ஜாய்லேண்ட் – ஸ்டீஃபன் கிங்

ஸ்டீபன் கிங்கின் புத்தகங்கள் அதிக அளவில் விற்கின்றன, அவை திரைப்படங்களாக வெளிவந்து வெற்றி பெறுகின்றன என்பதை வைத்து அவரை சாதாரண வணிக எழுத்தாளராக நினைத்துவிட முடியாது.

முழுக்க முழுக்க நாஸ்டால்ஜியாவில் தோய்ந்த ஜாய்லேண்ட் நாவலின் பிற்பகுதியில் காதல் தோல்வியின் வலியிலிருந்து இன்னும் மீளாத நாயகன் மஸ்குலர் டிஸ்ட்ரோஃபியாவால் மரண தேதி குறிக்கப்பட்டுவிட்ட ஒரு சிறுவனையும் அவனது தாயையும் ஒரு ஜயண்ட் வீலில் அழைத்துச் செல்கிறான். அவர்கள் உச்சத்துக்கு வரும்போது சிறுவனின் முகம் வெளிறிப் போயிருக்கிறது, கண்கள் அதிசயத்தைக் கண்ட மகிழ்ச்சியில்  விரிந்திருக்கின்றன. நாயகன் டெவின்னின் தொடை சுடுகிறது – அங்கே அந்தச் சிறுவனின் அம்மா கை  வைத்திருக்கிறாள். அப்போது, டெவின்னை நோக்கித் திரும்பும் சிறுவன், என் பட்டத்தின் பறத்தல் உணர்வுகள் எனக்கு இப்போது புரிகின்றன என்கிறான். அந்த உணர்வு எனக்கும் அப்போது புரிந்தது என்று நம்மிடம் சொல்கிறான் கதைசொல்லி டெவின்.

1973ல் நடக்கும் இந்தக் கதையில் இவர்கள் இருப்பது தீம் பார்க் மாதிரியான ஒரு கேளிக்கை வளாகத்தில். இது நம்மூர் மாநகராட்சி எக்ஸிபிஷன் மாதிரி இருக்கிறது : ஜயண்ட் வீல், பேய் மாளிகை (உண்மையாகவே உயிருள்ள ஒரு  ஆவியுடன்), ஜோசியக்காரி (‘பத்து பர்சண்ட் சரியாகச் சொல்பவள்’), மற்றும் பல.  இருபத்தியொரு வயது இளைஞன் டெவின் வேலை செய்யும் இடம் இது. அவனது இதயம் ஏற்கனவே காதல் தோல்வியால் உடைந்திருக்கிறது, அதனால்தான் கல்லூரிக்குச் செல்லாமல் இங்கே வேலை. தன்னைக் கைவிட்ட வெண்டியின் நினைவுகளை மறக்க அந்தச் சிறுவனும் டெவின்னைவிட பத்து பன்னிரெண்டு வயது மூத்தவளான அவன் தாயும் உதவுகிறார்கள்.

joyland

ஜாய்லேண்டின் நாயகன் தன் காதலியின் நினைவுகளால் பிணைக்கப்பட்டிருக்கிறான். சிறுவன் சக்கர நாற்காலியில். அவனது அம்மா தாய்ப்பாசத்தில். இவர்கள் மூவருக்கும் நெருக்கம் ஏற்படுவது கடற்கரையில். ஏசுவின் முகம் வரையப்பட்ட பட்டத்தை வைத்துக் கொண்டு அதைப் பறக்கவிடத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் பறத்தலின் வித்தையை டெவின் கற்றுக் கொடுக்கும்போது – அப்போது அந்தச் சிறுவனின் முகத்தில் இருந்தது போன்ற அன்பையும் ஆனந்தத்தையும் எப்போதும் தான் பார்த்ததில்லை என்கிறான் அவன், – “அம்மா, இது உயிரோடு இருப்பது போலிருக்கிறது,” என்கிறான் சிறுவன். “ஆமாம்,” என்று ஆமோதித்துக் கொள்கிறான் டெவின். “அங்கே வானில், அது எங்கிருக்க வேண்டுமோ அங்கிருக்கும்வரை, உயிரோடுதான் இருக்கிறது”.

கதையின் துவக்கத்தில், மூடப்பட்டிருக்கும் ஜாய்லேண்டில் முதல் முறை நுழையும் டெவின்னுக்கு அங்கிருக்கும் ஜயண்ட் வீலில் பயணிக்க இலவச அனுமதிச் சீட்டு கொடுக்கப்படுகிறது. “இதில் சுற்றி வரும் அனுமதி கிடைத்தால் நீ சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டாய் என்று அர்த்தம். வானத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கே அளிக்கப்படுகிறது,” என்கிறான் அதை நிர்வகிப்பவன், டெவின்னுக்கு ஏதோ ஞானஸ்நானம் கிடைத்துவிட்ட மாதிரி. அதில் பயணிக்கும் டெவின் உச்சத்திலிருந்து ஜாய்லேண்ட்டைப் பார்க்கிறான். குழந்தைகள் சேர்த்து வைத்த பொம்மைகள் போல் கட்டங்களாய்த் தெரிகிறது ஊர், அதன் நான்கு திசைகளிலும் தேவாலயத்தின் கோபுரங்கள் உயர்ந்து நிற்கின்றன.

ஜீசஸ் படம் வரையப்பட்ட பட்டம் கதையில் சும்மா வரவில்லை. ஜாய்லேண்ட் மேலே எங்கேயோ இருக்கிறது. கீழே இருக்கும் ஜாய்லேண்ட் துரோகங்களின் கண்ணீர் கறைபடிந்த, மீட்சிக்குக் காத்திருக்கும் குறுகிய காலச் சிரிப்பு.

oOo

பேயோனின் இன்ஸ்பெக்டர் குமார் கதைகளைப் பழக்கப்படுத்திக் கொள்வது ஸ்டீஃபன் கிங்குக்குக் கணிசமான அளவில் நன்மை செய்யலாம். கிங் என்றில்லை, மர்மக் கதைகள், துப்பறியும் கதைகள், காதல் கதைகள், பேய்க்கதைகள் என்று சகல வகைமாதிரிகளுக்கும் இலக்கிய அட்டை போட நினைப்பவர்கள் எவருக்குமே இன்ஸ்பெக்டர் குமார் கதைகள் நல்ல வழிகாட்டிகளாக இருக்கும்.

காரணம், துப்பாக்கி இருந்தால் குண்டு பாய வேண்டும், பிணம் இருந்தால் குற்றவாளி இருக்க வேண்டும், நீதி இருந்தால் நியாயம் இருக்க வேண்டும் – என்பதான வகைமாதிரித்தன நிர்பந்தங்களை இன்ஸ்பெக்டர் குமார் கதைகள் உடைக்கின்றன. இவற்றில் பிணமென்ன, இடியே விழுந்தாலும் நாம் குற்றவாளி யார் என்று கவலைப்படுவதில்லை, குமாரின் கழுகுப் பார்வை யார் கைகளில் விலங்குகளைப் பூட்டும் என்றுதான் தேடுகிறோம். இன்ஸ்பெக்டர் குமார் விஷயத்தில் பேயோன் நம்மை ஏமாற்றுவதில்லை – இக்கதைகள் மந்திரவாதியின் தொப்பியிலிருந்து வெளிப்படும் முயல்களின் தர்க்கத்துடன் முடிவுகளை நோக்கிச் செல்கின்றன.

ஆனால் ஜாய்லேண்டிலோ ஒவ்வொரு கதவின் பின்னாலும் ஒரு ஸ்ப்ரிங் இருக்கிறது. எல்லாக் கதவுகளும் மூடப்பட்ட பின்னர்தான் இதைத் தெரிந்து கொள்கிறோம். நாம் சாதாரணமாகக் கடந்து சென்ற குண்டும் குழிகளும் நிறைந்த பாதையைப் பின்னர் அரை மணி நேரம் கழித்து கண்ணி வெடிகள் இருக்கும் பாதையாக அறிந்து கொள்வதைப் போல, பாத்திரங்களின் பிற்கால எதிர்பாராத நடவடிக்கைகளுக்கான நியாயங்களை முன்கூட்டியே கிங் பதிவு செய்து வைத்திருப்பது ஒரு பெரும் துரோகச் செயலாக இருக்கிறது.

கதைச் சுருக்கத்தைச் சொல்லாமல் இப்படி எழுதிக் கொண்டிருந்தால் எதுவும் புரியாது.

டெவின் வேலைக்குச் சேர்ந்த இடத்தில் பல மர்மங்கள். ஜோசியக்காரி இவனது கடந்த காலத்தைத் துல்லியமாகச் சொல்லி எதிர்காலம் குறித்து சில எச்சரிக்கைகள் தருகிறாள். பேய் மாளிகையில் உள்ள பேய்  கொலையுண்ட ஒரு பெண்ணின் ஆவி. பல திருப்பங்களை எதிர்கொள்ளும் கதைப்போக்கில் ஜோசியக்காரி சொன்னதெல்லாம் ஏறத்தாழ அவள் சொன்ன மாதிரியே நடக்கிறது, நம் கதாநாயகனின் உடைந்த இதயம் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு குணமாகிறது, ஆவிக்கு அமைதி கிடைக்கிறது, கொலையாளியின் முகத்திரை கிழிக்கப்படுகிறது. இத்தனையும் நாற்பதாண்டுகளுக்குப் பின்னர், 2012ல் வாழும் ஒருவனின் நினைவுகளாகச் சொல்லப்படுகின்றன.

பேய்க்கதையா, துப்பறியும் கதையா என்று வரையறுக்க முடியாத கதை. ஏன், பிணங்களும் பேய்களும் இல்லாவிட்டால் காதல் கதை என்றும்கூட சொல்லலாம். முக்கிய பாத்திரங்கள் பலரும் ஏதோ ஒரு மீட்சிக்குக் காத்திருப்பதால் ஆன்மிகக் கதை என்றும், இன்ன பிறவும் சொல்லலாம்.

நாற்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட நினைவுகளை, வயசுக்கு வரும் பருவ காலக் கோளாறுகளை, கண்ணீரும் சிரிப்புமாக, முதிர்ச்சியும் கன்னிமையுமாகச் சொல்லும் கதை. இந்தக் காதல் உடைந்த இதயத்தைச் சுமந்து கொண்டு திரிவது இதெல்லாம் நன்றாக வந்திருக்கிறது. ஹாப்பி ஹோவி நாய் உடுப்பில் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்யும் கதாநாயகனின் கொண்டாட்டம், அந்தச் சிரிப்பின் பின்னாலிருக்கும் கண்ணீர், வலி இதெல்லாம் அசாத்திய கற்பனை, கிங் ஒரு ஜீனியஸ் என்பதில் சந்தேகமில்லை. அதே போல் இன்றுள்ள இயந்திரமயமாக்கப்பட்ட, நிறுவனமயமாக்கப்பட்ட, உலகமயமாக்கப்பட்ட, வசவுமயமாக்கப்பட்ட தீம் பார்க்குகளுக்கு மாறான  அந்தக்கால எக்ஸிபிஷன் கேளிக்கைகளையும் அதன் நடத்துனர்களையும் நினைவூட்டுவதில் கிங் வெற்றி பெறுகிறார்.

stephenkingஇந்த நாவலில் கிங்கின் வெற்றி நாஸ்டால்ஜியாவின் வெற்றி. அவரது கதையின் வெற்றி இன்பங்களை, கதாநாயகனின் இன்பங்களை மட்டுமல்ல, பிளாட், சஸ்பென்ஸ், த்ரில், க்ளைமாக்ஸ் போன்ற வாசக இன்பங்களையும் தள்ளிப்போடுவதில் கிடைக்கும் வெற்றி – பாதி கதைவரை நம்மால் இது பேய்க் கதையா, காதல் கதையா, குற்றப் புனைவா என்று எதுவும் தீர்மானிக்க முடிவதில்லை, நினைவுகளைத் தாண்டி கதை எங்கும் செல்வதில்லை. இதனால் எத்தகைய முடிவை எதிர்பார்ப்பது, எந்தத் தடயங்களைக் குறித்து வைத்துக் கொள்வது என்று கணிக்க முடிவதில்லை. ஆனால் வாக்களிக்கப்பட்ட இன்பங்கள் கதையின் முடிவில் கதாநாயகனுக்குக் கிடைத்தாலும், நமக்கு ஏமாற்றப்பட்ட உணர்வே இருக்கிறது. அதற்கு யாரையாவது குற்றம் சொல்ல வேண்டுமென்றால், deux ex machina என்று சொல்வார்களே, அந்த உத்தியைதான் சொல்ல வேண்டும்.

இப்புத்தகத்தின் மதிப்பீடுகள் பலவற்றிலும், கதையின் துவக்கத்தில் ஜாய்லேண்டின் நிறுவனர் ஆற்றும் உரையை ஸ்டீபன் கிங்கின் மிஷன் ஸ்டேட்மெண்ட் மாதிரியே மேற்கோள் காட்டுகின்றனர் விமரிசகர்கள்-

இது மோசமாக உடைந்த உலகம், போர்களும் குரூரங்களும் அர்த்தமற்ற துயரங்களும் நிறைந்த உலகம். இதில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கான பங்கான சோகமும் உறக்கமற்ற இரவுகளும் அளிக்கப்படுகின்றன. உங்களில் ஏற்கனவே இதை அறியாதவர்கள் இருந்தால் அதை அறிந்து கொள்வீர்கள். மானுட யதார்த்தத்தின் துயரமான, ஆனால் மறுக்கமுடியாத இந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதானால், உங்களுக்கு இந்தக் கோடைக் காலத்தில் ஒரு விலைமதிப்பற்ற பரிசு வழங்கப்பட்டிருக்கிறது – நீங்கள் கொண்டாட்டத்தை விற்பதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்…” என்று பேசுகிறார் ஜாய்லேண்ட்டின் நிறுவனர் பிராட்லி ஈஸ்டர்ப்ரூக். அவரே, “இது வேறொரு உலகம். இதற்கென்ற பிரத்தியேகமான பழக்கங்களும் மொழியும் உள்ளது,” என்றும், “நாம் கார்களை விற்கவில்லை. நாம் நிலத்தையோ வீட்டையோ ஓய்வூதிய நிதியையோ விற்கவில்லை. நமக்கு அரசியல் அஜெண்டாக்கள் இல்லை. நாம் கொண்டாட்டத்தை விற்கிறோம். அதை மறக்க வேண்டாம்,” என்றும் சொல்கிறார். நல்ல விஷயம்தான். இது கிங்கின் எழுத்துக்கும் பொருந்தினால் ரொம்ப சந்தோஷம்.

ஆனால் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். “ஜாய்லெண்ட்டின் விளையாட்டுகள் அனைத்தும் நேர்மையானவை,” என்பதுதான் ஜாய்லேண்டின் சந்தோஷங்கள் ஏமாற்று வித்தைகள் அல்ல என்பதற்கான ஒரே நியாயம். பொய்கள் நம்மை மகிழ்விப்பதற்காகச் சொல்லப்படலாம். ஆனால் கேளிக்கை வளாகமானாலும் சரி, புனைவானாலும் சரி, பொய்கள் சுய லாபத்துக்காக, தம் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள, சொல்லப்படுவதில் நியாயமில்லை. உச்சகட்டத்தை நோக்கிச் செல்லும்போது ஜாய்லேண்ட் கதையின் போக்கை விட்டு விலகி, வகைமாதிரியின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் சம்பவங்களாக நிறைந்து விடுகிறது. உண்மையைச் சொன்னால், கதையைப் படித்து முடித்ததும் ஒரு நல்ல கதை தரைதட்டிப் போன உணர்வே கிடைக்கிறது.

ஒரு சாதாரண பொழுதுபோக்குத் த்ரில்லருக்கு இத்தனை பிலாக்கணமா என்று நினைப்பவர்கள் ஏன் இதை ஒரு சாதாரண பொழுதுபோக்குத் த்ரில்லராக நினைக்கிறோம் என்று யோசிக்க வேண்டும்.

oOo

நாஸ்டால்ஜியா தொலைக்கப்பட்ட பரம்பரை வைரம் போல – இல்லாதபோதும் வெகுமதி கொண்டு விளங்குவது. அதைச் சூதாட்டத்தில் தொலைப்பது போல் வகைமாதிரியின் தேவைகளுக்கான பரபரப்பில் கதையை ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறார் ஸ்டீபன் கிங் என்பதுதான் நம் ஆதங்கம் – கதையை அதன் நிதானமான போக்கில் செல்ல விட்டிருக்கலாம். அப்போது நாம் இது போன்ற உச்சங்களைத் தொட்டிருக்க முடியாது, கதை பொட்டிலடித்தாற் போன்ற துல்லியமான முடிவுக்கு வந்திருக்காது – ஆனால், இன்னும் நியாயமான ஆழங்களைத் தொட்டிருக்கலாம். ஸ்டீஃபன் கிங், வகைமாதிரியின் எல்லைகளுக்குள் சிக்கிக் கொள்ளவில்லை, இது ஒரு நல்ல முயற்சி என்பதாக நான் வாசித்த மதிப்புரைகளில் பலவும் இருக்கின்றன. ஏறத்தாழ எல்லாமே இந்த நாவலைப் பாராட்டுகின்றன. உண்மை. ஆனால் –

இந்தப் பரந்த உலகில் நமக்கு அளிக்கப்பட்ட ஆறடி மண்ணில், காலத்தின் இருபத்து நான்கு மணி நேரப் பொழுதில் நமக்கு அளிக்கப்பட்ட அரை நொடி ஆனந்தத்தில் நாம் பறக்க விடும் பட்டங்களில் எத்தனை கயிற்றை அறுத்துக் கொண்டு மேகங்களைக் கடந்து செல்கின்றன? கயிற்றுக்குக் கட்டுப்பட்ட பட்டமாய் அனுமதிக்கப்பட்ட காலம் பறந்துவிட்டுத் தரைதட்டும் ஜாய்லேண்ட் அதன் எல்லைகளுக்குள் பிரமாதமான நாவல்தான், சந்தேகமில்லை. ஆனால் அது வகைமாதிரியின் தளைகளை அறுத்துக் கொண்டிருந்தால், வானத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு நமக்கும் கிடைத்திருக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.