மயக்கம்

ee

ஆனை ஆனை அழகர் ஆனை

அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை

கட்டுக்கரும்பை முறிக்கும் ஆனை

காவேரித் தண்ணியை கலக்கும் ஆனை..

– அந்த வரி வந்ததும் ராமன் தன் வழக்கமான கவலையுடன், “என்னப்பா ஆனை.. போப்பா ஆனை.. காவேரித் தண்ணில எல்லாம் அலையப்டாது… ஜுரம் வரும்.. அப்புறம் டாக்டர் மாமாகிட்ட சொல்லி ஊசி போடச் சொல்லுவா, ரொம்ப வலிக்கும். சமத்தா இருக்கனும் சரியா?” என்றான். அகலமான பெரிய புத்தகத்தில் ஒரு குட்டியானை குறும்பாக அவனைப் பார்த்துச் சிரித்தது. யானைக் குட்டிக்கு பள்ளிக்கூடமே கிடையாது, தினமும் அம்மாவுடன் வீட்டிலேயே இருக்கலாம் என்று நினைத்ததும் அவனுக்கு ஏக்கமாக இருந்தது.

“கோந்தே.. டேய் யானைக்காரா.. அப்பாவோட வெத்தலப்பெட்டிய எடுத்துண்டு வாடாப்பா…சமத்தே..” அப்பாவின் குரல் ஒரு பெரிய ஏப்பத்தைத் தொடர்ந்து வந்தது. குட்டி யானை மேலேறி வெற்றிலைப் பெட்டியுடன் ராமன் சென்றபோது, தூணில் சாய்ந்து இடதுகாலை மடக்கி வலதுகாலை வீட்டின் கூடத்துக்குள் இருக்கும் நடுமுற்றத்தில் தொங்கவிட்டு நிதானமாக உட்கார்ந்தார் அப்பா. அகன்ற முற்றத்தின் மேல் பகுதி கம்பிகளாலான பெரிய இடைவெளியுள்ள கிராதி கொண்டு அடைக்கப்பட்டிருந்தது. மழையும் காற்றும் வெயிலும் நடுவீட்டில் கொட்டும் முற்றம் வான் நோக்கித் திறந்த சாளரம் போல இருந்தது. வெயிலின் சூட்டைக் குறைப்பதற்காக தென்னை ஒலையால் செய்யப்பட்ட பெரிய தட்டிகள் கிராதியின் மேல் போடப்பட்டிருந்தது.

சூடான சாப்பாடு வியர்வையைக் கிளப்பியிருந்தது. அப்பாவின் அடிக் கழுத்திலிருந்தும், மார்பின் ரோமங்களுக்குள்ளிருந்தும் வியர்வை பெருகி கோடுகளாக பெருத்த வயிற்றில் மெதுவாக இறங்கி, அங்கிருந்த முத்துத் துளிகளோடு சேர்ந்து கீழே இறங்கியது. நடுப்பகலின் ஓய்ந்துபோன அமைதி. இளம்பச்சை நிறத்தில் இருந்த சோழவந்தான் வெற்றிலையின் காம்பையும் நுனியையும் கிள்ளி, வெற்றிலையை நீளவாக்கில் குப்புற மடித்து நடுநரம்பை உரித்து, ரோஜாசெண்ட் போட்ட சுண்ணாம்பை வெற்றிலையின் பரப்பில் அங்குமிங்கும் தீற்றினார். வெள்ளரி விதையும், வாசனையும் சேர்த்த சாமுண்டிப் பாக்கை கொஞ்சம்போட்டு, முந்திரித் தூளும் இனிப்பும் கலந்து நெய்யில் வறுத்த சீவலையும் ஒரு விள்ளல் போட்டுக்கொண்டார். வெற்றிலையைப் பொட்டலமாக மடித்து கடைவாயில் அதக்கினார். ராமனுக்கும் உள்ளங்கையில் கொஞ்சம் நெய்சீவல் தந்தார்.

வாயில் போட்டான், இனிப்பாக இருந்தது. மென்று கொண்டே முற்றத்தின் வலது மூலைக்கு அப்பால் கூடத்திலிருந்து திறந்த வாசலுடன் கூடிய சமையல் அறைக்குப் போனான். அடுப்பு இருக்கும் இடத்திற்கு மேலே உயரத்தில் நூலாம்படை படிந்த ஜன்னலில் இருந்து கரிய கம்பிகளைத் தாண்டி வெயில் டார்ச் விளக்கு வெளிச்சம் போல நீண்டுவந்து சமையலறயின் வலதுபக்கச் சுவரில் பாதியும் மீதி ஒடிந்து தரையிலுமாக விழுந்து கிடந்தது. அம்மா ஒருகாலை குத்தவைத்து உட்கார்ந்து தட்டில் சாதத்தைப் போட்டு பிசைந்து கொண்டிருந்தாள். பருப்பு சாதத்தில் நிறைய நெய் ஊற்றிப் பிசைந்து, தட்டின் ஓரத்தில் கொஞ்சமாக வத்தல் குழம்பை ஊற்றி, சுட்ட அப்பளமும், வாழைக்காய் கறியும் பரிமாறியிருந்தாள். பார்த்தாலே தெரிந்தது-அது அவனுக்காகத் தான். பின்னால் போய் கழுத்தைக் கட்டினான். வியர்த்து, தலையிலிருந்து வழிந்த எண்ணையுடன் கலந்து பிசுபிசுவென்று இருந்தது. தலையில் இருந்து புசுபுசுவென முடி மூக்கில் வருடியது. “கசகசன்னு இருக்கு, கட்டிண்டுகொல்லாத அம்மாவ” இடது கையால் அவன் கைகளைப் பிரித்துவிட்டு, முன்னோக்கி அவனை இழுத்து உட்காரவைத்தாள். பருப்பு சாதத்தை ஒரு சிறிய கைப்பிடி எடுத்து வத்தல் குழம்பில் கொஞ்சம் தொட்டு அப்பளத்தை உடைத்து ஒரு துண்டுடன் அவன் முன் நீட்டினாள், வாயை அகலத் திறந்து வாங்கிக் கொண்டான். வாய்க்குள் எச்சில் ஊற சந்தோஷமாக மென்றான். அவன் வாய்க்குள்ளிருந்த சாதத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அம்மா அப்பளத்தில் இருந்து ஒரு துண்டு உடைத்துத் தன் வாயில் போட்டுக்கொண்டாள். அடுத்த முறை அப்பளத்தில் கைவைக்கும் போது கையைப்பிடித்தான், வாயில் சோற்றுடன், “என் அப்பளத்த பூரா தின்னுட்ட…” என்று பொய் அழுகையுடன் ஓலமிட்டான். “வேண்டாண்டி கோந்தே…என் தங்கமோன்னோ? அம்மா உன் அப்பளத்த சாப்பிடமாட்டேன். அழாமச் சாப்பிடு” என்றாள். “என் குட்டி ஆனைக்கு..?” என்று புத்தகத்தை விரித்து அம்மாவிடம் காட்டினான். சிரித்துக் கொண்டே ஒரு கவளத்தை யானைகுட்டிக்கு காட்டிவிட்டு அவன் வாயில் அடைத்தாள்.

கூடத்திலிருந்து அப்பாவின் குரல், “டேய் கோந்தே.. யானைக்காரா… ஒரு சொம்புல அப்பாவுக்கு மண் பானை ஜலம் கொண்டு வாடா…” விநோதமான சத்தத்துடன் கேட்டது. வாய் நிறைய வெற்றிலை இருக்கும் -மோவாயை வானத்தை நோக்கித் தூக்கிக் கொண்டு கூப்பிடுகிறார் என்று புரிந்தது.

அம்மா விறுவிறுவென சாதத்தட்டுடன் எழுந்து கூடத்திற்குச் சென்றாள், யானைக் குட்டியையும் அழைத்துக் கொண்டு பின்னாலேயே ஓடினான்.

“ஆனைக்காரனெல்லாம் உங்க ஆகத்தோட போட்டும்.. சும்மா எம்புள்ளய ஆட்டுக்காரன், ஆனைக்காரன்னு கூப்பிட்டு என் வாயப் புடுங்காதீங்கோ..” குரலில் கொஞ்சம் கோபம் தெரிந்தது.

அப்பா நிதானமாகச் சிரித்துக் கொண்டே, “அதென்ன எங்க ஆகம்? எல்லாம் தாயாதி வாசனை! அதான் ரத்தத்திலேயே வர்றது… சதா ஆனையக் கட்டிண்டு அழறானே…” மேலும் சிரித்துக் கொண்டே “டேய் கோந்தே… ஆனை டிரைவர்… நீ பெரியவனானதும் நன்னா சேப்பா ஒரு ஆனை வாங்கித் தர்றேண்டா அப்பா உனக்கு.. சரியா?” என்றார். புத்தகத்தை விரித்துக்காட்டி, “இதே மாதிரி குட்டி ஆனை தான் வேணும்” என்றான் சந்தோஷமாக.

எரிச்சலுடன் அம்மா புத்தகத்தைப் பிடுங்கி தரையில் விட்டு எறிந்தாள். புத்தகத்தை எடுக்க கத்திக் கொண்டே ஓடினான். அம்மா நாலே எட்டில் அவனை விரட்டிப் பிடித்து கையை இழுத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டு, தலையில் மெல்லக் குட்டினாள். அப்பாவிடம், “ஏ..பிராம்மணா.. உங்க வாய்ல தர்ப்பையைப் போட்டு பொசுக்க… என் குழந்தைய கெடுத்து குட்டிச் சுவராக்காதேள். ஆச்சாளுக்கு பீச்சாளாம் மதினிக்கு உடப்பிறந்தாளாம்.. என் பிள்ளைக்கு என்ன தாயாதி வாசனை வேண்டியிருக்கு? அதெல்லாம் உங்க தலைமுறையோட சரி. வேணும்னா சேப்பா ஒரு ஆனை வாங்கிண்டு நீங்க போங்கோ ஆனைக்காரனா” கீழ்த்தாடையை வலது தோளால் விரைவாக இடித்து வாயைக் கோணிக்காட்டினாள்.

அப்பா சிரித்துக்கொண்டே, “சமத்துக் குஞ்சு… வாசல்ல வெயில் வீணாப்போறதேடா கோந்தே, போய் தலைல வாங்கிக்கலையா?” என்றார் அவனைப் பார்த்து. வாயிலிருந்து சாதம் கூழாக வழிய, “சாப்டுட்டு விளையாடப் போணும்” என்றான். அம்மா அவன் காதைத் திருகினாள், “வெயில்ல வாசப்பக்கம் போனே.. உங்கப்பா மாதிரி கன்னங்கரேல்னு ஆயிடுவ. சமத்தா அம்மா பக்கத்துல தாச்சிண்டு தூங்கனும்” என்றாள்.

“சரிடி அம்மா பரதேவதே… உன் கைக்குழந்தைக்கு சாத்த ஊட்டித் தூங்கப்பண்ணு. சாயங்காலமா வெயில் தாழ ஆனைமேய்க்கப் போனுமே..” அப்பா கொஞ்சம் கூட கோபப்படாமல் வழக்கமான நக்கலுடன் சொல்லியபடியே அங்கவஸ்திரத்தால் மார்பையும் வயிரையும் ஒற்றிக் கொண்டார். பின்னர் அதைச் சுருட்டி தலைக்குக் கீழே வைத்துக் கொண்டு, “ஸ்வபாடா…அம்மா.. பரமேஸ்வரி” என்றவாறே படுத்துக் கொண்டார்.

*****

அப்பாவிடம் பலமுறை திரும்பத்திரும்ப சொல்லச்சொல்லி கேட்டது தான். சுந்தாச்சுச் சித்தப்பா யானையின் பின்னால் ஓடிப்போன கதை. எத்தனை முறை கேட்டாலும் ராமனுக்குச் சலிக்காது, அவன் அப்பாவிற்கும் சொல்லிச் சலிக்காது. ஒவ்வொரு முறையும் அவரின் மனநிலையைப் பொறுத்து பல கிளைக் கதைகளுடன் வளர்ந்துகொண்டே வந்தது.

பக்கத்து ஊரான மன்னாடிமங்கலத்தில் தூரத்துச் சொந்தத்தில் ராமனின் அப்பாவிற்குச் சித்தப்பா ஒருவர் இருந்தார். நடேச சாஸ்திரி. வேதம் படித்தவர். நல்ல படிப்பாளி, கூடவே கோபமும், பயங்கர ஆசாரமும். மனைவி, பிள்ளைகள் உட்பட ஊர் முழுதும் அத்தனை பேர் ஆசாரத்தையும் குறை சொல்லுவார். யாரையும் தொட விடமாட்டார். விளைவாக, மடி சாஸ்திரி என்று பெயர் வந்தது. பின்னர் அது மட சாஸ்திரியாக மறுவிற்று. அவரிடமே யாரோ ஒருவர் ஏன் அப்படி பெயர் வந்தது என்று கேட்கப்போக, “பின்னே? நான் தானே ஓய் நம்ம மடத்தோட ஆஸ்தான சாஸ்திரிகள்… அதான் எல்லாரும் வெறும்னே சாஸ்திரிகளேன்னு கூப்பிடாம மட சாஸ்திரிகள்னு மரியாதையா கூப்பிடறா” என்று சமாளித்தார். அவர் போன பிறகு, “சும்பப் பயல்.. வம்புக்கு கெடந்து அலையறான்” என்று பொருமினார்.

நடேச சாஸ்திரிக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் பாலசுப்ரமணியன், அடுத்தது மூன்று வயது இளைய சுந்தர்ராஜன். வீட்டின் கடைக்குட்டி சாரதா. சின்ன அண்ணாவை விட நான்கு வருடம் சிறியவள்.

சாஸ்திரிகளின் மானத்தை வாங்குவதெற்கென்றே பாச்சுவும், சுந்தாச்சுவும் வேத பாடசாலையில் ஒழுங்காகப் படிக்காமல் ராவோடு ராவாக ஓடி வந்தார்கள். இளையவன் சுந்தாச்சு தான் பாச்சுவையும் சேர்த்து கெடுத்தான் என்று சாஸ்திரிகள் திட்டினார். “எவன்கிட்டயாவது அடிமை உத்யோகம் பாத்துத் தான் பொழைக்கனும்னு ஈஸ்வர சங்கல்பம்னா நான் என்ன பண்ணமுடியும்?” என்று திட்டிக்கொண்டே, கிராப் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன் தலையில் கட்டுக்குடுமியோடு மறுபடியும் பழைய பள்ளிக்கூடத்திலேயே இருவரையும் சேர்த்துவிட்டார். ராமனின் அப்பாவும் அதே பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தார். இருவருமே ராமனின் அப்பாவை விட வயதில் இளையவர்கள். பள்ளியில் விடும் போது சாஸ்திரி அப்பாவிடம், “சுப்பு, சுந்தாச்சு மேல எப்பவும் ஒரு கண் வச்சுக்கோடாப்பா..” என்றார்.

ஒருநாள் ராமனின் அப்பா, பாச்சு, சுந்தாச்சு, -மூவரும், பள்ளிக்கூடம் விட்டு வரும் வழியில் பெரிய யானை ஒன்று வருவதைக் கண்டார்கள். பட்டை உரிக்கப்பட்ட கனத்த வேப்பமரக் கிளை போல முனை மழுங்கச் செதுக்கப்பட்ட பெரிய இரண்டு தந்தங்கள் கடைவாயில் இருந்து நீண்டு வளர்ந்திருந்தன. இதுவரை அந்தப் பகுதியில் வந்ததிலேயே மிகப்பெரிய யானை, அதிலும் இவ்வளவு பெரிய கொம்புள்ள யானையை யாரும் பார்த்ததில்லை. காது மடல்களின் விளிம்பும், துதிக்கையும் வெண்புள்ளிகள் படர்ந்து வெளுத்திருந்தது. நெற்றியிலும் காதுமடல்களிலும் சுண்ணாம்புக் கட்டியால் வரையப்பட்ட விபூதிப்பட்டை மற்றும் ஏதோ அலங்காரக் கோலங்கள். சிறிய பித்தளை மணிகள் கோர்க்கப்பட்ட இரும்புச் சங்கிலி ஒன்று கழுத்தில் மாலைபோல அணிவிக்கப்பட்டிருந்தது. இரு நுனியிலும் மணிகள் கொண்ட நீண்ட பித்தளைச் சங்கிலி ஒன்று யானையின் நடு முதுகில் போடப்பட்டிருந்தது. சங்கிலியில் மணி கோர்த்த நுனிகள் பக்கவாட்டில் இறங்கி வயிற்றின் அருகே தொங்கியது.

ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும் போதும் கழுத்து மணிகளும், பெருத்த வயிறு பக்கவாட்டில் அசைய, பித்தளைச் சங்கிலியில் தொங்கிய மணிகளும் வெவ்வேறு சுருதிகளில் ஒலி எழுப்பின. யானையின் கம்பீரத்தில் ஊர் வைத்த கண்வாங்காமல் பிரமித்துப் பார்த்தது. கிராமத்துப் பொடியன்களின் பட்டாளம் கிரங்கிப் போய் உற்சாகத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பெரும் கூச்சலுடன் பின்னாலேயே ஓடிவந்தது. தெருநாய்கள் மிக ஜாக்கிரதையாக யானையிடம் இருந்து பத்தடி விலகி காதுகளை பின்னால் மடக்கி, வாலைப் பின்னங்கால்களுக்குள் செருகி, வயிற்றை எக்கி ஓயாது குரைத்தபடி இருந்தன.

யானை யாரையும் பொருட்படுத்தாமல் பெரிய வீட்டுப் பெண் போல நிதானமாக கம்பீரமாக நடந்து சென்றது. நீண்ட துதிக்கையின் நுனியை சுருட்டியும் நீட்டியும் காற்றில் அளைந்து கொண்டே இருந்தது. கண்கள் தரையைப் பார்ப்பது போலத் தாழ்ந்திருந்தது. ஆனால் உண்மையில் எதைப் பார்க்கிறது என்றே கணிக்க முடியவில்லை. ஒருவன் அதன் மத்தகத்தில், தன் தொடைமேல் குறுக்காக அங்குசத்தை வைத்துப் பிடித்துக் கொண்டு பெருமையாக அமர்ந்திருக்க, இன்னொருவன் ஒருகையால் தந்தத்தைத் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் நீண்ட பிரம்புடன் யானையோடு நடந்து வந்தான். வீடுகள் தோறும் முறத்தில் வைத்துக் கொடுக்கப்படும் அரிசியையும் வெல்லத்தையும் உறிஞ்சி வாயில் போட்டுக்கொண்டு சில்லறைகளை பாகனிடம் தந்தது. வாளியில் வைக்கப்படும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், தலையில் துதிக்கையை ஒற்றியெடுத்து ஆசீர்வதித்தும் அக்ரஹாரத்தையும் பெரிய தெருக்களையும் கடந்தது. அவர்கள் ஊரைக் கடக்கும் போது ராமனின் அப்பா, “டேய் ரொம்ப நாழி ஆனை பின்னாடி சுத்தாம ஆத்துக்குப் போங்கோ.. பெரியப்பா கோச்சுப்பார்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குப் போய்விட்டார்.

கிராமத்து தெருநாய்கள் குரைத்தபடியே பின்னால் சென்று ஊர் எல்லையைத் தாண்டி வழியனுப்பிவிட்டு நிம்மதியாக வர, யானை மன்னாடிமங்கலத்துக்குள் நுழைந்தது. யானை அக்ரஹாரத்தைத் கடக்கும் போதே பாச்சு தம்பியை வீட்டிற்கு வரச்சொல்லி கையைப் பிடித்து பலவந்தமாக இழுக்க, அண்ணாவின் கையைக் கடித்து, புத்தகப் பையைத் தெருவில் தூர வீசி எறிந்துவிட்டு யானை பின்னால் ஓடினார் சுந்தாச்சு.

பாகன்கள் குடுமியுடன் இருந்த பிராமணப் பையனை விநோதமாகப் பார்த்தார்கள், வீட்டிற்குப் போகச் சொல்லி விரட்டினார்கள். விடாமல் யானையோடு ஊர் முழுதையும் சுற்றியடித்துவிட்டு, அடுத்த கிராமத்திற்கும் தொடர்ந்து சென்றார். பின்னர் பொழுது சாய்ந்து யானையை வைகையில் குளிப்பாட்டும் போதும் கூடவே இருந்தார். யானைப் பாகன்களிடம் கெஞ்சி அந்தக்கல்லை வாங்கி யானைக்குத் தேய்த்துவிட்டார். யானைக்கு தென்னை மட்டை வெட்டிப்போடுவதற்கு தோப்பிற்குக் கூட்டிப் போனார். பாகன்களுக்கு சாப்பாடுக்கடைக்கு வழிகாட்ட துணைக்குச் சென்றார்.

இருட்டியதும் பாகன்கள் பலவந்தமாக துரத்த வீட்டிற்கு சோகமாக முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு வந்தார். சாஸ்திரிகள் அங்கவஸ்திரத்தால் மார்பைப் போர்த்திக்கொண்டு நெற்றியில் விபூதிப் பட்டையுடன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் பாச்சுவும் நெற்றி, கைகால்களில் வரிவரியாக விபூதி பளிச்சிட ஏதோ புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். சுந்தாச்சு வீட்டின் முன் தயங்கி நின்றார். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் சாஸ்திரிகள் முகம் சிவப்பாகத் தெரிந்தது. சாஸ்திரிகள் கையில் இருந்த வளைந்த பனையோலை விசிறியின் நிழல் யானையின் காது போலத் தெரிந்தது. சுந்தாச்சு எதையோ நினைத்துக்கொண்டார், முகத்தில் மெல்லச் சிரிப்பு படர்ந்தது. வெறிகொண்ட சாஸ்திரிகள், “என் மானத்தை வாங்கறதுக்குன்னே வந்து வாச்சிருக்கியா? நா ஊருக்கே உபதேசம் பண்றேன்.. ஆனா எம்புள்ளைக்கு ஒரு நல்ல பழக்கம் கிடையாது. வெக்கக்கேடு.. எல்லாம் என் பிராரப்தம். சாயங்கால வேளை, ஆத்துக்கு வந்து கைகால் அலம்பிண்டு சந்தியாவந்தனம் பண்ணி சுவாமி நமஸ்காரம் பண்ணிட்டு புஸ்தகத்த எடுத்து வச்சு ரெண்டு வார்த்தை வாசிக்காம, சூத்திரப் பசங்களோட சேந்துண்டு யானை பின்னால தெருத்தெருவா அலையறயேடா அசத்து… உனக்கு கடன் வாங்கி பூணூல் போட்ட காசுக்கு ரெண்டு பசுமாட்ட வாங்கியிருந்தாலாவது ஒரு புண்ணியமுண்டு…” கத்திக்கொண்டே திண்ணையிலும் தெருவிலுமாக துரத்தித் துரத்தி விசிறிக் காம்பால் சுந்தாச்சுவை அடித்துத் துவைத்தார். பிள்ளையின் அலறல் கேட்டு சாஸ்திரிகளின் மனைவி கமலம் அடுக்களையிலிருந்து நடுமுற்றத்தைச் சுற்றிக்கொண்டு அவ்வளவு பெரிய கூடத்தையும், இரண்டு ரேழிக்களையும் தாண்டி ஓடி வருவதற்குள் சுந்தாச்சுவின் உடல் எங்கும் விசிறிக்காம்பின் தடம் வரிவரியாகப் பதிந்து சிவந்து தடித்திருந்தது. சிறியவள் சாரதாவும் கையில் மரப்பாச்சி பொம்மையுடன் ஓடிவந்தாள், அப்பாவைப் பார்த்து பயந்து போய் அம்மாவின் பின்னால் ஒண்டிக் கொண்டாள். திண்ணையில் அழுது துடித்துக்கொண்டு கிடந்த மகனை வாரி எடுக்கப் போன மனைவியை பெருங்குரலில் ஒரே அரட்டலில் அரண்டு நடுங்கச் செய்தார். “புள்ளயக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியிருக்கா அசமஞ்சம்… என்னக் கேக்காம இவன் ஆத்துக்குள்ள காலடி எடுத்து வைக்கப்டாது. இன்னைக்கு ராத்ரி அவனுக்கு சாதம் போடப்டாது. எவன் கூடப் போயி தெருப்பொறுக்கப் போனானோ அவன் கூடவே போகட்டும்… நீ போடீ உள்ள” என்று மனைவியை கோபமாக விரட்டினார்.

Courtesy : The Hindu

பசியெடுக்கும் போது தானாக திரும்ப வருவான் என்று அரிக்கேன் விளக்குடன் கூடத்தில் சாப்பிடாமல் காத்துக்கொண்டிருந்த சாஸ்திரிக்கு நேரம் ஆக ஆக மகன் வராததால் பயம் பற்றிக் கொண்டது. அழும் மனைவியையும் சமாதானப்படுத்த முடியவில்லை. பெரியவன் பாச்சுவை விட்டுத் தேடச் சொன்னார். தானும் அரிக்கேனுடன் இறங்கித் தேடினார். பாச்சு வியர்க்க விறுவிறுக்க சைக்கிளை மிதித்துக்கொண்டு வந்து, ராமனின் தாத்தாவிடம் விஷயத்தைச் சொன்னார். ராமனின் தாத்தாவும், அப்பாவும், பாச்சு சித்தப்பாவும் கோயில், ஆற்றங்கரை, குளக்கரை மண்டபம், தோப்பு என ஆளுக்கொரு பக்கமாகத் தேடினார்கள். எங்கும் சுந்தாச்சுவைக் காணவில்லை.

மறுநாள் விடிந்தது. ஒரு தகவலும் இல்லை. பக்கத்து வீட்டுப் பெண்கள் தைரியம் சொல்ல, சாஸ்திரிகளின் மனைவி அழுதுவீங்கிய முகத்துடன் பேசாமல் அமர்ந்திருந்தார். அன்று மாலை வரை பல இடங்களிலும் தேடினார்கள். பலனில்லை. சாஸ்திரிகள் தளர்ந்து விட்டார். மனைவியைப் பார்க்கவே அஞ்சினார். தெருக்காரர்கள் ஆளாளுக்கு அவருக்கு புத்திமதி சொன்னார்கள். பெண்கள் “இப்படிப் பண்ணிட்டாரே?” என்றார்கள். அன்று இரவு சாஸ்திரிகளின் மனைவி பேய் பிடித்ததுபோல கத்தினார். “என் புள்ளய தொலச்சிட்டியே மகாபாவி” என்று முட்டிக்கொண்டு அழுதார். மெல்ல மெல்ல அவர் பேசுவதே குறைந்தது. வீடே இறுக்கமானது.

சில நாட்கள் பொறுத்தார்கள். அக்கம் பக்கங்களில் சின்னப்பையன் யாரும் அனாதையாகத் திரியும் தகவல் எதுவும் இல்லை. கிணற்றிலோ குளத்திலோ சிறுவன் பிணம் எதுவும் கிடைக்கவில்லை. யானையுடன் ஓடிப்போயிருக்கலாம், எப்படியும் கண்டுபிடித்துவிடலாம் என்று அக்ரஹாரத்திலுள்ளவர்கள் சமாதானப்படுத்தினார்கள். வெளியூர்களில் உள்ள சொந்தக்காரர்களிடம் எல்லாம் சொல்லிவைத்தார்கள். ஏதாவது நல்ல செய்தி வரும் என துக்கத்தை அடக்கிக் கொண்டு காத்திருந்தார்கள்.

நாலைந்து வருடங்கள் ஓடின. சாஸ்திரிகள் புத்ர சோகத்திலும், குற்ற உணர்ச்சியிலும் ஆளே சுத்தமாக ஒடுங்கிப் போனார். பெரும்பாலும் அமைதியாக இருந்தார். ஜுரம்வந்து நலிந்த உடலுடன் சிலநாட்கள் இரண்டாம் ரேழியில் கிடந்தார், அதிகம் தாமதிக்காமல் சீக்கிரமே ஒருநாள் செத்துப்போனார்.

பாச்சுவையும், சாரதாவையும் அவர்கள் அம்மா கமலம் தான் அரும்பாடுபட்டு வளர்த்தார். அதிலேயே முழு மூச்சாக இருந்தார். சுந்தாச்சு ஓடிப்போனதை வீடே மறந்து விட்டது போல காணப்பட்டது. சாஸ்திரிகள் உயிரோடு இருந்தபோதும் சோற்றுக்குக் கஷ்டமில்லாமல் குடும்பம் நடந்து கொண்டிருந்தது, அவ்வளவு தான். சேமிப்போ, சொத்தோ எதுவும் இல்லை. இருக்கும் வீடும் மிகப்பழையது, ஆறு தாயாதிக் குடும்பங்களுக்குச் சொந்தமானது. வீட்டில் விற்க முடிந்த பொருட்களையெல்லாம் ஒவ்வொன்றாக விற்றார். சமையல் வேலைகளுக்குச் சென்றார். பிறந்த வீட்டிலும் தரித்திரம் தான். பெரிய உதவிகள் எதுவும் இல்லை. ராமனின் தாத்தாவும் ஏழ்மையில் தான் இருந்தார். தன் கஷ்டங்களுக்கு மத்தியில் சிறிய உதவிகள் செய்தார். ஓரிருவருடங்களில் பாச்சு சித்தப்பா படிப்பை நிறுத்திவிட்டு புரோகித்திற்கு உதவியாளராகச் சென்றார். ராமனின் அப்பாவும் பியுசி தோற்று படிப்பைக் கைவிட்டு தாத்தாவிடம் பிழைப்புக்குத் தேவையான வேதமந்திரங்களை மட்டும் கற்றுக்கொண்டு ஒருசிறிய கோயிலில் பூஜையும், புரோகிதமுமாக வாழ்க்கையை ஓட்டினார். ஓரளவு வருமானம் வந்தது. சமயங்களில் அப்பாவும், பாச்சு சித்தப்பாவும் சேர்ந்து பல இடங்களுக்குப் புரோகிதத்திற்குப் போனார்கள். யானையை, யானைக்காரர்களை, வீட்டைவிட்டு ஓடிப்போவதை திரும்பத் திரும்பப் பேசிக் கிண்டலடித்து, எதையோ மறக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

*****

சுந்தாச்சு சித்தப்பா யானையுடன் ஓடிப்போய் இருபது வருடங்கள் ஆகிவிட்டிருந்தது. அப்பாவிற்குக் கல்யாணம் முடிந்து ராமன் பிறந்து விட்டான். பாச்சு சித்தப்பா கல்யாணம் செய்து கொள்ளவில்லை, காரணம் சாரதா அத்தைக்கு இன்னும் கல்யாணம் அமையவில்லை. அப்பா இல்லாத குடும்பம், பையன் ஓடிப்போன சரித்திரம், திருமாங்கல்யம் கூட தங்கத்தில் செய்து தரமுடியாத வீட்டின் தரித்திரம் எனப் பல காரணங்கள். சாரதா அத்தைக்கு வயது இருபத்தி எட்டு ஆனது. இத்தனை வயதில் கல்யாணம் ஆகாத ஒரு பெண்ணும் அவர்கள் சொந்தத்திலோ ஊரிலோ இல்லை.

கமலம் சித்திப்பாட்டி மகளின் திருமணத்தை நினைத்து நினைத்து உருகினார். தெரிந்த எல்லா தெய்வங்களையும் காசு செலவில்லாத தெரிந்த எல்லா வகையிலும் தொழுதார். பித்துப் பிடித்தது போல பார்ப்பவர்களிடமெல்லாம் பெண்ணுக்கு தகுந்த வரன், ‘சுமாரான இடமாக இருந்தால் போறும், பாருங்கோ’ என்று வேண்டினார்.

ராமன் வளர்ந்து எட்டாம் வகுப்பு முழுப்பரிட்சை விடுமுறையில், குழந்தையாகவும் இல்லாமல் ‘பெரிய பையனாகவும்’ இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக ஊர் சுற்றிக் கொண்டு சந்தோஷமாக இருந்த போது கடைசியில் ஒரு வழியாக சாரதா அத்தையின் கல்யாணம் நிச்சயமானது. வத்தலக்குண்டு மாப்பிள்ளை. ஒரு பள்ளியில் உதவியாளர் வேலை. கருப்பாக, தெற்றுப் பல்லுடன், முழு வழுக்கையாக இருந்ததால் பெண் கிடைக்கவில்லை.

“கருப்பு தான் அழகு, காந்தல் தான் ருசி. மாப்ளைப் பையன் நன்னா சிரிச்ச முகமா இருப்பான். ஆம்பிளைக்கு அழகு என்னத்துக்கு? உத்யோகம் புருஷ லக்ஷணம். ஒன்னும் யோஜிக்காதேள்.. நல்ல இடம்” என்று வரன் பார்த்துக்கொடுத்த சம்பு ஐயர் சொன்னதும் அனைவரும் முடிவு செய்து விட்டனர். சாரதா அத்தை முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது. சித்திப்பாட்டி சமாதானமடைந்தாள். கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டுமென்ற அடுத்தகட்ட பிரார்த்தனைகளை ஆரம்பித்தாள். அவர்கள் அக்ரஹாரத்தின் இரண்டு மூன்று பணக்காரர்கள் திருமாங்கல்யத்திற்கும், கூரைப்புடவைக்கும், கல்யாணச் செலவில் கொஞ்சத்திற்கும் பொறுப்பேற்றுக் கொண்டதால் பாச்சு சித்தப்பாவிற்கு தைரியம் வந்தது. இருக்கும் காசையெல்லாம் வழித்துத் திரட்டினார், வெளியில் வட்டிக்குக் கொஞ்சம் கடன் வாங்கினார். ராமனின் அப்பாவும் கடன் வாங்கி கொஞ்சம் பணம் உதவி செய்தார்.

முடிந்தவரை சிக்கனமாக கல்யாண ஏற்பாடுகள் நடந்தது. சம்பிரதாயத்திற்கு கொஞ்சம் பத்திரிக்கைகள் அடிக்கப்பட்டன. பண உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பத்திரிக்கை அனுப்பப்பட்டது. பெரும்பாலும் ஏதாவது பணம் கொடுத்தார்கள். சொந்தங்களுக்கு மஞ்சள் தடவிய தபால் கார்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊர்க்காரர்களை குங்குமச் செப்புடன் அம்மாவும் ராமனும் போய் நேரில் அழைத்தார்கள். மூன்று நாள் கல்யாணம். மண்டபம் எல்லாம் கட்டுப்படியாகாது. பழங்கால நாலுகட்டு வீடு ஆகையால் வீடே போதும் கூட்டத்தைச் சமாளிக்க. வாசலில் எதிர்வீட்டையும் சேர்த்து பந்தல் போடப்பட்டது.

கல்யாணத்திற்கு முதல் நாள் அரசாங்க டவுன் பஸ்ஸை நாள் வாடகைக்குப் பிடித்து வத்தலக்குண்டில் இருந்து மாப்பிள்ளை வீட்டார் அழைத்துவரப்பட்டனர். முன்னரே ஏற்பாடு செய்திருந்த அக்ரஹாரத்து வீடுகளில் சிறிய குழுக்களாக தங்கவைக்கப்பட்டனர்.

விதவையாக தன் மகளின் கல்யாணத்தில் பங்குபெறாமல் சித்திப்பாட்டி வீட்டின் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு தொடர்ந்து ஜபித்துக் கொண்டு இருந்தாள். ராமனின் அப்பாவும், பாச்சு சித்தப்பாவும், ஆளுக்கு ஒரு பக்கமாக பறந்து கல்யாண வேலைகளில் மூழ்கியிருந்தனர். அம்மாவும் அண்டை வீட்டுப் பெண்களுமாக சாரதா அத்தையை அலங்கரிப்பதிலும், வந்தவர்களை உபசரிப்பதிலும் மும்முரமாக இருந்தனர்.

வாசல் பந்தலில் இருந்து திடீரென்று, “என்னங்கானும் நினைச்சுண்டிருக்கீர்? மாப்ளை ஆத்துக்காரான்னா கிள்ளுக்கீரையா?அவ்ளோ தூரம் யாத்ரை பண்ணி வந்து சேர்ந்தவாள ஒருவாய் காபி குடிக்கிறேளான்னு கேட்க ஒரு மனுஷா இல்லை” என்று அடிவயிற்றைத் தாக்கும் ஒரு கணீர்க்குரல் கிளம்பியது. அம்மா வாசலுக்கு ஓடினாள். பாச்சு சித்தப்பா வாசல் கட்டிலில் உட்கார்ந்திருந்த ஒரு பெரியவரிடம் பவ்யமாகக் குனிந்து மெதுவாகப் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். பேச்சில் பையனின் தாய்மாமா என்று தெரிந்தது. அம்மா திரும்பி கொல்லைப்புரத்திற்கு ஓடினாள். அங்கே பெரிய கோட்டை அடுப்பில் சமையல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. பெரிய பித்தளை வட்டிலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த அப்பாவிடம் காதில் மெல்ல ஏதோ சொன்னாள். அப்பா அவசரம் அவசமாக அலுமனியக் கெட்டிலில் காபியை எடுத்துக்கொண்டு நாலைந்து தம்ளர்களையும் பொறுக்கிக் கொண்டு வாசலுக்குப் போனார். முழங்காலுக்கு மேலே மடித்து ஏற்றிக்கட்டியிருந்த வேட்டியை கீழே இறக்கிவிட்டு “நமஸ்காரம் மாமா, நான் பொண்ணுக்கு ஒன்னு விட்ட அண்ணா. காபி சாப்பிடுங்கோ” என்றார்.

அரைகுறையாக நரைத்த தலைமுடியை உச்சிக்குடுமியாக வைத்து, மயில்கண் வேஷ்டியை பஞ்சகச்சமாக கட்டி, ஜோடியாக அதே போல இருந்த ஆறுமுழம் மயில்கண் அங்கவஸ்திரத்தை மேலே போர்த்தியிருந்த கிழவர் அப்பாவை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தார். சிவப்பு நிறத்தின் நடுவில் தேன் ஒழுகி உறைந்தது போன்ற வரிகள் இருந்த அகலமான ஃபிரேம்போட்ட தடித்த மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால் கருவிழிகள் பெரிய திராட்சை போல உருண்டு மின்னின. மூக்குப்பொடி போட்டு நாசித்துவாரங்கள் அகன்று புடைத்திருந்தன. மூக்கின் நுனியில் கரிய திரவமாக ஒரு சொட்டு எப்போதும் ஊசலாடிக் கொண்டிருந்தது. கண்ணாடி துடைக்க வைத்திருக்கும் மென் பஞ்சுப் பிசிறுகள் படர்ந்த மிருதுவான மஞ்சள் நிறத் துணியை கண்ணாடிக் கூடுக்குள்ளிருந்து எடுத்து மூக்கை அடிக்கடி பெரும் சத்தத்துடன் துடைத்தார். அந்தத் துணியே காபிக்கொட்டை நிறத்துக்கு மாறியிருந்தது. பூணூலால் முதுகை சொறிந்துகொண்டே, “சமையல்காரன்னு நினைச்சேன்”என்றார்.

அப்பா சட்டென்று தோளில் இருந்த அழுக்கான சிவப்புத் துண்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, “கொஞ்சம் கைவேலையா இருந்தேன்…” என்று அசடுவழியச் சிரித்தார். பெரியவர் சத்தம் போட்டு குலுங்கிச் சிரித்துக்கொண்டார்.

அம்மா ராமனை இழுத்து அவர் முன்னால் விட்டு, “கோந்தை…தாத்தாவுக்கு நமஸ்காரம் பண்ணுப்பா” என்றாள்.

பெரியவர், “கோட்டானாட்டம் வளர்ந்திருக்கான், இன்னும் என்ன கோந்தை வேண்டியிருக்கு?” என்றார். அம்மாவைப்பார்த்தான், முகம் கருத்துச் சுண்டியிருந்தது. என்னிடம், “நன்னா படிச்சு முன்னுக்கு வா’ என்று ஆசீர்வதித்தார்.

அடுத்த நிமிடத்திலிருந்து பத்து நிமிடத்துக்கு ஒருமுறை, ‘காபி சகிக்கலை, வெறும் சிக்கிரி, ஒரே காபியை சுடவச்சு சுடவச்சு கொடுக்கறான்’, ‘குளிக்க நல்ல தண்ணியில்லை’, ‘வேஷ்டி காயப்போட இடமில்லை’, ‘சந்தியாவந்தனம் பண்ண பஞ்சபாத்திரம் இல்லை’, ‘கொசு கடிக்கிறது’, ‘என்ன எழவு ஊர் இது? காற்றே அடிக்கலை, ஒரே புழுக்கம்’, ‘பிள்ளையாத்துக்காராள சரியா கவனிக்கலை’, ‘நிச்சயதார்த்தத்துக்கு சொன்னபடி மாப்பிள்ளைக்கு சீர் பண்ணலை’, ‘மாப்ளையோட தாய்மாமான்னு கொஞ்சம்கூட மரியாதை இல்லை’ என்று அசராமல் அடுத்தடுத்து ஏதாவது குண்டை வீசிக்கொண்டே இருந்தார். கல்யாண வீட்டை மிரளவைப்பதற்கென்றே தோதாக ஒரு வெண்கலக்குரல். வாசலில் கத்தினால் கடைசிக் கொல்லை கிணற்றடி வரை காதுகிழியும் படி துல்லியமாகக் கேட்கும். ஒரு முறை பாச்சு சித்தப்பா ஏதோ எரிச்சலில் அவருக்கு பதில் சொல்லாமல் நகர, “என்ன.. மாப்ளையாத்துல கேக்கறதுக்கு ஆளில்லன்னு நெனைச்சுண்டு இருக்கேளா? எங்க ரகு அரைக்காசுன்னாலும் அரசாங்க காசு சம்பளம் வாங்கறவன். ஆயிரம் பேர் பொண்ணு தரக் காத்துண்டிருக்கா. போனாப்போறதேன்னு நான் தான் இந்த சம்பந்தத்துக்கு ஒத்துக்கச் சொன்னேன். நான் சொன்னா இப்பவே கல்யாணத்த நிறுத்திட்டு கிளம்பிடுவா. ஜாக்ரதை” என்று ஒரு அஸ்திரத்தை ஏவினார். மாப்பிள்ளை வீட்டார் உட்பட மொத்த கல்யாண வீடும் அவர் குரலுக்குக் கீழே இருந்தது. ஒற்றை ஆளாக எல்லோரையும் பதறடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தார். குலை நடுங்கிப் போய் பாச்சு சித்தப்பா அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அதிலிருந்து பாச்சு சித்தப்பாவும், அப்பாவும், அம்மாவும் ஒருவர்மாற்றி ஒருவர் ஓடி அவர் முன்னால் விழுந்து கவனித்துக் கொண்டார்கள். சித்திப்பாட்டி வெளியிலேயே வராமல் பெண் கல்யாணம் எப்பாடுபட்டாவது நடந்து முடிய வேண்டும் என பதறியபடி பிரார்த்தனையில் இருந்தார்.

ஒருவழியாக மாப்பிள்ளை அழைப்பும் நிச்சயதார்த்தமும் முடிந்தது. இரவு உணவில், அரிசி அப்பளம் இடம்பெறவில்லை என்னும் கடைசிக் குற்றச்சாட்டுடன் பெண் வீட்டாரை ஒரு முறை முறைத்துவிட்டு பெரியவர் படுக்கச் சென்றார். ராமன் நன்றாகச் சாப்பிட்டான். சித்திப்பாட்டி, அம்மா, அப்பா, சித்தப்பா சாப்பிட்டார்களா என்று தெரியாது. கூடத்தில் வட்டமாக அமர்ந்து மறுநாள் முகூர்த்தம் முடிந்ததும் கல்யாணத்திற்கு வந்தவர்களுக்கு கொடுக்கவேண்டிய தாம்பூலப் பையில்வெற்றிலை, பாக்கு, பழம், ஒற்றை ரூபாய் நாணயம் எல்லாம் போடும் வேலையில் அம்மா, அப்பா, இன்னும் சில சொந்தக்காரர்கள் இருந்தனர். ராமன் அம்மா மடியில் படுத்துக்கொண்டே அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். பெரும்பாலும் பேச்சு பெரியவரைப் பற்றித்தான் இருந்தது. ஆளுக்கு ஒருமுறை தங்களுக்குக் கிழவர் கொடுத்த குடைச்சலைப் பற்றிச் சொன்னார்கள். வட்டம் ஒருமுறை முடிந்ததும் அடுத்த குடைச்சல் கதையுடன் மறுபடியும் தொடர்ந்தது. பல சமயம் கிண்டலாகவே கடந்து போனது. அவனைக் ‘கோட்டான்’ என்று சொல்லிவிட்டதால் அவனும் ஏதாவது சொல்லவேண்டும் என்று ஆசையாக யோசித்தான்.

திடீரென்று பாச்சு சித்தப்பா அவசரம் அவசரமாக, “சுப்பண்ணா…” என அழைத்துக் கொண்டே ஓடி வந்தார். முகத்தில் சந்தோஷமும், அழுகையும், பதட்டமும், உடலெங்கும் நடுக்கமுமாக அப்பாவின் காதில் ஏதோ கிசிகிசுத்தார். தன் அப்பாவிடமும் அதே உணர்ச்சிகள் ஒவ்வொன்றாக ஏற்படுவதை ராமன் கவனித்தான். அப்பா விருட்டென்று தாம்பூலப் பைகளை கீழே வைத்து விட்டு எழுந்து சித்தப்பாவுடன் வாசலுக்கு ஓடினார். எல்லோரும் என்னவென்று தெரியாமல் குழப்பமும், பயமுமாக ஆளாளுக்கு எதையெதையோ சொன்னார்கள். வாசலில் இருந்து எந்த சத்தமும் இல்லை. எனவே பெரியவரின் பிரச்சனையாக இருக்காது. சிறிது நேரம் தாண்டியும் அப்பா வராததால் பொறுக்க முடியாமல் அம்மாவும் எழுந்தபோது மிகச்சரியாக மின்சாரம் நின்று விளக்குகள் அணைந்து வீடு இருளில் மூழ்கியது.

பழகிய வீடாதலால் அம்மா பெரிய தடுமாற்றம் இல்லாமல் வாசலை நோக்கி நடந்தாள், ராமனும் புடவையைப் பிடித்துக்கொண்டு பின்னாலேயே போனான். வாசல் பந்தலில் இரண்டு பெட்ரோமாக்ஸ் லைட்டுகள் ஆக்ரோஷமான நாகப்பாம்புபோல பெருமூச்சுடன் சீறியபடி மஞ்சள் ஒளியை கொட்டிக்கொண்டிருந்தன. ஒரு ஒல்லியான மனிதர் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. சித்தப்பா அப்பா தோளில் முகம் புதைத்திருந்தார், அவர் தோள்பட்டையும் முதுகும் குலுங்கியது. உற்றுக் கவனித்த போது அந்த மனிதர் கண்களில் நீர்கசிந்து கண்ணங்களில் ஓடிக் கொண்டிருந்தது தெரிந்தது. அப்பாவின் ஒரு கை அந்த மனிதரின் கைகளைப் பற்றியிருந்தது. அம்மா புரியாமல் ஒரு கணம் திண்ணையிலேயே நின்றாள். ராமன் அம்மாவின் பிடியை விட்டு ஓடி பந்தலுக்கு வந்தான்.

அவர் இந்தப் பக்கத்து ஆள் போலவே இல்லை. சிவப்பானவராக இருக்க வேண்டும், ஆனால் வெயிலில் கறுத்த சரீரம். எண்ணை பளபளக்கும் தலைமுடியை மொத்தமாக ஏற்றிச் சீவியிருந்தார். அடர்ந்த மீசை கீழிறங்கி தாடியுடன் இணைந்திருந்தது. கீழ் உதடு மீசைக்கு வெளியே கறுத்து காணப்பட்டது. கழுத்தில் மார்புக்கு கீழே தளர்வாக மாலை போல காவித்துண்டு போட்டிருந்தார். மேல் பட்டன்கள் போடாமல் திறந்த விடப்பட்டிருந்த வெள்ளைச் சட்டைக்கு உள்ளே கழுத்தை ஒட்டி நெருக்கமாக எதோ சாமி டாலர் கோர்க்கப்பட்ட கறுப்புக் கயிரும், ஓரத்தில் ஒரு தங்கச் செயினும் போட்டிருப்பது தெரிந்தது. அப்பா சித்தப்பா கைகள் போல் இல்லாமல், இறுக்கமாக நரம்புகள் புடைத்து உள்ளங்கை நோக்கி ஓடியது. மிட்டாய் ரோஸ் நிறத்தில், ஆங்காங்கே கிளிப்பச்சை நிறப்பூக்கள் போட்ட கைலி அணிந்திருந்தார்.

பந்தலில் வாசலுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்னொரு பெட்ரோமாக்ஸ் விளக்கு மந்தமாக ‘ஸ்ஸ்ஸ்..’ என்று முனகியபடி மங்கிய வெளிச்சத்தை வெளிவிட்டது. சற்றுத் தள்ளி தெரு ஓரத்தில் இருள் பழுப்பு மஞ்சளாக அசைவது போலத் தெரிந்தது. கண்கள் பழகியதும் ராமன் பரவசமானான், அது பெரிய யானை. சில நொடிகளில் ஒரு புதிய மிருக வாடை அடிப்பதைக் கூட உணர முடிந்தது. சட்டென்று புரிந்துவிட திண்ணைக்கு ஓடி அம்மாவிடம், “சுந்தாச்சு சித்தப்பா வந்துட்டா” என்றான். அம்மா பிரமிப்பும், திடுக்கிடலுமாக திண்ணையில் இருந்து இறங்கி பந்தலுக்கு வந்தாள்.

மூவரும் ஒரு கட்டிலில் அமர்ந்து கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் பேசுவது பிராமணப் பேச்சே இல்லை. தமிழை மூக்கால் பேசுவது மாதிரி தான் இருந்தது. திக்கித்திணறி தமிழ் பேசினார். அவர் பேச்சிலிருந்து அவனுக்கு ஓரளவுபுரிந்தது: பன்னிரெண்டு வயதில் யானையின் பின்னால் ஓடிப்போனவர் யானைப்பாகனோடு பாலக்காடு சென்று அவர்கள் வீட்டிலேயே வளர்ந்திருக்கிறார். இவரை வளர்த்தவர் ஏழெட்டு வருடங்களுக்கு பிறகு மன்னாடிமங்கலத்துக்கு யானையுடன் ஒருமுறை வர நேர்ந்த போது வீட்டின் நிலைமையை அறிந்து கொண்டு போய்ச் சொல்லியிருக்கிறார். ஆனால் குற்ற உணர்வினாலும், யாரையும் எதிர்கொள்ள முடியாத மனச்சங்கடத்தாலும் சுந்தாச்சு ஊருக்கு வருவதைத் தவிர்த்திருக்கிறார். அதிலிருந்து அவ்வப்போது மதுரைப்பக்கம் வரும் பாகன்களின் மூலமாக இங்கே நடப்பவைகளை விசாரித்துவரச் சொல்லி அறிந்து கொண்டு இருந்திருக்கிறார். தங்கையின் கல்யாணம் நிச்சயமானது தெரிந்ததும், தன் சம்பாத்தியத்தையெல்லாம் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்துள்ளார். இத்தனையும் சிறுசிறு விசும்பல்களுடன் குரல் தழுதழுக்க சொல்லிக்கொண்டிருந்தார். அவ்வளவு நேரமும் அவர் கை விரல்கள் பாச்சு சித்தப்பாவின் விரல்களைக் கோர்த்துப் பிடித்திருந்தது. அப்பா அவர் தோள் மேல் கைபோட்டு அணைத்தபடி பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். அப்பாவின் கண்களும் கலங்கி மூக்கு சிவந்திருந்தது. அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்கியபடி அப்பாவின் தோளைத் தொட்டு பின்னால்நின்றாள். தெருப் பெரியவர்கள் மூன்றுபேர் நின்று அதிசயமாகப் பார்த்துக் கொண்டு இடையிடையே அவரைக் கேள்விகள் கேட்டபடி இருந்தனர். ராமன் சுந்தாச்சு சித்தப்பாவின் அருகில் உட்கார்ந்து அவர் கையில் இருந்த செப்புக்காப்பை நோண்டிக்கொண்டிருந்தான். அவர் அழுகையினூடே அவனைப் பார்த்து மெலிதாகச் சிரித்து, அவன் தலை முடியை நீவினார். அம்மா மெல்ல ராமனை இழுத்து அவளுடன் வைத்து இறுக்கிக் கொண்டாள்.

கூடத்தில் யாரோ இருட்டில் தடுமாறி பெரிய பித்தளைத் தாம்பாளத்தைத் தட்டிவிட அது கீழே உருண்டு அலையலையாக சத்தம் எழுப்பி ஓய்ந்தது. ரேழி அறையில் இருந்து சித்திப்பாட்டி மெல்ல பதுங்கி வெளியில் எட்டிப்பார்த்து, “என்னடிம்மா அது சத்தம்? ஒன்னும் ஆயிடலியே… தாயே.. மஹாமாயே எல்லாம் நல்லபடியா நடக்கணும்மா” என்றபடியே தடுமாறிக்கொண்டு வெளியில் வந்தாள். அதுவரை விசும்பிக் கொண்டிருந்த பாச்சு சித்தப்பா அடக்க முடியாமல், “அம்மா..” என்று பெருங்குரல் எடுத்து அழுதார். சித்திப்பாட்டி ஒன்றும் புரியாதவளாக, “என்னடா பாச்சு… ஒன்னும் தப்பிதமா ஆயிடலியே..?”என்றபடி குரல் நடுங்க பதறினாள். அப்பா பாச்சு சித்தப்பாவை அமைதிப்படுத்த முயலும் போதே சட்டென்று சுந்தாச்சு சித்தப்பா, “அம்மா..” என்று தொண்டை கரகரக்க கதறியபடி எழுந்து ஓடிச் சென்று சித்திப்பாட்டி காலில் விழுந்தார்.

அப்பா எழுந்து சித்திப்பாட்டியைப் பிடித்துக் கொண்டு, “சித்தி நல்ல சமாச்சாரம் தான். அமைதியா கேளுங்கோ… பகவான் உங்க பிரார்த்தனையை கேட்டுட்டான், நம்ம சுந்தாச்சு வந்திருக்கான்” என்றார். ஒருநிமிடம் திக்பிரமை பிடித்தவள் போல் இருந்துவிட்டு அடுத்த நொடி, “சுந்தாச்சு… என் அப்பா…” என்று பாட்டியும் குழறி அழ ஆரம்பித்தாள். எழுந்து ஒரு கணம் தயங்கி அப்படியே தன் அம்மாவை இறுகக் கட்டிக்கொண்டார் சுந்தாச்சு. ராமனின் அம்மா ஒன்றும் செய்யத் தோணாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சுந்தாச்சு தன் கையில் வைத்திருந்த சிறிய பையைத் திறந்து இரண்டு மூன்று கட்டு பணமும், இரண்டு தங்க வளையல்களும்,ஒரு தங்கச் சங்கிலியையும் எடுத்து சித்திப்பாட்டியின் கையில் கொடுத்தார். சித்திப்பாட்டி அவரை மீண்டும் கட்டிப்பிடித்துக் கொண்டு கிறீச்சிட்டு அழ ஆரம்பித்தாள். அப்பா யாரைச் சமாதானம் செய்வதென்று தெரியாமல் மாற்றி மாற்று ஒவ்வொருவரையாக தட்டி “சத்தம் போடாதேள்..” என்றார். அம்மா சித்திப்பாட்டியின் தோளை மெதுவாகக் குலுக்கி, “அம்மா சந்தோஷமா இருங்கோ..அழாதேள்.. மாப்ளையாத்துக்காரா முழுச்சுண்டுடப் போறா” என்றாள்.

அப்போது தான் அனைவருக்கும் நினைவிற்கு வந்தது. பாச்சு சித்தப்பா அப்படியே சத்தத்தை மென்று முழுங்கினார். சித்திப்பாட்டி சத்தத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மகனைக் கட்டிக் கொண்டே கண்ணீரைக் கொட்டினாள். கூடத்தில் இருந்து மேலும் சில உறவுக்காரர்கள் வாசலுக்கு வந்துவிட்டிருந்தனர். அனைவருக்கும் நடப்பது என்ன என்று புரிய சில நிமிடங்கள் பிடித்தது.

elephant6

“அடாடாடாடா… மனுஷாள நிம்மதியாத் தூங்க விடாம ப்ராணனை வாங்கறேளே… ஒரே அமக்களமான்னா இருக்கு.. கேக்கறதுக்கு ஆள் இல்லைன்னு நினைச்சுண்டு இருக்கேளா…” கொல்லைப்புறத்தில் இருந்து வெண்கலப்பானையில் இரும்புக்கரண்டி விழுந்தது போல சத்தம் கிழித்துக் கொண்டு வந்தது. பாச்சு சித்தப்பா அடித்தொண்டையில் கெஞ்சும் குரலில் படபடப்பாக, “அம்மா.. அம்மா… சத்தம் போடாதம்மா.. அந்த சம்பந்தியாத்து பிராமணன் முழிச்சுண்டுடுத்தும்மா.. சுந்தாச்சு யானைக்காராளோட போன விஷயம் நாம சொல்லவே இல்லம்மா… இப்போ தெரிஞ்சதுன்னா அந்தக் கெழம் என்ன பண்ணும்னே தெரியாதும்மா.. கல்யாணத்த நிறுத்தினாலும் நிறுத்திப்டும்மா… சொல்றதக்கேளு, தயவுபண்ணி அழாத. கண்ணைத் துடைச்சிக்கோ. இல்லேனா எல்லாமே கெட்டுப் போயிடும்மா.. சாரதா பாவம்மா.. அழறத நிப்பாட்டும்மா” தூங்குபவரை எழுப்புவது போல பிடித்து உலுக்கினார்..

அங்கவஸ்திரத்தை தலையில் உருமாலாகக் கட்டி, பஞ்சகச்சத்தை அவிழ்த்து வேட்டியை இடுப்பில் டப்பா கட்டாகச் சுற்றி, காலர் இல்லாத பழைய அரைக்கைச் சட்டை ஒன்றை அணிதுகொண்டு, தூக்கம் கலைந்த வெறியில் கண்ணாடியின் தடித்த லென்ஸ் வழியே முழிகளை உருட்டிக் கொண்டு, டார்ச் வெளிச்சத்தில் வந்து சேர்ந்தார் பெரியவர். “என்ன ஓய் அக்ரமம் பண்றீர்… வயசானவாள சித்த நாழி கண்ணசர விடாம பொண்ணாத்துக்காராளா சேர்ந்துண்டு ஜாமக்கோடாங்கி மாதிரி கத்திக் கூப்பாடு போடறேள்…” கத்திக்கொண்டெ இருந்தவர் சட்டென்று நிறுத்தி ஒரு நிமிடம் என்னெவென்று புரியாமல் அங்கே திரண்டிருந்த சிறு கும்பலைப் பார்த்தார். சித்திப்பாட்டியின் கையில் இருந்த பணத்தையும், நகைகளையும் பார்த்தார். எதிரில் இருந்த கைலி அணிந்த -பிராமணரல்லாத தோற்றத்திலிருந்த ஆளை மேல் கீழாக நோட்டம் விட்டார். அதிருப்தியுடன் தன் குரலில் ஆரம்பித்தார், “என்ன நடக்கறது இங்க? அர்த்தராத்ரில பணத்தையும் நகையையும் வச்சிண்டு என்ன பண்றேள் எல்லாரும்? யார்டா நீ. நோக்கு இவா கூட என்ன ஜோலி? இப்போ நேக்கு எல்லாம் தெரிஞ்சாகணும். கேக்கறதுக்கு ஆள் இல்லைன்னு நெனைச்சேளா?” சித்திப்பாட்டியை சுற்றிக்கொண்டே டார்ச்சுடன் சுந்தாச்சு அருகே வந்தார். பாச்சு சித்தப்பா “அவ்வளவுதான்” என்கிற தொணியில் செயலற்று நின்றிருந்தார்.

சித்திப்பாட்டி ஒரிரு முறை செருமினாள். பெரியவர் திரும்பி பாட்டியைப் பார்த்தார். பாட்டி கண்ணை மூடிக்கொண்டே மயங்கி அம்மா மீது சரிந்தாள். பெரியவர், “என்னாச்சு, போயிடுத்தா?” என்று கேட்டபடியே பாட்டியை நோக்கி டார்ச்சைத் திருப்பிக் கொண்டு ஓடினார். அப்பா சுதாரித்துக் கொண்டு சட்டென்று பாட்டி மடியில் கிடந்த நகை மற்றும் பணத்தை அள்ளி எடுத்து பெரியவர் கையில் திணித்தார், “வாசல்ல எதேர்ச்சையா யானை வந்தது. அம்மா நகை, பணத்தையெல்லாம் விக்னேஸ்வரர்கிட்ட ஆசீர்வாதம் பண்ணி வாங்கிக்கனும்னு சொன்னா” பேச்சினூடே நகைகளுக்கு மத்தியில் இரண்டு நீண்ட யானைவால்முடி இருப்பதைக் கவனித்தார், அதை எடுத்து, “திடீர்னு தோணித்து…அப்படியே மாப்ளைக்கு யானைவால் மோதிரம் ஒன்னு பண்ணிப்போட்டுடலாம்னு.. அதான் யானைப்பாகனை கூப்பிட்டு விலை பேசிண்டிருந்தோம். மாப்ளையோட தாய்மாமாவுக்கும் வாங்கனும்னு அம்மா சொன்னா, சரின்னு சேர்த்து ரெண்டா வங்கிட்டோம்” ஒருமாதிரி சிரித்துக்கொண்டே பவ்யமாக அவர் கையில் கொடுத்தபடியே மெல்ல வீட்டிற்குள் நகர்த்திச் சென்றார். பெரியவர் டார்ச் அடித்துப் பார்த்தார். பெருமையாகச் சிரித்தார். “பேஷ்… பேஷ்… ஆனாலும் மஸ்தகத்திலேர்ந்து முடி வெட்டித் தரச் சொல்லி கேட்டிருக்கனும். மஸ்தக ரோமம் தான் ரொம்ப விசேஷம். அதுக்குத்தான் என்னைக் கூப்பிட்டு யோஜனை கேக்கணுங்கறது…” அப்பாவுடன் மெல்ல வீட்டிற்குள் செல்கையில் அவர் சொல்லிக்கொண்டே நடப்பது கேட்டது.

ராமன் வாசலைப் பார்த்தான். நகரும் பழுப்பு மஞ்சள் பரப்பாக யானை நிதானமாக பின் பக்கத்தை அசைந்த படிவீட்டிலிருந்து மெல்ல விலகி நடந்து சென்றது. பழுப்பு நிறம் கூடிக்கூடி வந்து கறுப்பானது. யானை இருட்டுக்குள் கரைய, அந்தரத்தில் சுந்தாச்சு சித்தப்பாவின் வெள்ளைச் சட்டை மட்டும் சில நிமிடம் தெரிந்தது. அது மறைந்து சில நிமிடம் எங்கோ ஆழத்தில் மணிச்சத்தம் மட்டும் மெலிதாகக் கேட்டது. அதுவும் தேய்ந்து கரைந்த பின்னர் அங்கே கருமை மட்டுமே மிச்சம் இருந்தது.

Ooo0ooO