ஆச்சரியம் தரும் ஆவுடை அக்காள்

குமரன் கிருஷ்ணன்

“அததுக்கு நேரங் காலம் வரணும்” என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அனைத்து வித செயல்களுக்கும் காலத்தின் பார்வை நம் மேல் பட வேண்டியிருக்கிறது…ஒரு புத்தகத்தின் அறிமுகம் கிட்டவோ ஒரு நல்ல எழுத்தின் வாசிப்பு அனுபவம் பெறவோ…இவற்றுக்கும் சரியான நேரம் அமைய வேண்டும் போலும்! இல்லையேல் அத்தகைய வாய்ப்புகள் கூட நமக்கு நேராமலே போய் விடுமே? இப்படித்தான், சில வருடங்கள் முன்பு, வழக்கமானது என்று நினைத்திருக்கக் கூடிய ஒரு சந்திப்பில், மலைப்பாதையில் கீழிறங்கும் வளைவுகள் போல ஏதேதோ உரையாடல்களில் வளைந்து போய் கொண்டிருந்த வார்த்தைகளின் பாதையில் ஏதோ ஒரு திருப்பத்தில் என் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டதுதான் “ஆவுடையக்காள் தெரியுமா?” என்ற கேள்வி. “தெரியாது” என்பதை குறிக்கும் உடல் அசைவுகள் அனைத்தையும் நான் ஒருங்கே காட்ட, எனக்கு சித்தர் பாடல்களில் விருப்பமுண்டு என்று தெரிந்த நண்பரான அவர், ஆவுடையக்காளின் படைப்புகளில் சித்தர்களின் வாசனை மிக்க உண்டு என்றும் அவசியம் படிக்க வேண்டும் என்றும் ஆவலை ஊட்டியதோடு மட்டுமின்றி, விழுப்புரத்தில் உள்ள‌ “ஞானானந்த தபோவனம்” ஆவுடையக்காளின் பாடல்களை “செங்கோட்டை ஆவுடை அக்காள் பாடல் திரட்டு” என்ற‌ புத்தகமாக வெளியிட்டிருக்கிறது என்று வழியையும் காட்டினார்.

அடுத்து வந்த சென்னை புத்தக கண்காட்சியில் சில மணி நேரம் சல்லடை போட்டுத் தேடியதில் கையில் கிட்டியது அந்தப் புத்தகம். நம் கை ரேகைகளிலேயே நமக்கு இப்பிறப்பில் எந்தெந்தப் புத்தகம் வாசிக்கக் கிடைக்கும் என்று பதிவு செய்யப்பட்டிருக்கும் போலும். எனவே தான் ஒரு புத்தகத்தை கையில் பிடிக்கையிலேயே அதனுடன் நம் மனதுக்கு “தொடர்பு” ஏற்படத் துவங்கி விடுகிறது. நம் மனதையே பல தளங்களாகப் பிரித்து அதற்கிடையே உறவினை உண்டாக்கி, உளவியல் அனுபவங்கள் அனைத்தையும் அத்தகைய புத்தகம் வாசிக்க வாசிக்க உள்ளே ஏற்றுகிறது. இவ்வாறு நினைக்கத் தூண்டுவது பிரமையாக இருக்கக் கூடும். ஆனால் சில புத்தகங்கள் தொடும்போதே மேற்சொன்ன தொடர்புக்கான‌ அச்சாரத்தை அனுப்பி விடும். இந்தப் புத்தகமும் அப்படித்தான் எனக்குத் தோன்றியது.

Senkottai_Sri_Aavudai_Akkaal_Njaanandha_Nikethan_Songs_Books_Tamil_Scripts_Read_Library_Cover_Page_Lady_Authors

ஆவுடையக்காள் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை படிக்கையில், முன்னூறு ஆண்டுகளுக்கு இருந்திருக்கக் கூடிய சமூக சூழலில், தனித்து விடப்பட்ட பெண் ஒருவர் இத்தகைய சிந்தனை வீச்சை அத்தகைய சமூகத்துள் பாய்ச்ச எத்தனை சிக்கல்களை சந்தித்திருக்கக் கூடும் என்ற ஆச்சரியம் தோன்றுவது இயல்பே.

சரி, இந்தப் புத்தகத்தில் நமக்கு என்ன இருக்கிறது? ஆவுடையக்காளின் ஒரு வரியிலேயே இதற்கு பதில் இருக்கிறது. “உமக்கென்ன உபகாரம் பாரும் உலகத்தில் கண்டு தேறும்” என்று நம் இருப்பிற்கான பொருள் அறியச் சொல்கிறார் அவர். அதற்கான சில சிந்தனை வித்துக்களை வரிவரியாய் நமக்குள் விதைப்பது தான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு. இந்த வித்துக்களின் வழியே பூத்துக் குலுங்கும் கொத்துக் கொத்தான யோசனைகளில் சித்தர்களின் மொழி மற்றும் பொருள் வாசனையையும் நாம் நுகர முடிகிறது.

“மரத்தில் மறைந்தது மாமத யானை…” என்னும் திருமூலர் வரிகளை நாம் அறிவோம். ஆவுடையக்காள், “மரத்துக்குள்ளே யானை தாண்டி மறைத்தொளித்தாற் போலேதாண்டி பரத்துக்குள்ளே தாண்டி துலங்கவே பார்த்துவிட்டாண்டி” என்று அதன் எளிய வடிவை எழுதியதோடு நில்லாமல் அதன் பொருளில் மற்றொரு பூச்சாக, “அதை ஆராய்ந்து பார்க்கும் பொழுது தாண்டி நான் அதற்கு அப்புறமாயிருந்தேண்டி…” என்று ஒரு “டிவிஸ்ட்”டும் வைக்கிறார்.

இவர் நம்மை திகைப்பூட்டும் வரிகளின் சிகரத்தில் ஏற்றி சட்டென்று பொருட்செறிவான பள்ளத்தாக்கில் தள்ளி விடுகிறார். உதாரணமாக

“நாய்க்கு முழுத்தேங்காய் நன்றாய் ருசிக்குமோ?” என்பதில் நாம் சற்று பொருளேற்றம் செய்தால், நமக்கு ருசித்திருப்பதாக நாமே நினைத்துக் கொண்டு, உடைக்கும் வழி அறியாது உருட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை என்னும் முழுத்தேங்காயின் உள்ளிருக்கும் பருப்பை பார்ப்பதற்குத்தான் பல பிறப்போ? என்னும் கேள்வி செறிந்த ஆன்மத்தின் பாதாளத்தில் நாம் விழுந்து விட்டிருப்பதை உணர்வோம்.

இவரின் “வேதாந்தக் கப்பல்” கட்டுமானம் “காயக் கப்பல்” வடிவிலேயே இருக்கிறது. “பஞ்சபூதப் பலகை கப்பலாகச் சேர்த்து” என்று துவங்குவது காயக் கப்பல் சித்தர் பாட்டு. ஆவுடையக்காளோ, “எண்சானில் அளவெடுத்து இலக்கு நூறு வயசுமிட்டான் இருபாதமெனும் தூண் நிறுத்தி பஞ்சபூத பலகை சேர்த்தான்” என்றதோடு நில்லாமல், “எங்ஙெங்கும் இசைவு வைத்து எருக்கி நரம்பால் இசைத்தான் அங்கங்கே அசையாமல் அஸ்தியெனும் ஆணி தைத்தான்” என்று “பலகை”யை விவரிக்கிறார்.

Woman_Lady_India_Arid_Cows_River_Bharat_Naari_She_Represent_Feminism

சிவவாக்கியரின்

“ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்
போதகங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே.”

நாம் அறிந்திருப்போம்.

ஆவுடையக்காள் “பராபரக்கண்ணி” என்றொரு பாட்டில் இதே ரீதியில் சொல்லுக்குள்ளும் பொருளுக்குள்ளும் புகுந்து விளையாடி இருக்கிறார்.

கிட்டத்தட்ட சிவவாக்கியரை பிரதி எடுத்தது போல,

“நாதமெச்சில் விந்துஎச்சில் நால்மறையோர் வேதமெச்சில்
மந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ” என்று பாடுபவர்,

“உக்கத்து பிள்ளையும் உன் கக்கத்து தீட்டன்றோ…”, “முந்தின தீட்டெடுத்து முத்தமிடும் தொட்டிலிலே…”, “காமத்தீட்டுரைந்து கைக்குழந்தையாயிருந்து…” போன்ற வரிகளில் வியப்பு ஏற்படுத்துகிறார்.

பட்டினத்தார், “நெஞ்சோடு புலம்பல்” பாடல்களில், “காற்றுத் துருத்தி கடிய வினைக்குள்ளான ஊற்றைச் சடலத்தை உண்டென்று இறுமாந்து” என்பார். ஆவுடையக்காளோ

“நாற்ற மலத்தினால் சேர்த்த பாண்டமிது ஆத்மாவாகுமோ
புழுநெளியும் உளுத்த சடலத்தை தேர்த்தினாலாகுமோ
காற்றுத்துருத்தியை மாத்த கூற்றுவன் காத்திருக்கிறானிதோ…” என்கிறார்.

“புல்லாகி பூண்டாகி…” என்ற ரீதியில் பலர் பல பாடல்களை இயற்றியுள்ளனர்.. ஆவுடையக்காளோ, இது போன்றே “புல்லாய் பூண்டாய் நண்டாய் நரியாய்” என்று துவங்கி, அடுத்த வரியில் “எத்தனை ஜென்மமோ கொண்டாய் என்னத்தை நீ கண்டாய்” என்ற கேள்வியில் நம்மை அமர்த்தி மாற்றுச் சாலையில் பயணிக்க வைக்கிறார்.

“அண்டபிண்டந் தந்த ஆதி தேவன்” என்பார் பாம்பாட்டிச் சித்தர். ஆவுடையக்காள், “அண்ட பிண்டம் அவருண்ட நாடு” என்கிறார்.

“கீழ்வாசல் அடைத்து இடைவாசல் திறக்க மேல் வாசல் வெட்ட வெளியாச்சே” ,”கூட்டை கொண்டு வந்த கோனார்” , “ஆட்டுக்குட்டி தொண்ணூற்றாறு” என்று சித்தர்கள் போலவே “பொடி” வைத்து பூடகமாய் ஓடும் வரிகள் பல இவரிடத்திலும் உண்டு..

இப்புத்தகத்தில் “வித்தை சோபனம்” என்றொரு நீண்ட பாடல் இருக்கிறது. மேம்போக்காக‌ நோக்கில் பெண்கள் பூப்பெய்தும் சடங்கை விவரிப்பது போலத் தெரியும் இதன் அடியில் பெண் ஞானத்தை புதைத்து வைத்திருப்பது நமக்கு மறுவாசிப்புகளிலேயே புரியக்கூடும்..

இந்த வரிகளை பாருங்கள்:

“தீட்டென்று மூன்றுநாள் வீட்டைவிட்டு விலக்கி
நாலாம்நாள் உதயத்தில் நன்றாய் உடல் முழுகி
ஆசாரமாச்சுதென்று ஐந்தாம் நாள்
அகத்திலுள்ள பொருள் தொடுவாய் அகத்தீட்டுபோச்சோ?”

இதை பாரதியாருக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் இவர் எழுதியிருக்கிறார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆவுடையக்காளின் சொல்லடுக்கும் அதில் மிளிரும் மிடுக்கும் அர்த்தம் புரியத் துவங்க துவங்க நமக்குள்ளே கடுக்கும். சில உதாரணங்கள்:

“…கல்லிடுக்கில் பாசி நீர் கலங்கித் தெளிவது போல் சொல்லறிந்த ஞானிகளுக்கு தோன்றும்…”
“…பொறுக்கி எடுத்த ஞானம் போகுமோ கறிக்கு பாதி போன சுரைக்காய் விரைக்காகுமோ..”
“…காதில் பட்டதோ வழியில் விட்டதோ பேதங்கள் அற்றதோ விஞ்ஞான வன்னி சுட்டதோ…”
“…கயிறும் தோண்டியும் போலே காயத்தோடிருந்த என்னை…”

ஆவுடையக்காள் பாடல்கள் பரவலாக அறியப்படாமல் போனது ஏன்? ஆழத்தில் கிடக்கும் எதுவும் எளிதில் பார்வைக்குக் கிடைக்காது என்பதாலா?

4 Replies to “ஆச்சரியம் தரும் ஆவுடை அக்காள்”

  1. உங்கள் கட்டுரை அக்காள் பற்றிய அருமையான திறப்பை தந்தது.நன்றி
    மரத்தில் மறைந்தது மாமத யானை(மாமர யானை என்பதற்கு பதில் )என்று திருத்தி விடுங்கள்.

    மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்தில் மறைந்தது மாமத யானை
    பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
    பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே .- திருமூலர் பாடல் 21

Leave a Reply to SubhaCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.