என்னை ‘நான்’ ஆக்கியவர் . . .

அண்மையில் மறைந்த தமிழின் முக்கியமான திரை இயக்குநர்களில் ஒருவரான திரு.பாலு மகேந்திரா குறித்து சுகா எழுதியிருக்கும் கட்டுரை இது. சொல்வனத்தின் நூறாவது இதழ் வரும் வார இறுதியில் வெளியாகும்.

IMG-20140219-WA0001

கைபேசியில் அவரது எண்ணுடன் கம்பீரமான அவரது பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தை வைத்திருப்பேன். அவர் அழைக்கும்போது ‘மூன்றாம் பிறை’யின் ‘பூங்காற்று புதிதானது’ பாடலின் துவக்க இசை ஒலிக்கும். அதை முழுமையாக ஒலிக்க ஒருமுறையும் விட்டதில்லை. ’ஸார்’ என்பேன். நிதானமான குரலில் ‘நான் பாலு பேசறேன். உன்னால ஒரு பத்து நிமிஷம் வந்துட்டு போக முடியுமா? என்பார். ‘கிளம்பி வாடா’ என்று சொல்வதற்கான முழு உரிமையும் கொண்ட அந்த மனிதரின் அடிப்படையான பண்பு, இது. அழைத்த சில நிமிடங்களில் அவர் முன் போய் நிற்பேன். படித்துக் கொண்டோ, எழுதிக் கொண்டோ இருப்பவர் சட்டென்று அதை ஏறக்கட்டிவிட்டு, ‘உக்காரு. ப்ளாக் டீ சாப்பிடலாமா?’ என்பார். ‘ஏதும் முக்கியமான விஷயமா, ஸார்?’ என்று கேட்டால், ‘உன்னப் பாக்கணும் போல இருந்துச்சு. அதான்’ என்பார்.

இருபத்தோரு ஆண்டுகளாக அவரது வீடு, அலுவலகம் இருக்கும் பகுதியிலேயே வசித்து வருகிறேன். எந்த நேரமும் அவர் அழைத்தால் ஓடிப் போய் நிற்க வேண்டும் என்கிற ஒரே காரணத்தைத் தவிர வேறில்லை. அதனாலேயே இன்றைக்கும் சென்னையில் எனக்கு சாலிகிராமத்தை விட்டால் வேறு எந்த ஒரு பகுதிக்கும் துணையில்லாமல் போய்வரத் தெரியாது. அவர் அழைக்காமல் நானாகப் போயும் பார்ப்பதுண்டு. எப்போதும் திறந்தே இருக்கும் அவரது அறையின் கதவைத் தட்டி ‘ஸார்’ என்றால், நிமிர்ந்து பார்த்து எப்போதும் அவர் சொல்லுவதைச் சொல்லுவார். ‘நம்புவியா? இப்ப நீ வரலேன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல நானே உனக்கு ஃபோன் பண்ணியிருப்பேன்’.

தொன்னூறுகளில் துவக்கத்தில் நான் அவருடன் வந்து இணைந்த நாளிலிருந்து இன்றுவரை என் வாழ்வின் ஆதாரமாகத் திகழும் பாலுமகேந்திரா என்னும் உன்னதமான கலைஞன்பால் எனக்கேற்பட்ட ஈர்ப்புக்குக் காரணமென்னவோ அவரது திரைப்படங்கள்தான். ஆனால் பாலுமகேந்திரா என்கிற மனிதர், பாலு மகேந்திரா என்னும் ஆளுமை, பாலுமகேந்திரா என்றழைக்கப்படுகிற என்னுடைய குருநாதரை மறக்க முடியாமல் செய்து, தொடர்ந்து அவருடைய நினைவுகளால் இன்னும் கதறச்செய்து கொண்டிருப்பது அவருடனான எனது தனிப்பட்ட அனுபவங்கள்தான். அவை எல்லாமே நினைத்து நினைத்து மகிழக்கூடிய சுகமான அனுபவங்கள் மட்டுமல்ல. வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் மூத்த அந்த பெரிய மனிதரிடம் சண்டை போட்டிருக்கிறேன். கோபம் கொண்டு பேசாமல் இருந்திருக்கிறேன். முகத்துக்கு நேராக முறைத்திருக்கிறேன். ஓரிருமுறை அவரை விட்டு விலகிச் சென்றிருக்கிறேன். அப்படி கோபித்துச் சென்ற ஒரு சந்தர்ப்பத்தில், சென்னையில் உள்ள என் வீட்டு படுக்கையறையில், தூங்கி விழிக்கும் போது என் முன் அமர்ந்திருந்தார். பாலுமகேந்திரா என்னும் அந்த மகத்தான ஆளுமைக்கு முன்னால் சின்னஞ்சிறு பயலான நான்   சுக்குநூறாகிப் போன மறக்கவே முடியாத தருணமது. இன்னொருமுறை கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, திருநெல்வேலிக்குச் சென்று விட்டேன். மறுநாளே தன் துணைவியாரோடு திருநெல்வேலிக்கு வந்தவர், ‘நீ இருந்து அவனைக் கூட்டிக்கிட்டு வா’ என்று அகிலா அம்மையாரிடம் சொல்லி அவரை எங்கள் இல்லத்திலேயே விட்டுவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, செ.கணேசலிங்கம், செ.யோகநாதன், எஸ்.பொ, கோமல் சாமிநாதன், வண்ணநிலவன் போன்ற இலக்கிய மற்றும் பத்திரிக்கையுலக ஆளுமைகளோடு பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர். இளையராஜா, கமல்ஹாசன், பரதன், கிரீஷ் காசரவல்லி, கே.விஸ்வநாத், ஷாஜி கருண், கவிஞர் வாலி, மோகன்லால், மம்முட்டி, மகேஷ்பட், அனந்து, கிரேசி மோகன் போன்ற திரையுலகக் கலைஞர்களுடன் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர். இன்று நான் சினிமாவில் இருப்பதற்கு மட்டுமல்ல, சென்னையில் நான் இருப்பதற்கே காரணமானவர். ஏற்கனவே எனக்கிருந்த வாசிக்கும் பழக்கத்தைத் தீவிரப்படுத்தியவர். தனது முதல் படமான ‘கோகிலா’வை திரையிட்டு, தன் அருகிலேயே  என்னை அமரவைத்துக் கொண்டு ‘ஷாட் பை ஷாட்’டாக Film making என்பது ஒன்றும் கம்பசூத்திரமல்ல என்பதை எளிமையாக விளக்கியவர். இது போன்ற எத்தனையோ உலகத் திரைப்படங்களை அருகில் அமர்ந்து பார்க்கச் செய்து தொழில்நுட்ப அறிவை சுவையாகப் புகட்டியவர். பின்பு அவரது சினிமா பட்டறையில் அவருடைய தற்போதைய மாணவர்களுக்கு என்னை வகுப்பெடுக்க வைத்தவர். இப்படி இன்னும் பல பல.

IMG-20140216-WA0000

சினிமா மற்றுமல்லாமல் வாழ்வின் யதார்த்தமான விஷயங்களை மிக எளிதாகப் புரியும்படி உரைத்தவர். அவரது நண்பர் ஒருவரின் இல்லத்துக்கு என்னை அழைத்துச் சென்றிருந்தார். தென்னக ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூர்த்தி என்ற அந்த மனிதருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. திரு. மூர்த்தி, Wildlife Photographyயில் உலக அளவில் சிறந்து விளங்கும் அல்ஃபோன்ஸ் ராயின் தகப்பனார். ’மூர்த்தி! இந்தப் புள்ளைக்கும் ஒங்க ஊர்தான்’. சந்தோஷமாக அறிமுகம் செய்து வைத்தார். ஊர்ப்பாசம் கண்களில் கொப்பளிக்க பெரியவர் மூர்த்தி காபி கொடுத்து உபசரித்தார். அப்போதெல்லாம் காபி, டீ அருந்தும் பழக்கம் எனக்கில்லை என்பதால் காபியைத் தவிர்த்தேன். ‘அப்ப பால் சாப்பிடறீங்களா? ஜூஸ் தரட்டுமா? என்று கேட்டார், மூர்த்தி.

காரில் வீடு திரும்பும் போது வாத்தியார் சொன்னார்.

‘காபி, டீ குடிக்காதது நல்ல பழக்கம்தான். ஆனா யார் இடத்துக்கோ நாம போயிருக்கும் போது, அவங்களால அதுதான் குடுக்க முடியும்னா யோசிக்காம வாங்கிக் குடிச்சிடு. உனக்காக அவங்க அவங்க வீட்ல இல்லாத ஒண்ண தயார் பண்ணிக் குடுக்கிற சிரமத்தை இனியாவது தவிர்த்திடு’.

வேதவாக்காக இன்று வரை நான் கடைப்பிடித்து வரும் பழக்கம், இது. இப்படி அறிவுறுத்தியவர் ஒருபோதும் என்னை அசைவம் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியதில்லை. ‘எப்படிப்பா சைவம் மட்டுமே சாப்பிட்டு உன்னால இருக்க முடியுது!’ என்று வியந்ததோடு சரி.

மாற்று அபிப்ராயமுடையவர்களை கொலைவெறியுடன் முறைத்துப் பார்ப்பதை இயல்பாகத் தவிர்க்கச் செய்தவர். நெருக்கடியான காலக்கட்டத்தில் அவரை கடுமையாக வசை பாடியவர்களிடத்திலும் மரியாதையுடன் பழகியவர். இன்றுவரை அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள முனையும் பழக்கம், இது. மாற்றுக் கருத்துடையவர்களை முறைப்பதில்லையே தவிர அவரைப் போன்று இன்முகம் காட்டிப் பழக இயலாமல் விலகிச் சென்று விடுகிறேன்.

THALAIMURAIGAL_MOV_1754595g

இயல்பிலேயே Dog Loversஆன அவரும், நானும் மிக அதிகமான நேரங்களில் நாய்களைப் பற்றிப் பேசியிருக்கிறோம். ‘மூன்றாம் பிறை’ சுப்பிரமணி, ‘சத்மா’ சில்கி போன்ற நாய்களுக்குப் பிறகு, ‘பீட்டர்’ என்னும் லேப்ரடார் வகை நாயை பிரியமுடன் வளர்த்து வந்தார். ‘பீட்டர்’ காலமான பிறகு நாயில்லாத அவர் வீட்டைப் பார்க்கப் பிடிக்காமல், சாலிகிராமத்துக் குப்பைத் தொட்டியிருந்து, பிறந்து இரண்டு நாட்களே ஆகியிருந்த தெருநாய்க்குட்டி ஒன்றை எடுத்து அவரிடம் சென்றுக் கொடுத்தேன். பச்சைக் குழந்தையை வாங்குவது போல கைகளில் ஏந்திக் கொண்டார். வாங்கிய மறுநிமிடமே, ‘சுப்பிரமணி! மறுபடியும் வந்துட்டியாடா?’ என்றார். சுப்பிரமணி என்ற சுப்புவுக்குத் துணையாக ‘வள்ளி’ என்கிற இன்னொரு நாட்டுநாய்க்குட்டியை வளர்க்கத் துவங்கினார். கடந்த மாதத்தில் ஒருநாள் வீட்டுக்குச் சென்ற என்னைப் பார்த்து மெதுவாக நடந்து அருகில் வந்து கொஞ்சினான், சுப்பு. தடவிக்கொடுத்தபடியே, ‘டல்லாயிட்டானே ஸார், இவன்?’ என்றேன்.

‘வயசாகுதில்லையா? அதான். His days are numbered’ என்றவர், ‘சுப்பு, இங்க வாடா’ என்றழைத்து அதன் தலையையும், கழுத்தையும் தடவிக் கொடுத்தவாறே, ‘எனக்கு முன்னாடி நீ போயிடாதடா’ என்றார்.

ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘மூங்கில் மூச்சு’ தொடரின் இரண்டாவது வாரத்திலேயே அவரைப் பற்றி எழுதியிருந்தேன். படித்துவிட்டு தொலைபேசியில் பேச முடியாமல் உடைந்து அழுதார். ‘உனக்கெல்லாம் ஒண்ணுமே செய்யாத சாமானியன் நான். என்னைப் போயி இப்படித் தலையிலத் தூக்கி வச்சு எழுதியிருக்கியேம்மா!’ என்றார். சென்ற வருடம் அதே விகடனில் நான் எழுதிய ‘சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்’ சிறுகதையைப் படித்து விட்டும் தாங்க முடியாமல் அழுதார். அந்தக் கதையின் பின்னணியை நாங்கள் இருவரும் அறிந்திருந்ததே அவரது அழுகைக்குக் காரணம். அவர் காலமான அன்று நிகழ்ந்த சில கசப்பான விஷயங்களைக் கண்டும், காணாமல் கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்திருந்த வாத்தியாரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘சஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பாட்டீலும்’ சிறுகதையின் கடைசி வரி, துல்லியமாக வாத்தியாரின் வாழ்விலும் நடந்தேறும் என்று உறுதியாக நம்பினேன். அதுவே நடந்தது.

இயற்கையான தலைவழுக்கையை தொப்பி போட்டு மறைத்தததைத் தவிர, தன்னுடைய எந்த பலவீனத்தையும் அவர் மறைத்ததில்லை. அதையுமே ‘தலைமுறைகள்’ படத்துக்காகத் துறந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளையராஜாவைப் பார்க்க காரில் சென்று கொண்டிருந்தோம். செல்லும் வழியில் ‘தலைமுறைகள்’ திரைப்பட போஸ்டர் ஒன்றில் வழுக்கைத்தலையுடன் அவர் இருக்கும் க்ளோஸ்-அப் புகைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது.

Thalaimuraigal1

‘இதுக்குத்தான் இத்தன வருஷமா மறச்சு வச்சிருந்தீங்களோன்னு தோணுது’ என்றேன்.

‘Exactly. சொக்கலிங்க பாகவதர் இருந்தாருன்னா அவரத்தான் நடிக்க வச்சிருப்பேன். நானே இதை எப்படி செஞ்சேன்னே தெரியல’ என்றார்.

‘இத செஞ்சது நீங்க இல்ல, ஸார். காலம்’ என்றேன்.

நான் இப்படி சொல்லவும் என் கைகளைப் பிடித்துக் கொண்டவர், ‘நான் முதன்முதல்ல ஷேவ் பண்றத நிறுத்தினவுடனே நீதான் வந்து சத்தம் போட்டே. இப்ப நீதான் இதையும் சொல்றே’ என்றார். மருத்துவமனையில் இளையராஜாவைப் பார்த்தவுடன், ‘என்ன ராஜா, இது! ஹாஸ்பிட்டல்ல வந்து படுத்துக்கிட்டு! நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் நாலஞ்சு படம் பண்ண வேண்டாமா?’ என்றார்.

‘தலைமுறைகள்’ திரைப்படத்துக்கு அடுத்ததாக ஒரு திரைக்கதையை எழுதும் திட்டத்திலிருந்தார். முழுக்கதையையும் என்னை அழைத்துச் சொன்னவர், ’உன்கிட்ட சொன்னதுக்கப்புறம்தான் ராஜாக்கிட்ட சொல்லணும்னு நெனைக்கிறேன். இன்னும் இதை கொஞ்சம் ஷேப் பண்ணிட்டு, ராஜாவப் போய்ப் பாத்து சொல்லிடலாம். நீயும் வந்திடு’ என்று சொன்னபோது, அது நடக்கும் என்று நம்பினேன்.

கடந்த வியாழனன்று காலை இயக்குனர் வெற்றி மாறன் எனக்கு ஃபோன் பண்ணி, ‘எங்கண்ணே இருக்கீங்க?’ என்றான்.

‘வீட்லதான். ஏன் வெற்றி?’ என்று கேட்டதற்கு,

‘சரி சரி. பதட்டப்படாம கெளம்பி விஜயா ஹாஸ்பிடல் போங்க. ஸார்க்கு ஒடம்பு முடியலியாம். நான் பெங்களூர்ல இருக்கேன். மத்தியானம் வந்துடறேன்’ என்றான்.

விஜயா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் வாசலில் அமர்ந்திருந்த அகிலா அம்மாவைத் தவிர்த்து சற்றுத் தள்ளி வந்தேன். ‘வந்துட்டியா?’ என்று என்னை அடையாளம் தெரிந்து கொண்டு கையை எட்டிப் பிடித்தார், நான் வாழ்க்கையில் முதன் முறையாகப் பார்க்கும் அர்ச்சனா அக்கா. என்னைப் பார்த்ததும், அருகில் வந்து நின்று கொண்ட பாலாவும், நானும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. இயக்குனர்கள் சீனுராமசாமியும், ராமும் வந்து சேர்ந்தனர். சீனு ‘ஸாருக்கு ஒண்ணும் ஆயிருக்காதுண்ணே’ என்று சொல்லிக் கொண்டே இருந்தான். ராம் தொடர்ந்து என்னிடத்தில் ‘ஸார் நல்லாத்தானே இருக்காரு?’ என்று கேட்டபடி இருக்க நேரடியாக பதில் சொல்லாமல் ஏதேதோ சொல்லி சமாளித்தேன். சைகை காண்பித்து பாலா என்னை வெளியே அழைக்க, இருவரும் விஜயா மருத்துவமனைக்கு வெளியே வந்தோம். பாலா ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து இழுக்கத் துவங்கினார். பாலாவின் முகம் எனக்கு வாத்தியாரின் உடல்நிலை குறித்த உண்மையைச் சொல்லாமல் சொல்லியது.

‘கெளவன் போயிட்டானோ, பாலா?’ கேட்கும்போதே என் குரல் உடைந்தது.

பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு ‘ஆம்’ என்பது போல தலையசைத்த பாலாவிடம் அதற்குப் பிறகு எனக்குப் பேச ஒன்றுமில்லாமல் போனது.

உடம்பும், மனசும் நடுங்கியதே தவிர அழுகை வரவில்லை. சீனுராமசாமி, ராம் இருவரையும் அழைத்து, ‘ரெண்டு பேரும் கெளம்பி நம்ம ஸ்கூலுக்குப் போயி ஏற்பாடுகள கவனிங்கடா’ என்றேன். ‘மறக்காம அவரோட தொப்பிய எடுக்கணும்’ என்றார் பாலா. அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகளைச் செய்யத் துவங்கினோம்.

என் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் ‘பாலு மகேந்திரா சினிமா பட்டறை’யில் வாத்தியாருக்காகக் காத்திருந்தோம். படுத்திருந்த வாத்தியாரை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கும்போது கூட அழுகை வரவில்லை. எல்லோரும் வந்தனர். அஞ்சலி செலுத்தினர். கண்ணீர் உகுத்தனர். இரவு நெருங்கவும் மகனிடம், ‘இன்னைக்கு ஒருநாள்தான் பாலு தாத்தா கூட அப்பாவால இருக்க முடியும். என்னைத் தேடாதே’ என்று ஃபோனில் சொன்னேன். நள்ளிரவில் உறங்குவது போலவே எங்களுக்குத் தோன்றிய வாத்தியாரின் உடலுக்கருகே அமர்ந்தபடி நானும், அர்ச்சனா அக்காவும் விடிய விடிய அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இடையிடையே ‘அக்கா! வாத்தியார் மூச்சு விடற மாதிரியே இருக்குக்கா’ என்று பதறினேன். எழுந்து சென்று கண்ணாடிப் பெட்டிக்குள் எட்டிப் பார்த்தோம். இருவருக்குமே அது பைத்தியக்காரத்தனம் என்று தோன்றினாலும் அதைச் செய்தோம். பாலுமகேந்திரா என்கிற மகத்தான மனிதரைப் பற்றிய நான் கேள்வியேபட்டிராத செய்திகளை கண்ணீருடன் அர்ச்சனா என்கிற நடிகைக்குள் இருக்கிற சுதா என்ற அந்தப் பெண்மணி சொல்லச் சொல்ல வாத்தியாரை கைகூப்பி அழுதபடி வணங்கியபடியே அமர்ந்திருந்தேன்.

இலங்கையில் ‘அமிர்தகழி’ என்னும் சிற்றூரில் துவங்கிய அந்த மனிதரின் வாழ்க்கைப் பயணம், சென்னையில் ‘போரூர்’ மின் தகன மயானத்தில் முடிவடைந்தபோது முழுவதுமாக நொறுங்கிப்போய்விட்டேன். ’மறுபடியும்’ திரைப்படத்தை ‘என்னை ‘நான்’ஆக்கிய எல்லா பெண்களுக்கும்’ என்றொரு டைட்டில் கார்டு போட்டு சமர்ப்பித்திருப்பார், ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா. என் வாழ்க்கையை வடிவமைத்த அந்தப் பெரிய மனிதரை இழந்துத் தவிக்கிறேன். இரவெல்லாம் எழுந்து உட்கார்ந்து கதறி அழுகிறேன். அந்த மனிதர் இருக்கும் போது ஒன்றும் தெரியவில்லை. இப்போதுதான் இன்றைய ‘என்னை’ தட்டித் தடவி உருவாக்கியவர் அவர்தான் என்பது எனக்கு புரியவருகிறது. திருச்சியிலிருக்கும் Caricaturist சுகுமார்ஜி என்கிற நண்பர் வரைந்திருந்த வாத்தியாரின் கேரிகேச்சர் ஒன்றை, ஃபிரேம் செய்து சமீபத்தில் வாத்தியாரிடம் சென்று கொடுத்தேன். அதைப் பார்த்த மாத்திரத்தில் மகிழ்ந்தவர், ‘அவருக்கு ஃபோன் பண்ணேன். ஒரு நன்றி சொல்லிடலாம்’ என்றார். அவரது ஃபோன் நம்பர் என்னிடத்தில் அப்போது இருக்கவில்லை. ‘நீங்க வேணா அவருக்கு நன்றி சொல்லிப் பேசுங்க. வீடியோல பதிவு பண்ணி அவருக்கு அனுப்பிடறேன்’ என்றேன். அவரது மேஜையில் இருந்த அந்த கேரிக்கேச்சர் படத்திலிருந்து அவரது ஸ்டைலிலேயே Slow pan இல் கேமராவை நகர்த்தி, அவருக்கு focus செய்து Action sir என்றேன். பேசத் துவங்கினார். பொக்கிஷமாக என்னிடமுள்ள அந்த வீடியோவைப் பார்த்து மீண்டும் மீண்டும் அழுது கொண்டிருக்கிறேன்.

‘வாழ்க்கைல முக்கியமான விஷயங்களை மனதால முடிவு செய்யாதே. பொறுமையா அறிவால முடிவெடு’ என்பார் வாத்தியார். எழுபது வயதைத் தாண்டிய, உடல்நலம் குன்றிய  முதியவர் காலமாவது இயற்கைதான் என்பதை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. சம்பிரதாயமாக அனைவரும் ‘அவர் மறைந்தாலும் அவர் படைப்புகள் நம்மிடையே வாழும்’ என்கிறார்கள். ‘எவனுக்குய்யா வேணும் படைப்பு? எனக்கு எங்க வாத்தியார் வேணும்யா’ என்று கத்தத் தோன்றுகிறது.

0 Replies to “என்னை ‘நான்’ ஆக்கியவர் . . .”

  1. பாலுமகேந்திரா அவர்களின் மறைவைக் கேட்டதிலிருந்து சுகாவின் பதிவை எல்லா இடங்களிளும் தேடி சொல்வனத்தில் படித்ததும் நிறைவு.
    அஞ்சலிக் கட்டுரையிலும் கடைசி வரி முத்திரை.
    சேது வேலுமணி
    செகந்திராபாத்

  2. //‘அவர் மறைந்தாலும் அவர் படைப்புகள் நம்மிடையே வாழும்’ என்கிறார்கள். ‘எவனுக்குய்யா வேணும் படைப்பு? எனக்கு எங்க வாத்தியார் வேணும்யா’//
    உண்மைதான் திரு. சுகா…
    படித்துக்கொண்டே வந்தவன் என் பெயரை கண்டதும் எனக்கும் கண்களில் நீர் கோர்க்க ஆரம்பித்துவிட்டது…
    “நல்ல சினிமாவின்மேல் உங்களுக்கு” என்று சொல்லி என்னையும் மதித்து இந்த வாழ்த்துரையை வழங்கியதை நினைத்து மனம் பூரிக்கிறது… திரு. பாலுமகேந்திராவை நான் என் ஓவியம் மூலம் கொஞ்சம் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறேன் என்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்… இந்த வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த உங்களுக்கும் நன்றி சுகா…
    இன்னமும்கூட “சுகுமார்ஜி” என்றழைத்த அவரின் குரல் எனக்கு ஒலித்துக்கொண்டிருக்கிறது…

  3. அன்பு சுகா
    உங்கள் இழப்பிற்கு நான் என்ன ஆறுதல் சொல்ல? நீங்கள் ரொம்ப ஒடஞ்சி போயிருப்பீங்கன்னு மட்டும் நான் உணர்கிறேன்.இந்த சோகத்தை உங்களோடு நேற்றுவரை மூன்றாம் மனிதனாக இருந்த என்னைப் பகிர்ந்து கொள்ள வைத்ததெது? உங்களோடு தொலைபேசியில் ஒரே ஒருமுறை தொடர்பு கொண்டுள்ளேன். ஆனால் அதற்குள்ளாகவா இத்தனை நெருக்கமும் நெகிழ்வும். இது உங்கள் எழுத்தால் சாத்தியமாகியிருக்கிறது.எழுத்துக்கு இத்தனை வலிமையா? செல்வாக்கா? புரியவில்லை. ஆனால் எல்லா எழுத்துக்களுக்கும் இது சாத்தியமில்லை என்று புரிகிறது.உங்கள் அனுபவத்தை எவ்வளவு உண்மையாக எங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறீகள்! அது எங்களின் அனுபவமாக மாறியுள்ள ரசவாதம் என்ன?
    வரும் 22 ம் தேதி உங்களுடைய “தாயார் சன்னதி” பற்றித் திறனாய்வு செய்ய உள்ளேன். அறிவிப்பு அப்படித்தான் சொல்கிறது. நான் பேசப்போவது நீங்கள் படைத்த நூலைப் பற்றியா அல்லது பாலு சார் படைத்த சுகா வைப் பற்றியா? தெரியல..ஒண்ணாப் பண்ணி ரெண்டாப் புட்டு வைக்கணுமோ.?
    மறைந்த மாமனிதரின் ஆத்ம சாந்தியை வெண்டுகிறேன்
    வவேசு

  4. ‘அருமை’ என்பதற்கு மேல் என்னிடம் வார்த்தைகள் இல்லை. பால்யத்தில் பதிந்த சுவடொன்று, மீண்டும் பின்னுருண்டு பிம்பங் காட்ட…கண்ணில் ஜெனிக்கும் திவலைகள் போல்…முகந்தெரியா 300 எண்ணங்கள் என்னில் கிளர்ந்தன, சுகா உங்கள் திரட்டு கண்டு. நன்றி.
    Jenson Fernando, Virapandianpatnam – Tiruchendur

  5. ‘சுப்பு, இங்க வாடா’ என்றழைத்து அதன் தலையையும், கழுத்தையும் தடவிக் கொடுத்தவாறே, ‘எனக்கு முன்னாடி நீ போயிடாதடா’ என்றார்
    என்ன வார்த்தை சார் ? இப்படியெல்லாம் மனசு உள்ளவர்களை எப்படி இனி பார்க்க முடியுமோ தெரியவில்லை .தெரிந்து இருந்தால் ஒரு ஆசிர்வாதமாவது வாங்கி இருப்போமே சார் .

  6. மிகவும் கண்ணியமான கட்டுரை. கசப்பான விசயங்களையும் கண்ணியமாக எழுதி உள்ளீர்கள். பாலுமகேந்திரா அவர்களது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.
    ‘சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்’ கதையை அவர் காலமான அடுத்த நாள்தான் உங்கள் தளத்தில் படிக்க நேர்ந்தது. அதுவும் அஞ்சலிக் கட்டுரையை எதிர்பார்த்து வந்து இந்த கதையைப் படித்தேன். கதையின் இறுதியில் பாலுமகேந்திரவை தான் நான் பார்த்தேன்.
    (எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்)

  7. சுகா,
    மிக எளிமையான வார்த்தைகளில் நினைவுகளை பதிவு செய்திருக்கிறீர்கள். ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஆழ்ந்த வேதனை தெரிகிறது. எப்படி இந்த துக்கத்தை மீட்டெடுத்து வெளிவந்து மீதி வாழ்வினை வாழப்போகிறோம் தெரியவில்லை. ஆனால் எனக்கு சாரின் நினைவுகளிலிருந்து வெளிவரத்தோன்றாமல் பிடிவாதமாக யாரிடமும் பேசாமல் இருக்கிறேன். அதுவே என்னை ஆற்றுப்படுத்தும்,உங்களையும்…
    ஷைலு.

  8. சில நாட்களுக்கு முன் எதேச்சையா இரவு சன் டிவி பார்த்த போது மறுபடியும் திரைப்படம் போட்டார்கள் ….ஏனோ அந்த படம் என்னை என்றுமே கவர்ந்ததில்லை …அட்டை படம் பார்த்து விட்டு புத்தகம் பிடிக்கவில்லை என்பதுபோல் அதை தவிர்த்து விடுவேன்..முக்கிய காரணம் நலம் வாழ பாட்டுதான்..ஏதோ புரியவில்லை …இத்தனைக்கும் நன் ஜூலி கணபதி படம் முதல் நாள் பார்த்தவன்..அநேகமாக முதல் ஷோ ..இன்னும் சொல்ல போனால் இருந்து சில பத்துபேரில் ஒருவன்..
    பாலு சார் மறைவுக்கு பின்பு என்பதால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்பது போல இருந்தது ..அப்பவே நேரன் 11 மணி இரவு …அடுத்த நாள் அலுவலகத்தில் வேற வேலை நெறைய இருந்தது.. இதெலாம் நான் சொல்ல்வதால் பெரிய தியகம் பண்ணி விட்டேனே என்று சொல்ல வரவில்லை …மிக பெரிய நெருக்கடிக்கு இடையேதான் அதை பார்க்க நேர்ந்தது என்று சொல்ல வருகிறேன்..
    கும்மிருட்டு ….சின்னதாய் வெளிச்சம் ரேவதி ஏற்படுத்துவார் …இதுதான் ஆரம்ப காட்சி..மிக சாதாரணமாக ஆரம்பித்தது ….படம் முழுவதும் எனை நெகிழ வைத்துவிட்டார் …மனிதரகளின் எளிமையான அதே சமயம் நெருக்கமான உணர்வுகளையும் , பலகீனங்களையும் மனதுக்கு நெருக்கமாக உருவாகியிருந்தார் ….அழுது தீர்த்தேன்..எந்த பாடல் எனக்கு பிடிக்க வில்லை என்று நினைத்து இருந்தேனோ அதே பாடல் வந்த போது மனதுக்கு மிகவும் கனமாக இருந்தது …
    கவிதா சுப்ரமணியத்தின் பாத்திரம் அமைக்க பட்ட ஒன்றைதவிர எனக்கு எல்லாமே நெருக்கமாய் இருந்து..அவளை மன நோயாளியை காட்டி இருக்க தேவை இல்லை ..மே பி அவருடைய சொந்த வாழ்கையில் இருதிருக்கலாம்..அது கூட அவருடைய இல்லை ரவியின் தவறை நியாய படுத்தி கொண்ட காரணமாகவும் இருக்கலாம் …
    மறுபடியும் 200 நாட்களுக்கு மேல் ஓடியதாக கேள்விப்பட்டு இருகிறேன்..இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அந்த படம் ஓடும் என்று நிச்சயமாக சொல்கிறேன்..இளையராஜா சார் கு பலமாக இருந்தார் …மனது நெருக்கமாக இன்னொரு படம் “மறுபடியும்” காண முடியாதே பாலு சார் ….

  9. Dear Suga,
    One of the touching articles i’ve read in recent times,As a movie lover i’ve always admired Balu sir movies all the times, and you are one of the standing example who came from his school, When i’ve seen him in the box with his usual blue cap i can’t belive that he is no longer with us.
    Your memories will be always with us sir through your movies.
    Rest in peace.
    Ashok

  10. வணக்கம் சார்,
    இதன் மூலம் என்னை பற்றி மட்டுமே சொல்ல விரும்பவில்லை. பெயர் ஒன்று போதும் என்று நினைக்கிறேன். என் பால்ய காலத்திலிருந்து பாலுசாரின் படங்களை ரசித்தும் அழுதும் உணர்ச்சிகளோடு போராடி பார்த்திருக்கிறேன். அவர் இறந்ததிலிருந்து அவரை பற்றிய நினைவுகளை பலரும் சொல்ல சொல்ல மனம் கனக்கிறது.அதிலும் பாலா சார், நீங்கள் சொன்ன பாலு சாரின் நினைவலைகள் படித்து படித்து கண்ணீரோடுதான் இதனை டைப் செய்கிறேன். சமீபத்தில் தான் என்னுடன் இருந்த பாலு சாரின் மூத்த ரசிகரை இழந்தேன், ஆம் என் தந்தையை…இரு இழப்புகளில் கிட்டதட்ட கரைந்து விட்டேன்… ஒரு வகையில் நீங்கள் சொன்னது சரிதான் இருக்கும் போது அவர்களின் அருமை தெரிவதில்லை. “பாலுசாரின் படைப்புகள் எதுக்கு பாலுசார் தான் வேணும்” எவ்வளவு உன்னதமான மகனுடன் இருந்திருக்கிறார். என் தந்தை பெட்டிக்குள் படுத்திருந்த போதும் இப்படித்தான் சொத்துக்கள் எதற்கு நீங்கள் வாங்கள் என்று மனம் கதறியது. இன்னும் உங்களிடம் சாரை பற்றி உங்கள் வாத்தியார் பற்றி பதிவுகள் இருந்தால் பகிரவும் புண்ணியமா போகும் உங்களுக்கு.
    நன்றி சுகா சார்.

  11. this year’ came to chennai for book fair- met balu sir in that book fair- told my visits at irungalur village near tiruchy to see his shootings “azhiyadha kolangal”. those days we were in school studies- went to see the shooting by bi cyles- shared our memories on those days- suddenly balu sir, caught my hand………….my name is subbu……..

  12. சுகா
    வருத்தபடுவதை விட்டுவிட்டு உங்க முதல் படைப்பு “படித்துறை” படத்தை வெளியிட்டு அவருக்கு சமர்பியுங்கள் அதான் நீங்கள் அவருக்கு செய்யும் மிகப்பெரிய அஞ்சலி!

Leave a Reply to Caricaturist SugumarjeCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.