புத்தகக் கண்காட்சி உலா…

சென்ற வருட புத்தகக் கண்காட்சிக்குப் போகவே இல்லை. அதற்கு முந்தைய வருடக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் படிக்காத (நியாயமாக சொல்லப் போனால் அட்டையைக் கூடப் பிரிக்காத) புத்தகங்கள் என்னை தினமும் முறைத்த காரணத்தால்தான் போகவில்லை. வீட்டம்மாவின் தலைமையிலேயே மேற்படி புத்தகங்கள் முறைத்தன என்பது கூடுதல் செய்தி. இந்த முறையும் போகாமல் தவிர்த்து விடலாம் என்றால், அப்படி இருக்க முடியாதபடி செய்துவிட்டனர் ‘வம்சி’ பதிப்பகத்தார். சும்மா கிடந்த சங்கை . . . ஓ! அது பொருத்தமாக இராதோ? . . . சரி. இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கு புத்தகம் கொண்டு வரும் சிறு யோசனை கூட இல்லாமல் இருந்த என்னை தொடர்பு கொண்ட ‘வம்சி’, எதிர்பாராவிதமாக இந்த கண்காட்சிக்கு எனது மூன்றாவது புத்தகமான ‘சாமானியனின் முகம்’ புத்தகத்தைக் கொண்டு வந்துவிட்டது. ’இந்த வருஷம் ஒங்க புஸ்தகம் வருது. நீங்க புக் ஃபேருக்கு வந்தே தீரணும்’ என்று சொன்ன கையோடு இழுத்தும் சென்று விட்டார் நண்பர் நட்பாஸ் என்னும் பாஸ்கர் என்னும் . . . . மன்னிக்கவும். அவருக்கு இன்னும் ஏராளமான புனைப்பெயர்கள் உண்டு. அதையெல்லாம் வரிசைப்படுத்தி எழுதினால் கட்டுரை அதிலேயே முடிந்து விடும்.

ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கு அதற்கு முன்பு நண்பர் சீமானின் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். வாசலில் நுழையும்போதே நண்பர் பாஸ்கர், ‘ஸார்! நீங்க அந்தப் பக்கம் பாக்கக் கூடாது. அப்படியே திரும்பி வலதுபக்கம் போங்க’ என்றபடி ஒருபக்கமாக என் கண்களை மறைத்து அழைத்துச் சென்றார். ‘ஏன் பாஸ்கர்?’ என்று அந்தப் பக்கம் திரும்ப முடியாமல் நெருக்கமாக மறைத்தபடி உடன் நடந்து வந்த பாஸ்கரின் கழுத்திடம் கேட்டேன். அதற்குள் என்னை உள்ளே கடத்தி வந்து விட்டபடியால், சற்று விலகி நடந்தவாறு, ‘அங்கே நாய் கண்காட்சி நடக்குது, ஸார். அதைப் பாத்தீங்கன்னா நீங்க நிச்சயம் இதுக்கு வர மாட்டீங்க. அதான் இப்பிடி அழச்சுட்டு வந்தேன்’ என்றார். பாஸ்கர் பயந்தது வாஸ்தவம்தான். நாங்கள் சென்றிருந்த நாளன்று நடந்த நாய் கண்காட்சியில் கலந்து கொண்ட ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் லேப்ரடார் வகை நாய்களின் புகைப்படங்களை மறுநாள் செய்தித்தாள்களில் பார்த்த போது, ‘அடடா! போகாமல் விட்டுவிட்டோமே’ என்று வருத்தமாகத்தான் இருந்தது.

புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுச் சீட்டு வாங்கப் போகும் போது, இடது பக்கம் இருந்து முறுகலான தோசை மற்றும் மெதுவடையின் வாசனை சுண்டி இழுத்தது. இந்த முறை பாஸ்கருக்கு நெருக்கமாக நான் நின்று மறைக்க வேண்டியிருந்தது. ‘அப்ப ரிட்டர்ன் ஆகும் போது போலாங்கறீங்களா, ஸார்?’. நெருக்கமாக நின்றிருந்த என் சட்டைப்பையிடம் கவலையுடன் கேட்டார் பாஸ்கர். ‘நிச்சயம் பாஸ்கர்’. ‘இல்ல ஸார். இப்பன்னா வட போடற எண்ணெல்லாம் ஃப்ரெஷ்ஷா இருக்கும். லேட்டாயிடுச்சுன்னா தோசமாவுல தண்ணிய ஜாஸ்தி ஊத்திருவாங்களேன்னு பாத்தேன்’. ‘வம்சி’ எங்கெ இருக்குன்னு பாருங்க, பாஸ்கர்?’. பேச்சை மாற்றினேன்.

வம்சி பதிப்பகத்தின் பவா செல்லதுரையையும், அவர் துணைவியார் கே.வி.ஷைலஜாவையும் நான் அதற்கு முன் நேரில் பார்த்ததில்லை. அவர்களை முதன் முதலில் சந்திக்கப் போகும் ஆவலில் முதலில் வம்சிக்குச் சென்றேன். வம்சி ஸ்டாலில் அமர்ந்திருந்த தோழர் பவா செல்லதுரை என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து எழுந்து, ‘அண்ணே வணக்கம்ணே’ என்றார். அருகில் சென்ற பிறகுதான், அது பவா அல்ல, ஜோலார்பேட்டை இளம்பரிதி என்பது புரிந்தது. ‘பவா வந்துக்கிட்டிருக்காருண்ணே. எப்படியும் அக்காவும் இன்னிக்கு இரவு வந்திருவாங்க’ என்றார், இளம்பரிதி. தம்பதியரை சந்திக்க இயலாத வருத்தத்தைக் காண்பித்துக் கொள்ளாமல், ‘சரி தம்பி. ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வரேன்’ என்று கிளம்பினேன். ‘ஸார்! அடுத்து கிழக்குதானே? இருங்க. எங்கெ இருக்குன்னு விசாரிச்சுடறேன்’ என்றார், பாஸ்கர். ‘தேவையில்ல பாஸ்கர். எந்த வரிசைல டிராஃபிக் ஜாம்னு பாருங்க. அங்கெதான் கிழக்கு இருக்கும். ஹரன் பிரசன்னா நடுநாயகமா வளிய மறச்சுக்கிட்டு ரெண்டு பெரிய சேர்ல உக்காந்திருப்பார்’ என்றேன். சொன்ன மாதிரியே பொற்றாமரை பிள்ளையாரைச் சுற்றுவது போல, பிரசன்னாவைச் சுற்றி ஜனங்கள் நடமாடினர். ‘தாயார் சன்னதியத் தவிர கெளக்குல வேற என்னவே உருப்படியா வாங்கலாம்?’. பிரசன்னாவிடம் கேட்டேன். ‘தஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜா, மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொடர்பான ஏதோ ஒரு புத்தகம் இரண்டையும் வாங்கிப் படித்துப் பார்க்கலாம்’ என்பது மாதிரி பிரசன்னா சொன்னார். பிரசன்னாவிடம் எப்போதும் இருக்கும் ஒரு நல்ல பழக்கம், அவர் எந்த ஒரு புத்தகத்தையுமே அழுத்தமாக என்னிடம் பரிந்துரைத்ததில்லை. அவர் எழுதிய ஒரே ஒரு கவிதைத் (?) தொகுப்பான ‘நிழல்கள்’ புத்தகத்தைக் கூட இன்றுவரை எனக்கு வழங்கி சிரமப்படுத்தவில்லை. ஊர்ப்பாசத்தைத் தாண்டி, எங்கள் உறவு நீடிப்பது, பிரசன்னாவின் இந்த மேன்மையான குணத்தினால்தான்.

புத்தகக் கண்காட்சியில் சினிமா தொடர்பான புத்தகங்கள் தவிர மற்ற வகை புத்தகங்களை வாங்க வேண்டும் என்கிற முடிவை மீற  வேண்டியிருந்தது. ‘அந்திமழை’ ஸ்டாலில் உள்ள புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அதன் ஆசிரியர் அசோகன் என்னிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். முன்பொருமுறை தொலைபேசியில் என்னுடன் பேசியிருக்கிறார். அவரும் அவருடைய நண்பரும், ‘அந்திமழை சார்பா எங்களின் அன்பளிப்பு, இது. ஒங்க ரசிகர்களின் பரிசா நீங்க இத வாங்கிக்கணும்’ என்று பிரியமாக சில புத்தகங்களை ஒரு பையில் போட்டு கொடுத்தார். மனமுவந்து அதை பெற்றுக் கொண்டேன். பைக்குள் இருந்த புத்தகங்களில் ஒன்று, பெண்மை பேசும் உலகத் திரைப்படங்கள் பற்றியது. ’பெண்ணென்று சொல்வேன்’ என்ற தலைப்பிலான அந்தப் புத்தகத்தை எழுதிய ஜா.தீபா, எங்க ஊர்ப்பொண்ணு.

book

அங்கிருந்து காலச்சுவடு பதிப்பகத்துக்குச் சென்றோம். காலச்சுவட்டுக்குள் நுழையவும் எங்கிருந்தோ சின்ன உருவம் கொண்ட இளைஞரொருவர், மின்னல் மாதிரி என் முன் தோன்றி, என் கைகளைப் பற்றிக் குலுக்கியபடி, ‘வாங்க சுகா. வண்ணநிலவன நீங்க பேட்டி எடுத்திருந்த விதமும், அதை முடிச்சிருந்த விதமும் பிரமாதம்’ என்றார். கூச்சத்துடன், ‘அப்படியா? சந்தோஷம்’ என்றேன். அதை காதில் வாங்கிக் கொள்ளாதவராக அவர், ‘மீஸான் கற்கள்’ வாங்கிட்டீங்களா?’ என்று கேட்டு விட்டு அந்தப் புத்தகத்தை எடுக்கப் பாய்ந்தார். ‘அடுத்த முறை வரும் போது வாங்கறேன். இப்போதைக்கு சுகுமாரனோட ‘வெல்லிங்டன்’ வேணும். வேற புஸ்தகங்களும் பாக்கறேன்’ என்றேன். ’ஓகே. பாருங்க. ஆனா பில் போடும்போது என்கிட்டே குடுங்க. நான் டிஸ்கவுண்ட்ல போட்டு வாங்கித் தரேன்’ என்றார். வெலிங்டனோடு, வைக்கம் முகம்மது பஷீரின் புத்தகம் ஒன்றையும் வாங்கி அந்த இளைஞரின் கையில் கொடுக்கவும், சொன்னபடி டிஸ்கவுண்டில் வாங்கிக் கொடுத்தார். எங்கேயோ உட்கார்ந்து ஏதோ எழுதுகிறோம். அதை யாரோ முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் படிக்கிறார். ஏதோ ஒருவகையில் நாம் எழுதுவது பிடிக்கப் போய், அதன் காரணமாக நம்மை மதிக்கிறார் என்பது, நம்ப முடியாத ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியியையும் அளிக்கிறது. உடன் வந்த பாஸ்கரிடம், ‘அந்தத் தம்பி என்ன பேருன்னு சொன்னார்’ என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். ‘ஹினெர் சலீம் எழுதின அப்பாவின் துப்பாக்கி’ய நீங்க வாங்கியே ஆகணும். அத படிச்சுட்டு நிச்சயமா நீங்க ஒங்க குரு பாலுமகேந்திராகிட்டெ அதப் பத்தி சொல்லியே ஆகணும்’ என்றெல்லாம் கேட்டுக் கொண்ட ‘கிருஷ்ணபிரபு’ என்கிற அந்த இளநரைத்தலைத் தம்பி, ஓர் அதிசய இலக்கிய வாசகராக இருந்தார்.

அதற்குள் கூட்டத்தின் காரணமாகவும், யார் யாரோ வந்து பேசியதாலும் நேரம் அதிகம் செலவாகி, எல்லா ஸ்டாலுக்கும் செல்ல முடியாமல் கிளம்ப வேண்டியதாயிற்று. ரவா தோசையும், காப்பியும் குடித்து விட்டு கண்காட்சியை விட்டு கிளம்பும் போது பாஸ்கரிடம் சொன்னேன். ‘அடுத்தவாட்டி கொஞ்சம் சீக்கிரமாவே வந்திருவோம், பாஸ்கர்.’

‘ஆமா ஸார். அதான் மொதல்லயே சொன்னேன். பாருங்க, தோசமாவு சரியில்ல’ என்றார்.

அடுத்த முறை எங்களோடு நண்பர் மனோவும் சேர்ந்து கொள்ள, வாசலிலேயே ‘சாமானியனின் முகம்’ புத்தகத்தோடு சில இளைஞர்கள் என்னை மறித்தனர். புத்தகத்தின் பின்னட்டையிலுள்ள என் புகைப்படத்தையும், என்னையும் மாறி மாறிப் பார்த்து விட்டு, சந்தேகத்தை முற்றிலும் போக்கிக் கொள்ளும் விதமாக, ‘ஸார். இது நீங்கதானே?’ என்று கேட்டுவிட்டு, புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். வழக்கமான பதற்றத்தில் கையெழுத்திட்டு வருடத்தை 2015 என்று எழுதி, பின் அடித்து 2013 ஆக்கி, பின் அதையும் அடித்து, ‘பரவாயில்ல ஸார். இருக்கட்டும்’. விட்டால் முன்னட்டை முழுவதும் பஞ்சாங்கம் எழுதிவிடுவேனோ என்று பயந்து புத்தகத்தைப் பிடுங்கி அந்த இளைஞர்கள் கையில் கொடுத்தார் மனோ. இந்த முறை வம்சியில் கே.வி.ஷைலஜா இருந்தார். முதன்முறையாக பார்த்ததில் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஷைலஜாவின் சாயலிலேயே உள்ள இன்னொரு பெண்மணி வந்து, ‘சுகாதானே?’ என்று கேட்டு விட்டு, சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். அவரது அந்த அதிரடிச் சிரிப்பைப் பார்த்து நான் முழித்த முழி, அவருக்கு இன்னும் சிரிப்பை வரவழைத்தது.

‘வேற ஒண்ணும் இல்ல, ஸார். ஒங்க புக்குக்கு நான் ப்ரூஃப் பாத்துக்கிட்டிருக்கும் போது, நான் தனியா உக்காந்து சிரிச்சுக்கிட்டே படிச்சுக்கிட்டிருந்தேன். உடனே இவங்களும் வந்து கம்ப்யூட்டர எட்டிப் பாத்து, படிச்சு கூடவே சிரிச்சாங்க. அதான்’.

ஷைலஜா விளக்கம் சொன்னார். ஷைலஜாவின் சகோதரியான ஜெயஸ்ரீதான் அந்தப் பெண்மணி என்பது தெரிய வந்ததும், அவரது மொழிபெயர்ப்புப் புத்தகம் ஒன்றை நான் படித்திருப்பதைச் சொல்லி நான் கொஞ்சம் சீரியஸான ஆள்தான் என்பதை அந்த இடத்தில் நிறுவ முயன்றேன். ஆனால் அது பலிக்கவில்லை. அங்கிருந்து நான் கிளம்பும் வரையிலும், சிரிப்பு முற்றிலுமாக வடிந்துவிடாமல், புன்முறுவலுக்கு முந்தைய வடிவில் அவரது முகத்தில் தேங்கி நின்றது.

‘பவா இல்லீங்களா?’ ஷைலஜாவிடம் கேட்டேன். ‘வந்துக்கிட்டிருக்காரு, ஸார்’ என்றார். ‘ஒரு நிமிஷம் இருங்க’. ஃபோனில் பவாவைப் பிடித்து கொடுத்தார்.

‘திருவண்ணாமலைல இருந்து பாதயாத்திரையா வர்றீங்களா பவா?’

‘ஐயோ! இல்ல சுகா. வயல்ல கொஞ்சம் வேலயாகிப் போச்சு. தாம்பரம் வந்துட்டேன். வந்துடறேன்’ என்றார்.

’முதல் நாள்ல இருந்தே நீங்க வந்துக்கிட்டிருக்கிறதா சொல்றாங்களே? மெதுவா நடந்து வந்தாலும், நீங்க நேத்தே வந்திருக்கணுமே! அதான் கேட்டேன்’.

’ஏன் சுகா? தெரியாமத்தான் கேக்கறேன். இந்தத் திருநெல்வேலி குசும்பு எப்பவும் உங்க கூடவே இருக்குமோ?’

கண்காட்சியின் கடைசி நாளுக்குள் பவா வந்து சேர்ந்து விடுவார் என்கிற நம்பிக்கையில் அங்கிருந்து நகர்ந்தேன். மீண்டும் காலச்சுவடு. இந்தமுறை நானே கேட்டு ’மீஸான் கற்கள், மற்றும் அப்பாவின் துப்பாக்கி’ இரண்டும் வாங்கினேன். மீஸான் கற்கள் எழுதிய புனத்தில் குஞ்ஞப்துல்லாவும், மொழிபெயர்த்த குளச்சல் மு.யூசுப்பும் கூட அத்தனை சந்தோஷப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் கிருஷ்ணபிரபு முகத்தில் அப்படி ஒரு குளிர்ந்த சிரிப்பு. ‘உங்க பால்யம், திருநெல்வேலி, இசை எல்லாம் கலந்து நீங்க ஒரு நாவல் எழுதணும்’ என்றார். ‘அதெல்லாம் எளுத்தாளர்கள் செய்ய வேண்டிய வேல, பிரதர். இந்த நிமிஷம் வரைக்கும் என்னை நான் ஒரு எளுத்தாளனா நெனைக்கவே இல்ல’ என்றேன். ’அத நாங்க ஒத்துக்க முடியாது’. கிருஷ்ணபிரபுவுடன் சேர்ந்து கொண்டு கோரஸாகக் குரல் கொடுத்தார் திருநவேலிக்காரரான ‘எறும்பு’ ராஜகோபால். மெல்ல அவர்களிடமிருந்து நழுவி, ‘The Music School’ ஸ்டால் சென்று, செழியனை சந்தித்துப் பழைய கதைகள் பேசிச் சிரித்துவிட்டு, கிளம்பும் போது இயக்குனர் சீனு ராமசாமியிடமிருந்து ஃபோன்.

‘அண்ணே! எந்த ஸ்டால்ல இருக்கீங்க? தம்பி வந்துக்கிட்டே இருக்கேன்’.

சீனு வந்தவுடன், ‘அண்ணே இங்கயே இருங்க. நான் போயி என் புஸ்தகம் வாங்கிட்டு வந்துடறேன். ஏன்னா நாமளே வாங்கலேன்னா அப்புறம் ரொம்ப அசிங்கமா போயிடும். என்ன சொல்றீங்க?’ என்று சொல்லிவிட்டு சென்றான். சீனுவின் இந்த யதார்த்தமான குணம்தான் அவனது பெரும்பலம்.

உடனே நானும் வம்சி’யில் ‘சாமானியனின் முகம்’ புத்தகங்கள் வாங்கினேன். கூடவே பாலச்சந்திரன் சுள்ளிக்காடு புத்தகமும், ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் மம்முட்டியின் புத்தகமும். மனோ விடைபெற்றுக் கொள்ள, சீனு ராமசாமியுடன் கேண்டீனுக்குள் நுழைந்தேன்.

‘அண்ணே! என்ன சாப்பிடலாம்?

‘பொடிதோச சொல்லு’.

பொடிதோசை வரவும், அதன் சுவையில் மயங்கிய சீனு, ‘எப்படிண்ணே பொடிதோசைன்னு எடுத்த எடுப்பிலேயே சொன்னீங்க? நீங்க ஒரு மேதைண்ணே’ என்றான். சீனு எப்போதும் இப்படித்தான். எந்த நேரத்தில், எந்த விஷயத்துக்காக என்னைப் புகழுவான் என்பதை என்னால் கணிக்க முடிந்ததே இல்லை.

’அடுத்தும் பொடி தோச சொல்லிரவாண்ணே?’.

‘யேய். சும்மா இரப்பா. நான் ஏதோ குருட்டாம்போக்கில சொன்னேன். காரமா இருக்கு. வெறும் தோச சொல்லு’.

இதற்குள் இளம்பரிதியிடமிருந்து ’பவா வந்துவிட்டார்’ என்னும் குறுஞ்செய்தி வந்ததும், பவாவைப் பார்த்து சில நிமிடங்கள் பேசிவிட்டு சீனுவும், நானும் கிளம்பினோம்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த ‘தம்பி’ ராஜகோபால் ’புக் ஃபேர் போகும் போது சொல்லுங்க. நானும் வாரேன்’ என்று சொல்லியிருந்தார். அடுத்த முறை செல்லும் போது, அவருக்கு தகவல் சொல்லவும் வந்துவிட்டார். ராஜகோபாலின் வாசிப்பு அபாரமானது. அன்றைக்கு நான் வாங்கிய புத்தகங்களில் பலவற்றை ராஜகோபாலின் சிபாரிசின் பேரிலேயே வாங்கினேன்.

‘எண்ணே! குவெம்பு சிறுகதைகள் ஆளுக்கொரு காப்பி வாங்கீருவோம்’.

‘மைத்ரேயிதேவியோட ‘கொல்லப்படுவதில்லை’ படிச்சிருக்கேளா? இல்லென்னா அவசியம் வாங்கீருங்க’.

‘வெறும் முப்பத்தெட்டு ரூவாய்க்கு ‘தனிப்பாடல் திரட்டு’ கெடைக்கி. அத விடலாமா? ஒரே அமுக்கா அமுக்கீருவோம்’.

சுத்தமான திருநவேலி பாஷையில் ராஜகோபாலுடன் பேசிக் கொண்டே நெடுநேரம் சுற்றியதில் கால்வலியே தெரியவில்லை. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் ராஜகோபால் அளவுக்கு, தீவிர இலக்கிய வாசகர்கள்தானா என்பது குறித்து அறியேன். அப்படி இருக்கும் பட்சத்தில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் குறித்து நண்பர் ஜெயமோகன் நிஜமாகவே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

கண்காட்சியின் இறுதிநாளன்று இன்னொரு முறை போகலாம் என்று ஏற்கனவே பாஸ்கரிடம் சொல்லி வைத்திருந்தேன். ஒன்றிரண்டு புத்தகங்களை கடைசி நாளன்று வாங்கிக் கொள்ளலாம் என்கிற முடிவில் விட்டு வைத்திருந்தேன். குறிப்பாக தமிழினி ஸ்டாலுக்கு கடைசி நாள்தான் செல்ல முடிந்தது. தனது முதல் தொகுப்பான ‘பூக்கள் பற்றிய தகவல்கள்’ புத்தகத்திலிருந்தே என்னைக் கவர்ந்த மகுடேஸ்வரனின் ‘நிறைசூலி’யும், சு.வேணுகோபாலின் புத்தகங்களும் வாங்கி, ‘தமிழினி’ வசந்தகுமார் அண்ணாச்சியின் கைகளில் கொடுத்தேன். வசந்தகுமார் அண்ணாச்சிக்கு என்னை நன்றாகத் தெரியும். அதை நிரூபிக்கும் வண்ணம் இதுவரை வசந்தகுமார் அண்ணாச்சியை நான் சந்தித்த ஆறேழு சந்தர்ப்பங்களின் அவர் என்னிடம் மொத்தமாக பதின்மூன்று வார்த்தைகள் வரை பேசியிருக்கிறார். வழக்கமாக வசந்தகுமார் அண்ணாச்சி, என்னைப் பார்த்தால் தலையைக் கூட அசைக்காமல், உதடு பிரியாத புன்னகை ஒன்றை உதிர்த்து, ‘வாங்க’ என்பார். ஒருமணிநேரம் அவருடன் இருந்துவிட்டு கிளம்பும்போது, ‘போயிட்டு வரேன், அண்ணாச்சி’ என்று சொன்னால், ‘சரி’ என்று லேசாகத் தலையை அசைப்பார். போன வருடம் வரைக்கும் அவர் இப்படித்தான். ஆனால் இந்தமுறை அடுத்த கட்டத்துக்கு அவர் நகர்ந்து விட்டார். புத்தகங்களை பில் போடுவதற்காக அவர் கைகளில் கொடுக்கும் போது என்னை நிமிர்ந்து பார்த்தவர், புருவத்தைக் கூட சுருக்காமல் கண்களால் சிரித்தார். கிளம்பும் போது ‘வரேன் அண்ணாச்சி’ என்றதற்கு, தன் காதுகள் வழியாக ஏதோ சமிக்ஞை செய்து என்னை வழியனுப்பினார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வாங்கி படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்களோடு, இந்த வருடம் வாங்கிய புத்தகங்களும் சேர்ந்து, தோராயமாக எப்படியும் ஒரு நாற்பதிலிருந்து ஐம்பது புத்தகங்கள் வரைக்கும் என் அறையை அடைத்திருக்கின்றன. அடுத்த வருடம் புத்தகக் கண்காட்சிக்குப் போகத்தான் வேண்டுமா என்று தோன்றுகிறது. ஆனாலும் போக வேண்டியிருக்கிறது. கண்காட்சியிலிருந்து வெளியே வந்த பின் ராஜகோபால் சொன்னார்.

‘காலச்சுவடு கண்ணன் ஒங்களப் பாத்து சிரிச்சாரு. நீங்க கவனிக்காம விட்டுட்டேளே’.

‘அடடா! அவருக்கு என்னய தெரியும்ங்கறது எனக்கு தெரியாதே, தம்பி’ என்று வருந்தினேன்.

அடுத்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு சென்று, மரியாதைக்குரிய எழுத்தாளர் சுந்தரராமசாமியின் மகனான ‘காலச்சுவடு’ கண்ணனைப் பார்த்து பழிக்குப் பழி வாங்கும் விதமாக, பதிலுக்கு சிரித்து விடவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.