சின்ன விஷயங்கள்

st1

அன்று காலநிலை மாறவும் பனி உருகி அழுக்கான நீராகிக் கொண்டிருந்தது. கொல்லைப்புறத்தைப் பார்த்து திறந்திருந்த உயரமான ஜன்னல் பக்கமாக பனி உருகிய நீர் நிலத்தில் கலங்கிய குறுகலான ஓடையாக ஓடியது. வெளியே இருட்டிக் கொண்டிருக்க, தெருவில் கார்கள் பனிச்சேற்றில் விரைந்து கொண்டிருந்தன. உள்ளேயும் இருட்டிக் கொண்டுதான் இருந்தது.

படுக்கையறையின் வாசலுக்கு அவள் வந்த போது அவன் உள்ளே ஒரு பெட்டிக்குள் துணிகளைத் திணித்துக் கொண்டிருந்தான்.

சந்தோஷம், ரொம்ப சந்தோஷம் நீ கிளம்புவது, என்றாள் அவள். சொல்வது உனக்குக் கேட்கிறதா?

அவன் தொடர்ந்து துணிமனிகளை பெட்டிக்குள் வைத்துக் கொண்டிருந்தான்.

நாய் மகனே! நீ போவது எனக்கு சந்தோஷம் தான்! அவள் அழத் தொடங்கினாள். உன்னால் என் முகத்தை நேருக்குநேர் பார்க்கக் கூட முடியாது. முடியுமா என்ன?

படுக்கைமேல் இருந்த குழந்தையின் புகைப்படத்தைக் கவனித்தாள், உடனே அதை எடுத்துக் கொண்டாள்.

அவன் அவளைப் பார்த்தான், அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவனை வெறித்துப் பார்த்துவிட்டு திரும்பி நடந்து கூடத்திற்குச் சென்றாள்.

அதைக் கொண்டுவந்துவிடு, என்றான்.

உன் பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேபோ, என்றாள் அவள்.

அவன் பதிலே சொல்லவில்லை. பெட்டியை மூடிவிட்டு, கோட்டை அணிந்து கொண்டான். விளக்கை அனைக்கும் முன் ஒருமுறை படுக்கையறையை சுற்றிலும் பார்த்தான். வெளியேறி கூடத்திற்குச் சென்றான்.

அந்த சிறிய சமையல் அறையின் கதவுக்கருகே அவள் குழந்தையை அணைத்து வைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.

குழந்தை எனக்கு வேண்டும், என்றான்.

உனக்கென்ன பைத்தியமா?

இல்லை, ஆனால் குழந்தை எனக்கு வேண்டும். யாரையாவது அனுப்பி இந்தப் பொருட்களை எடுத்துக்கொள்வேன்.

குழந்தையை நீ தொடக்கூடாது, என்றாள். குழந்தை அழத்தொடங்கியிருந்தது. குழந்தையின் தலையைச் சுற்றி மூடியிருந்த துணியை அகற்றினாள்.

ஜோ..ஜோ.. என்றாள் குழந்தையைப் பார்த்து.

அவன் அவளை நோக்கி நடந்தான்.

தெய்வத்தை நினைத்து… வேண்டாம், என்றாள் அவள். கால்களை பின்னால் எடுத்துவைத்தபடியே சமையலறைக்குள் போனாள்.

குழந்தை எனக்கு வேண்டும்.

இங்கிருந்து போய்விடு!

அவள் திரும்பி, அறையின் மூலையில் அடுப்பிற்குப் பின்னாலிருந்த இடைவெளியில் சென்று குழந்தையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

ஆனால் அவன் முன்னேறி வந்துவிட்டான். அடுப்பைத் தாண்டி அவளை நெருங்கி குழந்தையை இறுக்கமாகப் பிடித்தான்.

குழந்தை வேண்டும். என்னை அவனோடு போகவிடு, என்றான் அவன்.

விலகிப் போ! விலகிப் போ!  அவள் அழுதாள்.

குழந்தை முகம் சிவக்க அலறி அழுதது. அவர்களின் சிறிய கைகலப்பில் அடுப்பிற்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த பூச்சட்டியைக் கீழே தள்ளிவிட்டார்கள். அவன் அவளைச் சுவரோடு சேர்த்து அழுத்தி, அவள் பிடியை விடுவிக்க முயன்றான். குழந்தையை பிடித்துக்கொண்டு அவளை முழுபலத்தோடு தள்ளினான்.

என்னை அவனோடு போகவிடு, என்றான்.

முடியாது, என்றாள் அவள். நீ குழந்தையைக் காயப்படுத்துகிறாய், என்றாள்.

நான் ஒன்றும் குழந்தையைக் காயப்படுத்தவில்லை, என்றான் அவன்.

சமையலறை ஜன்னலிலிருந்து வெளிச்சமே வரவில்லை. கிட்டத்தட்ட இருண்டிருந்த அறைக்குள் அவன் ஒருகையால் இறுக்கிப் பிடித்திருந்த அவள் கைவிரல்களை பிரித்து விலக்க முயன்று கொண்டே இன்னொரு கையால் கதறிக் கொண்டிருந்த குழந்தையின் அக்குளின் அருகே பிடித்து ஒரு கையைப் பற்றி இழுத்தான்.

அவள் தன் விரல்கள் பலவந்தமாக பிரித்து விலக்கப்படுவதை அறிந்தாள். குழந்தை அவளிடமிருந்து நழுவி அவனிடம் போவதை உணர்ந்தாள்.

அவள் கைகள் தளர்ந்த போது, முடியாது! என்று அலறினாள்.

குழந்தையை அவள் எடுத்துக்கொண்டுவிட முடியும். குழந்தையின் இன்னொரு கையை பிடித்துவிடப் பாய்ந்தாள். குழந்தையின் ஒருகையின் மணிக்கட்டைப் பிடித்துவிட்டாள். பின்னால் சாய்ந்து இழுத்தாள்.

ஆனால் அவன் விட்டுவிடவில்லை. தன் கையில் இருந்து குழந்தை நழுவுவதை உணர்ந்து மிகவலுவாக தன்னை நோக்கி இழுத்தான்.

இவ்வாறாக, இந்த விஷயம் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

***

(ஆங்கில மூலம் – http://www.mrchilton.com/Popular%20Mechanics.pdf)

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

முதலில் “Popular Mechanics” என்று பெயரிடப்பட்ட கதை பிறகு “Small Things” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1981ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்தக் கதை, ஆண்-பெண் உறவு, திருமணம் போன்றவற்றின் அன்றைய அமெரிக்கச் சூழ்நிலையை பிரதிபலித்தது. கதையின் பூடகமான முடிவு உண்டாக்கிய அதிர்ச்சி மூலம் பெரிய விவாதத்தைக் கிளப்பியது. குறைவாகச் சொல்லி,வெவ்வேறு கோணங்களிலான வாசிப்புக்கான சாத்தியங்களை விட்டு வைத்திருப்பதன் வழியாக கதை என்றும் உயிர்ப்போடு உள்ளது. இன்றைய இந்திய சமூகத்திற்கும் இக்கதை பொருத்தமானது. இணையத்தில் தேடினால், இந்தச் சின்னஞ்சிறு கதைக்கு நிகழ்த்தப்பட்ட விதம்விதமான வாசிப்புகளையும், அலசல்களையும், திறனாய்வுகளையும் பார்க்கும்போது அது வாசகர்களிடமும், சமூகத்திலும் உண்டாக்கிய சலனத்தை அறிந்துகொள்ள முடியும். உரையாடல்களுக்கு மேற்கோள் (“…..”) இல்லாமல் மொத்தமாக வர்ணனை போல எழுதப்பட்ட இந்தச் இறுகதை எழுத்துப் பயிற்சிப் பட்டறைகளிலும் முக்கியமான எழுத்து மாதிரியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. மூன்றரை நிமிடம் ஓடும் இந்தச் சிறுகதையின் குறும்பட வடிவம் கீழே.