திரு. சுதாகர் அவர்களின் முதல் நாவல். இரா. முருகன், பி.ஏ. கிருஷ்ணன் ஆகியோரின் அறிமுக உரைகள் என்று நல்ல பில்டப்.
கதை: லெமூரியர்கள் அழியும் காலத்தில் ஆரம்பிக்கிறது. லெமூரியத் தலைவர், மற்றும் அவரின் குழு ஒரு சக்திப்பீடத்தை (pyramid) இரண்டு பகுதிகளாக உடைத்து தனித்தனி இடங்களில் புதைத்துவிட்டு வானகம் செல்கிறார்கள். போவதற்குமுன் மனித இனம் பீடத்தைக் கண்டுப்பிடிக்கும் சாத்தியத்தை சொல்ல, அவர்களின் ஒரு லெமூரியன் (அவர்களுக்கு பால் வேறுபாடு கிடையாது, ஆனாலும் படிக்கும் வசதிக்காக) பூமியில் தங்கி பீடத்தைப் பாதுகாக்க முடிவெடுக்கிறான்.
தற்காலத்தில் அனந்த், ஜானகி இருவரும் ஒரு மர்மமான முறையில் தொடர்பு கொள்ளப்பட்டு இந்தப் பீடத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் அவர்களேடு நல்லவர்கள், தீயவர்கள், விலைபோனவர்கள், லெமூரிய சக்தியில் நம்பிக்கைக் கொண்டவர்கள் என்று பலரும் ஈடுபடுகிறார்கள். விடை கடைசியில்.
மேலே சொன்னது ஒரு துப்பறியும் pulp கதை சார்ந்திருந்தாலும், இரா. முருகன் இதை அறிவியல் புனைகதை என வகைப்படுத்துகிறார். முதலில் அறிவியல் புனைகதை என்றால் என்ன?
அறிவியல் புனைகதை
சுஜாதா முன்னேற்றமும், குழப்பமும் நிறைந்த அறிவியல் சூழலில் மனிதனின் இடத்தை பிரபஞ்சத்தில் தேடும் கதைகள் என்று வகைப்படுத்துகிறார் (விஞ்ஞானச் சிறுகதைகள், ஜீனோ). ஜெயமோகன் மானுட ஆழ்மனமும் அறிவியலும் சந்திக்கும் புள்ளி அறிவியல் புனைகதை என்கிறார்.
என் பார்வையில் மேற்சொன்ன இரண்டும் கலக்கின்றன. அ.பு. களம் பல புறப்பொருள்கள் மிக முன்னேற்றத்துடன் மனிதனால் அடையப்பட்டிருந்தாலும் அகச்சிக்கல்களில் மனிதன் இன்னும் சாதாரணமானவனாகவேதான் இருப்பான். இதை அ.பு நேரடியாகவோ, மறைமுகமாகவோ காட்டும். என் கருத்து பெரும்பாலும் மேற்கத்திய அறிவியல் புனைவுலகை ஒட்டியது.
அறிவியல் புனைகதை எப்போதும் ஒரு அறிவியல் சம்பந்தமான கேள்வியை எழுப்பி அதன் கோணத்தில் பாத்திரங்கள் வழியே ஆராயும். விடை கிடைத்ததா, அல்லது கேள்வி வேறு தளங்களுக்கு நகர்ந்ததா என்பது கதைசொல்லியின் முடிவு. நான் எடுத்துக் கொள்வது பிலிப் கே. டிக் மற்றும் தற்கால எழுத்தாளர் ஹ்யூ ஹாவி கதைகள்.
உதாரணமாக பிலிப்-ன் ‘Do Androids dream of Electric Sheep’-ல் கதாபாத்திரம் தனிமையில் வாடினாலும் பாதி பெண் , பாதி இயந்திரம் வடிவம் கொண்ட Android replicant அவனை உபயோகிப்பதை ஓரளவில் விரும்பவே செய்கிறான் (இதன் திரைப்பட வடிவமான Blade Runner எப்படி ஒரு சிக்கலான கதையை நல்ல திரைக்கதையாக மாற்றலாம் என்பதற்கு சிறந்த உதாரணம்). அவள் ஒரு சிலந்தியின் கால்களை வெட்டும்போது அவனின் இயல்பான மானிட உணர்ச்சி அவளை வெறுத்தாலும் அவளைக் காட்டிக் கொடுக்க மறுக்கிறான். இன்னொரு கதையான The Skull-ல் நாயகன் முற்காலத்துக்கு சென்று ஒரு messiah-வை கொலை செய்ய வேண்டும். கதை அமைப்பு படிப்பவரை காந்தி, மார்ட்டின் லூதர் கிங், இயேசு போன்றவர்களைப் பொருத்திப் பார்க்க வைக்கும். Second Variety-ல் நாயகன் பெண்ணை மானிடள் என்று நம்பி அழிவுக்குத் துணை போவான்.
ஹ்யூ ஹாவி-ன் Wool பெருங்கதை வருங்காலத்தில் நடந்தாலும் அடிப்படை மனித நாகரீகத்தை மீட்டெடுக்க முயல்கிறது, Silo எனப்படும் காலனியில் நடக்கும் புரட்சி பற்றிய கதை. இறுதியில் ஜனநாயகம் வென்றாலும் மீண்டும் மக்களைக் கட்டுப்படுத்தவே புது ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். ஆனால் கதையின் நாயகி ஜுலியட் அவர்களை எச்சரிப்பதோடு கதை முடிகிறது. புரட்சி வென்றதா அல்லது தோற்கப்போகிறதா என்ற கேள்வியை கதாசிரியர் எழுப்பி அதே சமயம் ரஷ்யப் புரட்சியோடு முடிச்சு போடுவதைக் கவனிக்கவும்.
Alan Moore-ன் V for Vendetta-வில் கதாநாயகியை ஒரு முகமிலி காப்பாற்றி இறுதியில் புரட்சியை வெடிக்கச் செய்கிறான். James Cameron இயக்கிய Aliens அதிரடி படமென்றாலும் அடிநாதமாக ரிப்ளி-ன் தாய்மை உணர்ச்சி அந்த கோர மிருகத்தை எதிர்க்கிறது. Stephen King-ன் The Cell கதை அமானுட வகையைச் சார்ந்தது என்றாலும் மக்களின் மூளையைக் சலவை செய்து தன் சித்தாந்தத்தை ஒப்புக் கொள்ள வைத்து அவர்களைக் கிட்டத்தட்ட ஐந்தறிவு படைத்தவர்களாக மாற்றும் ஒரு தலைவனை எதிர்த்து தன் மகனைக் காப்பாற்றப் போராடும் ஒரு தந்தையைப் பற்றியது.
மேற்கத்திய அறிவியல் புனைகதைகள் பெரும்பாலும் (அல்லது நான் படித்த வரையில்) dystopia வகையை சார்ந்திருப்பது தற்செயல் அல்ல. இதை cold war அரசியலில் வைத்து ஆராய வேண்டும். இந்தக் கதைகள் ஒரு முகம் தெரியா ஆளுமை, சமூகத்தை அறிவியல் வழியே கட்டிப் போடுவதும் அதை எதிர்த்து தனி/குழு மனித போராட்டங்களும், ஆசாபாசங்களை அடைய முயல்வதும் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கின்றன. தனிமனித மனஎழுச்சிகள் பதிவாக்கப்பட்டிருந்தாலும் புறவயமாக அதிகாரத்தை நோக்கியே போராடுவதை தற்காலத்திய மேற்கத்திய தனிமனித சுதந்திரத்தை அடையும் முயற்சியாகவே மேற்சொன்ன கதை சொல்லிகள் கதையை நகர்த்துகிறார்கள்.
உர்சுலா லெக்வின் வேறு வகை. அவரின் இரண்டு கதைகளை படித்திருந்தாலும் நினைவில் நிற்பது ஒரு தீவில் ஈ கடித்து மனிதர்கள் சாகாவரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதன் மர்மத்தை கதாநாயகி கண்டுபிடிக்க செல்கிறாள். உர்சுலா-வின் கதைகள் தீவிர கவனத்தைக் கோருபவை.
சுஜாதாவின் சில கதைகளை எடுத்துக் கொண்டால் மேற்கூறிய சட்டகத்தில் பொருத்த முடியும். உதாரணமாக ஜீனோ கதைகள்…ஜீனோ மேல் உயிரையே வைத்திருக்கும் நிலா அதற்குத் துரோகம் இழைத்துக் காட்டிக்கொடுக்கிறாள்.’தம்பி’ என்ற பெயர் சூட்டப்பட்ட ஒரு இயந்திரத்துக்கு சகலமும் சொல்லிக் கொடுக்கப்பட அது வளர்த்தவன் தலையிலேயே கை வைப்பது. ஆனால் அவரின் சில அறிவியல் கதைகள் சாகசம் + அதிர்ச்சி மதிப்பீடுகள் தாண்டி மேற்கத்திய உலகின் dystopia-வையும் பேசுகிறது. உதாரணம் வேலி, வானத்தில் ஒரு மௌனத்தாரகை, கி.பி.2887-ல் சில விலாசங்கள், நீரில் மூழ்கிப்போன சென்னை நகரம் பற்றிய கதை போன்றவை கவனமாகப் படிக்கப்பட வேண்டிய பட்டியலில் வரும்.
ஜெயமோகனின் விசும்பு மற்றும் இரா. முருகன் அறிவியல் கதைகளை நான் இந்த மதிப்பீட்டில் வைக்கவில்லை. மறுவாசிப்புக்குப் பின் இன்னொரு கட்டுரையாக அதை எழுதுவேன்.
மொத்தத்தில் ஒரு நல்ல (அறிவியல்) புனைகதை அறிவியல் வழியே மனிதனின் வாழ்க்கை சம்பந்தமான கேள்விகளை எழுப்பிவிட்டு பதில் தேடுவதை படிப்பவன் கையில் கொடுத்துவிட்டு ஒதுங்கி விடும்.
6174 அறிவியல் புனைகதையா என்று ஆராயும் முன் அதன் களத்தைப் பார்த்துவிடுவோம்.
6174-ன் களம்
கதையுள் நுழையும் முன், வாசகருக்கு கணிதம், அறிவியல், தமிழ் செய்யுள் புதிர்கள் என்று பல துறைகளையும் கலப்படம் செய்யப்பட்டு கவன வாசிப்பை எதிர்பார்க்கிறது.
முதலில் 6174 என்றால் என்ன? கணிதத்தில் Black hole என்ற ஒரு தியரம் இருக்கிறது. உதாரணமாக 8532. இதை கவனித்தீர்கள் என்றால் மேலிருந்து கீழாக இருக்கிறது (8, 5, 3, 2). இதன் reflection 2358 (மேலிருந்து கீழாக). இதைக் கழிக்கவும்: 6174 வரும். இது ஆரம்ப எண். இப்போது 6174-ஐ descending-ஆக எழுதினால், 7641. Ascending-ஆக 1467. கழித்தால் 6174! மீண்டும் ஆரம்ப எண்ணுக்கே வந்துவிட்டோம். இந்த எண் இனி சுழன்று, சுழன்று 6174-க்கு மட்டுமே வரும் (அதாவது மேற்சொன்ன வரிசையில் கணக்குப் போட்டால்)
இதுதான் Black hole. முக்கியமான கணித சூத்திரங்களில் இந்த மாதிரியான எண்கள் வந்தால் தியரி காலி. புறப்பட்ட இடத்திற்கே மீண்டும், மீண்டும் வரும்.
இந்த black hole-தான் கதையின் ஆதாரம். இது மாதிரி புறப்பட்ட இடத்துக்கே வரும் ஆற்றல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? அந்த ஆற்றல் இரு துண்டங்களாக்கப்பட்ட பீடத்திலிருந்து வரும் கதிர்களால் உலகம் என்ன ஆகும்? ஓளியாக விலகிய லெமூரியர்கள் அதை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்? ஏன் 6174 என்ற எண்? அனந்த், ஜானகி மற்றும் அவர்களின் குழு தடுத்தார்களா என்பது கதை.
அடுத்ததாக லெமூரியா: லெமூரிய கண்டம் என்ற ஒரு கருத்து தமிழ் ஆரம்பக் காலத்திலிருந்தே இருக்கிறது (கி.பி. 10). சிலப்பதிகாரம் குமரிக்கண்டம் பற்றி பாடுகிறது. இந்தக் கருதுகோள் மேலும் காலனியாதிக்கத்தில் வலுப்பெற்றது. ஆனால் நிலஆராய்ச்சியாளர்கள் இதை ஆதாரங்களுடன் மறுத்துள்ளனர். தமிழ் இலக்கியத்தில் வரும் குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சியை ‘குமரி நில நீட்சி’ என்ற நூலில் சு.கி. ஜெயகரன் அறிவியல் பூர்வமாக மறுக்கிறார் (காலச்சுவடு).
6174 லெமூரிய நம்பிக்கையொட்டி எழுதப்பட்டது. இன்று லெமூரிய கண்டம் மறுக்கப்பட்டதால் இந்தப் புதினம் வலுவிழக்கிறதா? இல்லை. ஆசிரியர் மிகத் திறமையாக லெமூரியரின் சக்திபீடம் என்ற கோணத்தை மட்டுமே அறிவியல் வழியே கையாள்கிறார். மற்ற முரண்பாடான வரலாறுக்கு செல்லவில்லை.
ஆங்கிலத்தில் இது வகையான புதினங்கள் நிறைய. Dan Brown-ன் பல நாவல்கள் இது போன்ற மர்மங்களை வைத்து எழுதப்பட்டவை (The Da vinci Code), Michael Crichton-ன் Jurassic Park (Theory of Chaos). திரைப்படங்களில் என்றும் இரசிக்கப்படும் Indiana Jones and the Last Crusade, The National Treasure போன்றவை. ஒரு சரித்திர நிகழ்வு/மத நம்பிக்கை தற்காலத்தில் மறுகண்டுபிடிப்பு செய்யும் கதைகள் அலுக்காதவை.
6174 சரித்திரம் + அறிவியல் தளங்களில் பயணிக்கிறது. தமிழுக்குப் புதியது. கணிதம், படிகவியல், வானவியல் இவற்றோடு தமிழ் பாடல்களிலும் விடையை வைத்து விளையாடுகிறது. இதுபோன்ற Brain Teaser-கள் கதையை சுவாரஸ்யமாக்குகின்றன. கதையின் பலம் ஆசிரியரின் எளிமையான விளக்கங்கள். வாசகரை எந்த இடத்திலும் அலுப்பாக்க விடாமல் பல சிக்கலான தியரிகள் எளிய தமிழில் விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கதைக்கு அது மட்டும் போதாது. கதாபாத்திரங்கள், குணாதிசியங்கள் சரியான விகிதத்தில் இருக்கவேண்டும். 6174-ல் எப்படி?
கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மர்மங்களை சுற்றியே அமைவதால் அந்தரங்கமான உரையாடல்கள் அவ்வளவாக இல்லை. இருப்பதும் ஆழமற்றதாக இருக்கிறது. கதை நிகழ்வுகள் தரும் அனுபவங்கள் பாத்திரங்களின் ஆரம்ப நிலையிலிருந்து மேல் அல்லது கீழாகவோ செல்ல வேண்டும். அவ்வகைக் கதைகள் ஒரு புதிய பரிமானமாக மாறுகின்றன. உதாரணமாக காடு-வில் கிரியின் பாத்திரம் ஒரு wide eyed boy-ஆக ஆரம்பித்து அனுபவங்கள் தரும் அடியில் மாறும். சுஜாதாவின் ‘நிலா நிழல்’ முகுந்த் பாத்திரம், ஜீனோ-வின் ஆரம்ப கால குழந்தைக் குறும்புகள் படிப்படியாக மாறி இறுதியில் தன்னைக் கண்டுபிடித்த ரவி, மனோ-வையே அழிக்கப் பார்ப்பது. மற்றொன்று, அ.மி-யின் செகந்திராபாத் கதைகளை ஏறக்குறைய காலவரிசைப்படுத்திப் படித்துப் பார்த்தால் அதில் வரும் ‘நான்’ பாத்திரம், ‘18-வது அட்சக்கோடு’-வில் இறுதிக் காட்சியில் சட்டென்று மாறும்.
அனந்த், ஜானகி சந்திக்கும் இடத்திலேயே அவர்களின் உறவு குறித்த முன் முடிவு படிப்பவருக்கு ஏற்படுவதன் முழு பொறுப்பு ஆசிரியர் அல்ல என்றாலும் அவர்களின் பாத்திர உரையாடல்கள் இன்னும் கூர் தீட்டப்படவேண்டியவை. இருவரும் அறிவுபூர்வமாக மோதிக் கொள்கிறார்கள், ஆனால், அடி மனதில் அவர்களின் நிறைவேறாத காதலின் கோணம் சரியாக வெளிப்படவில்லை. எந்தக் கதையிலும் என்னை ஏதாவது ஒரு பாத்திரத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்க முடியும். இதில் என்னால் முடியவில்லை.
சுதாகரின் முதல் நாவல் என்பதால் இது குறை அல்ல. ஆனால் இனி எழுதப்போகும் நாவல்களில் கவனம் செலுத்தினால் நல்லது.
6174 அறிவியல் புனைகதை?
அறிவியல் புனைகதை பகுதியில் உள்ள விளக்கங்களை வைத்து ஆராய்ந்தால், 6174 அந்தத் தளங்களில் செல்லவில்லை.
1) அறிவியல் தாக்கம் பாத்திரங்களை வலுப்படுத்தவில்லை.
2) இத்தனைத் தேடல்களிலும் மனிதனின் இடம் என்ன என்பதை கதை தீர்மானிக்கவில்லை. மேற்சொன்ன The Cell கதையில் நாயகன் தன் மனைவியின் மீதான அடிமனது வெறுப்பை எதிர்பாராத தருணத்தில் காட்டும் இடம். இதைப் போன்ற அறிவியல் குழப்பத்தில் மனித இயல்பைக் காட்டுவதில் 6174 வெற்றி பெறவில்லை. ஆனால் 6174 மனித இனத்தின் survival-ஐ களமாகக் கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிடவேண்டும்.
3) மிகத் தெளிவாக நல்லவன், வல்லவன், தீயவன் போன்றோர் தீர்மானிக்கப்பட்டு கதை செலுத்தப்படுகிறது.
4) மேம்பட்ட அறிவியல் உபயோகப்படுத்தப்பட்டாலும் அது துப்பறியும் நிலையில் நின்றுவிடுவதால் பாத்திரங்களில் எந்த மாற்றமும் நிகழ்த்துவதில்லை.
5) இறுதியில் சக்திப் பீடத்தைத் தீயகாரியங்களுக்குப் பயன்படுத்த நினைப்பவர்களும் லெமூரிய நம்பிக்கையாளர்கள் என்பதோடு தட்டையாக முடிகிறது.
6) முன்பே சொன்னதுபோல 6174 நிச்சயம் அறிவியல் பூர்வமான ஒரு கேள்வியை எழுப்புகிறது. லெமூரியர்கள் இருந்தார்களா? ஆம் எனில் எவ்வாறாக மானுட இனத்தில் தன் இருப்பிடத்தைத் தேடுகிறார்கள்? ஏன் மானிடரை அழித்து பூமியைப் பெற முயற்சிக்கிறார்கள்? இவ்வகையான கேள்விகளின் தேடுதல் அதே தளத்தில் நகர்கிறது. லெமூரியர்களின் அழிவு நோக்கத்தைப் புரிந்துகொள்வதைவிட அதைத் தடுக்கும் முயற்சியில் மட்டுமே கதை கவனம் கொள்கிறது.
சுருக்கமாக 6174, ஒரு Indiana Jones and the lost world of Lemuria. அனுபவித்துப் படிக்கவேண்டிய, அதே சமயம் மனித உறவுகளின் சிக்கல்களில் மனதை செலுத்தத் தேவையில்லாத கதை. கதை அமைப்பு திருடன், போலிஸ் வகையில் யார் முதலில் புதிர்களை விடுவிக்கிறார்கள் என்பதோடு முடிந்துவிடுகிறது.
அது ஆசிரியரின் தவறும் அல்ல. அவரின் குறிக்கோள் சுவாரசியமான அறிவியல் தகவல்களை கதையென்னும் வாழைப்பழத்தில் வைத்து வாசகனை இழுக்க முயற்சி செய்கிறார். அதில் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கிறார். மற்ற
தகவல்களில் தெரிவது பிரமிப்பான உழைப்பு. உதாரணமாக கோலங்களை வைத்து சக்திப்பீடத்தின் மற்றொரு துண்டு எங்கே இருக்கிறது என்பதை ஜானகி கண்டுபிடிப்பது, குரல் ஒலிகள் மூலம் சடகோபன் செய்யும் ஆராய்ச்சி என்று தலையை சுற்றி மூக்கைத் தொட்டாலும் தகவல்கள் களஞ்சியமாக அதே சமயம் எளிமையான விளக்கங்கள் வழியே கதையை நடத்துகிறார். ஆனால் அறிவியல் புனைகதை என்று சொல்ல இவை போதா.
பாக்கெட் நாவல் போல நுனிப்புல் இல்லாமல் படிப்பவரை மேலும் ஆர்வத்தைத் தூண்டி நாவலில் உள்ள தகவல்களைத் தேட வைக்கும் முயற்சி. சுதாகர் அதை முதல் நாவலிலேயே கைக் கொண்டிருக்கிறார். புத்தகத்தைப் படித்தவுடன், லெமூரிய கருத்தாக்கத்தைப் பற்றியும், கணிதப் புதிர்களைப் பற்றியும் உங்களைத் தேடவைக்கும். அதுவே இதன் வெற்றி.
புதினம்./அறிவியல் புதினம்… இந்த வரையறைகள், எல்லைகள் மாறும், மங்கும். தமிழில் , ஜெயமோகன் “அறிவியல் புனைகதைகள் எதிர்கால நிகழ்வுகள், விண்வெளி வாசிகள் , தலைசுற்றவைக்கும் தொழில்நுட்பம் என்பதை விட, பண்பாட்டையும் கலாச்சாரத்தையும், இருத்தலையும் கொண்டதாக அமையவேண்டும்.” என்கிறார், அவரது கட்டுரை http://www.jeyamohan.in/?p=7605 ஒன்றில் இவ்வாறு கூறுகிறார். “நாம் எழுதும் அறிவியல்புனைகதைகள் நம்முடைய சொந்த அறிவியலை இன்னமும் நுணுகி கையாளக்கூடியவையாக இருக்கவேண்டும். எப்படி நம் இலக்கியம் நம் பண்பாட்டில் இருந்து உருவாகின்றதோ அப்படி நம் அறிவியல்புனைகதைகளும் நம் பண்பாட்டில் இருந்து உருவாக வேண்டும்.” இது சுஜாதாவின் எதிர்கால மாற்றம், அறிவியலால் இருத்தலில் வரும் குழப்பத்திலிருந்து மாறுபட்டது. இரா.முருகன் அவர்களது கருத்துக்களை , விளக்கங்களை எதிர்நோக்கியிருக்கிறேன். அது வேறுவிதமாக இருக்கும் என்ற என் முன்முடிவுகளில் எந்த மாற்றமும் இருக்காது.
வெளிநாட்டுக் கதைகளில், சற்றே ஆசிய கலாச்சாரம் சார்ந்த, ஆர்தர் சி க்ளார்க்கின் ஃபெர்மாட்’ஸ் லாஸ்ட் தியரம் (Fermat’s last theorem)எடுத்துக்கொண்டால் மனித உறவுகளின் சவால்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வரையே வருகிறது. (ராமா தொடர்கள் சற்றே மாறுபட்டவை.) மனிதனின் குறைபாடுகளே கதைகளாக நீள்கின்றன. அறிவியல் அதற்குத் துணை போகிறது. இந்த அளவில் பார்க்கும்போது அறிவியல் , மனித உணர்வுகள், உறவுகளின் சிக்கல்கள் எந்த அளவு இருக்கவேண்டுமென்பதல்ல ,எது தீவிரமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்பது முக்கியமாகிறது. பெர்மாட்டின் லாஸ்ட் தியரத்தில் மனிதம் சில நேரமும், அதன்பின் அறிவியலும் தூக்கி நிற்கும்.
ஒரு வரையறுத்தலினுள் அறிவியல் புதினத்தை அடைப்பதில் சிக்கல்கள் இருப்பதாகப் படுகிறது. பண்புகளின் ஒரு கணம் என இதனை எடுத்துக்கொண்டால், அறிவியல் பண்புகளும், மனித உறவுகளும் உட்கணங்களாக இருக்கும். எப்படி நீலம் என்ற ஒரு வண்ணத்தை வரையறுக்க முடியாதோ அதே போல பண்புகளின் கூட்டையும் வரையறுப்பது கடினம் என்றே கருதுகிறேன். எனவே ஒரு டெம்ப்ளேட்-க்குள் அடைக்க முயன்று , அடைபடாவிட்டால், இது வேறு வகை என்று சொல்ல முடியாது என்பது என் கருத்து.
நீங்கள் சரியாகச் சொன்னது போல, லெமூரியாவின் இருத்தல் முக்கியமல்ல. எந்த அளவுக்கு அந்தக் கற்பிதம் கதையை நகர்த்த உதவும் என்பதே நாம் காண வேண்டியது. கதாபாத்திரங்களை உளவியல் அடிப்படையில் மேலும் சிந்திக்கவும், உரையாடவும் செய்த பத்திகள் இன்னும் இருக்கின்றன. கதையின் நீளம் கருதியும், கதையோட்டத்தில் அவை ஏற்படுத்தும் தடுப்புகளையும் கவனத்தில் கொண்டு வெட்டிவிட்டேன். இதே போல் அறிவியல் தளங்கள் பலவற்றையும் சுருக்கவும், வெளியே எடுத்துவிடவும் நேர்ந்தது. எழுதுவதை விட எடிட்டிங்க் வேலை நிறையச் செய்த ஆயாசம் இன்னும் என்னில்.!
நல்லவன் கெட்டவன் என்ற தரம்பிரித்தலை விட, மனித மனத்தின் குறைகளையே படம்பிடிக்க விரும்பினேன். லெமூரியனாகத் தங்களை மனத்தில் சித்தரித்தவர்கள், மாயத்தின் சுகத்தில் நிஜத்தைச் சிதைக்க விரும்பும் வெறியே கெட்டவர்களாக அவர்களை ஒருங்கிணைக்கிறது. அவரிலும், ஒருவரை ஒருவர் வஞ்சம் தீர்ப்பதும் தன் வெறியே சிறந்ததெனச் சிந்திப்பதுமே அக்குறைகளின் பதிவுகள். ”மனிதன் குறைபாடுள்ளவன். ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு விலை உண்டு” என்பதையும் கதையில் கொண்டுவந்ததாக நினைவு. ஒரு வேளை வெட்டியிருக்கலாம்.
எடுத்துக்கொண்ட அறிவியல் கோட்பாடுகள் நிஜமாக இருக்கவேண்டும். சும்மா ஒரு ஒளி இங்க இருந்து அங்க போச்சு, திரும்ப வந்தது என்பதை விட, இந்தப் பாதைகள் சாத்தியமா என்றும், விண்கற்கள் நிற்குமிடங்கள் நிஜமாகவே காலியாக இருக்கிறதா என்பதும் சோதித்தேன். இது போலப் பல இடங்கள். கதைக்கு மட்டுமல்ல, கதையின் அறிவியலுக்கும் நாம் விசுவாசமானவர்களாக இருத்தல் அவசியம். அதைவிட, வாசகர்களைக் கதை ஏமாற்றாமல் இருப்பது முக்கியம்.
6174 is also called as kaprekar constant. I read this 5th or 6th standard time, in kokulam children magazine..
http://en.wikipedia.org/wiki/6174_(number)
when i read the book following S.Ramakrishnan’s recommanation, i was simply astonished the with the crisp writing. actually i felt upset to note there was no healthy apprecition from magazines.Thanks fr ur review sir.Kindly encourage new writers