சிற்றிலக்கியங்கள் – மாலை – பகுதி 1

சிற்றிலக்கிய வகையினதாகப் பேசப்படும் 96 பிரபந்தங்களுக்குள் மாலை என்று முடியும் நூல்கள் 28 வகைகள் ஆகும்.

அங்க மாலை, அநுராக மாலை, இரட்டைமணி மாலை, இணைமணி மாலை, நவமணி மாலை, நான்மணி மாலை, நாம மாலை, பலசந்த மாலை, கலம்பக மாலை, மணி மாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சி மாலை, வருத்த மாலை, மெய்கீர்த்தி மாலை, காப்பு மாலை, வேனில் மாலை, வசந்த மாலை, தாரகை மாலை, உற்பவ மாலை, தானை மாலை, மும்மணி மாலை, தண்டக மாலை, வீர வெட்சி மாலை, காஞ்சி மாலை, நொச்சி மாலை, உழிஞை மாலை, தும்பை மாலை, வாகை மாலை என்பன அவை.

பெயரளவில் நான் கேள்விப்பட்டிருந்தது இரட்டை மணி மாலை, மும்மணி மாலை, நான்மணி மாலை என்பன. மேற்சொன்ன 28 வகை மாலைகள் வீரமாமுனிவரின் பிரபந்தப் பட்டியலில் உள்ளவை. இவற்றுள் பல இன்று கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். இன்றைய தமிழன் என்னவென்று அறியும் முன்பே இறந்து பட்டும் போகலாம்.

இல்லாவிட்டாலும் எந்தத் தமிழன் இன்று ஐந்து மணி நேர அடையாள உண்ணாநோன்பு இருக்கிறான் இந்த நூல்கள் கிடைக்கவில்லை என்று. நமக்கு செம்மொழி மாநாடு என்பதே மனைவியர், மகன்கள், மருமக்கள், பேத்திகள், ஒப்பனை கலைக்காத நடிகைகள் கூடி இருந்து அலங்கார ஊர்திகளை வேடிக்கை பார்ப்பதுதானே! காவலுக்கு என உயரதிகாரிகளும் ஒவர்டைம் செய்வார்கள்.

எவ்வாறாயினும் என் கைவசம் இருக்கும் சில மாலைகளையாவது உங்கள் தோள்களில் சூட்டிவிட்டு, எனது நெடுவழிப் பயணம் தொடரலாம் என எண்ணுகிறேன்.

ஒரு பொருள் குறித்து பல செய்யுள்கள் பாடுவதை மாலை என்கிறார்கள் திருசிரபுரம் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. திருவானைக்கா அகிலாண்ட நாயகி ஆலயத்துக்குச் சென்று கொண்டே அகிலாண்ட நாயகி மாலை பாடினாராம்.

திருமூலரின் திருமந்திர மாலையும், காரைக்கால் அம்மையாரின் இரட்டை மணி மாலையும், அப்பரின் அரங்க மாலையும், தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலையும், பலரும் சேர்ந்து இயற்றிய திருவள்ளுவ மாலையும் எனப் பல மாலைகள் காலத்தால் மூத்தவை.

அடியவர்கள் மீதும் மாலைகள் பாடப்பட்டிருக்கின்றன. அல்லியரசாணி மாலை, புலேந்திரன் களவு மாலை என்பன சிறுவயதில் பெண்கள் கூடி இருந்து வாசிக்கக் கேட்டிருக்கிறேன். ஒன்பது, பத்தாம் வகுப்பில் வாசிக்கும் போது, சில பகுதிகளை நானே ஒருவித ஓசை நயத்துடன் வாசித்தும் இருக்கிறேன்.

மாலை ஐந்து என ஒரு புத்தகம் கிடைத்தது உ.வே.சா நூல்நிலையத்தில். ஐயர் பதிப்பித்த ஐந்து மாலைகள். ஒரு பதிவு கருதி அவற்றைப் பார்ப்போம்.

    கயற்கண்ணி மாலை

இதை உ.வே.சா அவர்களே பாடியதாக அறிகிறோம். மதுரை மீனாட்சி அம்மையின் பெருமைகளைப் பலவாறு பாடுகிறார். காப்பு தவிர்த்து 100 பாடல்கள். காப்புச் செய்யுள் தரவு கொச்சகக் கலிப்பா. பிற பாடல்கள் கட்டளைக் கலித்துறை.

தனித்தனி நூல்களாக உ.வே.சா பதிப்பித்ததை மாலை ஐந்து என ஒரே நூலாக உ.வே.சா நூலகம் 1995-ல் வெளியிட்டுள்ளனர். கயற்கண்ணி மாலை, அங்கயற்கண்ணி மாலை, கடம்பவன வல்லி பதிகம், ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி எனும் நான்கு நூல்களும் சேர்த்து, மேலே கூறிய தலைப்பில் வெளியான தனி நூலுக்கு 1970-ல் கி.வா.ஜ. எழுதிய முன்னுரை மாலை ஐந்து நூலில் காணக் கிடைக்கிறது.

முந்தை நூல்களின் பாணியில் உ.வே.சா.வின் பாடல்களும் பயணப்படுவதை உணர முடிகிறது.

நாவார நின்னை நவிலாது,
‘சைவ நல் ஆரியர் சொல்
தேவார பாரணம் செய்யாது,
வீணரைச் சேர்ந்து ஒழுகித்
தீவாய் நரகுக்கு இரையாகு
வேனைத் தியங்க விடேல்
காவாய் புனல் வையைத் தென்கூடல்
வாழும் கயற்கண்ணியே!

என்பது ஒரு எடுத்துக்காட்டு.

பெரும்பாலும் தேவி அருள் இறைஞ்சும் பாவம்.

புவி பாலர் முன்னம் பொருந்தி அஞ்சாது
புகன்றிடவும்
குவியாத என் புந்தி குசை நுனி
போல் மிகக் கூர்ந்திடவும்
தவியாது கேட்பவர்க்கு எல்லாம்
இனிதுற சாற்றவும் நாற்
கவி பாடவும், அருள் செய்வாய் தென்
கூடற் கயற் கண்ணியே!

என்பது ஓர் எடுத்துக்காட்டு.

m

    அங்கயற்கண்ணி மாலை

இதுவும் உ.வே.சா இயற்றியது. கூடல்நகர் அங்கயற்கண்ணி மீது. யாவும் தரவு கொச்சகக் கலிப்பா. உ.வே.சா எழுதிய பாடல்களில் கூட 58 தான் கிடைத்திருக்கின்றன.

பாடல்கள் தொடர்ச்சியாய் திருவிளையாடல்களைப் பேசுகின்றன.

உன்னை உனதருளை உன்னாது அனுதினமும்
தன்னை மதித்துத் தருக்கும் எனை ஆள்குவையோ
மன்னை உறச் செய்த வன்றிக் குருளைகளுக்கு
அன்னை அனையான் கூடல் அங்கயற் நாயகியே!

என்ற பாடலில் பன்றிக் குட்டிகளுக்கு முலை கொடுத்த திருவிளையாடல் வந்தது. பன்றிக் குருளைகள் – பன்றிக் குட்டிகள், மன்னை உறச் செய்த – மன் நைவு உறச்செய்த, மிக்க வருத்தம் உறச் செய்த.
உன்னை நினைக்காமல், உனதருளை உன்னாமல், அனுதினமும் தன்னையே மதித்துத் தருக்கித் திரியும், என்னை நீ ஆள்வாயோ அல்லது மன வருத்தம் தந்த பன்றிக் குட்டிகளுக்கு, தாயெனப் பரிந்து முலையூட்டிய சிவனுடன் இருப்பாயோ அங்கயற்கண் நாயகியே!

தன்னைப் பழித்துப் பேசி, தன்னை எங்ஙனம் ஆள்குவாய் எனும் பொருளிலேயே அனைத்துப் பாடல்களும் வருகின்றன. ‘பாழ்த்த புறச் சமயப் பாழை அடைந்து, பிறர் தாழ்த்த வருந்தும் தமியேனை” என்கிறார்.

பொருளும், மனையும், புதல்வரும், மெய்யென்று
மருளும் கொடிய மனத்தோனை
’ என்கிறார் இரங்கி.
வம்பெய்து கொங்கை மடவாரைப் போற்றி உனை
நம் பெய்தல் இல்லாத நாயினையும் ஆள்குவையோ?
’ என்கிறார்.
வம்பு எய்து – முலைக் கச்சுடைய, நம்பு எய்தல் – விருப்பம் எய்தல்.
நயமாக்கும் செஞ்சுவைப்பா நான்கினையும் மூடர்கள்தம்
வயமாக்கி மிக வருந்தும் மாண்பிலியை ஆள்குவையோ!
’ என்று பேசுகிறார்.

நயமுடைத்த செழுஞ்சுவையுடைய அழகிய தமிழ்ப் பாவினங்கள் – ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா –நான்கினையும் மூடர்கள் தமது வசமாக்கி வருந்தும் மாண்பற்றவனை ஆள்குவையோ? என வருந்துகிறார்.

    களக்காட்டு சத்தியவாசகர் இரட்டை மணி மாலை

நிறத்தால் வேறுபட்ட மணியும் பவளமும் கோர்த்து அமைக்கப் படுவது போல, வெண்பாவும் , கட்டளைக் கலித்துறையும், அந்தாதித் தொடரில் அமைக்கப் பெறுவது இரட்டை மணி மாலை இலக்கணம் ஆகும்.

இயற்றியவர் யாரென்று தெரியாத இந்த நூலை, 1932-ல் ஐயரவர்கள் குறிப்புரையுடன் கலைமகள் இதழில் வெளியிட்டுள்ளார். களக்காட்டுத் தெற்கு மாடத்தில் புகழ்பெற்று வாழ்ந்திருந்த சிறந்த செஞ்சொற்கவியாகிய ஸ்ரீ கைலாசநாத தேசிகரோ அல்லால் அவர் மரபினரோ இயற்றி இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

இந்நூல் எழுதப்பட்டிருந்த ஏட்டுச்சுவடி கும்பகோணம் கலாசாலையில் தமிழ்பண்டிதராக இருந்த திருசிரபுரம் சி.தியாகராச செட்டியாரிடம் இருந்து கிடைத்து என்கிறார் உ.வே.சா.

களக்காடு என்பது நாகர்கோவில் – திருநெல்வேலிப் பாதையில் நான்குநேரித் தாலுகாவில் உள்ளது. நேர்ப்பாதை நாகர்கோவில் – தோவாளை- ஆரல்வாய்மொழி – காவல்கிணறு – பனகுடி- வள்ளியூர் – நான்குநேரி (நாங்கூனேரி) – பாளையம்கோட்டை – திருநெல்வேலி எனில் களக்காடு போக வள்ளியூரில் இருந்து இடப்பக்கம் சாலை பிரியும்.

களக்காடு சோராரணியம் என்று புன்னைவனம் என்றும் வழங்கப்பெறும். இங்கு வதியும் ஈசன் பொய்யாமொழியார் – வடமொழியில் சத்திய வாசகர் என்பார். அம்மை பெயர் ஆவுடை நாயகி.

மொத்தம் 20 பாடல்கள், காப்புச் செய்யுள் வெண்பா நீங்கலாக நூல் வெண்பாவில் தொடங்கி கட்டளைக் கலித்துறையில் முற்றுப்பெறும்.

அணி கொண்ட தென் களந்தை ஆயின் அடியேன் இப்
பிணி கொண்ட சென்மம் பெறுக – பணியா
மறுமாலையே சத்ய வாசகர் தாள்க்கு இட்டுத்
திருமாலையே ஏசத் தினம்
.’

வெண்பா. நல்லாருக்கு; தினமும் திருமாலை ஏச வேண்டும். பணிந்து வாசமுள்ள மாலையை சத்ய வாசகர் தாளில் இட்டு திருமாலை தினமும் ஏச வேண்டும். அதற்கு களந்தை எனப்படும் களக்காட்டில் அடியேன் இப்பிணி கொண்ட சென்மம் பெறவேண்டும்.

எத்தனை வன்மம், காழ்ப்பு, சினம், அலட்சியம் பாருங்கள் திருமால் மீது. இதற்கு நான்குனேரி வானமாமலை பெருமாளின் தொண்டர்கள் எப்படித் திருப்பி வையாதிருந்திருப்பார்கள்!

கூம்பாத சிந்தையில் கொண்டாடுவார் குழம்பாத செந்தே
னாம் பாகமான தமிழை செழுங்கொன்றையா அணியும்
வேம்பாக நான் சொல் கவிகளைத் தானும் மிக விரும்பிப்
பாம்பா அணிந்து கொளுமே களந்தை பெரும் சுடரே!

கூம்பாத சிந்தையை உடையவர் கொண்டாடும் தெளிவான தேன் பாகமுடைய தமிழைச் செழும் கொன்றை மாலையாய் அணிவார் சத்யவாசகர். அந்த களந்தை பெரும் சுடரே, வேம்பாக நான் சொல்லும் கவிகளை மிகவும் விரும்பி கழுத்தில் பாம்பாக அணிந்து கொள்வீராக என்பது இக்கட்டளைக் கலித்துறைப் பாடலின் பொருள்.

    திருக்காளத்தி இட்டகாமிய மாலை

இட்டகாமியம் என்பதற்கு விரும்பப் பெற்ற பொருள் என்று உ.வே.சா. எழுதுகிறார். கலைமகள் இதழ் வாயிலாக இதனை வெளியிட்ட சாமிநாதையர் 1938-ல் பதிப்பித்துள்ளார். ‘இவ்வாசிரியர் பெயர் இன்னதென்று இப்போது விளங்கவில்லை. இந்நூல் இத்தனை செய்யுள் உடையது என்றும் விளங்கவில்லை.’ என்கிறார். காளத்தியில் இருந்த சைவர் ஒருவரிடம் இருந்து இந்நூலின் ஏட்டுப்பிரதி கிடைத்ததாகவும், காப்புச் செய்யுளும் அதன் பின் 49-ம் செய்யுள் வரையுமே கிடைத்ததாகவும், அவற்றுள்ளும் 32,33,34 எனும் மூன்று செய்யுட்கள் உள்ள ஏடு கிடைக்கவில்லை என்றும் வருந்துகிறார்.

இவ்வாசிரியர் இளமையில் பெண் வழிச் சேறலில் சிக்கி, உழன்று, நோயுற்று, வறுமைப்பட்டு துன்புற்றவர் என்றும், உலகின் பிற மருந்துகளால் பயனில்லை என்று கருதி ‘பிணியை மாற்று மருந்து தென் கைலாய மேய மலை மருந்தே’ என்று காளத்திநாதனை வழிபட்டிருக்கிறார்.

திருக்காளத்தி என்பது இன்றைய காளஹஸ்தி. ரேணிகுண்டா ரயில் நிலயத்தின் தென்கிழக்கில் சுமார் 23 கி.மீ தூரம். சுவர்ணமுகி என்ற ஆறு வடக்கு முகமாக ஓடுகிறது. அதைத் தாண்டிச் செல்லவேண்டும். இரயில் மார்க்கமாகவும் தகரியில் இருந்து சாலை மார்க்கமாகவும்தான் இரண்டு மூன்று முறை போயிருக்கிறேன். காளஹஸ்தியில் தேசீயப் பஞ்சாலைக் கழகத்தின் நூற்பாலை ஒன்று இருந்தது. காரணமாக எனக்கது வாய்த்தது.

காளத்தி பஞ்சபூதத் தலங்களில் வாயுத்தலம். மேற்கு நோக்கிய சந்நிதி. கோயிலுக்கு வடக்கில் துர்க்காம்பிகை மலை, தெற்கில் கண்ணப்பர் மலை, கிழக்கில் குமாரசாமி மலை. ஊர் நடுவில் ப்ரசன்ன வரதப் பெருமாள் கோயிலும் உண்டு. நேரிசை வெண்பாவில் காப்பும், நூல் கட்டளைக் கலித்துறையிலும்.

தேமிகு காளத்திச் சிவக்கொழுந்தைப் போற்றும் இட்ட
காமிய மாலைக் கலித்துறைக்கு – நேமி புகழ்
தாளத்து அடைவு கொள் பாதாள கணபதி தாள்
மேளத்துடன் துணையாமே.

என்பது காப்புச் செய்யுள்.

இனிமையுடைய, தேன் போன்ற, தெய்வத்தன்மையுடைய காளத்தி சிவகொழுந்தைப் போற்றும் இட்டகாமிய மாலை கலித்துறையில் செய்கிறேன். அதற்கு உலகம் புகழ் தாளத்தின் அடைவு கொள் பாதாளக் கணபதியின் தாள் மேளத்துடன் துணையாமே!

நூற்பெயரும், யார் மேல் இயற்றப்படுவது என்பதும் பாவினமும் விளங்கப் பாடுபவர் தன் பெயரை சொன்னாரில்லை பாருங்கள்.

k

பெண்ணப்பன் வேள்வி தனிலே உகந்து, பெருகப் பிடித்து
உண்ணப் புகுந்த அசுரரை எல்லாம் துரந்து ஓடச் செய்தாய்,
விண்ணப்பன் ஒன்றுண்டு கேள், அடியேன் மெய்ப் பிணி களைவாய்!
கண்ணப்பன் எச்சில் உகந்தவனே! திருக் காளத்தியே!

வேடன் கண்ணப்பன் ருசிபார்த்துத் தந்த எச்சில் உகந்தவனே! திருக் காளத்திநாதனே! எனக்கு ஒரு விண்ணப்பம் உண்டு கேளாய்! அடியேன் உடற்பிணி களைவாய்! பெண்ணப்பன், மாமன், தக்கன் வேள்விதனிலே, விரும்பி, பெருகப் பிடித்து, அவிர்பாகம் உண்ணப் புகுந்த அசுரரை எல்லாம் துரத்தி ஓடச் செய்தவனே!

எனும் விதமாக போகும் பாடல்கள்.

    பழனி இரட்டை மணிமாலை

நூற்றுக்கணக்கான இரட்டை மணிமாலைகள் உண்டென அறிகிறோம். முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான ‘திருஆவினன்குடி’ எனப்படும் பழனி முருகன் மேல் பாடப்பட்டது இது.

இதனை இயற்றியவர் பெயரும் தெரியவில்லை. 1932-ம் ஆண்டில் கலைமகளில் உ.வே.சா. வெளியிட்ட நூல் இது.

“பழனி என்பது மலையின் பெயர். அதன் பழம் பெயர் பொதினி. பொதினியே மாறிப் பழனி ஆகி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

‘’ஆவி, பொன்னுடை நெடுநகர்ப் பொதினி’ என்ற அகநானூற்றுப் பாட்டில் ஆவிக்கு உரிய பொதினியில் பொன்னனுடைய உயர்ந்த கோயில் இருந்ததை மாமூலர் என்ற புலவர் சொல்கிறார்” என்கிறார் வித்துவான் சு.பாலசாரநாதன்.

இந்த நூல், உ.வே.சா. கணக்குப்படி சுமார் 300 ஆண்டுப் பழமை வாய்ந்தது. இதன் சுவடியும் திரிசிரபுரம் சி.தியாகராச செட்டியாரிடம் இருந்தே உ.வே.சா வுக்குக் கிடைத்துள்ளது.

காப்புச் செய்யுளே சிறப்பாக இருக்கிறது.

ஞான விரகு அறியா நானும் சில தமிழால்
வானவர் ஏத்தும் பழனி வந்தானைத் – தானவரை
வென்றானை வாழ்த்த விரைப் பாதிரி வனம் சேர்
கன்று யானை மாமுத்தோன் காப்பு
.’

விரகு – உபாயம், தமிழ்- செய்யுள், கன்றானை மாமுத்தோன் – ஆனைக்கன்றின் முகமுடைய விநாயகன்.

இதுவும் வெண்பா, கட்டளைக் கலித்துறை என பத்து இரட்டைகள் கொண்ட மாலைதான்.

அற்புதமான வெண்பா ஒன்று.

வேறோ, விளக்கும் விளக்கொளியும்? வேறிரண்டு
கூறோ, நவரசமும் கூத்தாட்டும்? – நாறும் மலர்க்
கள் உயிர்க்கும் தென் பழனிக் கந்தன், குருபரன்
உள் உயிர்க்கு வேற்றுமை ஆமோ?

விளக்கும் விளக்கொளியும் வேறோ? நகை முதல் சாந்தம் ஈறான ஒன்பான் சுவைகளும் கூத்தாட்டும் வேறோ? வாசமுடைய மலர்கள் தேன் துளிர்க்கின்ற பழனிமலைக் கந்தன், குருபரன், உள்ளுயிர்க்கு வேறானவன் ஆமோ?

இன்னொரு வெண்பா.

நெஞ்சம் உருகா நிதிப்பெருக்கரோ எனக்கோர்
தஞ்சம்? முருகா, தனிமுதல்வா, – செஞ்சதங்கைத்
தாள் உடையாய், தென் பழனிச் சண்முகா, பன்னிரண்டு
தோள் உடையாய், நீயே துணை
.’

நெஞ்சம் உருகாத செல்வந்தரோ எனக்கு ஓர் தஞ்சம்? முருகா, தனி முதல்வா, சிவந்த, சதங்கை அணிந்த கால்களை உடைய தென்பழனிச் சண்முகா, பன்னிரண்டு தோள்களை உடையவனே, நீயே துணை.

    மகர நெடும்குழைக் காதர் பாமாலை

நாம் தொடக்கத்தில் சொன்ன 28 மாலைகளில் பாமாலை என்பது இல்லை எனினும், இதுவும் ஒரு தமிழ்மாலை என்பதாலும் இதனைப் பற்றிப் பேசப் புகுந்தோம். இதனை 1939-ல் கலைமகளில் உ.வே.சா. வெளியிட்டிருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே இது அச்சுவடிவம் பெற்ற நூல். இது எவ்வாறு உ.வே.சா. கைக்கு வந்தது என்பதைப் பற்றி, உ.வே.சா. தனது 15 பக்க முகவுரையில் சுவைபடப் பேசி இருக்கிறார்.

உ.வே.சா.வின் முகவுரை கூறும் தகவல்கள், சுருக்கமாய் கீழே தரப்படும்.

திருமாலுக்குரிய திருப்பதிகள் நூற்றெட்டு. அவற்றுள் ஒன்றாகிய தென் திருப்பேரை என்பது தென்பாண்டி நாட்டிலுள்ள நவ திருப்பதிகளுள் ஒன்றாகவும் விளங்குகின்றது. அங்கே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் திருநாமம் மகரப் பூஷணப் பெருமாளென்பது. தமிழில் மகர நெடுங்குழைக் காதர் என வழங்கும். அப் பெருமாள் விஷயமாக நாராயண தீக்ஷிதரென்னும் ஸ்ரீவைஷ்ணவப் பெரியாரால் இயற்றப் பெற்றது இப்பாமாலை.
நம்மாழ்வார் காப்புச் செய்யுள், பெரிய திருவடிகளின் வணக்கச் செய்யுள், வாழ்த்து யாவும் சேர்த்து 103 கட்டளைக் கலித்துறைப் பாக்கள்.

இப்பாமாலை பாடப்பெற்ற வரலாறு ஒன்றிருக்கிறது.

2012-ம் ஆண்டு ஜூலை மாதம் முதலிரண்டு வாரங்களில் நான் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கலிஃபோர்னியா மானிலத்தின் ஃப்ரிமான்ட் நகரில் தங்கி இருந்தேன். தங்கி இருந்தது தென் திருப்பேரையைச் சார்ந்த சடகோபன் திருமலை ராஜன் வீட்டில். அப்போது ஒரு முன்னிரவில் பேசிக்கொண்டிருந்தபோது ‘மகர நெடும் குழைக் காதர் பாமாலை’ பாடப்பட்ட வரலாறு சொல்ல ஆரம்பித்தார் ராஜன். சொன்ன கையோடு விளக்கின் கீழ் வைக்கப்பட்டு, விளக்குத் திரியோ, சாம்பிராணித் திரியோ பட்டு சில பக்கங்களின் விளிம்பில் கருகி இருந்த ‘சிறை தந்த செல்வம்” எனும் புத்தகத்தையும் தந்தார். அதுதான் நான் மேற்சொன்ன பாமாலை. முன்பு உ.வே.சா. பதிப்பித்த புத்தகத்தின் மறு அச்சாக்கம், பி.ஸ்ரீ. முன்னுரையுடன்.

Now, Over to உ.வே.சா. நாள் 13 மே 1939.

‘நான் கும்பகோணம் காலேஜில் இருந்தபோது, தென்றிருப்பேரை கிராம முன்ஸீப்பின் குமாரராகிய ஸ்ரீநிவாஸையங்காரென்பவர் படித்து வந்தார். அவர் மிக்க செல்வந்தர். அவருடைய பரிசாரகராகிய நாராயணையங்காரென்பவர் ஒருநாள் வழக்கம் போல இரண்டாம் வேளை உணவு கொண்டு வந்து அவருக்காகக் காத்திருந்தார். அப்போது அவர் தம் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு மிகவும் கவனமாகப் படித்துக் கொண்டிருந்தார். அவ்வளவு கவனத்தோடு அவர் படிப்பதைப் பார்த்து ஏதாவது கதைப் புத்தகமாக இருக்கலாமென்று எண்ணினேன். ‘என்ன புத்தகம்?’ என்று கேட்டேன். அவர் ‘குழைக்காதர் பாமாலை, மிகவும் சிறந்த புத்தகம், தெய்வீக சக்தியுடையது’ என்றார். அதிலிருந்து சில பாடல்களைச் சொல்லச் செய்து கேட்டேன். அவர் சொல்லிவிட்டு, இந்நூல் உண்டான வரலாற்றையும் கூறினார். அந்த வரலாற்றைக் கேட்கும்போது என் உள்ளம் உருகியது. அக்காலத்திலேயே இப்பாமாலையை ஒருவர் அச்சிட்டிருந்தார். அவ்வச்சுப் பிரதியொன்றை அவர் எனக்கு அளித்தார். அது திருத்தமாக இல்லாதபடியால் பிறகு நான் விரும்பியபடியே இப்புத்தகத்தின் ஏட்டுப் பிரதிகள் சிலவற்றையும் வருவித்தளித்தார். அவற்றைக் கொண்டு என்னிடமுள்ள அச்சுப்பிரதியிலே திருத்தம் செய்து வெளியிட்டேன்.”

இந்தத் தொடரை நான் எழுதி வரும் காலை, திரும்பத் திரும்ப நான் உ.வே.சா.வைக் குறிப்பிடுவது பலருக்கு வியப்பாகவும் சிலருக்கு எரிச்சலாகவும் இருக்கலாம். உ.வே.சா. பதிப்புக்களிலும் பிழைகள் சில உண்டு, பொருள் கூறுவதிலும் முரண்கள் சில உண்டு என்று இன்றைய ஆய்வாளர்கள் கூறுவதில் எனக்குப் பகையில்லை. இருக்கலாம் கண்டிப்பாக. நானே சில தருணங்களில் அதை உணர்ந்திருக்கிறேன். ஒரு மக்கள் வழக்குத் தொடரைத் தஞ்சாவூர்ப் புலவன் கையாளுவதற்கும், திருநெல்வேலிப் புலவன் கையாளுவதற்கும் பொருள் வேறுபாடு ஏற்படும். ‘சில தமிழ்ச் சொல் ஆராய்ச்சி’ எனும் நூலில் பேராசிரியர் கே.என்.சிவராஜ பிள்ளை பல சொற்களை எடுத்துக் கொண்டு விரிவான ஆய்வுத் தகவல்கள் தருகிறார். ஆக, விஷயம் அதுவல்ல. ஒரு சிறு நூல் பதிப்பித்தலில் கூட உ.வே.சா. காட்டும் முயற்சி, ஆர்வம், செம்மைப் படுத்துதல், விரிவான ஆராய்ச்சி முன்னுரை என அதிசயப்படுத்துகிறார். இன்றையத் தமிழ் பேராசிரியர்களோ ஒன்றரைப் பக்கத்தில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிறார்கள்.

அது கிடக்க, இனி இப்பாமாலை மலர்ந்த வரலாறு பார்ப்போம்.

நூற்றாண்டுகளுக்கு முன்பு, சுந்தர பாண்டியன் எனும் அரசன் பல ஊர்களில் வாழ்ந்த ‘நூற்றெட்டுத் தலவகார சாமவேதிகளாகிய ஸ்ரீவைஷ்ணவர்கள்’ குடும்பத்தை தென் திருப்பேரையில் அமைத்து, அக்குடும்பங்களுக்கு நிலங்களும் வீடுகளும் வழங்கினார். இன்னும் அந்தக் குடும்ப வாரிசுகள் அவ்வூரில் வாழ்ந்து வருகிறார்கள். தலவகாரம் என்பது சாமவேதத்தின் சாகைகளுள் ஒன்று.

நாராயண தீக்ஷிதர் சாமவேதிகளான வைணவர் குடியில் பிள்ளைமங்கலத்தார் எனும் குடியில் பிறந்தவர். நம்மாழ்வார் மீதும் மகர நெடும் குழைக் காதர் மீதும் தீராத காதலுடையவர். அவருக்கு நம்மாழ்வார் தாசர் என்றும் பெயர். பயிர் பயன் தராத ஒரு ஆண்டில் அவர் இனத்தவர் சிலரால் அரசு இறை செலுத்த முடியவில்லை.

அவர்காலத்தில் திருச்சிராப்பள்ளியில் சொக்கநாத நாயக்கருடைய அரசாட்சியில், அவரது அரசுப் பிரதிநிதியாக திருநெல்வேலிச் சீமையை வடமலையப்ப பிள்ளை ஆண்டு வந்தார். கார்காத்த வேளாளர் வகுப்பு. தமிழறிவு நிரம்பியவர். மச்ச புராணம், நீடூர்த் தலபுராணம் தவிர்த்து, ஒரு கோவை, ஒரு வண்ணம், ஒரு கலம்பகம் இயற்றியிருப்பதாகத் தெரிய வருகிறது. தமிழ்ப் புலவர்களிடம் வடமலையப்ப பிள்ளைக்கு அளவற்ற அன்பு.

ஆனால் வரிவசூல் செய்ய வடமலையப்ப பிள்ளை நியமித்த அதிகாரி ஒரு வன்னெஞ்சர். அரசு திறை செலுத்த இயலாத நாராயண தீக்ஷிதர் வகையறாவை, சற்றும் இரக்கமின்றி, திருநெல்வேலி நகர் கொணர்ந்து சிறை வைக்கிறார் அந்த அதிகாரி. அச்சிறைக் கூடம் இருந்த தெரு, இன்றும் காவற்புரைத் தெரு என்று அழைக்கப் படுகிறது.

சிறையில் வாடிய நாராயண தீக்ஷிதரும் அவரைச் சார்ந்தவர்களும் நொந்து உருகி வருந்துகின்றனர். எங்கிருந்தாலும் மகர நெடுங் குழைக் காதர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் தினம் ஒரு பாடல் எழுதி, திரும்பத் திரும்பப் பாடினார்கள்.

தங்கள் வலியை வடமலையப்ப பிள்ளை அறிந்தால் ஏதும் வழி உண்டாகும் என்று நம்பித் தொடர்ந்து பாமாலை எழுதிப் பாடுகிறார் நாராயண தீக்ஷிதர்.

திங்கள் ஒன்றாக சிறை இருந்தோம் இச்சிறை அகற்றி
எங்கள் தம் பால் இரங்காததென்னோ? விசை நான் மறையின்
சங்கமும் கீதத் தமிழ் பாடலும் சத்த சாகரம் போல
பொங்கு தென்பேரைப் புனிதா கருணைப் புராதனனே!

என்பது இரண்டு காப்பு செய்யுள்கள் நீக்கி, இருபத்தோராம் பாடல்.

உண்மையிலேயே உருக்குவதாக இருக்கிறது சிறைபட்டவர் துன்பம். அவர்கள் எவரும் 5G, 6G ஊழல் செய்து சிறை புகுந்தவரல்ல. மலைகளை வெட்டி விற்றவரல்ல. சுரங்கங்களை கொள்ளை அடித்தவர் அல்ல. அடுத்தவர் குடியிருந்த வீட்டைப் பிடுங்கியவர் அல்ல. பாலம் கட்டியதில், ஆயுதம் வாங்கியதில், மாட்டுத் தீவனத்தில், பிணப்பையில் வாரிக்குவித்தவர் அல்ல. எளிய விவசாய நிலம் கொண்டவர். மழை பெய்யவில்லை, வயல் விளையவில்லை, வரி கொடுக்கவில்லை அவ்வளவுதான். எந்தக் காலத்திலும் குடியானவன் வீட்டுக் கதவைத்தானே அரசாங்கம் பிடுங்கும். வரி பாக்கிக்காக உழவு மாடுகளைப் பற்றிப்போய் பவுண்டில் அடைத்த வம்சாவளியினர் நமது அரசுகள். விளக்கம் கி.ரா.விடம் கேளுங்கள்.

இருபத்தி இரண்டாம் பாடல்.

இன்று ஆகும், நாளைக்கு நன்றாகும், என்று இங்கு இருப்பதல்லால்
ஒன்றாகிலும் வழி காண்கிலமே! உன் உதவி உண்டேல்
பொன்றாமல் நாங்கள் பிழைப்போம் கருணை புரிந்து அளிப்பாய்
அன்று ஆரணம் தொழ நின்றாய் தென்பேரைக்கு அதிபதியே!

நான் ஒரு விவசாயியின் மகன். அவர்தம் பாடுகள் புரியும். உழவனுக்கு, வெட்டாத கிணறுக்கு, வாங்காத பசுவுக்குக் கடன் வாங்கத் தெரியாது. நெல்லில் உறுப்பாங்கட்டியைப் பொறுக்கிவிட்டு விலைக்கு அளப்பவன்.

பாடிகொண்டுபோன புலவருக்குப் புலப்பட்டிருக்கும் போல. வள்ளலும், நீதிமானும், புலவனுமான வடமலையப்ப பிள்ளை ஆட்சியா இப்படி? அவருக்குத் தெரிந்திருக்காது! அவருக்கு யார் போய்ச் சொல்வார் எம் இடர்ப்பாடை?

கட்டளைக் கலித்துறையில் 23-வது பாடல்.

வள்வார் முரசு அதிர் கோமான் வடமலையப்பன் முன்னே
விள்வாரும் இல்லை, இனி எங்கள் காரியம் வெண் தயிர் பால்
கள்வா, அருட் கடைக் கண் பார், கருணைக் களிறு அழைத்த
புள்வாகனா, அன்பர் வாழ்வே! தென்பேரைப் புராதனனே!

என்ன உருக்கம் பாருங்கள். சிறைக்குள் செல் ஃபோனும், விஸ்கி பாட்டில்களும், சில சமயம் பெண்களும், கஞ்சாவும், பிரபல ஓட்டல் பிரியாணியும், கொத்துப் புரோட்டாவும் அனுமதிக்கப்பட்ட காலம் அல்ல அது.

இந்தப் பாடலை, மற்ற நாட்களைப் போல திரும்பத் திரும்பப் பாடுகிறார்கள். சிறைக்காவலர் காதில் விழுகிறது, வலிய தோலை உடைய முரசு அதிரும் கோமான் வடமலையப்பன் முன்னே யார் போய் சொல்வார்கள் என்ற வரி. வடமலையப்ப பிள்ளைக்கு சேதி போகிறது. அவரே நேரில் வருகிறார், விடுதலை செய்கிறார், தீக்ஷிதர் நிலங்களை இறையிலி நிலங்களாக அறிவிக்கிறார். வரிவசூல் அதிகாரிகளைத் தண்டிக்கிறார். நாராயண தீக்ஷிதரிடம் இரண்டு வேண்டுகோள் வைக்கிறார். தன்னை இனிமேல் புகழ்ந்து பாடக் கூடாது, மீதி நூலையும் யாத்து முடிக்கவேண்டும்.

அடிமடியில் இருப்பதையும் அவிழ்த்துக்கொண்டு ஓடும் இன்றைய அரசினர் போலன்றி, இப்படி ஒரு அரசப் பிரதிநிதி.

நாராயண தீக்ஷிதர் உருகிப் பாடுகிறார்.

காலிக்கு ஒரு வரை ஏந்தினை, நெஞ்சம் கலக்கும் எங்கள்
மேல் இக் கொடுவினை வாராமல் காத்தனை, மேன்மைதரும்
பாலுக்கு இனிய மொழியாளைத் தேடிப் பகையை எண்ணா
வாலிக்கு ஒரு கணை தொட்டாய் தென் திருப்பேரை மணிவண்ணனே!

கன்றுகாலிகளுக்காக ஒரு மலையை, கோவர்த்தன கிரியை ஏந்தினாய். நெஞ்சம் கலங்கும் எங்கள் மேல் இக்கொடுவினை வராமல் காத்தாய், மேன்மை தரும் பாலை விட இனிய மொழியாளாகிய சீதையைத் தேடிப் போகும்போது பகையை எண்ணி வாலிக்கு ஒரு அம்பு – சரம் – வாளி- ஆவம் – கணை- பகழி விடுத்தாய், தென்பேரை மணிவண்ணனே!

வேலிக்குள் நின்று விளைபயிர் போல விரும்பும் எங்கள்
பால் இக்கொடுந் துயர் தீர்த்தளித்தாய், பகை வென்ற புய
வாலிக்கும் வேலைக்கும் மானுக்கும் மாய மயன் மகள் தன்
தாலிக்கும் கூற்றுவனானாய்! தென் பேரைத் தயா நிதியே!

பகை வென்ற வாலிக்கும், கடலுக்கும், மாயமான் மாரீசனுக்கும், மயன் மகள் மண்டோதரி தாலிக்கும் கூற்றுவன் ஆனாய், தென் திருப்பேரைத் தயாநிதியே! வேலிக்குள் நின்று விளையும் பயிர்போல வாழ விரும்பும் எங்கள் பால் இக்கொடுந்துயர் தீர்த்து அளித்தாய்!

உண்மையில் இந்த நூலை எனக்கு முதலில் அறிமுகப்படுத்திய தென் திருப்பேரை சடகோபன் திருமலை ராஜனுக்கு என் நன்றி.

[தொடரும்…]