ஷேமஸ் ஹீனி (Seamus Heaney:1939-2013) – மண் கரைசலின் வாசம்

ஜி.நாகராஜன் பற்றிய நினைவோடையில், தனக்குப் பிடித்த எழுத்துக்களை வகைப்படுத்துவது எப்படி என சுந்தர ராமசாமி ஒரு வரையறை சொல்கிறார்:

`இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். உன்னிடம் சொல்கிறேன். நீ இவற்றைப் படித்துப் பார்த்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வா என்று சொல்லாமல் கையைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் செல்வதுபோல் எழுதப்படும் புத்தகங்களோடு எனக்குச் சிறு வயதிலிருந்தே உறவு இருந்தது கிடையாது.`

சுந்தர ராமசாமியின் ரசனையில் open endedness உள்ள படைப்புகளுக்கு மதிப்பு கூடுதல். இதையே `என் சொற்கள்` எனும் கட்டுரை தொகுப்பிலும் அவர் முன்வைக்கிறார். இது ஒரு திட்டவட்டமான ரசனைத்தேர்வா எனச் சொல்லத் தெரியவில்லை என்றாலும் நல்ல கவிதை எது எனும் கேள்விக்கு, சுந்தர ராமசாமி சொன்ன பதிலைச் சொல்லலாம் எனத் தோன்றுகிறது.

திருப்பத்தில் எதிர்பார்த்திராத நண்பனைச் சந்திப்பது போல, என்றோ படித்து நம்முள் உறங்கிக்கிடக்கும் எழுத்துகள் திடீரென நம் அனுபவத்தோடு பிணைந்து கொள்ளும் போது, அந்த எழுத்துகள் வரம் பெற்று வந்தவையாகத் தோன்றிவிடுகின்றன. அதே போல, ஏற்கனவே அடைந்த அனுபவத்தை மேலும் நெருக்கமாக உணரச் செய்யும் எழுத்துகளும், ஜடப்பொருளுக்கு உயிர் ஊட்டுவது போல உற்சாகத்தைக் கொடுத்துவிடுகின்றன. திரைப்படங்களில் சிலநேரத்தில் ஒரு ஸ்டில் காட்சி திடுமென உயிர் பெற்று வானில் பறக்கும் பறவைக்கூட்டங்களாக, அலை அடிக்கும் கடலாக மாறுவதைப் போல.

Seamus-Heaney

அயர்லாந்து நாட்டுக் கவிஞர் ஷேமஸ் ஹீனி (Seamus Heaney:1939-2013)  தனது சிறுவயது அனுபவங்களைப் பற்றி சொல்லும்போது,  ‘இக்கால கட்டத்து நவீன உலகுக்கு என்னுடைய சிறு ஊரின் அனுபவங்கள் பழசானவை, தேவையற்றவை என நினைத்திருந்தேன். நான் எழுதத்தொடங்கியபோது சிற்றூர்களின் அனுபவ அறிவு கவிதை உலகுக்குள் நுழையத் தொடங்கிய காலம். டெட் ஹ்யூஸ், ராபர்ட் ஃப்ராஸ்ட் ஆகியோரின் கவிதைகளிலிருந்து இந்த நம்பிக்கையை நான் பெற்றிருந்தேன். அந்த அனுபவங்கள் அளவிடமுடியாத சொத்து என்பதைப் பின்னர் உணர்ந்தேன்,` என்கிறார்.

சமீபத்து ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி அன்று, தனது 74 ஆவது வயதில் ஷேமஸ் ஹீனி டப்ளின் நகரில் இறந்துபோனார் எனும் செய்தி ஊடகங்களில் வெளியானபோது அவரை இயற்கைக் கவிஞர் என வர்ணித்திருந்தனர். இயல்புவாதக் கவிதைகள் எழுதியவர் என்றனர் சிலர். இருபதாம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த கவி மொழி இவர் வழியாக வெளிப்பட்டிருக்கிறது என்பதில் விமர்சகர்களுக்கு வேறு அபிப்ராயம் கிடையாது. ஷேமஸ் ஹீனியின் கவிதைகள் மண்ணில் புரண்டு விளையாடிய ஒரு சிறுவனின் வெகுளித்தனத்தோடு இருக்கின்றன. சாம்பல் பூசியது போல உடல்முழுவதும் புழுதியோடு களைத்து வீடு திரும்பும் சிறுவனை இந்த நாட்டுக்காரன், இந்த ஊர்க்காரன் எனச் சொல்லிவிடமுடியுமா?

அயர்லாந்து நாட்டு நில வடிவங்களையும், ஒவ்வொரு பருவங்களில் மாறுபடும் மண்ணின் செழுமையையும் ஷேம்ஸ் ஹீனியின் கவிதைகள் படம்பிடிக்கின்றன. ஆனால் கற்பனாவாதத்தின் போதங்கள் மட்டும் அவரது கவிதை அழகியல் அல்ல. வரலாற்றின் உள்ளிருந்து தனது நிலப்பகுதியின் மாற்றங்களைப் பதிவு செய்கிறார். தென் அயர்லாந்துக்கும் வடக்கு அயர்லாந்துக்கும் இடையே நிலவிய அரசியல் வன்முறைகளும், அவற்றின் பாதிப்பால் மக்களின் எளிமைக்கு ஏற்பட்ட தசம மாற்றங்களும் முக்கிய கருப்பொருட்கள்.

வடக்கு அயர்லாந்து நாட்டின் அரசியல் குழப்பங்களைத் தனது சிறுவயதில் பார்த்திருந்த ஷேமஸ் ஹீனியின் கவிக்குரல் நாற்பதாவது வயதில் மானுடப்பொதுமைக்கான அடையாளமாக மாறியது என்கிறார் அவரது நண்பர் க்றிஸ்டோஃபர் பென்ஃபி (2). அதற்கு முன்வரை அயர்லாந்து நாட்டின் புதிய தலைமுறை பிரிந்து வந்திருக்கும் பாதை பற்றிய கூறல் நிறைந்த கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார்.

`தோண்டுதல்` எனும் புகழ் பெற்ற கவிதை, தன்னுடைய அப்பாவின் தலைமுறையினர் நிலத்தோடு பிணைந்து வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியது.

எனது விரலுக்கும் கட்டைவிரலுக்கும் இடையே

துப்பாக்கி போல சொகுசாய் கிடக்கிறது பேனா

அவரது தந்தையைப் போலவே என் அப்பாவும்

நன்றாக ஏர் ஓட்டுகிறார்

..என் தலையில் விழிக்கும் உயிர்ப்பான வேர்கள்

ஆனாலும் அவர்களைத் தொடரும் ஏர் எதுவும் என்னிடமில்லை

எனது விரலுக்கும் கட்டைவிரலுக்கும் இடையே

சொகுசாய் கிடக்கிறது பேனா

நான் அதைக்கொண்டு நோண்டுகிறேன்.

ஷேம்ஸ் ஹீனியின் கவிதைகள் ஐம்புலன்களைக் கூர் தீட்டி எழுதப்பட்டவை. கவிதைகளில் மண் கரைசலில் கிடக்கும் ஈர உருளைக்கிழங்கின் வாசனையும் (Digging), பழம் சேகரிக்கும்போது முதல் பழம் வட்டியில் விழும் அளபெடை ஒலிகளும் (Casualty), கார் கண்ணாடியில் விழும் மர நிழல்களின் நெருக்கமும் விலகலும் போல காட்சி மாற்றங்களும் (From the Frontier of Writing), பறித்த ப்ளாக்பெர்ரிப் பழங்கள் முழுமையாக குடுவைக்குள் விழாமல் விரலில் சிறிது ஒட்டிக்கொள்வதும் (Blackberry picking) என ஒவ்வொரு புலன் அனுபவங்களும் கவிதை வரிகளாகின்றன. ஒரு அனுபவத்தை பல குறிப்புகளாக மாற்றும்போது ஏதேனும் ஒன்றோடு நமது அனுபவம் இயைந்துவிடுகிறது. [மேலே அடைப்புக் குறி்களுககுள் கொடுக்கப்பட்ட ஆங்கிலச் சொற்கள் கவிதைகளின் பெயர்கள்]

கடந்த மாதம் என் மகளுடன் வீட்டருகே இருந்த பெர்ரி பழங்களைப் பறிப்பதற்காகப் போயிருந்தேன். ஷேமஸ் ஹீனியின் `ப்ளாக்பெர்ரி பறித்தல்` கவிதை அன்று நடந்தவற்றை முன்னே நிறுத்திவிட்டது. summer’s blood, glossy purple clot, plate of eyes, stains upon the tongue கவிதையின் ஒவ்வொரு வரியும் மட்கிய இலைகள் போர்த்திருந்த ஈர மண்ணின் வாசத்தை மீட்டு வந்தது.  இந்த கவிதையின் உட்பொருள் காட்டும் நிராசை, ஏமாற்றம் பெர்ரி பறிக்கும்போதே நடந்துவிடுகிறது. நிலத்தில் வேகமாக ஓடிச் சேகரிக்கும் குதூகலம், எலி நிறப் பழுப்பு பச்சையம் கண்டதும் ஏற்படும் அருவருப்பு, ஒவ்வொரு வருடமும் வரும் ஏமாற்றம் – கவிதையை அப்படியே நிகழ்த்திவிட்டது.

ஒரு பெர்ரியை அப்படியே பறித்துக் கூடையில் போட்டுவிட முடியாது். ப்ளாக்பெர்ரி பழம் சிறு நாவல் பழக்கொத்து போன்றது – தொட்டதும் நசுங்கிவிடும். என் நாலு வயதுப் பெண்ணின் விரல் பட்டுக்கூட நசுங்கக்கூடிய பழம் தான். ரத்தக்கறை விரல்களுடன் பறிக்கப் பறிக்க பொறுமை போனதில் பாதி பழம் மட்டுமே கூடைக்குள் போகும், மீதம் கூழாக நம் கையில் எஞ்சிவிடும். கவிதையில் சொல்வது போல ஒவ்வொரு வருடமும் ஏமாறத் தேவையில்லை. ஒரு பழத்திலிருந்து மற்றொன்றுக்குப் போகும்போதே ஏமாற்றம் தான்.  முழுவதுமாக அள்ளிப் பறித்து குடுவையில் சேகரித்துவிடமுடியாதா எனும் ஏக்கம் பொங்கிவரும். விரல்களில் எஞ்சும் `கோடைக்கால ரத்தம்` நம்முடன் தங்கிவிடும்.

fingers

ப்ளாக்பெர்ரி பறித்தல்

ஆகஸ்ட் முடிவில், சூரியனும் அடர் மழையும் வருங்கால்

ப்ளாக்பெர்ரி பழங்கள் ஒரு முழு வாரம் பழுத்திருக்கும் .

பளபளப்பான கத்திரிப்பூ வண்ண உறைகட்டி, சிகப்பு, பச்சை, முடிச்சென இறுகிய பிறவற்றின், தொடக்கமாக முதல் பழம்.

சாப்பிடுகிறீர்கள்; கெட்டித்த வைனைப் போல சுவைமிகுந்த தசை.

கோடைக்கால ரத்தம் அதனுள்.

நாக்கில் எஞ்சியிருக்கும் கறை பறிக்கும் இச்சையைத் தூண்டும். சிகப்புக் கறை மேலும் படிந்ததில்,

களைகள் கிழிக்க, ஈரப் புற்கள் பூட்ஸ்களை வெளிறச்செய்ய

பால் குடுவை, கடலை டப்பா, ஜாம் பாட்டில்களைத் தேடிப்

பெருவேட்கை எங்களை ஓடச்செய்தது.

உலர்புல் வயல்கள் , சோளப்பயிர்கள், உருளைக்கிழங்கு நிலங்கள் வழியாக

குடுவைகள் நிரம்பும் வரை அலைந்து சேகரித்தோம்.

டப்பாக்களின் அடியில் விழுமொலி கேட்குமட்டிலும் பச்சைப் பழங்களும் அதன் மேல் பெருத்த கரிய கட்டிகள் சேகரித்ததில்

தட்டு நிறைய கண்களைப் போல் ஜ்வாலை.

முள் குத்தி உறுத்திய கைகள் மற்றும் ப்ளூபியர்ட்டின் (*) வழுக்கும் உள்ளங்கைகளுடன்

தொழுவத்தில் புது பெர்ரிகளை மறைத்தோம்.

குளியல்தொட்டியை நிரப்பும்போது முதல் இடர் கண்டோம்,

எங்கள் புதையலில் புழங்கிற்று எலி நிற பழுப்புப் பச்சையம்.

அதன் சாறும் நாறியது. புதரிலிருந்து பறித்ததும் பழம் நொதித்ததில் இனிப்பு தசை புளிப்பானது.

எனக்கு எப்போதும் அழ வேண்டும் போலத் தோன்றும்.

சுவையான குடுவை முழுமையும் அழுகிய வாசமாகியது மாபெறும் அநீதி.

ஒவ்வொரு வருடமும் தக்கவைக்குமென நம்பிக்கையோடிருப்பேன்,

அவை தங்காதெனத் தெரிந்தும்.

* – தனது ஏழு மனைவிகளைக் கொன்றவர் ப்ளூபியர்ட் எனும் கனவான். அவரது கைகள் சதா ரத்தக் கறையோடு காட்சியளிக்கும் எனும் பொருள்படும்படி ப்ளூபியர்டின் கைகள் எனும் சொலவடை உருவானது.

 heaney

1995 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஷேமஸ் ஹீனி இருபதுக்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகளும், மொழியாக்கங்களையும், நாடகங்களையும் வெளியிட்டுள்ளார். விமர்சகர்களையும், கலை ரசிகர்கர்களையும் மட்டுமல்லாது ஜனரஞ்சக கவிதை ரசிகர்களையும் அவரது கவிதைகள் ஈர்த்தன. Selected Poems என 1990களில் வெளியான தொகுப்பின் மூலம் ஷேமஸ் ஹீனியின் கவி புனையும் ஆற்றல் புதுத் திசைக்குள் சென்றதாக வில்லியம் லோகன் எனும் கவிஞர் தெரிவிக்கிறார். தனது 74 ஆவது வயதில் இறந்தபோது, பத்துக்கும் மேற்பட்ட கவிதை விருதுகளை வென்றிருந்தார். கடந்த நூற்றாண்டின் மாபெரும் கவிதை ஆளுமைகளில் ஒருவர் எனப் போற்றப்பட்ட ஹீனி, `கவிதை காட்டும் நிஜம் உருமாறக்கூடியது. காலத்துக்கும் நேரத்துக்கும் கட்டுப்படும்போது ஒருவித உண்மை முகப்பூச்சோடும், மற்றொரு காலத்தில் வேறொரு உண்மையோடும் மாறக்கூடியது உண்மையான கவிதையின் அடிப்படை,` எனத் தனது நோபல் பரிசு உரையில் தெரிவிக்கிறார். அவரது கவிதைகளைப் படிக்கும்போது அவர் கூறியதில் மிகை இல்லை என்றே தோன்றுகிறது.

**

இக்கட்டுரையில் ஷேமஸ் ஹீனி பற்றி பிறர் சொன்ன குறிப்புகள் கீழ்கண்ட கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை

  1. Seamus Heaney – http://www.poetryfoundation.org/bio/seamus-heaney
  2. What Seamus Heaney taught me – http://www.nybooks.com/blogs/nyrblog/2013/sep/01/what-seamus-heaney-taught-me/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.