உப்புக் காங்கிரஸ் – தோற்றமும் முடிவும்

satyagraha
தண்டியில் உப்பு எடுக்க மகாத்மா யாத்திரை செய்த சமயம், 1930-ம் வருடம், கல்லிடைக்குறிச்சி ஜூனியர் கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்த நாங்கள், கல்லிடைக்குறிச்சி உப்புக் காங்கிரஸை உருவாக்கினோம். நாடெங்கும் சுதந்திரக் காற்று வீசுகையில், எங்கள் பங்குக்கு வெள்ளைக்காரனை உயிரை வாங்க முடிவு செய்தோம்.
காங்கிரஸின் முதல் கூட்டத்தில், எங்கள் முதல் நடவடிக்கையாக குண்டு போட வேண்டும் என்று ஆறுமுகம் விருப்பம் தெரிவித்தான். எங்கே, எப்படி என்ற கேள்விகள் ஆறுமுகத்தின் கோபத்தைக் கிளறி விட்டது. எங்களை மிதவாதிகள் என்று குற்றம் சாட்டினான்.
“வைஸ்ராய் மேல குண்டு போடலாம்,” என்றான்.
வைஸ்ராய் கல்லிடைக்குறிச்சி வரும் வரை பொறுக்க வைத்திக்கு இஷ்டமில்லை.
“போலீஸ் ஸ்டேஷன் மேல குண்டு போடுவோம்,” என்றான்.
இன்ஸ்பெக்டர் மாமாதான் கிரிக்கெட் கிளப்பைத் திறந்து வைத்தார் என்பதால், இந்தத் திட்டம் கை விடப்பட்டது.
மாதவாச்சாரி, “கெமிஸ்ட்டிரில முப்பது மார்க் வாங்கிட்டு குண்டு வைக்கறது பத்தி யோசிக்கிறதே தப்பு,” என்றான்.
ஆறுமுகம் தீக்குச்சிகளையும், புளியையும் சேர்த்து குண்டு செய்யும் உத்தி ஒன்று பற்றிப் பேசிக் கொண்டிருந்த போதே, வைத்தி அடுத்த கட்டத்துக்குச் சென்றான்.
“ஆற்றங்கரையில இறங்கி உப்பு எடுக்கலாம்.”
மாதவாச்சாரியின் அறிவுரைகளை எல்லோரும் எதிர்ப்பது அவன் தன்னம்பிக்கைக்கு விட்ட சவாலாக இருந்தது. பிற்காலத்தில் சிவில் சர்வீஸில் சேர்ந்து கலெக்டராக வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்தவனுக்கு நாலு கிரிக்கெட் சகாக்களைக் கூட வழி நடத்த முடியாதது பெரும் வெறுப்பை அளித்தது.
அன்று இரவு மாதவன் என் வீட்டுக்கு வந்தான். நான் உப்பு காங்கிரஸுக்கான வழிமுறைகளை எழுதிக் கொண்டிருந்தேன். செக்க்ஷன் ஏழு பிரகாரம், பிரஸிடெண்டும் இல்லாமல், வைஸ் பிரஸிடெண்டும் இல்லாமல், செக்ரடெரியும் இல்லாமல் இருக்கும் போது, காங்கிரஸ் விக்கெட் கீப்பர் சொன்னபடி நடக்க வேண்டும் என்று எழுதிக் கொண்டிருந்த போது, மாதவன் வந்தான்.
“எனக்கு இந்த ஆறுமுகத்தை நினைச்சு பயமா இருக்கு. சாயந்திரம் போகும் போது பாபநாசம் அணைக்கட்டுக்கு குண்டு வைக்கப் போறேங்கிறான்.”
எனக்குச் சிரிப்பு வந்தது. “புளியை வைச்சா?”
“நீ சிரிக்கிற. எனக்கு இவன் ஏதாவது பைத்தியக்காரத்தனம் பண்ணாம இருக்கணுமேன்னு இருக்கு.”
“பேசாம ஆறுமுகத்தை காங்கிரஸை விட்டு நீக்கிடலாமா?”
“வேண்டாம். அவனை அன்பால திருத்தணும்.”
எனக்கு ஆறுமுகத்தை விட மாதவன் பெரிய ஆபத்து என்று தோன்றியது. சில நாட்களுக்குப் பிறகு நடந்த காங்கிரஸ் கூட்டம் ரகளையில் முடிய இதுவே காரணமாயிற்று.
charkha-incs
சனிக்கிழமை நடந்த கூட்டத்திற்கு முன்னால், ‘மிதவாதிகள்’ ஆகிய மாதவன் கும்பலுக்கும், ‘தீவிரவாதிகள்’ ஆகிய ஆறுமுகம் கும்பலுக்கும் ஆதரவு தேடும் முயற்சி மும்முரமாக நடந்து வந்தது.
பதினெட்டு வயதுக்குக் குறைவான கல்லிடைக்குறிச்சி வாழ் மேன்மக்கள் யாவரும் அங்கத்தினர்கள் என்பதால், நண்டு, சிண்டு, வாண்டுகள் எல்லோருக்கும் நடுவே பிரசாரம் நடந்தது.
ஆறுமுகம் இன்னமும் குண்டு வைக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தான். பாபநாசம் அணைக்கட்டில் இருந்து சற்றே இறங்கி எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியருக்குக் குண்டு வைப்பதாகத் திட்டம் போட்டான். இது பலருக்கும் பிடித்தமான வேலையாக இருந்தது. குண்டு செய்யப் பல வழிமுறைகள் சோதிக்கப்பட்டன.
சிவன் கோவிலின் பக்கத்தில் இருந்த மண்டபத்தில் எல்லோரும் கூடியிருந்தோம். நான் காங்கிரஸின் வழிமுறைகள் என்று எழுதிய பத்து பக்கங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். ஆறுமுகமும் மாதவனும் எதிரில் முதன்மையாக அமர்ந்து இருந்தார்கள். வழிமுறைகளின்படி, காரியதரிசி பதவிக்கு தேர்தல் தொடங்கியது. ஆறுமுகமும் மாதவனும் எழுந்து நின்றார்கள்.
“வழிமுறைகளின்படி, பதிமுன்று வயதைக் கடந்தவர்கள் தான் காரியதரிசி ஆகலாம்,” என்றான் மாதவன். ஏனோ செந்தமிழில் பேசினான்.
ஆறுமுகம், “எனக்கு பதினாலு வயசாச்சு,” என்றான்.
“யுவர் ஆனர்!” என்று என்னைப் பார்த்துக் கத்தினான் மாதவன். நான் விழித்தேன்.
“ஆறுமுகத்தின் தந்தையுடைய கூற்றுப்படி ஆறுமுகம் பதிமுன்று வயதைக் கடக்க இன்னும் ஒரு மாதம் உள்ளது.”
யாருக்குமே கூற்று என்றால் என்ன என்று புரியவில்லை.
ஆறுமுகம், “சதி, சதி,” என்று கூச்சலிட்டான்.
நான், “வழிமுறைகளின்படி மாதவன் சொல்றது சரி தான்,” என்றேன்.
“அடப் பாவி,” என்று கத்தினான் ஆறுமுகம்.
“மாதவாச்சாரி ஒழிக”, என்று வைத்தி கத்தினான்.
மாதவன், “இது எல்லாரும் சேர்ந்து நடத்த வேண்டியது,” என்று தொடங்கிய போது, ஆறுமுகம் முன்னால் வந்து அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டான்.
மாதவன் மகாத்மாவின் உண்மையான சீடன் என்பதை மறந்து ஆறுமுகத்தை உதைத்தான்.
சீக்கிரத்தில் இருவரும் தரையில் கட்டிப் புரள, உப்புக்காங்கிரஸின் மதிப்பிற்குரிய அங்கத்தினர்கள் சுற்றி நின்று கையைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். நான் “ஆர்டர், ஆர்டர்” என்று கத்திக் கொண்டிருந்தேன். சிவன் கோவில் பட்டர் கையில் குச்சியை எடுத்துக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்ததும் எங்கள் காங்கிரஸ் விரைவாகக் கலைந்தது.
மாதவன் செந்தமிழை விடுத்துக் கெட்ட வார்த்தைகளால் ஆறுமுகத்தை அர்ச்சனை செய்தவாறு ஓடினான்.
charkha-incs
இந்தப் பெருமைக்குரிய சம்பவத்திற்குப் பிறகு உப்புக் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. மிதவாதிகள் ஆகிய நாங்கள் தீவிரவாதிகளுடன் பேசுவதில்லை. ஆறுமுகம், மாதவன், வைத்தி, நான் எல்லோரும் ஒரே வகுப்பில் படித்து வந்ததால் இந்தச் சண்டை மேலும் வலுத்தது.
எங்கள் காங்கிரஸ் மீட்டிங்கில் கதர் துணி உடுத்தாதவர்களுடன் பேசுவதில்லை என்று தீர்மானம் போட்டோம். ஆறுமுகம் இது பற்றிக் கேள்விப்பட்டு, ஒரு படி மேலே போக முடிவு செய்தான். கதர் துணி உடுத்தாத ஆசிரியர்கள் மண்டையை உடைப்பது என்பதே அவன் முடிவு.
இந்த நேரத்தில் தான் சுந்தரலிங்கம் வாத்தியார் எங்கள் வாழ்க்கையில் நுழைந்தார்.
கும்பகோணம் சுந்தரலிங்கம் ஐயர் என்ற முழுப் பெயர் கொண்ட சுந்தரம் வாத்தியார், வரலாற்றில் புலிகளான ஒன்பதாம் வகுப்புக்கு இங்கிலாந்தின் வரலாற்றை விளக்க வந்தார். மில் துணி என்னும் ஆங்கிலேயர் துணி அணிந்து, குடுமி துறந்து கிராப் வெட்டி, சவ்வாதுப் பொட்டணிந்து அழகான மனைவியின் கையைத் துணிவுடன் பற்றி கல்லிடைக்குறிச்சி தெருக்களில் வலம் வந்தார் புது வாத்தியார்.
நாங்கள் அவர் வரவைப் பயத்துடன் வரவேற்றோம். கையில் எப்போதும் குச்சி வைத்திருந்தார். நாடகங்களில் வரும் நாயகர்களைப் போல ‘விஷ், விஷ்’ என்று அதை வீசியவாறு வகுப்புக்குள் வருவார்.
புதிது புதிதாகத் தண்டனைகள் கைவசம் வைத்திருந்தார். ஒரு முறை வகுப்பில் பேசியதற்காக ஒரு மாணவனைத் தலை கீழாகப் பத்து நிமிடம் நிற்க வைத்தார்.
அவர் வந்த சில நாட்களில், ஒரு நாள் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. நான் உப்புக் காங்கிரஸின் முந்தைய கூட்டத்தைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து எழுதிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு கூட்டத்தின் விவரங்களும் நேராக ஸபர்மதி ஆசிரமத்தில் மகாத்மாவின் பெயருக்கு அனுப்பப்பட்டன. இந்த விவரங்களில் ஆறுமுகத்தைப் பற்றி விரிவாகப் புகார் கொடுத்திருந்தோம். மகாத்மாவிடமிருந்து பதில் எதுவும் வராதது ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய கணிப்பில் இன்னும் சிறிது காலத்தில் கல்லிடைக்குறிச்சி சுதந்திரம் பெற்று விடும். பிறகு அம்பாசமுத்திரம், திருநெல்வேலி என்று பெரிய லிஸ்டே இருந்தது.
மாதவன் சிறிது நாட்களாக வீட்டில் ஆட்டுப் பால் தான் குடிப்பேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தான். பாதி நாள் உண்ணாவிரதம் என்ற பெயரில் மதிய உணவைத் தியாகம் செய்து மத்தியான வகுப்புகளில் அரை மயக்கத்தில் இருந்தான்.
திடீரென்று சுந்தரம் வாத்தியார் மாதவனைப் பார்த்து, “தம்பி, சொல்லு, முதலாம் சார்லஸ் மன்னர் என்ன செய்தார்?” என்று கேட்டார்.
மாதவன் சும்மா இருந்தான்.
“என்ன செய்தார்?” என்று கேட்டார் மறுபடி.
மாதவன் எழுந்து பேசாமல் நின்றான்.
“சொல்லு தம்பி”, என்றார் வாத்தியார்.
மாதவன் விறைப்பாக நின்றான்.
வாத்தியார் குச்சியை எடுத்துக் கொண்டு அருகில் வந்தார்.
“கதர் துணி உடுத்தாப் பதர்களுடன் பேசுவதில்லை”, என்று கத்தினான் மாதவன். நான் தலையில் கை வைத்துக் கொண்டேன்.
வாத்தியார் அவன் காதைப் பற்றித் திருகிய வண்ணம் முன்னே இழுத்தார். “நூறு தோப்புக்கரணம் போடு வா,” என்றார்.
மாதவன் இதை எதிர்பார்க்கவில்லை என்று தோன்றியது. நாங்கள் படித்த எந்தப் பத்திரிகையிலும் காங்கிரஸ் தலைவர்கள் தோப்புக்கரணம் போட்டதாகச் சரித்திரமில்லை. இருந்தாலும், வீரமாக முன்னால் சென்று தோப்புக்கரணம் போடத் தொடங்கினான்.
ஆறுமுகம் பின் பெஞ்சியில் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான். வாத்தியார் அதைப் பார்த்து அவனிடம் திரும்பினார்.
“நீ சொல்லு தம்பி, முதலாம் சார்லஸ் மன்னர் என்ன செய்தார்?”
ஆறுமுகம் எழுந்து, திருதிருவென்று விழித்தான். பிறகு வரலாற்றில் எல்லாக் கேள்விகளுக்கும் பொருந்தும் பதிலைச் சொன்னான்; “குளம் வெட்டினார், மரம் நட்டார்.”
அவனும் சேர்ந்து தோப்புக்கரணம் போட வேண்டி வந்தது.
charkha-incs
சுந்தரம் வாத்தியாரின் அட்டகாசங்களைக் கண்டு எங்களுக்குப் பொறுக்கவில்லை. ஏதாவது சீக்கிரத்தில் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தோம் ஆறுமுகம் செய்தே விட்டான்.
ஒரு சனிக்கிழமை காலையில் சுந்தரம் வாத்தியார் வீரப்பபுரத் தெரு வழியாகக் கத்திக் கொண்டே நடந்து போனார். கையில் ஒரு கொத்துத் துணி வைத்திருந்தார். பின்னால் நாலைந்து பொடியன்கள் ஓடினார்கள். ஒன்றிரண்டு நாய்களும் உற்சாகமாகக் குரைத்தவாறே சென்றன.
நான் கை ராட்டை சுற்ற முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஒரு நூல் கூட வராமல் சலித்துப் போய் வெளியே வந்து பார்த்தேன்.
வாத்தியார் மாதவன் வீட்டு வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தார். சுற்றிப் பெரிய கூட்டம் சேர்ந்து இருந்தது. நானும் போய்ச் சேர்ந்து கொண்டு, “என்ன ஆச்சு?” என்று ஒருவரிடம் விசாரித்தேன்.
“தெரியலை..வாத்தியார் துணியை யாரோ நாசம் பண்ணி வைச்சுட்டா போல இருக்கு.”
மாதவனின் அப்பா குடுமியை முடிந்து கொண்டு வெளியே வந்தார். அமைதியாக, “என்ன சுவாமி?” என்று கேட்டார்.
“உம்ம பையன் பண்ணின வேலையைப் பாரும். நான் எந்தத் துணி உடுத்தினா இவனுக்கென்ன.. சுத்த ரோக்,” என்றார் வாத்தியார்.
மாதவனின் அப்பா, “அது என்ன அப்படிச் சொல்லிட்டீர்? மகாத்மாவே மில் துணி உடுத்தாதேனு சொல்றச்சே..” என்று ஆரம்பித்தார்.
“சுத்த நான்ஸென்ஸ். எகனாமிக்ஸ்படி..” என்று வாத்தியார் தொடங்கி விட்டு, பிறகு பின்னால் நின்ற தம் மனைவியைப் பார்த்தார். உடனே மீண்டும் உச்ச ஸ்தாயியில், “இது என்ன அக்கிரமம்,” என்று கத்தினார்.
மாதவன் வெளியே வந்தான். கையில் கீதைப் புத்தகம் வைத்திருந்தான். எல்லோரையும் பார்த்துக் கும்பிட்டான். யாரும் அவனைக் கவனித்ததாகத் தெரியவில்லை.
சுந்தரம் வாத்தியார் கையில் இருந்த சட்டையை எடுத்து விரித்துக் காட்டினார். அதன் முதுகில், ‘மீல் துனி ஒலிக’, என்று கரியால் எழுதியிருந்தது. “இந்த மாதிரி வெளியில காயப் போட்டிருந்த எல்லா துணியிலும் எழுதியிருக்கு,” என்றார் வாத்தியார்.
எனக்கு அந்தத் தப்பும் தவறுமான தமிழைப் படித்த உடனே இது யார் வேலை என்று தெரிந்து போயிற்று.
“என்ன சொல்றீர் இதுக்கு?” என்று கேட்டார் வாத்தியார்.
மாதவனின் அப்பா அதைப் பார்த்து விட்டு, “இது இவன் கையெழுத்து இல்லை,” என்றார்.
சுந்தரம் வாத்தியார், “அப்படின்னா என்ன அர்த்தம்”, என்று கேட்டார்.
“மாதவன் கையெழுத்து இது இல்லை சுவாமி. அதோட அவன் தமிழ் தப்பா எழுத மாட்டான்.”
சுற்றிச் சில பேர் இதை ஆமோதித்தார்கள்.
“நான் அமைதியா சத்தியாக்கிரக முறைப்படி போராடணும்னு நினைக்கிறவன். நீங்களா மனம் திருந்தி…,” என்று மாதவன் தொடங்கினான். சிறிது நேரத்தில் அவன் மட்டும் பேசிக்கொண்டிருந்தான். சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் போய் விட்டார்கள்.
charkha-incs
நாடெங்கும் நடந்து கொண்டிருந்த போலீஸ் அடக்கு முறையால் உந்தப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் முன்னால் நாங்கள் போராட்டம் நடத்தத் தீர்மானித்தோம். அட்டைகளுடன் ஒரு சனிக்கிழமை காலை பத்து மணிக்கு, பத்து பேராகப் போய் போலீஸ் ஸ்டேஷன் எதிர்ப்புறம் நின்றோம்.
யூனிஃபார்மைக் கதரில் போடுவதில் இருந்து, துப்பாக்கியைக் கை விட்டு ராட்டையைப் பிடிக்கும் வரை பல வித போதனைகளுடன் சிறிது நேரம் கத்தினோம். மூவர்ணக் கொடியை ஆட்டினோம். கடைசியில் போலீஸை துரோகிகள் என்றும் வெட்கம் கெட்டவர்கள் என்றும் விமரிசித்துக் கோஷம் போட்டோம்.
தொண்டை வறண்டு போய் எல்லோரும் களைத்துப் போன தருணத்தில் இன்ஸ்பெக்டர் வெளியே வந்தார். எங்களை உற்றுப் பார்த்து விட்டு, “இங்க வாடா ரகு,” என்றார் என்னைப் பார்த்து.
மாதவன் என் கையைப் பிடித்து, “ஜெயில்ல போட்டாலும் போடுவாங்க. தைரியமா இருடா ரகு. மகாத்மாவை நினைச்சுக்கோ,” என்றான்.
நான் தலையை ஆட்டி விட்டு, தெருவைக் கடந்து, அவரிடம் போய், “என்ன மாமா?” என்றேன்.
“இந்தா.. இந்தத் தூக்குல நல்ல சக்கைப் பழம் அரிஞ்சு இருக்கு.போகும் போது, ஆத்துல மாமி கிட்ட போய்க் குடு. அவளுக்குச் சக்கை ரொம்பப் பிடிக்கும்.”
“சரி மாமா”, என்று நான் தூக்கைத் தூக்கிக் கொண்டு திரும்பினேன். எல்லோருமாக அவரவர் வீட்டுக்குக் கிளம்பினோம்.
வீரப்பபுரத் தெருவில் நுழையும் போது, எதிரே ஆறுமுகம் வந்து கொண்டிருந்தான். எங்களைப் பார்த்தும் பார்க்காத மாதிரிப் போனான். சற்று தூரம் சென்ற பிறகு எங்கள் மேல் ஒன்றிரண்டு கற்கள் வந்து விழுந்தன.
மாதவன் என்னிடம், “டேய், நம்ப காங்கிரஸ் திரும்ப ஒண்ணாச் சேரணும். ஆறுமுகத்துக்கு ஒரு லெட்டர் எழுதுவோம்,” என்றான்.
அன்புள்ள ஆறுமுகம்,
வந்தனம்.
உப்பு காங்கிரஸ் தொடங்கிய பின் கருத்து வேறுபாடுகளால் நாம் பிரிந்தோம். மனிதருள் தெய்வம் மகாத்மா காந்தியின் வழியில் போக நான் ஆசைப்பட்டேன். லோகமான்யராம் திலகர் வழிச்செல்ல நீ அவாக் கொண்டாய்.
சுதந்திரத்துக்கான பாதைகள் பல. இருந்தாலும் சத்தியாக்கிரகத்தில் நம்பிக்கைக் கொண்ட நான், உன்னிடம் ஒன்று கேட்கிறேன்.
அடுத்த சனிக்கிழமை நாம் இருவரும் சிவன் கோவில் மண்டபத்துக்கு அருகில் மீண்டும் சந்திப்போம். நான் காந்தியின் வழி பற்றி வாதம் புரிகிறேன். நீ திலகர் பற்றிப் பேசு.யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் பாதையில் காங்கிரஸ் நடக்கட்டும்.
இப்படிக்கு,
மாதவன் சொல்படி, ரகுநாதன்.”
ஆறுமுகத்திடம் இருந்து சீக்கிரமே பதில் வந்தது. “எலேய் மூக்கு நோண்டி மாதவா! வாதம்…சாதம்…பக்கவாதம்.தைரீயமிருந்தா ஒண்டிக்கு ஒண்டி வாலேய்..உன்னை உதைக்கிற உதையில நீ நாய் மாதிரி ஓடல, என் பேரு அருமுகம் இல்ல.”
இதைப் படித்ததும் மாதவன் முகம் வாடியது. என்னை சோகத்துடன் பார்த்தான். “என்னை அடிச்சாத் தான் அவன் மனசு அடங்கும்னா நல்லா அடிக்கட்டும்டா,” என்றான்.
“மாதவா..உளறாதே. நீ வேற பட்டினி கிடந்து இளைச்சிருக்க.”
இருந்தாலும் கல்லிடைக்குறிச்சி வாழ் பொடிசுகள் யாவரும் அந்த வாரம் முழுவதும் சனிக்கிழமை நடக்கவிருந்த பெரும் சண்டை பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் வெள்ளிக்கிழமை காலை வகுப்பில் சுந்தரம் வாத்தியார் திடீரென்று, “நாளைக்கு எல்லோரும் ஸ்கூலுக்கு வரணும்,” என்றார்.
கல்லிடைக்குறிச்சி ஊரின் எல்லையில் இருந்து அரை மணி நடக்கும் தூரத்தில் ஒரு சிறு குன்று இருந்தது. காடாகச் செடிகளும் கொடிகளும் சுற்றி இருந்தாலும், அந்தக் குன்றின் மேல் மரங்கள் எதுவும் கிடையாது.
வெறும் பாறைகளும் கற்களும் தான் இருந்தன. குன்றுக்கு அருகில் ஒரு காளி கோயில் இருந்ததால் நாங்கள் அந்தப் பக்கம் அதிகம் செல்வதில்லை.
சில நாட்களாக வெள்ளைக்காரர்கள் இரண்டு பேர் அங்கு வந்து கூடாரம் அடித்துத் தங்கியிருந்தார்கள். ஏதோ தோண்டிக் கொண்டிருந்தார்கள்.
சுந்தரம் வாத்தியார் எங்களை கிளாஸ் டூராக அங்கு அழைத்துப் போவதாக அறிவித்தார். சரித்திரத்தைப் பற்றியும் அகழ்வாராய்ச்சி பற்றியும் அந்த வெள்ளைக்காரர்களுடன் பேசித் தெரிந்து கொள்ளலாம் என்று திட்டம் போட்டிருந்தார்.
வாத்தியார் இதைச் சொல்லி விட்டுச் சென்றதும், ஆறுமுகம் எழுந்து,”எலேய் மாதவா… நாளைக்குக் காளி கோயில்ல நீ தாம்ல பலி,” என்றான்.
charkha-incs
மறு நாள் காலை பள்ளிக்குச் செல்லும் போது மாதவன் என்னுடன் வந்தான். வெள்ளைக்காரர்களை முதலில் பார்க்கிறோம் என்பதில் அவன் துடிப்பு அதிகமாகி இருந்தது. அவர்கள் முன்னால் ‘வைஷ்ணவ ஜனதோ’ பாட முடிவு செய்திருந்தான்.
நான் ஆழ்ந்த யோசனையில் இருந்தேன். வெள்ளைக்காரர்கள் எதற்காக கல்லிடைக்குறிச்சி வருகிறார்கள்? சரித்திர ஆராய்ச்சி செய்ய இங்கு என்ன இருக்கிறது? எனக்குத் தெரிந்து கல்லிடைக்குறிச்சியில் நடந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் விசாலம் மாமி வீட்டு மாடியில் போட்டு வைத்திருந்த வடகம் திருடு போனது தான். அதற்கே இன்ஸ்பெக்டர் மாமா ஊர் முழுதும் காவல் போட்டார்.
எனக்கு என்னவோ உப்பு காங்கிரஸின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவே அவர்கள் வந்திருப்பதாகத் தோன்றியது. பள்ளியில் எங்கள் வகுப்பைச் சேர்ந்த எல்லோரும் இருந்தார்கள்.
வாத்தியார் வந்தார்.
“எல்லாரும் ஒழுங்கா இருக்கணும். யாராவது இங்கிலீஷ்காரங்களைப் பார்த்து மரியாதையில்லாமப் பேசினீங்களோ…பாளையங்கோட்டை ஜெயில் தான்.” இதை மாதவனைப் பார்த்தபடிச் சொன்னார்.
பிறகு இந்திய நாட்டின் மானமே எங்கள் கையில் இருப்பது மாதிரி எல்லோரையும் ஒரு முறை வரிசையாக நடக்க வைத்தார். ஸல்யூட் போட்டோம்.
பிறகு ஆங்கிலத்தில் முதல் மார்க் வாங்கிய சம்பந்தம் முதலில் செல்ல, கடைசி மார்க் வாங்கிய வைத்தி கடைசியில் வர எல்லோரும் மிலிட்டரி போலக் கிளம்பினோம்.
ஆறுமுகம் சட்டைப் பையில் அவனுடைய ஆயுதமான உண்டை வில் வைத்திருந்த்தைப் பார்த்தேன். அதை அவ்வப்போது தடவியபடி இருந்தான். ஆறுமுகத்தின் வில் ராமரின் கோதண்டம் போன்றது.
காடு போன்று மரங்கள் அடர்ந்திருக்க, நடுவில் இருந்த பாதை வழியாகச் சென்றோம். சுற்றிலும் முட் செடிகள் ஏராளமாக இருந்தன. சற்று தூரத்தில் குன்று மரங்களுக்கு நடுவே தெரிந்தது.
சிறிது நேரத்தில் அதன் அடிவாரத்தை அடைந்தோம். மரங்கள் களையப்பட்ட ஒரு வெட்டவெளியில் இரண்டு பெரிய கூடாரங்கள் தெரிந்தன. சற்றுத் தூரத்தில் சில பேர் குழி வெட்டிக் கொண்டிருந்தார்கள்.
கூடாரத்தின் வாசலில் ஒரு வெள்ளைக்காரர் நின்று பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மேல் சட்டை அணியவில்லை. எங்களுக்கு முதுகைக் காட்டி குழி வெட்டுபவர்களைப் பார்த்து நின்றார்.
சுந்தரம் வாத்தியார் எங்கள் பக்கம் திரும்பி உதட்டில் விரல் வைத்தார். யாரும் பேசவில்லை. வெள்ளைக்காரர்கள் இவ்வளவு உயரமாகப் பெரிதாக இருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. உப்பு காங்கிரஸைச் சேர்ந்த எல்லோரையும் இவர் ஒருவரே அடித்துப் போட்டு விடுவார் என்று தோன்றியது.
சுந்தரம் வாத்தியார் அவர் அருகில் போனார். பக்கவாட்டில் நின்று, தணிவான குரலில் ஏதோ கேட்டார். வெள்ளைக்காரர் வாத்தியாரைத் திரும்பிப் பார்த்தார். பிறகு,சற்றுத் திரும்பி எங்களைப் பார்த்தார். வாத்தியார் மறுபடி ஏதோ சொன்னார்.
வெள்ளைக்காரர் கீழே துப்பினார். பிறகு, ஏதோ உரத்துச் சொல்லி விட்டுக் கூடாரத்துக்குள் சென்றார். சுந்தரம் வாத்தியார் சிறிது நேரம் தொப்பியைக் கையில் வைத்துக் கொண்டு அங்கேயே நின்றார். அவர் முகம் விழுந்து விட்டது.
திரும்பி எங்களை நோக்கி மெதுவாக நடந்து வந்தார்.
“அவருக்கு இப்போ நேரமில்லையாம். வாங்கப்பா, மலையைச் சுத்திப் பார்க்கலாம்”, என்று சொல்லிக் கிளம்பினார்.
எனக்கு வாத்தியாரைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
charkha-incs
எல்லோரும் மலையைச் சுற்றி நடக்கத் தொடங்கினோம். வாத்தியார் பழையபடி பரபரப்பாகி இருந்தார். உண்மையில் எங்கள் யாருக்குமே இந்தப் பயணத்தில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. கல்லும் முள்ளுமான ஒரு மலையைச் சுற்றி வருவதற்கா ஒரு அருமையான சனிக்கிழமையைத் தியாகம் செய்தோம்? கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருந்தது.
மலையின் மறுபக்கத்தில் வாத்தியார் எங்களை நிறுத்தினார்.
திடீரென்று பாடம் எடுக்கத் தொடங்கினார்.
“மதுரைய ஆண்டது யாருல?” என்று கேட்டுச் சுற்றிப் பார்த்தார்.
வழக்கம் போல மாதவன் மேல் அவர் பார்வை பதிந்தது.
“யாருல?”
மாதவன் ‘வைஷ்ணவ ஜனதோ,’ என்று கத்திச் சுருதியே இல்லாமல் பாட ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் மதுரையை ஆண்டவர்கள் முகலாயர்களா, முதலாம் சார்லஸ் மன்னரா என்று நாங்கள் குழம்பும்படி, பல பதில்கள் வந்தன. நாலு பேர் மாதவனோடு சேர்ந்து தோப்புக்கரணம் போட, சுந்தரம் வாத்தியார் திருப்தியுடன் தமது ஞானத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
மதுரையை ஆண்ட பாண்டியர்கள் மகா ராஜ்ஜியம் கல்லிடைக்குறிச்சி வரை பரவியிருந்தது. எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டியர்களின் முக்கியமான தளபதி ஒருவர் கல்லிடைக்குறிச்சியில் இருந்ததாக நம்பப்பட்டது. அவரைப் பற்றி நிறையக் கல் வெட்டுகள் மூலம் கேள்விப்பட்டுத் தான் வெள்ளைக்காரர்கள் இங்கே வந்து தோண்டிக் கொண்டிருந்தார்கள்.
இதை வாத்தியார் சொல்லி முடித்து, சுற்றிப் பார்த்தார். நாங்கள் சுரத்தேயில்லாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
“நாமளும் கொஞ்சம் முயற்சி செஞ்சா பாண்டியர் தளபதியோட புதையலைக் கண்டு பிடிக்கலாம்”, என்றார் வாத்தியார்.
புதையல் என்றதும் எங்கள் முகம் மலர்ந்தது. நானும் பல நாட்களாக நல்ல கிரிக்கெட் பேட், பந்து, கிளவுஸ் எல்லாம் வாங்க ஆசைப்பட்டு வந்தேன். இரண்டு தங்க நாணயம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
எல்லோரும் மறுபடி கிரிப் பிரதக்ஷணம் கிளம்பினோம். ஆனால் இம்முறை கவனமாகக் கீழே தேடிப் பார்த்தவாறு சென்றோம். என் மனதில் அந்தத் தளபதி நாலைந்து தங்க நாணயங்களைக் கை தவறிக் கீழே போட்டிருப்பார் என்று தோன்றியது. எல்லா சிறு கற்களையும் புரட்டிப் பார்த்தவாறு நடந்தோம். மாதவன் என்னிடம் தான் தங்கத்தைப் பற்றிக் கவலைப்படாததாகவும், ஒரு சத்தியாக்கிரகிக்கு கல்லும் தங்கமும் ஒன்றே என்றும் சொன்னான். நான் அவனுடன் ஒத்துக் கொண்டு, பளபளப்பாக மஞ்சள் நிறத்தில் கற்களைப் பார்த்தால் என்னிடம் தருமாறு கேட்டுக் கொண்டேன்.
திடீரென்று நாலு பேராகக் கூச்சலிட்டுக் கொண்டே ஓடினார்கள். நானும் ஓடினேன்.
ஒரு ஓரமாகக் கிடந்த பெரிய பாறையை எல்லோரும் சுற்றி நின்றார்கள். யாருக்கோ மூளையில் அந்தப் பாறையின் அடியில் தான் புதையல் இருக்கிறது என்று தோன்றி விட்டது. எல்லோருமாகச் சேர்ந்து பாறையைப் பிடித்துத் தள்ள ஆரம்பித்தோம்.
வாத்தியார் ஓடியே வந்து, “இங்கல்லாம் எதுவும் இருக்காது”, என்று கத்தினார். நாங்கள் அவரைச் சுத்தமாகக் கவனிக்காமல் பாறையைத் தள்ளுவதில் மும்முரமாக இருந்தோம். பத்துப் பேராகச் சேர்ந்து உருட்டினோம்.
பாறை மெதுவாக நகர்ந்தது.
அடியில் வெறும் மண் தான் இருந்தது.
ஏமாற்றத்துடன் எல்லோரும் கிளம்பினோம். வாத்தியார் எங்களை உற்சாகமூட்ட முயன்றார். “அடிக்கடி இங்க வந்து தோண்டிப் பாக்கணும். அவ்வளவு சுளுவாக் கிடைச்சுருமா?” என்றார்.
எனக்கு அன்று இரவே யாரேனும் புதையலைக் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயம் தோன்றியது. எல்லோரையும் சந்தேகத்துடன் பார்த்தவாறே நடந்தேன்.
இந்நேரம் குன்றை முக்கால் தூரம் சுற்றி வந்திருந்தோம். இன்னும் நாலைந்து பெரும் கற்களைப் புரட்டியிருந்தோம். பாண்டியர் தளபதியைச் சபித்துக் கொண்டிருந்தோம். நன்றாகக் களைத்துப் போயிருந்த நிலையில் சுந்தரம் வாத்தியார் திடீரென்று எங்களை நிறுத்தினார்.
சற்று முன்னால் குன்றின் சரிவில், உச்சியில் இருந்து பாதி தூரத்தில் ஒரு இடம் சற்றே குழிந்து இருந்தது. அந்தக் குழிவில் பெரிய பாறை ஒன்று உருண்டு கிடந்தது. வாத்தியார் பாறையின் அருகில் சென்று உற்றுப் பார்த்தார்.
நாங்களும் சுற்றி நின்று பார்த்தோம். பாறையில் மண் சரிந்து கிடந்தது. வாத்தியார் ஒரு குச்சியை எடுத்து மண்ணைக் கிளறினார். பிறகு எங்களைப் பார்த்து, “இதுக்குப் பின்னாடி ஏதாவது இருக்கா பாக்கலாம்.பாறையை உருட்டித் தள்ளுங்கலே”, என்றார். அவர் கண்கள் பளிச்சிட்டன.
பாறை ஒரு ஆள் உயரத்துக்கு இருந்தது. எனக்குப் புதையல் இங்கு இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. சிறியதாக, ஒரு பானையில் புதைத்து வைத்திருப்பார்கள் என்று நினைத்தேன். இருந்தாலும் பத்துப் பேராகச் சேர்ந்து பாறையைப் புரட்ட முயன்றோம். வாத்தியாரும் சேர்ந்து கொண்டார். வெள்ளைச் சட்டைகள் அழுக்காக, மூச்சுப் பிடித்துத் தள்ளினோம்.
பாறை லேசாக ஆடியது. பிறகு மெதுவாகப் பெயர்ந்தது.
எல்லோரும் இன்னும் வெறி கொண்டு தள்ள, பாறைப் பெரும் சத்தத்துடன் உருண்டது. நாங்கள் தள்ளி விட அடிவாரத்தை நோக்கி ஓடியது.
மண் புகை அடர்ந்து எழுந்தது. நான் கண்ணை மூடிக் கொண்டு இருமினேன். சிறிது நேரத்தில் புகை அடங்கியது. கண்ணைத் திறந்து பார்த்தால், பாறை இருந்த இடத்தில் ஐந்தடி உயரத்துக்கு, மெலிதான பிளவு இருந்தது. ஒரு ஆள் மட்டும் சற்றுக் கூனிக் குறுகி நுழையலாம்.
வாத்தியார் அதற்குள் நுழைந்தார். எனக்கு உடம்பு நடுங்கியது. உள்ளே பெரிய பானை நிறையத் தங்க நாணயங்கள் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டேன். வாத்தியாரே அத்தனையையும் எடுத்துக் கொள்வாரோ என்று கவலைப்பட்டேன்.
சூரியன் நேர் எதிரே இருந்ததால் அந்தக் குகைக்குள் வெளிச்சம் தெரிந்தது. நான் பிளவுக்கு வெகு அருகில் இருந்தேன். உள்ளே உற்றுப் பார்த்தால், குகையின் ஒரு சுவர் லேசாகத் தெரிந்தது. அதில் வர்ணம் பூசியது போலத் தோன்றியது.
வாத்தியார் வாயெல்லாம் பல்லாக வெளியே வந்தார்.
“உள்ள என்ன சார் இருக்கு”, என்று கேட்டோம்.
“ஓவியங்கள் இருக்கு தம்பிகளா..ஆயிரம் வருஷமா அழியாத ஓவியங்கள்.”
எனக்குச் சப்பென்று ஆயிற்று.
சற்றுத் தள்ளி யாரோ கத்தும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தோம். அந்த வெள்ளைக்காரர் ஓடி வந்து கொண்டிருந்தார்.
எங்கள் அருகில் வந்து ஏதோ கத்தப் போனவர் குகையைக் கவனித்தார். அவர் வாய் பிளந்தது.
பின்னால் இன்னொருவர் ஓடி வந்தார். இளைக்க இளைக்க வந்து நின்றார்.இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டார்கள். முதலாமவர், வாத்தியாரைக் காட்டி  ஏதோ ஆங்கிலத்தில் சொன்னார்.
கூலி என்கிற வார்த்தையைக் கேட்டு சுந்தரம் வாத்தியார் அசந்து போய் நின்றார்.இரண்டாமவர் வாத்தியாரை ஏற இறங்கப் பார்த்தார்.பிறகு தன் சகாவிடம் தம் நெஞ்சைத் தட்டி ஏதோ சொன்னார். மொழி தெரியாவிட்டாலும் எங்கள் எல்லோருக்கும் அவர் என்ன சொல்கிறார் என்று நன்றாகவே புரிந்தது.பிறகு எங்களையும் வாத்தியாரையும் பார்த்து, “கோ அவே”, என்று கத்தினார். இரண்டடி முன்னால் எடுத்து வைத்தார்.
நாங்கள் ஓட்டம் பிடித்தோம். எல்லோருக்கும் முன்னால் ஆறுமுகம் ஓடிக் கொண்டிருந்தான். வாத்தியார் பின்னால் மெதுவாக நடந்து வந்தார்.
.
charkha-incs
பாண்டியர் தளபதியின் ரகசியக் குகையைக் கண்டுபிடித்த மறு நாள், நான் மாதவன் வீட்டிற்குப் படிக்கச் சென்றேன். மாதவன் கணக்கில் புலி. நான் குட்டி எலி. ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் புத்தகத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
மாதவன் வீட்டு வாசலில் பெரிய திண்ணை உண்டு. பத்துப் பேர் உட்கார்ந்து சாப்பிடுமளவு பெரியது. வெயில் காலத்தில் அந்தத் திண்ணையில் உட்கார்ந்து பல்லாங்குழி ஆடுவது சுகமான அனுபவம்.
திண்ணையின் ஒரு பக்கத்தில் சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. மாதவன் அப்பா, என் அப்பா, இன்னும் இரண்டு, மூன்று பேர் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். நானும் மாதவனும் திண்ணையின் மறு பக்கத்தில் படிக்க முயற்சி செய்தோம். மாதவன் எனக்கு அல்ஜிப்ராவில் எக்ஸின் மகிமைகளை எடுத்துக் காட்டத் தொடங்கினான். எனக்கோ சிறிது நேரத்தில் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. சீட்டுக் கச்சேரியில் பேச்சு சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருந்தது.
மாதவனின் அப்பா, “ஊரே ஆடறதே கவனிச்சீரா?” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
“ஓய் வெள்ளைக்காரன் லேசுப்பட்டவனில்லை. அவன் மூளை தனி தான்,” என்றார் என் அப்பா.
“பின்ன இவ்வளவு நாளா நாமளும் இங்கே இருக்கோம். பாண்டியர் பத்தியோ சரித்திரம் பத்தியோ ஏதாவது தெரியுமோ?” என்றார் இன்னொருவர்.
“நான் பாண்டி ஆடறவன்லாம் பாண்டியன்னு நினைச்சுண்டிருக்கேன்,” என்றார் மாதவனின் அப்பா. இதற்கு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
எனக்கு ரத்தம் கொதித்தது. இப்படி உட்கார்ந்து சீட்டாடித் தான் சுதந்திரத்தைப் பறி கொடுத்தார்களோ என்று தோன்றியது.
“இந்தப் பாண்டியன் எதுக்கு இங்க வந்து குகை கட்டினானாம்?” என்று கேட்டார் மற்றொருவர்.
“வெள்ளைக்காரன் மாட மாளிகை கட்டறான். நம்ம ஊர்க்காரனுக்கு குகை தான் கட்ட வந்திருக்கு.”
நான் எதிர்பார்த்தது போலவே மாதவன் இந்த உரையாடலைக் கவனிக்கத் தொடங்கியிருந்தான். திடீரென்று, “நம்ப ஊர்க்காரன் தானே இவ்வளவு பெரிய கோவிலைக் கட்டியிருக்கான்?” என்றான்.
“பெரியவா பேசும் போது குறுக்க பேசாதே,” என்றார் அவன் அப்பா.
மாதவன் சும்மா இருந்தான்.
என் அப்பா, “கோவில் கட்டி என்னடா புண்ணியம் மாதவா! அதுக்கு நாலு துப்பாக்கி வாங்கியிருந்தா வெள்ளைக்காரன் கூட சண்டையாவது போட்டிருக்கலாம் இல்லையா?” என்றார்.
“அதானே! பாண்டியன் ஏன் துப்பாக்கி வாங்கலை? அதுக்கு பதில் சொல்லு முதல்ல..” என்றார் இன்னொருவர்.
மாதவன், “அவா காலத்துல துப்பாக்கி கிடையாதே..” என்றான் பரிதாபமாக.
“அப்போ சண்டை போட முடியலை. தோத்துட்டான். குகைக்குள்ள போய் ஒளிஞ்சுண்ட்டான்.”
எனக்கு சரித்திரம் அவ்வளவு தூரம் தெரியாது. இருந்தாலும் சுதந்திரத்தை இழந்த பாண்டியன் மேல் இப்போது கோபம் வந்தது.
மாதவனோ சுத்தமாகக் குழம்பிப் போயிருந்தான் என்று தெரிந்தது.
“அவாளுக்கு மூளை அதிகம் ஓய். நம்மவாளுக்குப் போறாது,” என்றார் மாதவன் அப்பா.
மாதவன் சிவந்த முகத்துடன், “மகாத்மா கால்ல அவன் எல்லாம் விழுந்து கும்பிடறான்,” என்றான்.
“என்னடா மகாத்மா.. பக்கத்துக் கடையில கிடைக்கிற உப்புக்குச் சமுத்திரம் வரைக்கும் நடந்து போயிருக்கார்,” என்றார் ஒருவர்.
இதற்கும் எல்லோரும் சிரித்தார்கள்.
மாதவன், “சுதந்திரமே அப்போ வேண்டாமா?” என்றான்.
“மாதவா, சுதந்திரம் வந்து என்னடா புண்ணியம்? நம்பளுக்குள்ளயே ஆயிரம் சண்டை. சைவன், வைஷ்ணவன், முகமதியன், கிறிஸ்தவன்னு.. ஒரு சின்ன விஷயம் கூடச் சண்டை போடாமப் பண்ணத் தெரியாது,” என்றார் என் அப்பா.
மாதவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். பிறகு ஏனோ நிறுத்தி விட்டான்.
“ஓய்! எல்லாருமாப் போய் குகையைப் பார்த்துட்டு வரலாமா?” என்று மாதவனின் அப்பா கேட்டார்.
“ஓ..போலாமே..” என்றார் என் அப்பா. வீட்டின் உள்ளிருந்து மாதவனின் அம்மா குரல் கேட்டது.
“அங்க பாம்பு, பூரான்லாம் இருக்கும். ஒண்ணும் போக வேண்டாம்.”
“சரிடி, போகலை,” என்று விட்டு, “இன்னும் நாலு ஆட்டம் போடலாம் வா,” என்றார் மாதவனின் அப்பா.
.
charkha-incs
அன்று மாலை நாலு மணி இருக்கும். மாதவனும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்.
மாதவன், “ரகு, இனிமேல் சண்டை போட்டுப் புண்ணியமில்லைடா. நம்மளும் ஆறுமுகமும் சேர்ந்து சுதந்திரத்துக்குப் போராடணும்,” என்றான்.
எனக்கும் ஆறுமுகத்துடன் பேசுவதில் விருப்பம் இருந்தது.
மாதவன், கீதை படிப்பது, உண்ணாவிரதம் என்று சிறிது சிரமப்பட வைத்தான். எனக்கு கீதை சுத்தமாகப் புரியவில்லை. வில் அம்புடன் சண்டை போடத் தயாராக நின்று விட்டு எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதுவும் நாலு மணி நேரம் சமஸ்கிருதத்தில்.
மாதவன், “நான் காங்கிரஸ் காரியதரிசி பதவியைத் தியாகம் செய்யப் போறேன்,” என்றான்.
நான் வியப்புடன் அவனைப் பார்த்தேன்.
“காரியதரிசி பதவி ஒரு முள் கிரீடம் மாதிரி ரகு. நான் ஒரு சாதாரணத் தொண்டனா இருக்கணும்னு ஆசைப்படறேன்.”
நான் வருத்தத்துடன், “மாதவா, இன்னும் கொஞ்ச நாள்தான். வெள்ளைக்காரன் எல்லாம் மூட்டையைக் கட்டிக் கிளம்பிடுவான்,” என்றேன்.
“ராமர் பரதனுக்கு ராஜ்யத்தையே தியாகம் செஞ்சார்.அதை விட இது என்ன பெரிய தியாகமாடா?”
நான் சும்மா இருந்தேன். சிறிது நேரம் சென்ற பின் தான் மாதவன் தன் கேள்விக்குப் பதிலை எதிர்பார்க்கிறான் என்று புரிந்தது. என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆமாண்டா..அதை விடப் பெரிய தியாகம் தான்,” என்றேன்.
மாதவன் முகம் மலர்ந்தது. என்னைக் கட்டித் தழுவிக் கொண்டான். “ராமருக்கு அனுமார் மாதிரி எனக்கு நீ.” எனக்கு அவன் என்னை அனுமார் என்று அழைத்தது அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
இரண்டு பேரும் சேர்ந்து ஆறுமுகத்தின் வீட்டுக்குக் கிளம்பினோம்.
charkha-incs
நாங்கள் கைராட்டை சுற்றி, போலீஸ் ஸ்டேஷன் முன்னால் போராட்டமெல்லாம் நடத்திக் கொண்டிருந்த நேரம், ஆறுமுகமும் வைத்தியும் பயங்கரத் திட்டங்கள் பல தீட்டி வந்தார்கள்.
ஆறுமுகம் தன்னை எல்லோரும் காப்டன் என்று அழைக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தான். வைத்தி சார்ஜண்ட்.
பாளையங்கோட்டை ஜெயிலைத் தாக்கப் பெரிய திட்டம் வைத்திருந்தார்கள். இரண்டு பேரும் கிளம்பித் திருநெல்வேலி வரை போய், டவுணில் சர்க்கஸ் போட்டிருந்தார்கள் என்று அதைப் பார்த்து வந்தார்கள். அவ்வப்போது குண்டு தயாரிக்க வேறு முயற்சி செய்து வந்தார்கள்.
ஆறுமுகத்தின் வீட்டுக்குச் சென்ற போது அவன் அப்பா அவன் தோட்டத்தில் இருப்பதாகச் சொன்னார். வீட்டைச் சுற்றிக்கொண்டு பின்னால் இருந்த தோட்டத்துக்குப் போனோம். நிறைய மல்லிகை மலர்களின் வாசத்துடன் தோட்டம் பூ மயமாக இருந்தது. செடிகளுக்கு நடுவே இருந்த பாதையில் நடந்து போனோம்.
திடீரென்று சற்றுத் தள்ளி இருந்த சில புதர்கள் பின்னால் இருந்து நிறையப் புகை கிளம்பியது. “ஆறுமுகம்!” என்று கத்தினேன் நான். ஆறுமுகம் செடிகளுக்குப் பின்னால் இருந்து வெளியே வந்தான். வைத்தியும் கூடவே வந்தான். இருவரும் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார்களோ என்ற சந்தேகம் வந்தது. ஆறுமுகம் எங்களை முறைத்துப் பார்த்தான். “யாருல நீ?” என்றான்.
மாதவன், “நண்பா! வா! எங்களுடன் கை கோர்த்து வா! இந்தியாவின் சுதந்திரம் நம் கையில்,” என்றான்.
ஆறுமுகம் சந்தேகத்துடன், “என்னல உளர்ற?” என்றான்.
நான் குறுக்கே புகுந்து, “ஏலேய்..இன்னில இருந்து நீ தாம்ல காங்கிரஸ் காரியதரிசி,” என்றேன்.
வைத்தி, “வா.. எல்லாரும் போய்க் கூத்து பாக்கலாம்,” என்றான் சம்பந்தமேயில்லாமல்.
ஆறுமுகம் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். பிறகு, மாதவனைப் பார்த்து, “நீ சுத்த பயந்தாங்கொள்ளிடா,” என்றான்.
மாதவன், “பயம் இல்ல ஆறுமுகம்..சத்தியாக்கிரகிக்கு பயம் கிடையாது,” என்றான். “யாரது சத்யா? நீ ஏம்ல தமிழ் வாத்தியாராட்டம் பேசுற?”
மாதவனுக்குப் பொறுமை போனது. எரிச்சலுடன், “பாளையங்கோட்டை போய் நீ கிழிச்சது தெரியுமே. சர்க்கஸ் போய் என்னல சுதந்திரம் பார்த்த?” என்றான்.
வைத்தி, “மாதவா, சிங்கம் புலில்லாம் பார்த்தோம்டா,” என்றான்.
ஆறுமுகம், “இருல.. தைரியம் இருந்தா ஒத்திக்கு ஒத்தி வா,” என்று வேட்டியைத் தூக்கிக் கட்டினான்.
ஒரு குரல், “யாரு அங்க?” என்று கேட்டது. ஆறுமுகம் அவசரமாக வேட்டியை இறக்கி விட்டான்.
தோட்டத்துப் பாதை வழியே ஒரு ஐம்பது வயது மதிக்கத் தக்க மனிதர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அவருடன் ஒரு இளம் பெண் வந்தாள்.
அவர் கண்கள் குழிந்திருந்தன. எங்களை உற்றுப் பார்த்தார்.
வைத்தி என்னிடம், “ஆறுமுகத்தோட மாமா. அவர் கூட..”,என்று வெட்கப்பட்டான்.
அந்தப் பெண்ணைப் பார்த்ததும் ஆறுமுகம் கீழே குனிந்தபடி இருந்தான். அவன் கால் கட்டை விரல் தரையில் கோலமிட்டது.
அவன் மாமா, “நீங்க எல்லாம் ஆறுமுகத்தோட ஃபிரெண்ட்ஸா?” என்று கேட்டார்.
“ஆமாம்,” என்றேன் நான். மாதவன் இன்னும் ஆறுமுகத்தை முறைத்தவாறு இருந்தான். வைத்தி, “மாமா ஜெயில்ல இருந்திருக்கார்,” என்றான்.
நானும் மாதவனும் அவரை ஆவலோடு பார்த்தோம். நாங்கள் பத்திரிகைகளில் பெரிய காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் ஜெயிலுக்குப் போவது பற்றிப் படித்திருந்தோம். எங்கள் மனங்களில் ஜெயிலே சுதந்திரப் போராட்டக்காரர்களைப் போடுவதற்குத் தான் என்ற எண்ணம் இருந்தது. எல்லோரும் ஜெயிலில் சுகமாக “பாரத சமுதாயம் வாழ்கவே” பாடிக் கொண்டிருப்பதாக நினைத்தோம்.
மாதவன், “எந்த ஜெயில்,” என்று கேட்டான்.
“அந்தமான், தம்பி”
“எனக்கும் அங்க போகணும்னு ஆசை.”
அவர் எங்களை வினோதமாகப் பார்த்தார். “கிரிக்கெட் விளையாடலியா?” என்று கேட்டார்.
மாதவன் உப்பு காங்கிரஸ் பற்றி சொல்லத் தொடங்கினான். நான் ஆறுமுகத்தைக் கவனித்தேன். அவன் நாணிக் கோணி பக்கத்து மரத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு நின்றான். அந்தப் பெண் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள்.
மாதவன் கல்லிடைக்குறிச்சியில் மூவர்ணக் கொடியை ஏற்றுவது பற்றி எங்கள் திட்டங்களை அவரிடம் சொல்லத் தொடங்கினான். அவர் குறுக்கிட்டு, “நீ தான் இவங்களுக்கெல்லாம் லீடரா?” என்று கேட்டார்.
மாதவன் ஆறுமுகத்தைப் பார்த்தான். அந்தப் பெண்ணைப் பார்த்தான். பிறகு, “இல்லை. ஆறுமுகம் தான் எங்கள் லீடர்,” என்றான்.
“நீங்க ஜெயில்ல போராட்டமெல்லாம் நடத்தலியா?” என்று நான் கேட்டேன்.
அவர் கண்கள் வெறித்துப் பார்த்தன. ஒரு பெருமூச்சு விட்டு, “அங்க அதெல்லாம் முடியாது தம்பிகளா,” என்றார்.
ஆறுமுகம் வீரமாக, “பாளையங்கோட்டை ஜெயிலைப் பிடிக்கப் போறோம். அந்தமானையும் பிடிச்சுரலாம். அது எங்க இருக்கு? மதுரை பக்கத்துலயா?” என்றான்.
அவர் சிரித்தபடி, “தம்பி..பள்ளிக்கூடத்துக்குப் போய் ஒழுங்கா படிங்கப்பா. குடும்பம் தான் ரொம்ப முக்கியம்,” என்றார்.
அவரும் அந்தப் பெண்ணும் மெதுவாகத் தோட்டத்தின் உள்ளே சென்றார்கள். அந்தப் பெண் ஆறுமுகத்தைத் தாண்டிப் போன ரொம்ப நேரத்துக்கு ஆறுமுகம் பல்லைக் காட்டி இளித்துக் கொண்டிருந்தான்.
பிறகு, எங்கள் அருகில் வந்து, “ஏலேய்..” என்று ஏதோ சொல்ல வந்து முடியாமல், மாதவனைக் கட்டித் தழுவிக் கொண்டான். மாதவன் கண்களில் ஆனந்த பாஷ்பம் பொழிந்தது.
charkha-incs
அப்புறம் நான், ஆறுமுகம், வைத்தி, மாதவன் நால்வரும் சிவன் கோவில் குளக்கரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
நிறையக் கதைகள் பேச வேண்டி இருந்தது. ஆறுமுகம் காதல் வயப்பட்டிருந்தான் என்று அறிந்து கொண்டோம். மாதவன் எல்லா வார்த்தைகளையும், ‘நான் ஏன் பதவியைத் தியாகம் பண்ணிணேன்னா..’ என்றே தொடங்கினான். ஆறுமுகமோ அவன் மாமன் பெண்ணைப் பற்றிப் பேசுவதிலேயே செலவழித்தான்.
வீட்டுக்குக் கிளம்பும் போது, ஆறுமுகம், “இன்னிக்கு ராத்திரி வந்துருல,” என்றான்.
மாதவனும் நானும் விழித்தோம்.
“ஏய்.. இரு..” என்று அவன் பின்னால் ஓடினோம்.
“ராத்திரி என்ன?” என்று கேட்டேன் நான்.
ஆறுமுகமும் வைத்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“உன் கிட்ட சொல்லலியா..பாண்டியர் குகைக்குப் போறோம்.” என்றான் ஆறுமுகம்.
மாதவன் அதிர்ச்சியுடன், “எதுக்கு?” என்றான்.
“குண்டு வைக்க.”
charkha-incs
நானும் மாதவனும் வைத்தியை விசாரித்ததில் எல்லாம் தெரிய வந்தது.புளியைக் கரைத்து, கடலை மாவை அரைத்து விட்டுப் பல குண்டுகள் செய்ய முயற்சி செய்த ஆறுமுகமும் வைத்தியும் குண்டுக்குப் பதிலாக ருசியாகப் பலகாரங்கள் தான் செய்ய முடிந்தது.
கடைசியில் கெமிஸ்ட்டிரி லேபரேட்டரியில் இருந்து சில ரசாயனங்களைத் திருடினார்கள். அவற்றில் சிலவற்றை வைத்து விளையாடப் போய் வீடே பற்றி எரியும் நிலைக்கு வந்த பின்னர் அவர்கள் முயற்சிக்குப் பலன் கிடைத்தது. வைத்தி சொன்னபடிப் பார்த்தால் பெரும் சத்தத்துடன் வெடிக்கும் குண்டுகள் இரண்டு, மூன்று செய்வதில் வெற்றி பெற்றிருந்தார்கள்.
வைத்தி போகும் போது, “ராத்திரி ஒன்பது மணிக்கு பாபநாசம் ரோடு பக்கத்துல புளியந் தோப்புக்கு வாங்கடா. ராப்பிச்சைக்காரன் மாதிரி பாடணும். அப்பத் தான் உங்களை அடையாளம் தெரியும்” என்று விட்டுப் போனான். நாலணா நாவல்கள் நிறையப் படித்ததின் விளைவு என்று எனக்குத் தோன்றியது.
மாதவன் நன்றாகப் பயந்து போயிருந்தான். “என்னடா குண்டு அது இதுங்கிறான்,” என்றான்.
நான், ” கவலைப்படாதே மாதவா. வைத்தி ஒன்பது மணி வரைக்கும் விழிச்சிருந்ததா சரித்திரமே கிடையாது,” என்றேன்.
இருந்தாலும் இரவு நெருங்க நெருங்க என் இதயத் துடிப்பு அதிகமாயிற்று.
charkha-incs
இரவு எட்டு மணிக்கு, அப்பாவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு மாதவனுடன் கிளம்பினேன். நாலு பேரும் சேர்ந்து போனால் அரசாங்க உளவாளிகள் கண்டு பிடித்து விடுவார்கள் என்று வைத்தியும் ஆறுமுகமும் முதலிலேயே புளியந்தோப்புக்குப் போயக் காத்திருப்பதாகத் திட்டம் தீட்டியிருந்தார்கள்.
இரண்டு பேரும் பாபநாசம் சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
எனக்கு பயம் அதிகரித்து இருந்தது. “மாதவா..போக வேண்டாம்டா. புளியந்தோப்புல ரத்தக் காட்டேரி இருக்கும். அதோட ஆறுமுகம் பாட்டெல்லாம் பாடச் சொல்றான்,” என்றேன்.
“கவலைப்படாதே. நான் பாடறேன்.”
என் கவலை இன்னும் அதிகரித்தது. ரோடு வழியாகச் சிறிது தூரம் சென்ற பின்னர் இடது பக்கம் திரும்பி வயல் காட்டு ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து போனோம். பத்து நிமிடத்தில் எதிரே புளியந்தோப்பு தெரிந்தது.
சந்திரன் இந்நேரம் நன்றாக மேலே வந்திருந்தது. மாதவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். பிறகு உரத்த குரலில், “தத்வ மேருக தரமா..” என்று தொடங்கினான். கைகளால் தாளம் போட்ட வண்ணம் தியாகராஜர் கிருதியை எந்த ராப்பிச்சைக்காரனும் பாடியிருக்க மாட்டான்.
எனக்கு ரத்தக் காட்டேரியை நினைத்துப் பாவமாக இருந்தது. புளியந்தோப்பின் உள்ளே இருந்து சத்தங்கள் கேட்டன. ஒரு லாந்தர் விளக்கு வெளிச்சம் தெரிந்தது.
“நிறுத்து..நிறுத்துடா, ” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் ஆறுமுகம்.
மாதவன் சரணத்தை ஆரம்பித்து ஸ்வரம் பாடத் தொடங்கியிருந்தான். நிறுத்துவதாக இல்லை. அவன் பாடட்டும் என்று விட்டு விட்டு, “வைத்தி எங்கே,” என்று கேட்டேன்.
“உள்ள தூங்கறான்.”
இரண்டு பேரும் தோப்புக்கு உள்ளே போய் தூங்கிக் கொண்டிருந்த வைத்தியை எழுப்ப முயற்சி செய்தோம். வைத்தி போர்வை எல்லாம் போர்த்திக் கொண்டு தலைக்கு அடியில் கை வைத்துக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். மாதவனின் பாட்டோ ரத்தக் காட்டேரியோ அவனை ஒன்றும் செய்யவில்லை.
இரண்டு பேருமாகச் சேர்ந்து அவனை உருட்டி எழுப்பினோம். வைத்தி கண்ணைக் கசக்கிய வண்ணம், “அம்மா..இன்னும் பத்து நிமிஷம்மா,” என்று எழுந்து உட்கார்ந்தான்.
மாதவனை இன்னொரு பாட்டு தொடங்குவதற்குள் தடை செய்து, “வாங்கடா போகலாம்”, என்று ஆறுமுகம் நடக்கத் தொடங்கினான்.
நானும் மாதவனும் அவன் பின்னால் சென்ற வண்ணம், “ஆறுமுகம்..நில்லுடா,” என்றோம்.
அவன் நிற்காமல் நடந்து கொண்டே, “சொல்லு..என்ன விஷயம்?” என்றான்.
“என்னடா இது? நிஜமாவா குண்டு வைக்கப் போற?” என்று கேட்டேன் நான்.
“ஆமாம்”
“குண்டு எங்கே?”
“இதோ..” என்று ஆறுமுகம் தோள் பைக்குள் கையை விட்டுப் பெரிய லட்டு போன்ற ஒரு உருண்டையைக் கையில் எடுத்தான்.
எனக்கும் மாதவனுக்கும் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.
ஆறுமுகம் விளக்கு வெளிச்சத்தில் எங்களைப் பார்த்துச் சிரித்த வண்ணம், “எப்பிடி? பிரமாதமா?” என்று குண்டைப் பந்தைப் போலத் தூக்கிப் போட்டுப் பிடித்தான்.
எனக்கு ஒடுங்கிய சப்த நாடியும் ஓடியே போய் விட்டது.
மாதவன், “டேய் வேண்டாம்டா,” என்று கத்தினான்.
ஆறுமுகம் ஆச்சரியத்துடன் எங்களைப் பார்த்தான். நாங்கள் கை தட்டிப் பாராட்டுவோம் என்று அவன் எதிர்பார்த்ததாகத் தோன்றியது.
“ஏண்டா கத்தற?” என்று கேட்டான்.
“பாண்டியர் குகைக்கு நிஜமாவே வெடி வைக்கப் போறியா?” என்று கேட்டேன் நான்.
“ஆமாண்டா. முதல்ல குகைக்கு வெடி. அப்புறம் வெள்ளைக்காரன் ஓடி வருவான். அவன் மேல உண்டை வில் அடிச்சு அவனும் காலி.”
மாதவன் கோபத்துடன், “ஏண்டா பைத்தியம் மாதிரி பேசுற?” என்றான்.
ஆறுமுகத்தின் ஆச்சரியம் அதிகமாயிற்று. “பாண்டியன் குகைய நாம தானே கண்டுபிடிச்சோம்? அவன் எப்படி நம்மளைத் துரத்தலாம்?”
இந்த நேரம் பின்னால் தூங்கியவாறே நடந்து வந்த வைத்தி எங்களுடன் சேர்ந்து கொண்டான்.
“சீக்கிரமாப் போய் குண்டு போட்டுட்டு வீட்டுக்குப் போய்த் தூங்கலாம் வாடா,” என்றான்.
“என்னடா ஆத்தங்கரைக்குக் குளிக்கப் போற மாதிரிப் பேசுற? குண்டு போடப் போறீங்கடா!”
ஆறுமுகம் எரிச்சலுடன், “மாதவா! நீ தான காங்கிரஸ் தலைவர் நான்னு சொன்ன?”
“தலைவர் இல்லடா. காரியதரிசி.”
“என்ன அரிசியோ எனக்குத் தெரியாது. நான் சொன்னபடி தான் நீ கேக்கணும்.”
நான் தொண்டையைக் கனைத்தபடி, “கட்சிச் சட்டப்படி உண்மையில பிரஸிடெண்டுக்குக் காரியதரிசிக்கு மேல அதிகாரம் உண்டு,” என்றேன்.
“யாரது பிரஸிடெண்டு?”
“நான் தான்,” என்றேன் நான்.
ஆறுமுகம் உரத்துச் சிரித்தான். தூரத்தில் ஒரு நரி ஊளையிட்டது.
நான் சுற்றிப் பார்த்து விட்டு, “டேய்..புலி கிலி வந்து வைக்கப் போகுது. வீட்டுல போய்ப் பேசலாமே?” என்றேன்.
வைத்தி கையிலிருந்த போர்வையைத் தரையில் விரித்துப் படுக்கத் தயாரானான். ஆறுமுகம், “நீங்க எல்லாம் சுத்தப் பயந்தாங்கொள்ளிங்கடா. நான் போய் குண்டு போடத் தான் போறேன். நீ வர்றதா இருந்தா வா. வராட்டிப் போ,” என்று கிளம்பினான்.
மாதவனும் நானும் பின்னால் ஓடினோம். வைத்தி சலிப்புடன் மீண்டும் போர்வையை மடித்துக் கொண்டு வந்தான்.
நான் மாதவனிடம், “டேய்..அவன் ஒருத்தன். நாம ரெண்டு பேர். பிடிச்சுக் கட்டி வச்சுப் போலீஸ் மாமாவைக் கூப்பிடலாம்,” என்றேன்.
மாதவன், “வைத்தியை என்ன பண்றது?” என்று கேட்டான்.
நான் சிரித்தேன். “அவன் தூங்கிடுவான்,” என்றேன்.
மாதவன் சிறிது யோசித்து, “வேண்டாம்டா,” என்றான்.
“ஏன்?”
“நாம சத்தியாக்கிரகிகள். சண்டை போடக் கூடாது.”
நான் சலிப்புடன் அவனுக்குப் பதில் சொல்வதற்குள், ஆறுமுகம் திரும்பிப் பார்த்து, “ஏண்டா பின்னாடியே வரீங்க? போய் அம்மா புடவை பின்னாடி ஒளிஞ்சுக்குங்க,” என்றான்.
நான், “மாதவா..நாலு போடலாம் வா,” என்றேன்.
“ஆறுமுகம்..நேத்திக்கு வெள்ளைக்காரன் துரத்தின போது முதல்ல ஓடினது நீ தான். நினைவு வச்சுக்கோ,” என்றான் மாதவன்.
ஆறுமுகம் திடீரென்று நின்றான். “ஷ்ஷ்ஷ்.. சும்மா இரு..,” என்றான்.
எதிரே முழு நிலவின் வெளிச்சத்தில் கரிய குன்று தெரிந்தது.
charkha-incs
நாங்கள் கிழக்கிலிருந்து மேற்காக நடந்து வந்திருந்ததால் கிட்டத்தட்டக் குகை இருந்த பக்கத்துக்கு நேராக வந்திருந்தோம்.
வெள்ளைக்காரர்களின் கூடாரம் எங்களுக்கு வலது பக்கத்தில் சற்றுத் தள்ளி இருந்திருக்க வேண்டும். எங்களுக்கு எதிரே குன்றின் சரிவில் ஒரு வெளிச்சம் தெரிந்தது.
“குகைக்குள்ள யாரோ இருக்காங்க,” என்றான் வைத்தி.
ஆறுமுகம் மெதுவாக வெளிச்சத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். இடையே பெரிய மரங்கள் எதுவும் இல்லை என்றாலும் சிறு பாறைகளும் முள் புதர்களும் நிறைய இருந்தன. நாங்கள் சத்தம் செய்யாமல் போனோம்.
குன்றின் அடிவாரத்தில் முந்திய நாள் நாங்கள் உருட்டிப் போட்டிருந்த பாறை அப்படியே இருந்தது. அதன் பின்னால் ஒளிந்து கொண்டு உட்கார்ந்தோம். ஆறுமுகம் லாந்தர் விளக்கைச் சிறியதாக்கிக் கீழே வைத்தான்.
மாதவன் அவன் கையைப் பிடித்து, “ஆறுமுகம்.. .வேண்டாம்டா,” என்றான்.
“நீ என்ன பண்ணணும்கிற? “
“நாளைக்கு மதுரை, திருநெல்வேலியில இருந்து பெரிய பத்திரிகைக்காரங்க வராங்க. அவங்க முன்னாடி போராட்டம் நடத்துவோம்.”
“அவனும் வெள்ளைக்காரனாத் தான இருப்பான். நாம தான் குகையைக் கண்டுபிடிச்சோம்னு யாரும் நம்ப மாட்டாங்கடா. நாம எதாவது பண்ணணும்.”
“ஆறுமுகம்..நான் உன்னைக் குண்டு வைக்க விட மாட்டேன். நாங்க அந்தக் குகைக்குள்ள போய் உக்கார்ந்துட்டா நீ என்ன பண்ணுவ?’
இந்த யோசனை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
“உனக்கும் சேர்த்து குண்டு வைப்பேன்”, என்றான் ஆறுமுகம்.
வைத்தி, “குகைக்குள்ள யாரும் இருக்கற மாதிரித் தெரியலை. வெளியே விளக்கு மட்டும் இருக்கு,” என்றான்.
நாங்கள் மெதுவாகத் தலையை வெளியே நீட்டிப் பார்த்தோம். நிஜமாகவே யாரும் இல்லை என்று தோன்றியது.
நாங்கள் திரும்பிப் பார்ப்பதற்குள் ஆறுமுகம் பாதி வழி மேலே ஏறி விட்டான். சத்தம் அதிகம் வராமல் கையில் பையை வைத்துக் கொண்டு வேகமாக ஏறிக் கொண்டிருந்தான்.
நானும் மாதவனும் உடனே பின்னால் ஏறத் தொடங்கினோம்.
வைத்தி, “நீங்க போங்கடா,” என்று விட்டுப் பாறையில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்தான்.
நாங்கள் பாதி தூரம் தட்டுத் தடுமாறி ஏறுவதற்குள் ஆறுமுகம் குகையை அடைந்து விட்டான். அங்கிருந்த விளக்கைக் கையில் எடுத்துக் கொண்டு குகைக்குள் நுழைந்தான்.
எனக்கு மூச்சு வாங்கியது. மாதவனிடம் திரும்பி, “குண்டு வச்சுட்டுப் போகட்டும்டா.” என்றேன்.
மாதவன் இன்னும் வேகமாக மேலே ஓடினான்.
அவன் பின்னால் குகையை அடைந்தேன் நான். வாசலைச் சற்றுப் பெரியதாக்கி இருந்தார்கள். குனிந்தவாறே உள்ளே நுழைந்தேன்.
charkha-incs
குகையின் உள்ளே திடீர் வெளிச்சத்தில் ஒன்றுமே தெரியவில்லை. மூச்சு வாங்க, சற்று நேரம் குனிந்து நின்றேன்.
நிமிர்ந்து பார்த்த போது, ஆறுமுகம் குகை நடுவே நிற்பது தெரிந்தது. விளக்கைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் பை கீழே கிடந்தது. அவன் முகத்தில் அளவு கடந்த ஆச்சரியம் தெரிந்தது.
நான் முந்திய நாள் குகைக்குள் போகவில்லை. நாங்கள் யாருமே போகவில்லை. குகைக்குள் ஏதோ ஓவியங்கள் இருந்தன என்று மட்டும் தெரியும்.
அந்த ஓவியங்கள் இப்போது கண் முன்னால் தோன்றின.
குகை வட்ட வடிவத்தில் இருந்தது. பாறையில் குடைந்து அமைக்கப்பட்டு இருந்தது. அதன் சுவர் பத்தடி உயரம் இருக்கும். அந்தச் சுவற்றில், என் கண்ணெதிரே, ஒரு பெரிய முகம் வரையப்பட்டிருந்தது.
சடாமுடியுடன் கழுத்தில் பாம்புடன் சிவ பெருமான் தெரிந்தார். அவர் கண்கள் எங்களைச் சாந்தத்துடன் பார்த்தன. நான் சுற்றிப் பார்த்தேன். மற்றொரு பக்கம் ஒரு பெரிய மலை வரையப்பட்டிருந்தது. அதைச் சுற்றிய கயிறைச் சில தேவர்கள் இழுத்துக் கொண்டிருந்தார்கள்.
மற்றொரு பக்கம் தம்பதி சமேதராய் பரமசிவனும், அம்மனும் திருமணம் புரியும் காட்சி இருந்தது. மாதவன் குகையின் கூரையைச் சுட்டிக் காட்டினான். வளைந்த கூரையில் பல மிருகங்கள் வரையப்பட்டிருந்தன. எல்லா ஓவியங்களுமே நல்ல வர்ணக் கலவையுடன் இருந்தன.
அவற்றின் ஜீவ பாவம் அழியாமல் இருந்தது. சிற்சில இடங்களில் மட்டும் வர்ணங்கள் அழிந்து அடியில் பாறை தெரிந்தது.
என்னால் அந்த ஓவியங்களைப் பார்த்து மூச்சே விட முடியவில்லை. எங்களுக்கு ஓவியம் வரையும் வகுப்பு இருந்தது. பொதுவாக நான் புலி வரைந்தால் தவளை போல வரும்.
சிறிது நேர மௌனத்துக்குப் பின் ஆறுமுகம் எங்களைப் பார்த்தான். கீழே விழுந்து கிடந்த பையைப் பார்த்தான். அதைக் குனிந்து எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான்.
மாதவன் அவனைப் பார்த்து, “ஆறுமுகம்..நில்லுடா,” என்றான்.
“என்ன?”
“நீ சொன்னது சரி தான். நம்ம எதாவது செய்யணும்.”
மூன்று பேரும் சுற்றிப் பார்த்தோம்.
“எனக்கு ஒரு யோசனை தோணுது,” என்றான் மாதவன்.
charkha-incs
சிறிது நேரத்தில் நாங்கள் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். குகையை ஆட்கள் துடைத்திருந்தார்கள். அங்கங்கே சில இரும்புக் கம்பிகள் கிடந்தன. நாங்கள் அவற்றை எடுத்து ஓவியங்களின் அடியில் “வந்தே மாதரம்” என்று செதுக்கினோம். ஓவியங்களுக்கு இடையில் இருந்த பாறையில் எல்லாம் செதுக்கினோம்.
வெள்ளைக்காரர்களுக்குப் புரியாதோ என்று ஆங்கிலத்தில் ‘Mahatma Gandhi ki Jai’ என்று எழுதினோம். நானும் ஆறுமுகமும் தப்புத் தப்பாக ‘வந்த மதரம்’, ‘வந்தி மாத்திரம்’ என்றெல்லாம் எழுத மாதவன் மட்டும் ஒரு புள்ளி கூட விடாமல் செய்தான்.
நாங்கள் வியர்க்க விறுவிறுக்க முடித்து விட்டுப பார்த்த போது சுவரில் பல இடங்களில் எங்கள் கை வண்ணம் தெளிவாகத் தெரிந்தது.
ஆறுமுகம் உற்சாகமாக இருந்தான். “நாளைக்கு அவங்க முகத்துல முழிக்கிற முழியைப் பாக்கணும்டா”, என்றான்.
எனக்கோ சற்றுக் கவலையாக இருந்தது. இதற்காக எங்களைப் பிடித்து ஜெயிலில் போடுவார்களோ என்ற என்கவலையைத் தெரிவித்தேன். மாதவன் உடனே, “கீதையில பகவான் சொல்றார்..”, என்று ஆரம்பித்தான்.
நானும் ஆறுமுகமும் கீழே இறங்கத் தொடங்கினோம்.
அடிவாரத்தில் வைத்தி நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்தான். அவனை அங்கேயே விட்டு விட்டுப் போக வேண்டும் என்று ஆறுமுகம் அபிப்பிராயப்பட்டான்.
வைத்தியை எழுப்பி நாங்கள் கிளம்பிய போது சந்திரன் உச்சி வானத்திற்கு வந்திருந்தது.
charkha-incs
புளியந் தோப்பைத் தாண்டி நடக்கும் போது ஆறுமுகத்திடம் ரத்தக் காட்டேரியைப் பற்றிச் சொன்னேன்.
“அதைக் கொன்னுடலாம்டா…”, என்று பையில் இருந்து குண்டை வெளியில் எடுத்தான்.
“டேய் வேண்டாம்டா..”, என்றான் மாதவன்.
எனக்கு குண்டு வெடித்துப் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது. ஆறுமுகமும், மாதவன் சொன்னதைச் சட்டை செய்யாமல் குண்டின் திரியை விளக்கில் பற்ற வைத்துப் புளியந் தோப்புக்குள் வீசி எறிந்தான். எல்லோரும் காதைப் பொத்திக் கொண்டோம்.
ஒரு சத்தமும் வரவில்லை. புகை கூட வரவில்லை. ஐந்து நிமிடம் காத்திருந்த பின்னர் ஆறுமுகம் எங்கள் பக்கம் திரும்பி, “அம்பாசமுத்திரம் கூட எப்படா மேட்ச்?” என்றான்.
நால்வரும் பேசிக் கொண்டே ஊருக்குப் போனோம்.
***

0 Replies to “உப்புக் காங்கிரஸ் – தோற்றமும் முடிவும்”

  1. மிகவும் அருமை. பல இடங்களில் வாய் விட்டு சிரித்தேன். கதையின் போக்கும் வேகமும் சிறப்பாக உள்ளது. முதல் இரண்டு வரிகளிலேயே வாசகரின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

  2. மிகச் சிறந்த நகைச்சுவைக் கதை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடு இரவில் வாய் விட்டு சிரிக்க வைத்தீர்கள் நண்பரே .நீண்ட தூரம் செல்வீர்கள் நகைச்சுவைக் கதைகளில். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Leave a Reply to VandhiyathevanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.