ஆதவனின் புனைவுலகம்

ஆதவனின் காகித மலர்களை நான் 87ன் பிற்பகுதியில் படித்தபோது அவர் இறந்து சில மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. அதற்குமுன் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சிறுகதைகளை மட்டும் படித்திருந்தேன். அதுவரை நான் வாசித்திருந்த ஆதவனின் படைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்த்த வகையில் எந்த ஒரு சித்திரமும் அப்போது என் மனதில் உருவாகியிருக்கவில்லை. ‘ஒரு பழைய கிழவரும் ஒரு புதிய உலகமும்’ சிறுகதை மட்டும் நினைவில் நின்றிருந்தது. அதை எழுதியவருக்கு எப்படியும் 55-60 வயது இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் இறக்கும்போது அவருக்கு 42 வயதுதான் ஆகியிருந்தது என்பதை அவரது மறைவையொட்டி வெளிவந்த செய்திகளில் அறியவந்தபோது எனக்கு மிகுந்த வியப்பாக இருந்தது. ஒரு இளைஞரால் இவ்வளவு இயல்பாகவும் எளிதாகவும் முதியவர்களின் நடப்பு உலகை அவர்களின் கோணத்திலேயே கண்டு, இத்தனை அசலாக எழுத முடியுமா? காகித மலர்கள் நாவலைப் படித்து முடித்தபோது என் மனதுக்கு மிகவும் நெருங்கிய எழுத்தாளரானார் ஆதவன்.

எந்த ஒரு எழுத்தாளரின் படைப்பையும் நாம் ஏன் விரும்புகிறோம்? அவர் நம் புரிதலுக்கான புதிய வாசல்களைத் திறக்கிறார் என்பது ஒன்று. இன்னொன்று, நமக்கு மிகவும் பரிச்சயமான, நாமறிந்த உலகைக் குறித்தும் அதன் மனிதர்களைக் குறித்தும் நாம் என்ன நினைக்கிறோமோ, அதையே நம்மைவிட அழகாக, மிகச் சரியான சொற்களால் படம் பிடித்துக் காட்டுகிறார். காகித மலர்களைப் படித்தபின் எனக்கு மேற்சொன்ன இரண்டுவித உணர்வுகளும் ஒரே சமயத்தில் ஏற்பட்டன. செல்லப்பாவும் விஸ்வமும் கணேசனும் பத்ரியும் எனக்கு மிக நெருக்கமானவர்களானார்கள். அவர்களில் என்னில் பல பகுதிகளைக் கண்டேன், அவர்கள் என் வெவ்வேறு முகங்களைப் பிரதிபலித்தார்கள்.

காகித மலர்களைப் படித்தபின் மிகுந்த ஆர்வத்துடன் ஆதவனின் அனைத்து சிறுகதைத் தொகுதிகளையும் தேடித் தேடி அலைந்தேன். அவை கிடைப்பதற்கு மிகவும் அரியனவாக இருந்தன. என் தேடலின் நல்ல நாள் ஒன்றில் திருவல்லிக்கேணி கஸ்தூரி சீனிவாசன் நூலகத்தில் ஏறக்குறைய எல்லா சிறுகதைத் தொகுதிகளும் கிடைத்தன. 80களின் இறுதிகளிலும் 90களின் துவக்க ஆண்டுகளிலும் ஆதவன் என்னைத் தீவிரமாக ஆட்கொண்டிருந்தார் என்பதை இன்று உணர்கிறேன்.

நானறிந்த உலகை, என்னால் என்றுமே சொல்ல முடியாத என் உணர்வுகளை, மிக அழகாக, மிகப் பொருத்தமான சொற்களில் வேறொருவரால் இவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்த முடிந்தது எப்படி என்ற வியப்பு என்னைவிட்டு இன்னமும் அகலவில்லை.

“முதலில் இரவு வரும்” என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் ஆதவன் நம்மைத் தன் எழுத்துலகுக்கு இவ்வாறு அழைப்பார் :

“கணங்களை ரசிக்க ஒரு அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும் வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவேதான் இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும் துக்கங்களையும் ஆரோகண அவரோகணங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.”

வாழ்க்கையின் ஓட்டத்திலிருந்து சற்று விலகி அமர்ந்து வாழ்க்கையைப் பார்க்கும் கலையே ஆதவனின் புனைவுலகம். அதில் கசப்பும் கழிவிரக்கமும் வேடங்களைக் கலைக்க வேண்டும் என்ற பரிதவிப்பும் இருந்தாலும், அடிப்படையில் ஆதவன் வாழ்க்கையை, அதன் ‘ஆரோகண அவரோகணங்களை ‘ ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரசனையால், அதன் அழகுணர்வால், அவர் தன் எழுத்தைக கொண்டு வாழ்க்கைக்கு ஏற்படுத்தித் தரும் ஒழுங்கு அவரது கதைகளுக்கும் அழகு சேர்க்கிறது. “என்னுடைய ‘நானை’ இனம் கண்டு கொள்வதற்காக நான் எழுதுவதுண்டு, என்னுடைய ‘நானி’லிருந்து விலகி இளைப்பாறவும் எழுதுவதுண்டு. இந்த இளைப்பாறல் உண்மையிலிருந்து ஒளிதல் அல்ல, வாழ்வின் பரந்துபட்ட தன்மையில், அதன் விசித்திரங்களில், மீண்டும் மீண்டும் திளைக்கும் ஆர்வமேயாகும்.” என்று ஆதவன் எழுதுவதை வாசிக்கும்போது அவர் வாழ்வை எவ்வளவு தீவிரமாக நேசித்தார் என்பதை நாம் உணர முடிகிறது. அவரது எழுத்தை வாழ்க்கையின் ரசனைக் குறிப்புகளாக வாசிக்க இடமிருக்கிறது.

ஒவ்வொரு சமூக அமைப்பிலும் அதன் குடும்பங்களுக்குள்ளும் உள்ள மனிதர்களுக்கு இடையிலான உறவுகளின் நுட்பங்களையும் போதாமைகளையும், இந்த உறவுகளில் நமக்குள்ள ஆர்வத்தையும் சலிப்பையும், நாம் இங்கு வெளிப்படுத்தும் பெருந்தன்மையையும் சிறுமையையும், வெவ்வேறு உறவுகளுக்கான வேடங்களைப் பூணுவதில் நாம் கொள்ளும் களைப்பையும் அவற்றின் கலைப்புக்கான தாபத்தையும் மிக நுட்பமாக, ஒரு உளவியல் நிபுணரின் தேர்ந்த லாகவத்தோடு ஆதவன் தன் சிறுகதைகளில் சித்தரிக்கிறார்.

ஜெயமோகன் ஒரு இலக்கியவாதியின் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், “…சமூகத்தில் பரபரப்பாகப் பேசப்படும் எல்லா விஷயத்துக்கும் இப்படி மறுபக்கமும், மறுபக்கத்தின் மறுபக்கமும் உண்டு. அவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு பார்த்தால் மட்டுமே இலக்கியவாதியாக நான் பேசமுடியும்.” என்று சமீபத்தில் எழுதினார். இந்தப் பார்வையே ஆதவனின் படைப்புலகின் அடிப்படையாக இருக்கிறது. அவர் ஒருபோதும் தீர்ப்பு கூறுவதில்லை. இதைப்பற்றி புதுமைப்பித்தனின் துரோகம் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார் (இதையே அவர், காகித மலர்கள் நாவலின் இறுதியில் தானே தன்னுடன் நிகழ்த்திக் கொள்ளும் கற்பனை உரையாடலிலும் குறிப்பிடுகிறார் என்பது கவனத்துக்குரியது.):

“வாழ்வின் எந்த ஒரு பிரச்சினை அல்லது நிலைமையை எடுத்துக் கொள்ளுங்கள், அதைச் சார்ந்தும் அதை எதிர்த்தும் ஒரே சமயத்தில் என்னுள் குரல்கள் எழும்: வாதி, பிரதிவாதி, இரண்டு பேருக்கும் நான் வக்கீலாக இருப்பேன். மணமான ஒருவன் மனைவியைக் கைவிட்டு இன்னொரு பெண்ணுடன் ஓடிப் போவானேயாகில் யாரைத் தூற்ற வேண்டுமென்பது சிலருக்கு எவ்வளவு நிச்சயமாகத் தெரிகிறது! ஆனால் எனக்கு இதெல்லாம் ஒரே தடுமாற்றம் : ஒரு சமயம் அந்தக் கணவனின்பால், ஒரு சமயம் மனைவிபால், ஒரு சமயம் அந்தப் புதிய பெண்ணின்பால், என்று என் அனுதாபம் இங்குமங்கும் தாவிய வண்ணமிருக்கும். உண்மையின் பிரும்மாண்டம்- எளிய பிம்பங்களுக்கு உட்படாத அதன் வீச்சு- என்னை மிக ஆரம்பத்திலிருந்தே கவர்ந்து வந்திருப்பதை என் பழைய கதைகளைத் திரும்பிப் படிக்கும்போது நான் உணர்கிறேன். இந்தக் கதைகள் பலவற்றில் இரண்டு கதாபாத்திரங்கள் ஒரு பிரச்சினையின் அல்லது நிலையின் இரண்டு பக்கப் பிரதிநிதிகளாகி, அதன் எதிரும் புதிருமான அம்சங்களிடையே முழுமைக்காக, ஒரு பொதுவான அர்த்தத்துக்காக, வார்த்தைகளால் துழாவியபடி இருப்பார்கள்.”

இதுதான் ஒரு இலக்கியவாதியாகத் தான் செய்யக்கூடியதாக ஜெயமோகன் சொல்லும் “மறுபக்கமும், மறுபக்கத்தின் மறுபக்கமும்” காண்பதற்கான தேடல். ஆதவனின் கதைகளில் பல உணர்வுத் தளத்திலும், பல அறிவுத் தளத்திலும் படைக்கப்பட்டவை. இது பற்றியும் அவர், நான் ஒரு இரண்டு கட்சி ஆசாமி. எப்படி அறிவின் கறார்த்தன்மையும், திட்டவட்டமும் பிடித்தமோ, அதேபோல் வார்த்தைகளில் எளிதில் அடங்காத உணர்ச்சிகளின் நெளிவு சுளிவுகளும் எனக்குப் பிடித்தமானதே, என்றுதான் சொல்கிறார். காகித மலர்கள் நாவலின் அறிவுப்பூர்வமான விஸ்வமும் உணர்வே வடிவான செல்லப்பாவும் ஆதவன் இவ்வாறு சொல்வதற்கான சிறந்த காட்டுகள்.

ஆதவனின் எழுத்து குறித்த மிக முக்கியமான அவதானிப்பு, அவர் urban writing என்று சொல்லப்படும் நகர்ப்புறம் சார்ந்த எழுத்தை தமிழ் இலக்கியத்தில் ஒரு வகைமாதிரியாக உருவாக்கியவர்களில் முக்கியமான ஒரு முன்னோடி என்பதாக இருக்கும். ஆதவனின் மிகப்பெரும்பான்மையான சிறுகதைகளும் அவரது இரு நாவல்களும் பெருநகரில் வாழக்கூடிய மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே என்பதுதான் இந்த அவதானிப்பின் அடிப்படை. இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் என்பதைச் சொல்லும்போது நாம் இன்னொரு வகைமாதிரியைத் தொடுகிறோம்.

நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் கல்விப்பருவத்தின் இறுதியாண்டுகள் முதல் பொறுப்பு வரும் அடல்ட்ஹூட்டுக்கு மாறும் பருவ இளைஞர்களை ஒரு தனித்த இருப்பாகக் கண்டு அவர்களின் ஆசாபாசங்களை, கோபங்களை, நிராசைகளைப் பதிவு செய்த ஒரு முன்னோடியாகவும் ஆதவன் இருக்கிறார். ஒரு நகர்ப்புற இளைஞன் வயதுக்கு வருதலை (Coming of age) கூர்மையான அவதானிப்புடனும் நகைச்சுவையோடும் பதிவு செய்த நாவல் என் பெயர் ராமசேஷன். அதைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு ஜே.டி. சாலிங்கரின் காட்சர் இன் த ரை (Catcher in the Rye, J D Salinger) நினைவுக்கு வருகிறது.

நகர்ப்புற, மத்திய வர்க்க விடலைப் பருவ இளைஞர்களின் மிகச் சிறந்த உதாரணங்கள் என்று ‘என் பெயர் ராமசேஷன்’ ராமசேஷனையும், ‘காகித மலர்கள்’ கணேசனையும் கூறலாம். இந்த இளைஞர்கள் தங்கள் குடும்பச் சூழலுக்கும், அதன் மரபு சார்ந்த அழுத்தங்களுக்கும் எதிரான பார்வை கொண்டவர்களாகவும், அதை மீறிச்செல்லத் துடிக்கும் தீவிரமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதுவும், தாம் தம் தந்தையரின் பிரதி அல்ல என்பதை ஒவ்வொரு கணமும் நிருபிக்கத் துடிக்கும் ஆர்வமும் அவரது பல சிறுகதைகளின் இளைஞர்களின் பொது அம்சங்கள். மரபுக்கு எதிரானவர்களாக இருக்கத் துடிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின், தவிர்க்க இயலாத காரணங்களால் மரபுக்குத் திரும்ப நேர்வதும் அவரது கதைகளில் பதிவு செய்யப்படுகிறது. “கார்த்திக் மாமா” என்ற சிறுகதை இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட குமாஸ்தா வர்க்கம் ஆதவனின் கதைகளில் பெருமளவு பேசப்பட்டிருப்பதைக் காணலாம். காலனிய ஆட்சி, பல்லாயிரம் இளைஞர்களைத் தம் மரபான குடும்பச் சூழலிலிருந்தும், கிராமங்களிலிருந்தும், சிற்றூர்களிலிருந்தும் பிடுங்கி, பெருநகரங்களில் நட்டது. இவர்களின் பணியிடத்து வெறுமையும் சலிப்பும், கற்பனைக்கும் படைப்பூக்கத்துக்கும் இடம்தராத யந்திரத்தன்மையும், மரபுக்கும் நவீனத்துக்கும் இடையேயான ஊசலாட்டமும் ஆதவனால் வெகு சிறப்பாக வெளிக்கொணரப்பட்டன. இந்த வகையிலும் அவரை ஒரு முன்னோடி என்று சொல்லலாம். கணபதி சுப்ரமணியம் ஒரு கீழ்மட்ட ஊழியன், இன்னொரு திங்கட்கிழமை, ஞாயிற்றுக் கிழமையும் ஒரு பெரிய நகரமும் ஒரு இளைஞனும், கனவுக் குமிழ்கள், கருப்பு அம்பா கதை முதலான சிறுகதைகள் இதற்குச் சிறந்த உதாரணங்கள்.

இந்த வகையில் இந்திரா பார்த்தசாரதி ஆதவனுடன் ஒப்புநோக்கி சொல்லக்கூடிய இன்னொரு எழுத்தாளர். ஆனால் இ. பாவின் மிக வெளிப்படையான அரசியல் விமர்சனம் ஆதவனிடம் மிகப் பூடகமாகவும் நுட்பமாகவுமே வெளிப்படுகிறது. எமர்ஜென்சி காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட காகித மலர்களில் இந்திய அரசியலின் உயர்மட்டங்களில் ஸ்டெனோகிராபர்கள் மற்றும் அமைச்சர்களின் அந்தரங்க செயலாளர்களுக்கு இருக்கக்கூடிய அளவுக்கதிகமான செல்வாக்குக்கு எதிரான நுட்பமான விமரிசனத்தைக் கூறலாம். ஆர் கே தவன் போன்றவர்கள் அரசு நிர்வாகத்தைச் சீரழிப்பது இன்றும் தொடரும் ஒன்றாகும். அந்தரங்கக் காரியதரசிகளுக்கு அரசு நிர்வாகத்தின் உயர்மட்ட பணியிடங்களில் செயலாற்றும் அடிப்படைத் தகுதி கிடையாது என்று பொருள்பட ஆதவன் எழுதியிருப்பது கவனத்துக்குரியது.

நகர்ப்புற ஆண்-பெண் உறவுகளின் பல்வேறு கோணங்களும் ஆதவனின் கதைகளுக்கு கருப்பொருளாகியுள்ளது. அவரின், நிழல்கள், காதலொருவனைக் கைப்பிடித்து, புகைச்சல்கள், நூறாவது நாள் , யாதுமாகி நின்றாய், சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல் போன்ற பல கதைகளைச் சொல்லலாம். வயதான தம்பதியர், ஒருவரின் இழப்புக்கு இன்னொருவர் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வதைச் சித்தரிக்கும் ‘அந்தி’ சிறுகதை இவ்வகைக் கதைகளில் ஒரு மாஸ்டர்பீஸ்.

மனிதர்கள் தங்கள் உறவுகளில் மேற்கொள்ளும் பாசாங்கு, புனையும் வேடங்கள், அணியும் முகமூடிகள் ஆதவனின் படைப்புலகில் திரும்பத் திரும்பப் பேசப்படும் இன்னொரு தீமாக இருக்கிறது. நாம் ஒருவரையொருவர் உள்ளபடியே ஏற்றுக் கொள்வதில் உள்ள சிரமங்களும், நம் ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறிவிடும் வேடங்களும் அவரது பல கதைகளில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. மனிதர்களின் வெளிப்பாடுகள் எப்போதுமே சுயம் சார்ந்ததாக இருக்க வேண்டும், அது பிறருடைய ரசனைக்காகத் தைத்துக் கொள்ளப்பட்ட சட்டையாக இருக்கக்கூடாது என்ற நம்பிக்கையையும், இதன் மெய்ப்பாட்டில் உள்ள சவாலையும் ஆதவனின் பல பாத்திரங்கள் எதிர்கொள்வதைக் காணலாம். ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள், அகந்தை, முதலில் இரவு வரும், அகதிகள், புறா முதலான சிறுகதைகளை இவ்வகையில் தொகுக்கலாம். காகித மலர்கள் நாவலில், தில்லி மிருகக்காட்சிசாலையில் விஸ்வம்- பத்மினி இருவருக்குமிடையேயான உரையாடல் இந்த வகையில் ஒரு உச்சத்தைத் தொடும் கட்டம்.

ஆதவன் இன்னொரு வகையிலும் முன்னோடியாக இருக்கிறார். தொழிற்புரட்சியும் எந்திரமயமாக்கப்பட்ட நாகரிகமும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் மிகப் பாதகமான விளைவுகள் குறித்த பார்வை காகித மலர்கள் நாவலில் கணிசமான அளவில் பதிவாகியுள்ளது. நாவலின் நாயகர்களில் ஒருவனான விஸ்வம் சுற்றுச் சூழல் மாசுபடுதலைக் குறித்த ஆராய்ச்சியாளன். காகித மலர்கள் நாவல்தான் பசுமைப்புரட்சியின் எதிர்மறை பின்விளைவுகளை சுற்றுச்சூழல் அறிவியலின் தரவுகளைக் கொண்டே அழுத்தமாக விமரிசிக்கும் முதல் தமிழ் நாவல் என்று நினைக்கிறேன்.

தமிழ் இலக்கியவாதிகளில் பெரும்பாலானவர்களின் சிறுகதை உலகமும் நாவல் உலகமும் வெவ்வேறானவை. இதற்கு தி ஜானகிராமன் ஒரு சிறந்த உதாரணம். அவரது சிறுகதைகளைத் தொகுத்து வாசிக்கும்போது நாம் அங்கே மிகப் பரந்துபட்ட ஒரு கதைக்களத்தைக் காண்கிறோம். ஆனால், அவரது நாவல்கள் அனைத்திலுமே ஆண் பெண் ஈர்ப்பும் அதையொட்டிய சிக்கல்களுமே ஒரு முக்கியமான சரடாக இருப்பதை நாம் காண முடிகிறது. ஆனால் ஆதவன் அப்படியல்ல, அவரது சிறுகதை உலகமும் நாவல் உலகமும் வெவ்வேறானவையாக இருப்பதில்லை. ஒருவகையில் அவரது சிறுகதைகளின் விரிவாக்கமாகவே அவரது நாவல்கள் இருக்கின்றன என்று சொல்லலாம். காகித மலர்களில் மட்டும் மேலதிகமாக சுற்றுச் சூழல் பற்றிய பார்வையும், இந்திய அதிகாரவர்க்கத்தின் (முக்கியமாக 80கள்வரை அதன் மிக முக்கியமான அங்கங்களாக இருந்த தமிழ் பிராமணர்களின்) இயல்பைக் குறித்த ஒரு ஆழமான விமரிசனப் பார்வையும் உண்டு எனக் கூறலாம்.ஆதவனின் அங்கதம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. கருப்பு அம்பா கதை, கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் போன்றவையும் மிகச்சிறப்பாக புதுமைப்பித்தனின் துரோகம் சிறுகதையும்.(இச்சிறுகதை புதுமைப்பித்தனே எழுதியிருக்கக்கூடிய ஒன்று) இவ்வகையில் முக்கியமானவை.

ஆதவனின் மொழியும் நடையும் அவர் அதிக அளவில் விவரிக்கும் நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரின் தன்மைக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்துவதாக உள்ளது. முதல் வாசிப்பில், ஆங்கிலத்தில் யோசித்து தமிழில் எழுதுகிறாரோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும் நடை. ஆனால் நவீன தமிழ் இலக்கியத்தில் நல்ல பரிச்சயம் உண்டு என்பது சீக்கிரமே புலப்பட்டு விடுகிறது. ஆதவன் சிறந்த கட்டுரையாளராகவும் பரிமளித்திருக்கக் கூடும். அவர் எவ்வளவு கட்டுரைகள் எழுதியுள்ளார் என்ற விபரம் தெரியவில்லை. அவரின் சிறுகதைத் தொகுதிகளின் முன்னுரைகள் ஒவ்வொன்றுமே அருமையானவை, அவை ,ஒன்றாகத் தொகுக்கப்பட வேண்டிய கட்டுரைகளாகும். கட்டுரையாளராக அவர் கவனம் பெறவில்லை என்றாலும், அவர் எழுதியுள்ள மிக முக்கியமான ஒரு நீள் கட்டுரை என் மனதில் என்றும் வாழக்கூடியதாக இருக்கிறது. இன்று அநேகமாக மறக்கப்பட்டுவிட்ட அவரது ஒரே நாடகமான ‘புழுதியில் வீணை’ எனும் பாரதியைப் பற்றிய நாடகத்தின் முன்னுரைதான் அந்தக் கட்டுரை.

பாரதியைப் பற்றி ராஜாஜிக்கும் வ.ரா.வுக்கும் இடையிலான ஒரு பிரபல விவாதத்தை நினைவுபடுத்திக்கொண்டு துவங்கும் இக்கட்டுரை, பாரதியை அவரது அனைத்து பரிமாணங்களிலும் விவரிக்கும் ஒரு முழுமையான படைப்பாக இருக்கிறது. பாரதியைப் பற்றி தமிழில் இதுவரை எழுதப்பட்ட மிகச் சிறந்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்லலாம். ஆதவனின் முழுமையான சிறுகதைத் தொகுப்பும், இரண்டு நாவல்களும் உயிர்மையால் புதிய பதிப்புகளாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவரது நாடகமான ‘புழுதியில் வீணை’ ஏனோ இன்னும் மறுபதிப்பு காணவில்லை.

அண்மைக் காலத்தில் ஆதவனைப் பற்றி அவ்வளவாக எழுதப்படவில்லை என்றே தோன்றுகிறது. அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ளவைகளில் நேஷனல் புக் டிரஸ்ட்டின் “ஆதவன் சிறுகதைகள்” தொகுப்பின் முன்னுரையாக இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ளது முக்கியமான கட்டுரையாகும். ஆதவனின் மறைவையொட்டி அசோகமித்திரனும் வண்ணதாசனும் எழுதிய குறிப்புகள் மிக அழகானவை, முக்கியமானவையும்கூட. இந்த வகையில் கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்குள்ளாக வந்த ஆர். வெங்கடேஷின் “ஆதவன் வீட்டுக்குப் போயிருந்தேன்” என்ற கட்டுரை எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது.

ஆதவன் தன் 42 வயதுக்குள் எழுதியவற்றை இன்று பார்க்கும்போது, நிறையவே எழுதியிருப்பதாகத்தான் தோன்றுகிறது. அவர் மறைந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ஆதவனின் கதைக்களமான நகர்ப்புற மத்தியதர வர்க்கம் இன்னும் பல்கிப் பெருகியுள்ளது. 90களின் புதிய பொருளாதார கொள்கைகளுக்குப்பின் பெருநகரங்களின் வளர்ச்சியும் அதில் வாழும் அந்நியப்படுத்தப்பட்ட நடுத்தர மக்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. புதிய அடையாளத்துடன் காணப்படும் ஐடி இளைஞர்கள் மிக இயல்பாகவே ஆதவனின் கதை மாந்தர்கள் ஆகவேண்டியவர்கள் .ஆனால் ஆதவன் இன்று இல்லை.

90களுக்குப் பிறகான தமிழ் இலக்கியப் பரப்பில் தலித் இலக்கியம், வட்டார இலக்கியம், குலவரலாற்று நாவல்கள் போன்றவையே அதிகம் கவனம் பெற்றுள்ள நிலையில் ஆதவனின் மேற்சொன்ன கதைக்களம் பின்னுக்கு நகர்ந்து விட்டதாகத் தோன்றுகிறது. எம் கோபாலகிருஷ்ணனின் ‘மணல் கடிகையின் களமும், பி ஏ கிருஷ்ணனின் இரு நாவல்களின் எழுத்து முறையும் ஆதவனை நினைவுபடுத்துகின்றன. மற்றபடி ஆதவன் விட்டுச் சென்ற வெற்றிடம் இன்னும் நிறைக்கப்படவில்லை.

(முற்றும்)

(எம் கோபாலகிருஷ்ணனின் ‘மணல் கடிகை’ நாவலின் களம் காகித மலர்களோடு ஒப்பிடத்தக்கது. காகித மலர்களின் பின்னணியில் லைசன்ஸ் ராஜ் இருக்கிறதென்றால் எம் கோபாலகிருஷ்ணன் இதையே புதிய பொருளாதார கொள்கையின் பின்னணியில் செய்கிறார். இவ்விரு நாவல்களும் இந்திய பொருளாதார வரலாற்றின் இரு பெரும் நிலைகளைப் பேசுகின்றன; அவற்றால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை விமரிசிக்கின்றன. காகித மலர்களும் மணல் கடிகையும் இணைத்து வாசிக்கப்ப்பட வேண்டியவை.என்று தோன்றுவதுண்டு)

இந்த இதழில் வெளியாகியுள்ள ஆதவன் குறித்த பிற படைப்புகள்

புழுதியில் வீணை – http://solvanam.com/?p=21258

பெரிய வீட்டின் ஒரு சிறிய பிறைக்குள்… – ஆதவனை வாசிப்பதில் உள்ள அடிப்படைச் சிக்கல் – ஓர் உரையாடல் – http://solvanam.com/?p=21325

ஆதவனின் புனைவுலகம் – http://solvanam.com/?p=21223

ஆதவனுக்காக… – http://solvanam.com/?p=21303