நார்வே பயணம் – 2

இப்பயணத்தில் முதல் பகுதி கட்டுரை இங்கே.

கடந்த உறைப்பனிக்காலத் தொடக்கத்துக்கு, அதாவது 2.5 பில்லியன் வருடங்களுக்கு முன் நார்வே நாட்டின் ஃபியார்ட்ஸ் பகுதிக்கு மேலே பறந்துசென்றால் எந்தவிதமான நிலப்பகுதிகள் தெரியும்? இப்போது தனித்தனிப் பகுதிகளாக இருக்கும் ஸ்காட்லாந்து, ஸ்காண்டிநேவியா, சைபீரியா, அலாஸ்கா பெரும் பனிப்பாளத் தொடர்ச்சியாக அமைந்திருக்கும். ஸ்காட்லாந்து நாட்டின் இன்றைய ஹட்ரியன் சுவர் (Hadrian’s Wall) எனப்படும் பகுதியிலிருந்து நடந்து ஒருவர் கனடா நாட்டுக்குள் நுழைந்து, மத்திய அமெரிக்காவுக்குள் சென்றுவிட முடியும். ஃபியார்ட்ஸ் (Fjords – மலைகளுக்கிடையே அமைந்திருக்கும் கடல்)  பகுதிகளில் கடல் மட்டம் வெகுவாகக் குறைந்திருக்கும் என்பதால் பெரு மலைகளுக்கு இடையே கடல்கள் இருந்திருக்காது. பனி மலைகளை நடந்து கடந்திருக்க முடியும். பொறுமையோடு நாம் பறந்தபடி காத்திருந்தால், பெரும் பிளைவு ஏற்பட்டு யூரேஷியா பகுதி கண்டங்களாகப் பிரியும் வரை பல தொல்குடிகள் இடம்பெயர்ந்தபடி இருப்பதைப் பார்த்திருக்கலாம். இன்று இந்த மலைகளுக்கிடையே கடல்கள் புகுந்து ஃபியார்ட்ஸாக மாறிவிட்டன.

Bryggen

பெர்கன் துறைமுகத்திலிருந்து வட துருவத்தில் இருக்கும் கிர்கெனேஸ் (Kirkenes)  நகரம் வரை செல்வதற்கு ஹட்டிகுட்டன் கப்பல் ஏழு நாட்கள் எடுத்துக்கொள்ளும். கப்பலில் ஏறுவதற்கு முதல் நாள் பெர்கன் நகரில் உள்ள Bryggen எனும் துறைமுகப்பகுதிக்குச் சென்றோம். யுனெஸ்கோ பாதுகாத்து வரும் பகுதிகளில் ஒன்றான இங்கு எழுநூறு வருடப் பழைய பலசரக்கு கொள்முதற்கலன்கள் இன்றும் உபயோகத்தில் உள்ளன. பல வண்ணங்கள் கொண்ட நுழைவாயில் வழியே உள்ளே போகும்போது புதிர் நகரத்துக்குள் நுழைந்தது போலிருந்தது. E.C.எஷரின் புகழ்பெற்ற ஓவியங்கள் போல ஒரு பக்கம் மாடிப்படிக்கட்டுகளில் ஏறினால் மேலே போகாமல் கீழ்தளப்பகுதிக்குள் எங்களைச் சென்றுசேர்த்தன. Inside_Bryggen

மிகச் சிக்கலான அமைப்பாக இருந்ததால் உள்நுழையவும், வெளிவரவும் வழி தெரியாமல் சுற்றிச் சுற்றி வந்தோம். புராதன அறைகளிலிருந்து வெளிவர வழி தெரியாத தவிப்போடு ஆதிக்காலப் பேய்கள் உளவுவதாக சில அறைவாசல்களில் எழுதிவைத்து பயத்தை மேலும் அதிகப்படுத்தினர். இங்குள்ள சில அறைகளின் அமானுஷ்யத் தன்மை மாறும்போது கடல் கொந்தளிப்பு அடையும் எனும் நம்பிக்கை பல காலங்களாக மாலுமிகளிடையே இருந்து வந்திருக்கிறது. அப்போது கடலரக்கன் வெளியேறி கப்பல்களை கவிழ்த்துவிடுவான். அவனை மதிக்காத கப்பல் தலைவனை கரைக்கு வந்தபின்னும் விதி விடாது எனும் தொன்மையான நம்பிக்கைகள் பலதும் பிரிக்கன் வீதிகளில் எழுதப்பட்டுள்ளன.

insidebryggen

ஒருவிதத்தில் கிரேக்க தொன்மக்கதைகள் போல இப்படிப்பட்ட தொன்மங்கள் வட ஐரோப்பிய இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்துள்ளன. நார்ஸ் தொன்மத்தின் அடிப்படைக் கதைகள் இன்று புதினங்கள், ஆபராக்கள், திரைப்படங்கள் என பல வடிவங்களில் வந்துள்ளன. The Flying Dutchman எனும் கதை வாண்டெர்டீகென் எனும் மாலுமியின் போராட்டத்தைச் சொல்லும் கதை. கடலரக்கனை நம்பாது செல்வத்தையும் தனது ஒப்பற்ற ஆற்றலையும் நம்பும் கப்பல் தலைவன் ஒருவனுக்கு சாபம் கிடைக்கிறது. தூய்மையான காதலை அடையும் வரை அவனது கப்பல் கரை சேராது் கடலில் சுற்றியபடி இருக்கும். ஏழு வருடங்களுக்கு ஒரு முறை கடலலை கப்பலை கரைசேர்க்கும்போது உண்மையான காதலை அவன் கண்டடைய வேண்டும். அப்போது அவனுக்குச் சாபவிமோசனம் கிடைக்கும். ஒரு விதத்தில் இது நார்வே நாடு உருவானக் கதையாகவும் பிரிக்கென் அருங்காட்சியகத்தில் குறிக்கப்பட்டுள்ளது. தொலைந்து போன இப்படிப்பட்ட பல தொன்மக்கதைகளை மறு உருவாக்கம் செய்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல புதினங்கள், ஆப்ராக்கள் வெளிவந்தன.

flying

பிரிக்கெனைச் சுற்றி வரும்போது கடற்கரை ஓரத்தில் இருந்த பழமையான தேவாலயங்கள் எதிர்பட்டன. வரிசையாக அமைக்கப்பட்டிருந்த வண்ண கட்டடங்களைத் தாண்டி சென்றபடி இருந்ததில் வந்த வழி மறந்துவிட்டது. இன்னும் சிறிது நேரத்தில் திரும்பிவிடலாம் எனப் பார்த்தபோது ஆதிகாலத்து கப்பல் இடிபாடுகளோடு பாதுகாக்கப்பட்ட இடத்தை அடைந்தோம். ஏதோ நினைப்பில் சுற்றி அலைந்ததில் குழம்பிப்போய் எதிரே பிரம்மாண்டமாக நின்றிருந்த கப்பலை சற்று ஆச்சர்யத்தோடும் அதிக குழப்பத்தோடும் சுற்றிப்பார்த்தேன். ஒரு மணி நேரத்துக்கு முன்னால் கடற்புள்ளுகள் நிரம்பியிருந்த கடற்கரையில் இருந்தேன் என நம்பமுடியாதபடி காலத்தில் பின்னோக்கிச் சென்றுவிட்டது போலிருந்தது. நீண்ட தூரம் ஒரே விதமான பகுதிகளைக் கடக்கும்போது வரும் இட மயக்கம் எனக்கு வந்துவிட்டிருந்தது. கணக்கில்லாமல் நடந்ததுபோல களைப்பு. இடிந்து போல கப்பலைச் சுற்றி வந்ததில் தட்டாமாலை சுற்றி வந்து திடுமென நின்றது போல தள்ளாட்டம்.

ஹட்டிகுட்டன் கப்பலில் கிளம்ப வேண்டிய நாள் காலையில் நார்வே நாட்டுக்குப் பிரத்யேகமான தேவாலயத்தைக் காண வேண்டும் எனக் கிளம்பினோம். Stave எனப்படும் தேவாலய வடிவங்கள் மரத்தால் கட்டப்பட்டவை. வட ஐரோப்பிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க தேவாலயங்கள் ஸ்டேவ் பாணியில் அமைந்திருக்கும். பெர்கன் நகரின் ஃபானா எனும் பகுதியில் அமைந்திருந்த ஃபேண்டாஃப்ட் (Fantaft) ஆலயத்துக்குச் சென்றிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த பெர்கன் நகர மையத்திலிருந்து ஒரு மணி நேரம் ரயிலில் பயணம் செய்து ஃபானா பகுதியை அடைந்தோம். நாங்கள் கொண்டுவந்திருந்த வரைபடத்தை ரயிலில் விட்டுவிட்டதால் நிலையத்திலிருந்து ஒவ்வொரு தெருவாக வழி கேட்டபடி ஆலயத்தை நோக்கி நடக்கத்தொடங்கியதில் காட்டுப்பகுதி வழியே நடப்பது போல வழியெங்கும் செழிப்பான பைன் மரங்கள். மண் நிறத்திலான சிறு கற்கள் பாதை ஓரமெங்கும் எங்களுடனே வந்தது. வழியில் தெரிந்த வீடுகளைச் சுற்றிச் சுவர் உயரத்துக்கு செடிகள் அமைத்திருந்தனர். மெல்ல வீடுகள் பின்னகர்ந்து மலை வழி உயரச் சென்றது. ஏப்ரல் மாதமாக இருந்தாலும் குளிர் குறைந்தது போலத் தோன்றவில்லை. தூரத்தில் தெரிந்த வடக்குக் கடலில் அலைகள் இல்லை.

fantoft_stave

உயர ஏறிய பிறகு எங்கள் பாதை கிடுகிடுவென கீழே இறங்கத் தொடங்கியது. மீண்டும் சில வீடுகளும், மக்கள் தலைகளும் தெரியத் தொடங்கியதில் சற்றே நிம்மதியானது. நார்வே நாட்டுத் தலைநகரமும், வர்த்தக மையங்களே கூட வேலை நிறுத்த நாள் போல எல்லா நாளும் ஆளரவம் இல்லாமல் இருந்தது. ஃபானா போன்ற காடு சூழ்ந்த பகுதியில் எந்தவிதமான வாழ்க்கை சூழல்கள் அமைந்திருக்கும் எனச் சுலபமாக கணிக்க முடிந்தது. ஒருவரை ஒருவர் பெயர் சொல்லிக் கூப்பிடுமளவு மிக நெருக்கமான சமூக சூழல் அமைந்திருந்தது. தூரத்தில் தெரிந்த ஸ்டேவ் ஆலயத்தின் தலை தெரிந்தபோது காலை பதினோறு மணி. நாங்கள் நடந்த சாலையில் ஓரிருவர் சென்றுகொண்டிருந்தனர். வைக்கோலை ஏற்றிச்சென்ற ட்ராக்டரை வழிமறித்து ஆலயத்துக்குச் சுருக்கமான வழியை வினவினோம். காலத்தைக் கடந்து ஏதோ ஒரு ஊரில் வழிதவறி இறங்கியவர்களைப் பார்ப்பது போல எங்களைப் பார்த்தார். சிறு குழந்தையோடு இத்தனை தூரம் நடந்து வருவது அவரது தெருக்கோடியில் இருந்த ஆலயத்தைப் பார்ப்பதற்காக என அவர் நம்பச் சிரமப்பட்டார். பொதுவாக சுற்றுலாப் பயணிகளென்றால் பலரும் ஜாக்கிரதையாகத்தான் பழகுகிறார்கள். ஸ்ட்ரின் ஊரில் எங்களுக்கு நடந்த அனுபவம் அரிதான ஒன்றுதான்.

ராக் இசை பாணிக்குப் பெயர்போன நார்வே நாட்டில் இசை தொடர்பான கலகக் குழுக்களும் பல உள்ளன. அவற்றில் ப்ளாக் மெட்டல் எனும் குழுவினர் கிறிஸ்துவத்துக்கு எதிரான அமைப்பினர். சாத்தானின் பழக்கங்களை பயிற்சியாக மேற்கொள்வதாகக் கூறும் இவர்களது குழுவில் பல வினோதப்பழக்கங்கள் தொடர்ந்து நார்வே நாட்டு அரசுக்குத் தலைவலியைத் தந்தது. நாங்கள் பார்க்கச் சென்றிருந்த ஃபாண்டாஃப் ஆலயத்தை 1990களில் இக்குழுவினர் எரிக்க முயன்றனர். பல சட்டவிரோத செயல்களை மேடையிலும், மேடைக்கு வெளியேயும் செய்ததில் இக்குழு நார்வே நாட்டில் தடை செய்யப்பட்டது. இன்றும் பல முன்னணி இசை கலைஞர்கள் இக்குழுவின் மரபைத் தொடர்ந்து வருகின்றனர். வருடாவருடம் ராக் பாணி இசை நிகழ்ச்சிகள் இங்கு நடக்கின்றன. கருப்பு உடைகளில் மாடு போலப் பெருத்த வண்டிகளில் ராக் இசைப்பிரியர்கள் வலம் வருவதை சகஜமாகப் பார்க்க முடிந்தது.

fantoftநாங்கள் சென்றிந்தபோது ஃபாண்டாஃப் ஆலயத்தில் சீரமைப்பு நடந்துகொண்டிருந்ததால் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. நான்கைந்து கைகள் ஒவ்வொரு திசையிலும் சுட்டிக்காட்டுவதைப் போன்ற வெளிப்புறத் தோற்றம் மிக வித்தியாசமான அமைப்பில் இருந்தது. முழுவதும் மரத்தால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் வெளிப்புறத்தில் மரக்கைகள் புடைத்துத் தெரிகின்றன. பொதுவாக ஐரோப்பிய பர்ரோக் பாணி தேவாலையங்களின் வெளிப்புறத்தில் கார்காயில் (Gargoyle) எனச் சொல்லப்படும் கற்களாலான அமைப்புகள் தண்ணீர்குழாயைப் போல நீட்டிக்கொண்டிருக்கும். தேவாலயச் சுவர்களில் தேங்கிக் கிடக்கும் மழைத்தண்ணீரை வெளியேற்றப் பயன்படும் இந்த அமைப்புகள் விலங்குகள் வாயைப் பிளந்துகிடக்கும் யாளித்தோற்றத்தில் அமைந்திருக்கும். ஒரு உபயோகத்துக்காக கட்டப்பட்ட அமைப்புகளுக்கென காலப்போக்கில் தனி முக்கியத்துவத்தை அடைந்தது. இவற்றுக்கென தனி வரலாற்றுக்கதைகளும், தொன்ம குறியீடுகளும் ஐரோப்பிய தேவாலய சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளன.

hurtigruten

ஐரோப்பாவின் பிற நாடுகளை ஒப்பிடும்போது நார்வே மிகப் புதியது. எட்டு மாதங்களுக்குக் கடுமையான குளிர், அதிக புழக்கத்தில் இருக்கும் நார்வேஜியன் மொழி என்பதால் பலரும் நார்வே நாட்டுக்கு இடம் பெயருவதில்லை. கடந்த முப்பது வருடங்களாக இது கொஞ்சம் மாறி வருகிறது. உள் நாட்டு கலவரங்கள் அதிகமானப் பின்னர் இலங்கை தமிழ் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பல நாடுகளில் முதன்மையானது நார்வே. நாங்கள் தங்கியிருந்த ஸ்ட்ரின் பகுதியில் பல இலங்கைத் தமிழர்களைப் பார்க்க முடிந்தது. தமிழில் பேச முயன்றபோது அதை அவர்கள் அதிகம் விரும்பவில்லை என உணர்ந்தேன். அதே போல, அண்மைக்காலங்களில் ஸ்காண்டிநேவிய பல்கலைக்கழகங்கள் அதிக வெளிநாட்டு மாணவர்கள் வருவதை ஊக்குவிப்பது போல பல புதிய வழிமுறைகளை உண்டாக்கி உள்ளனர். அதனால் இந்திய மற்றும் சீன மாணவர்கள் பலரை ஓஸ்லோ, பெர்கன் போன்ற பெரு நகரங்களில் பார்க்க முடிந்தது. பொது மொழியாக ஆங்கிலம் வளராத ஸ்காண்டிநேவியாவில் இது பெரும் மாற்றத்தை உருவாக்கிவருகிறது.

பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போல நெடும் மன்னராட்சி வரிசைகளும், பிற நாடுகளை ஆண்டுவந்த சரித்திரமும் நார்வே நாட்டுக்கு அதிகம் கிடையாது. பிற ஐரோப்பிய நாடுகளில் பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர் பல கட்டடங்கள் சரிந்துவிட்டன, குவியல்குவியலாக நகரங்கள் விழுந்து அவற்றின் மீது புது அமைப்புகள் எழுதப்பட்டுவிட்டன. ஐரோப்பாவின் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போது சரித்திரத்தின் நிழல் எந்தளவு நீண்டுள்ளது எனத் தெரிகிறது. கால்களுக்குக் கீழே நகரும் பூமித்தட்டுகள் போல ஒவ்வொரு மனித வளர்ச்சி யுகமும் பலவற்றை நினைவில் வைத்திருக்கும் அதே நேரத்தில் சிலதை மறக்க முயல்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் நகரங்கள் புத்துயிர்ப்பு பெற்று எழும்போது, நமது ஞாபகங்கள் நம்மை ஏமாற்றுகின்றன என்றே தோன்றுகிறது. கண்ணுக்குள்ளே இருக்கும் குருட்டுப்புள்ளியைப் போல சில காட்சிகளை நம் நினைவு ஓரங்கட்டிவிடுகிறது போலும்.

தேவாலயத்தைப் பார்த்தபின்னர் பெர்கன் நகரத்து துறைமுகத்துக்கு விரைந்தோம்.

ஹட்டிகுட்டன் கப்பலில் நாங்கள் கிளம்பும்போது அசாதாரணமான இருட்டும் புழுக்கமும் ஒருசேர அமைந்திருந்தது. பின் மதிய நேரத்தில் கிளம்பிய எங்கள் கப்பல் கிட்டத்தட்ட ஐநூறு கிலோமீட்டர் தூரம் சென்றால் அடுத்த பெரிய ஊரான அல்செண்ட் வரும். அதுவரை பல சிறு துறைமுகங்களில் வர்த்தகத்துக்காக நிற்கும் சரக்கு கப்பல் ஹட்டுகுட்டன். ஒவ்வொரு நாளும் பெர்கன் நகரிலிருந்து புறப்பட்டு வடக்கு துருவத்திலிருக்கும் ட்ராம்சோ (Tromso) எனும் ஊருக்கு ஏழாவது நாள் சென்று சேரும். ஃபியார்ட்ஸ் பயணத்தடத்தில் இருக்கும் சிறு பொட்டு ஊர்களும் இந்த சரக்கு கப்பலை நம்பித்தான் இருக்கின்றன. வரைபடத்தில் பார்த்தால் சிறு சிறு தீற்றுகளாக வெள்ளைத் தீவுகள். ஒவ்வொன்றிலும் ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் கூட்டம். அதில் குறிப்பிடத்தக்க ஊர் அல்செண்ட்.

Norse

பதிமூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நார்ஸ் எனும் கடற்கொள்ளைக் குழுவினர் சிறு குடிகளாக இப்பகுதியில் சிதறியிருந்தனர். புதிதாகக் கரைந்திருந்த பனிப்படலங்கள் அப்பகுதியின் கடல்மட்டத்தை உயர்த்தியிருந்தது. ஒவ்வொரு சிறு குழுவும் தத்தமது ஆதிக்குழுவை மறந்து தனிக்குடிகளாக பெருகத் தொடங்கின. சிறு விசைப்படகுகளை அவர்கள் உருவாக்கத்தொடங்கிய காலகட்டம். மிகக்குறைந்த நாட்கள் மட்டுமே இருந்த வெயில் காலம் நிலச்சாகுபடி செய்வதற்கு ஏற்றதாக அமைந்திருக்கவில்லை. பெரும்பாலும் சாகுபடி செய்யத்தெரியாத வேட்டைக்குழுவினர். குடி செழிப்படைய புது விசைப்படகுகளும் சிறு கப்பல்களும் கட்டத்தொடங்கினர்.

நமது வான்வழிப்பயணத்தை கடலுக்கு மேலே மேற்கொண்டால் பல கப்பல்களைக் காணத்தொடங்குவோம். இன்றைய கட்டுமான அமைப்பின் பாதுகாப்பு சட்டங்கள் அந்தகால கப்பல்களில் கிடையாது. நமது கால இயந்திரப் பயணத்தில்  நார்ஸ் தொல்குடிகளின் கப்பல்களில் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. முறையான கப்பல் கட்டமைப்பு உருவாவதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும். யூரேஷியா நிலப்பகுதியின் மிகச் சிறந்த கப்பல் கட்டுமானங்கள் ஸ்காண்டிநேவியா பகுதியில் உருவாயின. கடல் கடந்து பல நாடுகளில் கொள்ளை அடிக்கத் தொடங்கினர். முறையான காலனியாதிக்கமாக இது உருவாகாவிட்டாலும், மிகச் செழிப்பான காலனி ஆதிக்கத்துக்கு இது அடிக்கல் நாட்டியது. நார்ஸ் குடியினர் கடற்கொள்ளையராக      இங்கிலாந்துப் பகுதிகளில் நுழைந்ததன் விளைவு பிரித்தானியரும் கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கத் தொடங்கினர். அதன் விளைவு காலனியாதிக்கத்திலும், உலகம் முழுவதுமான வர்த்தகப் பரவலுக்கும் வழிவகுத்தது.

Norweigian Ship STTR

எங்கள் கப்பலில் மிகவும் குறைவான சுற்றுலாப்பயணிகள் இருந்தனர். ஏழு தளங்களாக அமைந்திருந்த ஹட்டிகுட்டன் கப்பலில் கிட்டத்தட்ட ஐந்து தளங்கள் முழுவதும் கப்பல் கட்டுமானத்துக்குத் தேவையான பொருட்கள் இருந்தன. ஒவ்வொரு கப்பலும் ஒவ்வொரு சரக்குகளை ஏற்றிச்செல்லும். எங்கள் கப்பல் ட்ராம்சோவிலிருந்த கப்பல் கட்டுமானத் தளவாடத்துக்காக பொருட்களை நிரப்பியிருந்தது. ஒவ்வொரு சிற்றூரில் நிற்கும்போதும் அங்கிருந்த துறைமுகத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றேன். கப்பல் வழி வர்த்தகம் மட்டுமே சாத்தியம் என்பதால் ஒவ்வொரு ஊரிலும் மிக விரிவான துறைமுகச் சோதனைச்சாலை அமைந்திருந்தது. பனிக்காலங்களில் பனி உடைப்பான் (Ice Breaker) பொருத்திய கப்பல்கள் வடதுருவத்தை நோக்கி தினமும் செல்லும். பனிக்கால சாலைகளில் சால்ட் (salt) கணிமத்தைப் பரப்புவதைப் போல இங்கு கப்பல் போகும் பாதையில் பனியை உடைத்து ஹட்டிகுட்டன் போன்ற சரக்கு கப்பல்களுக்கு வழிவகுக்கும். இந்த வசதி இல்லாத காலத்தில் ஒரு மலைத்தொடரிலிருந்து மற்றொரு மலைக்கு வேட்டைக்காகச் செல்வதும், மற்ற குடிகளின் கப்பல்களைக் கைப்பற்றுவதுமாக நார்ஸ் பழங்குடியினர் தங்கள் நிலப்பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத்தொடங்கினர்.

ஒவ்வொரு குடிகளுக்கும் தனித்தனி பழக்கங்கள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் பல காலங்களாகத் தொடர்ந்திருக்கின்றன. இன்றும் பெர்கன் நகரத் துறைமுகக் கட்டுமானப் பகுதிகளில் வாழும் மக்களிடையே பல நம்பிக்கைகள் இன்னும் மிச்சம் இருப்பதாக அருங்காட்சியக குறிப்பு தெரிவிக்கிறது. நல்ல நேரம், கெட்ட நேரம், மேகங்கள், பறவைக்கூட்டங்கள், பலமான காற்று என ஒவ்வொரு குறிப்புக்கும் பல கதைகள் வைத்துள்ளனர்.

Aurora-Borealis

வட துருவம் வரை செல்லும் திட்டம் இருந்தாலும், ஏழு நாட்கள் தொடர்ந்து கடலில் பயணம் செய்ய முடியுமா எனும் சந்தேகம் ஆரம்பம் முதலே இருந்தது. நாங்கள் நினைத்ததுபோலவே மூன்றாம் நாள் சற்றே உடல் உபாதையோடு அல்செண்ட் நகரத்தில் இறங்கிவிட்டோம். நாங்கள் சென்றிருந்த ஏப்ரல் மாதத்தில் நார்வே நாட்டின் வடக்கு கோடியான டிராம்சோ நகரம் வரை சென்றிருந்தால் Aurora Borealis எனும் வானவெளிச்ச நடனத்தைப் பார்த்திருக்கலாம். நள்ளிரவுச் சூரியனைப் பார்த்திருக்கலாம். வட துருவக் கடலில் சுறா கூட்டம் அலையோடு ஆடும் ஆட்டத்தைத் தொடர்ந்திருக்கலாம். துருவக் கரடிகளின் குடும்பங்களைப் பார்த்திருக்கலாம்.  எங்களைப் பார்த்ததும் அவை பனித்துளைகள் வழியே கடலுக்குள் மறையும் அழகைப் பார்ப்பதற்காக மற்றொரு பயணத்திட்டம் போட வேண்டும். இம்முறை டிராம்சோ நகருக்கு நேரடியாகச் சென்று வட துருவத்தை மட்டும் காண வேண்டும். துருவங்களுக்கு அருகே ஃபியார்ட்ஸ் மலைப்பகுதிகள் இருக்கின்றனவாம் – இந்தப்புறம் நார்வே போல நமது சிறிய தெருக்கோடி அந்தப்புறத்தில் நியூசிலாந்தும் பல ரகசியங்களை ஒளித்து வைத்திருக்கிறது.

[பின்னூட்டத்தில் ராகவன் சுட்டிக்காட்டியதைப் போல மேலும் சில வாசகர்கள் சரியாகச் சுட்டிக்காட்டியதில் திருத்தப்பட்ட வடிவம் – பதிப்புக் குழுவினர்]

0 Replies to “நார்வே பயணம் – 2”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.