மொழிபெயர்ப்புக் கவிதைகள் – கன்னடம்

மிஞ்சிய வரி

lees-station_b_1lees-station_b_21கனவிலே கண்ட கடல்
கண்ணிலேயே தங்கிப்போனதைச்
சொல்லப்போனால் யாரும் நம்புவதில்லை.

பழைய டைரியில் இருக்கும்
நம்பர்களில் முக்காலளவு
தற்போது சேவையில் இல்லை.
எங்கோ ஆளில்லா வீடுகளில் தனியாயிருக்கும் ஃபோன்கள்
திகிலூட்டி ஒலிக்கையில், இன்னெங்கோ
நடுங்கும் கைகளால் ஆபரேஷன் தியேட்டர் ஃபாரம்களில்
வேறு யாரோ ஒப்புதல் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கிறார்கள்

பாலத்தை அகலப்படுத்துவதற்கு முன்பு
நதியின் இருபக்கங்களிலும் மக்கள்
கூடி படகிற்கு அமைதியாய் காத்திருந்தனர் பிரசன்னமாகவே
சந்தேகத்தின் ருசி பற்றிக்கொண்டபின் கடவுளும்
மாறுவேடத்தில் மத்தியான பஸ் ஸ்டாண்டில்
இடம் போட ஜன்னல் வழியே
கெஞ்சிக்கொண்டு கர்சீப் எறிகிறான்.

பழக்கடையின் பழைய கண்ணாடியில்
கணக்கில்லா பஸ்ஸுகள் தம்மைப் பார்த்துக்கொண்டு போகின்றன
கடைசி பஸ் போன பின்பும் இன்னும் ஏதோ
அதிசயம் நடக்கப்போகிறது என்பதுபோல் பெஞ்சில்
உட்கார்ந்திருக்கும் இளம்தாடி இளைஞன் கண்ணில்
பிரகாசமான வெறுமை கொண்டு பார்த்திருக்கிறான்.

நீங்கள் நாளை சொல்லவிருப்பது
எனக்கு நேற்றே தெரிந்து போனது என்பது போன்ற
உங்கள் அரைகுறை பேச்சுக் கவிதைகளை
முடித்துக் கொடுக்கிறேன். ட்ரை பண்ணுங்க
பிடிக்காவிட்டால் வரிகள் வாபஸ் என்கிறான்
நீங்க நம்பமாட்டீங்கன்னு தெரியும் என்பதுபோல் சிரிக்கிறான்.
மர்மமான நிறுத்ததுக்கு அழைத்து செல்ல
ஓட்டுனர் அற்ற ஒரு பஸ்ஸைப் போல்
இரவு எங்கள் இருவர் மேலும்
ஒரே காலத்தில் படிந்திருந்தது.
லிபி (எழுத்து)

jk-ant

தரையில் விரித்த செய்தித்தாளின்
மேல் ஊர்ந்து போகிறது எறும்பு.
செய்திகளின் சுவை பிடித்த எறும்பு போலும்
ஒரு நாள் அவற்றைத் தின்ன ஆரம்பித்தது.
முதலில் கொட்டை எழுத்து தேசீய இரங்கல்
பின்பு நடு அளவில் மணப்பெண் எரிப்பு
அடுத்த அளவில் பரஸ்பரம் கழுத்தை வெட்டியவர்கள்
நாலணா விஷயத்துக்கு சொந்தங்களை அறுத்தவர்கள்
கடைசியில் சின்ன எழுத்தில் தற்கொலை
இப்படி ஒன்றொன்றாய் நக்கித் துடைத்தபின்
எறும்பு புறப்பட்டுப் போனது.
இப்போது காகிதம் காலியாய் வெளுத்துக் கிடக்கிறது.
ரத்தம் கிடைக்காமல் சோகை பாரித்த
கர்ப்பிணிப்பெண்ணின் கன்னம் போல்.
இப்போது இதை சுருட்டிக் கண்ணில் பிடித்தால்
குழாயின் அப்பக்கத்தில் அடிபட்ட வெள்ளித்தாரை
காதருகே வைத்தால் ஏதோ ஆழத்தில் தோண்டும் சப்தம்.
உதட்டருகே வைத்து மூச்சுக்காற்றை ஊதினால் மூங்கில்குழல்.
காடென்னவோ பக்கம்தான், விட்டுவருவதில் சிரமமில்லை.
ஆனால் ஒரே ஒரு பயம்தான்,
இப்போது அந்த எறும்பும், அதன் காலடியில்
ஒட்டிய ரத்த எழுத்துக்களின் தடமும்
எங்கே?
ஜயந்த் காய்கிணி