ஏன் பல்லி கொன்றீரய்யா

இக்கட்டுரையின் முந்தைய பகுதியை இங்கே படிக்கலாம் : தாமரை இலையும், மகா நீரொட்டா பரப்புகளும்

மெத்தைமடி அத்தையடி என அதன்மீது காலின் மேல் காலை மடக்கிப்போட்டு மல்லாக்க விஸ்ராந்தி தீவிரமான “வீக்கெண்டில் ஒரு உலக இலக்கியம் சமைப்போமா” யோஜனையிலிருக்கையில், விட்டத்தில் செல்லும் பல்லியை கவனித்திருக்கிறீர்களா? அதுவும் நம்மை கவனித்தபடியே “ம்க்கும், இவனாவது இலக்கியமாவது” என்றபடி தலைகீழாய் விட்டத்தில் நகரும். நாம் கவனிப்பதை அறிந்து, உற்றுப்பார்த்து ஊர்ஜிதம் செய்து, சட்டென்று டியூப்லைட் சட்டம், மின்சார ஒயரிங் குழாய் என மறைவிடத்திற்கு பின் பதுங்கும். வேறெங்காவது பார்த்துவிட்டு மீண்டும் கடைக்கண்ணால் கவனித்தால், உண்டிவில்லிருந்து தயிர்பானைக்கு புறப்பட்ட கல்லாய், சடாரென்று ஜன்னல் கதவு, திரைச்சீலை பின்புறம், என அடுத்த மறைவிடத்திற்கு பயணிக்கும். தூரத்தில் நிகழும் (பல்லிக்கு நம்மைவிட உலகம் பெரிசுதானே?) நம் கண்சுழற்றல், கை விசிறல் போன்ற சிறு அங்க அசைவுகளையே கவனித்து உணருமளவிற்கா பல்லியின் கண்களும் மூளையும் செயல்படுகிறது? எனக்கு இது நீங்கா ஆச்சர்யம்.

அதேபோல் டொக் டொக் டொக் என பல்லி ஏன் சப்தமிடுகிறது? பரிணாம பாட்டன் முப்பாட்டன் வரையறுத்த பாட்டா, செம்மொழி கடந்த நுன்மொழியா, இல்லை ஹால் சுவற்றில் பூச்சிவகையறா டின்னரில் இருக்கும் சக பல்லிக்கு பெட்ரூமிலிருந்து ”சீக்ரமா சாப்டுட்டு வந்து படு” என்று ஜஸ்ட் “மோர்ஸ் கோட்” தகவல் தொடர்பா? அப்படியென்றால் ”டொக்” என்று பவ்யமான எரிச்சலுடன் ஒரேமுறை ஹாலில் உம் கொட்டுகிற பல்லிதான் அங்கேயும் ஆணா? இல்லை எனக்குத்தெரிந்த நம்பிகள் பலர் நம்புவதைப்போல, பல்லி சப்தமிடுவதே அச்செயலுக்கு சற்றுமுன் நம் மனதில் நினைத்ததை பலிதமாக்குவதற்குதானா? இந்த வீக்கெண்டாவது வீட்ல இருக்கர பல்லியெல்லாத்தயும் ஒழிச்சுகட்டனும் என்று நினைத்துக்கொண்டாலுமா?

பள்ளி விடுமுறையின் குழந்தைகளாய் இப்படி பல்லி பற்றியே நமக்கு பல கேள்விகள் இருக்கிறது. ஆதாரமான விந்தை ஒன்றிற்கு மட்டும் விடை இக்கட்டுரையில் காண விழைவோம்.
சுவற்றில் பல்லி எப்படி ஒட்டுகிறது?

போடாங்க சுவரொட்டி பயலே… என்று “சவடால்” வைத்தியை தில்லானா மோகனாம்பாள் காதையில் தவில் “கலியுகநந்தி” உருத்திராக்கண்ணன் வைவார் (அடுத்தவர் “கோடையிடி” சக்திவேல் – வாவ், நம் மரபில்தான் எத்துணை வசீகரப் பெயர்கள்). சுவத்துல பல்லினா ஒட்டும் என்று வைத்தி சுயதெளிவுபெற்றபடி அகல்வார். கட்டுரையை இப்படித்தான் தொடங்கியிருந்தேன். சென்ற இதழுக்கு முடித்து அனுப்பமுடியவில்லை. அதற்குள் கோலப்பன் மோகனாம்பா காதையை வைத்தே தன் தவில் கட்டுரையில் ”வார் பிடித்துவிட்டார்”.

எனிவே, சுவற்றில் பல்லி ஒட்டுவதை கி.மு. நான்காம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் குறிப்பிட்டுள்ளாராம். அது சரி, அவருக்கு முன்னரும்தான் இதைக் தினநிகழ்வாய் கண்டவர் இருந்திருப்பர். ஏன், எதிர் கி.மு. சுவற்றிலிருக்கும் கி.மு. கௌளியே அறிந்திருக்கலாம்.

பல்லி ஏன் சுவற்றில் ஒட்டிக்கொள்கிறது என்பதை இதுகாரும் சுமார் 175 வருடங்களாக பலவிதமாய் ஆராய்ந்திருக்கிறார்கள். ஏழு வகையான நிரூபணவாத (அறிவியல்) விளக்கங்களை பரிசீலித்திருக்கிறார்கள். முக்கால்வாசி அம்பேல். இன்றளவில் நேனொடெக் விளக்கம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. பல்லியும்தான்.

விவரிப்போம்.

முதலில் கால்களில் ஏற்படலாம் எனும்வகையில் சாதா கோந்து விசை இருக்கிறதா என்று பரிசோதனைகள். தூக்க கலக்கத்தில் விசையுடன் பச்சக் என்று அமுக்கியதும் டியூபிலிருந்து பற்பசை பிதுங்கிவழியுமே, அதுபோல பல்லி கால்களை சுவற்றில் விசையுடன் அழுத்துவதால் ஏதாவது பிசின் வெளிப்பட்டு சுவற்றுடன் கால்களை ஒட்டவைக்கிறதோ என்று தேடியதில் அப்படியொன்றும் ஒட்டவில்லை.

சரி உறிஞ்சு விசை ஏதாவது செயல்படுகிறதோ என்று தேடினார்கள். குளிர்பான ஸ்ட்ராவை ஒருமுனையில் வாயால் உறிஞ்சி உள்ளிருக்கும் காற்றை வெளியேற்றியபடி, கீழ்முனையில் பேப்பர் துண்டுகளை வைத்தால் ஒட்டிக்கொள்ளுமே. வேதியியல் லாபில் இப்படித்தானே உறிஞ்சி விரலால் மேல்முனையை அழுத்தி திரவத்தை பிப்பெட் குழாயில் சேமிப்போம். கவனித்ததில், அதுபோல பல்லியின் கால்களில் சிறுசிறு உறிஞ்சுகுழாய்கள் ஏதுமில்லை.

இடைச்சொருகல்: இங்கு கவனித்தால், முதலில் செய்த கோந்து பரிசோதனை நேரடியாக கண்களால் காண்பது. அடுத்ததற்கு பூதக்கண்ணாடி வேண்டும். விஞ்ஞானச் சாதனங்கள் வளர வளர, ஆராயும் விதமும் நம் நேரடிப்புலன்களைத் தாண்டிய உணர்தலையும் உருவாக்குகிறோம்.

கவிழ்ந்த ரப்பர் கோப்பைகளை பொருத்தி சுவற்றுடன் அழுத்துகையில் இடையிருக்கும் காற்று வெளியேறி, வெற்றிடமாகி சுற்றியிருக்கும் காற்றழுத்தத்தினால் சுவற்றுடன் ஒட்டிக்கொள்வதை இன்று சட்டை, சாவி மாட்டும் சுவர்கொக்கிகளில் உபயோகிக்கிறோம். இதுபோல வெற்றிட உற்பத்திசாதனங்கள் நுண்னோக்கியில் பல்லியின் கால்களில் தட்டுப்படவில்லை. உராய்வு விசை கொண்டு, வெல்க்ரோ போல பல்லியின் காலிலுள்ள நார்கள் சிக்கலாய் பிணைந்து சுவற்றை பிடித்துக்கொள்கிறதோ என்று சோதித்தார்கள். அதுவுமில்லை.

மொழுமொழுவென்று தவில் குச்சி போலிருக்கும் பொருளை வைத்து நன்றாக தேய்க்கப்பட்ட பட்டுப்புடவையின் மீது சிறு பேப்பர் துண்டுகள் ஒட்டிக்கொள்வதைப்போல, ஓரிடத்திலேயே ஏற்படக்கூடிய ஸ்டாட்டிக் மின்சாரம், நகரா மின்விசை, பல்லியின் கால்களில் தோன்றி சுவற்றுடன் ஒட்டவைக்கிறதோ என்று தேடியதில், ஷாக் வாங்கி செத்துப்போனது அச்சோதனை.

இவ்வகை சோதனைத்தேடல்கள், விஞ்ஞான பெருமூச்சுகள், 1969இற்குள் அடங்கிவிட்டது. இதில் தெரிந்த மற்றொரு விஷயம், நாம் கண்ணால் பார்க்கக்கூடிய சைஸை மெகா (தமிழில் மஹா அல்லது மகா) என்றால், அந்த மெகா பரிமாணத்தில் ஏற்படக்கூடிய விசைகள் (கோந்து) பல்லியின் கால்களின் ஒட்டுதலை ஏற்படுத்தவில்லை. அதேபோல, அடுத்த சிறு சைஸ்களான மீஸோ (மில்லிமீட்டர் சைஸ் என்று வைத்துக்கொள்ளலாம்) மற்றும் மைக்ரோ பரிமாணங்களிலும் விளக்கம் கிடைக்கவில்லை.
இதனால்தான் சரியான அல்லது மேம்பட்ட விளக்கங்களுக்காக அதற்கு அடுத்த நுண்பரிமாணமான நேனொ வரை செல்கிறோம். படிப்படியாக பெரிதுபடுத்தும்திறன் உன்னதமடைந்துள்ள நுண்னோக்கிகள் கொண்டு (இன்றைய டார்லிங், ஸ்கானிங்/டன்னலிங் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்), நேனொ சைஸில் பல்லியின் கால்களை பிடித்துள்ளோம்.

சரியான விளக்கங்களை கொடுக்க இயலாத, இதுவரை குறிப்பிட்டிருக்கும் சித்தாந்தங்களைக் கடந்து, நேனொ சைஸ்களிலும் ஏற்படக்கூடிய, மிஞ்சிய விசைகள், சித்தாந்தங்கள், இரண்டு. கேப்பிலரி விசை மற்றும் வாண்டர்வால் விசைகள்.

கேப்பிலரி விசை என்பது மெலிதான தாவரத்தண்டில் அல்லது நிகரான குழாய்களில் திரவம் ஏறும் விசை; குவளை ஜலத்தில் ஸ்ட்ராவை முக்கினால் தன்னிச்சையாக ஜலம் ஏறுவது உதாஹரணம். ஒருவேளை பல்லியின் காலில் மெலிதான தண்டுகளிருந்து அவற்றில் திரவம் சுரந்து வேற்றிண ஒட்டுதலில் (அட்ஹெஷன்) சுவற்றுடன் பிணைக்கிறதோ. மகா நீரொட்டா பரப்பான தாமரை இலைகளில் நீர் ஒட்டாததை சென்ற கட்டுரையில் பார்த்தோம். இங்கு பல்லியின் காலில் நீர் சுரந்து சுவற்றுடன் ஒட்டுகிறதோ?

அடுத்து வாண்டர்வால் விசைகள். நடுசெண்டரில் நியூட்ரான் மற்றும் புரோட்டான்கள் சுற்றிலும் எலக்ட்ரான்கள் என்கிற அணு மாதிரி (மாடல்), அத்தனைக்கும் சரியில்லையெனினும், இன்றளவில் நமக்கு பரிச்சயம். ஒரு அணுவின் பாஸிட்டிவ் சார்ஜ் புரோட்டான்கள் அருகிலிருக்கும் அணுவின் எலக்ட்ரான்களையும் (நெகட்டிவ் சார்ஜ் என்பதால்) சற்று ஈர்க்கும். ஆனால் மொத்தமாக தன் அணுவுடன் சேர்த்துக்கொள்ளாது; ஒரே வகையான சார்ஜ் என்பதால், புதிதாக அருகில் வரமுனையும் எலக்ட்ரான்களை, ஒரளவு அருகாமைக்கு பின், ஏற்கனவே சுற்றிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான்கள், எதிர் விசைகொடுத்து, நிறுத்திவிடும். மாற்றான் தோட்டத்து மல்லிகை மணப்பது போல. முகரத்தான் முடியும். எடுத்து சூட முடியாது. ”மாற்றான்” டின் கட்டிவிடுவார். அணுக்கள், மாலிக்யூல் லெவலில் பக்கத்துவீட்டை எட்டிப்பார்க்கையில், இது வாண்டர்வால் விசை.

இதேபோல பல அணுக்களால் ஆன மாலிக்யூல்களிலும் வாண்டர்வால் விசை ஏற்படலாம். அதற்கு மாலிக்யூலே ஒருபக்கம் பாஸிட்டிவ் எதிர்பக்கம் நெகட்டிவ் என்றிருக்கவேண்டும் (டைபோல் – இரட்டைதுருவங்கள்? — என்பார்கள்). இதனால் மாலிக்யூல் ஒருபக்கமாய் பூர்த்தியாகாத விசைபெற்றிருக்கும். ஆனால், மாலிக்யூல்களிலும் வாண்டர்வால் விசை ஈர்ப்பு வீரியம் வெளிப்பட, இரு மாலிக்யூல்கள் அட்லீஸ்ட் ஒரிரு நேனொமீட்டர் அருகாமையில் இருக்கவேண்டும்.
இப்படி காப்பிலரி, வாண்டர்வால் என்று மிச்சமிருக்கும் இரண்டே வகையான விசையில் எது பல்லியை சுவற்றுடன் ஒட்டவைக்கிறது…

***

…என்று கடந்த பதினைந்து வருடங்களாக, பிரதானமாக அமேரிக்க விஞ்ஞானிகள், தங்களை ”பல்லி குழு” என்று பெயர்சூட்டி, ஒரேகன் மாநில லூயி கிளார்க் காலேஜின் பேராசிரியர் கெல்லார் ஔட்டம் தலைமையில் ஆராய்ந்துவருகிறார்கள்.

பத்து வருட ஆராய்ச்சியில் பல பல்லிகளை சந்தித்து, க்ளவுஸ் அணிந்து கைகுலுக்கி, நுண்னோக்கி, சிந்தித்து, பல்லியின் கால் படம் மட்டும் வரைந்து, நுண்ணோக்கியில் தெரியும் பல பாகங்களை குறித்து… என்.சி.வசந்தகோகிலம் இன்றிருந்து இப்பல்லி ஆராய்ச்சியை கேள்விப்பட்டிருந்தால், தான் ரங்கனாதர் மேல் பாடியதை சற்றே திருத்தி, “ஏன் பல்லி கொன்றீரய்யா” என்று மோஹனத்தில் பொருமியிருப்பார்.

என்ன ஆராய்ச்சி முடிவுகள்?

முதலில் கேப்பிலரியா வாண்டர்வாலா, கேள்விக்கு விடை. ஏற்கனவே தாமரை இலையும் மகா நீரொட்டா பரப்புகளூம் கட்டுரையில் நீர் ஒட்டிக்கொள்ளாத பரப்புகளின் தாத்பர்யம் கேட்டோம். அவ்வகை பரப்பு ஒன்றிலும், சாதா நீரொட்டும் பரப்பு ஒன்றிலும், பல்லியை ஓடவிட்டனர். ஒருவேளை காப்பிலரி விசையினால் பல்லியின் கால் பரப்புடன் ஒட்டிக்கொள்கிறதென்றால், அவை நீரொட்டும் பரப்பில் நன்றாக ஒட்டியும், நீரொட்டா பரப்பில், பல்லியின் காலில் நீர்சுரந்தாலும், வழுக்கி, பல்லி நகரமுடியாமல் செய்துவிடலாம். இந்தப் பரிசோதனையில் பல்லி பாரபட்சமின்றி இரண்டு வகையான பரப்புகளிலும் லகுவில் சம வேகத்தில் ஓடியது.

அதாவது, நீர்கொண்டு செயல்படும் கேப்பிலரி விசை மட்டுமே பல்லியின் கால்களை சுவற்றில் ஒட்டவைக்கவில்லை என்பது ஓரளவு தெளிவாகியது.
அப்போ வாண்டர்வாலா?

***

நுண்னோக்கியில் காணும் உலகம், நேரிடையாக பார்க்கும் உலகத்துடன் சிலவேளை ஒத்துப்போகும். கண்ணோடு காண்பதை கவனிக்கையில், ஸ்பரிசிக்கையில், சொரசொர மற்றும் வழவழ என்றிருக்கும் பரப்புகள், மைக்ராஸ்கோப்பால் காண்கையில் அனைத்துமே மேடுபள்ளங்களாலானவையே என்றுணர்த்தும். சொரசொர என்றால் மலைக்குன்றுகள், இடையே பள்ளத்தாக்குகள் என, மேற்குத்தொடர்ச்சி மலைகளாய், நேனொ குறிஞ்சி நிலமென விரியும். வழவழ என்றால் சமதளங்களின் ஏற்ற இறக்கங்கள், ஹைவேக்களில் ஆங்காங்கே குண்டு குழிகள் எனச் சிரிக்கும். நேனொ நெய்தல் எனப் புரியும்.

பரப்பை பாலிஷ் போட்டு சொரசொர வில் இருந்து வழவழ வாக்குகிறோம் என்றால், நுண்னோக்கிப் பார்வையில் குறிஞ்சியிலிருந்து நெய்தலாக்க முனைகிறோம்.

பல்லியின் கால்களின் பரப்பு, ஒன்றிற்குள் ஒன்றாய் பல அடுக்குகளாலானது. நுண்ணோக்கி வழியே கவனிக்கையில், பரப்பு முதலில் செதில்களாய் தெரிகிறது. இந்த மைக்ரோ சைஸ் செதில்கள் ஒவ்வொன்றுமே, ஸிட்டே எனப்படும் நேனொ சைஸ் குஞ்சங்களால் ஆனவை. பல்தேய்க்கும் ப்ரஷ்ஷில் கற்றை கற்றையாக நைலான் குஞ்சங்கள் இருக்குமே அதுபோல. ஆனால், பல்லியின் கால்களில் இக்குஞ்சங்கள் மில்லியன் கணக்கில். நுண்னோக்கியில், நேனொ மருதம்.

இயற்கையின் நேனொடெக் ஒருவகையில் தமிழ் மரபின் தொடர்சியே. ஆராய்பவர்தான் அநேகமாய் தமிழர் இல்லை.

ஏற்கனவே தாமரை இலை கட்டுரையில் பார்த்தோம். என்னத்தான் வழுவழு மகா நீரொட்டா பரப்பு என்றாலும், நேனொ அளவுகளில் சற்று சொரசொரவே. நேனொ இண்டு இடுக்குகள் இருக்கும். பல்லியின் ஸிட்டே குஞ்சங்கள் எப்பரப்பாகினும் அதன் நேனொ இடுக்குகளில் புகுந்து பிடித்துக்கொள்கிறது. நேரிடையாக நம் கைவிரல் போல பிடிப்பதில்லை. இடுக்குகளில் ஊடுருவி மாட்டிக்கொள்கிறது. பல்லி சுவற்றில் ஒரு இடத்தில் பிடித்துகொள்ள, முதலில் தன் காலை அவ்விடத்தில் வைத்து சற்று அழுத்தும்; ஸிட்டே குஞ்சங்கள் சுவர்பரப்பின் நேனொ இடுக்குகளில் ஊடுருவும். பிறகு பல்லி காலை சற்றே பின்னோக்கி, வெளியே, இழுத்துக்கொள்கிறது. இதனால் நேனொ இடுக்குகளில் ஸிட்டே குஞ்சங்கள் மாட்டிக்கொண்ட அவ்விடத்தில் பல்லி சுவற்றில் “தொங்குகிறது”.

சரி, வெறுமனே ஒரு பரப்பின் நேனொ இடுக்குகளில் ஸிட்டே குஞ்சங்களை சொருகிக்கொண்டால் போதுமா, பிடிப்பு வேண்டாமா என்றால், அங்குதான் நம்ம வாண்டர்வால் விசை செயல்படுகிறது.
இவ்விசையினால் ஈர்க்கப்பட இரு பரப்புகள் இரண்டு நேனொமீட்டர் அருகில் வரவேண்டும். சாதாரண இருபரப்புகள், என்னத்தான் கண்ணாடி போல் வழவழ என்றாலும், பரப்பின் மேடுபள்ளங்களே இரண்டு நேனொமீட்டருக்கும் அதிகமாகவே இருக்கும். இதனால், ஒன்றன்மீது ஒன்று வைக்கப்பட்டாலும் இரு பரப்புகள் இரண்டு நேனொமீட்டரைக்காட்டிலும் அதிக இடைவெளியுடன் விலகியே சேர்ந்திருக்கும். வாண்டர்வால் விசை செயல்பட்டு பரப்புகளை ஈர்த்து ஓன்றுசேர்க்காது.

இங்குதான் பல்லியின் கால் நேனொ ஸிட்டே குஞ்சங்கள் உதவுகிறது. நுண்னோக்கியில் மேடுபள்ளமாக தெரியும் எவ்வகை பரப்பிலும், அதிலுள்ள பள்ள இடுக்குகளில் பல்லியின் கால்களிலுள்ள நேனொ ஸிட்டே குஞ்சங்கள் நுழைந்து, பல்லியின் கால்பரப்பை, அது உட்கார்ந்திருக்கும் பரப்பிற்கு மிகஅருகில் இட்டுச்செல்கிறது. இரண்டு நேனொமீட்டருக்கும் அருகாமையில். இதனால், வாண்டர்வால் விசைகள் இரு பரப்புகளிலிருக்கும் மாலிக்யூல்களிடையே செயல்பட்டு, பல்லியை பரப்போடு பிடித்துக்கொள்கிறது.
ஓகே. எப்படி நகர்வது? சுவற்றில் பிடித்துக்கொண்டுள்ள அவ்விடத்தை விட்டு நகர, பல்லி காலை ஒரு கோணத்தில் மேல்புறமாக விரிக்கிறது. மேஜையின்மீதுள்ள ஒரு ஓட்டையில்/இடுக்கில் விரலை மடக்கி மாட்டிக்கொள்கிறொம் என்று வைத்துக்கொள்ளுங்கள். விடுபடுவதற்கு, விரலை எடுக்காமல், கையையே சற்று மேற்புரம் தூக்கினால், மடங்கிய விரல் நெட்டுகுத்தாகி ஓட்டைக்குள்லிருந்து எடுப்பது சுலபமாகிவிடும், இல்லையா. இதுபோலத்தான், நேனொ ஸிட்டே குஞ்சங்கள் சுவர் பரப்பின் இடுக்குகளிலிருந்து எளிதில் விடுபட்டு, சுவர் பரப்பின் வாண்டர்வால் விசையைக்கடந்து, கால் ஃப்ரீ. அடுத்த அடி வைக்கிறது. இந்த ஒட்டி-விரித்து-ஒட்டி சங்கிலி ஓட்டமே பல்லியை எப்பரப்பிலும், எக்கோணத்திலும், நகரச்செய்கிறது.

கேக்கவே ரொம்ப கஸ்டமாக்கீதே என்றால், ஒரு நோஞ்சான் பல்லியால் ஒரே காலிலுள்ள ஸிட்டே குஞ்சங்களின் பிடிப்பைக்கொண்டே தன் முழு கனத்தையும் தாங்கித் தொங்கமுடியுமாம். நகர்கையில், நிமிடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறை கால்களை ஒரு பரப்பில் ஒட்டி, பிரிக்கமுடியுமாம். கண்ணாடி பரப்பிலேயே வேகமாய் நொடிக்கு ஒரு மீட்டர் வேகத்தில் பயணிக்கும். தலைகீழாய்.

***

அடுத்ததாய், அறிவியல் புத்திக்கே உதிக்கும் மற்றொரு மேட்டரை பல்லிக்கூடத்தில் பரிசோதித்துள்ளனர்.

நாற்காலியின் கைப்பிடிமேல் முழங்கை இரண்டையும் இருத்தி வணக்கம்செய்வதுபோல் குவித்த கைகளின் ஆள்காட்டிவிரல்களை உதட்டுக்கு கீழே பொருத்தியபடி இசைக்கச்சேரியை, மாநாட்டு உரையை கண்மூடி (அயர்ந்து) ரசிக்கையில், அரசியல் திரை பிரமுகர்கள் புழங்கும் கல்யாண ரிசெப்ஷன் வரவேற்பில், திறந்த ஜீப்பில் ஒரேமுறை வார்ட்டு பக்கமாய் ஓட்டு கேட்கப்போகையில், இப்படி பல தருணங்களில் பலரது உள்ளங்கை இரண்டையும் கோந்தில் முக்கி சேர்த்துவிட்டனரோ என்று தோன்றும்.
இதேபோல், பல்லியின் இரண்டு காலையும் சேர்த்துவைத்தால் ஒட்டிக்கொள்ளுமா? இரண்டு நேனொ ஸிட்டே மருதங்களை சேர்த்தால் நேனொ மாமருதமாகுமா?

“என் இனிய தமிழ் மக்களே” என்றுரைத்தபடி விஞ்ஞானிகள் பல்லியின் இரண்டு கால்களையும் சேர்த்து “பல்லி வணக்கம்” செய்துபார்த்துள்ளனர். மனிதர்களின் கோந்துகையும் பல்லியின் கால்களும் வெவ்வேறு. கால்கள் ஒட்டிக்கொள்ளவில்லை.

ஒரு காலில் இருக்கும் நேனொ இடுக்குகள் அடுத்த காலில் இருக்கும் நேனொ இடுக்கும் ஒரே சைஸ் என்பதால் ஒன்றுக்குள் ஒன்று பிடித்துக்கொள்லுமளவிற்கு பரவலாய் மாட்டிக்கொள்ளவில்லை. சேர்க்கும் விசையை அகற்றியதும் கால்கள் தன்னால் பிரிந்துவிட்டது. நேனொவும் நேனொவும் சேர்வதற்கு நோநோ. பல்லி வணங்காமுடி என்பது புரிந்தது.

நேனோ ஸிட்டே குஞ்சங்கள் இருப்பதால்தானே இப்படி உதார் உடுமலை கணக்கா சலாம் வைக்க மறுக்குது என்று கடுப்பாகிப்போய் விஞ்ஞானிகள் நம்பியார் ஸ்டைலில் “ஏய் மொட்ட, மல்லாக்க படுக்கவச்சு கட்றா அந்த பல்லிய, கொண்டுவாடா அந்த ஸெரமிக் பெயிண்ட்ட, கொட்டுங்கடா எனக்கு சலாம் வெக்காத அந்தக் கால்மேல” என்று அடுத்த பரிசோதனையாய் பல்லியின் கால்களின் மீது ஸெரமிக் துகள்களாலான புழுதி பெயிண்ட் அடித்து, பிறகு சுவற்றில் ஓடவிட்டுப்பார்த்தனர்.
முதலில் சற்று தடுமாறி, பிடிப்பேதுமில்லாமல், வழுக்கி, தொபுகடீர். நம்பியார் விஞ்ஞானி இல்லாத மூலிகையை கைகளால் கசக்கியபடி, “ஹஹ்ஹஹ்ஹா, ஏ, கௌரி, சே, கௌளி, என்னிடமே உன் வாலாட்டுன, இப்பொ உன் வாழ்க்கைப்பயணத்துலயே வழுக்கிட்டே…

வழுக்கியபடி சிறிதுநேரம் பரப்பின்மீது ஓடியதும், ஆச்சர்யம். காலின்மீது அடித்திருந்த பெயிண்ட் உதிர்ந்து, பரப்பின்மீது ஒட்டிக்கொண்டது. பல்லி கால் க்ளீன். மீண்டும் முன்போல நொடிக்கு ஒரு மீட்டர் வேகத்தில் ஓடிவிட்டது.

விளக்குவோம். பெயிண்டடித்த பல்லியின் காலை நுண்னொக்கியில் நேனொ சைஸில் பார்த்தால், பெயிண்ட் மாலிக்யூல் பல்லியின் கால் குஞ்சங்கள் மற்றும் அது உட்கார்ந்திருக்கும் பரப்பின் மாலிக்யூல்களுக்கு இடையே இருக்கும் இல்லையா. பல்லியின் காலிலுள்ள நேனொ சைஸ் ஸிட்டே குஞ்சங்களைக் காட்டிலும் பெயிண்டில் உள்ள மாலிக்யூல்கள் பெரிசு. இவற்றிற்கும் குஞ்சங்களுக்கும் இடையே ஏற்படும் வாண்டர்வால் விசையைவிட, இவற்றிற்கும் சுவர்பரப்பின் மாலிக்யூல்களுக்கும் இடையே தோன்றும் வாண்டர்வால் விசை அதிகம். அதனால் சிலநாழிகைகளில் கால்களிலிருந்து உதிர்ந்து பெயிண்ட் மாலிக்யூல்கள் சுவர்பரப்புடன் ஒட்டுகிறது. பல்லி பழையபடி இந்த பெயிண்ட் ஒட்டிய சுவர்பரப்பின் மீது, முன்பு விளக்கியது போல, நேனொ ஸிட்டே ஒட்டு-பிரி-ஒட்டு சங்கிலி என பயணிக்கிறது.

இதிலிருந்து பல்லி காலும் தூசிதும்மட்டை அண்டாத “சூப்பர் க்ளீன்” பரப்பு என்பது விளங்கும். சென்ற கட்டுரையில் பார்த்தபடி, தாமரை இலை மகா நீரொட்டா பரப்பாய் செயல்பட்டு தூசியை அண்டவிடவில்லை (வழிந்தோடும் நீர், தூசியையும் உருட்டித்தள்ளிகொண்டு போய்விடுகிறது). இங்கு பல்லியின் கால்கள் வேறுவிதமாய் (வாண்டர்வால் விசை விகிதங்களால்) ஓடுகையிலேயே தூசியை அகற்றிக்கொள்கிறது.

***

இன்னமும் எழுதுவதற்கு பல்லிப் பாடம் நிறைய இருக்கிறது. கட்டுரை நீண்டுவிட்டது. ஒரிரு அமர்வில் வாசிக்க அலுத்துவிடலாம். போதும். “இயற்கையை அறிதல்” என்கிற உன்னதநோக்கிலிருந்து சற்று இறங்கி, இவ்வாராய்ச்சியால் மனிதனுக்கான உடனடி உபயோகம் என்ன என்று சுருக்கிவரைந்து முடித்துவிடுவோம்.

சுவரில் லகுவாய் ஒட்டுவதற்கு பல்லியின் நேனொ குஞ்சங்களின் பங்கை கண்டுகொண்டதும், அறிவியலாளர்கள் இதன் நீட்சியாய் இதேவகையில் ஸின்த்தெட்டிக் நேனொநார்களை ஓர் பரப்பிலிட்டு அது வேறு பரப்புடன் ஒட்டுகிறதா என்று பரிசோதித்து வெற்றிகண்டுள்ளனர். இயற்கையின் நேனோடெக் நீட்சியாய் வேதியலற்ற முதல் செயற்கை நேனொடெக்னாலஜி கோந்து. இப்போது “பல்லி கோந்து” விற்கும் கடை விரித்துள்ளனர். வாங்கி, தொகுதிப்பக்கம் போகுமுன் வணக்கமிடும் இரு உள்ளங்கைகளில் தடவிவிடலாம். விமான பணிப்பெண்களுக்கும் பரிந்துரைக்கலாம்.
பல்லியின் ஒட்டுறவு புரிந்துவிட்டதால், விவஸ்தைகெட்ட வர்த்தகமயமாக்கலில் தேர்ந்த கண்டத்தினர், ஸ்பைடர்மேன் போல விரைவில் ஒரு கெக்கோமேன், பல்லிமனிதன் சூப்பர்ஹீரோ காமிக்ஸ், ஹாலிவுட் திரைப்படம் என்று முயலலாம். த்ரீடியில் “என்னருந்தாலும் அவன மாத்ரி எடுக்கமுடியாதுமா” என்று களிப்புறுமுன், வீட்டில் வாழும் பல்லியை ஒருமுறை வாஞ்சையுடன் கூர்ந்து நோக்குங்கள்.

***
[இயற்கையின் நேனொடெக்னாலஜி தொடரும். இதே வரிசையில் அடுத்த கட்டுரை “வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சி”; இலக்கியம் கமழவேணம் என்றால், “வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில்”.]
***

பல்லிப் பாடங்கள் (சான்றேடுகள்)
Hornyak et al., Introduction to Nanoscience, CRC press, 2008.
Autumn et al., “Adhesive force of a single gecko foot-hair,” Nature, 405: 681-685, 2000.
Autumn, K., “Properties, principles, and parameters of the gecko adhesive system.” In Biological Adhesives (ed. A. Smith & J. Callow), pp. 225-255. Berlin Heidelberg: Springer Verlag, 2006.
Hansen, W. & Autumn, K. “Evidence for self-cleaning in gecko setae.” Proc. Nat. Acad. Sci. U. S. A. 102, 385-389, 2005.
Peter Forbes, “The Gecko’s Foot,” Fourth Estate, 2005.

இணையத்தில் மேலும் படிக்க:
http://college.lclark.edu/faculty/members/kellar_autumn/
http://geckolab.lclark.edu/PNAS/
http://www.nature.com/embor/journal/v8/n11/full/7401107.html
http://robotics.eecs.berkeley.edu/~ronf/Gecko/interface08.html
[கட்டுரையின் அனைத்து படங்களும் மேலே குறிப்பிட்டுள்ள புத்தக கட்டுரைகள், சுட்டும் இணைய கட்டுரைகளிலிருந்து (சற்று மாற்றி அமைத்தும்) உபயோகித்துள்ளேன். நன்றி.]

2 Replies to “ஏன் பல்லி கொன்றீரய்யா”

Comments are closed.