ஆயிரம் தெய்வங்கள் – ஈராஸ் – சைக்கே காதல்

இரண்டாவது உலக போர் காலகட்டத்தில் பிரான்ஸ் ஜெர்மானிய நாசிஸ்டுகளால் வெல்லப்பட்டபோது நாசிசத்தை எதிர்த்து துணிச்சலுடன் எழுதியவர்களில் பிரபல நாவலாசிரியர்கள் ஆல்பர்ட் காம்யூவும் ஜீன்பால் சார்த்தும் முக்கியமானவர்கள். நாத்திக போராளிகளாக வாழ்ந்த இவர்கள் அநேகமாக போர்க்கால சூழ்நிலையில் எழுதியது காரணமாக அவர்களது எழுத்தில் நம்பிக்கையின்மை மேலோங்கியிருந்தது. மனித வாழ்வு அர்த்தமற்றது, புரியாத புதிர். புவி வாழ்வதற்கு ஏற்றதல்ல. தீமையே நம்மைச் சுற்றிலும் நிகழ்கின்றன. இது ஒரு இருட்டு உலகம். இப்படிப்பட்ட ஒரு குருட்டுப் பார்வை தற்கொலையை நியாயப்படுத்துவதாகவும் அமைந்தது. இவர்கள் தம்மை இருப்பியல்வாதிகள் என்று அழைத்துக் கொண்டனர். இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு கிடைத்தும் அதை ஏற்க மறுத்துவிட்டனர். இவர்கள் தங்கள் கதைகளில் உருவமுள்ள ஒன்றைப் பேசுவதற்கு பதிலாக உருவமற்றவையும், குழப்பமானவற்றையும், உள்ளுறை உருவம் கொண்டவற்றையும் படைத்தனர். எனினும் இவர்களுக்கு முன்னோடிகளாக தாஸ்தொவ்ஸ்கியும் ஃப்ளாபர்ட்டுமே எண்ணப்படுகின்றனர். தெய்வநம்பிக்கை இல்லாத பல இருப்பியல்வாதிகளுக்கு அபூலியஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானியின் மெட்டமார்ஃபோஸஸ் என்ற தெய்வீகக் கதையே முன்னோடியாக உள்ளது.

மெட்டமார்ஃபோஸஸ் வெளிப்படுத்தும் மெய்ப்பொருள் உருவமற்றது. பலபொருள் தரும் போக்குடையது. மெட்டமார்ஃபோஸஸ் என்பதுதான் ஈராஸ் சைக்கே காதல் கதை. அதன் கதைச் சுருக்கம் இதுவே:

வாயுகுமாரனாகிய ஸீஃபைரஸ் ஈராஸின் கட்டளைப்படி சைக்கேவைக் கடத்திச் சென்று ஒரு மர்ம மாளிகையில் சிறை வைத்தான். கண்ணனுக்குத் தெரியாத வேலைக்காரர்கள், சேடிகள் சைக்கேவை நன்கு உபசரித்தனர். அவளுக்கு சகல வசதிகளும் செய்து தரப்பட்டன.சுவையான உணவு வந்தது. யார் கொண்டு வந்தது என்று தெரியாது. சைக்கேவை சுடுநீரில் நன்கு குளிப்பாட்டி உடலைத் துடைத்த பணிப்பெண்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. அவள் நினைத்த மாத்திரத்தில் விரும்பியதெல்லாம் கிடைத்தன. இரவு வந்ததும் ஒரு மர்ம மனிதன் அவளைத் தொட்டு நேசிப்பது புரிந்தது. சைக்கே கடத்தப்படும் முன்பு அவள் கேட்ட அசரீரிப்படியே அவ்வளவும் நிகழ்ந்ததால் அது ஒரு மர்ம மனிதனா அல்லது ஒரு அதிசயப் பிராணியா எதுவாக இருந்தாலும் அவனே தன் கணவன் என்று உணர்ந்து அதன் இச்சைகளைத் தீர்த்து வைத்தாள்.

சைக்கே அந்த மர்ம மாளிகையில் ஒரு குறையுமில்லாமல் இருந்து வந்தாள். சுதந்திரமாக அவளால் வெளியே செல்ல முடியாது என்பது மட்டும்தான் அவளுக்குக் குறையாக இருந்திருக்க முடியும். இதை அவள் பொருட்படுத்தவில்லை என்றாலும் ஒரு நாள் இரவு தன்னைச் சுகிக்க வந்தவனிடம் தன் ஆசையைத் தெரிவித்தாள். தான் இங்கே மகிழ்ச்சியாக இருப்பதைத் தன் சகோதரிகளுக்குத் தெரிவிக்கும்படி கெஞ்சினாள். அது ஆபத்தானது என்று கூறி அந்த மர்மப்பிராணி அவளது விருப்பத்தை மறுத்து விட்டது. எனவே அவள் வாயுகுமாரனாகிய ஸீஃபைரஸைக் கொண்டு தனது சகோதரிகளை மாளிகைக்குக் கடத்தி வரச் செய்தாள்.

giuseppe_maria_crespi_-_amore_e_psiche_-_google_art_project

சைக்கேவின் ராஜபோக வாழ்க்கையைப் பார்த்து போராமையுற்ற அவளது சகோதரிகள் தவறான யோசனைகளைக் கொடுக்கத் துவங்கினர். சைக்கே தன் கணவனாக எண்ணியுள்ளவன் ஒரு மனிதனே இல்லை என்றும் அது ஒரு பலதலைகள் கொண்ட டிராகன் பாம்பு என்றும் சொல்லி, புணர்ச்சிக்குப் பின் அது தூங்கும்போது விளக்கை ஏற்றி அதைக் கொன்றுவிடுமாறும் அறிவுரைகள் வழங்கினர். அவர்களது யோசனைகளால் ஏமாந்த சைக்கே, படுக்கையறைக்குள் ஒரு கத்தியையும் விளக்கையும் ஒளித்து வைத்தாள். தன் திட்டப்படியே அந்தப் பிராணி உறங்கும்போது விளக்கை ஏற்றி வந்திருப்பது யார் என்று பார்த்தாள். படுக்கையில் உறங்குவது ஒரு தெய்வம் எனபதைக் கண்டு முகம் வெளிறினாள், உடல் வியர்த்தது. அதில் ஒரு வியர்வைத் துளி தன் உடலில் விழுந்ததும் ஈராஸ் விழித்துக் கொண்டான். “என் நிபந்தனையை மீறி நீ என்னை நிர்வாணமாகப் பார்த்துவிட்ட குற்றத்துக்கு தண்டனையாக இனி நீ என்னை என்றுமே பார்க்க இயலாமல் போகட்டும்” என்று சபித்துவிட்டு விண்ணேறி மறைந்தான் ஈராஸ்.

ஈராஸைப் பிரிந்த சைக்கே மிகவும் சோகமானாள். ஈராஸின் பிரிவுக்குக் காரணமான தன் சகோதரிகளுக்கு தண்டனை வழங்கத் தீர்மானித்தாள். அவர்கள் இருவரையும் ஒரு மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்று ஸீஃபைரஸின் உதவியுடன் அவர்களைக் கீழே தள்ளிக் கொன்று பழி தீர்த்துக் கொண்டாள்.

தான் மீண்டும் ஈராஸின் தரிசனம் பெற உதவ வேண்டுமென்று சைக்கே அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டாள், எந்த தெய்வமும் உதவுவதாக இல்லை. இறுதியாக தன் எதிரியான அஃப்ரோடைட்டைச் சரணடைந்து, தனக்கு உதவும்படி வேண்டினாள் சைக்கே. ஆனால் அஃப்ரோடைட்டோ, அவளுக்கு உதவாமல் சைக்கேவை ஒரு அடிமையைப் போல் நடத்தினாள். அவள் ஏராளமான சித்திரவதைகளுக்கு ஆளானாள். ஒரு முறை சைக்கேவை ஹெடஸுக்கு அனுப்பி சர்சிஃபோனைச் சந்தித்து ஒரு விசேஷமான அகில் புகையைப் பெற்று வருமாறு பணித்தாள். ஒரு சிறிய டப்பாவில் அது களிம்பு போல் இருக்கும், அதை எக்காரணத்தைக் கொண்டும் திறந்துவிடக் கூடாது என்று உத்தரவு. ஆனால் சைக்கே அவளது ஆணையை மீறி டப்பாவைத் திறந்து முகர்ந்து பார்த்தாள், அதன் மணம் தாளாமல் மயங்கி எமனுலகிலேயே வீழ்ந்தாள்.

சைக்கேவின் முடிவைக் கேள்வியுற்ற ஈராஸ் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தான். சைக்கேவைப் பிரிந்து தன்னால் வாழ முடியாது என்று உணர்ந்த ஈராஸ் தெய்வங்களின் தெய்வமான ஸீயஸ்ஸிடம் முறையிட்டான். அவனது முதல் வேண்டுகோள், சைக்கேவுக்கு உயிர்பிச்சை அளிக்க வேண்டுமென்பது. இரண்டாம் வரம், ஒரு மானுடப் பெண்ணைத் தான் மனைவியாக ஏற்க அனுமதிக்க வேண்டும் என்பது. ஈராஸின் இரு கோரிக்கைகளையும் ஏற்று அவனை வாழ்த்தியருளினான் ஸீயஸ். அஃப்ரோடைட்டும் சமாதானமடைந்து சைக்கேவை மன்னித்து ஏற்றுக் கொண்டு இருவரையும் வாழ்த்தினாள். பின் என்ன, கேளிக்கைதான். ஈராஸுக்கும் சைக்கேவுக்கும் பிறந்த குழந்தைதான் வாலுப்ஷுயஸ்னஸ் (Voluptuousness).

கிபி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த தெய்வக்கதை மற்ற கிரேக்க புராணங்களிலிருந்து மாறுபட்டு விளங்குகிறது. அபூலியஸ் பிளாட்டோவின் சீடர். பிளாட்டோவை ஒரு பகுத்தறிவாளராகக் கருத இயலாது. அவர் புறப்பொருட்களுக்கு முக்கியத்துவம் தரும் உயர்ந்த குறிக்கோள்வாதி என்றாலும், உயர்ந்த குறிக்கோளின் உன்னத நிலையை அழியாத ஆன்மாவாக ஏற்றுக் கொண்டவர். மேலோட்டமாகப் பார்த்தால் பிளாட்டோவோ, அபூலியஸோ கண்ணால் பார்க்க முடியாத இரவுப் பிராணியுடன் மானுடப் பெண் உறவு கொள்ள முடியும் என்பது அறிவுக்குப் பொருந்தாது என்றாலும் சில உண்மைகளை மனித உணர்வுகளுடன் வெளிப்படுத்த தெய்வங்களைக் கையாள்கின்றனர். அபூலியஸ் எடுத்துக் காட்டும் உண்மை அல்லது மகாதத்துவம் யாதெனில் தெய்வீக அழகை தரிசனம் செய்ய முயற்சி செயபவனால் அதைத் தாள முடியாது. அதன்முன் மனித ஆன்மா பல சோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டாக வேண்டும். அழகுக்கும் ஆன்மாவுக்கும் தொடர்பு சாதனமாக விளங்கும் அன்பு அல்லது காதல் தெய்வீகச் சிந்தனைகளுக்கு இட்டுச் செல்வதாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதாக கிரேக்க சிந்தனை இக்கதைக்கு விளக்கம் தருகிறது.