பூனை

octavio_paz_Juan_García_Ponce_Encuentros

பூனை ஒரு நாள் தோன்றியது. அதன் பிறகு அங்கேயே எப்போதும் இருந்தது. குறிப்பிட்ட எந்த ஒரு நபருக்கோ,  அடுக்ககத்திற்கோ சொந்தமாக இல்லாமல்  முழுக் கட்டிடத்திற்கே  சொந்தமானது போல இருந்தது. அதன் நடத்தைப் பாங்கிலிருந்து அது இந்தக் கட்டிடத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றும், மாறாக, கட்டிடமே அதைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கும் ஒருவர் வரக் கூடும். அவ்வளவு கச்சிதமாக அதன் உருவம்  நடைக்கூடங்கள்  மற்றும் படிக்கட்டுகளின் பொதுவான தோற்றத்தின் மீது படிந்து இருந்தது. டி அதை அப்படித் தான் பார்க்க ஆரம்பித்தான், பிற்பகலில் தன் அடுக்ககத்தை விட்டுச் செல்லும் போதோ, சில சமயம் இரவில் திரும்பி வரும் போதோ : சாம்பல் நிறமாய், குட்டியாக,  இரண்டாவது மாடிக் கூடத்தில் பாதி வழியில் அடுக்ககத்திற்கு வெளியே உள்ள மிதியடி மீது நன்றாக நீட்டிக் கொண்டு.  டி முதற்படிவழி  ஏறி நடைக்கூடத்திற்குத் திரும்பும் முன், பூனை, சாம்பல் நிறக் குட்டியாய், இன்னமும்  இளமையானதொரு பூனையாய், தன் தலையை அவனை நோக்கி வட்டமாகத் திருப்பி, சாம்பல் நிற மென்மயிரின் ஊடே விந்தையானதொரு மஞ்சளாக எரியும் தனது கண்களுக்குள்ளே  நோக்கும்படி அவனை அழைக்கும். அதன் பின் அது கண்களை ஒரு கணத்திற்குப் பாதி விழி மூடிக் கொள்ளும், அவை மஞ்சள் ஒளியாலான வெட்டுத்துளைகளாக ஆகும் வரை. பிறகு டியின் பார்வையைப் புறக்கணித்துத் தலையைத் திருப்பிக் கொண்டு விடும். இருந்தும் கூட  டி அதைப் பார்த்துக் கொண்டே இருப்பான்,   தனிமையான அதன் பலவீனத்தால் நெகிழ்த்தப்பட்டு, அதன் அமைதி குலைக்கும் இருப்பின் பாரத்தால் அசௌகர்யப்பட்டு. வேறு சில சமயங்களில் இரண்டாவது தளத்தில் அல்லாமல் அகன்ற புறக்கூடத்தில் டி அதை எதிர்கொள்வான், அண்டும் அன்னியக் காலடிகளின்  முன்னறிக்கையை அது கவனத்திற் கொள்ளாமல்,  ஒரு மூலையில் சுருண்டு கொண்டோ, அல்லது சுவற்றை உடம்பு அணைத்துக் கொள்ளும் நெருக்கத்தில் மெதுவாக நடந்து கொண்டோ  இருக்கும். இன்னும் வேறு சில சமயங்களில் படிக்கட்டு வழிகளில் தோன்றும், இரும்பாலான கைப்பிடிச்சுவர்களில் பிணைந்து கொண்டு. பிறகு அது படிகளின் வழியாகக் கீழேயோ மேலேயோ செல்லும், டியிற்கு முன்னால். ஆரம்பிக்கையில் அவனைத் திரும்பிப் பார்க்காமல் பின்னர் அவன் அதைக் கடந்து செல்லப் போகும் தருணத்தில் அவனுடைய பாதையிலிருந்து விலகி, மீண்டும் கைப்பிடிச்சுவர்களில் பிணைந்து கொண்டு விடும். கூசி, பயத்துடன் இருப்பினும், அதைக் கடந்தவுடன் அதன் மஞ்சள் பார்வை தன் முதுகை ஊடுருவுவதை அவனால் உணர முடிந்தது.

அவன் குடியிருந்த கட்டிடம்  பழையதானாலும் நன்றாகப் பேணப்பட்டிருந்தது. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன், பிற்சேர்க்கைகளை மதித்து , அவற்றிற்கான இடத்தையும் ஒதுக்கிக் கௌரவித்த ஒரு விவேகமிக்க கட்டிடக் கலையால் கட்டப்பட்டிருந்தது.  அதன் அடிப்படைப் பண்புகளாலேயே காலமுரண்பட்ட ஒன்றாக  ஆகி இருந்தாலும்,  அது தன்னுடைய அமைந்தடங்கிய அழகை இன்னமும் இழக்கவில்லை. கீழ்த்தளத்திலுள்ள முகப்பறை, படிக்கட்டு மற்றும் நடைக்கூடங்கள் இவை அனைத்தும் கட்டிடத்தில் மிகப் பெரிய அளவில் இடத்தை நிரப்பிக் கொண்டு தங்கள் பெருமிதமான காலம் கடந்த முத்திரையை மொத்தக் கட்டிடத்தின் மீது பதித்தன. பூனை தோன்றியதற்குச் சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு முன்னதாகவே தரைத்தளத்தில் உள்ள காப்பாளர்களுக்கான வாய்ப்பிடத்தில் தங்களுடைய குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் நெரிசலில் தங்கியிருக்கும் காப்பாளர்களின் கணிக்க இயலாத, வந்து செல்லும் குடியிருப்பாளர்களை சந்தேகப் பார்வையுடன் கண்காணிக்கும் மனத்திட்பமானது, முகப்பறையிலிருந்த இரு கனமான, நைந்து போன வெல்வெட் மெத்திருக்கைகளையும், சிறியதானாலும் உறுதியான மரத்தாலான ஒரு எழுதுமேசையையும் அப்புறப்படுத்தியது. கட்டிடத்தின் காலத்தால் தீண்டப்படாத சம்பிரதாய குணத்திற்கு அழுத்தம் தந்த அந்த இருக்கைகளின் இடத்தைப் பூனை தற்போது ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது போல் டியிற்குப் பட்டது. ஏதோ ஒரு வகையில் அதன் விளக்க முடியாத இருப்பு கட்டிடத்தின் தொனியுடன் நன்றாக இசைந்தது. முக்கியமாக,  அவனுடைய அடுக்ககத்திற்கு அடுத்த அடுக்ககத்தில் வசித்த  இளம் ஜோடி ஒன்று படிக்கட்டுத் தளங்களை ஓளிர்வூட்டுவதற்காக வைத்திருக்கும் அகலமான இலைகளுடைய வெப்பமண்டலச் செடிகளால் நிரப்பப்பட்ட பெரிய, உருண்டையான  மட்கலங்களுக்கு ஊடே  டி பூனையைப் பார்த்ததே இல்லை. தோட்டமொன்றின் தொலவான முன்நினைவைப் பூனை விரும்பவில்லை போலும்.  ஆக, முகப்பறையின் காலியான இடத்தை நிரப்பிய இரு மெத்திருக்கைகளும் எழுதுமேசையும் எவ்வாறு பழகி இருந்னவோ அதே போல இப்போது அவற்றிற்காக ஏங்கிக்கொண்டே, பூனையை திடீரென்று எதிர்கொள்வதும், அதன் வழக்கமான அலட்சியப் பார்வையை பெற்றுக்கொள்வதும், அது யாருடையது என்பதைப் பற்றி யோசிக்காமல் தன் முன், மேலும் கீழும் அது செல்வதைப் பார்த்துக் கொண்டிருப்பதும்,  டியிற்கு பழகி விட்டது.

டி தன் அடுக்ககத்தில் தனியாக வாழ்ந்தான். அதில் அவனுடைய சுலபமான உத்தியோகம் எடுத்துக் கொள்ளாத நேரத்தைச் செலவழித்தான். இயந்திரத்தனமான வேலையை ஒவ்வொரு நாளும் சில மணி நேரம்  புரிவதற்கு ஈடாக,  வாழ்வதற்குப் போதுமானதை அவ்வுத்தியோகம் அவனுக்கு அளித்தது. ஆனால் அவனது தனிமை முழுமையானதல்ல: அவனுடைய நண்பி அநேகமாக ஒவ்வொரு நாளும் அவனைப் பார்க்க வந்து வாரயிறுதிகளில் அடுக்ககத்தில் தங்கி விடுவாள்.  அவர்கள் இருவரும் நன்றாகவே பழகி வந்தார்கள். இதை இப்படிக் கூடச் சொல்லலாம், அதற்கு முக்கியத்துவம் ஏதாவது இருக்குமானால், அவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள் என்று. ஆனால் தங்கள் உடல்களால் கட்டுப்படுத்தப்பட்டு, முடிவு செய்யப்பட்ட ஒரு தளத்தில்.  குறைந்தபட்சம் இது அவர்கள் இருவருக்கும் போதுமான மன நிறைவை அளித்தது போலிருந்தது. ஞாயிறு காலைகளில் அவர்கள் முன் நீண்டிருக்கும் சோம்பலான  நேரங்களில், அந்த சின்ன அடுக்ககத்தின் கிட்டத்தட்ட  ஒவ்வொரு கோணத்திலிருந்தும், அவனுடைய நண்பியின் நிர்வாணமான உடல் படுக்கையில் சோம்பிப் படுத்திருப்பதையும், அது ஒரு கவர்ச்சியான நிலையிலிருந்து மற்றொன்றிற்குப் பெயருவதையும் பார்ப்பதில் இருக்கும் இன்பத்தை அனுபவிப்பதில் டி ஒரு போதும் சலிப்படையவில்லை.  அவள் இவ்வாறு செய்தது நிர்வாணத்தை இன்னமும் வலியுறுத்தியது. மேலும், அவன் அவளை ரசித்துக் கொண்டிருந்ததையும், அவள் உடலின் வெளிப்பாடு அவனுக்களித்த நிறைவையும் அவள் அறிந்திருந்ததால் அந்த  நிர்வாணம்  செருக்குற்றது.

டி தனிமையில் அவனுடைய நண்பியை நினைவு கூர்கையில் அவளை அவ்வாறே கற்பனை செய்து கொள்வான், படுக்கையில் சோம்பலாக  நீட்டிக் கொண்டு, அவளை மூடியிருக்கக் கூடும் படுக்கை விரிப்புகள் எப்போதும் போல, அவள் தூங்கியிருந்தாலும் கூட, பின்னுக்குத் தள்ளப்பட்டு, அவள் உடம்பை முழு சந்தோஷத்துடன் அவனுடைய ஆழ்ந்த சிந்தனைக்காக வழங்கிக் கொண்டு….ஏதோ அவன் ரசிப்பதற்காகவே அது இருப்பது போல, உண்மையில் அது அவளுடையது அல்லாதது போலும், அவனுக்கும், ஒருக்கால் அறையில் உள்ள அறைகலன்களுக்கும் கூட,  ஏன் ஜன்னல் வழியாகத் தெரியும் வீதியில் இருக்கும் மரங்களின் கிளைகளுக்கும், அவற்றின் ஊடே பிரகாசமாக பரவி வரும் வெயிலொளிக்கும்தான்  அந்த உடல் சொந்தமானது போலவும் இருந்தது.

cats_el_gato_juan_garcía_ponce

சில சமயம் அவளுடைய முகம் தலையணைக்குள் ஒளிந்திருக்கும்.  அவளுடைய  இருண்ட செந்தவிட்டு முடி, நீளமாகவோ குட்டையாகவோ அல்லாது, முகத்தின் அம்சங்களுடன் சம்பந்தமற்று கிட்டத்தட்ட அந்தரங்கமே இல்லாமல், அவளுடைய நீண்ட முதுகின் உச்சியில் கவிந்து, இடுப்பின் தாராளமான  வளைவிலும், பிட்டத்தின்  உறுதியான உருக்கோட்டிலும் சென்று மறையும் வரை கீழ்நோக்கி   நீண்டது. அப்பால் அவளுடைய நீண்ட கால்கள் எதேச்சையான கோணத்தில் பிரிந்தாலும்  அவை நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தன. இம்மாதிரி சமயங்களில் அவள் உடம்பு கிட்டத்தட்ட பருப்பொருளின் தன்மையைப் பெற்றிருந்தது போல டியிற்கு பட்டது. ஆனால் அவனை  நோக்கி நேர்முகமாகப் படுத்துக் கொண்டு, ஒளிரும் காம்புகளுடைய சிறிய முலைகளயும், தொப்புளின் ஒரு சிறு ஜாடையைத்  தவிர வேறெதுவும் இல்லாத அற்புதமான வயிற்றின் நீட்டத்தையும், திறந்த கால்களுக்கு நடுவே உள்ள பொச்சின் கரிய பரப்பையும் காட்டிக் கொண்டிருக்கும் போதும் கூட அவளுடைய உடலின் திட்டநோக்குடைய சுயதுறப்பிலும்,  தியானிப்பிற்காக  ஆன சரணடைவிலும் ஏதோ சேய்மையான  மற்றும் அந்நியமான ஒன்றிருந்தது.

இயந்திரத்தனமாக செய்து முடித்துவிடுவதால் அர்த்தத்தை இழந்துவிடும் சிறு சிறு அன்றாட நடவடிக்கைகளில் அந்த உடல் ஈடுபட்டுக் கொண்டு அடுக்ககத்தில் இடத்திற்கு இடம் வந்து போய்க் கொண்டிருக்கையில் அதன் இருப்பின் மெய்ம்மையை டி உணரத் தவறுவதற்கு  வாய்ப்பே இல்லை.  கேள்விக்கு இடமின்றி டி அந்த உடலை அறிந்திருந்து  நேசித்தான். அதே போல், அவள் தன் முன்  ஆடைகளைக் களையும் போதோ அல்லது அவள் அடுக்ககத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நிர்வாணமாகச் சென்று கொண்டு அவன் பக்கம் திடீரென்று திரும்பிச் சாதாரணமான விஷயங்களைப் பேசும் போதோ, அவன் அதை உணர்ந்தான். ஆக, அவனது நண்பியின் இருப்பு, அவர்களின் பகிர்ந்துகொள்ளப்பட்டத் தனிமை, அவள் எப்பொழுதும் நிர்வாணமாகவும் தனக்குச் சொந்தமாகவும்  இருக்கும் அந்த ஆழ்ந்த அமைதியான புலனுகர்ச்சி அவனுடைய வாழ்வின் ஒரு பகுதியாக இருந்ததைப் போலவே அந்த அடுக்ககத்தின்  பகுதியாகவும் ஆனது. அவர்கள் மற்றவர்களுடன் இருக்கும்போது இந்த உறவைப் பற்றிய அறிவு திடீரென்று டியின் நினைவிற்கு வரும்.  அமைதி குலைக்கும் விசை ஒன்றுடன் அவனைச் சம்பந்தப்படுத்தி, ஆடைகளுக்கு அடியே  அவள் தோலை உணரச் செய்து, எல்லாவற்றிடமிருந்தும் தன்னைப் பிரித்து, அவளைப் பற்றி தனக்கிருந்த அறிவை, அவர்களுடன் அவளுடைய ரகசியமான கவர்ச்சியைப் பகிர்வதில் தனக்கிருந்த  ஒரு வகையான தேவையாக அவர்கள் முன் வைக்கும்படி  அந்த நினைவு செய்துவிடும்.

அவள் படுக்கையில் நீட்டிக் கொண்டு கிடக்கையில் ஒளி சன்னல்களின் வழியாக அவள் மீது விழுந்து அவனுடன் சேர்ந்து அடுக்ககத்தின் அணிகலன்களும் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல  அனைவரும்  அவ்வாறே கடக்க வேண்டிய ஒரு பாலமாகவே அவளை அவன் கற்பனை செய்து கொண்டான்.

அவ்வகையானதொரு ஞாயிறின் காலையில் அவள் படுக்கையில் சோம்பியிருக்கும் போது, சாத்தியிருந்த கதவின் ஊடே பூனையின் வற்புறுத்தும்  இரங்க வைக்கும் மியாவ்கள் ஒன்றன் மேல் ஒன்று விழுந்து கொண்டு  ஒரே ஒரு சலிப்பூட்டும் சந்தம் மாறாத குரலாய் ஒலித்தன. பூனை முதல் முறையாக அதன் இருப்பை இவ்வாறு அடையாளப் படுத்திக் கொண்டதை வியப்புடன் உணர்ந்தான். பூனை ஒரு தளம் கீழே முன்கதவிற்கு முன்னால் மிதியடி மீது படுத்துக் கொண்டிருக்கும் அடுக்ககத்திற்கு நேரடியாக மேலேதான் அவன் அடுக்ககம் இருந்தது. அனால் அதன் மியாவ்கள் அதைவிட மிக அருகிலிருந்து வருவது போலிருந்தது. இது பூனை அடுக்ககத்திற்கு உள்ளேயே இருப்பது போல் ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. டி கதவைத் திறந்தவுடன் அதைக் கண்டான், குட்டியாய், சாம்பல் நிறத்தில், கிட்டத்தட்ட அவன் பாதங்களுக்கு அடியில்.  பூனை அவனுடைய அடுக்ககக் கதவிற்கு  நேர் வெளியே இருந்து கொண்டு அதன் மியாவ்களை கதவை  நோக்கிக் குறி வைத்திருக்க வேண்டும்.

கத்துவதை நிறுத்தாமல் தலையை நிமிர்த்தி டியை முறைத்துக் கொண்டு நின்றது. கண்களை இரு மஞ்சள் வெட்டுத்துளைகளாக ஆகும் வரை பாதி விழி மூடிக் கொண்டு பின்னர் உடனே அவைகளை திறந்து கொண்டது. சற்று நேரத்திற்கு முன் எப்பொதும் போல  ஞாயிறன்று செய்தித்தாள்களை வாங்குவதற்காக வெளியே செல்ல நினைத்திருந்த டி, அதை இயல்பாகத் தன் கைகளால் தூக்கி, அதை மீண்டும் அடுக்ககத்திற்கு உள்ளே கீழே கிடத்திய பின், வெளியே சென்று கதவை தனக்குப் பின்னால் மூடிக் கொண்டான். நடைக்கூடத்திலும் படிக்கட்டுகளிலும்  அதன் மியாவ் சத்தங்களை, அவை வற்புறுத்தலுடன் முடிவின்றி உருண்டு கொண்டு, ஏதோவொன்றிற்காக ஏங்குவது போல, அது கிடைக்கும் வரை அவை  நிறுத்தாது போல, டியால் இன்னமும் கேட்க முடிந்தது. அவன் செய்தித்தாள்களை கைக்கடியில் இடுக்கிக் கொண்டு திரும்புகையில் அவை மாறாமல் ஒலித்துக் கொண்டிருந்தன. பூனை எங்கும் தென்படவில்லை. அதன் சத்தம் மட்டும் குறிப்பிட்ட இடத்திலிருந்து வருவது போல் அல்லாமல் அடுக்ககம் முழுவதும் வியாபித்திருப்பது போலிருந்தது. முன்கதவு உள்பக்கமாகத் திறக்கும் வரவேற்பறை-சிற்றுண்டி அறையைக் கடந்து, கோடியிலிருக்கும் படுக்கையறைக்கு இட்டுச் செல்லும் கதவின் வழியாக டி சென்ற போது, அவனுடைய நண்பி அவன் அவளை விட்டுச் சென்ற அதே நிலையில், தலையை தலையணைக்குள் புதைத்து சோம்பலாக தூங்கிக் கொண்டிருப்பதை அவனால் பார்க்க முடிந்தது.  படுக்கை விரிப்புகள்  படுக்கையின் அடிப்பகுதி வரை தள்ளப்பட்டிருந்தது அவளை மேலும்  அப்பட்டமான நிர்வாணத்தில் காட்டியது. பரிதாபமான மியாவ் சத்தம் சூழ்ந்துள்ள அறைக்குள் டி நுழைந்தான். அங்கே, அறையின் மற்றொரு வாசலின் நடுவே, உள்ளே செல்ல இன்னும் தீர்மானிக்க முடியாதது போல, நான்கு கால்களில் நின்று கொண்டு , கண்கள் அம்மணமான உடலின் மீது நிலை குத்தியிருந்ததைக் கண்டான். முகப்பறையின் இரு கதவுகளின் வழியாகப் படுக்கையறயை அடைவதற்கான வாய்ப்புகளை அடுக்ககத்தின் வடிவமைப்பு அளித்தது.

முகப்பறையின் வாயிலாக நேரடியாகவோ, அல்லது சமையலறையைக் கடந்து  படுக்கையறையை ஒட்டி இருந்த காலை உணவு அருந்தும் சிறிய அறையின் வாயிலாக இட்டுச் செல்லும் சுற்றான வழியின் மூலமாகவோ படுக்கையறையை ஒருவர் அடையலாம். பூனை இந்த சுற்று வழியை எடுத்துக் கொண்டதா இல்லை படுக்கையறைக்கு நேராகவே சென்று விட்டு இப்போது உள்ளே செல்வதற்கு யோசிப்பதைப் போல் பாவனை செய்து கொண்டிருக்கிறதா என்பதைப் பற்றித் தான் வியந்து கொண்டிருப்பதை டி உணர்ந்தான். இதற்கிடையில் அவன், பூனை இருவரின் பார்வைகளுக்கு எதிரே  அவனுடைய நண்பி இருக்கையை மாற்றிக் கொண்டாள். நீளமான காலொன்றை நீட்டி மற்றொரு காலிற்கு அடுத்தபடியாக வைத்துக் கொண்டு, தலையைத் தூக்காமல், செந்தவிட்டு முடி ஒரு பக்கமாக விலகி முகத்தைக் காட்டாதபடி கரத்தைத் தலையணையைச் சுற்றி போட்டுக் கொண்டாள். டி பூனையிடம் சென்று, அது  மியாவ்  சத்தத்தை நிறுத்தாதபடியாக, அதைத் தூக்கி, மீண்டும் முகப்பறையில் விட்டுவிட்டு கதவைச் சாத்தினான். பின்னர் படுக்கையில் அமர்ந்து கொண்டு, உள்ளங்கையால் அவளது சருமத்தின் தொட்டுணர்வை அடையாளங் கண்டுகொண்டு, அது மட்டுமே அவன் முன் நீட்டிருக்கும் உடலின் ஆழங்களுக்கு அவனை இட்டுச் செல்லக் கூடும் போல, நண்பியின் முதுகை மெதுவாக வருடி, அவளை முத்தமிடுவதற்காகச் சாய்ந்தான். அவள் கண்களை இன்னும் மூடிக்கொண்டே திரும்பி, கைகளை அவன் கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டு தன் உடல் டியோடு ஒட்டிக் கொள்ளும் வகையாகத் தன்னை உயர்த்திக் கொண்டாள். வாயை அவன் காதோடு வைத்து அவனை  ஆடைகளைக் களையும் படி முணுமுணுத்தாள். அவன்  அவ்வாறே கீழ்ப்படிகையில் அவன் உடம்போடு தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருந்தாள். பிறகு, கால்கள் பிணைந்து உடல்களின் கலந்த வாடையால் சூழப்பட்டு இருவரும் பக்கத்துக்குப் பக்கம் சேர்ந்து கிடக்கையில், அவள் திடீரென்று மிகுதொலைவிலிருந்து ஏதோவொன்றை நினைவுகூர்வது போல, அவன் இப்போதோ அல்லது எப்போதோ  வெளியே மியாவ் சத்தமிட்டுக் கொண்டிருந்த பூனையை உள்ளே விட்டானா என்று அவனிடம் கேட்டாள்.

Juan_Garcia_Ponce_Cat_Story_Fiction_Authors_Writers_Translations-gato2

“ஆமாம். நான் பேப்பர் வாங்குவதற்காக வெளியே சென்ற போது,”  டி பதிலளித்தான். மியாவ் சத்தம் நின்றிருந்ததையும் உணர்ந்தான்.

“அப்படி என்றால் அது இப்போது எங்கே இருக்கிறது ? நீ அதை என்ன செய்தாய் ?”

“ஓன்றும் செய்யவில்லை. அதை மீண்டும் வெளியே போட்டு விட்டேன். அது இங்கே இருப்பதற்கு அவசியம் ஒன்றுமில்லை. நான் இங்கில்லாத போது உன்னை ஆச்சரியப்படுத்த விரும்பினேன்.”   என்று டி கூறிவிட்டு  “ஏன்” என்ற கேள்வியை சேர்த்துக் கொண்டான்.

“தெரியாது” அவள் விளக்கினாள் “ எனக்கு திடீரென்று அது உள்ளே இருப்பது போல் தோன்றியது. அந்த எண்ணம் எனக்கு  வியப்பையும் மகிழ்ச்சியையும் ஒரே சமயத்தில் அளித்தது. ஆனால் என்னை எழுப்பிக் கொள்ள என்னால் முடியவில்லை…”

அவனுடைய நண்பி காலையில் வெகு நேரம் வரை படுக்கையில் இருக்கையில், டி அவன் உள்ளே வந்த போது மேசை மீது வைத்த செய்தித்தாள்களை அவளருகே தரையில் உட்கார்ந்து கொண்டு படித்தான். அதன் பிறகு அவர்கள் சேர்ந்து உணவருந்துவதற்காக வெளியே சென்றார்கள். பூனை மீண்டும் மியாவ் சத்தங்களை எழுப்பவில்லை. மேலும் அதை கூடத்திலோ, படிக்கட்டிலோ, அல்லது முகப்பறையிலோ  காண முடியவில்லை. அவர்கள் இருவரும் அச்சம்பவத்தை மறந்து போனார்கள்.

அதற்கடுத்த வாரத்தில் டி அதன் மியாவ்களை கேட்கவில்லை என்றாலும், அதை பல முறை எதிர்கொண்டான்,  சாம்பல் நிறத்தில் குட்டியாய், அவனை ஒரு கணம்  நோக்கி, கீழ்த்தளத்திலுள்ள அடுக்ககத்திற்கு வெளியே மிதியடி மேல் அமைவுறுதியுடன் அமர்ந்து கொண்டு, படிக்கட்டு கைப்பிடிச்சுவரின் இரும்பு  கந்துகளுக்கிடையே  சுருண்டு கொண்டு, ஏதோ அவனை விட்டு ஓடிச் செல்வதைப் போல அவன் முன்னால் மேலேயோ கீழேயோ அவனைத் திரும்பிப் பார்க்காமலே போய்க் கொண்டு, அல்லது முகப்பறையின் சுவரை ஒட்டி மெதுவாக நடந்து கொண்டு.. அவன் பூனையைப் பின்னாடி விட்டுவிட்டு சாலைப் பக்கமாகத் திறக்கும் கனத்த கண்ணாடிக் கதவை மூடுகையில், அது மேலும் மேலும் கட்டிடத்தின் சொந்தக்காரனைப் போல் நடந்து கொண்டு, காப்பாளர்களைப் போலவே அவன் வருவதற்காகச் சந்தேகத்துடன் காத்துக் கொண்டு, வளரவே செய்யாத ஆனாலும் கூட எவரையும் வேண்டாத இளம் பூனையின் பலவீனமான நொய்மை வாய்ந்த பார்வையோடு, மிதியடி மேல் அல்லது படிக்கட்டு கந்துகளுக்கிடையே  சுருண்டு கொண்டு அசட்டையாக இருப்பதைப் போல் பாசாங்கு செய்து கொண்டிருப்பதைப் போல் அவனுக்குப் பட்டது.

சில சமயம் அதன் மௌனமான இருப்பு மன உலைவைக்  கொடுத்தாலும்  அதனிடம் மென்மையான, மனதை உருக்கும் ஏதோ ஒன்று இருந்து கொண்டு ,  அதை பாதுகாக்க வேண்டும் என்றும், அதன் இறுமாந்த சுதந்திரத்தால் அதன்  பலவீனங்களை மறைக்க இயலவில்லை என்றும் எண்ணத்தை ஏற்படுத்தியது. ஒரு நாள் நண்பியுடன் அடுக்ககத்திற்கு மேலே செல்லுகையில் அதை டி எதிர் கொண்டான்.  நண்பி குட்டி சாம்பல் உருவத்தை கவனித்து அது யாருடையது என்று கேட்ட போது, டியால் பதிலளிக்க இயலாதது அவளுக்கு வியப்பளிக்கவில்லை.  பூனை  எவருக்கும் சொந்தமாக இல்லாமல், எதேச்சையாக கட்டிடத்திற்குள் தானாகவே நுழைந்து அங்கேயே தங்கி விட்டது என்ற ஊகத்தை உலகத்திலேயே மிக இயல்பான ஒன்றாக அவள் ஏற்றுக் கொண்டு விட்டாள். அவ்விரவு நெடு நேரம் வரை அடுக்ககத்திலேயே இருந்தார்கள். அவளுடன் இருந்த பிறகு டியின் அடுக்ககத்திலேயே  தங்கி விட தான் விரும்புவதாக நண்பி எப்போதும் கூறுவாள். அன்றும் மற்ற நாட்களைப் போல டி எழுந்து, வீட்டிற்குச்  செல்ல அவளுடன் துணையாக வருவதை அவள் விரும்பவில்லை. அவர்கள் அடுத்த முறை சந்தித்த போது, அவள் வெளியே போய்க் கொண்டிருக்கும் போது பூனையைப் படிக்கட்டில் பார்த்ததாகவும், அது அவளைப் புறக்கூடம் வரை பின்தொடர்ந்ததாகவும், அவள் வெளியே ஒரு அடி வைக்கும் முன் , ஏதோ  வெளியே செல்ல அதற்கு ஒரே சமயத்தில் ஆசையாகவும் பயமாகவும் இருந்ததைப் போல, அது நின்றுவிட்டதால் , கதவை சாத்தும்போது தான் வெகு கவனமாக இருந்ததைப் பற்றி அவள் கூறினாள்.

“அதைத் தூக்கிக் கொண்டு என்னுடன் எடுத்துச் செல்ல வேண்டும் போலிருந்தது, ஆனால் அது தான் கட்டிடத்தைத் தேர்ந்தெடுத்தது என்று நீ கூறியது ஞாபகத்திற்கு வந்தது” அவன் நண்பி முடித்தாள், சிரித்துக் கொண்டே.

டி மிருகங்கள் பால் அவளுக்கிருந்த அன்பைக் கிண்டல் செய்து விட்டு, குட்டி சாம்பல் உருவத்தை மீண்டும் மறந்து போனான். ஆனால் அதற்கடுத்த ஞாயிறு செய்தித்தாள்களை வாங்கிக் கொண்டு வருகையில், அவன் வெளியே செல்லும் பொழுது பார்க்காத பூனையை, படிக்கட்டின் கந்துகளுக்கிடையில்  சுருண்டிருப்பதைப் பார்த்தான். அதைக் கடக்கையில் அது படிகளில் தாவி தன் முன் செல்லாததைக் கண்டு ஆச்சரியமடைந்த டி, திரும்பி , அதைத் தூக்கிக் கொண்டு , அதனுடன் அடுக்ககத்திற்குள் நுழைந்தான். நண்பி எப்போதும் போல படுக்கையில் காத்திருந்தாள். அவன் வெளியே சென்ற போது அவள் விழித்திருந்ததால், அவளை ஆச்சரியப் படுத்துவதற்காக டி கதவைச் சத்தம் ஏதும் செய்யாமல் சாத்த முயன்றான். அவன் இன்னமும் பூனையை கைகளில் ஏந்திக் கொண்டிருந்தான். அது அவன் நெஞ்சின் மீது சுகமாக சுருண்டு கொண்டு கண்களை பாதிவிழி மூடிக் கொண்டிருந்தது. அதன் நலிந்த வெதுவெதுப்பான சிறிய உடல் தனக்கருகே பதைபதைத்துக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். படுக்கை அறைக்குள் நுழையும் போது, அவன் நண்பி  படுக்கை மீது முழு நீளத்திற்கு நீட்டிக் கொண்டு  சன்னல்கள் வழியாக வரும் ஒளிப் பெருக்கிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக ஒரு கரத்தை கண்கள் மீது போட்டுக் கொண்டு, மீண்டும் தூங்கிப் போயிருப்பதைக் கண்டான். எதிர்பார்ப்பின் ஒரு அடையாளம் கூட அவள் உடம்பில் இல்லை.  அழகாக ஒளிவு மறைவின்றி நேர்த்தியான அலட்சியமான உருவத்துடன் அவள் இயல்பாக  படுக்கை மீதிருந்தாள்.

தனக்காக ரகசியம் ஏதும் வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் ஒரு போதும் அவள் கை கால்களின் மௌனமான விளையாட்டையோ, அவற்றின் உள்ளார்ந்த மெய்ம்மைக்கு உருவகம் தரும்  உடம்பின் பாரத்தையோ, அவ்வுருவம் ஒரு போதும் அறிந்திராமல் இல்லை. ஆரம்பப் புள்ளியைப் பற்றிய பிரக்ஞையில்லாத ஒரு இரட்டை அசைவாக அவள் மீது இச்சை ஏற்படுத்தவும், அவளையே இச்சை கொள்ள வைக்கவும்  அதற்கு வல்லமை இருந்தது. தன் மார்பில் இறுக்கமான ஒரு பந்தாகச் சுருண்டிருக்கும் சாம்பல் உடலோடு டி அவளருகே சென்றான். சில சமயம்  முழுதாக ஆடையணிந்து அவள் மற்றவர்களுடன்  இருப்பதைப் பார்ப்பதில் இருக்கும் அதே விந்தையான கிளர்ச்சியுடன் அவளை ஒரு கணம் நோக்கிய பிறகு, வெகு கவனமாக பூனையை அவள் உடல் மீது வைத்தான், மார்புகளுக்கு வெகு அருகே. அங்கு அந்த சாம்பல் உருவம் பலவீனமாக, அரண்டு போய், அசையக் கூட முடியாமல், கடுகளவே உயிரோடிருக்கும் ஒரு பொருள் போலக் காட்சியளித்தது. விலங்கின் பாரத்தை உணர்ந்த உடன், அவனுடைய நண்பி கரத்தை முகத்திலிருந்து விலக்கி, அடையாளம் காணும் பார்வையோடு கண்களைத் திறந்தாள், அவளைத் தொட்டது டியின் கை என்று அவள் கற்பனை செய்து கொண்டது போல. அவன் படுக்கையை நோக்கி நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் தான் கண்களைத் தாழ்த்தி பூனையை அடையாளம் கண்டு கொண்டாள். அது அவள் மேல் அசையாமல் கிடந்தது. ஆனால்  அதைப் பார்த்த ஆச்சரியத்தில் அவள் திடுக்கிட்டதால் அந்த சிறிய சாம்பல் உருவம் கீழே படுக்கையில் அவள் பக்கத்தில் ஒடுங்கும்படியாக உருண்டு, நகரவே முடியாமல் மீண்டும் அசையாமல் கிடந்தது. டி அவள் திடுக்கிட்டதைக் கண்டு சிரித்தான்.  நண்பியும் அவனுடன் சேர்ந்து சிரித்தாள்.

“நீ அதை எங்கு கண்டு பிடித்தாய்?”  அவள் கேட்டாள், இன்னமும் பக்கத்தில் அசையாமல் கிடக்கும் பூனையைப் பார்ப்பதற்காக உடம்பை அசைக்காமல் தலையை மட்டும் உயர்த்திக் கொண்டு.

“படிக்கட்டுகளில்”

“பாவம் சின்னக் குட்டி,” அவள் கூறினாள்.

Juan_Garcia_Ponce_Cat_Story_Fiction_Authors_Writers_Translations-Encounters

மீண்டும் பூனையை எடுத்து தன் அம்மணமான உடல் மீது , முலைகளுக்கருகே  டி அதை முன்பு வைத்த அதே இடத்தில் வைத்துக் கொண்டாள். அவன் கட்டில் மீது உட்கார்ந்தான். பூனை அவள் உடல் மீதிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கையில் இருவரும் அசையவில்லை. ஒரு கணத்திற்குப் பிறகு , அந்த பயந்த சாம்பல் உருவம் பாதங்களை தன் உடம்பிற்கடியிலிருந்து வெளியே எடுத்து, முதலில் அவள் சருமத்தின் மீது நீட்டிய பின் ஐயத்துடன் அவள் உடம்பு மீது நடக்க முயற்சித்து சட்டென்று நின்றுவிட்டது, ஏதோ அவ்வுடலை விட்டு விழுந்துவிடும் அபாயத்தை எதிர்கொள்ள அது  விரும்பவில்லை போலும். அதன் மஞ்சள் நிறக் கண்கள் இரு குறுகிய வெட்டுத் துளைகளாக ஆன பின்  முழுவதுமாக மூடிக் கொண்டன. பூனையின் மனப்போக்கு அவர்களை எதிர்பாராத  ஆச்சரியத்தில் ஆழ்த்தியது போல டியும் அவன் நண்பியும் மீண்டும் சிறு மகிழ்வில் சிரித்தார்கள்.

அதன் பிறகு பூனையின் முதுகை ஒரு தொடர்ச்சியான இயக்கத்துடன் அவள் நீவத் தொடங்கினாள். இறுதியாக அந்த சிறிய சாம்பல் உடலை இரு கைகளாலும் தூக்கி தன் முகத்திற்கு  முன்னால் வைத்துக் கொண்டு, அதை மெதுவாக  ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு மென்மையாகத் தொடர்ந்து ஆட்டிக்கொண்டு “பாவம் சின்னக் குட்டி, பாவம் சின்னக் குட்டி” என்று மீண்டும் மீண்டும் கூறினாள். பூனை ஒரு கணம் கண்களைத் திறந்து பின் சட்டென்று மீண்டும் மூடிக் கொண்டது. உடம்பை மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கைகளின் தடையின்றி பாதங்கள் கீழே தொங்கிக் கொண்டிருந்ததால் அது இப்போது முன்னை விடப் பெரியதாகவும்  அதன் பலவீனத்திலிருந்து  ஏதோ ஒன்றை இழந்து விட்டதைப் போலவும் இருந்தது. அதன் பின்னங்கால்கள் டியின் நண்பியின் உடல் தாங்கும் வகையாக கீழே நீட்டிக் கொள்ள மிகை முயற்சி செய்தன. அவள் அதை பக்கத்துக்குப் பக்கம் ஆட்டுவதை நிறுத்தி அதை இறக்கிக் கவனமாகத் தன் மார்புகள் மீது வைத்துக் கொண்ட போது அதன் நீட்டிக்கப்பட்ட பாதங்களில் ஒன்று  நேரடியாக  ஒரு முலைக் காம்பின் மீது பட்டது. அவள் பக்கத்தில், அவன் அவளைப் புணரும் போது தொடுகையில்  நிகழ்வது போல், முலைக் காம்பு கடினமாவதையும் விறைப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் கைகளை நீட்டி அவளைத் தொடுகையில் அவளுடைய முலையுடன் சேர்ந்து பூனையின் உடலையும் அவனது கை எதிர்கொண்டது. நொடி நேர இடைவெளிக்கு நண்பியின் கண்கள் அவனை முறைத்தன. ஆனால் உடனே இருவரும் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்கள்.  அதன் பிறகு பூனையைத் தள்ளி வைத்து விட்டு ஒரே எட்டில் கட்டிலை விட்டு தாவி எழுந்தாள்.

காலையில் எஞ்சியிருந்த நேரத்தில்  செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டும், இசைத்தட்டுகளைக் கேட்டுக் கொண்டும், எப்போதும் போல சாதாரணமாகப் பேசிக் கொண்டுமிருந்தார்கள். அனால் எல்லா ஞாயிறுகளைப் போல் அல்லாது,  சில சமயம் மட்டுமே உணரக்கூடியதாய், சொல்லாமலே அறியப்பட்ட ஒப்பந்தம் மூலமாக அழிய விடப்பட்ட ஒரு ரகசிய மின்னோட்டம் அவர்கள் இருவருக்குமிடையே ஓடியது. பூனை கட்டில் மீது இருந்து கொண்டிருந்தது. டியின் நண்பி ஞாயிறுதோறும் செய்வது போல், சூரிய ஒளி, சன்னல் வழியாக வந்து கொண்டிருக்கும் காற்றுடன் சேர்ந்து அவளைத்  தொடும்படியாக தன்னை ஆடைகளால் மறைத்துக் கொள்ளாமல்  படுக்கை  மீது சோம்பலாக நீட்டிக் கொண்டிருந்தாள். டியின் உற்று நோக்கு  அணிகலங்களின்  நோக்கோடு இணைய ஆர்ம்பித்த போது அவள்  குட்டி உருவத்தை  அவ்வப்போது தடவிக் கொடுத்தோ  அது தானாகவே நடக்கும் திறனைத் திரும்பப் பெற்று  அதன் மென்மையான பாதங்களை அவளது வயிற்றின் மீதோ மார்புகளின் மீதோ வைத்து அவள் மீது நடப்பதையோ அல்லது அவளது ஒரு பக்கத்திலிருந்து எதிர்பக்கம்  கட்டிலின் மீது நீண்டிருக்கும்  நீளமான கால்களின் வழியாக நடப்பதையோ பார்ப்பதற்காகத் தன் உடம்பின் மீது விட்டுக் கொண்டாள். டியும் அவனது நண்பியும் குளியலறைக்குச் சென்ற போது பூனை  படுக்கையில் இருந்து கொண்டு அவள்  காலடியால் புறந்தள்ளிய கசங்கிய போர்வைகளின் நடுவே தூங்கியது. ஆனால் அவர்கள் வெளியே வந்த போது  ஏதொ அவர்களின் இருப்பிற்காக ஏங்கி அவர்களைத் தேடிக் கொண்டிருப்பதைப் போல்  வரவேற்பறையில் குத்துக்கல்லாக நின்று கொண்டிருந்தது.

“இதை என்ன செய்யப் போகிறோம்”  நண்பி கேட்டாள், இன்னமும்  துவாலையால்  தன்னைச் சுற்றிக் கொண்டே.  செந்தவிட்டு முடியை ஒரு பக்கத்திற்குத் தள்ளி விட்டுக் கொண்டு  ஏதோ முதலில் ஆரம்பித்த அந்த அப்பாவித்தனமான நகைச்சுவைக்குப் பிறகு அது எப்போதுமே அவர்களுடன் இருந்ததை அவர்கள் தொடக்கத்திலிருந்து உணர்ந்திருந்த்தைப் போல பூனயைப் பிரியத்துடனும் சந்தேகத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஒன்றும்  செய்ய வேண்டாம்,”  டி அதே  தற்செயலான தொனியில் கூறினான். “நடைக் கூடத்தில் விட்டுவிட வேண்டியது தான்.”

அவர்கள் ஆடை அணிவதற்காக மீண்டும் படுக்கையறைக்குள்  சென்ற போது பூனை அவர்களைத் தொடர்ந்து சென்ற போதிலும், அவர்கள் வெளியே வந்தவுடன் டி அதைக் கைகளில் எடுத்துக் கொண்டு அக்கறையில்லாமல் அதைப் படிகளில் விட்டான். அது அங்கேயே அசையாமல், குட்டியாய் சாம்பல்  நிறத்ததாய் அவர்கள் கீழே செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றது.

எனினும்  அன்று முதல், குட்டியாய் சாம்பல் நிறத்ததாய், கருநிழல்களால்  புள்ளியிடப்பட்ட மஞ்சள் அரை – வெளிச்சத்திலிருக்கும் நடைக்கூடத்திலோ, புறக்கூடத்திலோ அல்லது படிக்கட்டிலோ  அதை எதிர்கொண்ட போதெல்லாம், அவன் நண்பி அதைக் கைகளில் எடுத்துக் கொண்டு அடுக்ககத்திற்குள் அதனுடன் சென்றாள்.  அதைத் தரையில் கிடத்தியபடி ஆடைகளைக் களைந்து கொண்டிருக்கையில், பூனை அறையிலே இருந்து கொண்டோ  வரவேற்பறை, சிற்றுண்டியறை மற்றும் சமையலறைகளில் அலட்சியமாக அலைந்து கொண்டிருக்கும். அதன் பின் கட்டில் மீது ஏறி அவள் உடம்பின் மீது படுத்துக் கொள்ளும், ஏதொ முதல் நாளிலிருந்தே அங்கே இருக்கப் பழகி விட்டது போல. டியும் அவன் நண்பியும் அது அவள் உடம்புடன்  பரிச்சயம் கொள்ளும் விதத்தால் மகிழ்வடைந்து, சிரித்துக் கொண்டே அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது அவள் அதை வருடும் போது அது தன் கண்களை  குறுகிய மஞ்சள் வெட்டுத்துளையாக ஆகும் வரை  மூடிக் கொள்ளும். ஆனால்  அனேகமாக  அது தன் தலையை அவள் மார்புகளுக்கிடையே ஒளிந்து கொள்வதற்கோ , மெதுவாக அதன் பாதங்களை  அவளது வயிற்றின் மீது  நீட்டிக்  கொன்டு இருப்பதற்கோ விட்டுவிடுவாள். அது அவர்கள் இருப்பதைக் கண்டு கொள்ளாதது போல் பாவனை செய்து கொண்டு  அவள்  டியை அணைப்பதற்காக திரும்பும் போது அவர்களுக்கு நடுவே தன்னை நுழைத்துக் கொள்ளும். அவள்  அதை கைகளால் தள்ளி ஒதுக்கி விடுவாள்.

டி அடுக்ககத்தில் அவளுக்காக காத்திருக்கும் வேளைகளில்  அவள் எப்போதும் கைகளில் பூனையுடன் தான் உள்ளே வருவாள். ஓர் இரவு எப்போதும் இருக்கும் இடங்களில் அதைக் காணவில்லை என்று அவள் அறிவித்த போது அந்த குட்டிச் சாம்பல் உருவம் நிலையடுக்கறைக் கதவின் வழியாக திடீரென்று படுக்கையறையில் தோன்றியது. எனினும் ஒரு நாள்  அதற்கு அவள் உணவளிக்க முயன்ற போது அது ஒரு வாய் கூட உண்ண மறுத்து விட்டது, அதை அவள் கைகளில் எடுத்துக் கொண்டு உணவை வாயருகே கொண்டு வந்தும் கூட. படுக்கையில் அவள் நீண்ட  மெல்லிய உருவத்தை பற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கையில் டி அவளைத் தொடுவதற்கான ஒரு புலப்படாத தேவையை உணர்ந்து அவளை அவனிடம் வர அழைத்தான். இப்போது ஞாயிறுகளில் குட்டிச் சாம்பல் உருவம் அவள்  உடம்பிற்கு அடுத்திருப்பது இன்றியமையாத்தாக ஆகி விட்டிருந்தது. டியின் விழிப்புள்ள பார்வை அதன் இருப்பிடங்களைத்  துல்லியமாக குறித்துக் கொண்டு அதே சமயம்  அதன் இருப்பு அவளிடம் ஏற்படுத்தும் எதிர்வினைகளைக் கண்டுகொள்ள முனைந்தது. அவளும்  பூனை  வேறெவருக்கும் சொந்தமாகாமல்  அவர்கள் இருவருக்குமே சொந்தமான ஒன்றாக ஒத்துக்  கொண்டு, பூனையால் அவள் உடலில் உண்டான  எதிர்வினைகளை  டியின்  கைகளின் தொடுகை ஏற்படுத்திய எதிர்வினைகளுடன் ஒப்பிட்டுக் கொண்டாள். இப்போது அதை வருடுவதை முற்றிலும் நிறுத்திவிட்டு அதற்கு மாறாக வருடப்படுவதற்காகக்  காத்திருந்தாள். பக்கத்தில்  அதனுடன்  அரையுறக்கத்தில் கிடக்கும் போது கண்களைத் தூங்கி முடித்த பிறகு திறக்கையில் அதைத் தன் உடலை முழுவதும் மூடிய ஒரு இயற்பொருளாகவும், அவள் உடம்பின் மீது அரை – மூடியிருந்த மஞ்சள் கண்களின் நிலைக்குத்திய பார்வையாகவும் உணர்ந்தாள். அப்போது டியை மீண்டும்  பக்கத்தில்  உணரும்  தேவை அவளுக்கு ஏற்பட்டது.

சிறிது காலத்திற்குப் பிறகு எதிர்பாராத காய்ச்சலின் தாக்குதலால் படுக்கையிலேயே சில நாட்கள் இருக்க வேண்டிய கட்டாயம் டியிற்கு ஏற்பட்டது. அடுக்ககத்திலேயே இருந்து கொண்டு அவனைப் பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அவள் முடிவு செய்தாள். காய்ச்சலால் உணர்வுகள் மங்கி, ஒரே சமயத்தில் இனிமையாகவும் இனிமையற்றதாகவும் விளங்கிய நோவுற்ற உடலின் மங்கிய விழிப்புணர்வுடன்  ஒரு விதமான நிரந்தர அரைத்தூக்கத்தில் மூழ்கிக் கிடக்கையில், டி ஏறக்குறைய உள்ளுணர்வு மூலமாகவே அடுக்ககத்தில் நண்பியின் அசைவுகளை நோட்டமிட்டான். அவள் அறைக்குள் வந்து போய்க் கொண்டிருக்கையில் அவளது காலடிகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.  அவன் தூங்குகிறானா என்பதை  நிர்ணயிக்க அவள் தன் மீது குனிந்து கொண்டிருப்பது போல் ஒரு எண்ணம் அவனுக்கு எழுந்தது. அவள் ஒன்றன் பின் ஒன்றாக கதவுகளைத் திறந்து மூடும் ஓசையைக் கேட்டாலும் அவள் இருக்கும் இடத்தை அவனால் துல்லியமாகக் கூற முடியவில்லை. சமையலறையிலோ குளியலறையிலோ தண்ணீர் ஓடிக்  கொண்டிருக்கும் முணுமுணுப்பை அவனால் உணர முடிந்தது. இந்தச் சத்தங்கள் அனைத்தும்  ஒரு அடர்த்தியான இடையறாத திரையை உருவாக்கின. அதில்  ஒரே  சமயம் பக்கத்திலும் தூரமாகவும் இருக்கும் அவள் இருப்பு மட்டுமே நிஜமாக இருக்கும், காலத்தால் ஆன ஒரு திணிவைப் போல்  முதலோ முடிவோ இல்லாமல் பகலும் இரவும் எறியப் பட்டது. அந்தத்  திரை  மூலமாக அவர்கள்  இணைந்து பிரிந்து கொள்ளும் உச்ச எல்லையை அவன் கண்டு கொண்டது போலிருந்தது. அவளது ஒவ்வொரு நடவடிக்கையும் அவளை அவனது பார்வை  முன்னே  கொண்டு வந்தது, தனியாகவும் ரகசியமாகவும், அதனாலேயே  அவனைப் பற்றி அவள்  ஏதும்  அறிந்திராத இந்தப் பிரிவில் அவனுக்கு அவள் இன்னும் அதிகமாகவே சொந்தமானாள்.  அவளது ஒவ்வொரு செயலும்  அவன் எதிர்ப்பக்கதிலிருந்து பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு விறைப்பான  அதிரும் கயிறின் நுனியில் இருப்பது போலவும், அதன் நடுவே நிரப்பவே முடியாத ஒரு வெறுமை மட்டுமே இருந்தது போலவும் இருந்தது. ஆனால் டி இறுதியாக, கணக்கிட முடியாத இரண்டு கனவு இடைவெளிகளுக்கு இடையே கண்கள முழுதாகத் திறந்த போது, பூனை  அவளிடம்  மிக அருகே வராமலேயே, ஏதோ கவனிக்கப் படாமல் செல்ல முயற்சித்து அதே  சமயம் அவளைத் தனியே விட அதனால் முடியாதது போல  அவனது நண்பியின் ஒவ்வொரு அசைவையும் பின் தொடர்வதையும் அவனால் காண முடிந்தது. ஆகவே  அவர்கள் இருவருக்கிடையே தவிர்க்க முடியாதது போல்  வாயைப்   பிளந்து கொண்டிருக்கும் வெறுமையைப் பூனையும் அதன் இருப்புமே நிரப்பியது. ஏதொ ஒரு விதத்தில் அது அவர்களைக்  கண்டிப்பாக இணைத்து வைத்தது. டி மீண்டும்  தூங்கச் சென்றான், ஒரு தெளிவில்லாத  சேய்மையான எதிர்பார்ப்புடன்.  அவ்வுணர்வு வெறும் காய்ச்சலின் ஒரு பகுதியாக  இருப்பினும்  அதன் கால வரம்பிற்குள் சில சமயம் தொலைவாகவும் அடைய முடியாததாகவும், மற்ற வேளைகளில்  உடனடியானதாகவும் செம்மையாக வரையப்பட்டதாகவும், அவனது நண்பியின் உடலின் படிமங்கள் மீண்டும் மீண்டும் அங்கு மறுபடியும்  தோன்றின. அதன் பிறகு  அந்த உடல்தான் உறுதியானதாகவும் புலப்படக் கூடியதாகவும், படுக்கையில் அவன் பக்கத்தில் ஒருங்கியது. டி அதைப் பெற்றுக் கொண்டு, தன்னை  அதனுள்ளே உணர்ந்து கொண்டு, அதனுள் இழந்து கொண்டு, காய்ச்சலுக்கு அப்பால், அதே சமயத்தில்  அந்த உணர்ச்சிகள் மூலம், தனக்கு முன்னதாகவே அவள் அங்கே எப்போதும் இருப்பதை, மிக அந்தரங்கமான நெருக்கத்திலும் அடைய முடியாதவளாக, ஆதலால் இன்னும் விரும்பத்தக்கவளாக இருந்ததை அவன் உணர்ந்தான். மேலும் படுக்கையில் மீண்டும்  அவனை அவள் தனியாக விடும் வரை , அவளும் தன் உடலை நாடிய விதத்தையு
், அதற்குப் பிறகு அவள் அடுக்ககத்தில் அவளது புதைவான அசைவுகளை மீண்டும் தொடங்கியதையும், காய்ச்சல் அவனுக்களித்த சிதிலமடைந்த புலனறிவால் அதை  உணர்ந்ததன் மூலம்  அவர்களது புணர்ச்சி நீடிப்பதையும் அவன் உணர்ந்தான்.
அவர்களது திடமான மறுசீரிணைவின்  நீண்ட தருணங்களில்  பூனை டியின் விழிப்புணர்விலிருந்து மறைந்து விடும். ஆனால் ஒரு முறை அதுவும் அவர்களுடன் படுக்கையில் இருந்ததை உணர்ந்தான். அவனது கைகள்  நண்பியின் உடல் மீது அலைந்து கொண்டிருக்கையில் அந்த குட்டி சாம்பல் உருவை எதிர் கொண்டது.  சந்திப்பை மேலும் முழுமையாக்குவதற்காக  அவள் உடனே நகர்ந்து கொண்டாள். ஆனால்    இந்த இலக்கு முற்றிலும் அடையப் படவில்லை. அன்னிய இருப்பு அவளுக்கடுத்து இருப்பதை  டி மறந்தான். காய்ச்சலின் இருண்ட காயலுக்கு நடுவே ஒரு குறுகிய ஒளிக்  கதிரைத் தவிர  வேரெதுவும் இல்லை. சில நாட்களுக்குப் பிறகு  காய்ச்சல் எப்படி வந்ததோ அதே போல் எதிர்பாராத விதத்தில் மறைந்தது. டி மீண்டும் வெளியே செல்ல ஆரம்பித்து மற்றவர்கள் இருக்கும் கூட்டத்தில் நண்பியுடன் கலந்து கொண்டான். அவளிடம் எந்த மாற்றமும்  இருந்ததாகத்  தெரியவில்லை. முழுவதுமாக ஆடையணிந்த அவளது உடல்  வைத்துக் கொண்டிருந்த  அதே ரகசியத்தை டி எல்லோர்  முன்னிலையில் திறந்து காட்ட ஆசைப் பட்டான். ஆனால் அடுக்ககத்திற்குப் பொதுவாக அவர்கள் திரும்பிப் போகும் வேளை வரும் போது, அவளையும் மீறி, விழிப்புணர்வால் அறிந்து கொள்ளாமலே, மன உலைவின் தெளிவான அடையாளங்களைக் காட்டிக் கொண்டு, ஏதோ அடுக்ககத்தில் அவள் எதிர்கொள்ள விரும்பாத ஊர்ஜிதம் ஒன்று அவளுக்காகக் காத்திருப்பதைப் போல, அவர்களின் வருகையை ஒத்திப் போட முயற்சி செய்தாள்.

டியிற்கு விளக்க முடியாத பல தாமதங்களுக்குப் பிறகு அவர்கள் இறுதியாக கட்டிடத்திற்குள் நுழைந்த போது, பூனை புறக்கூடத்திலோ, நடைக்கூடத்திலோ, படிக்கட்டிலோ இருக்கவில்லை. அவர்கள் அவ்வழியே சென்ற போது நண்பி அதைக் கவலையோடு தேடுவதை டி கவனித்தான். பிறகு, அடுக்ககத்தில் அவள் முதுகில் பெரிய சிவப்பான கீறல் ஒன்றை டி கண்டுபிடித்தான். இருவரும் படுக்கையில் இருக்கையில், டி அவளுக்குக் கீறலைச் சுட்டிக் காட்டிய போது அவள் அதைப் பார்ப்பதற்கு முடிந்த வரையில் முயற்சி செய்தாள், பலமாக மூச்சு வாங்கிக் கொண்டு, ஏதோ அதைத் தன் உடம்பிற்கு வெளியே உணர  மிகை முயற்சி செய்வது போல். அதன் பிறகு, அவள்  இறுக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் அசையாமல் கிடக்கையில் டியை விரல் நுனிகளால் கீறலைத் தேய்க்குமாறு கேட்டுக் கொண்டாள், அவள் உள்ளே ஏதொ ஒன்று உடையும் வரையில். திணறும் மூச்சுடன்,  தன்னைப் புணர  டியை அழைத்தாள்.

பூனையை அதற்கடுத்த நாட்களிலும் காணவில்லை. அது மட்டும் அல்லாமல் டியும் நண்பியும் அதைப் பற்றி மீண்டும் பேசவில்லை. உண்மையில் இருவரும் அதை மறந்து விட்டதாகவே  நினைத்துக் கொண்டிருந்தார்கள். பலவீனமான சாம்பல் உருவம் தோன்றுவதற்கு  முன்பிருந்ததைப் போல அவர்களுடைய உறவே அவர்கள் இருவருக்கும் போதுமானதாக இருந்தது.எப்போதும் போல ஞாயிறு காலைகளில், அவள் திறந்த நிலையில் அம்மணமாக, தன் சோம்பல் ததும்பும் உடலை காட்டிக் கொண்டு படுக்கை மீது   முழுவதுமாக நீட்டிக்  கொண்டிருக்கையில் டி அவனுடைய  வழக்கமான அன்றாட சிறு காரியங்களைச் செய்து கொண்டு பொழுதைக் கடத்திக் கொண்டிருந்தான். அனால் அவளால் இப்போது அரைத்தூக்கம் கொள்ள இயலவில்லை. அவளது சோம்பலுக்குப் பின்னால் மறைந்து, அவளது மனோபலத்திற்கு முற்றிலும் அன்னியமான,  ஒவ்வொரு  கணத்திலும் மேலும் உறுதி செய்யப்படும், எதிர்பார்ப்புகளாலான ஒரு தெளிவான மனப்பான்மை  அங்கே தோன்றியது.  அவள் அதை புறக்கணிக்க முயற்சித்த போதிலும், ஓய்வு கிட்டாத போதிலும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க அவளை அது கட்டாயப் படுத்தியது. இறுதியாக, செய்தித்தாள்களுக்காக வெளியே சென்று விட்டுத் திரும்புகையில்,  முழங்கையால் உந்தி படுக்கையிலிருந்து உடலை உயர்த்திக் கொண்டு அவனுக்காகக்  காத்துக் கொண்டிருந்ததை  டி கண்டான். அவளது பார்வை வெளிப்படையாகவே அவனது கைகளை  நோக்கிச் சென்றது , செய்தித்தாள்களைக் கவனிக்காமலே தேடிக் கொண்டிருந்தது. எதிர்பார்த்த சாம்பல் உருவைக் காணத் தவறியதால் தலை கிட்டத்தட்ட வெளியே தொங்கும்படியாக மீண்டும் படுக்கையில் விழ அனுமதித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள் . டி அவளிடம் சென்று அவளை வருடத்  தொடங்கினான்.

“எனக்கு அது வேண்டும்  எங்கே அது ?  நாம் அதைக் கண்டுபிடித்தே  ஆக வேண்டும்,” கண்களைத் திறக்காமலே அவள் முணுமுணுத்தாள். டியின் வருடல்களைப் பெற்றுக் கொண்டு, ஏதொ தன் தேவையுடன் அவை ஒன்றாக இணைந்து பூனையைத் தோற்றுவிக்க வல்லமை உடையவை  போல் அவற்றிற்கு எப்போதையும் விட அதிகமான தீவிரத்துடன் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருந்தாள்.

பிறகு  இருவரும் பரவசமளிக்கும் ஆனந்தத்துடன் வெளியே கதவிற்கு வெகு அருகே  நீண்ட துயரார்ந்த மியாவ்களைக் கேட்டார்கள்.

“யார் கண்டார்கள்,” டி கூறினான் சற்றே கேட்கும்படியான குரலில், அநேகமாக தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டு, ஏதோ, எல்லா வார்த்தைகளும் தேவையற்றவை போல, கதவைத் திறக்க எழுந்து கொண்டு, “ஒருக்கால் அது நம்முள் ஒரு பகுதியாக இருக்கக் கூடும்”

ஆனால் அவன் கூறியதை அவளால் கேட்க முடியவில்லை, அவள் உடல் காத்துக் கொண்டிருந்தது, திறந்த நிலையில் இறுக்கத்துடன், அந்தக் குட்டியான சாம்பல் இருப்பிற்காக மட்டும்.

தமிழாக்கம்: நம்பிகிருஷ்ணன்

09/2013

—————————————————————–

ஹுவான் கார்சியா போன்சே  (1932-2003) மெக்ஸிகோ  நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். நாவல், சிறுகதை, கட்டுரை , நாடகம், மொழியாக்கம்  மற்றும் கலை விமர்சனம் என்று பல துறைகளில் முக்கியப் பங்காற்றியவர். ஒக்டேவியோ பாஸுடன்(Octavio Paz)  வுயெல்டா (Vuelta) என்ற இலக்கிய இதழை நிறுவியவர். பாஸ் இவர்  கதைகளைப் பற்றிக் கூறுவது : “போன்சேயின் எல்லா கதைகளிலும் நாம் ஒரு ரகசியத்தின்  திரை  விலக்கப்படும் விளிம்பிற்கு இட்டுச் செல்லப் படுகிறோம், பின்னர் கதை தன் ரகசியத்தை  தனக்குள் மீண்டும் இழுத்துக் கொண்டு விடுகிறது : மையக் கரு, அடிப்படை உண்மை சொல்லப்படாததில்  எஞ்சி விடுகிறது…”     House on the Beach , Encounters, De Anima  ஆகிய படைப்புகள்  ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வந்துள்ளன.

 நான்கு  கதைகளைக் கொண்ட சந்திப்புகள் (Encounters) என்ற பெயரில் ஹெலென் லேன்  ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த சிறுகதைத் தொகுப்பிலிருந்து “பூனை”  என்ற இந்தக் கதை மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
நம்பிகிருஷ்ணன்  பாஸ்டனில்  வசிப்பவர். அதற்கான முயற்சிகள் ஏதுமின்றி, எழுத வேண்டும்  என்று பல ஆண்டுகளாகச் சுகமாகப் பகற்கனவு கண்டு கொண்டிருப்பவர்.    பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய “அக்கிரகாரத்தில் பெரியார் “என்ற கட்டுரைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும், தமிழிலும் மொழியாக்கம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். “பூனை” சொல்வனத்தில் வந்துள்ள அவரது மூன்றாவது மொழியாக்கம். “கொர்த்தாஸாருடன் பாண்டியாடுதல்” என்ற தலைப்பில் சொல்வனத்தில் கொர்த்தஸாரின் கதைகளுக்கு ஒரு அறிமுகத்தையும் எழுதியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.