லரிக்கும். இங்கு இந்தப் பூச்சியை வைத்து ஒரு சோதனை நடத்திக் காட்டுபவர் மேற்படி யூரோப்பிய நிலத்தவர் இல்லை என்றாலும், ஏதோ வெளிநாட்டவர், அது போதாதோ?

Cockroach Composting - Part 2
ஆனாலும் இந்தப் பூச்சியா குப்பையை வளமான எருக்குழியாக மாற்றும்? இதை வளர விடுவது வீட்டுக்கு ஆபத்தில்லையா? வியாதியெல்லாம் வராதா? இப்படி உடனடிக் கேள்விகள் நமக்கு எழும். ஆனால் இவர் சொல்கிறார், ஒரு செலவில்லாமல் இவற்றை நாம் வளர்க்க முடியும் என்பதோடு, இவை சுலபத்தில் அழிக்கப்பட முடியாத ஜந்துக்கள். இவை எந்தக் குப்பையையும் எருவாக மாற்றும். இவற்றை எங்கும் பரவாமல் தடுப்பதும் கடினமல்ல. பின் என்ன பிரச்சினை? இவற்றைக் கொண்டு குப்பை கூளங்களை எருவாக்குவோம், வாருங்கள் என்கிறார்.

ஆனால் என்ன பூச்சி அது?

ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம். அந்தப் பூச்சி கரப்பான்தான். ஆனால் எல்லாக் கரப்புகளையும் பயன்படுத்தாமல் இவர் சொல்கிற வகைக் கரப்பைப் பயன்படுத்தினால் மேலோ என்னவோ? ஏனெனில் இந்த வகைக் கரப்புக்கு சுவரில் ஏறி வரத் தெரியாதாம்.

கரப்புகள் நாற்றமில்லாத, சுத்தமான பூச்சிகள் என்று வேறு சான்றிதழ் வழங்குகிறார். அதை நாம் ஏற்க முடியுமா என்று தெரியவில்லை. கரப்பு நாற்றம் என்ற ஒன்று நமக்கு நம் ஊர் உணவு விடுதிகளிலிருந்து பல லாட்ஜ்கள் வரை தெரிந்துதானே இருக்கிறது? ஆனால் இவர் நமக்கு நன்கு தெரிந்த வீட்டுக் கரப்பான் பூச்சியைச் சொல்லவில்லை போலிருக்கிறது.  என்ன வகைக் கரப்பான் என்று தெரிய இக்கட்டுரையைப் படிக்க வேண்டி இருக்கும்.

http://gilcarandang.com/natural-techniques/cockroach-composting/

oOo

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்: வெளிநாட்டு நிதி

NGO_Keys_Words_Donations_Funding

 இந்தியாவை முடக்க ஏகாதிபத்திய சக்திகள் செய்யும் சதிகளுக்கு இந்தியர்களே கைக்கூலிகளாவது இன்று நேற்றைய விஷயமில்லை! ஆயிரம் ஆண்டுகள் முன்பிலிருந்தே, அன்றைய அரபு ஏகாதிபத்திய முயற்சியிலிருந்தே,  உலக ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியாவைக் கொள்ளையடிப்பதும், ஒழித்து ஓரம் கட்டுவதும் ஒரு முக்கிய முயற்சியாக இருந்திருக்கிறது என்றால், அதற்குத் துணை போய் தம் மக்களையே அழிக்க உதவுவதும் இந்தியர்களில் சிலருக்காவது உவப்பாகவே இருந்திருக்கிறது.

சமீபத்து வருடங்களில், சுதந்திரம் பெற்ற பின், இந்தியா மிக மெதுவாக, ஆனால் எப்படியோ மேலெழத் துவங்குவதைப் பொறுக்காது பல நாடுகள் இந்தியாவை நேரடியாகத் தாக்காமல் கைக்கூலிகள் மூலமும், பிரிவினை வாதங்கள், அடையாள அரசியல் போன்றவற்றாலும் உடைக்க முடியும் என்று கண்டு கொண்டு அவற்றைத் திரை மறைவில் இருந்து இயக்கி வருகின்றன. இந்த வகைச் சதிகளை எப்படித் தொடர்ந்து திட்டம் போட்டு வேலை செய்திருக்கிறார்கள்,  அவற்றுக்குத் துணை போனவர்களில் எவ்வளவு தன்னார்வக் குழுக்கள் இருக்கிறார்கள், அதோடு இந்தியாவின் செகுலரிய வியாதிகளும், இடதுகளும் எப்படி இந்த முடக்கலுக்கு ஜே போட்டார்கள் என்று சொல்கிறது இந்தச் செய்திக் குறிப்பு.

ஏழ்மையில் மூழ்கிய நம் மக்களின் பாதுகாவலர் என்று வேடம் தரித்து நாடகம் ஆடுபவர்களே முன்நின்று, நம் மக்களை நிரந்தர ஏழைகளாக வைத்திருக்கும் முயற்சிகளுக்குத் துணை போகிறார்கள் என்பதும்தான் இந்தியருக்குப் புது அனுபவமா என்ன? ஆனால் இந்த வகைத் தீமைகளிலிருந்து விடுபடத்தான் இந்தியருக்கு இன்னும் வழி தெரியவில்லை.

இதில் கூட இந்தியன் எக்ஸ்ப்ரஸ் இன்னும் முதுகெலும்பில்லாத புழுதான். ஒரு தன்னார்வக் குழுவைக் கூட இது பெயரிட்டுச் சொல்லாது, ஒரு அறிக்கையைப் பதிக்கிறது. இதற்குத்தான் பத்திரிகை சுதந்திரம் என்று வேறு பெயர். இந்தியாவைத் தவிர வேறு எல்லா நாடுகளுக்கும் அடிமையாக இருக்கத்தான் எத்தனை இந்தியர்களுக்கு அப்படி ஒரு விருப்பம் இருக்கிறது! இவற்றில் பலவும் பற்றி ஏற்கனவே இந்திய அரசின் புலனாய்வுத் துறைக்கு விவரம் தெரிந்திருந்தால் இத்தனை ஆண்டுகள் ஏதும் நடவடிக்கை எடுக்காமல் ஏன் விட்டிருந்தார்கள்?  அப்படி விட்டது ஒரு குற்றமாகாதா? அந்தக் குற்றத்தை அனுமதித்த இந்திய அரசைத் தம் கையில் வைத்திருந்த அரசியல் கட்சிகள் குற்றவாளிகளாக மாட்டாதா? அல்லது எதிர்க் கட்சிகளாக இன்று உள்ளவை/ உள்ளவர்கள் சொல்வது சரியென்றால், இன்று இந்தப் பட்டியல் ஒன்றை வெளியிடுவது அரசியல் காரணங்களுக்காக என்றால் இந்த நடவடிக்கை குற்றச் செயலாகாதா? இது போன்ற கேள்விகளைப் பொது அரங்கில் கேட்க ஊடகங்கள் முயன்றாலும், இவை குறித்த தெளிவான செய்தியும், அதற்கான முடிவுகளும் பொது அரங்கிலும், அரசின் செயலிலும் கிட்டுவதே இல்லை?

ஏராளமான கள்ளப் பணம் உலக வங்கிகளில் இந்தியாவின் பெரும் சுரண்டல்காரர்களிடமிருந்து குவிந்திருக்கின்றது என்ற செய்தி உலகெங்கும் கிட்டிய பிறகும் இந்திய அரசு பத்தாண்டுகள் போல எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே அதற்கே இன்னும் ஒரு விடிவுகாலமும் வரவில்லை, இந்த அன்னிய அரசுகள், ஏகாதிபத்திய சக்திகளுக்குக் கைக்கூலிகளாகத் தன்னார்வக் குழுக்கள் செயல்படுவதுதானா தீர்க்கப்படப் போகிறது என்று கேட்பீர்களே ஆனால், அதற்குத்தான் என்ன பதில் கிட்டும்?

http://indianexpress.com/article/india/india-others/foreign-aided-ngos-are-actively-stalling-development-ib-tells-pmo-in-a-report/

oOo

நாத்திகரா, போடு இரட்டைத் தாழ்ப்பாள்!

அறுபதுகளில் அமெரிக்கச் சமூகம் இரண்டாம் உலக யுத்தத்தால் அமெரிக்காவிற்குக் கிட்டிய உலகப் பேரரசு என்ற அந்தஸ்தைப் படிப்படியாக இழப்பது எப்படி என்று யோசித்து- தமிழ்ச் சூழலில் சொல்வது போல ‘ரூம் போட்டு யோசித்து’- செயல்பட்டுக் கொண்டிருந்தது. நன்மையைத் தேடி, உருப்படியான வழிகளை அவை கடும் முயற்சிகள் என்றாலும் தொடர்ந்து, பெருவாரி மக்களின் மேம்படுதலைத் தேடுவது என்பது உலகிலேயே, பல நூறாண்டுகளிலேயே, மிகச் சிலராலேயே, மிகச் சில நேரங்களிலேயே நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, அமெரிக்கா உலகப் போர் முடிந்து வெற்றிக் களிப்பிலும், களைப்பிலும் ஒரு பத்தாண்டுகளைக் கழித்து விட்டுத் தேறுகையில், படிப்படியாக க்ஷீணிப்பை நாடியதில் அதிசயம் ஏதும் இல்லை.

ஆனால் பொருளாதார க்ஷீணிப்பு ஏற்படத் துவங்கிய அதே நேரம், அமெரிக்கப் பண்பாட்டில் ஓரளவு நன்மைக்கான மாறுதல்கள் துவங்கின. குறிப்பாக, வெள்ளை இனவெறி என்பது மோசமான ஒரு மனநோய் என்ற கருத்து கணிசமான அமெரிக்கருக்குப் புரியத் தொடங்கி இருந்தது. அதனாலேயே ஒரு புறம் மார்டின் லூதர் கிங் என்ற கருப்பின அமெரிக்கரின் இயக்கம் வலுத்தது, சம உரிமைகளைக் கருப்பருக்கும் கோரி நடத்திய அவரது அமைதிப் போராட்டம் அமெரிக்கரின் மனச்சாட்சியை நன்னிலைக்கு இழுத்தது. அவரை வெள்ளை இன வெறியர் ஒருவர் கொன்றாலும், அந்த மக்களுரிமை இயக்கத்திற்குப் பணிந்து அமெரிக்க அரசு இனவெறியை ஒதுக்கவும், எல்லா இனத்தவருக்கும் குடிமக்களாயின் சம உரிமை தரப்பட வேண்டுமென்ற மிகச் சாதாரணமான ஜனநாயகக் கருத்தை ஒரு சட்டமாக இயற்றவும் முன்வந்தது.

அந்தக் கால கட்டத்திலிருந்து இன்று வரையிலும் அமெரிக்க சமுதாயத்தின் இன உறவுகள் படிப்படியாக முன்னேறுகின்றன ஆனால் போகவேண்டிய தூரம் எத்தனையோ. சூழ்ந்திருக்கும் இருளோ ஆழமாகவே இன்னும் இருக்கிறது. நாட்டின் விவசாயத்தையும், கனிமப்பொருட்களை அகழ்ந்தெடுப்பதையும் மையத் தொழிலாகக் கொண்டுள்ள பகுதிகளில் மடியாமல் இன்னும் வேரில் உயிர்ப்போடு இருக்கும் வெள்ளை இனவெறி என்பது கடந்த சில பத்தாண்டுகளாக, கிருஸ்தவ எவாஞ்சலிய முகமூடியை அணிந்து கொண்டும், கட்டுப்பாடற்ற குடியரசு என்ற கருத்தியலை அரிதாரமாக அணிந்து கொண்டும் அமெரிக்க அரசியலரங்கில் ஆரவாரத்தோடு எழுந்து நடமிடுகிறது. பாதிக்கு மேற்பட்ட அரசு அங்கங்களை இந்த அற்பக் கருத்தியல் தன் பிடியில் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில், சமீபத்தில் வெளிவந்த ஒரு கருத்துக் கணிப்பு சொல்வதைக் கவனிக்க வேண்டும். அமெரிக்கர்கள் மிகச் சமீபத்தில்தான் பல மாநிலங்களிலும் தற்பாலுறவு சார்ந்த திருமணங்களைச் சட்ட பூர்வமாகச் செய்து கொள்ளலாம் என்று ஏற்கத் தொடங்கி இருக்கிறார்கள். கலப்பினத் திருமணங்கள் சட்ட பூர்வமாகச் செல்லும் என்று ஏற்கனவே ஆகிய பிறகு, இந்த அடுத்த கட்டத்து நகர்வு ஒரு முன்னெடுப்பு என்று சொல்லலாம்.

ஆனால் இந்தக் கருத்துக் கணிப்பு சொல்வதைக் கவனித்தால் அமெரிக்காவின் சமூகப் பிரக்ஞை எத்தனைக்குக் கோணல் மாணலாகவே முன்னேறுகிறது என்று நமக்குப் புரியலாம். இக்கருத்துக் கணிப்பின்படி அமெரிக்கர்கள் பல வகை மனிதர்களைத் திருமணத்தின் மூலம் தம் குடும்பத்துப் புது நுழைவாக ஏற்பார்களாம், ஆனால் நாத்திகர்களை ஏற்க மாட்டார்களாம். அப்படித்தான் கிருஸ்தவ மதப்பழக்கங்கள் ஆழமாக வேரூன்றிய நாடா இது என்றால் அதுவும் இல்லை. சர்ச்சுகளில் வாராந்தரப் பிரார்த்தனைக்கு வரும் மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நாடெங்கிலும் நிறைய கதோலிக்க சர்ச்சுகளின் கட்டடங்கள் விற்கப்பட்டு வருகின்றன. பல எவாஞ்சலியக் கிருஸ்தவக் கூடங்களும், தொலைக்காட்சி சபைகளும் வியாபாரங்களைப் போலத் தோல்வியுற்று மூடப்பட்டு வருவதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனாலும் நாத்திகர்களை மட்டும் விலக்க அமெரிக்கர் எண்ணுவது ஏன்?

அது வெறுப்பால் என்று சொல்ல முடியாது, அறியாமையால் என்றுதான் சொல்ல முடியும் என்று எழுதுகிறார் ஒரு கட்டுரையாளர்.  இந்தக் கருத்துக் கணிப்புதான் சமூக எதார்த்தம் என்று நாம் கருதத் தேவையில்லை, ஆனால் அதே நேரம் பாதிக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் இன்னும் விவிலிய நூல்தான் அறிவியலை விட மேலான அறிவுள்ளது, கூடுதலாக நம்பகமானது என்று கருதுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.

இந்தக் கட்டுரை சுட்டுவதன்படி சராசரியாக 40% அமெரிக்கர்கள் நாத்திகர்களைத் தம் குடும்பத்து உறவினர்களாக நுழைய அனுமதிக்க விரும்பாதவர்கள் என்று தெரிகிறது. இதில் கிருஸ்தவ அல்லது பாரம்பரியப் பாதுகாப்பு மனோபாவம் கொண்டவர்களில் 70% போல எதிர்ப்பைத் தெரிவித்தாலும் மிக தாராளவாதிகள் என்பாருமே கூட சுமாராக நான்கில் ஒருவர், எதிர்ப்பையே கொண்டிருக்கின்றனர்.

http://www.slate.com/blogs/xx_factor/2014/06/13/pew_report_on_political_polarization_americans_will_accept_a_variety_of.html

இந்த சிறு அறிக்கையில் சொல்லப்படும் ஆய்வை நடத்திய நிறுவனத்தின் தளத்தில் மேலும் விரிவான விளக்கத்தைப் பார்க்கலாம். அந்த விளக்கம் இந்த இடத்தில் உள்ளது.

http://www.people-press.org/2014/06/12/section-3-political-polarization-and-personal-life/

இத்தனை ஆழமான தீர்க்கப்படாத சமூகப் பிரச்சினைகள் கொண்ட அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு மக்களுடைய ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது பற்றி மறுபடி மறுபடி பன்னாட்டரங்கில் வகுப்பெடுக்க முயல்கிறார்கள் என்பது ஒரு அபத்த நாடகம். அதிலும் சராசரி அமெரிக்கர்களை எல்லாம் விடத் தீவிரமாகவே அடக்குமுறை, வலது சாரிக் கருத்துகளைக் கொண்டவர்களே பெரும்பான்மையாக இருக்கும் அமெரிக்க அரசுக்கு, இந்திய இடதுசாரிகள் விண்ணப்பங்கள் அனுப்பி தற்போதைய இந்தியப் பிரதமரை அந்நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைப்பது அதையும் விட அபத்தத்தின் உச்சம்.

0O0

அயர்லாந்து: எண்ணூறு சிசுக்களின் சவக்குழி

Old_Tuam_Society_Mass_Graves_unwed_Catholic_Churches_Ireland_Christianity_Evangelical_Abortion_Women

பான் செகர்ஸ் சகோதரிகளின் அனாதரவற்றோர் இல்லம் அருகே 796 பேர் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. 1925 முதல் 1961 வரை இவர்கள் உணவுப் பற்றாக்குறையிலும் சத்துக் குறைபாட்டினாலும் இறந்திருக்கிறார்கள். மணமாகாத தாய்களுக்கும் அவர்களின் சிறார்களுக்கும் நடத்தப்பட்ட இல்லத்தின் அருகே இவ்வளவு அதிகமானாருக்கோன சவக்குழி கண்டுபிடிக்கப்படது குறித்த செய்தியை இங்கே படிக்கலாம்.

http://www.huffingtonpost.com/2014/06/03/800-children-mass-grave-septic-tank-ireland_n_5437666.html

oOo

உள்முகமும் வெளிமுகமும்

introvert-writing

ஆங்கிலத்தில் introvert என்றால் என்ன அர்த்தம்? விக்கிப்பிடியாவைக் கேட்டால், ‘தன்னுடைய நலத்தைப் பற்றியே சிந்திப்பவர்’. பொதுவில் பேசத் தயங்குபவரையும் அறிமுகமில்லாதவர்களிடம் ஒடுங்கி இருப்பவர்களையும் அகமுகச் சிந்தனையாளர் என நினைக்கிறார்கள். தடாலடியாகக் கூட்டங்களில் முழங்குபவர்களையும் படோடாபமாக களத்தில் இறங்கி களேபரம் செய்பவர்களை எக்ஸ்ட்ரொவெர்ட் என எதிர்புறத்தில் வைக்கிறார்கள். இந்தப் பிரிவுகள் சரியா? நீங்கள் இதில் எந்த ரகம்? எப்படி இந்த வகையறாக்கள் தொக்கி நிற்கின்றன என ஸ்காட் பாரி கௌஃப்மான் அலசுகிறார்.

http://blogs.scientificamerican.com/beautiful-minds/2014/06/09/will-the-real-introvert-stand-up/

oOo

0 Replies to “மகரந்தம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.