பொய்த்தேவு: சி.சு.செல்லப்பாவின் விமரிசனத்திலிருந்து சில குறிப்புகள்

kanasu2

பொய்த்தேவு நாவல் தனித்தன்மை கொண்டது. முக்கியமான நாவல். இப்படிச் சொல்வதற்கான காரணங்களையும் க.நா.சுப்ரமண்யம் அவர்களின் படைப்புக் கோட்பாட்டையும் எழுத்து 85, ஜனவரி 1965 இதழில், “பொய்த்தேவு (விமர்சன ஆய்வு)” என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்ட சி.சு.செல்லப்பாவின் விமரிசனம் விரிவாகப் பேசுகிறது. அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் இங்கே.

I.

sisuse

நான் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருப்பது க.நா.சுப்ரமண்யம் எழுதி இருக்கும் ‘பொய்த்தேவு’ என்கிற தமிழ் நாவல். அவர் ஒரு சிறந்த சிறுகதாசிரியர், விமரிசகரும்கூட. அவரது நாவல்களில் இது தலைசிறந்தது என்று கருதுவதால் அதை எடுத்துக் கொண்டிருக்கிறேன்…

இந்த நாவலை நான் ஆராய முற்பட்டதில் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. தமிழில் முதல் நாவல் சென்ற நூற்றாண்டில் தோன்றினது முதல், இன்று பத்திரிக்கையில் தொடராக வரும் நாவல்கள் வரை வெளிவந்துள்ளவைகளிலிருந்து இந்த நாவல் தனித்து நிற்கிறது. அடுத்து இது தமிழ் நாவலுக்கு தன் பங்கை கணிசமாகவே செலுத்தியிருக்கிறது என்பது. 1946ல் புத்தகமாக வந்த இந்த நாவல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. ஆசிரியரின் இரண்டாவது நாவல். இதைப் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்குமுன் நான் படித்த, தமிழில் இலக்கியத்தரமானது என்று குறிப்பிடத்தக்க நாவல்கள் அதிகமாகச் சொன்னாலும் ஐந்தாறுக்கு மேல் இல்லை. தமிழில் சிறுகதை சிறந்த வளம் பெற்றிருக்கிற அளவுக்கு, நாவல் துறையில் இன்றுவரைகூட ஒரு பத்துப் பன்னிரெண்டுக்கு மேல் சுட்டிக்காட்டுவதற்கு நாவல்கள் இல்லை என்பதும்கூட. எனவே தமிழ் நாவல் துறையில் இதுக்கு உரிய இடத்தை கணிப்பது சிரமமான காரியமாக இல்லை.

இந்த நாவலுக்கு முன், சென்ற நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட கமலாம்பாள் சரித்திரம் (பி. ஆர். ராஜம அய்யர்), பத்மாவதி சரித்திரம் (அ.மாதவையர்), முருகன் ஒரு உழவன், தேசபக்தன் கந்தன் (கே.எஸ்.வேங்கடரமணி – முதலில் இங்கிலீஷில் எழுதப்பட்டவை), சுந்தரி (வ.ரா.), மண்ணாசை (சங்கரராம் – முதலில் இங்கிலீஷில் எழுதப்பட்டது), நாகம்மாள் (ஆர்.ஷண்முகசுந்தரம்) ஆகியவைதான் அன்று பேசிக்கொள்ளப்பட்ட நாவல்கள். இவைகளுக்கெல்லாம் முந்தின பிரதாப முதலியார் சரித்திரம் (வேதநாயகம்பிள்ளை) தான் தமிழ் நாவல் இலக்கியத்துக்கு வழி அமைத்தது என்றாலும், அது ஒரு கிரானிகிளாக இருந்து விட்டதாலும் இலக்கியத்தரமான நாவல் என்று சொல்வதற்கு உரிய அம்சங்கள் இல்லாததாலும், நான் இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை.

வேதாந்தியான பி.ஆர்.ராஜம் அய்யர் தன் நாவலுக்கு, “இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா பல கஷ்டங்களை அனுபவித்து கடைசியாக நிர்மலமான ஒரு இன்ப நிலை அடைந்ததை விவரிப்பதே இந்த நவீனத்தின் முக்கிய நோக்கம்” என்று குறிக்கோள் வகுத்துக் கொண்டார். மாதவையாவோ, “இதன் உட்கிடைகளைப் பற்றி உள்ளத்தில் ஊன்றி நினைத்துப் பார்த்து முடிவான தீர்மானங்களை செய்வது நமது ஜன சமுதாய முன்னேற்றத்திற்கு இன்றியமையாததாகும். இவ்வழக்கங்களைப் பற்றி ஆழ்ந்து ஆலோசனை செய்வாராயின் என் சிரமத்துக்கு போதிய கைம்மாறு ஆகும்” என்று சீர்திருத்த நோக்கு கொண்டிருந்தார். இவர்களுக்குப் பின் கே.எஸ். வெங்கடரமணி சமுதாய நோக்கு கொண்டு விடுதலை, பொருளாதார சுபிட்சம் இவைகளை விஷயமாகக் கொண்டு எழுதினார். அநேகமாக அதே பார்வையில்தான் சங்கரராம் நாவலும். வ.ரா.வின் சுந்தரி, விதவை பிரச்சனையை எடுத்துக்கொண்டு சீர்திருத்த நோக்கு காட்டிய நாவல்.

இந்த நாவல்கள் பெரும்பாலும் தங்கள் உத்தேசங்களை அப்பட்டமாகக் கொண்டு, அப்பட்டமாகவே சித்தரிக்கப்பட்டவையும்கூட. ஆனால், இவைகளின் உத்தேசம் எப்படி எப்படியோ இருந்தாலும், இலக்கியத் தரமானவை என்று சொல்லும்படியாகவே வடிவ அமைதி, கலைத்தன்மை, வெளியீட்டுத்திறன் காட்டுபவையே. தமிழ் நாவலுக்கு அஸ்திவாரம் போட்டவை.

இந்த நாவல்களைப் பற்றி மொத்தமாகச் சொல்லத் தோன்றுவது இதுதான். குடும்ப, சமூக, சமுதாய பிரச்சனைகளே இவைகளுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது. தத்துவ, சீர்திருத்த, பொருளாதார உத்தேசங்களே அடிநாதமாக இருந்திருக்கிறது. வெளியே இருந்து வரும் அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு அந்த தூல நிகழ்ச்சிகளால் கட்டுப்படுத்தப்பட்டு, அதனால் தங்கள் செய்கைகளை உருவாக்கிச் செல்லும் போக்கை இவைகளில் காணலாம். இன்னொன்று, இவைகளின் விஷய உள்ளடக்கம் ஒரு பிறை வடிவு வாழ்க்கையை சித்தரிப்பவையே. முழு வட்ட வடிவமான வாழ்க்கைச் சித்தரிப்பு என்று சொல்ல முடியாது. வீச்சு (Range) மட்டுப்படுத்திக் கொள்ளப்பட்ட நாவல்கள்.

ஆனால் பொய்த்தேவு முழு வட்டவடிவமான சித்தரிப்பு நாவல். மேலே குறிப்பிட்ட நாவல்களைவிட கூடுதலான உத்தேசம் கொண்டிருப்பதை, எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் விஷயத்திலிருந்தும், அடக்கப்பட்டிருக்கும் விஷயத்திலிருந்தும், அடக்கப்பட்டிருக்கும் பொருளிலிருந்தும் நாம் பார்க்க முடியாது. தான் இன்னம் பூரண மனிதனாக ஆக முடியவில்லையே என்று மற்றொருவருடன் தன்னை ஒப்பிட்டு தன் மீது குறைப்பட்டுகொள்ளும் சோமு முதலியார் பாத்திரத்தை, ஒரு பூரணமான மனிதனாகவே நமக்கு சித்தரித்துக் காட்டி இருக்கிறார் நாவலாசிரியர். சோமு முதலியார் ஒரு காவிய கதாநாயகன், பொய்த்தேவு ஒரு காவிய நாவல். இதை படித்து முடிக்கிறபோது ஒரு ராமாயணத்தையோ சிலப்பதிகாரத்தையோ படித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது. காரணம் அதில் காணப்படுகிற நிறைவுதான்.

பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கை மேடு பள்ளங்களுடன் சித்தரிக்கப்படுகிறது என்பதால் மட்டும் இல்லை. ஒரு முழு வாழ்வின் மனப்போக்கை, புறமும் அகமும் அவ்வப்போதைய சூழ்நிலை பகைபுலகத்துக்கு ஏற்ப பாதிக்கப்பட்டு ஏற்படுகிற மோதல்கள், விளைவிக்கிற அறிவு, காட்டுகிற மனப்பாங்கு இவைகளையும், இவை விளைவாக ஒரு உச்சகட்ட வாழ்வில் அந்த பாத்திரம் முற்றுப்பெறுகிறதையும் நாம் உணர்கிறோம். கதாநாயகனுக்குள்ளே ஓடியவை அசுர கணங்கள். ஆனால் அவன் தெய்வ கணங்கள் என்று முடிவு கட்டி இருந்தவை அவனை வீழ்த்துகிறபோது ஒரு பெரிய வீழ்ச்சியை பார்க்கிறோம். அதே சமயம் அவன் வீழ்ந்த வினாடியே அவன் எழுந்துவிட்டதையும் பார்க்கிறோம். அரிசிக் கட்டுப்பாட்டை மீறி சிறை சென்றதும், தன் மகன் தன்னை மிஞ்சிவிட்டதும் அவருக்கு லோகாயதமான வீழ்ச்சி. கோவிலுக்கு சொத்து முழுவதையும் எழுதிவைத்துவிட்டு சோமுப்பண்டாரமாக ஆனது அவருக்கு ஆன்மீக எழுச்சி….

இந்த நாவலுக்கு விஷயமாக, பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது ஒரு லோகாயத வெறி வாழ்வு வாழ்ந்து ஆன்மீக வாழ்விலே முடிந்த ஒரு ஆத்மாவின் யாத்திரை ஆகும். ‘கமலாம்பாள் சரித்திரம்’ ஆசிரியர் பி.ஆர். ராஜம் அய்யர், தன் உத்தேசத்தை தெரிவிக்கையில், ‘”உலகத்திலே உழன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா கஷ்டங்களை அனுபவிப்பதை விவரிப்பதே இந்த நவீனத்தின் நோக்கம்,” என்கிறார். ஆனால் ‘பொய்த்தேவு’வின் நோக்கம் வேறுவிதமானது. “பேதமையில் பிறந்த ஆத்மா உண்மையான இன்பம் எது என்பதை அறியும் சக்தி இல்லாமல், எதெதையோ மதித்து, பின்சென்று உலகத்து குறுக்கோட்ட சுழல்களில் சிக்கி, தடுமாறி அநேகமாக கோடிவரை தடம் தவறிச் சென்றுவிட்டு, மெய்யுணர்த்தல் வருகிறபோது மேலே எதுவும் செய்யத் தோன்றாத நிலையில் ஓய்ந்து ஸ்தம்பித்துப் போய்விடுகிற, விரக்தி நிலையை அடைய ஏற்படுகிற, ஒரு அனுபவத்தையே இந்த நாவல் விவரிக்கிறது. ‘அடிப்படையான சில வாழ்க்கைத் தத்துவங்களை எடுத்துச் சொல்ல இன்றைய மனிதனான சோமுவின் வாழ்க்கைச் சரிதம் எனக்குப் பெரிதும் உதவிற்று” என்கிறார் க.நா.சு.

II

தாமஸ் ஹார்டி தன் ‘டெஸ்’ நாவல் முகவுரையில்,

“As flies to wanton boys are we to the Gods. They kill us for their sport,” என்று தன் நாவலுக்கு ஒரு அர்த்தம் (Significance) கொடுக்கும் ஷேக்ஸ்பியர் வரிகளை மேற்கோள் கொண்டது போல், க.நா.சுப்ரமண்யம் தன் ‘பொய்த்தேவு’ முகவுரையில், “அத்தேவர் தேவரவர் தேவர் என்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே’ என்கிற தமிழ் ஞானி மாணிக்கவாசகரின் ‘திருவாசகம்’ வரிகளை மேற்கோள் காட்டி இருக்கிறார். அவர் சொல்கிறார்:

“இன்று மனிதனுக்குத் தெய்வம் ஓர் இன்றியமையாத சாதனமாகிவிட்டது. நாத்தழும்பேற நாத்திகம் பேசுகின்றவனுக்குங்கூட ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது, தெய்வம் அவசியமாகத்தான் தோன்றுகிறது. மனிதனுக்கு ஒரு தெய்வம் திருப்தி அளிப்பதில்லை. பல தெய்வங்கள் தேவையாக இருக்கின்றன. ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு தெய்வம் தேவையாக இருக்கிறது என்று சொல்வதும் மிகை ஆகாது. இந்த விநாடியின் ஒரே தெய்வம் அடுத்த வினாடி பொய்த்து விடுகிறது. பொய்த்தேவாக ஆகிவிடுகிறது”

இதில் குறிப்பிடப்பட்டிருக்கிற மாதிரி அப்போதைக்கு அப்போது தேவைக்கு ஏற்ப பொய்த் தெய்வங்களை சிருஷ்டித்து வழிபட்டுக் கொண்டு வந்த வாழ்வுதான் சோமசுந்தர முதலியார் வாழ்வு. அவரே சொல்கிறார்:

“எனக்கென்னவோ கும்பிடணும், அர்ச்சனை செய்யணும்னோ, நாம்ப எல்லோரும் நம்ம பணப பெட்டிக்கும் பாங்கிப் புஸ்தகத்துக்கும்தான் அதெல்லாம் செய்யலாமே தவிர கோவிலுக்குப் போகக் கூடாதுன்னு தோணுது. உலகத்திலே வேறே எது ஸார் தெய்வம்? பணம் என்கிற ஒன்றுதான் தெய்வம். கண்ணாலே காண்ற தெய்வம். வேறு தெய்வம் உண்டென்று சொல்கிறவர்கள் பொய் சொல்கிறார்கள். அசடர்கள், பைத்தியக்காரர்கள், உண்மைத் தெய்வத்தை மறைப்பதற்காக பொய்த்தெய்வங்களை உண்டாக்கி பூசை வேறு செய்யத் தொடங்கி விடுகிறார்கள்”

(சோமுப் பண்டாரமாக) சாகுமுன் அவர் இன்னொரு பண்டாரத்திடம் சொல்கிறார்:

“தெய்வங்கள் முப்பத்து முக்கோடி மட்டுமில்லை. முப்பத்து முக்கோடி முப்பத்து முக்கோடியா எத்தனையோ முப்பத்து முக்கோடி தெய்வம் இருக்கு. உலகம் பொறந்த நாள் முதல் இன்னிவரையில் எவ்வளவு விநாடி உண்டோ அவ்வளவு தெய்வமும் உண்டு. இனி இருக்கப்போகிற விநாடிக்கும் விநாடிக்கொரு தெய்வம் உண்டு”

கேட்டுக் கொண்டிருந்த பண்டாரத்துக்கு இது புரியாவிட்டாலும், விவரம் தெரிய வந்த நாள் முதலான சோமசுந்தர முதலியாரின் வாழ்க்கையை, விநாடிக்கணக்கான அளவு வளர்ச்சியுடன் நாம் தொடர்ந்து பார்த்து வந்ததிலிருந்து நமக்குப் புரிகிறது. வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் மனிதனுக்குப் புதுசு. அவன் ஆசைகளும் கனவுகளும் லட்சியங்களும் விநாடிக்கு விநாடி பிறக்கின்றன, மாறுகின்றன, மறைகின்றன. எனவே, “மனிதனின் ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் உருவே பெறாத பல சிந்தனைகளுக்கும் தெய்வங்கள் என்று பெயர் தருவதே சரியான விஷயம்” என்று ஆசிரியரே இன்றைய மனித மனநிலை பற்றி ஐரானிகலாக குறிப்பிட்டிருக்கிற மாதிரி, தன் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், உருவே பெறாத சிந்தனைகளையே அவ்வப்போதைய தெய்வங்களாக வழிபட்டவர் சோமு முதலியார். நிலையான என்றைக்குமான ஒரு தெய்வம் எது என்று அவரால் நிதானிக்க முடியவில்லை. ஏன், இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் இல்லை அவருக்கு. அவருக்கு மட்டும் என்ன, இன்றைய எந்த மனிதனுக்கும்தான்.

III

chellappa4

…இந்த நாவலை உருவாக்குவதில் க.நா. சுப்ரமண்யம் மரபான கதை சொல்லும் வழியைத்தான் கடைபிடித்திருக்கிறார். அவருக்கு முந்தின நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்களான ராஜம் அய்யர், மாதவையா போல், ஒரு நிகழ்நிலை (Situation)யை எடுத்துக்கொண்டு அதிலிருந்து கதைக்களம் அமைத்ததுபோல் செய்யாமல், வேதநாயகம் பிள்ளை மாதிரி பூர்வோத்திரத்தில் ஆரம்பிக்கிறார். வேதநாயகம் பிள்ளை தன் நாவலை ‘நான்’ என்கிற சுயசரிதபாணியில் அமைக்க, க.நா.சு. ‘அவன்’ என்கிற சரித்திர பாணியில் அமைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் க.நா.சு. காவியகர்த்தாக்களான கம்பன் பாணியில் ஆரம்பித்திருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது. ஸ்தலபுராணம், அவதாரம் என்ற பூர்வோத்திர ஆரம்பமாக கதை ஆரம்பிக்கிறார்.

பழைய காவியங்களின் ஆரம்பம் போல் மேட்டுத்தெரு, அவதாரம், சாத்தனூர் எல்லைகள், காவேரிக் கரையிலிருந்து, போன்ற அத்தியாயங்களுடன் ஆரம்பமாகி ஊர்வலம், வர்ணனை, மக்கள் வாழ்வு, குடும்பம், வம்சம், நதி மகிமை இதெல்லாம விவரமாகச் சொல்லி, கதாநாயகன் வளர்பருவங்களையும் காட்டி, அவன் பால்ய லீலைகளையும் வர்ணித்து சோமுவை உருவாக்குகிறார். இந்த இடத்தில் நான் ஒன்று சொல்ல வேண்டும்.

மற்ற நாவல்களில் இடம், ஊர்ப்போக்கு, தெரு வாழ்வு, ஊர் அமைப்பு, இயற்கை வளம், மக்கள் நிலை இதெல்லாம் ஒரு பகைப்புலம் ஏற்படுத்துவதற்கான அளவுக்கு, (Setting) தேவைக்கு வேண்டிய அளவுதான் கையாளப்பட்டிருக்கும். ‘பொய்த்தேவு’ நாவலில் ஊரும் சரி, தெருவும் சரி, நதியின் ஓட்டமும் சரி, ஊர் எல்லைகளும் சரி, தெரு மனிதர்களும் சரி, ஊர் மக்களும் சரி, சித்தரிக்கப்பட்ட விதம், சோமு அந்த மண்ணுக்கு உரியவன் என்கிறதை நாம் உணர வைக்க, அவைதான் சோமுவை உருவாக்கி இருக்கின்றன, ஆக்கிக் கொண்டிருக்கின்றன என்று படவைக்க, தக்கபடி வர்ணிக்கப்பட்டு, வெறும் ஸ்தூல தகவல்களாக இல்லாமல் குணம் கொண்டவைகளாக, சோமுவை பாதிக்கிற அம்சங்களாக அவைகளைப் பார்க்கிறோம்.

அவர் சாத்தனூர் காவேரி ஆற்றின் ஒரு முழு வருஷத்திய போக்கையும் பல தோற்றங்களையும் வர்ணித்திருப்பதைப் படிக்கிறபோது, அது சோமுவின் முழு வாழ்வுப் போக்கையே, சுட்டிக்காட்டும் குறியீடாகப் படுகிறது. சோமுவின் வாழ்வு விநாடிகள் போலத்தான், காவேரி வாழ்வின் விநாடிகளும் அவ்வப்போது புதுசு புதுசாக மேடு பள்ளங்களோடு முடிவு நோக்கி ஓடிக்கொண்டிருப்பதாக உணர்வு ஏற்படுகிறது….

நாவலின் சொல்வழியும் மரபான கதை சொல்வழியாக, மூன்றாம் மனிதப் பார்வையாகவே கதைசொல்லி (narrator) போக்கிலே அமைந்திருக்கிறது. க.நா.சு. ‘அவன்’ வழியைப் பின்பற்றினாலும், நாவலைப் படித்து முடித்ததும் சோமு முதலியார் என்கிற ‘நான்’ பார்வையை உணர முடிகிறது. ஆசிரிய வாக்கு சோமு நினைப்பைத் தொடர்ந்து போவதாகவே இருக்கிறது. ஆசிரியர் நிகழ்ச்சிகளைவிட சிந்தனைகளை வைத்தே கதையை பின்பற்றுவதால் இது சிறப்பாக சாத்தியமாகி இருக்கிறது. இந்தவிதமான வழி கையாள்வால் நாவலில் சம்பாஷணைகளே மிகக் குறைவு. சோமு என்கிற சோமசுந்தர முதலியார் என்கிற சொமுப் பண்டாரம், மொத்தம் இந்த் நாவல் முழுக்க வாய்விட்டுப் பேசியது எவ்வளவு என்று பார்க்கப்போனால், அவர் குரலை நான் கேட்டதாகவே படவில்லை. நாவலை படித்து முடிக்கிறபோது, எவ்வளவு குறைவான பேச்சு, அவர் உருவம் தெரிகிறது. அவர் நினைப்புத் தெரிகிறது.. ஏன் அவர் வாழ்வே தெரிகிறது. இருந்தும் குறைந்தபட்சம் பேசி அதிகபட்சம் ஒரு பெர்ஸனாலிட்டியாக உருவாகி இருக்கிறார். வேறு எந்த தமிழ் நாவலிலும் இவ்வளவு குறைந்த பேச்சை நான் படித்ததில்லை, இதுவரையில்.

இந்த நாவல் அமைப்பு முறையில் இன்னொரு புதுமையும்கூட – எபிஸோட் என்கிறோமே, கதைக்கான சிறுசிறு நிகழ்ச்சிகள், அங்கங்கே நிலைக்களன் ஏற்படுத்தப்பட்டு கதை வளர உதவும் காட்சி சித்தரிப்பு, ஒரு இடத்தில், அதாவது சிறுவன் சோமு கொள்ளையரைப் பிடித்துக் கொடுத்த சமயம் தவிர வேறு எங்கும் கையாளப்படவில்லை. அனக்டோட் என்கிறோமே, கதா சம்பவங்கள், ஆசிரியரால் கூறப்பட்டு கதை ஏற்றலுக்கு சோமு – சோமு முதலியாரை உருவாக்குவதற்கு பயன்படுவதற்குமேல் காட்சி எழுப்பப்படவில்லை.

இந்த நாவலில் வரும் தகவல்களை, (அதாவது ஐம்பது அறுபது வயதுக் கால வாழ்நாள் சம்பவங்களை இந்த நாவலில் கண்டுள்ள தகவலின்படி) எபிஸோடிக்களாக எழுதினால் ஆயிரக்கணக்கான பக்கங்கள் தேவைப்படும். சோமு பண்டாரம் சொன்ன மாதிரி விநாடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டால், இந்த நாவல் முன் பாரதமே சின்னதாகிவிடும். எனவே, ஆசிரியர் நூதனமான சிறந்த உத்தி மூலம், கதா சம்பவ நிகழ்ச்சித் தொடர் தகவலை நமக்கு கொடுக்க வழி கண்டு பிடித்திருக்கிறார்.

சோமுவின் பிறப்பு முதல் பதினொரு வயதுவரை சோமுவின் வளர் கதையை விவரமாக சொல்லி வந்தவர், -157ம் பக்கத்தில் ‘இடைவெளி’ என்ற ஒரு பகுதி ஏற்படுத்தி, சோமுவின் முப்பது வருட வாழ்க்கையை 25 பக்கங்களில் கடந்துவிடுகிறார். அதாவது சோமு, ரங்காராவ் வீட்டில் வேலைக்கு சேர்த்தது முதல் நாற்பத்தியோராவது வயதில் மளிகைக்கடை சோமசுந்தர முதலியாராக, ஊர்ப்பிரமுகராக ஆகும் வரையில் உள்ள ஒரு காலகட்டம், காலப் வேகத்தில் கடக்கப்படுகிறது.

எந்தக் கதைப் போக்கிலும் கால இடைவெளி விட்டுத்தான் கதை நிகழ்ச்சி தொடரும். ‘இரவு தூங்கப் போனான்’ என்று முடித்துவிட்டு ‘மறுநாள் எழுந்ததும்’ என்ற ஆரம்பத்திலும் இந்த இடைவெளி இருக்கத்தானே செய்கிறது. எனவே கால அளவை, இடைவெளி அவகாசத்தை வைத்து, கதை நிகழ்ச்சி இல்லை. அறுந்த விநாடிகளுக்கு இடையேயும் அறாத பொருளின், கருத்துப் போக்கின் தன்மையை கொடுத்து, விட்டுத் தெரியாதிருக்கச் செய்து, கதையின் ஒருமைப்பாட்டை சாதித்துக் காட்டுவதில்தான் கலைஞன் திறமை இருக்கிறது.

நாவலில் இரண்டு கட்டங்களில் இந்த இடைவெளி உத்தியைக் கொண்டு மிக அதிகமான இடைவெளி இருந்தும், கதாநாயகனின் வாழ்வோட்டத்திலே இடைவெளி இருப்பதாக நமக்குப் படாமல் செய்து, இடைவெளியிடையேயும் விநாடிக்கு விநாடி நாம் கதாநாயகனை தொடர்ந்தே வந்திருப்பதாக நமக்குப் பிரமை எழச் செய்யும் மாயத்தை விளைவித்திருக்கிறார். சிந்தனையும், குறிப்புரையம் தகவலுமாக இழைத்து, கலப்படமாக இல்லாமல் கலவையாக சித்தரித்திருப்பது ஒரு நல்ல சாதனை. நாவலுக்கு, அதன் உருவத்துக்கு ஒரு நிறைவும் முழுமையும் தொனி ஏற்றி இருக்கிறது இந்த உத்தி.

IV

இந்த நாவலின் பொருளை ஒழுங்குபடுத்துவதில் க.நா.சு. உணர்ச்சி அறிவு சம்பந்தமாக காட்டி இருக்கும் நோக்கு பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டி இருக்கிறது….உணர்ச்சியை சுத்தப்படுத்திக் கொடுக்க வேண்டும் படைப்பாளி. க.நா. சுப்ரமண்யம், படைப்புக்கு உணர்ச்சி மூலப்பொருள்களில் ஒன்று, அதுக்கு உரிய இடம் உண்டு என்பதை ஒப்புக் கொள்பவர்தான். அவரது ‘பொய்த்தேவு” கதாநாயகன் உணர்ச்சிகளால் ஆனவன்தான். ஆனால் க.நா.சு. ‘எமோஷனல் ஸ்டாஸிஸ்’ என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

உணர்ச்சி, படைப்பிலே தராசு முனையில் நிறுத்தப்பட வேண்டிய பொருள். மயிரிழை பிசகினாலும் சென்டிமெண்டாலிட்டியில் கொண்டு முடிகிறது. இது கலைப்படைப்பின் தன்மையை பாழடித்து விடுகிறது. மேலும் உணர்ச்சி நெறி ஏறிய நிலையில் ஒரு பொருளின் உண்மை அர்த்தம் வெளித் தெரிவதில்லை. அங்கே அறிவு செயல்படாமல் ஸ்தம்பித்துவிடுகிறது. ஆகவே உணர்ச்சி சமனப்பட்டுவிட்ட பிறகுதான் தெளிவான சிந்தனைக்கு இடம் ஏற்படுகிறது. ஆகவே அறிவுப் பார்வையாக படைப்பை உருவாக்குவதிலேதான் படைப்பு சிலாக்கியமான அர்த்த முக்கியத்துவம் பெறுகிறது என்று கருதுபவர்.

எனவே எங்கே சோமு முதலியார் சென்டிமெண்டல் மனிதனாக மாறிவிடப் போகிறானோ, தன் எழுத்து சென்டிமெண்டலாக ஆகிவிடப் போகிறதோ என்ற முன் எச்சரிக்கையில், அவர் மற்ற நாவலாசிரியர்களைப் போல உணர்ச்சிபூர்வமான நிலையிலிருந்து படைப்புப் பார்வை கொள்வதைவிட்டு, அறிவு பூர்வமான நிலை எடுத்துக்கொண்டு நாவல் பொருளை முறைப்படுத்தி இருக்கிறார்.

பணம், பெண் ஆகிய இரண்டு பாதிப்புகள் முதலியாரை ஆட்டிவந்திருக்கிற நிலைமையில், நாவல் பூராவிலும் ஒரு இடத்திலும் உணர்ச்சி நிலை தொனிக்கும் ஒரு கட்டத்தைப் பார்க்க முடியவில்லை. நிலை வர்ணிக்கப்படவும் இல்லை. ‘கன்னிகழியாத பருவ’ சோமுவுக்கு பால் உணர்ச்சி தோன்றிய கட்டத்தில்கூட மனநிலையோ, உறவுக் காட்சியோ எழவில்லை என்றால்? அவர்கள் சந்திப்பை தன் குறிப்புரை ஆக சில வரிகளில் கூறி நகர்ந்து விடுகிறார். மேட்டுத் தெரு காவேரிக்கரை போன்ற இட வர்ணனைகளை நல்ல கற்பனையுடன் பக்கக் கணக்கில் அழகாக வர்ணிக்கத் தெரிந்த க.நா.சு. ஒரு பாராகூட மனநிலை வர்ணனைக்கு முற்படவில்லை. காரணம் அவருக்கு உணர்ச்சி மனநிலை வெளியீடு முக்கியம் இல்லை. அதன் பாதிப்புதான் முக்கியம்.

ஆரம்பம் முதல் நாவல் நெடுக, நிகழ்ச்சிகள், உறவுகள், ஆசைகள், ஆக்கங்கள், லட்சியங்கள், மோதல்கள், சந்தர்ப்பங்கள், வாய்ப்புகள், இவைகளின் விளைவாக சோமு முதலியார் எப்படி பாதிக்கப்பட்டு செயல்படுகிறார் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு, சோமு வளர்வதை, வாழ்வதை நம் முன் நடத்திக் கொண்டு செல்கிறார். சோமுவை எந்த உணர்ச்சி நிலையிலும் நிற்கிற ஒரு உணர்ச்சி புருஷனாக பார்க்க முடிவதில்லை. உணர்ச்சி நிலையில் நின்று ஒரு போராட்டத்துக்குப்பின் அப்போதைக்கு ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்து செயல்படுகிற நிதான புருஷனாகத்தான் பார்க்கிறோம். சோமு முதலியாரின் மனம் முதலில் தெரிந்து அவர் செயலைப் பின் தொடரவில்லை நாம். சோமுவின் செயலை முதலில் தெரிந்து மனதைப் பின் நோக்கித் துளாவி அறிந்து கொள்கிறோம்.

இதை ஒட்டி இன்னொரு விஷயம், உணர்ச்சியைவிட அறிவுக்கு, மன எழுச்சியைவிட சிந்தனைக்குத்தான் மனிதன் குணப்பண்பில் இடம் இருக்க வேண்டும் என்கிற ஒரு அடிப்படை தத்துவத்தை கொண்டவர் க.நா.சு. அவரே சொல்லி இருக்கிறார், “அடிப்படையான சில வாழ்க்கைத் தத்துவங்களை எடுத்துச் சொல்ல இன்றைய மனிதனான சோமுவின் வாழ்க்கை எனக்குப் பெரிதும் உதவிற்று” என்று. எனவேதான் ஒரு இன்டலக்சுவல் நிலை எடுத்துக்கொண்டு படைப்பையும் பார்க்க அவருக்குத் தோன்றியிருக்கிறது. முழு நாவலையும் சிந்தனைகளாகவே மாற்றி அமைத்திருபப்தைப் பார்க்கிறோம்; க.நா.சு.வின் சிந்தனைகளை பார்க்கிறோம், சோமு முதலியாரை கைப்பாவையாக வைத்து. இடைவேளை உத்தி இந்த சிந்தனைப் போக்கு வழி கதை நகர்த்தலை இன்னும் தீவிரப்படுத்துவதற்குத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது…

V

இந்த நாவல் நமது மரபுக்கு வளம் ஏற்றுகிற நாவலும்கூட. மேல்நாட்டு செல்வாக்கால் நமது சிந்தனைப் போக்கு திசை திருப்பப்பட்டு, தற்கால உலக நிலை பாதிப்பால், அதுவும் குழப்பப்பட்டு, பழைய ஆணிவேர் மதிப்புகள் கலகலத்துவிட்ட நிலை. புதிய மதிப்புகள் எதுவும் பரல் பிடிக்காத பயிர்நிலை. பிற மனித வாழ்வு உணர்வுகளை, அவரவர் சூழ்நிலை பாதிப்பு சிந்தனைகளை எல்லாம் நாம் படித்துவிட்டு, நமது வாழ்விலே அத்தகைய அனுபவம் ஏற்படாத நிலையில், வாய்ப்பும் இல்லாத நிலையில், நமது சிந்தனைகளை மேலே சொன்னவர்களது வழியிலே தொடரவிட்டுக்கொண்டு, இலக்கியத்திலும் அந்தவிதமான சிந்தனைகளுக்கு இடம் கொடுத்துக் கொண்டிருக்கிற இந்த நாட்களில், ‘பொய்த்தேவு’ ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது நமக்கு.

சோமு முதலியார் ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட்டோ என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். இல்லை. எக்சிஸ்டென்ஷியலிஸ்ட் என்பவன் மரபானதும் உலகப் போதுவானதுமான அடிப்படை மதிப்புகளை எல்லாம் மறுத்து, ஒவ்வொரு கணமும் தன்படியே வாழ்ந்து மனிதன் தனக்கென மதிப்புகளைத் தானே உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்று கருதுபவன். சோமு முதலியார் அப்படி அடிப்படைகளை தெரிந்து பழைய மதிப்புகளை மறுத்து, புது மதிப்புகளை ஏற்றுக் கொண்டவர் இல்லை.

அவர் பொய் மதிப்புகளை மதித்துக் கொண்டாரே தவிர தான் விரும்பும் நேரான வாழ்வுக்கான வழி என்று தீர்க்கமாக சிந்தித்து சத்தான மதிப்புகளை கொள்ளவில்லையே, தன் செய்கை மூலமும் காட்டிக் கொள்ளவில்லையே! மதிப்புகள் உண்டு என்பதையே அறியாதவர் அவர் என்றே சொல்லலாம். வாய்ப்பால் எது முதலில் பட்டதோ, அதுதான் சரி என்று ஏற்றுக்கொண்டுவிட்டார். ஒப்பிட்டுப் பார்த்து இல்லை. வெறும் லோகாயதவாதி அவர். நான் ஏற்கெனவே சொன்னதுபோல், லோகாயதத்தின் வீழ்ச்சியை, ஆன்மீக மதிப்பை வலியுறுத்துகிறது ‘பொய்த்தேவு”

நாவலில் இடைவேளையில் வருகிறது:

“வாழ்க்கையிலே சிந்திக்க வேண்டியவற்றை எல்லாம் சிந்தித்து, கூடுமான வரையில் முடிவு கட்டிவிட்டு பிறகு வாழ ஆரம்பிப்பவனே கெட்டிக்காரன். பழைய காலத்து குருகுல வாழ்க்கைக்கு இதுதான் அர்த்தம் போலும். வாழ்க்கை வழிகள் குருகுலத்தைவிட்டு வெளியேறுமுன் திடமாகிவிட வேண்டும். இந்த வழி போகலாமா, அந்த வழி போகலாமா என்று வழி நெடுகிலும் யோசித்துக் கொண்டே போகிறவன் எங்குமே போய்ச் சேர மாட்டான் என்பது நிச்சயம்”

சோமு முதலியாருக்கு சிறுவயதில், குருகுல வாசம் கிட்டாதது இருக்கட்டும்; வாழ்வே உருவாகவில்லையே; தானாக தட்டுத் தடுமாறி இதுதான் வாழ்க்கை போலிருக்கிறது என்று மற்றவர்களின் வெளித்தோற்றத்தை வைத்து முடிவுகட்டி, தான் போகிற திசையைப் பற்றிய நிச்சயம் இல்லாமல், விநாடி, விநாடியாக வழி மாறி வாழ்ந்து, எதிர்பாராத அதிர்ச்சியில் முடிந்த வாழ்வைத்தானே பார்க்கிறோம் அவரிடம்.

நன்றி எழுத்து 85, ஜனவரி 1965