சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்

செந்தமிழ்க் காப்பியங்கள் எனும் எனது முதற் கட்டுரையைத் தொடர்ந்து எழுதப்படுவது இது. இக்கட்டுரைகளின் மூலம், நான் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் எழுத்தெண்ணிப் படித்தவன் எனும் தீர்மானத்திற்கு வந்து விட வேண்டாம். நான் கற்ற அல்லது கற்கும் சிலவற்றை, ஒரு அறிமுகம் என்ற அளவில் எடுத்துக் கொண்டால் போதுமானது. மேலும் எனது தகவல்கள் முழுமையற்றவை. தமிழில் இவையெலாம் உள என்பதற்கான கட்டுரைகளே இவை.

தமிழில் பிரபந்தங்களைத் தொண்ணூற்றாறு வகையாகப் பிரிக்கிறார்கள். இந்தத் தொண்ணூற்றாறுக்கும் வகை மாதிரிக்கான பிரபந்தங்கள் எழுதப்பட்டனவா, இன்னும் இருக்கின்றனவா எனும் தகவல்கள்கூட என்னிடம் இல்லை. நான் அறிந்து வைத்திருக்கும் வகைகள் ஆவன: கோவை, தூது, உலா, பரணி, கலம்பகம், காதல், மடல், பள்ளு, குறவஞ்சி, பிள்ளைத் தமிழ், அந்தாதி முதலானவை.

அவற்றுள்ளும் கோவை எனில் பல, தூது எனில் பற்பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவையெல்லாம் இன்று நூல் வடிவில் உள்ளனவா, மறுபதிப்புக் கண்டனவா, காணப் பெறுமா, வாசிக்கப்படுகின்றனவா, பாடத்திட்டங்களில் உண்டா என்பதெல்லாம் தமிழன்னைக்கே தெரிந்த மர்மம்.  என்றாலும் நான் கேள்விப்பட்ட, வாசித்த, அனுபவித்த சிலவற்றை மட்டும்- சாம்பிள் சர்வே போல- உங்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். எங்கோ ஒரு புள்ளியில் இருந்து நாம் நம் வாசிப்பை என்றேனும் தொடங்கித்தானே ஆக வேண்டும்!

கோவை

கோவை எனில் கோயம்புத்தூரின் சுருக்கம் அல்ல- கோர்க்கப்படுவதால் கோவை. இஃதோர் அகத்துறை இலக்கியம். காதலன், காதலி இருவரின் உள்ளத்தில் கிளைத்து ஓங்கி வளரும் இன்ப இலக்கியம் இது. கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் அமைவது. 400 பாடல்கள் இருக்க வேண்டும்.

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்போடு புணர்ந்த ஐந்திணை’

எனும் தொல்காப்பிய சூத்திரத்துக்கு இயைந்து எழுதப்பட்டது கோவை.

கோவை நூல்களில் தலைசிறந்தது மாணிக்கவாசகர் யாத்த திருச்சிற்றம்பலக் கோவை எனும் திருக்கோவையார் என்றும் இதற்கு மட்டும்தான் உயர்வு குறித்த ‘ஆர்’ விகுதி என்றும் சொல்கிறார்கள். கொட்டீச்சுரக் கோவை, திருவாரூர்க் கோவை, திருவெங்கைக் கோவை, என வேறு சில கோவை நூல்களையும் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாகச் சில கோவை நூல்களை மட்டும் பார்ப்போம்.

அம்பிகாபதிக் கோவை

இதன் பாட்டுடைத் தலைவர் இறைவன். அரசன் அல்லன். ஆசிரியர் பெயர் அறியப் பெற்றிலோம். 564 பாடல்கள் கொண்ட இந்த கோவை நூலுக்கு வித்வான் மீ. பொன். இராமநாதன் செட்டியார் உரை எழுதியுள்ளார். கம்பர் மகன் அம்பிகாபதி எழுதிய கோவை என்பதால் இதனை அம்பிகாபதிக் கோவை என்பாருளர். ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்கிறார்கள். அம்பிகாபதி என்ற பெயருள்ள ஒருவர் 17-ம் நூற்றாண்டுக்கு முன்பு பாடி இருக்கலாம் என்கிறார்கள். கம்பரின் காலமோ 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

என்னிடம் இருப்பது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரின் 1952-ம் ஆண்டுப் பதிப்பு. பதம் பிரித்து எழுதப்படாத பல்லுடைக்கும் பாடல்கள்.

இன்று மேற்கத்திய நாடுகளிலும், ஏன் பாரதப் பழம்பெரும் நாட்டிலும்கூட, ஆடவரும் பெண்டிரும், வெற்றுடம்பில் மார்பு, முதுகு, தோள், இடுப்பு, வயிறு, தொடை என விலங்குகள், மீன்கள் பாம்புகள், பூக்கள், கோடிகள் என சாயத்தால் வரைந்து கொள்ளும் வழக்கம் உளது. ஆடைபோல் அவற்றை மாத்திரமே வரைந்து முழு நிர்வாணம் காட்டி மேல்நாட்டில் நடமாடுவது போல் இங்கும் நடமாட அதிகக் காலம் காத்திருக்கத் தேவையில்லை. என் காலத்திலேயே கண்ணாரக் கண்டு குளிர்ந்து அடங்கலாம். இவ்விதம் மேனியில் பெண்கள் வரைவதைத் தொய்யில் எழுதுவது என்கின்றனர். இதனை சங்க இலக்கியம் பேசுகிறது. அம்பிகாபதிக் கோவை, பாடல் – 444, “தோளில் கரும்பு, முலையில் கொடி விடு தொய்யிலும்’ என்கிறது. மகளிர் தம் தோளிலும் கொங்கைகளிலும் கரும்பு வில் போன்றும் பூங்கொடி போன்றும் குங்குமக் குழம்பில் தொய்யில் எழுதி இருந்தனர் என்பது பொருள்.

அம்பிகாபதி கோவையின் காலம் 17-ம் நூற்றாண்டுக்கு முந்தியது என்று சொல்லப்பட்டாலும் மொழியின் செறிவு, தன்மை, தொன்மை நோக்கினால் பத்தாம் நூற்றாண்டுச் செய்யுட்களே என மலைக்க வைக்கின்றன.

சில உவமைகள் புதிதாக நமக்குப் புலப்படுகின்றன. “வல்லினும் நல்ல வன முலையாள்’ என்று ஒரு வரி. உரையாசிரியர் எழுதுகிறார், வல் என்பது சூதாடும் கருவி என்றும் அது முலைக்கு உவமை என்றும். சில பொருள் கொளல்கள் தமிழின் விந்தையைப் புலப்படுத்துகின்றன. ‘முலை முற்றிய மென் முகிழ் நகை மானுக்கு’ (பாடல் – 362) எனும் ஒரு வரியை இரண்டு விதமாகப் பொருள் கொள்ளுகின்றார் உரையாசிரியர். முலை எனும் சொல்லை முல்லை எனும் சொல்லின் தொகுத்தல் விகாரமாகக் கொண்டு முகிழ் எனும் சொல்லை முலை என்னும் முதற்சொல்லோடு சேர்த்து, மு(ல்)லை முகிழ் முற்றிய மென்னகை மானுக்கு என்று கொண்டு, முல்லை முகையை ஒத்த மெல்லிய பற்களை உடைய மான் போன்ற தலைவியை என்பது ஒரு பொருள். முற்றிய கொங்கைகளை உடைய, மான் போன்ற தலைவியை என்பது ஒரு பொருள். முற்றிய கொங்கைகளை உடைய, மெல்லிய, முகிழ்க்கும் நகைப்பினை உடைய பெண்மானாகிய தலைவி என்பது இன்னொரு பொருள்.

முத்தொள்ளாயிரத்தின் சிறப்பான வெண்பாக்களில் ஒன்று: கடற்கரை அல்லது ஆற்றங்கரை மணலில், தாழை மரப் புதர் நிழலில் அல்லது புன்னை மர நிழலில் அமர்ந்து, தலைவனைப் பிரிந்த தலைவி, ஆருடம் கணிக்கிறாள், தலைவனைக் கூடுவேனா, கூட மாட்டேனா என்று. ஆருடம் என்பது கண்களை மூடி, ஆட்காட்டி விரலால் மணலில் வட்டம் வரைவது. வட்டம் கூடினால் தலைவனைச் சேருவேன், கூடாவிட்டால் சேரமாட்டேன் என்பது கல்பனை. ஆனால் பாதி வட்டம் வரைந்த பிறகு, தலைவிக்கு ஐயம் எழுகிறது. ஒரு வேளை வட்டம்- கூடல் கூடாமற் போனால் என் செய என! எனவே கூடல் இழைப்பதைப் பாதியில் நிறுத்தி விடுகிறாள்:

‘கூடல் பெருமானைக் கூடலார் கோமானைக்
கூடப் பெருவேனேல் கூடு என்று – கூடல்
இழைப்பாள் போல் காட்டி இழையாது, இருக்கும்
பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து’ (முத்தொள்ளாயிரம் 20)

என்பது பாடல்.

அது போல் அம்பிகாபதிக் கோவையில் ஒரு பாடல் – 296.

‘முளைக்கும் பிறையை முனியும் திருநுதல் முத்து அரும்ப
விளைக்கும் பசலை விழி இணை காட்ட விடாத வண்டர்
கிளைக்கும் தெரிவரும் கேதகை நீழலின் கீழிருந்து
வளைக்கும் சுழிக்கும் அழிக்கும் ஒண் கூடல் வளைக்கை கொண்டே’

முளைக்கும் கீற்றுச் சந்திரனை முனிந்து, நெற்றியில் முத்துப்போல் வியர்வை அரும்ப, இரு விழிகளும் பசலை நோய் விளைந்ததைக் காட்ட, வண்டல் எனும் மகளிர் விளையாட்டை ஆட்டும் தோழியர் கூட்டம் அறியாதபடி, தாழைப் புதரின் கீழ் அமர்ந்து, தலைவி கூடல் இழைப்பதற்காக வட்டம் வளைத்துச் சுழிப்பாள், பின்பு கூடாதோ என அழிப்பாள், வளையல் அணிந்த தன் கையால் என்பது பொருள்.

அற்புதமான பாவங்கள் கொண்ட நூல் இது. பரத்தையின் பொருட்டுப் பிரிந்த தலைவன், வீடு வந்து தன் மகவைப் புல்லும்போது, தன் மகனைத் தலைவி கடிந்து கொள்வதைப் போல் ஒரு பாடல். தன் மகனைத் தந்தை தழுவும்போது, மகனின் மார்புச் சந்தனம் தலைவன் மார்பில் படிந்து, பின்னர் தலைவன் பரத்தையைத் தழுவும்போது, அந்தச் சந்தனம் பரத்தையின் மார்பிலும் சிதைந்து படியும், எனவே தகப்பனை ஏன் தழுவினாய் எனத் தன் சிறுமகனைக் கடிந்து கொள்ளும் பாடல். அகத்துறையின் அதிமதுரப் பாடல்களில் ஒன்று இது. பாடல் எண் 504.

‘மைவார் குழல்மட மங்கையர் தங்கள் வதுவை உன்னிக்
கைவாரணம் கடவும் பெருமானைக் கலுழ்ந்து அழைத்து உன்
செவ்வாய் அமுதம் அளைந்த செஞ்சாந்தம் சிதையப் புல்லி
இவ்வாறு செய்தது எல்லாம் அவர் மேனியில் ஏறுவதே’

தஞ்சைவாணன் கோவை

மற்றுமோர் சிறந்த கோவை இலக்கிய நூல் இது. எழுதியவர் பொய்யாமொழிப் புலவர். உரையாசிரியர் சொக்கப்ப நாவலர். இதுவும் என் கைவசம் இருக்கும் 1952-ல் வெளியான கழக வெளியீடு. திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், அரிய நூற்பல வெளியிட்ட பொன்னான காலம் அது. எதுகையாய் இன்றைய காலம் பற்றி ஒரு வரி சொல்லலாம்தான்.

கோவை இலக்கியத்தின் பெருமை வீசிப் பறக்கும் அரிய நூல் தஞ்சைவாணன் கோவை என்மனார் புலவ. இக்கோவை நாற்கவிராச நம்பி அகப்பொருள் விளக்கத்துக்கு இலக்கியமாக உள்ளது என்பார்கள். பொதுவாகக் கோவை என்பது ‘உருவும் திருவும் பருவமும் குலனும் குணனும் அன்பும் முதலியவற்றால் தம்முள் ஒப்புமை உடையவராய் தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும் அடுப்பவும் அன்றிப் பால் வகையால் தாமே எதிர்ப்பட்டுக் களவிற் புணர்ந்து இன்பம் துய்த்துப் பின் கற்பு நிலையில் இற்கிழமை பூண்டு விழுந்து புறம் தந்து அடுத்தவர்ப் பேணி ஒழுகி வரும் இல்லற இயற்கை நுட்பத்தைப் புனைந்துரை வகையால் எடுத்துரைத்து ஒரு கோவை ஆக்கி, கற்றோர்க்கும் கேட்டோர்க்கும் இன்பம் பயக்கும் துள்ளல் ஓசையால் அமைந்த கட்டளைக் கலித்துறைப் பாக்களால் பாடப் பெறுவது ஆகும்’ என்கிறார் உரையாசிரியர்.

ஒன்று புலனாகிறது, அகத்துறை பாட, கட்டளைக் கலித்துறை பாவினம், துள்ளல் இசை என்பது.

அகப்பொருள் துறையில் முதலில் கைக்கிளை நிகழ்வதுதான் இயல்பு. இந்த இடத்தில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம். அன்று காமம் என்றாலும் காதல் என்றே பொருள். இன்றும் தமிழ் சினிமாவில் காதல் எனப்படுவது கைக்கிளையில் தானே தொடங்குகிறது. அதாவது கைக்கிளை என்பது ஒருவர் விரும்ப மற்றவர் விரும்பாதிருத்தல். இன்று தாம்பத்யம் என்பதே கைக்கிளையாகவே உள்ளது. அகத்துறையில் இன்னொன்று பெருந்திணை. புரியும் விதமாகச் சொன்னால் பொருந்தாக் காமம். அதற்குமேல் வியாக்யானம் அவசியம் இல்லை.

கைக்கிளைக்கு எடுத்துக் காட்டாக சங்க இலக்கியத்தில் ஏராளம் பாடல்கள் உண்டு. பதினைந்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டு பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை 1938-ல் பதிப்பித்த புறத்திரட்டு என்ற நூலில், காமத்துப்பால் எனும் பிரிவில் கைக்கிளை என்று ஒரேயொரு அதிகாரம். அதில் 65 பாடல்களைத் தொகுத்துள்ளனர். அனைத்தும் முத்தொள்ளாயிரப் பாடல் வெண்பாக்கள். பெரும்பாலும் சங்க இலக்கிய கைக்கிளைப் பாடல்கள் பெண்ணின் ஒருதலைக் காமமாக சித்திரிக்கப்படுகின்றன. பெண்ணியவாதிகள் சங்க இலக்கியப் புலவர்களின் ஓரவஞ்சனை பற்றிக் குரல் எழுப்புவதிலும் உண்மையுண்டு.

முத்தொள்ளாயிரத்துக் கவிதை நயத்துக்கு, கவிதைச் செழிப்புக்கு ஒரேயொரு பாடல் மேற்கொள் : பொழிப்புரை எழுதாமல் பதம் மட்டும் பிரித்துத் தருகிறேன், புரிந்து கொள்ளும் வசதிக்காக.

‘யான் ஊடத் தான் உணர்ந்த யான் உணரா விட்டதன் பின்
தான் ஊட யான் உணர்த்தத் தான் உணரான் – தேனூறு
கொய் தான் வழுதி குளிர் சாந்து அணி அகலம்
எய்தாது இராக் கழிந்த வாறு’

அகப்பொருள் துறையில் கைக்கிளையில் தொடங்கி களவுப் புணர்ச்சிவரையில் நீண்டு பின்பு பிரிவு பொருள் தேடப் பிரிதல், பரத்தையிற் பிரிதல் எனச்சென்று பின் கூடி இல்லறத்தின் வழிப்படுவது.

அகத்துறையில் ஐந்திணை என்ப ஐவகை ஒழுக்கம். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ப. அவை இருத்தல், புணர்தல், பிரிதல், ஊடல், இரங்கல் என்பன. முன்பே சொன்னது போல் இவையாவும் நிகழும் முன்பு நிகழ்வது கைக்கிளை. கைக்கிளை இன்றேல் தமிழ் சினிமாவும் இல்லை மாதோ!

பொய்யாமொழிப் புலவர் தொண்டை மண்டலத்தில் சைவ வேளாண்மை குடிப் பிறப்பு. இவர் காளியின் அருள் பெற்றவர் எனக் கருதுகிறார்கள். காளிதாசன் போல, கவி காளமேகம் போல. பொய்யாமொழி என்பது இவரது இயற்பெயரல்ல. அதனால் என்ன? நாளை என் இயற்பெயர் மறைந்து போய் இந்தப் புனைபெயர் தானே நிற்கும்!

சிற்றிலக்கியங்கள் அற்புதமான கவிநயங்கள் கொண்டவை. பாங்கி, தலைவனுக்கு தலைவியைப் பற்றிப் பெருமைப் படுத்திக் கூறும் கவிதை வரி – ‘குவளை சிவத்துக் குமுதம் வெளுத்தக் குறையல்ல வேல்’. இந்த வரியின் பொருள், தலைவிக்குக்க் குவளை போன்ற கண் சிவந்திருக்கும், குமுதம் ஒக்கும் வாய் வெளுத்திருக்கும், வேறு குறைபாடு ஒன்றும் கிடையாது என்பது.

பெண்ணின் கண்ணுக்குப் பல இடங்களில் கம்பன் விஷத்தை உவமை சொல்வான். பொய்யாமொழிப் புலவர், ‘உழையும் வெங்காளமும் போலும் கண்’ என்பார். மானும் கொடிய விடமும் போன்ற கண் என்பது பொருள். பாடலுக்குப் பாடல், தஞ்சைவாணன் கோவையில் முலையழகு தான் முக்கியமான பாடுபொருள். என்றாலும் பல சொல்லாட்சிகள், கயலைப் பொருத கண்ணாள் போன்றவை நயம் உடைத்தன.

தலைவி, தலைவனுடன் உடன் போக்கு ஆனபின் செவிலியின் புலம்பல், நற்றாயின் புலம்பல் ஆகியவை உணர்ச்சி செறிந்தவை.

தஞ்சைவாணன் கோவை ஐம்பத்தாறு நாட்கள் நிகழ்வுகளைக் கொண்டது என்பதோர் உபரித் தகவல்.

திருமணம் ஆகாத பெண்கள் வீட்டில் வைத்திருக்கும் அன்னையருக்கு இரவு உறக்கம் இராது என்பார்கள். தலைவன் இரவுக் குறி விடுக்க, அதற்கு வரும் இடையூறுகள் ஒன்று தாய் துஞ்சாமல் இருப்பது. அதிலோர் பாடல் :

‘ஆழி அகன் புவி உள்ளன யாவும் அடங்கி, நள்ளென்று
ஊழி முடித்தன; ஓங்கு இருள் யாமத்தும், ஓடையினும்
தாழியினும், போது அலர் தஞ்சைவாணன் தரியிலர் போல்
தோழி, நம் அன்னை கண்ணே துயில் கோடல் துறந்தனவே’

’தோழியே, கடல் சூழ்ந்து அகன்ற புவியிலுள்ளன யாவும் அடங்கி, நள்ளென்னும் ஓசையோடே கூடி, யுக முடிவு காலம் போன்று இருள் வளரப்பட்ட யாமத்தும், ஓடையிடத்தும், தாழி இடத்தும் போதுகள் அலரும் தஞ்சைவாணன் தரியிலர் போல், நம் அன்னை கண்துயில் கொள்ளுவதைத் துறந்தனள்’ என்பது உரை.

ஒருதுறைக் கோவை

கோவைப் பிரபந்தம் எண்ணில. அகப்பொருள் இலக்கணத்தின் படி துறைகள் அமைத்து, நிரல் படக் கோத்தல் கோவை. கோவை அகப்பொருள் இலக்கணத்துக்கான இலக்கியம். அகப்பொருட் துறைகள் நானூறு என்பர். எல்லாத் துறைகும் அமையப் பாடுவது ஐந்திணைக் கோவை. ஒரே துறையில் பாடினால் ஒருதுறைக் கோவை. பாடல்கள் கட்டளைக் கலித்துறையில் அமைந்திருக்க வேண்டும். கட்டளைக் கலித்துறை என்ன என்பதை இலக்கணம் கற்ற புலவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இலக்கணம் கற்ற புலவர் என்பவர் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் என்று அல்ல.

இதுவரை நாணிக் கண் புதைத்தல், வெறி விலக்கல், பாலனைப் பழித்தல், புறங்காட்டல் முதலிய துறைகளில் கோவைகள் பாடப் பெற்றுள்ளன. உலக இன்பம் வெளிப்படையான பொருள் என்றும் கடவுள் இன்பம் குறிப்புப் பொருள் என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு துறைகளிலும் ஒவ்வொரு பாடலம் நானூறு பாடுவது கோவை எனில், ஒரேயொரு துறையில் நானூறு பாடல் பாடுவது ஒரு துறைக்கோவை. தமிழின் அகன்ற இலக்கண வெளி நம்மை ஆச்சரியப் படுத்துகிறது.

ஒருதுறைக் கோவைக்கான புதுத்தடம் போட்டவர் அமிர்தக் கவிராயர். இதை ‘வல்லான வெட்டிய வாய்க்கால்’ என்கிறார் வித்வான் கா.நயினார் முகமது.

தளவாய் இரகுநாத சேதுபதியின் ஆஸ்தான விதவான் அமிர்த கவிராயர். காலம் 17-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம்.

’நாணிக் கண்புதைத்தல்’ எனும் சொல்லாட்சியே அற்புதம். இது அகப்பொருள் துறை நானூற்றில் ஒன்று. இந்த ஒருதுறைக் கோவைக்கு இறைவணக்கம் இல்லை. மானசீகமாய் இறைவணக்கம் செய்து கொண்டிருக்கலாம் எனினும் இஃதோர் மரபு மீறல். இந்த நூலின் உரையாசிரியர் மகாவித்வான் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு.

’தோறும் கரும்பும் எனது ஆருயிர் வந்து சூறை கொள்ள
நீளும் கணை கொண்டு நின்றால் எவ்வாறு உயிர் நிற்கின்றதே’

எனும் பாடல் வரிகளுக்கு உரையாசிரியர் எழுதுவது :

’நீயும் கணை கொண்டு நின்றால் எவ்வாறு உயிர் நிற்கின்றதே என்றமையால் கண்புதைத்தலும், தோளும் கரும்பும் எனது ஆருயிர் வந்து சூறை கொள்ள என்றமையால் தனப்புறப்பாடும் தோன்றின. கரும்பு – தொய்யிலும்(மதன் வில்)’ என்று. எனினும் புரியவில்லை என்றால் அதற்கு யாம் என்ன செய்வது?

இறுதியில், கற்பு நிலையில் கூடி மகிழ்ந்து இல்லறம் ஒம்புவதே கோவை இலக்கியங்களின் முடிவுரையாகும்.

வேதாந்த தேசிகர் எழுதிய மும்மணிக் கோவை எனும் நூலையும் கோவைப் பிரபந்தங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.

உலா

தலைவன் உலாவரும் சிறப்பைப் பாடுவது உலா இலக்கியம். அவனை, ஏழ் பருவத்துப் பெண்களான பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்பவர் காதல் கொள்வதான பாவனை. தமிழர் பண்பாடு, பெண்களின் பருவங்களை ஏழாகப் பிரிக்கின்றது. ஆய்வாளர்கள் அவர்களின் வயது எல்லைகளையும் வகுத்துள்ளனர். பேதை 7-11, பெதும்பை 11-13, மங்கை 13-19, மடந்தை 19-25, அரிவை 25-31, தெரிவை 31-40, பேரிளம் பெண் 40க்கு மேலே.

கம்பன், திரு அவதாரப் படலத்தில், இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கனனை ஈனும் கோசலை, கைகேயி, சுமித்திரை எனும் தயரதன் தேவியரைத் தெரிவையர் என்கிறார்.

தெய்வங்கள், மக்களைப் பாடும் உலாக்கள், உலாப்புறம் என்று வழங்கப்பட்டது.

உலாக்கள் கலிவேண்பாவில் அமைந்தன. ஒரு எதுகை அமைந்த இரண்டிரண்டு வரிகள். இவற்றைக் கண்ணி என்றார்கள்.

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர், குலோத்துங்க சோழன், அவன் மகன் விக்கிரம சோழன், அவன் மகன் இராசராச சோழன் என மூவர் அவைக்களத்தின் புலவர். அவர் மூவர் மீதும் உலாப் பாடினார். அவை மூவருலா என அழைக்கப்பட்டது. இதன் காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு.

சேரமான் பெருமான் நாயனார், சிவன் மீது பாடிய உலா ஆதி உலா எனப்பட்டது. அடுத்தது ஒட்டக்கூத்தரின் மூவருலா. மூவருலாவில் முதலான குலோத்துங்க சோழன் உலா 387 கண்ணிகள். ஈறாக ஒரு தனி வெண்பா.

உலா வருபவர்களுக்கான வாகனங்கள் உண்டு. ஆதியுலாவில் இடபம் வாகனம் எனில் மூவருலாவில் களிறு வகானம். இடபம் எனில் காளை, களிறு எனில் ஆண் யானை. சொக்கநாதர் உலாவில் தேர் முதலாய ஏழு வாகனங்கள். களிறு, குதிரை, பல்லக்கு ஆகியன உலாவரும் வாகனங்கள் என பிரபந்த தீபிகை கூறும்.

உலா வரும் சோழனின் யானை, குதிரைப் படைகள் பற்றிய இரண்டு கண்ணிகள் மட்டும் பார்ப்போம்.
“விட்டு மதம் பொழியும் வேழம், திசை வேழம்
எட்டும் ஒழிய, புகுத்து ஈண்ட – கட்டி
இரவிக்கு நிற்பன ஏழும் ஒழியப்
புரவிக் குலம் முழுதும் போத”

என்றொரு பாடல்.

குலோத்துங்கன் உலா வரும்போது, மதயானைகளும் எட்டுத் திசையானைகளும் நீங்கலாக மற்றுள யானை யாவும் வந்தன. கதிரவன் தேரில் கட்டிய ஏழு குதிரைகள் தவிர மற்று எல்லாப் புரவிகளும் வந்தன என்பது பொருள். சுவாரசியமான மிகைக் கற்பனைதான்.

சோழனின் உலாவின்போது, அவன் மீது காதல் கொண்டஏழ் பருவத்துப் பெண்களின் மெய்ப்பாடுகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. பெண்கள், குலோத்துங்கன் மீது காதல் கொண்டு காட்டும் மெய்ப்பாடுகளை கவனித்து வாசிக்கும் எந்த ஆணுக்கும் தானே குலோத்துங்க சோழனாக இருந்திருக்கலாம் என்று தோன்றுவதைத் தவிர்க்க இயலாது.

கவிநலம் உண்டென்றாலும் தமிழ் வளம் உண்டென்றாலும் ஏழு பருவத்துப் பெண்களுக்கும், மாதிரிக்கு மட்டும் சில கண்ணிகள் ஈன்று வழங்கப் பெறும், பேதைப் பருவத்தில் இருந்து:

‘ஆடாத தொகை, அலராத புண்டரிகம்
பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை-சூடக்
குளிராத திங்கட் குழவி – அளிகள்
இயங்காத தண்கா,  இறக்காத தேறல்
வயங்காத கற்பக வல்லி’

பேதைப் பருவம், கைக்கிளைத் திணை, பவனி காணும் வேட்கை. அவயவங்களும் மனவுணர்ச்சியும் பூரணமான பரிமாணம் அடையாதபடியில் மேற்கண்ட உவமைகள்.

மேகம் முழங்கினாலும் தேர் நின்று ஆடாத தொகை மயில்,
சூரியனைக் கண்டாலும் முகம் மலராத தாமரை,
சொற்களின் பாகுபாடு பயிலாத செவ்வி மொழி கூறும் கிளி,
சூடும்படி முறி தளிராத, தழையாத மாந்தளிர்,
குளிர்ச்சி கூடாத பிறைத் திங்கள், பிள்ளை நிலா,
வண்டினம் சஞ்சரிக்காத குளிர்ந்த சோலை,
விளைந்து இறக்காத தேறல்,
விளக்கம் இல்லாத கற்பகக் கொடி,

எனப்பொருள்படும்போது மன அறிவு, கட்சி, ஓசை, பரிசம், இடம், உரு, பயன், பண்பு என பேதைப் பருவத்தின் உவமைகள். நான் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். விரிவான உரையாசிரியரின் விளக்கம் வாசிக்க வியப்பு ஏற்படுகிறது.

சிற்றின்பமும் பெண்பாற் கவர்ச்சியும் முலை வனப்புகளும் வடிவங்களும் திகட்டத் திகட்டப் பாடப்படுகின்றன. உலகில் வேறெந்த மொழியிலும் முலையின் அழகுக்கும் வடிவத்துக்கும் இத்தனை சொற்கள், உவமைகள் பயன்படுத்தப்பட்டிருக்குமா என எவரும் கண்டு சொல்லலாம். முன்பு இது பற்றியோர் கட்டுரை எழுதினேன். பேராசிரியர் (ஓய்வு) ஒருவர் எனைப் புறம்போக்கு என்றார். தமிழின் கற்பு கெட்டுப் போயிற்றாம். சிற்றிலக்கியங்கள், குறிப்பாக உலாவும் தூதும் வாசிக்கும் எவரும் உணரமுடியும், பெண்ணைப் போக சம்பத்தாக மட்டுமே புலவர்கள் பாத்திருக்கிறார்கள் என்று. இல்லையென்றால் “காமத் திரவியமே” என்பானா ஒரு பெரும்புலவன்?

மன்னர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள், ஸ்திரீலோலர்கள் எனும் பொதுப் பகுப்பில் வருபவர் பலரையும் போற்ற, பாராட்ட, மகிழ்விக்க, கிளுகிளுபூட்ட புலவர் பெருமக்கள் பெரும்பாடு பட்டு, இலக்கணம் கற்று, அணி, உவமை, அலங்காரம் யாவும் பயன்படுத்தி சிற்றிலக்கியங்கள் படைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

எனின தமிழ் கவிதை நயம கருதி இந்த நூற்களைத் தள்ளி விடுதற்கும் இல்லை.

மங்கைப் பருவத்தினள் மெய்ப்பாடு காட்டும் பாடல் ஒன்றுடன் மூவருலா அறிமுகம் முடித்துக் கொள்ளலாம்.

‘உருவ வரிக்கண் ஒழுக ஒழுக
புருவம் உடன் போதப் போத, வெருவி
வனமுலை, விம்மி வளர வளர
புனைதோள் புடை போதப் போத, வினைவர்
அருங்கலை அல்குல் அகல அகல
மருங்கு போய் உள் வாங்க வாங்க, நெருங்கு
பரவர ராச பயங்கரன் மெல் வேட்கை
வரவர ஆற்றாத மங்கை’

எனப்போகும் பாடல் நான் மேற்சொன்ன கூற்று- பெண்ணைப் போகமாக மட்டுமே பார்ப்பதற்கான ஆதாரம். என்ன செய்வான் புலவன்? பாவம், பரிசில் வாழ்க்கை.

பெரும்பாலும் தலைவனின் அங்க வர்ணனைகள் இடம் பெறும் ஈண்டு. காப்பியங்கள் பலவும், சீவக சிந்தாமணி, பெருங்கதை, கம்பராமாயணம் என்பனவும் முத்தொள்ளாயிரத்தின் சில பாடல்களும் உலா வருகின்ற தலைவனையும் காமுறும் தலைவியையும் பேசுகின்றன. தலைவன் இளம் பருவத்தினனாக இருக்க வேண்டும் என்கிறது சிதம்பரப் பாட்டியல் எனும் நூல்.

பெரிய குதிரைகள் பூட்டிய தேரில் சேர மன்னன பவனி வருகிறான். பவனி வரும் அரசனைப் பார்த்தால் மகளுக்கு காதல் நோய் உண்டாகி விடும் என்று தாய்மார்கள் கதவுகளை அடைக்கிறார்கள். உலா வரும் மன்னனைக் காண மகளிர் கதவைத் திறக்கிறார்கள். தாயார் அடைக்க, மகளிர் திறக்க, கதவின் குடுமி தேய்கிறது என்பது முத்தொள்ளாயிரம்.

‘தாயர் அடைப்ப மகளிர் திறந்திட,
தேயத் திரிந்த குடுமியவே! – ஆய்மலர்
வண்டு உலா அம் கண்ணி வயமான் தேர்க் கோதையை,
கண்டு உலா அம் வீதிக் கதவு’

என்பது பாடல்.

பிற உலாக்கள்

உ.வே.சா பதிப்பித்த உலா நூற்கள் ஒன்பது- கடம்பர் கோயில் உலா அவற்றுள் ஒன்று. 383 கண்ணிகள் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. கடம்பர்கோயில் உலாவின் நாயகன் கடம்பவன நாதர். கடம்பர் கோயிலின் அம்மன் பெயர் முற்றாமுலை அம்மை. வடமொழியார் பாலகுசாம்பிகை என்றனர்.

இன்னொன்று திருக்கழுக்குன்றத்து உலா. 409 கண்ணிகள். ஆசிரியர் 18-ம் நூற்றாண்டு அந்தகக் கவி வீரராகவ முதலியார். வேறொன்று திருக்காளத்திநாதர் உலா. 578 கண்ணிகள். ஆசிரியர் சேறைக் கவிராசபிள்ளை. மற்றொன்று சங்கரலிங்க உலா. 312 கண்ணிகள். ஆசிரியர் பெயர் அறிந்தோம் இல்லை. சேரமான் பெருமான் நாயனார் இயற்றிய ஆதியுலாவும் அவற்றுள் அடக்கம். தவிர ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா என்றழைக்கப்பட்ட மூன்று உலாக்கள் விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, மற்றும் இராசராச சோழன் உலா.

உலா இலக்கியம் எட்டாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இலக்கிய வகை என்றும் இதுவரை 63 உலாக்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன என்றும் சொல்கிறார்கள். பனையோலைக் கடவங்களில் இன்னும் சுவடிகள் கிடக்கக் கூடும்.

நம்பியாண்டார் நம்பி இயற்றிய ஆறுடைய பிள்ளையார் உலா மாலை, ஏகாம்பரநாதர் உலா, ஞான வினோத உலா, வானைக்கா உலா, திருப்பனந்தாள் உலா, மதுரைச் சொக்க நாதர் உலா, கயிற்றாறு அரசன் உலா, சிவந்து எழுந்த பல்லவ ராயன் உலா, திருப்பூவன நாதர் உலா, இரத்தினகிரி உலா, திருவேங்கட உலா, தஞ்சைப் பெருவுடையார் உலா, சங்கம் சோழன் உலா எனப்பல இருக்கின்றன.

உலா நூல்களில், எழு பருவத்துப் பெண்களின் விளையாட்டு அல்லது பொழுது போக்குகள் குறிப்பிடப்படுகின்றன. பேதைப் பருவம்- பாவை, பெதும்பைப் பருவம் – கழல், மங்கைப் பருவம் – பந்து, மடந்தைப் பருவம் – ஊசல், அரிவைப் பருவம்- அம்மானை, தெரிவைப் பருவம்- பேரியாழ் வாசிப்பு, பேரிளம்பெண் பருவம் – யாழில் தேவாரம் வாசிப்பு.

திருக்கழுக்குன்றத்து உலாவில் தெரிய வரும் செய்தி, அதன் மற்றொரு தலபெயர் கதலி வனம் என்பதும் தல விருட்சம் வாழை என்பதும். கதலி என்றால் வாழையேதான்.

கடம்பவனநாதர் உலாவில், கடம்பவன நாதன் திருவீதிக்கு எழுதருளல் பாடும் கண்ணிகள் தமிழ் கொஞ்சுகின்றன.

“மறை முழங்க, அந்து தொழுவார் முழங்க, மூவர்
முறை முழங்க, சங்கம் முழங்க – குறைவில் ஐந்து
துந்துபி கல்லென்று தொனிப்ப, அகிலாண்டம் எல்லாம்
தந்த முற்றிலா முலை சமேதனா- எந்தை
உலகு எலாம் கண்டு தொழுது உய்யவே செம்பொன்
இலகு மணித் திருத் தண்டு ஏறித் – திலகநுதல்
மின்னார்கள் ஆட விடையின் கொடி இலங்க
பொன் ஆலவட்டம் அண்டம் போர்த்தாட’

என்று துள்ளி நடக்கும் தமிழ்.

பிற்காலத்தில் அரசியல் தலைவர்கள் மீதும் உலாக்கள் பாடப்பட்டன. காமராஜர் உலா ஒன்றிருப்பதாகப் பேராசிரியர் அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார். பத்திருபதினாயிரம் கைவசம் இருக்குமானால், நாஞ்சில்நாடன் உலா எனவும் எழுதச் சொல்லலாம். ஆனால் தற்போதைய உலாவில் ஏழ் பருவத்துப் பெண்களின் பொது விளையாட்டு, பொழுது போக்கு, குறுஞ்செய்தி அனுப்புவதாக இருக்கும்.

(தொடரும்)

9 Replies to “சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்”

Comments are closed.