பழைய மூளைக்குள் சில புதிய மூலைகள் – 1

Brain_See_Inside_Touch_Feel_1

கடந்த சில நூற்றாண்டுகளில் மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் மனித மூளை எப்படி இயங்குகிறது என்பது இப்போதும் நமக்கு சரியாக புரியாத புதிர்தான்! நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் தலைக்குள் உட்கார்ந்திருக்கும் மூளை சுமாராக ஒன்றரை கிலோ எடையுள்ள ஒரு சாம்பல் நிற கொசகொசப்பு. மனித உடலுக்குள் இன்னும் முழுவதுமாக புரிந்து கொள்ளப்படாத வேறு பல விஷயங்கள் நிச்சயம் உண்டு எனினும், இதயம், சிறுநீரகம், கண் போன்ற முக்கியமான உறுப்புக்களை பற்றி நிறைய புரிந்து கொண்டு இருக்கிறோம், மாற்று அறுவை சிகிச்சைகள் செய்கிறோம், அதே பணிகளைப் பலவருடங்கள் சிறப்பாக செய்யக்கூடிய செயற்கை அவயங்களைக் கூடத் தயாரித்துச் சோர்ந்து போன இயற்கை அவயங்களை எடுத்துவிட்டு புதிய செயற்கை உதிரி பாகங்களைப் பொருத்துகிறோம். ஆனால் உடலின் மிக முக்கியமான ஒரு அவயமாக இருந்த போதிலும் மூளை மட்டும் இதற்கு விதிவிலக்கு.

ஐன்ஸ்டைனையும் சேர்த்து, ஆயிரக்கணக்கான இறந்துபோனவர்களின் மூளைகளை வெட்டிப்பார்த்து சோதனைகள் செய்தும், உயிரோடு இருக்கும் பலரை பல்வேறு நிலைகளில் எம்ஆர்ஐ (MRI: Magnetic Resonance Imaging) ஸ்கேன் செய்தும் பல்லாண்டுகளாக அதை முழுமையாக புரிந்து கொள்ள முயற்சிகள் விடாமல் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்ற பத்து நூற்றாண்டுகளைவிட கடந்த பத்து ஆண்டுகளில் மூளை எப்படி இயங்குகிறது என்பதைப்பற்றி நாம் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறோம் என்பது உண்மைதான். இருந்தும், மூளையின் இந்தப்பகுதி இந்த பொறுப்பை ஏற்று செயல்படுகிறது போலிருக்கிறது என்ற ஒரு குத்துமதிப்பான புரிதலுக்குதான் இதுவரை வந்திருக்கிறோம். மூளை மாற்று அறுவை சிகிச்சையோ செயற்கை மூளை தயாரிப்போ நம் வாழ்நாட்களுக்குள் சாத்தியம் என்று தோன்றவில்லை. இந்தத்துறையைப்பற்றி சுவையான புத்தகங்கள்[1] எழுதியிருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர் டாக்டர் வீ.எஸ்.ராமசந்திரன், இன்றைக்கும் ஒரு உயர்நிலை. பள்ளி மாணவன் சாதாரணமாக யோசித்து மூளையைப்பற்றி கேட்கும் கேள்விகளுக்கு கூட இத்துறை நிபுணர்களிடம் சரியான பதில்கள் இல்லை என்ற நிலை என்னை வசீகரித்து இத்துறை ஆய்வில் ஈடுபட உந்தியது என்று சொல்வார். அவருடைய விரிவுரைகளை யுட்யூப், டெட் (TED) முதலிய வலைத்தளங்களில் பார்த்து ரசிக்கலாம்.

Human_Brain_Neurons_Connections_Visual_Amygladaநான் என்கிற பிரக்ஞை நம் மூளைக்குள் எப்படி வருகிறது என்பது போன்ற தத்துவார்த்தமான சிக்கல் கேள்விகளை ஒதுக்கிவிட்டு பார்த்தாலும், சும்மா நம் காதில் விழும் ஒலி எப்படி மூளைக்கு சென்று சேர்ந்து புரிந்து கொள்ளப்படுகிறது என்பது போன்ற சற்றே எளிதான செயல்பாட்டுமுறை கேள்விகளுக்கு கூட மிகச்சரியான முழு விடைகள் இன்னும் கிடைக்கவில்லை. காதிலிருந்து மூளைக்கு ஒலி அலைகளை எடுத்துச்செல்லும் நரம்புகள் பழுது பட்டிருந்தால் காது சுத்தமாய் கேட்காமல் போய்விடும். எந்தவிதமான ஒலியையும் பிறந்ததிலிருந்து கேட்காதவர்கள் பேசவும் முடியாதல்லவா? எனவே 1950களில் இருந்து இந்தக்குறை உள்ளவர்களுக்கு காதுக்கு பக்கத்தில் சிறிய மைக் ஒன்றை பொறுத்தி, சுற்றுப்புறத்தில் கேட்கும் ஒலிகளை மின் அதிர்வுகளாக மாற்றி, அதை ஓயர் வழியே காதுக்குள் இருக்கும் காக்லியா என்ற இடத்திற்குள் செலுத்தி, அங்கிருந்து வழக்கமான பாதை வழியே மூளைக்கு அனுப்பி காது கேட்பது போல் செய்ய முடியுமா என்று முயன்று கொண்டு இருக்கிறார்கள். காக்லியர் இம்ப்ளாண்ட் (Cochlear Implant) என்று சொல்லப்படும் இந்த கருவிகள் மூன்று லட்சம் பேர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு இருக்கிறது. பல லட்ஷக்கணக்கில் பணம் தேவைப்படும் இத்தகைய விலையுயர்ந்த சிகிச்சைக்கு அப்புறம் கூட சிகிச்சை பெற்றவர்கள் காது கேட்கும் திறனை முழுவதும் பெறுவதில்லை. அதற்கு காரணம் வெவ்வேறு ஒலிகளை கேட்கும்போது இயற்கையாக எத்தகைய மின் அதிர்வுகள் நம் காதுக்குள் ஏற்படுகின்றன, அந்த அதிர்வுகள் மூளையால் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது என்பதெல்லாம் நமக்கு இன்னும் சரியாக புரியாததுதான். இப்போதைக்கு ஒரு ஐம்பது சதவிகிதம் காது கேட்பதாக சொல்கிறார்கள். பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிக்கும்போது ஐம்பது சதவிகிதம் நல்ல முன்னேற்றம்தான்.

Cochlear_Implant_Hearing_Nerve_Sound_Processor_Brain_Sounds_Internals

இதே உத்திகளை பயன்படுத்தி பிறவியிலிருந்தே கண் பார்வை இல்லாதவர்களுக்கு முடிந்த அளவு பார்வைத்திறனைத்தரும் முயற்சியும், நடந்து கொண்டு இருக்கிறது[2]. கண் பார்வை இல்லாதவர்களுக்கு ஒரு கண்ணாடி போன்ற கருவியை கொடுத்து அணிந்துகொள்ளச்சொல்லி அதில் சிறிய காமெராக்களைப்பொறுத்தி, எதிரே உள்ள காட்சிகளுக்கேற்ப மின் அதிர்வுகளை உருவாக்கி அவற்றை கண்களுக்கு பின்புறம் உள்ள நரம்புகள் வழியாக மூளைக்குள் செலுத்தி எவ்வளவு தூரம் மூளைக்கு படம் காட்ட முடியும் என்று ஆய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  பத்து இருபது வருடங்களாக நடந்துவரும் இம் முயற்சிகளின் மூலம் இப்போதைக்கு நிழல், புள்ளி என்பதுபோல் ஏதோ பஜ்ஜென்று தெரிய வைத்து கரகோஷம் பெற்றிருக்கிறார்கள். இந்த மாதிரியான ஆராய்ச்சியைப் பற்றி அடுத்த இதழில் இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.

இதெல்லாம் மிகவும் கடினமான சிறிய முன்னேற்றங்கள் அதுவும் மனம் தளரவைக்கும் வேகத்தில் நடப்பவை போல் தெரிகிறதே என்று எண்ணினீர்களானால், அங்கேதான் கதை மாறுகிறது! இந்த ஆய்வுகளில் நமக்கு உற்சாகம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், இணைப்பு விட்டுப்போன இந்த நரம்புகளுக்கு செயற்கையாய் ஒட்டுப்போட்டு ஏதோ நமக்கு தெரிந்த வரையில் மின் அதிர்வுகளை சுமாராக ஏற்படுத்தி மூளைக்கு அனுப்பி வைத்தோமானால், நமது அசகாய மூளை உள்ளே வரும் அரைகுறை சமிக்ஞைகளை (Signals) வாங்கி தானே அதை எப்படி அலசி புரிந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொண்டு விரைவில் நன்கு செயல்பட ஆரம்பித்து விடுகிறது! கொஞ்சம் யோசித்தால் எனக்கு பச்சை நிறம் ஏற்படுத்தும் மூளை சலனங்களை உங்களுக்கு சிவப்பு நிறமும், உங்களுக்கு பச்சை நிறம் ஏற்படுத்தும் மூளை சலனங்களை எனக்கு மஞ்சள் நிறமும் ஏற்படுத்தலாம் என்பது நமக்கு புரியும். நானும் நீங்களும் பிறந்ததில் இருந்து ஒவ்வொரு வண்ணமும் நமது மூளைக்குள் ஏற்படுத்தும் சலனங்களுக்கு பழக்கப்பட்டவர்கள் என்பதால், இந்த வித்யாசங்களால் எந்த பாதகமும் இல்லாமல் ட்ராஃபிக் விளக்குகளை ஒரே மாதிரி புரிந்துகொண்டு வண்டி ஓட்ட முடிகிறது. அது போல பிறவியிலிருந்தே காது கேட்காதவர்களும், கண் தெரியாதவர்களும், ஒவ்வொரு ஒலி, ஒளிக்கேற்ப ஒரு சமிக்ஞை உள்ளே வர ஆரம்பித்தால், அதைக்கற்றும் புரிந்தும் கொண்டும் இயங்க ஆரம்பித்து .விடுகிறார்கள். பிறவியிலிருந்தே அந்த புலன்கள் ஒழுங்காக வேலை செய்பவர்களுக்கு உள்ளே வரும் சமிக்ஞைகளில் இருந்து, நாம் உருவாக்கி உள்ளே செலுத்தும் இந்த செயற்கை சமிக்ஞைகள் சற்று வேறுபட்டாலும் ஊனமுற்றவர்களின் மூளைக்கு அவை புதிய சமிக்ஞைகள் என்பதால் அவர்களுக்கு அவை பழகிவிடுகின்றன. குறிப்பிட்ட (ஒலி அல்லது) ஒளிக்கான சமிக்ஞை கண்டபடி நாளுக்கு நாள் மாறினால் மட்டுமே குழப்பம். இப்படி வளைந்து கொடுத்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் மூளையின் கில்லாடி திறனுக்கு நியூரோப்ளாஸ்டிசிடி (Neuroplasticity) என்று பெயர்.

Brain_Cartoons_Comics_Graphics_Weight_Lifting_Hands_Strength_Training_Activity

கை கால்களை இழந்தவர்களுக்கு, செயற்கை கை கால்களை பொறுத்திக்கொடுத்து அவர்களை முடிந்த அளவு நேர்ப்படுத்துவதுபோல், ஐம்புலன்களில் ஏதாவதொன்றை பிறவியிலேயோ அல்லது வாழ்வின் இடையிலோ இழந்தவர்களுக்கு செயற்கை உபகரணங்களை (Prosthesis) பொறுத்தி அந்த திறனை திரும்ப பெற்று தருவது மருத்துவத்துறையின் வெகுநாளைய போராட்டம். இந்தத்தேடல் அல்லது தேவை எல்லோருக்கும் எளிதாகப்புரியும் விஷயம். ஆனால் அந்த முயற்சியின் வழியாக நாம் பெற்றிருக்கும் அனுபவத்தைக்கொண்டு, நரம்பியல், மூளை முதலியவற்றை பற்றிய சம்பிரதாயமான ஆய்வுகளைத்தாண்டி, இதுவரை மனிதர்களுக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத புதிய புலன்களை அமைத்துக்கொடுத்து புதிய திறன்களை மனித மூளைக்கு கொடுக்க முடியுமா என்பது எளிதாக எல்லோருக்கும் தோன்றாத ஒரு புத்திசாலித்தனமான கேள்வி.

பீட்டர் கியோனிக் (Dr Peter König) இந்தக்கேள்வியில் ஈடுபாடு கொண்ட ஒரு ஜெர்மன் பல்கலைக்கழக பேராசிரியர்/ஆய்வாளர். இதற்கு பதில் சொல்லும் முயற்சியில் ஈடுபட்ட அவர், ஒரு டஜன் குட்டி மோட்டார்களை எடுத்து ஒரு பட்டை பெல்ட்டில் ஒட்டினார். ஒவ்வொரு மோட்டாரும் பதினைந்து வருடங்களுக்கு முன் உபயோகத்தில் இருந்த பேஜர்களைப்போன்றவை. இவற்றோடு பெல்ட்டில் ஒரு சிறிய GPS கருவி மற்றும் பேட்டரி. பெல்ட்டைக்கட்டிக்கொண்டு ஸிவிட்சை தட்டிவிட்டால் அந்த பன்னிரண்டு மோட்டார்களில் எந்த மோட்டார் வடக்குபுறம் இருக்கிறதோ அது மட்டும் விடாமல் செல்போன் அதிர்வதுபோல் அதிர்ந்து கொண்டே இருக்கும். அதாவது, பெல்ட்டைக்கட்டிக்கொண்டு வடக்கு திசையை நோக்கி நின்றீர்களானால், உங்கள் தொப்பிளுக்கு நேரே உள்ள மோட்டார் அதிரும். இப்போது மெதுவாக ஒரு அரைச்சுற்று சுற்றி தெற்கு நோக்கி நின்றீர்களானால், உங்கள் முதுகில் உள்ள மோட்டார் அதிரும். இன்னொரு கால்சுற்று சுற்றி மேற்கு நோக்கி நின்றீர்களானால், உங்கள் வலது கைக்கு அருகே உள்ள மோட்டார் அதிரும். ஃபீல் ஸ்பேஸ் (Feel Space) என்று பெயரிடப்பட்ட இந்த பெல்ட்டின் படங்களைப்பார்த்தால், நான் சொல்ல முனைவது சுலபமாகப்புரிந்துவிடும்.

Vibration_Motor_Sensor_Feel_Space_Wrist_Hand_Brain_GPS_Direction_Instruments_Mechanics_Brain

இந்த பரிசோதனையில் பங்கெடுத்துக்கொண்டவர்கள் ஒரு இரண்டு மாதங்கள் இந்த பெல்ட்டை நாள் பூராவும் அணிந்திருந்தார்கள். ஆரம்பித்த முதல் சில மணிநேரங்கள் விடாமல் இடுப்பில் ஏதோ ஒரு பக்கம் இந்த மெல்லிய அதிர்வு இருந்து கொண்டே இருந்தது வினோதமான நச்சரிப்பாகத்தோன்றினாலும், ஒரே நாளில் இடைவிடாத அந்த அதிர்வு மிகவும் பழகிப்போய் விட்டதாம். மறுநாள் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சைக்கிள் ஓட்டிக்கொண்டு வரும்போது, ஒவ்வொரு திருப்பத்திலும் இடுப்பில் அதிர்வு ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு பூச்சி மாதிரி ஓடி, வடக்கு எந்தப்பக்கம் என்று விடாமல் நினைவுறுத்திக்கொண்டே இருந்தது. மொத்தத்தில் இந்த பெல்ட் அணிந்தவர்களின் மூளைக்கு அந்த இடைவிடாத மெல்லிய இடுப்பு அதிர்வு மூலம் வடதிசை எந்தப்புறம் என்று எப்போதும் தெரிந்து இருந்தது. அந்தத்தகவல் அவர்களுக்கு அந்த கணம் தேவையோ இல்லையோ, கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்களோ, திறந்து வைத்திருக்கிறார்களோ, இரவோ பகலோ, கட்டிடங்களுக்கு உள்ளே இருக்கிறார்களோ அல்லது வெளியே சுற்றிக்கொண்டு இருக்கிறார்களோ, உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களோ அல்லது சைக்கிள், கார், ரயில் எதிலும் பயணித்துக்கொண்டு இருக்கிறார்களோ கவலை இல்லை. வடக்கு திசை எந்தப்புறம் என்ற தகவல் நாள் பூராவும் அவர்களின் மூளைக்குள் விடாமல் சென்று கொண்டே இருந்தது. இது இவர்களுக்கு ஸ்பெஷலாக வழங்கப்பட்ட, சில இடம் பெயரும் பறவைகளுக்கு இருப்பதைப்போன்ற, ஒரு புதிய புலன்!

இரண்டு மூன்று நாட்களுக்குள் இந்த இடுப்பு உறுத்தல் மிகவும் பழகிப்போய் ஏறக்குறைய மறந்தே போய்விட்டாலும், காரில் பயணிக்கும்போது தன்னையறியாமல் சாலை எவ்வளவு வளைந்து வளைந்து போகிறது என்பது அவர்களுக்கு உறைக்க ஆரம்பித்தது! வீட்டில் சும்மா டி‌வி பார்க்கும்போது என் ஆஃபிஸ் இருப்பது அந்தப்பக்கம் என்று மிகச்சரியான திசையை நோக்கி ஓர் எண்ணம் தோன்ற ஆரம்பித்தது! இரண்டு வாரங்களுக்குப்பின் புதிய ஊர்களுக்கு போனாலும்கூட ஊரின் மேப் மூளைக்குள் தானாகவே உருவாக ஆரம்பித்து, என்னை எங்கே கொண்டுபோய் விட்டாலும் நான் நிச்சயம் தொலைந்து போகவே மாட்டேன் என்ற அசாத்திய தன்னம்பிக்கை வந்து விட்டதாம்! முஸ்லீம்கள் தினமும் ஐந்து முறை தொழுகை செய்யும்போது மெக்காவை நோக்கி தொழும் வழக்கம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எந்த ஊரில் எந்த அறைக்குள் இருந்தாலும், மெக்கா எந்தப்பக்கம் என்று இந்த ஃபீல் ஸ்பேஸ் பெல்ட்காரர்களால் சுலபமாக சுட்டிக்காட்ட முடிந்திருக்கும்! திசை என்ற தலைப்பில் சொல்வனத்திலேயே ஒரு கட்டுரை  எழுதிய சுகா கூட இந்த முயற்சியைப்பற்றி கேள்விப்பட்டால் சந்தோஷப்படுவார்.  இப்படியாக இரண்டு மாதங்கள் கழிந்தபின் பேராசிரியர் பீட்டர் கியோனிக், சரி பரிசோதனை முடிந்தது, பெல்ட்டைக்கொடுங்கள் என்று திரும்ப வாங்கிக்கொண்டார். அவ்வளவுதான், பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் ஏதோ ஒரு பழகிய திறனை திடீரென்று இழந்தாற்ப்போல் ஒரு மனம் கலங்கிய நிலை, மனச்சோர்வு, குழப்பம்! இதெல்லாம் விலகி பழைய நிலைமை திரும்ப ஒரு வாரம் ஆகியது!

இந்த அழகான சோதனையிலிருந்து தெளிவாகப்புரிவது எப்படியாவது விஷயங்களை சேகரித்து மூளைக்கு அனுப்பி வைத்தால் அதுவாகவே வெகு விரைவில் அந்த தகவல்களைப்படித்து புரிந்து கொண்டு உபயோகிக்க ஆரம்பித்துவிடும் என்பதுதான். இந்த அற்புதமான திறன் நமக்கு நன்கு புரிந்த ஐம்புலன்களை இன்னும் செம்மைப்படுத்த (உதாரணமாக நமக்கு எப்போதும் இருக்கும் சாதாரண மோப்ப சக்தியை ஒரு நாயின் மோப்ப சக்தியின் அளவுக்கு உயர்த்துவது) மட்டும் இல்லாமல், நமக்கு இதுவரை இல்லவே இல்லாத புதிய புலன்களை பெறவும் சாத்தியக்கூறுகள் உள்ளதை நிரூபிக்கிறது.

இந்தக்கொள்கையின்படி நிலநடுக்கம் வருவதையோ, டால்ஃபின் அல்லது வௌவால் அல்ட்ராசோனிக் அதிர்வெண்களில் (Frequency) ஒலியெழுப்புவதையோ நாம் உணரவேண்டுமெனில், அதற்கு தகுந்த உணர்விகளை (sensor) உபயோகித்து, நமக்கு புரியும் ஐம்புலன்களில் ஒன்றுக்கு எட்டும்படியான சமிக்ஞையாக மாற்றி மூளைக்குள் செலுத்திவிட்டால் போதும். அதற்கப்புறம் மூளை பார்த்துக்கொள்ளும்!

(தொடரும்)

சான்றாதாரங்கள்
1. V. S. Ramachandran “A Brief Tour of Human Consciousness: From Imposter Poodles to Purple Numbers”, Pi Press, New York, 2004.

2. http://www.forbes.com/sites/matthewherper/2013/02/14/fda-approves-first-bionic-eye/

0 Replies to “பழைய மூளைக்குள் சில புதிய மூலைகள் – 1”

  1. Amazing article.One of the finest science articles I have read after a long long time.Full credit to Mr Sundar Vedantham for using a simple language to make the tough subject looks so easy.I have read couple of his artic les way back when he was hand picked by the popular Tamil weekly ANANDAVIKATEN as a student journalist.
    Wish him all the very best for writing more and more interesting articles like this one.
    Fond Regards
    Capt S Ramesh
    Mumbai

Leave a Reply to bamaCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.