தமிழாக்கம்: நம்பி கிருஷ்ணன்
மெட்ராஸ் சென்ட்ரல்
கருப்பு ரயில் பிளாட்பாரத்திற்குள் வந்து
உஸ்ஸென்று சத்தமிட்டுக் கொண்டே மௌனமாகிறது ,
சூடு செய்யப்பட்ட எஃகிரும்பை நீரிலிட்டதைப் போல.
போர்ட்டர்களிடம் சொல்லுங்கள் அவசரப்படுத்த வேண்டாமென்று:
நல்லது தானே, வெறித்த பயணத்திற்குப் பிறகு
இடர்கள் இன்னமும் சூழ்ந்திருக்க, சற்று நேரம் இளைப்பாறுவது.
நீளமான தண்டவாளங்கள் தொலைவில் சென்று மறைகின்றன.
அங்கே நான் அறிவதற்கு முன்னதாகவே நாளை வந்து சேரும்.
நான் ஒரே சமயம் இரண்டு இடங்களில் இருக்க இயலாதென்பது
அடிவழக்கு. வாருங்கள், நாமிருவரும் சென்று பருகுவோம்
ஒரு கப் கேவலமான டீயை கேவலமான ஒரு உணவகத்தில்.
இளைப்பாறுவது கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் பயணம் விலக விலக
மேலும் மேலும் மெதுவாக. என் தலை சுற்றுகிறது.
இப்போதே சிகரெட்டை குடிக்க வேண்டும் என்றெனக்குத் தோன்றவில்லை.
அதெற்கெல்லாம் நேரமிருக்கிறது. முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
நூறாவது முறையாக, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று.
பர்ஸ் பாக்கெட்டில், வெள்ளை நைலான் பையின்
நேர்த்தியான அடியுறையில் பத்திரங்கள் பத்திரமாக;
புத்தகமும், எனது குறிப்புகளும் வெளியுறையில்;
பழுப்பு நிற பெட்டியும் இருக்கிறது வார்கள் எல்லாம் பாதுகாப்பாக கட்டப்பட்டு.
பயணத்தை தொடங்கிய போது இருந்ததெல்லாம் என்னிடம் இருக்கிறது
வெளியே செல்வதற்காக எடுத்த முதலடிகளின் நினைவும் கூட,
குழப்பத்துடன், ரொம்பவும் குழப்பத்துடன்.
நினைக்கையில் பயமாக இருக்கிறது, நமக்கிவ்வளவு அதிகாரமிருப்பதை:
நம் நிலைகளை மாற்ற, நம் வருதல் பெயர்தல்களை ஆணையிட:
எங்கு வேண்டப்படவில்லை என்பதை அறிந்து
நம் வேண்டப்படாமையை வேறெங்கோ எடுத்துச் செல்ல..
oOo
தாத்தாவின் தாடி
தாத்தாப் பூச்சியை தாத்தாவின் தாடி என்றும் அழைக்கிறார்கள்.
வெள்ளிழைகளுடன் ,வளி வீசும் விதை.
இது போன்ற தாடியை என் தாத்தாவிடம் நான் பார்த்ததே இல்லை.
ஆனாலும் சிறகுகள் முளைத்த காற்றின் இந்த அவதாரம்,
உலகையே தன்னுள் வைத்திருக்கும் இக்கருவாலியின் இதயம்
எங்கும் பரவியிருக்க காற்றை அனுப்பி வைக்கும்..
தாத்தாவின் பார்வையில் ஏதோ ஒன்று அதனிடமும் உள்ளது –
அவர் கூறுவார், அவரால் பாதிக்கப்படாதவர்கள் இருக்கிறார்கள்,
அவரை பாதிக்காதவர்களும் இருக்கிறார்கள்-
அதே போல் இந்த ரகசியமும் (பூமியை வேர்களால் பற்றும்
எந்த பச்சை செடியுடனும் என்னால் இணைத்துப் பார்க்க இயலாத,
அனேகமாக தொட்டுணரக்கூடிய ஒரு விதமான முத்தம் ,
உதட்டால் நான் தொட விரும்பும் அப்படி ஒரு முத்தம்)
மெல்லிய காற்றில் மிதந்து செல்லும், நீங்கள் பார்க்கையில்
அங்கிருக்கும், பார்க்க முடியாவிட்டாலும் உங்களுக்கு
பெரிய நஷ்டம் ஒன்றுமில்லை.
என் கவிதை என் தாத்தாவின் தாடியைப் போல
இருக்க வேண்டும், இளங்காற்றில்
விசாலமாக,மேலே மேகத்தைப் பார்த்து
சிரித்துக் கொண்டு. கவிதையால் பாதிக்கப்படாதவர்கள்
இருக்கிறார்கள்.கவிதை புறக்கணிக்கும் மக்களும்
இருக்கிறார்கள். எனக்கொரு ஆசை, ஒரு கவிதை எழுத வேண்டும்
தாத்தாவின் தாடியைப் போல.