வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில்

இக்கட்டுரையின் முந்தைய பகுதியை இங்கே படிக்கலாம் : ஏன் பல்லி கொன்றீரய்யா(பாகம் – 2) | தாமரை இலையும், மகா நீரொட்டா பரப்புகளும்(பாகம் – 1)

உத்திரத்தில் ஆடும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் பாட்டியின் அந்தக்கால நவரத்தின பெண்டண்ட்டில் மற்ற கற்களைக்காட்டிலும் வைடூர்யம் மட்டும் டாலடித்து ஜுவலிக்கிறதேன்? தோகை இளமயில் ஆடி வருகையில் வானில் மழைவராவிட்டாலும், தோகை நிறங்கள் அசாதாரணமாய் ஒளிருவதேன்? சாலையிலுள்ள மழைநீர்தேங்கிய குட்டைகளில் பெட்ரோல் டீஸல் ஒழுகிப் படர்ந்து, தாண்டிச்செல்கையில் நாம் பார்க்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களில் தெரிவதேன்? கணினி மென்தகட்டை வெளிச்சத்தில் அப்டி இப்டி திருப்பினால் பல நிறங்களாய் தெரிவதேன்? அநேக வண்ணத்துபூச்சியின் இறகுகள் பளபளப்பதேன்?

பதில், இரிடெஸன்ஸ். அப்படியெனில் என்ன, அதற்கும் நேனொடெக்னாலஜிக்கும் என்ன சம்பந்தம். விவரிப்போம்.

*****

பொருளின்மீது விழுந்து ஒளி பிரதிபலிப்பதால் நம் கண்ணில் அப்பொருள் தெரிகிறது. தன் மேல் விழுவதைத் தேக்கி சற்றுநேரம் வரை ஒளிரும் (ஃப்ளூரஸென்ஸ்) பொருட்கள் அல்லது தாமாகவே ஒளியுமிழும் (பாஸ்போரெஸென்ஸ்) பொருட்களும் ஒளியை நம் கண்ணில் பீய்ச்சினாலே அவை நமக்குத் தெரியும்.

அப்படித் தெரியும் பொருளின் நிறம் அப்பொருளின் ஒளியுடனான உறவாடலை வைத்து வேறுபடும். சூரிய வெண்கதிர் பல அலையகலத்திலாலான நிறமாலையின், நிறங்களின், கூட்டு. இதைப் பள்ளியில் வெண்மையான ஒளியை ப்ரிஸம் எனப்படும் முக்கோண கண்ணாடி வஸ்துவினுள் செலுத்தி திரையில் வானவில்லாய் பிரித்தெழுதிப் புரிந்துகொண்டுள்ளோம். பொருள் தன் மேல் நிகழும் வெண்ணொளியின் பல அலையகலங்களில் அமைந்த ஒளிக்கூறுகளையும் உறிஞ்சி, மிச்சத்தை பிரதிபலிக்க, அவ்வொளி என்ன அலை அகலத்தில் உள்ளதோ அந்நிறமாய் நம் கண்களுக்கு பொருள் தெரிகிறது.

தோன்றும் விதத்தினால் வேதியியல் மற்றும் இயற்பியல் வகையாய் நிறங்களை இரண்டு வகைப்படுத்தலாம். பிக்மண்ட் எனப்படும் ரசாயனப் பொருட்களால் தோன்றுவது வேதியியல் நிறம். இலை பச்சையாய் தெரிவது குளோரோஃபில், பச்சையம் எனும் பிக்மண்ட்-டினால். காரட் ஆரஞ்சுசிவப்பாய் இருப்பது கெரொட்டீன் எனும் பிக்மண்ட்-டினால். ஆனால் தமன்னா அவ்வகையில் இருப்பது சருமத்தின் மெலனின்-னால்.

பட்டர்பிரான் கோதை “கார்மேனி, செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்” என்கையிலும் வேதியியல் பிக்மண்டுகளையே அகப்புறமான உவமைகளால் குறித்து, நாராயணனை நமக்கே பறைதருகிறாள்.
இரிடெஸண்ட் நிறங்கள் இயற்பியல் வகை. வண்ணத்துபூச்சி சிறகுகளில் தெரிபவை. தமிழாக்கினாலும் என்னவென்று விளக்கவேண்டும் என்பதால் ஆங்கிலவார்த்தையிலேயே இக்கட்டுரையில் குறிப்போம். இரிடெஸன்ஸ் என்றால் ஒரு பரப்பு அல்லது பொருளின் நிறம் நாம் நோக்கும் கோணத்திற்கேற்ப வெவ்வேறாகத் தெரிவது. சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி, அதன் மீது இழையாக வாகன போக்குவரத்தினால் பெட்ரோல் டீஸல் படிந்திருப்பது, நோக்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களாய் தோன்றுவது இரிடெஸன்ஸ். கணினி மென்தகட்டை அப்படி இப்படி திருப்பினால் பரப்பில் நிறங்கள் தட்டுப்படுவதும் இரிடெஸன்ஸே.

வேதியியல் நிறத்திலிருந்து இரிடெஸண்ட் நிறத்தின் முக்கியமான வேறுபாடு, பிக்மெண்ட் போன்ற வேதியியல் வஸ்துக்கள் துணையின்றி, இரிடெஸண்ட் நிறம் பொருள், அதன் பரப்பின், வடிவியல் கட்டுமானத்திலிருந்தே தோன்றுகிறது. இயற்கையின் ஒளிவிலகல் போன்ற குணங்களின் உதவியுடன்.

இதனால் இரிடெஸன்ஸ் தடியான திடப்பொருட்களில் ஏற்படாது. அத் திடப்பொருளுக்கு பிக்மெண்டினால் என்ன நிறமோ அப்படியே நமக்குத் தெரியும். புரிந்துகொள்ள சற்று ஒளி இயற்பியல்.

படத்தில், இடப்பக்கம் ஒரு மெலிதான தகட்டளவில் இருக்கும் பரப்பின் மீது (சூரிய)ஒளிக் கற்றை விழுகிறது. கற்றை பல கதிர்களாலானது. புரிவதற்கு ஒரே ஒளிக்கதிரை படத்தில் குறித்துள்ளோம். அவ்வொளியின் ஒரு பாகம் மேல்பரப்பிலிருந்தே பிரதிபலிக்கப்படுகிறது. மிச்சம் பொருளை ஊடுருவி, மெலிதாக இருப்பதால், கீழ் பரப்பின்மிது பட்டு அதிலிருந்து பிரதிபலிக்கப்படுகிறது. இவ்விரண்டு ஒளிக்கதிர்களும் அலைகளாய் சேர்ந்து கூட்டாகவே பொருளிலிருந்து வெளியேறி, நம் கண்களுக்கு வருகிறது. சேர்கையில், ஒளிக்கதிர்களின் அலைகளிலுள்ள மேடுகள் கூடினால், கன்ஸ்ட்ரக்ட்டிவ் இண்டர்ஃபெரன்ஸ், ஒத்தாக்கிய தலையீடு நடைபெறுகிறது. ஒளியும் பளீரிடுகிறது. கண்களுக்கு ஒரு நிறம் அதிக ஜ்வலிப்புடன் தெரிகிறது. வலது படத்திலுள்ளதுபோல ஒளிக்கதிர்களின் அலைகள் மேடு-பள்ளங்கள் கூடி இரண்டும் கான்சலாகிப்போனால், வெளிவரும் ஒளி மங்கலாய், நிறமும் மங்கலாய் தெரிகிறது.

முதல் ருசியான விஷயம்: மெலிதாக இருந்தாலும், இடது வலது படங்களில் பொருள் வெவ்வேறு தடிமனில். இதனால், ஒளி சற்று அதிக தூரத்திலுள்ள கீழ்பரப்புவரை சென்று பிரதிபலிக்கையில் சற்று பின்னடைந்து, ஒத்தாகவோ எதிர்த்தோ தலையீடுகள் நடந்தாலும், வெளிவரும் ஒளி வெவ்வேறு நிறத்திலிருக்கும். அத்தோடு, ஒன்று பளீரென்றும் மற்றொன்று மங்கலாகவும். ஒளித்தலையீடு அதேபோல எக்கோணத்தில் ஒளிவிழுகிறது, ரிஃப்ராக்டிவ் இண்டெக்ஸ், ஆகியவற்றாலும் பாதிக்கப்படும்.

இரண்டாவது ருசியான விஷயம்: சூரிய ஒளிப்போன்று வெண்கதிர்களை செலுத்தினால், பொருளிலிருந்து ஒத்தாக்கிய தலையீட்டோடு பளீரென்று வெளிவரும் ஒளி ஒவ்வொரு கோணத்திலும் ஏதோ ஒரு ஒளிஅகலத்தில் மட்டுமே நிகழும். அக்கோணத்தில் பொருள் அந்த ஒளி அகலத்திற்கேற்ற நிறத்தில் மட்டுமே பளீரென்று தெரியும்.

மூன்றாவது ருசியான விஷயம்: இவ்வகை ஒளித்தலையீடு மெலிதான பரப்பிலேயே சாத்தியம். தடிமன் அதிகரிக்கையில், உள்ளே ஊடுருவும் ஒளி கீழ் பரப்புவரை சென்று பட்டு பிரதிபலிக்காது. அதற்குள் மொத்தமும் பொருளுக்குள்ளேயே ஆற்றலாய் உறிஞ்சப்பட்டுவிடும். மேல்பரப்பிலிருந்து பிரதிபலித்த ஒரு பகுதி மட்டுமே நம் கண்களுக்குத் தெரியும். நாமெல்லாம் நம் மெலனின் பிக்மெண்ட் என்னவோ, அதற்கேற்ற நிறத்தில் ஒளிருபவர்களே. தலைக்கு பின்னால் சக்கரம் சுத்துபவர்கள், தேஜஸ்வீக்கள் பௌதீக விதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.

கிரகித்துவிட்டீர்களா. இப்போது மேலே சொன்ன ருசிகரங்களையெல்லாம் கூட்டி அதிருசியான ஒரு விஷயம். மெலிதான பரப்புடைய பொருளிலும் ஏற்கனவே பிக்மெண்டுகள் இருக்குமே. இதனால், பிக்மெண்டினால் ஏற்படும் வேதியியல் நிறம் ஒன்றாகவும், மெலிதான மெல்-கீழ் பரப்புகளின் பிரதிபலிபில் ஒளித்தலையீடுகளினால ஏற்படும் இயற்பியல் இரிடெஸண்ட் நிறம் வேறாகவும் இருக்கலாம். இதனால் நம் கண்களுக்கு பொருள் இவ்விரண்டு நிறங்களின் ஒளிச்சராசரியாக தெரியும். பளீரென்றோ மங்கலாகவோ. உதாரணமாய், பிக்மண்டினால் மஞ்சள் நிறத்துடனிருக்கும் மெலிதான பரப்பின் மீது ஒளிவிழுந்து பிரதிபலிக்கையில், தடிமனினால் இரிடெஸன்ஸ் தோன்றி, நீல நிறத்திற்கான ஒளிஅகலங்களில் வெளிவருகிறதென்றால், பொருள் மஞ்சள் மற்றும் நீல நிறத்தின் கூட்டாய், “பச்சை நிறமே, பச்சை நிறமே” என்றொளிரும்.

அறிமுகத்திற்கு இது போதும்.

இதுவரையிலான சாராம்சம்: வேதியியல் நிறம் பிக்மெண்ட்டினால். இயற்பியல் இரிடெஸண்ட் நிறம் வடிவியல் கட்டமைப்பினால். ஒளித்தலையீடு நடைபெற்று இரிடெஸன்ஸ் வெளிப்பட பொருள் அல்லது பரப்பு மெலிதாக இருக்கவேண்டும். இல்லையேல் பிக்மெண்ட் நிறம் மட்டுமே வெளிப்படும். இவ்விரண்டும் நிறங்களும் கூடி ஜாலவித்தைசெய்யலாம்.

சென்னையில் ஒரு மழைக்காலத்தில் ரோட்டில் நடக்கையில், இரிடெஸன்ஸ் விளைவினாலேயே பலநிறங்களாய் மழைநீர்மீதிருக்கும் டீஸலைக் காண்கிறோம்.

வீட்டில் பாட்டி அணிந்திருக்கும் அந்தக்கால நவரத்தின பெண்டண்டின் வைடூர்யம் ஜுவலிப்பதும் இரிடெஸண்ஸ் குணத்தினாலேயே.

இரிடெஸன்ஸ் பற்றிய ஆராய்ச்சி நியூட்டன் காலத்திலெயே (பதினேழாம் நூற்றாண்டு) தொடங்கிவிட்டது. பல தர்க்கங்கள், சித்தாந்தங்கள். நியூட்டனின் சமகாலத்தியவரான ராபர்ட் பாயில் (தெர்மோடைனமிக்ஸில் தெளிவிக்கும் வாயுக்களின் விரிவாக்கத்தையும், அழுத்தத்தையும் இணைக்கும் பாயில் விதியை கண்டவர்) முதலில் புரியுமாறு இரிடெஸன்ஸை விளக்கினார். ஓப்பல் அல்லது வைடுர்யம் ஏன் ஜுவலிக்கிறது என்று சி.வி.ராமன் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதியுள்ளார்.

*****

இப்போது வண்ணத்துப்பூச்சியை அணுகுவோம்.

வண்ணத்துபூச்சியின் உடம்பு முழுவதும் சிட்டின் எனப்படும் ரசாயனம் இயற்கையிலேயே தடவப்பட்டுள்ளது. இறகோ சிட்டின்-னினால் ஆன ஜவ்வு. நேனோ கட்டமைப்புகொண்ட செதில்களிலானது. ஆடுசதை அரிக்க புதர்களில் ஊடாடி, பாலகனாய் விரல்களுக்கிடையே செடியிலிருந்து இறகைப்பிடித்து தொட்டு தூக்கி பறக்கவிடுகையில், சிறிதளவேனும் விரலில் ஒட்டிக்கொள்வது வண்ணத்துபூச்சி சிறகு இழந்த சிட்டின்.

இந்த செதில்கள், மேலே விளக்கப்படத்தில் உள்ள செவ்வகபரப்பைப்போல பல ஒன்றன் மீது ஒன்றாய் சேர்ந்து, அடுக்குகளாய் அமைந்துள்ளது. ஓடு வேய்ந்த வீட்டுக் கூரை போல, இறகு நுண் செதில்களாலனவை. வண்ணத்திபூச்சிகளின் உயிரியல் குடும்பபெயரான லெபிடோப்ட்டெரா என்றால் கிரேக்கத்தில் செதில்-இறகுடைய என்று பொருள்.

இறகின் பரப்பில் இவ்வகை மைக்ரோ செதில்கள் பல்லாயிரம் இருப்பதை ஸ்கானிங் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் வகை அதிநுண்னோக்கியில் சமீப வருடங்களில் (2000 – 2011) கண்டறிந்துள்ளனர். அதிலிருந்து தொடர்ந்து பூச்சிகளின் நிறங்களைப் பற்றிய ஆராய்ச்சியை இங்கிலாந்தின் எக்ஸிட்டர் பல்கலைகழத்தின் ஃபோட்டானிக்ஸ் இயற்பியல் துறை பேராசிரியர் வுகுஸிவிக் தலைமையில் செய்துவருகிறார்கள். ஓரிரு விளக்கப்படங்கள் தவிர, கட்டுரையின் அனைத்து வண்ணத்துப்பூச்சி மற்றும் இறகுகளின் நுண்ணோக்கிய படங்களும் அவர்களது ஆராய்ச்சி கட்டுரைகளில் இருந்தே கொடுத்துள்ளேன்.

வண்ணத்துபூச்சியின் இறகுகள் பல்லாயிரக்கணக்கான செதில்களாய் இருப்பது பறப்பதற்கு காற்றின் எதிர்விசையை கட்டுப்படுத்த உதவுகிறது. விமானத்தில் ஜன்னலில் பிராக்கு பார்க்கையில் இறகின் பின்பகுதியை கவனித்தால், அங்கும் விங்-ஃபிலாப்ஸ் எனப்படும் செதில்கள் ஒரிரண்டு இருக்கும்; தரையிறங்குகையில் எவ்வாறு குனிந்து நிமிர்கிறது என்று கவனியுங்கள்; அவ்வகை உபயோகமே பறக்கையில் வண்ணத்துப்பூச்சியின் செதில்-இறகுகளுக்கும். அடுத்ததாய் பல்வகை தட்பவெட்பத்திலும் வண்ணத்துப்பூச்சியின் உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்த இச்செதில்கள் உதவுகிறது. ஸ்கூட்டர், பைக் இவற்றின் இன்ஜினை சுற்றி வார்ப்பிரும்பு (இக்காலத்தில் அலுமினியம்) செதில்கள் இருக்குமே, அவைகளும் இவ்வாறே உஷ்ணத்தை வெளியேற்றுகிறது. இவ்விரு உபயோகத்தை கடந்து நிறத் தோற்றத்திலும் செதில்-இறகுகள் முக்கியமான பங்களிக்கிறது.

ஒரு மெலிதான பரப்பிலேயே ஒளித்தலையீட்டால் நிறங்கள் ஜுவலிக்கலாம் என்றோம். வண்ணத்துப்பூச்சியின் சிறகோ, அடுக்குகள். காற்று உறையும் இடைவெளிகளுடன் மெலிதான நாற்பதிலிருந்து நானூறு நேனொமீட்டர் அளவுகளிலான அடுக்கு பரப்புகளிளாலானது.
சிறகின் பொருள் மற்றும் காற்று இரண்டிற்கும் வெவ்வேறு ரிஃப்ராக்ட்டிவ் இண்டெக்ஸ், ஒளி விலகல் எண். ஒளி இவற்றின் வழியே ஊடுருவகையில் வெவ்வேறு விதமாய் விலகி பிறழும்.

குடவாசலில் இருந்து திருச்சேரை பெருமாளை உச்சிகால அர்ச்சனையில் தரிசிக்க நல்ல தார் ரோட்டில் ஜிவ்வென்று வாடகை சைக்கிளில் வருகையில், வளைவில் எதிரில் மொஃபெஸல் பஸ் உறுமலில் தப்பிக்க ரோட்டிலிருந்து புதைமணலில் இறக்கியதும் சைக்கிள் வேகம் சடக்கென்று குறைந்து நம்மை சீட்டிலேயே நர்த்தனமாட்டுமே. அதேபோன்ற சம்பவமே ரிஃப்ராக்ட்டிவ் இண்டெக்ஸ், ஒளி விலகல் எண், வெவ்வேறான ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு பயணிக்கையில் ஒளிக்கற்றைக்கு நிகழ்கிறது.

இப்படி இறகில் பொருள்-காற்று-பொருள்-காற்று என்ற அடுக்குகளின் வழியே ஒளி விழுந்து பிரதிபலிக்கையில், அதன் ஒத்தாக்கத்தலையீடு பல கோணங்களில் பல நிறங்களென மேம்படுகிறது. அதாவது, வண்ணத்துப்பூச்சி சிறகில் நிகழ்வது மல்ட்டி லேயர் இண்டர்ஃபெரென்ஸ், அடுக்கு ஒளித்தலையீட்டாக்கம். நிகழும் ஒளி, மேலே விளக்கிய இரிடஸென்ஸ் குணத்தினால் சிதறிப்பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொரு நிறத்திலோ அல்லது ஒரே நிறத்தின் பல ஜாஜ்வல்ய வகைகளிலோ வண்ணத்துபூச்சி தெரிகிறது.

இரிடெஸண்ட் ஜெகஜ்ஜால வர்ண வித்தைகளை வெளிப்படுத்தும் சிட்டின் தடவிய சிறகுகள் வண்ணத்துபூச்சிகளுக்கு எதிரிகளை அச்சுறுத்தவும், துணையை டாவடிக்கவும் உபயோகம்.

*****

வண்ணத்துபூச்சி இறகின் இவ்வகை அடுக்குச் செதில்களை சாதா பூதக்கண்ணாடியிலோ, எவ்வகை ஆப்ட்டிகல் மைக்ராஸ்கோப் எனப்படும் சாதா ஒளி பட்டு பிரதிபலிக்கும் நுண்ணோக்கியின் வழியே பெரிதுபடுத்திக்கண்டுவிடமுடியாது. இச்செதில்களின் வடிவியல் கட்டமைப்பு நேனோ அளவுகளில் உள்ளவை. சாதா ஒளியின் அலை அகலம் நேனோ சைஸிலோ அதைவிட சற்று அதிகமோ இருக்கும். இதனால் இவ்வொளிக் கற்றைகள் சிறகை இந்த நேனோ கட்டமைப்பை பிரித்துகாட்டமுடிகிற வகையில் ஊடுருவ முடியாமல் தோற்கும்.

பவுண்டரி லைனில் இருந்து எறிகையில் பந்து பல முறை குதித்து குதித்து ஸ்டம்பின் மீது படாமல் அதைவிட உயரமாக குதித்தபடி தாண்டிவிடுமே. பந்தை ஒளிக் கதிர் என்றும், அதன் குதித்தெழும்பும் உயரத்தை ஒளி அகலம் என்றும் பாவித்தால், அவ்வுயரத்தைவிட சிறிய ஸ்டம்ப் இருப்பதே ஒளி-பந்திற்கு தெரியாது. செதில் சிறகின் கட்டுமானத்திற்கும் ஆப்டிக்கல் நுண்ணோக்கியின் ஒளிக்கற்றைக்கும் இவ்வகை சந்திப்பே.

[படம்: யூரேனியா வண்ணத்துபூச்சி]

[படம்: யூரீநியா வண்ணத்துபூச்சியின் நேனொ இறகு-செதில்கள்; எலக்ட்ரான் நுண்ணொக்கி வழியாய்; வெள்ளை நிறத்தில் இருப்பவை]

இதனால்தான் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் உபயோகிக்கிறோம். எலக்ட்ரான் அலைகளுக்கும் 0.1 நேனொமீட்டர் அலைஅகலம். வண்ணத்துபூச்சி இறகின் செதில்கள் ஒவ்வொன்றும் 40 நேனொமீட்டர் தடிமன். குதித்தெழும் உயரம் குறைவாய் உருட்டிவிடப்பட்ட பந்து ஸ்டம்பில் நிச்சயம் பட்டு திரும்புவது போல எலக்ட்ரான் அலைகள் இந்த செதில்களில் பிரதிபலித்து அவற்றின் நேனொரூபலக்ஷ்ணங்களை புட்டு புட்டு வைக்கிறது.

யுரேநியா வகை வண்ணத்துபூச்சி சிறகில் ஒரு இடத்தில் நேனொ சைஸ்களில் இவ்வகை செதில் அடுக்குகள் காற்று இடைவெளிகளுடன் நாலைந்து இருக்குமாம். இவ்வகையில் சிறகு முழுவதும் பல்லாயிரக்கணக்கில். படத்தில் கவனியுங்கள்.

சிவன் கோவில்களில் அடுக்கு தீபாராதனை காட்டுவார்கள். இடைவெளிகளுடன் சிறு கோபுரமென சூடங்களின் ஒளி வட்டக் கீற்றுகளாய் சுழல்கையில் பரவசமாயிருக்கும். அவ்வகையில், மார்ஃபோ வகை வண்ணத்துபூச்சிகளில் நேனொ செதில்கள் அடுக்கு-தீபம் வடிவில் (மேலை நாட்டு உதாரணம், கிரிஸ்மஸ் மரத்தைப்போல).

[படம்: மார்ஃபியா வண்ணத்துபூச்சியின் நேனொ இறகு-செதில்களின் அடுக்குகள்; எலக்ட்ரான் நுண்னோக்கி வழியே]

*****

ஒளிவிலகல் எண்ணை செயற்கையாக மாற்றுவதுமூலம் இரிடெஸண்ட் நிறங்களை மாற்றமுடியும். உதாரணமாய் மேலே படத்தில் சொட்டுநீல இரிடெஸண்ட் நிறத்துடன் பறக்கும் வண்ணத்துபூச்சியின் இறகில் சற்று குறைந்த ஒளிவிலகல் எண்ணுடைய அசிட்டோன் அமிலத்தை சொட்டினால், இறகு பச்சை நிறமாய் ஒளிருவதை நிரூபித்திருக்கிறார்கள்.

இவ்வகை இயற்கை நேனோடெக்னாலஜி ஆராய்ச்சியின் தாக்கமாய் லாபில் செயற்கை ஃபோட்டானிக் படிகங்கள் உருவாக்கத்தொடங்கியுள்ளனர். நேனொ அளவுகளில் காற்று இடைவெளிகளுடன் அடுக்கடுக்காய் டிஃப்ராக்ஷன் கிரேட்டிங் செய்து இரிடெஸன்ஸை தோற்றுவிக்கிறார்கள்.

முடிக்கும்முன்…

இலக்கிய மணம் கமழ வேணம் என்று கூறி “லைட் ரீடிங்” மேட்டரான “நிறமற்ற வானவில்” (சுஜாதா கதை) என்று வைக்கப்பட்டுள்ள கட்டுரையின் தலைப்பு அஸுஷுவல் என் இலக்கிய கிண்டல் என்று நினைத்திருக்கலாம். கட்டுரையின் உள்ளடக்கத்தை கவனித்தால் தெளியும். வண்ணத்துபூச்சியின் நிறம் வேதியியல் பிக்மெண்ட் வெளிப்பாடில்லை; நீர்துளியில் ஒளிக்கதிர் எவ்வகையில் சிதறி வானவில்லாகிறதோ அவ்வகையில் தோன்றும் இரிடெஸன்ஸ்ட் நிறங்கள். வானவில் சரி, அப்ப ஏன் “நிறமற்ற” என்றால், இவ்வகை இரிடெஸண்ட் நிறங்கள் வெளிப்பட பொருள் எந்நிறத்திலும் இருக்கவேண்டாம். மெலிதான பரப்பில் சூரிய ஒளியின் தலையீட்டாக்கமே இரிடெஸன்ஸ்.
வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில் (இரிடெஸன்ஸ்), இயற்கையை, புறத்தை, நிறங்களாய் பிழிந்துவிட எத்தனிக்கும் ஓவியர்களுக்கு மிகப்பெரிய சவால் என்றே தோன்றுகிறது.

சான்றேடுகள்

– Hornyak et al., Introduction to Nanoscience, CRC press, 2008.

– Pete Vukusic and J. Roy Sambles, Photonic structures in biology, Nature, v. 424, p. 852-856, 2003.
Melissa G Meadows, Michael W Butler, Nathan I Morehouse, Lisa A Taylor, Matthew B Toomey, Kevin J McGraw and Ronald L Rutowski, Iridescence: views from many angles, J. R. Soc. Interface 2009 6, S107-S113. [ doi: 10.1098/rsif.2009.0013.focus ]
வலையில் மேலும் படிக்க
http://newton.ex.ac.uk/research/emag/butterflies/
[கட்டுரையின் வண்ணத்துபூச்சி படங்கள் அனைத்தும் வுகுஸிவிக்-கின் வலைதளம் உபயம்]