மொழியின் விதை

மொழி ஆற்றல் என்பது பேச்சு, எழுத்து, வாசிப்பு, புரிந்துகொள்ளல் ஆகியவை ஒன்றுசேர்ந்தது. மனித இனத்தில் கிளைபரப்பி, வேர் விட்டு வளர்ந்திருக்கும் நமது மொழி அல்லது பேச்சாற்றல் என்னும் பண்பின் விதை எது? மொழி முற்றிலும் மனித இனத்தின் கலாச்சார பரிணாம வளர்ச்சியின் ‘கண்டுபிடிப்பா’ அல்லது உயிரியல் பரிணாமத்தின் ‘மரபணுக் கொடையா’? மானுடவியலாளர்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் இடையிலும், அறிவியலாளர்களுக்குள்ளேயே வெவ்வேறு கருதுகோள்கள் உள்ளவர்கள் மத்தியிலும் நீண்ட காலமாக இருந்து வரும் சர்ச்சைக்குரிய சந்தேகங்களில் இதுவும் ஒன்று.

முன்கதைச் சுருக்கம்

மொழி மானுட இனத்தில் தோன்றியதன் பின்னனி குறித்து இரண்டு முக்கியமான கருதுகோள்கள் உள்ளன. ஒன்று, மொழி என்பது எங்கிருந்தோ திடீரென்று மனித இனத்தில் வந்து குதித்துவிடவில்லை- அது படிப்படியாக மனிதனின் மூதாதையான பேரினக்குரங்குகள் காலத்திலிருந்து இருக்கக்கூடிய பல்வேறு அடிப்படையான தகவல்/உணர்வுப் பரிமாறல் முறைகளின் வளர்ச்சி அடைந்த நிலை என்கிறது. அதாவது மொழி என்பது தொடர்ந்து உருமாற்றமும், வளர்ச்சியும் அடைந்து வந்துள்ள ஒன்று. இந்தக் கருதுகோளின் மறுதரப்பு, மொழி என்பது வேறு எந்தப் பண்போடும் அல்லது மனிதனல்லாத வேறு எந்த உயிரினத்தின் பண்போடும் தொடர்பு படுத்திப் பார்க்க முடியாதது. இதற்கு அடிப்படையாகவும், இணையாகவும் இன்னொரு பண்பு இல்லை. எனவே எதன் தொடர்ச்சியுமாக அல்லாது மனித இனத்திற்கு நேரடியாகக் கிடைத்த கொடை என்கிறது.

மொழியின் தோற்றம் பற்றி பரிணாம அடிப்படையிலான பல கருதுகோள்களும் உள்ளன. பறவைகள், விலங்குகள் எழுப்பும் ஒலிகளை அடியொற்றி மனிதனின் மொழி வந்திருக்கும் (பௌ-வௌ கோட்பாடு), வலி, இன்பம், ஆச்சரியம் போன்ற மிகை உணர்வுகளின் போது எழும் இயல்பான ஒலிகளை வைத்து மொழி வளர்ந்திருக்கும் (பூ-பூ கோட்பாடு), நாம் காணும் எல்லாப் பொருட்களுக்குள்ளும் இயற்கையாகவே இருக்கும் ஒலி அதிர்வுக் குறிப்புகளைத் தான் மனிதன் தன் ஆதி மொழியில் எதிரொலித்தான் (டிங்-டாங் கோட்பாடு), ஆதியில் மனிதர்கள் கூட்டாக உடலுழைப்பில் ஈடுபடும் போது ஒரு தாள கதியில் அடுத்தடுத்து வெளிப்படுத்தப்படும் சத்தத்திலிருந்து இருந்து பேச்சு மொழி வளர்ந்திருக்கும் (யோ-ஹி-ஹோ கோட்பாடு), மனிதனின் அங்க அசைவுகளை அப்படியே ஒலியாக மாற்ற முனைந்ததன் விளைவாக மொழி தோன்றியிருக்கும் (தா – தா கோட்பாடு), தாய் தன் குட்டிகளிடம் தகவல் பரிமாற்றத்திற்காகப் ‘பேச’, பின் அது தன் இனத்தின் மற்ற வளர்ந்த உறுப்பினர்களிடமும் தொடர்புகொள்ளும் கருவியாகிப் பரவி மொழி உருவாகியிருக்கும் (‘தாய்மொழிக்’ கருதுகோள்) என்று ஏராளமான கோட்பாடுகள், கருதுகோள்கள் -வகைக்கு இரண்டு ஆதாரங்களுடன் உள்ளன! மொழியின் தோற்றம் பற்றிய அடிப்படைகளை விரிவாக அறிய விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரை உதவும்.

மேற்கண்டவை எல்லாம் பெரும்பாலும் நூற்றாண்டுகாலப் பழக்கமுடைய கருத்தாக்கங்கள். மானுடவியல், சமூகவியல், கலாச்சாரப் பரிணாமவியல், மொழியியல் சார்ந்த ஊகங்கள். ஆனால் இதுவரை மரபியல் விளக்கங்கள் கொடுக்கப்பட முடியாமலிருந்த பல பண்புகளுக்கும் மூலக்கூறு மரபணுவியல், நரம்பியல் போன்ற துறைகளில் நடைபெற்றுவரும் நவீன ஆய்வுகள் மூலம் உயிரியல் விளக்கம் அளிக்கப்படுகிறது. உதாரணமாக அறிவாற்றல் என்னும் பண்பின் மரபணுப் பின்புலம் குறித்தான சமீபத்திய கண்டுபிடிப்புகள். இந்தக் கட்டுரையின் நோக்கம், ‘பேச்சு/மொழி என்பதை மனித இனத்தின் ஒரு சிறப்பு உயிரியல் பண்பாகக் கொள்ளலாமா?’ என்னும் கேள்வியைக் கொண்டு சமீபத்தில் வெளிவந்துள்ள மூலக்கூறு மரபியல் மற்றும் நரம்பியல் ஆய்வு முடிவுகளின் வழியாக மொழி என்னும் பண்பின் மரபியல் விதை எது என்பதைத் தேடுவதாகும்.

மொழியின் இடம் – மூளையில்

மொழி என்னும் பண்பின் மரபியல் சார்ந்த வேர்களைத் தேடும் முன்பே மனிதனின் மூளையில் பேச்சு/மொழிக்கான இயங்கு தளங்கள் உள்ளனவா என்ற தேடல் தொடங்கிவிட்டது. 1861ல் பால் புரோக்கா (Paul Broca) என்னும் ஃபிரெஞ்சு நரம்பு அறுவைசிகிட்சையாளர், மொழியை புரிந்து கொள்ள முடிந்த ஆனால் தொடர்ச்சியாக ஒரு வாக்கியத்தை பேசவோ எழுதவோ செய்யும் திறனை இழந்த ஒரு நோயாளியின் மூளையை அவரின் இறப்பிற்குப் பிறகு ஆய்வு செய்த போது, நோயாளியின் மூளையின் இடது அரைக்கோளத்தின் முன்பகுதியில் ஓரிடத்தில் சதையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தார். மூளையின் இந்தப் பகுதி பேச்சு/மொழி இவற்றின் கட்டுப்பாட்டு மையமாக இருக்கக்கூடும் என்று ஊகித்தார். மேலும் அதே பேச்சுக் குறைபாடுள்ள எட்டு நோயாளிகளின் மூளையைச் சோதித்தபோது அனைவருக்கும் மூளையின் அதே இடத்தில் பாதிக்கபட்டிருந்ததைக் கண்டறிந்தார். மூளையின் இந்தக் குறிப்பிட்ட பகுதியே “மொழியின் மையம்” என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இப்பகுதி பின்னர் “புரோக்காவின் பகுதி” என்று பெயரிடப்பட்டது. ஒரு வகையில் மனிதனின் செயல்பாட்டுக்கும் மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் இருக்கும் நேரடித் தொடர்பை முதன் முதலில் நிரூபித்ததும் இந்தக் கண்டுபிடிப்பே!

புரோக்காவிற்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்து கார்ல் வெர்னிக் (Carl Wernicke) என்னும் ஜெர்மன் நரம்பியலாளர், பேசமுடிந்த ஆனால் தொடர்பற்ற, பொருள் கொள்ள முடியாத பேச்சைக் கொண்ட நோயாளிகளின் மூளையைச் சோதனை செய்தபோது அதே இடது அரைக்கோளத்தில் பின் பகுதியில் இருக்கும் பாதிப்பைக் கண்டறிந்தார். மூளையின் இப்பகுதி “வெர்னிக்கின் பகுதி” என்றழைக்கப்படுகிறது.

மூளை என்பது ஒரேசமயம் பல்வேறு வேலைகளைச் செய்யும் திறன்கொண்ட ஒட்டுமொத்தமான ஒற்றைச் சதைப் பிண்டமல்ல, அதன் ஒவ்வொரு பகுதியும் இசைக்கும், மொழிக்கும், ஒரு உருவத்தை பார்த்து அறிந்து கொள்வதற்கும் என குறிப்பிட்ட செயல்பாட்டுக்கான கட்டுப்பாட்டுமையங்களாகத் தனித்தனியாகச் செயலாற்றுகிறது. சமீபத்திய மூளையின் செயல்பாட்டினைப் படம்பிடிக்கும் உயர்தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் புரோக்கா, வெர்னிக்கின் உட்பட இன்னும் சில பகுதிகள் மனிதனின் பேச்சு/மொழி சம்பந்தமான மூளைக் கட்டுப்பாட்டுமையம் என்பது உறுதி செய்யப்பட்டது. மொழி தொடர்பான சோதனைகளில் மூளையின் இந்தக் குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே செயல்படுகின்றன எனவும், பிற அறிதல் செயல்பாடுகளின் போது இவை செயல்படுவதில்லை எனவும், அதனால் மூளையின் இந்தப் பகுதிகள் பேச்சு/மொழிக்கான தனிப்பட்ட மையங்கள் பகுதிகள் என்பதும் மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது (1). தலையில் அடிபட்டு உண்டாகும் காயங்களால் இப்பகுதிகளில் ஏற்படும் பாதிப்பு அவர்களின் பேச்சு/மொழி வெளிப்பாட்டினை பாதிக்கிறது என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது (2). இந்த ஆய்வில் காயங்களினால் மொழித் திறன் இழந்தவர்களது மூளை, ஆரோக்கியமானவர்களின் மூளைச் செயல்பாட்டுடன் படம்பிடிக்கப்பட்டு ஒப்பிடப்பட்டது. மொழித் திறன் இழந்தவர்களில் மூளையின் மொழி மையங்களை இணைக்கும் நரம்பிழைகள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புரோக்கா மற்றும் வெர்னிக் போன்ற மூளை மொழி மையங்கள் மனிதனுக்கு மட்டும் உரியவை அல்ல. மனிதனின் பரிணாமப் பங்காளிகளான பேரினக் குரங்குகளிலும் இவை/இவற்றுக்கிணையான பகுதிகள் உள்ளது. அவையும் இந்த மொழிமையங்களின் செயல்பாடு மூலமாகவே அங்க அசைவுகள், சிமிக்ஞை, ஒலியெழுப்புதல் போன்ற தங்களுக்கே உரித்தான முறையில் தகவல் பரிமாறிக் கொள்கின்றன (3). ஆனால் அது மொழியாக ஏன் பரிணமிக்கவில்லை? ஏன் மனிதனுக்கு மட்டும் பேச்சு மற்றும் மொழி ஆற்றல் தனிச்சிறப்பான பண்பாக வளர்ந்தது?

2008ஆம் ஆண்டு வெளியான ஆராய்ச்சிக் கட்டுரை இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது (4). சிம்பன்ஸி, மகாக் குரங்கு (Rhesus Macaque) மற்றும் மனித மூளைகளில் மொழி மையங்களின் செயல்பாட்டை ஒப்பிட்டு ஆராய்ந்த போது, மொழி/ பேச்சின் தகவல்களை உள்வாங்கி, கடத்தி, புரோக்கா, வெர்னிக் மற்றும் இதர மொழி மையங்களைத் தொடர்புபடுத்தி, சிந்தித்து, வெளியிடும் பதில் தகவல் சமிக்ஞைகளைக் கடத்தும் நரம்பிழைத் தொகுப்பு மனித மூளையில் அகன்று விரிந்தும், பெரிதாகவும் வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. மனித இனத்துக்கு நெருக்கமான மற்ற பேரினக் குரங்குகளில் இந்த நரம்பிழைத் தொகுதி மிகக் குறுகியதாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே பரிணாமத்தில் மற்ற குரங்குகளை விட மூளையின் அளவு மனிதனுக்குப் பெரிதாக அமைந்ததும், அதனால் இந்த மூளையின் மொழி மையங்களின் விரிவும், இவற்றை இணைக்கும் நரம்பிழைத் தொகுதி செறிவாகவும், பெரிதாகவும் அமைந்ததுமே நாம் குரங்குகளை விட அதிக தகவல்களை கையாண்டு, சிந்தித்து, வெளிப்படுத்தும் உயர்தள தொடர்பு ஊடகமான மொழி என்னும் பண்பைப் பெறக் காரணம் என்பது தெளிவாகிறது.

மொழியின் மரபியல் விதை

மூளையில் மொழி மையங்கள் இருப்பது உறுதியானாலும், மூளை என்பது உடல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும், கட்டளைகளைக் கடத்தும் கட்டுப்பாட்டு மையம் மட்டும் தான். மூளையின் செயல்க்கட்டுப்பாட்டு மையங்களைத் தூண்டும் காரணிகள் அதற்கான புரதங்களே. புரதங்களோ மரபணுக்களால் குறிக்கப்படுபவை. மரபணுக்களே உயிரியல் பண்புகளைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் அடிப்படை அலகுகள். அப்படியானால் மூளையின் மொழிமையங்களின் வளர்ச்சிக்கும், தூண்டுதலுக்கும், இணைப்புக்கும், செயல்பாடுகளுக்கும் காரணமான மரபணுக்கள் எவை?

இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்கப்பட்டதும் மிகவும் சுவாரஸியமானது. ஒட்டுமொத்த மனித இனத்தினுடைய மொழியென்னும் சிறப்புப் பண்பிற்கான மரபணுப் பின்புலம் கண்டுபிடிக்கப்பட்டது, மொழி/பேச்சுக் குறைபாடுள்ள ஒற்றைக் குடும்பத்திலிருந்து! லண்டனில் வாழும் KE என்னும் குடும்பத்தின் (இந்தக் குடும்பத்தின் முழுப்பெயர், விவரம் போன்றவை தனிப்பட்ட காரணங்களுக்காக ஆராய்ச்சியாளர்களால் பொதுவில் வெளிப்படுத்தப் படவில்லை) நெருங்கிய ரத்த உறவுகளில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த பாதிக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு பேச்சு/மொழிக் குறைபாடிருந்தது தெரியவந்தது. இவர்களுக்கு முகத்தின் கீழ்பகுதியை அசைப்பதில் சிக்கல் இருந்தது, அதனால் நுண்மையான சில ஒலிகளை எழுப்பவோ, பல வார்த்தைகளை உச்சரிக்கவோ முடியாது. மேலும் இன்னொரு சிக்கலும் கவனிக்கப்பட்டது – அவர்களுக்கு பேச்சு, எழுத்து இரண்டிலும் இலக்கண ரீதியாக மொழியைக் கையாளுவதிலும் பிரச்சனை இருந்தது.

பேச்சுக் குறைபாடுள்ள பிறரிடம் ஏற்கனவே செய்யப்பட்ட மரபணு ஆய்வுகளில் 7ஆம் மரபணுத் தொகுப்பில் (குரோமோசோம்) இருக்கும் மரபணுக்களில் மாற்றங்கள் இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது (5). ஆனால் அதில் இருக்கும் நூற்றுக்கணக்கான மரபணுக்களில் எந்தக் குறிப்பிட்ட மரபணு காரணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் 2001ல் KE குடும்பத்தினரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மரபணுவில் ஆராய்ச்சி நடத்தப்பட்டபோது 7ஆம் குரோமோசோமில் உள்ள FOXP2 (Forkhead box protein2) என்று பெயரிடப்பட்ட ஒற்றை மரபணுவில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான் அவர்களுடைய பேச்சு/மொழி குறைபாட்டிற்கான காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது (6). இது பேச்சு/மொழி என்னும் பண்பின் மரபியல் மூலத்திற்கான தேடுதலில் மிகமுக்கியமான ஒரு திறப்பை அளித்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மரபணு ஆராய்ச்சிகளில் FOXP2 மரபணு என்பது ஆர்.என்.ஏ படியாக்கல் காரணி (RNA Transcription factor) என்பதும், மூளை வளர்ச்சியிலும், நரம்பணுக்களின் நெகிழ்தன்மை, உருமாற்றம் ஆகியவற்றிலும் ஈடுபடும் மற்ற மரபணுக்களின் வெளிப்பாட்டைத் (Expression) தீர்மாணிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. FOXP2 மரபணுவில் முக்கியமான இடத்தில் ஏற்பட்ட ஒரே ஒரு மாற்றம் தான் KE குடும்பத்தினரின் மூளை நரம்பணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி மூளையின் மொழி மையங்களின் வளர்ச்சி, செயல்பாட்டுச் சிக்கலை உருவாக்கி பேச்சு/மொழிக் குறைபாட்டினை ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகளிலும் பேச்சு/மொழிக் குறைபாடுள்ளவர்களில் இந்த FOXP2 மரபணு மாற்றம் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த FOXP2 மரபணுவும், அதனால் குறிக்கப்படும் புரதமும் சிம்பன்ஸி, உராங் உட்டான், மகாக், கொரில்லா போன்ற மனிதனுக்கு பரிணாமத்தில் நெருங்கிய பேரினக்குரங்குகளிடமும் இருக்கிறது, எலிகள் முதலான பிற பாலூட்டிகளிடமும், மீன்கள், சில பாடும் பறவைகள், சிலவகை ஊர்வனவற்றிலும் காணப்படுகிறது. எலிகளிலிருந்து குரங்குகள் பரிணாமத்தில் பிரிந்து 75 மில்லியன் ஆண்டுகளில் FOXP2 மரபணுவில் ஒரே ஒரு அமினோ அமிலம் மட்டுமே மாற்றமடைந்துள்ளது, அதற்கு அப்புறம் மனிதன் சிம்பன்ஸிக்களிடமிருந்து பிரிந்து பரிணாம வளர்ச்சி அடைந்த 5-7 மில்லியன் ஆண்டுகளில் வெறும் இரண்டு அமினோ அமிலங்கள் மட்டும் மாறியுள்ளது (7). பரிணாமத்தில் ஒரு புரதத்தில் இரண்டு அமினோ அமிலங்கள் மாற்றமடைவதென்பது எவ்வளவு பெரிய வியக்கத்தக்க உயிரியல் பண்பு/திறன் வித்தியாசத்தை உண்டாக்க முடியுமென்பது ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும்!

மரபணு மாற்றம், மொழிகளின் தோற்றம் –காலத்தின் கணக்கில்

ஒரு உயிரியல் பண்பும் அதற்கான மரபியல் காரணிகளும் சேர்ந்தே பரிணாம வளர்ச்சி கொள்ளும். நிலையான மொழிச்சூழல் இல்லாத கட்டங்களில் மொழிக்கான மரபணு இயற்கையில் தேர்வுசெய்யப்பட முடியாது. ஆனால் பேச்சு/மொழிக்கான மரபணு என்று கருதப்படும் FOXP2, மனித மொழி வளர்ச்சிக்கு முன்பே தோன்றிவிட்டது, எனவே மொழிக்கான காரணம் மரபியல் அல்ல கலாச்சாரப் பரிணாமம் தான் என்னும் கருதுகோளும் இருக்கிறது (8).

இந்த வாதத்தின்படி பார்த்தால் ஒவ்வொரு மொழியும் நிலையாக வளர்ச்சி அடைந்த பொழுது அதனுடன் சேர்ந்து பரிணமித்த மரபணு மாற்றம் அந்தந்த மொழி பேசும் மக்களிடத்தில் இருக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது. உதாரணமாக அந்தமான் நிகோபார் தீவுகளின் சில பழங்குடிகள் பல்லாயிரம் வருடங்கள் தனித்திருக்கின்றனர், அவர்கள் மொழியோடு சம்பந்தப்பட்ட தனி மரபணு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. காரணம் மனித இனம் முழுவதும் FOXP2 மரபணு எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே போலத் தான் உள்ளது. முக்கியமாக FOXP2 நேரடியாக மொழியைக் குறிக்காமல், நரம்பணு வளர்ச்சி, தூண்டுதலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மூளையின் மொழி மையங்களின் செயல்பாட்டுக்குக் காரணமாகிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் மொழிக்கான மரபியல் காரணியாக FOXP2 மரபணுவைப் போல வேறு புதிய மரபணுக்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் மொழியின் மரபியல் தாக்கம் இன்னும் விளக்கமாகப் புரிந்துகொள்ளப்படலாம். மற்ற அனைத்து உயிரினங்களிலிருந்தும் வேறுபட்டது மனிதனின் குரல்வளையின் அமைப்பும், நாசிக் குழியும் (Nasal cavity). மொழி/பேச்சு வளர்ச்சிக்கான பங்கில் இவையும் முக்கியமானவை. இந்த உறுப்புக்களின் பரிணாமத்திற்கான காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இயற்கையில் முதலில் தேர்வுசெய்யப்பட்டுவிட்ட FOXP2 போன்ற மரபணுக்கள் விதை என்றும் அவை மொழியாக வளர தேவைப்படும் மற்ற உயிரியல் காரணிகள் நிலம் என்றும் தொகுத்துப் புரிந்து கொள்ளலாம்.

மனிதன் தனது சக இனமான நியாண்டர்தால்களிடமிருந்து பரிணாமத்தில் பிரிந்து 3லட்சம் ஆண்டுகள் தான் ஆகிறது. அப்படியானால் நியாண்டர்தால்களுக்கும் மொழிக்கான மரபணு இருந்திருக்குமா? ஆம்! என்கிறது நியாண்டர்தால்களின் புதைபடிவ எச்சங்களிலிருந்து (fossils) பிரித்தெடுக்கப்பட்ட மரபணுக்களில் நடத்தப்பட்ட ஆய்வு. எனவே நியாண்டர்தால்களும் மொழி பயின்றிருக்கலாம் (9). எலும்பால் செய்த புல்லாங்குழல் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் நியாண்டர்தால் மனிதன் இசையறிவும் பெற்றிருந்திருக்கலாம் என்கிறது அகழ்வாராய்ச்சி சான்றுகள். இவை மொழிக்கான ஆதி மரபணுப் பின்புலத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

மொழியின் மரபணு என்பது தமிழின் மரபணு, லத்தீனின் மரபணு அல்லது திராவிட மொழிக் குடும்பத்தைக் குறிக்கும் மரபணு, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைக் குறிக்கும் மரபணு என்று மொழிகளையும், அவைகளின் வளர்ச்சியையும் மரபணுவுடன் நேரடியாக தொடர்புபடுத்துதல் அல்ல. மாறாக, மொழி ஒரு அறிதல் செயல்பாடு, அது மற்ற எந்த அறிதல் செயல்பாடுகளையும் போல மூளை என்னும் கட்டளை செயல்பாட்டு மையத்தின் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. அந்தச் செயல்பாட்டு மையத்தின் உருவாக்கத்தையும், வளர்ச்சியையும், சிக்கலான சிமிக்ஞை வலைப்பின்னல்களையும், மொழி என்னும் அறிதல் நிகழும் மூளைப் பகுதிகளை நிர்ணயிக்கும் காரணி –மரபணு, இந்த மரபணு உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தில் சிறப்புப் பண்பாக தேர்வு செய்யப்பட்டது என்று தொடர்புபடுத்திப் புரிந்துகொண்டால் எளிதில் விளங்கும்.

ஒப்பீட்டு விலங்கு நடத்தையியல் அறிஞரான தோர்ப் (W.H.Thorpe), “மற்ற உயிரினங்களுக்கும் தகவல் தொடர்பு முறைகள் இருக்கிறது. மனிதனின் மொழிக்கும், மற்ற விலங்குகளின் தொடர்புமுறைக்கும் இருக்கும் எளிய ஒற்றுமை என்னவென்றால் இரண்டிற்கும் நோக்கம் (Purposive), தொடர்ச்சி/இசைவு (Syntactic), தெரிவிக்கப்படும் தகவல் (Propositional) மூன்றும் இருக்கிறது. ஆனால் மனிதனின் மொழி, எந்த எளிய தொடர்புமொழிகளின் வளர்ச்சி நிலையல்ல” என்றார். சமகாலத்தின் முக்கியமான மொழியியல் அறிஞரான நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) இந்த மரபணுக் கண்டுபிடிப்புகள் வெளிவருவதற்கு பல ஆண்டுகள் முன்பே, மனிதனின் மொழி எந்த தொல்/அடிப்படை மொழியிலிருந்தும் ‘பரிணமித்த’தில்லை, மாறாக உயிரியல் பரிணாமத்தின் ஏதோ ஒரு புள்ளியில் ஏற்பட்ட திடீர்மாற்றத்தால் மனிதனுக்கு நேரடியாகவே கிடைத்த சிறப்புப்பண்பு என்று தொடர்ந்து வாதிட்டு வந்தார். இப்போது பெருகிவரும் மரபணு ஆய்வுமுடிவுகள் அதைப் பெரிதும் ஆமோதிப்பதாகவே உள்ளது.

உதவிய மூல ஆராய்ச்சிக் கட்டுரைகள்:

1. Fedorenko E., et al., 2011. Functional specificity for high-level linguistic processing in the human brain. PNAS. 108 (39): 16428-16433
2. Turken A.U., and Dronkers N.F. 2010. White matter pathways subserving the language comprehension network. Society for Neuroscience 40th annual meeting. San Diego, CA.
3. Taglialatela J.P., 2008. Communicative signaling activates ‘Broca’s’ homolog in chimpanzees. Current Biology 18: 343-348
4. Rilling J.K., et al., 2008. The evolution of the arcuate fasciculus revealed with comparative DTI. Nature Neuroscience. 11, 426 – 428.
5. Fisher S.E., et al., 1998. Localisation of a gene implicated in a severe speech and language disorder. Nature Genet. 18 (2): 168–70.
6. Lai C.S.L., et al., 2001. A forkhead-domain gene is mutated in a severe speech and language disorder. Nature 413(6855): 519–23.
7. Enard W., et al., 2002. Molecular evolution of FOXP2, a gene involved in speech and language. Nature 418: 869 – 872.
8. Chater N., et al., 2008. Restrictions on biological adaptation in language evolution. PNAS. 106 ( 4): 1015-1020
9. Krause J., et al., 2007. The Derived FOXP2 Variant of Modern Humans Was Shared with Neandertals. Current Biology 17: 1-5.