ஆயிரம் தெய்வங்கள் – கிரேக்க சோகக்கதை ஆடிப்பஸ்

இந்திய புராண வழக்கில் மகாபாரதம் எப்படியோ அப்படியே ஹோமரின் இலியத் – ஒடிஸ்ஸே. ஏறத்தாழ இலியமும் பாரதமும் கொண்டுள்ள ஒருமித்த கருத்துகள் வியப்பாக உள்ளன. பாரதப் போரின் தொடர்ச்சியாக ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் கதைகளில் உள்ள ஆன்மிக வாசனையை ஒடிஸ்ஸேயின் தொடர்ச்சியில் காண்பதரிது. சோகரசங்களில் ஒற்றுமை காணப்படும். பாரதப் போருக்குப் பின் அபிமன்யுவின் மகன் பரீட்சித்து மரணம் ஒரு சோகம். மகாபாரதத்தில் போர் முடிந்தபின் சாந்தி பருவ நிகழ்ச்சிகளுக்கும் இலியம் – அதாவது ட்ரோஜன் – கிரேக்க போருக்குப்பின் ஒடிஸ்ஸேயில் விவரிக்கப்படும் நிகழ்வுகளுக்கும் உள்ள ஒற்றுமைப்பண்புகள் கவனிக்கத்தக்கன. ஆனால் மிகமிக வித்தியாசமான சோகத்தை ஆடிப்பஸ் சித்தரிக்கிறது.

ஐரோப்பாவில் இடைக்கால கவிஞர்களை மிகவும் கவர்ந்த பல்வேறு கிரேக்க சோகக்கதைகளில் இரண்டை மட்டும் தேர்வு செய்து கவனிக்கலாம். முதலாவது ஆடிப்பஸ். இரண்டாவதாக நாம் கவனிக்க இருப்பது ஈராஸ் – ஸைக்கே.

ஹீராக்ளீஸ், டையோனைசஸ் வரிசையில் கேட்மஸ் மாவீரன். ஏரஸ் தெய்வத்தின் திருமகளான ஹார்மோனியாவை மணந்து கொண்டு திபஸின் எல்லைக்கு அரசனாகும் முன்பு அவன் சந்தித்த துன்பங்களும் சோதனைகளும் ஏராளம். கேட்மஸின் சந்ததியில் நாலாவது தலைமுறையைச் சேர்ந்தவன் ஆடிப்பஸ். இவன் தந்தை லைபஸ் பெற்ற சாபத்தினால் ஆடிப்பஸ் தந்தையைக் கொன்றவனாகிறான். தனது பெற்றோர் யார் என்றே அறியாமல் ஆடிப்பஸ் தன் தந்தையைக் கொன்று தாயைத் தாரமாக்கிக் கொள்கிறான்.

ஒரு முறை லைகஸ் என்ற வீரன் திபன் அரசைக் கைப்பற்றியபோது, தன் உயிருக்கு வந்து பைசா நகருக்கு வந்து மன்னன் பிலாப்ஸிடம் சரணடைந்தான். அடைக்கலம் கொடுத்த இடத்தில் அடங்கி நடக்காமல், பிலாப்ஸின் மகன் கிரைஸிப்பஸுடன் தகாத உறவு ஏற்படுத்திக் கொள்கிறான். தன் மகனுடன் உடலுறவு கொண்ட குற்றத்துக்காக, “எப்படி என் மகன் உன்னுடன் தகாத உறவு கொண்டானோ, அவ்வாறே உன் மகன் உன்னைக் கொன்று உன் மனைவியுடன் தகாத உறவு கொள்வான்,” என்று பிலாப்ஸ் சாபம் கொடுத்துவிடுகிறான். விண்ணிலிருந்த தேவர்கள், “இந்த சாபம் பலிக்கட்டுமாக!” என்று பிலாப்ஸை வாழ்த்துகின்றனர்.

பிலாப்ஸ் சாபத்தையும் தேவர்களின் ஆமோதிப்பையும் லட்சியம் செய்யாமலும் தன் செயலுக்கு வருந்தாமலும் வாழ்ந்த லையஸ் ஒரு பெண்ணை மணந்தான். எபிகேஸ்ட், இயோகேஸ்ட் என்று இருவேறு பெயர்களில் இவள் வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படுகிறாள். இவர்கள் இருவருக்கும் பிறந்தவன்தான் ஆடிப்பஸ். இது ஒரு காரணப்பெயர். தனக்குப் பிறந்தது ஒரு ஆண்மகவு என்று அறிந்த லையஸ் தேவர்களின் சாபம் பலித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அந்தக் குழந்தையைக் கொலை செய்யத் திட்டமிடுகிறான். குழந்தையின் குதிகாலில் அம்பு கொண்டு காயம் ஏற்படுத்தி அதை ஒரு குகையில் விட்டுச் செல்கிறான் அவன். அம்புக் காயத்தால் ரத்தம் பெருகி மயங்கிக் கிடந்த குழந்தை இறந்துவிட்டது என்று முடிவு செய்து ஊர் திரும்புகின்றனர் அவனது ஏவலாட்கள். அவ்வழியாக வந்த கொரிந்த் நாட்டு வேட்டுவன் ஒருவன் உயிருக்குப் போராடும் நிலையில் இருக்கும் குழந்தையைக் கண்டெடுத்து, அதை தன் நாட்டு மன்னனிடம் ஒப்படைத்தான். குழந்தையின்பால் கருணை ஏற்பட்டு மன்னன், அதை வளர்க்கச் சொல்லி தன் மனைவியுடன் ஒப்படைத்தான். அவர்கள் இருவரும் இக்குழந்தையை தம் குழந்தையாக எண்ணி வளர்த்தனர். இவ்வாறாக உயிர்பிழைத்த பின்னும் குதிகாலின் வீக்கம் மறையாது நிரந்தரமாக இருந்ததால், குழந்தை ஆடிப்பஸ் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஆடிப்பஸ் என்ற சொல்லுக்கு வீங்கியபாதம் என்பதுதான் பொருள்.

oedipus abandoned

தம் வளர்ப்புப் பெற்றோர்கள்தான் தன் தாய் தந்தையர் என்று நம்பி வளர்ந்து ஆளாகிறான் ஆடிப்பஸ். ஆனால் ஒரு குடும்பத் தகராறில் அவனது பிறப்பின் ரகசியம் வெளிப்பட்டு விடுகிறது. ஆடிப்பஸ் தன் பெற்றோரைத் தேடிச் செல்கிறான். கொரிந்த் நாட்டை விட்டு வெளியேறும் ஆடிப்பஸ் ஒரு நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு பல கிராமங்கள் நகரங்கள் தேசங்கள் என்று தன் தேடலைத் தொடர்கிறான். தன் பயணங்களில் டெல்ஃபி என்ற ஊர் வந்து, அங்கு அருள்வாக்கு கேட்கும்போது “விரைவில் நீ உன் தந்தையைக் கொன்று தாயைத் தாரமாக்கிக் கொள்வாய்” என்று பதில் வந்தது.

இந்த எச்ச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு குதிரை வியாபாரியாகத் தன் தேடுதல் வேட்டையைத் தொடர்கிறான் ஆடிப்பஸ். ஒரு முறை திபஸ் எல்லைக்கு வரும்போது அங்கு ஒரு குறுகிய பாதையைக் கடக்கவேண்டி வந்தது. எதிரில் வருபவர் வ்ழிவிட்டால்தான் அவன் தன் பாதையில் செல்ல முடியும். அப்போது அவ்வழி சென்றுகொண்டிருந்த திபெஸ் மன்னனின் காவலர்கள் அவனிடம் மன்னனுக்கு வழிவிட்டு விலகி நிற்கச் சொல்லி ஆணையிட்டனர். இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த ஆடிப்பஸ் மன்னனின் காவலர்களிடம் போரிட்டு அவர்களையும், சண்டைக்கு வந்த மன்னனையும் கொன்று விட்டான். தான் கொன்றது தன் தந்தை லையஸ்ஸை என்பது தெரியாமல் தன் பயணத்தைத் தொடர்கிறான் ஆடிப்பஸ்.

திபஸ் பகுதிகளில் சிம்மராக்கதன் ஒருவன் இருந்தான். தன்னைக் கடந்து செல்லும் வழிப்போக்கர்களிடம் புதிர் ஒன்றைச் சொல்லி விடை கேட்பான் அவன். தன் புதிர்களுக்கு சரியான விடை சொல்லாதவர்களைக் கொன்று தின்று விடுவான் அந்த சிம்மராக்கதன். ஆடிப்பஸ் இவனைக் கடந்து செல்ல நேரிடுகிறது, அப்போது சிம்மராக்கதன் ஆடிப்பஸிடம் கேள்விகியா எழுப்புகிறான். முதல் கேள்வி, “இந்த உலகில் உள்ள ஒரு பிராணி இரண்டு கால்களில் நடக்கிறது. அது மூன்று கால்களிலும் நான்கு கால்களிலும் நடக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் அது தன் அத்தனை கால்களையும் ஒருசேரப் பயன்படுத்தினால் செயலிழந்து விடும். எது அந்த பிராணி?”. “மனிதன்” என்று விடை சொல்கிறான் ஆடிப்பஸ். “ஒருவரையொருவர் சுமக்கும் இரு சகோதரிகள் யார்?” என்று கேட்கிறான் சிம்மராக்கதன். “பகலும் இரவும்” என்று பதிலளித்து இந்தப் புதிருக்கும் விடை தருகிறான் ஆடிப்பஸ். தன் இரு புதிர்களுக்கும் சரியான விடை வந்ததால் ஆடிப் போன சிம்மராக்கதன் ஒரு செங்குத்தான பாறையில் மோதி தன்னை மாய்த்துக் கொண்டு சாபவிமோசனம் பெறுகிறான்.

sphinx_oedipus

அனைவருக்கும் தொல்லையாக இருந்த கொடூரமான சிம்மராக்கதனிடமிருந்து தங்களை மீட்டவன் என்ற மகிழ்ச்சியுடன் ஆடிப்பஸை தங்கள் நகருக்குள் வரவேற்கின்றனர் திபஸ் நகர மக்கள். ஆடிப்பஸ் கொலை செய்த லையஸ்ஸின் மனைவி, அவனது தாய், அயோகேஸ்டின் தமையன் கிரியோன் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறான். ஆடிப்பஸ் சிம்மராக்கதனைக் கொன்றதில் வெளிப்பட்ட அவனது புத்தி சாதுர்யமும் வீரமும் கிரியோனுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. தன் தமக்கையை ஆடிப்பஸ்ஸுக்கு மணமுடித்து, அவனை மன்னனுமாக்குகிறான் கிரியோன்.

ஆடிப்பஸ் அரியாசனம் ஏறிய சில நாட்களில் தீபஸ் நாகரிகக் கொடிய கொள்ளை நோய் தாக்குகிறது. ஏராளமான மக்கள் நோய்வாய்ப்பட்டு மாண்டு போகின்றனர். இதன் காரணத்தை அறிய சைக்ரோன் என்பவன் டெல்ஃபிக்கு அனுப்பப்படுகிறான். அங்கு கிடைக்கும் அருள்வாக்கு இதுதான்: “திபஸ் மன்னன் லையஸ்ஸைக் கொன்றவன் யாரோ, அவனைப் பழிவாங்காத குற்றத்துக்கான தண்டனையே இந்த கொள்ளை நோய்”.

the_plague_of_thebes

மன்னனைக் கொன்றவனைக் கண்டுபிடித்து தன் கையாலேயே அவனைக் கொன்று மக்களின் உயிரைக் காப்பாற்றுவதாக உறுதியளிக்கிறான் ஆடிப்பஸ். அக்கொலை நடந்த இடம், சூழ்நிலை போன்ற விவரங்களை சேகரிக்கிறான் அவன். இந்த புலன்விசாரணையின் முடிவில் மன்னனைக் கொன்றது தானே என்ற உண்மையை அவன் அறிய வருகிறான். தன் கணவனைக் கொன்றவனே தன்னை மணந்தவன் என்ற செய்தியை ஆடிப்பஸின் மனைவி அயோகேஸ்ட் அறிகிறாள், முன்னொரு காலத்தில் பிலாப்ஸ் இட்ட சாபம் அவள் நினைவுக்கு வருகிறது. அப்போதுதான் அவளுக்கு ஆடிப்பஸ்ஸின் குதிகால் வீக்கத்துக்கான காரணம் புரிந்து அவன் யார் என்பதும் புலப்படுகிறது. இந்த அதிர்ச்சியைத் தாளாமல் அரண்மனையில் ஒரு தனி அறையில் தூக்கிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறாள் அவள். தன் தாயையே தாரமாக்கிக் கொண்ட உண்மை ஆடிப்பஸ்ஸுக்குத் தெரிய வருகிறது. இதனால் பதைத்துப் போன அவன், தன் தாயின் கொண்டை ஊசியால் தன் கண்களைக் குத்திக் கொண்டு குருடனாகிறான்.

தன் தேசத்தை விட்டு வெளியேறி குருட்டுப் பிச்சைக்காரனாக ஊர் ஊராகச் சுற்றும் ஆடிப்பஸ் தன் பயணங்களின் இறுதியில் ஏதென்ஸ் நகரம் வருகிறான். அந்நாட்டு மன்னன் அவனைக் கண்டதும் அடையாளம் கண்டுகொண்டு ஆரத்தழுவி அன்பாக வரவேற்று உபசரிக்கிறான். ஆயினும் ஆடிப்பஸ்ஸின் மனம் சமாதானம் அடைவதில்லை. கொலோனஸ் தோட்டத்தில் தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறான் அவன். உயிரற்ற அவனது உடல்மீது பூமாரி பொழிகின்றனர் தேவர்கள். “ஆடிப்பஸ்ஸின் உடல் புதைக்கப்படும் இடத்தில் எப்போதும் அருளாசி கிட்டும்” என்று அசரீரியும் வாழ்த்துகிறது. இதைக் கெட்ட ஏதன்ஸ் மன்னன் தேசீயஸ் ஆடிப்பஸ்ஸின் உடலை அவனது வாரிசுகளிடம் ஒப்படைக்காமல் தன் நகரிலேயே ஒரு பிரம்மானடமான சமாதியில் அடக்கம் செய்கிறான்.

image3

ஆடிப்பஸ்ஸின் துயரம் தோய்ந்த வாழ்வு பல்வேறு வடிவங்களில் இலக்கியப் படைப்புகளாகக் கொண்டாடப்பட்டுள்ளது. அடுத்த பகுதியில் ஈராஸ் சைக்கே காதல் கதையை கவனிப்போம்.