சம்பூர்ணமான பூரணி

ஏழு ஸ்வரங்களும் கூடி வரும்போதுதான் இசை சம்பூர்ணமாகிறது என்கிறார்கள். கவிஞர், கலைஞர், இலக்கிய ஆர்வலர், கதைசொல்லி, எழுச்சி கொண்ட பெண், சமூக அக்கறை கொண்ட ஒரு மனிதாபிமானி, மொழிபெயர்ப்பாளர் என்று ஏழு வகைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பூரணி நூறு ஆண்டுக் காலம் வாழ்ந்து சம்பூர்ணமடைந்தார் நவம்பர் 17ம் தேதி. ஒரு மாதம் முன்னால்தான் தன் நூறாவது வயதை எட்டியிருந்தார் பூரணி. அதற்கான எந்தக் கொண்டாட்டத்தையும் அவர் விரும்பவில்லை. இத்தனை வயதாகியும் உடல் நலத்தோடு இருக்கிறோமே, குடும்பத்தினருக்குத் தன் சாவு பற்றி எந்தவித நம்பிக்கையும் தராமல் இருக்கிறோமே என்று வருந்தியவர் பூரணி. மிகவும் அபூர்வமான நபர். தொடர்ந்து வாழ்க்கையையும் இலக்கியத்தையும் படிக்க முயன்றவர். படித்து அதை உள்வாங்க முயன்றவர்.

2003இல், அவர் 90வது வயதில் நான் அவரைச் சந்தித்தேன். ஸ்பாரோ சார்பில் அவரைப் பேட்டி காணச் சென்றேன். தமிழில் எழுதும் அனைவரையும் அவர் படித்திருந்தார் என்பதும் அவர் என் கதைகளையும் படித்திருந்தார் என்பதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அது மட்டுமில்லை. அவை பற்றி விவாதிக்கவும் விரும்பினார். புதுமைப் பெண்களை அவர் மதித்தார். தன்னையும் அப்படியே கருதினார். ஆனால் அவர் காலத்துப் பெண்களை, வீட்டில் இருந்தபடி வீட்டை நிர்வகித்த பெண்களை, பல்வேறு கடமைகளை ஆற்றிய பெண்களை, தற்காலத்துப் பெண்கள் குறைவாக மதிக்கக் கூடாது என்று நினைத்தார்.

பழனியில் பிறந்தார் சம்பூர்ணம் 17-10-1913இல். ஒரு லட்சியவாதித் தந்தையின் மகளாகப் பிறந்த இவர் தன்னை இவ்வாறு அறிமுகப்படுத்திக்கொண்டார் அவர் கவிதைப் புத்தகத்தில்:

“நான் பிறந்த ஊர் பழனி. புகுந்த ஊர் தாராபுரம். என் தந்தை பெரிய தமிழ் வித்வான். பழனி ஹைஸ்கூலில் பெரிய வகுப்புகளுக்குப் பாடம் நடத்துவார். அதே பள்ளியில் என் அண்ணாவும் சரித்திர ஆசிரியர். எங்கள் குடும்பம் நடுத்தர வர்க்கமாக இருந்தது. ஆனால் வீட்டில் சரஸ்வதி கடாட்சம் நிறைந்திருந்தது. என் தாய் கூடத் தமிழ்ப் பாடல்களுக்குப் பதம் பிரித்து அர்த்தம் சொல்லும் திறன் படைத்தவர்.

இந்தக் குடும்பச் சூழலால் நான் ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்திருந்தும், “கடற்கரையில் நெடுநேரம் அமர்ந்திருந்தால் உடலும் உப்பாகிப் போவதுபோல” எனக்கும் தமிழ் அறிவு கூடுதலாக இருந்தது என்று நினைக்கிறேன்….”

பதின்மூன்று வயதில் விவாகமாகி பதினைந்து வயதில் முற்றும் வேறு மாதிரியான குடும்பத்துக்குப் போனார் சம்பூர்ணம். கூட்டுக் குடும்பமாய் ஹோட்டல் நடத்திக்கொண்டிருந்த குடும்பம் அது. அதில் தத்தளிக்கும் படகாகிப் போனார் சம்பூர்ணம். அப்போது பாட்டெழுதத் தொடங்கினார். மன உளைச்சல்களை வெளிப்படுத்தவோ, பக்திப் பாடல்களையோ அவர் எழுதவில்லை. அவர் மனத்தை ஈர்த்த பல விஷயங்கள் பற்றி எழுதினார். தடங்கலின்றி வார்த்தைகள் வெளிப்பட்டன. “பிசிர் இல்லாத மரபுக் கவிதைகள் பிறக்கத் தொடங்கின”.

மகள் கிருஷாங்கினியுடன்
மகள் கிருஷாங்கினியுடன்

புத்தகம் படிக்கும் தாபத்தைக் கணவரிடம் வெளிப்படுத்தியதும் புத்தகங்கள் வீட்டுக்கு வரத் துவங்கின. “இரும்பு குண்டாய் கனத்த நெஞ்சு இறகால் ஒத்தடம் பெற்றது” என்று அந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறார். ஒன்பது குழந்தைகளுடன் வாழ்க்கையில் பல மேடுபள்ளங்களைப் பார்த்தும் உறுதியை இழக்கவில்லை. பெண்களுக்காக வாதாடும் மனப்பாங்கு மாறவில்லை. ஜஸ்டிஸ் சம்பூர்ணம்மாள் என்ற பெயர் நிலைத்துவிட்டது. மாதர் சங்கங்களிலும், ஹிந்தி வகுப்பு எடுப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டார். அவர் ஓர் அடுப்புச் செய்தால் கூட அது கலை நயத்தோடு செய்யப்பட்டது. தொடர்ந்து எழுதி வந்தார். நவீன எழுத்தாளர்கள் அனைவரையும் படித்தும் வந்தார். அப்படி விடாமல் எழுதியதைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்:

”….மனசுலே ஒரு உத்வேகமும் கையிலே பேப்பரும் பேனாவும் இருந்தால் பாட்டெழுதிவிடலாம். ஆனால் பிரசுரம், புத்தகம் இதெல்லாம் என்னோட எல்லைக்கு அப்பாலான விஷயம். அதனாலதான் அதைப்பத்தியெல்லாம் எதிர்பார்க்கல்லே. ஆனாலும் இன்னைக்கு வரலும் நான் அப்பப்போ எழுதிவரேன். ஏன்னா பாட்டெழுதுறது எனக்கு ஒரு பசி மாதிரி. என்னாலெ எழுதாமலிருக்க முடியாது…”

அவர் எழுத்துக்கள் நான்கு புத்தகங்களாக வந்துள்ளன அவர் மகள் கிருஷாங்கினியின் ஊக்கத்தால். அவரது 90ஆவது வயதில் – 2003ஆம் ஆண்டு – பூரணி கவிதைகள் நூல், காலச்சுவடு வெளியீடாக வந்தது. 2005இல் பூரணி நினைவலைகள் (அவரது தன்வரலாறு), சதுரம் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தது. பிறகு மணிவாசகர் பதிப்பகம் மூலம் அவர் சிறுகதைத் தொகுப்பு பூரணி சிறுகதைகள் என்னும் தலைப்பில் 2009இல் வெளிவந்தது. அவர் தன் பாட்டிகளிடம் கேட்ட சிறுவர் கதைகளையும், தானே வடிவமைத்து, தன் குழந்தைகளுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் சொல்லிய கதைகளையும் இணைத்து 2008இல் கிருஷாங்கினியிடம் தந்த 200 பக்க நோட்டுப் புத்தகத்தில் இருந்த கதைகள் அண்மையில் வசந்தா பதிப்பகம் மூலம் செவிவழிக் கதைகள் என்று வெளியாகி உள்ளன. அவர் தனது எல்லாப் படைப்புக்களையும் கால வரிசைப்படி தொகுத்து நோட்டுகளில் பதிவு செய்து வைத்திருந்தார் என்கிறார் அவர் மகள் கிருஷாங்கினி. 1937இல் பழனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘சித்தன்’ இதழ்களிலும், கோவையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘பாரத ஜோதி’ இதழ்களிலும் பூரணியின் சிறுகதைகள் வெளியாகி உள்ளன.

Sampoornam (Poorani), 9 May 2003, SPARROW Collections.
Sampoornam (Poorani), 9 May 2003, SPARROW Collections.

2003இல் வெளிவந்த அவர் கவிதைத் தொகுப்புக்கு நான் முன்னுரை எழுதும் போது, ”வாழ்வின் இடைஞ்சல் நிறைந்த பாதைகளில் போகும்போது கவிதையைத் தனக்கான ஆற்றாகவும், தன் வெளிப்பாடாகவும் அமைத்துக்கொண்டவர் பூரணி. வீட்டுக்குள் இருந்தபடியே வெளி உலகத்தை உள்ளுக்குள் இழுத்துக்கொண்ட மாயத்தைப் பூசிக்கொண்டவை இக் கவிதைகள். மண் அடுப்பு மட்டும் செய்யவில்லை பூரணி; மண்ணில் உள்ள அனைத்து விஷயங்களையும் கூர்ந்து கவனித்து, கவிதையும் வனைகிறார். அன்றாட வாழ்க்கையின் கொண்டாட்டமும் இசையும் நிறைந்த நிகழ்வுகளில் புகுந்து அவற்றின் சொற்களை மாற்றிப் போடுகிறார். நாடு என்ற ஒன்றை அந்தப் பாடல்களில் ஏற்றுகிறார். இயற்கை, இடம், இருப்பு இவையும் கவிதைப் பொருளாகிறது நாட்செல்ல நாட்செல்ல. வாழ்க்கைக்கும் தனக்கும் உள்ள உறவுக்கு ஒரு பாலமாகக் கவிதையைக் கட்டுகிறார் பூரணி. ” என்று ஒரு பகுதியில் எழுதியிருந்தேன். இன்றும் அவர் கவிதைகள் எனக்கு அர்த்தம் கொண்டவையாகவும், தற்கால வாழ்க்கைக்கு உரியவையாகவுமே தோன்றுகின்றன.

நூறு ஆண்டு வாழ்க்கையை நான்கு புத்தகங்களாக மாற்றியிருக்கிறார் பூரணி. ஆனால் அப் புத்தகங்களில் உள்ளவை பல நூறு வாழ்க்கைகளைத் தொட்டவை. தொட இருப்பவை. பூரணி போன்றவர்கள் மறையும் போது அவர்கள் வாழ்க்கையைக் கொண்டாடுவதன் மூலமாகத்தான் நாம் அதில் இணைந்துகொள்ள முடியும். இக் கட்டுரையும் அப்படி இணையும் ஒரு முயற்சிதான்.