நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஐராவதம் என்ற புனைபெயரில் எழுதியவரும், தமிழிலக்கிய ஆர்வலர்களிடையே நன்கு தெரிய வந்தவருமான மூத்த எழுத்தாளர் ஆர்.சுவாமிநாதன் (13.05.1945 – 4.2.2014) சில தினங்கள் முன்பு சென்னை மாநகரில் காலமானார்.
எழுத்து பத்திரிகையின் காலம் தொட்டே இலக்கிய உலகில் சஞ்சரித்தவர். 60களின் இறுதியில் பிரபலமாகி இருந்த, நடை, கசடதபற, ஞானரதம் போன்ற இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதியவர். 1974 இல் ’பிரக்ஞை’ மாத இதழ் துவங்கிய போது அதைத் துவக்கிய முன் அனுபவமில்லாத இளைஞர்களுக்கு நல்ல ஆசிரியராகவும், இலக்கியப் படைப்புகளைச் சீர்தூக்குவதில் வழிமுறைகளைச் சுட்டியவராகவும் இருந்தவர். பிரக்ஞை இதழில் சில நல்ல மொழி பெயர்ப்புக் கவிதைகளைப் பிரசுரித்திருக்கிறார்.
60களில் நன்கு புழக்கத்தில் வரத் துவங்கிய புதுக் கவிதைகளில் கருக்கான சிலவற்றை எழுதி இருக்கிறாரென்றாலும், இவர் பெரிதும் தெரிய வந்தது மிக்க அங்கதம் கொண்ட, சுருக்கென்று தைக்கும் விமர்சனம் கொண்ட ஆனால் நகைச்சுவையும் கொண்ட சிறுகதைகளால்தான். நாலு கிலோ அஸ்கா என்ற புத்தகம் 70களில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு.