இந்தியக் கவிதைகள் – மலையாளம் – கே.சச்சிதானந்தன்

k-satchidanandan1

கே. சச்சிதானந்தன், மலையாளக் கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், இருமொழி இலக்கிய விமரிசகர் மற்றும் பதிப்பாசிரியர்.

கல்லூரிப் பேராசிரியர், சாஹித்ய அகாதெமியின் பெருமைவாய்ந்த இலக்கியப் பத்திரிகையான ‘இந்தியன் லிடெரேச்சர்’ பத்திரிகையின் ஆசிரியர், இந்திரா காந்தி திறந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக இயக்குனர், மற்றும் பேராசிரியர் எனப் பல்வகைப் பணிகளில் இருந்தவர்.

ஒரு கவிஞராய் சச்சிதானந்தன் மலையாளப் புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவராய் அறியப்படுகிறார். 1970ல் அஞ்சுசூரியன் என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்குப் பின் இவருடைய 21 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இவற்றில் பலவும் விருதுகள் பெற்றவை.

இந்தியப்பத்திரிகைகளிலும், சர்வதேச இலக்கியப் பதிப்புக்களிலும் இடம்பெற்றுள்ள இவருடைய பல கவிதைகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.

”எனக்கு எங்கிருந்து கவிதை வந்தது என்று சொல்ல எனக்கு இயலாது. என் முன்னோடியாய் எந்தக் கவிஞரும் இல்லை. அதைப்பற்றி யோசிக்கும்போதெல்லாம், கேரளத்தில் என் கிராமத்தின் இடைவிடாத மழையில் விதவிதமான இசைகளை நான் கேட்கிறேன்; மலையாள ராமாயணத்தின் ஒளிரும் வரிகளும் என் நினைவுக்கு வருகின்றன. … என் தாய் எனக்குப் பூனைகளுடனும், காகங்களுடனும், மரங்களுடனும் பேசக் கற்றுக் கொடுத்தாள்,பக்தியுள்ள என் தந்தையிடமிருந்து கடவுள்களுடனும் ஆன்மாக்களுடனும் தொடர்பு கொள்ளக் கற்றுக்கொண்டேன். சிந்தை கலங்கிய என் பாட்டி தினப்படி வாழ்வின் சலிப்பையும், சாதாரணத்தையும் தப்பிக்க ஒரு இணை உலகை உருவாக்கக் கற்றுக் கொடுத்தாள், இறந்தவர்கள் மண்ணுடன் ஒன்றாயிருக்கக் கற்றுக்கொடுத்தனர், காற்று கண்ணுக்குத் தெரியாமல் நகரவும், அசையவும் சொல்லிக்க்கொடுத்தது, மழை என் குரலுக்கு பல ஏற்ற இறக்கங்களைக் கற்றுத் தந்தது. இத்தகைய ஆசிரியர்கள் இருக்கையில், எதோ ஒருவகைக் கவிஞனாக இல்லாமல் போவது எனக்கு சாத்தியமாயிருக்கவில்லை.”

பிற மொழிகளிலிருந்து இவர் மொழிபெயர்த்துள்ள இந்திய மற்றும் உலகக் கவிதைகள் 19 தொகுப்புகளாய் வெளிவந்துள்ளன. 60 முக்கிய இந்தியக் கவிஞர்கள் தவிர, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் பல ஆசிய நாட்டுக் கவிதைகளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். மலையாளக் கவிதைகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கிறார்.

இவரது இன்னொரு முகம் ஒரு கலாச்சார சேவகர். பொது விஞ்ஞானம், சூழல் சார்ந்த விஷயங்கள், மக்கள் உரிமைகள், மருத்துவ ஒழுக்கவியல், பழங்குடி மக்கள் சார்ந்த இயக்கங்கள் போன்ற சார்புநலங்களில் ஈடுபாடுள்ளவர்.

இவரைப்பற்றிய ஆவணப்படம் ‘சம்மர் ரெயின்’என்ற பெயரில் 2007ல் வெளியானது.

இக்கவிதைகளை மொழி பெயர்த்தவர்: உஷா வை.

இவரது கவிதைகளின் ஒரு சில:

மறந்து வைத்த பொருட்கள்

puzzle


ஒரு மின்னல்வெட்டில்
என் வாழ்வில் மறந்து வைத்த
அனைத்துப் பொருட்களையும்
நினைவுகூர்கிறேன்
பளபளப்பான பத்து கோலிகள்
மாமரத்தடியில்
காய்ந்த இலைகளடியில் மறந்தவை,
மழை வரத்தவறிய ஒரு நாளில்
அபுவின் சலூனில் விட்டுவந்த குடை,
கிராமத்துப் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும் வழியில்
முந்திரிமரம் ஏறுகையில்
சட்டைப்பையிலிருந்து தாவிக்குதித்த பேனா
ரீகாவின் ஓட்டலறைத் துணிஅலமாரியில்
தங்கியிருக்கும் ஆகாய நீலச் சட்டை,
கடன்கொடுத்துத் திரும்பிவராத
புத்தகங்களின் நீளப் பட்டியல்
தீர்க்கப்படாத சில கடன்கள்,
அங்கீகரிக்கப்படாத சில காதல்கள்
மறதி மட்டுமே என்னை மறக்காமல் இருந்தது.
காதலில் வீழ்ந்தபோது என் இதயத்தைத் தவறி வைத்தேன்
கவிதை கிறுக்க ஆரம்பித்தபோது உருவகங்களை.
பின்னாளில், குன்றுகளைப் பார்க்கையில்
வானம் அவற்றை வைத்து மறந்துவிட்டதாய் நினைத்தேன்
மேகங்கள் வானவில்களை.
அண்மைக்காலமாய்
நாமிருக்கும் இந்த பூமியும்
கடவுளால் மறந்து வைக்கப்பட்டுவிட்டதோ என
சந்தேகிக்கிறேன்.
ஞாபகம் வரும் வரிசையில் அவர் மீட்டுக்கொள்கிறார்:
காடுகள், நதிகள், நாம்.

***

கள்ளிச்செடி

c876


முட்கள் என் மொழி
இரத்தம் கசியும் தொடுகையால்
ஒவ்வொருவரையும் அழைத்து
நான் இங்கிருக்கிறேன் என்று அறிவிக்கிறேன்.
அவருக்குத் தெரியாது
ஒருகாலத்தில் இம்முட்கள் மலர்களாயிருந்தனவென்று.
ஏமாற்றும் காதலர்கள் எனக்கு வேண்டாம்.
கவிஞர்கள் பாலைவனத்தைப் புறக்கணித்து
தோட்டங்களுக்குத் திரும்பிவிட்டார்கள்.
என் மலர்களைத் தூசாய் மிதிக்கும் ஒட்டகங்களும்
வணிகர்களும். மட்டுமே இங்கு மிஞ்சியிருக்கிறார்கள்
அரியதான ஒவ்வொரு நீர்த்துளிக்கும்
நான் ஒரு முள்ளை விரிக்கிறேன்
வண்ணத்துப்பூச்சிகளை நான் வசியப்படுத்துவதில்லை
என் பெருமையை எந்தப் பறவையும் பாடுவதில்லை
வறட்சிக்கு நான் வளைந்துகொடுப்பதில்லை.
பசுமையின் விளிம்புகளில்
நான் வடிப்பது இன்னொரு வகை அழகு
சந்திர ஒளிக்கு அப்பக்கம்
கனவுகளின் இப்பக்கம்
கூர்மையாய் தைக்கும்
ஓர் இணை மொழி.
திரு.சச்சிதானந்தன் அவர்கள், இக்கவிதையை மலையாளத்தில் வாசிப்பதை இங்குகேட்கலாம்.

***

ஈரப் புல்லின் மேல்

footprint1

ஈரப்புல்லின் மேல் அந்த பாதச்சுவடு
இறப்பினுடையதாய் இருக்கத் தேவையில்லை;
நாட்டுப் பாடல் ஒன்று அவ்வழி சென்றிருக்கக்கூடும்.
உன் உள்ளங்கையில் துடிக்கும் பட்டாம்பூச்சிக்கு
உன்னிடம் சொல்லவேண்டியது ஏதொவொன்று இருக்கிறது.
மாங்காய்களும் மல்லிகைகளும்
உன் குவிந்த கரங்களுக்குக் காத்திருந்தனவே
அவர்கள் விழுகையில் நடுவழியில் தடுக்க!
கடன்களைத் திருப்பவேண்டாமெனக்
கடல் கிசுகிசுப்பது உனக்குக் கேட்கவில்லையா?
உன் இருண்ட சிறிய அறையிடம் கூட
வானத்தின் ஒரு துண்டு இருக்கிறது.
எல்லாமே ஆசீர்வதிக்கப்பட்டவைதான்:
மீன்கள், சிள்வண்டுகள், கோரைப்புல்,
சூரிய ஒளி, உதடுகள், சொற்கள்.
(நம்பிக்கை பற்றிய மூன்று கவிதைகளில் ஒரு கவிதை)

***

முதிய பெண்கள்

old-woman1


முதிய பெண்கள் மந்திரக்கோலில் பறப்பதில்லை
அச்சுறுத்தும் காடுகளிலிருந்து
புரியாத குறிகளும் சொல்வதில்லை.
அமைதியான மாலைப்பொழுதுகளில் அவர்கள்
புறாக்களைப் பெயர் சொல்லி அழைத்து
சோளக்கதிர்களால் வசீகரித்தபடி
வெற்றுப் பார்க் பெஞ்சுகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
அல்லது, அலைகள் போல் நடுங்கியபடி
அரசு மருத்துவ நிலையங்களின்
முடிவில்லா வரிசைகளில் நின்றிருக்கிறார்கள்
அல்லது மலட்டு மேகங்களைப் போல்
அஞ்சலகங்களில் காத்திருக்கிறார்கள்
என்றோ இறந்துபோன வெளிநாட்டு மகன்களின்
கடிதத்தை எதிர்நோக்கி..
எதையோ மேலே எறிந்து
அது பூமிக்குத் திரும்பி வராததுபோல
ஒரு தொலைந்த நோக்குடன்
தெருக்களில் அலையும்போது
அவர்கள் மழைத்தூறலைப் போலக் கிசுகிசுக்கிறார்கள்.
கடைகளின் திண்ணைகளில்
தங்கள் கனவற்ற உறக்கத்தில்
அவர்கள் டிசம்பர் இரவைப்போல நடுங்குகிறார்கள்.
அவர்களின் அரைக் குருட்டுக் கண்களில்
இன்னும் ஊஞ்சல்கள் இருக்கின்றன
அரைகுறை நினைவுகளில்
லில்லிப் பூக்களும் கிருஸ்துமஸ்களும்.
அவர்களின் சருமத்தின் ஒவ்வொரு சுருக்கத்துக்கும்
ஒரு நாட்டார்கதை இருக்கிறது.
அவர்களின் தாழ்ந்துபோன முலைகளில்
தேவையான பால் இருக்கிறது.
அதை உதாசீனப்படுத்தும்
மூன்று தலைமுறைகளுக்கு ஊட்ட.
விடியல்கள் தாண்டிப்போகின்றன
அவர்களை இருட்டில் விட்டு.
அவர்கள் இறப்பை அஞ்சுவதில்லை
அவர்கள் என்றோ இறந்து போனவர்கள்.
வயதான பெண்மணிகள் ஒருகாலத்தில்
கண்டங்களாய் இருந்தவர்கள்.
அவருள் அடர்ந்த காடுகள் இருந்தன
நதிகள், மலைகள், எரிமலைகள் கூட,
கொந்தளிக்கும் வளைகுடாக்களும்.
பூமி கொதித்திருந்தபோது
அவர்கள் உருகி, குறுகினர்
தம் வரைபடத்தைமட்டும் விட்டு.
அவற்றை மடித்து நீங்கள்
வாய்ப்பாய் வைத்துக்கொள்ளலாம்
யாருக்குத் தெரியும்
நீங்கள் வீடுதிரும்ப அவை வழிகாட்டி உதவலாம்.

***

ஒரு கதவுடன் ஒரு மனிதன்

ஒரு கதவுடன் ஒரு மனிதன்treedoor
நகரின் வீதி வழியே நடக்கிறான்;
அதற்கான வீட்டைத் தேடிக்கொண்டு.
அவன் கனவுகளில்
அவனுக்கான பெண்ணும், குழந்தைகளும், நண்பர்களும்
அக்கதவினூடே நுழைந்திருந்தனர்.
இப்போது அவன் என்றுமே கட்டாத வீட்டின்
இக்கதவினூடே
உலகம் முழுதும் நுழைந்து செல்வதைப் பார்க்கிறான்:
மனிதர், வாகனங்கள், மரங்கள்,
மிருகங்கள், பட்சிகள், சர்வமும்.
அக்கதவின் சொப்பனமோ
இவ்வுலகைத் தாண்டியது.
அது சுவர்க்கத்தின் கதவாக விழைகிறது;
தன்னூடே மேகங்களும், வானவில்லும்,
கந்தர்வர்களும், அப்ஸரஸ்களும், மகான்களும்
தங்கம் பூசிய தன்னூடே
நுழைந்து செல்வதை கற்பனை செய்கிறது.
ஆனால் நரகத்துக்குச் சொந்தக்காரன்தான்
அக்கதவுக்காகக் காத்திருக்கிறான்.
இப்போது அது ஆசைப்படுவது இத்தனையளவே:
‘நான் என்னுடைய மரம் ஆகவேண்டும்.
மீண்டும் நிறைய இலைகள் நிறைந்து
காற்றில் அசைந்துகொண்டு
என்னை சுமந்து செல்லும் இந்த அனாதை மனிதனுக்கு
கொஞ்சம் நிழல் கொடுக்க.முடிந்தால் போதும்’
ஒரு கதவுடன் ஒரு மனிதன்
நகரின் வீதிவழியே நடக்கிறான்;
அவனுடன் ஒரு நட்சத்திரம் நடக்கிறது.
திரு.சச்சிதானந்தன் அவர்கள், இக்கவிதையை மலையாளத்தில் வாசிப்பதைஇங்கு கேட்கலாம்
[தமிழாக்கம்: உஷா வை.]

***