செந்தமிழ்க் காப்பியங்கள்

எல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சங்க இலக்கியங்கள் என்பன பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என. ஐம்பெருங்காப்பியங்களின் பெயர் தெரியும். ஐம்பெருங்காப்பியங்கள் என்று பெரும் குரல் எடுத்து நாம் கூவுவது பஞ்ச காவ்யங்கள் எனும் வடமொழி மரபில் இருந்து எடுத்தாண்டது. இங்கு நாம் அறிய வேண்டியது, பஞ்ச காவ்யங்கள் வேறு என்பதும் பஞ்ச கவ்யங்கள் வேறு என்பதும். பஞ்ச கவ்யம் என்பது பசுவில் இருந்து உண்டாகும் பால், தயிர், நெய், மூத்திரம், சாணம் எனும் ஐந்து பொருட்களை மந்திரபூர்வமாகச் சேர்ப்பது.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பன ஐம்பெருங்காப்பியங்கள். இவற்றுள் பின்னிரு நூல்களும் முற்றும் கிடைத்திலது.

சிலப்பதிகாரம் பற்றி ஓரளவுக்கு நமக்கு அறிமுகம் உண்டு. சில பாடல் வரிகளை அறிந்திருப்போம். வழக்குரை காதையில்

மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுகஎன் ஆயுள்!

என்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வரிகளைக் கேட்டிருப்போம்.

தெய்வம் தெளிமின், தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்உரை அஞ்சுமின், புறம்சொல் போற்றுமின்,
ஊன்உண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின்.
தானம் செய்மின், தவம்பல தாங்குமின்.

என்று அறிவுறுத்தும் நூல் சிலப்பதிகாரம்.

முதிரா முலை முகத்து எழுந்த தீயின்
மதுரை மூதூர் மாநகர் சுட்டதும்

என்று கண்ணகியின் கதை பாடுவது.

ஆய்ச்சியர் குரவையில்

அறுபொருள் இவன் என்றே அமரர்கணம் தொழுது ஏத்த
உறுபசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே
உண்டவாய் களவினால் உறிவெண்ணெய் உண்டவாய்
வண்துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

என்றும்

வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண்ஆக்கிக்
கடல்வண்ணன் பண்டு ஒருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையர் கடை கயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

என்றும்

மூவுலகம் ஈர்அடியான் முறை நிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து
சோஅரணும் போர்மடியத் தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே
?’

என்றும் பாடுவது ஆழ்வாராதிகள் அல்லர், இளங்கோ அடிகள் எனும் சமண முனிவன். ஆனால் மேற்கொண்ட பாடல்களின் மொழி, நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடல்களின் மொழிபோல் இருப்பது எனக்கு வியப்பளிக்கிறது. இளங்கோவடிகளின் சொல்லாட்சிகளை ஆழ்வார் சிலர் ஆண்ட காரணமாக இருக்கலாம்.

அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் எனத் தொடங்கி சுஜாதாவின் எளிய அறிமுகம் வரை வந்து சேர்ந்தது சிலப்பதிகாரம். சிலம்புச் செல்வர் என அறியப்பட்ட ம.பொ.சிவஞான கிராமணியாரால் சிலப்பதிகாரம் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. சிலப்பதிகாரத்துக்கு ம.பொ.சி. அற்புதமான விளக்கத் தெளிவுரை ஒன்று எழுதியுள்ளார். 2008-ல் முதற்பதிப்பு வெளிவந்தது. தமிழ்நாடு முழுக்க, சிலம்பைப் பரவலாக்கிய பெருமை ம.பொ.சி.க்கு உண்டு. 1942-ல் ஆகஸ்ட் போரில் ஈடுபட்டுச் சிறையில் கிடந்த போது சிலம்பைப் பயிலத் தொடங்கியதாக ம.பொ.சி. எழுதுகிறார் முன்னுரையில். ஆசிரியரின் உதவியின்றி, திரும்பத் திரும்பப் பயின்றிருக்கிறார். ம.பொ.சி.யின் சிலப்பதிகாரச் சொற்பொழிவு கேளாதார் செவியென்ன செவியே என்ற கேட்டவர் துணிந்து சொல்ல இயலும். ஐம்பெருங்காப்பியங்களில் மற்ற நான்கும் பௌத்த, சமணக் காப்பியங்களாக இருக்கும்போது, சிலம்பு ஒன்றே சமயங்கடந்த காப்பியமாகும்.

மேலும் தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். தமிழின் ஒரிஜினல் காப்பியம். ஒரிஜினல் என்று அழுத்திச் சொல்வதன் காரணம், மற்றெல்லாம் வடமொழியில் இருந்து பெயர்க்கப்பட்டவை, தழுவப்பட்டவை அல்லது மூலமாகக் கொண்டவை, பிற காப்பியங்கள்.

“இக்காப்பியத்திற்கு அரும்பத உரை என்றும், அடியார்க்கு நல்லார் உரையென்றும் இரண்டு உரைகள் உள்ளன. அரும்பதவுரை நூல் முழுவதற்கும் இருக்கின்றது. அடியார்க்கு நல்லார் உரையோ ‘கானல்வரி’ நீங்கலாக, ‘ஊர் சூழ் வரி’ வரையில் உள்ளது. அரும்பதவுரை இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை. இந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் காப்பியம் முழுவதற்கும் உரை எழுதியுள்ளார்” என்கிறார் ம.பொ.சி.

‘இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் – விளக்கத் தெளிவுரை எனும் ம.பொ.சி. உரையின் பதிப்பாசிரியர் பேராசிரியர் ம.ரா.போ. குருசாமி, தனது பதிப்புரையில் காட்டும் சிலம்புச் செல்வரின் மேற்கோள் ஒன்றுண்டு.

“சிலம்பைப் பல்கலைக்கழகப் படிப்பில் இலக்கியத்திற்காக எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் பார்க்கின்ற பார்வை வேறு. பாட்டாளியாக இருந்து, சுய முயற்சியால் படிப்பாளியாக வளர்ந்து, தாய்மொழியான தமிழை மட்டும் கொண்டு வாழவும் வளரவும் வரம் பெற்றுவிட்ட எனது பார்வை வேறு”

ஒருவேளை, சிலப்பதிகாரத்துப் பதிகம் பேசும்,‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்’ எனும் வரி காரணமாக இருக்கலாம்.

இன்னும் வாசிக்கப்பெறும், circulationஇல் இருக்கும் காப்பியமாக, சிலப்பதிகாரத்தைப் பரப்பிய பெரும்பணி ம.பொ.சி. உடையது. ஆனால் அவர் தனது வாழ்நாளில் சிலப்பதிகார விளக்கத் தெளிவுரைப் பதிப்பில் ஈடுபடவில்லை. அவர் ‘செங்கோல்’ இதழில் தொடராக வந்த கட்டுரைகளைத் தொகுத்து, விடுபட்ட சில பகுதிகளுக்கு ம.ரா.போ. குருசாமி அவர்கள் உரை எழுதி, முழுமையானதாக இந்த நூல் தொகுக்கப்பெற்றுள்ளது. இந்த நூலைத் தொகுத்தளித்த ம.பொ.சி.யின் மகன் வழிப் பேத்தி, முனைவர் கவிஞர், தி. பரமேசுவரி மிகுந்த பாராட்டுக்கு உரியவர்.

சிலப்பதிகாரத்துக்கு மிக முக்கிய உரை, உ.வே.சா. பதிப்பித்த ‘சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும்’ ஆகும்.

“14 மூலச்சுவடிகளை ஒப்பு நோக்கி, அரிதின் முயன்று, 1892-ம் ஆண்டு முதன் முதலாக வெளியிட்டார். 1920-ம் ஆண்டு மூன்று கையெழுத்துப் பிரதிகளை மேலும் ஒப்பு நோக்கி இரண்டாம் பதிப்பையும் வெளியிட்டார். 1927-ல் வெளிவந்த மூன்றாம் பதிப்பு மிகத்திருத்தமான செம்பதிப்பாகும்,” என்கிறார் மதிப்பியல் காப்பாட்சியர் ம.வே.பசுபதி.  உ.வே.சா. நூலகம் 2008 வரை சிலப்பதிகாரத்தை 11 பதிப்புகள் கொணர்ந்துள்ளது.

ஆக, சிலம்பு இன்றளவுக்கு காப்பாற்றப்பட்டுவிட்டது. கானல் வரியில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு,

கயல் எழுதி, வில் எழுதி, கார் எழுதி, காமன்
செயல் எழுதித் தீர்த்த முகம் திங்களோ காணீர்

என்று இளங்கோவின் கவித்திறன் காட்ட.

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதி போற்றுவது எண்ணற்பாலது.

நமது காப்பியங்களில் பலவும் வடமொழிக்காவியங்களின் மூலக் கதைகளின் தழுவல்கள், சிலப்பதிகாரம் ஒரு சக்தி வாய்ந்த விதிவிலக்கு. மணிமேகலையும் இன்னொரு தமிழ்க்காப்பியம். சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் மற்றொரு தமிழ்க்காப்பியம்.

மன்னரைப் பாடாத, மாயா ஜாலங்கள் செய்யும் அவதார புருடர்களைப் பாடாத, சிலப்பதிகாரம் எப்படி காலத்தை வென்று நின்றது? பாரதி பாடுகிறார்,’ சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும்’ என்று. ஆம், செய்யுள், தமிழ்ச் செய்யுள்…

மதுரையை அடைந்த கோவலன் தொழில் செய்து பிழைக்கக் கையில் ஏதுமில்லாது வருந்தும் போது, சிலம்பு இருக்கிறது என்றாள் கண்ணகி. சிலம்பு உள கொள் என்று சொல்லலாம் அவள். கணவனை ஏக வசனத்தில் கட்டளை இட இயலாது. சிலம்பு உள கொள்ளுங்கள் என்று சொல்லலாம். வசனமாகிவிடும். சரி, சிலம்பு உள கொள்ளும் என்றாலோ? காலையில் செய்த பொங்கல் மதியம் தின்பது போல் இருக்கிறது. இளங்கோ கையாளும் கவித்தொடர், ‘சிலம்பு கொண்ம்’ என்று. கொள்ளும் என்பது எங்ஞனம் கொண்ம் என்றாயிற்று. இரண்டு ஒற்றுக்கள் வரலாமா, திரிபா, விகாரமா, இடைக்குறையா என்பனவற்றைத் தமிழ்இலக்கணம் கற்றவரைக் கேளுங்கள். ஆனால் எத்தனை வசீகரமாக இருக்கிறது? அதுதான் சிலப்பதிகாரச் செய்யுள்,

வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டு அருளிய அணங்கு, சூர்உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர்உரம் கிழித்த பெண்ணும் அல்லள்

என்று வாயில்  காப்போன், பாண்டியன் நெடுஞ்செழியனிடம் தெரிவிப்பதில் வெளிப்படும் அச்சம், பிரமிப்பு, திகில் எனப் பல்சால் மெய்ப்பாடுகள் தமிழ்ச் செய்யுள் செய்யும் விந்தை.
தமிழில் எழுதப்பெற்ற முதல் காப்பியம் சிலப்பதிகாரம், ஆசிரியப்பா, வெண்பா, இசைப்பாடல்கள் கொண்டது.

மணிமேகலை பற்றி நமக்கு என்ன தெரியும்.

யாராவது ஒரு பாடல் வரி சொல்வீர்களா சகாக்களே?

சிலப்பதிகாரத்தின் காலமும் மணிமேகலையின் காலமும் ஒன்று என்றும், கி.பி. இரண்டாம் நுõற்றாண்டு என்றும் ஆய்வறிஞர்கள் கருதுகிறார்கள். சமகாலத்தில் வலுவான கால ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.சிலப்பதிகாரத்தின், மணிமேகலையின் தொன்மையை சில நூற்றாண்டுகள் முன்னால் கொண்டு வைக்கக் கூடும்.

சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இரட்டைக் காப்பியம் என்கிறார்கள். ஐதராபாத்தையும் செகந்திராபாத்தையும், மும்பையையும் புனேயையும், கோவையும் திருப்பூரையும் இரட்டை நகரங்கள் என்று சொல்வதைப் போல. சிலப்பதிகாரத்தின் பிரதான கதை மாந்தர் கோவலன், கண்ணகி, மாதவி எனில், மணிமேகலையின் கதை மாந்தர் மாதவியின் மகள் மணிமேகலை.

பரத்தமை எனும் மாசடைந்து கிடந்த சோழ நாட்டு அவலத்தைச் சுட்டிக் காட்டுவதற்காகவும் எழுதப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரம். காப்பியத்தின் முதன் மூன்று நோக்கங்கள் – அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பனவே. ஆயினும் பரத்தமை பெருத்துக் கிடந்தது.

பரத்தமை எனும் சொல் நற்றிணை, அகநானூறு, கலித்தொகைப் பாடல்களிலும், பரத்தையர் எனும் சொல் பரிபாடலிலும், பரத்தை எனும் சொல் அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, நற்றிணைப் பாடல்களிலும் பரத்தன் எனும் சொல் அகநானூற்றிலும் ஆளப்பட்டிருக்கின்றன. ஆண் பரத்தனும் இருந்திருக்கிறான்.

மற்றொரு தவிர்க்க இயலாத சமண முனிவர் திருவள்ளுவர். புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, பரத்தமை எதிர்ப்பு என எத்தனை வலுவாகப் பேசுகிறார் என்பதறிவோம்.

மாதவி எனும் ஆடல் மகளின் மகள், கோவலனின் மகள், பெற்ற ஏற்றத்தைப் பாடுவது மணிமேகலை. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய காப்பியம் இது. கூலம் எனில் தானியம் என்று பொருள். கூலக்கடைத் தெரு என்று இன்றும் வழங்கப் பெறுகிறது.

வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு
ஆறைம் பாட்டினும் அறியவைத்தனனென்

என்பது பதிகம்.

கூலம் என்பன – நெல்லு, புல்லு(கம்மம் புல்), வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி எனும் எண்வகைத் தானியங்கள். கூத்த நூலார் கூலம் பதினெட்டு என்கிறார்.

சீத்தலை என்பதோர் ஊர் என அறியாமல், அடுத்தவர் பிழை செய்தால் சாத்தனார் தன் தலையில் எழுத்தாணியால் குத்துவார் என்றும், குத்திக் குத்திச் சீழ் வைத்து அவர் பெயர் சீழ்த்தலைச் சாத்தனார் என்றாகி, அது மருவிச் சீத்தலைச் சாத்தனார் ஆயிற்று என முட்டாள்கள் நமக்குப் பாடம் சொன்னார்கள்.

சிலப்பதிகாரத்தில் கையாளப்பட்ட பாவினங்களே மணிமேகலையிலும். பதிகம் தவிர்த்து 30 காதைகள், 4745 அடிகள். மேலும் நாம் அறிய வேண்டியது சங்ககாலச் சாத்தனார் வேறு, கூலவணிகன் சாத்தன் வேறு என்பதாகும்.

பெளத்தக் கருத்துக்களை வலியுறுத்த எழுந்த பெளத்தக் காப்பியம் மணிமேகலை என்பது வெளிப்படை. மேலும் உலகில் வேறெந்த மொழியிலும் பெளத்த மதத்திற்குக் காப்பியம் இல்லை, மணிமேகலை தவிர என்கிறார்கள். மணிமேகலைக்கு நூலாசிரியர் வைத்த பெயர் – மணிமேகலைத் துறவு என்பதாகும்.  ‘இளங்கோ வேந்தன் அருளக் கேட்ப’ கூலவாணிகன் சாத்தன் முப்பது காதைகளில் ‘மணிமேகலைத் துறவு’ எனும் காப்பியம் தந்தான் என்கிறது பதிகம்.

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக

என்றும்

உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள மதுரைக்
கூலவாணிகன் சாத்தன் கேட்டனன்

என்றும் சிலப்பதிகாரப் பதிகம் தெளிவாகக் கூறுகிறது.

எனினும் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையின் காலங்கள், ஆசிரியர்கள் பற்றிச் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. போபால் வழக்கு போன்றும் போஃபர்ஸ் வழக்குப் போன்றும்.

அற்புதமான பாடல்களைக் கொண்டது மணிமேகலை. குறிஞ்சிப் பாட்டு கபிலர் 99 மலர்களை வரிசைப்படுத்துவதைப் போல, சாத்தனாரும் மணிமேகலை பூக்கொய்யும் காட்சியில் மலர்களை வரிசைப் படுத்துகிறார்.

குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி

சத்தியமாகச் சொல்லுங்கள், இவற்றுள் எத்தனை மலர்களை இன்று நாம் அடையாளம் காட்ட இயலும்?

அறம் வலியுறுத்தும் பல அற்புதமான பாடல்கள் மணிமேகலையில் உண்டு. ஏற்கனவே வேறு சில கட்டுரைகளில் நான் எடுத்தாண்டிருக்கிறேன்.

கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திருந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதி இன்றாகும்

உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே எனும் வரி யாவராலும் அவ்வப்போது கையாளப் படுவது. அது மணிமேகலையின் வரி.

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

மேலும் ஒன்று –

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை ஆவது

மணிமேகலை இராசமாதேவிக்கு அறிவு புகட்டும் பாடல் ஒன்று –

உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ
உடற்கு அழுதனையேல் உன்மகன் தன்னை
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே
உயிர்க்கு அழுதனையேல் உயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வரியது
அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்தொடி
எவ்வுயிர்க்காயினும் இரங்குதல் வேண்டும்

இதுபோல் அறம் பேசும் பல பாடல்கள்.

நம் மூதாதையர் மணிமேகலைக்கு ஏன் உரை எழுதவில்லை என்பது தெரியவில்லை. மகா மகோபாத்யாய உ.வே.சாமிநாதய்யர்தான் முதன் முதலில் அரும்பத உரையெழுதிப் பதிப்பிக்கிறார். மணிமேகலை மூலத்தை முதன் முதலில் அச்சேற்றியவர் திருமயிலை சண்முகம் பிள்ளை என்பார். பின்னர் மணிமேகலையின் முதல் 26 காதைகளுக்கு ந.மு.வேங்கடசாமி நாட்டாரும், இறுதி 4 காதைகளுக்கு ஒளவை.துரைசாமிப் பிள்ளையும் உரை எழுதி முழுமைப்படுத்தியுள்ளனர்.

-o00o-

ஐம்பெருங்காப்பியங்களில் மூன்றாவது சீவக சிந்தாமணி. திருத்தக்க தேவரின் தமிழ்க் கொடை. சிலம்பின் காலம் இரண்டாம் நூற்றாண்டு எனக்கொண்டால், சீவகசிந்தாமணியின் காலம் 7-ஆம் நூற்றாண்டு என்மனார் புலவ. முற்று முடிவான தீர்மானங்கள் இன்னும் எய்தப்படவில்லை. கால ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட இன்னொருவர் சைவக் குரவர்களில் ஒருவரான, திருவாசகமும் திருவெம்பாவையும் எழுதிய மாணிக்கவாசகர். எட்டாம் நூற்றாண்டு என்று கொள்கிறார்கள்.

பொதுவாகத் தமிழ் காப்பிய மரபு, காப்பியத்தைக் காண்டம் எனப் பிரிக்கிறது. சிலப்பதிகாரம் புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்கள். சிலப்பதிகாரக் காண்டங்களின் சிறிய அலகுகள் காதை எனப்பட்டன. மணிமேகலையில் காண்டங்கள் இல்லை. யாவும் முப்பது காதைகள் மட்டுமே!

காண்டங்களாகப் பிரிக்கப்பட்ட மற்றுமோர் காவியம் இராமகாதை எனக் கம்பனால் நாமகரணம் செய்யப்பட்ட இன்று கம்ப ராமாயணம் எனும் பெயரால் வழங்கப்பெறும் காவியம்.  கம்பராமாயணம், பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், என ஆறாகப் பிரிகிறது. பூசை அறையில் சாமி படங்களுடன் வைத்திருப்பது ஐசுவரியம் எனக்கருதிப் பலர் சுந்தரகாண்டம் மட்டும் வாங்கி வைத்துள்ளனர். அது வாசிப்பதற்கு அன்று, தொட்டுக் கும்பிடுவதற்கு. ஆகவே, கடலைப் பொரி விற்பது போல் பல பதிப்பகங்கள் சுந்தர காண்டம் மட்டும் அடித்து இறக்குகின்றனர். கம்பனுக்கு ராயல்டியும் தரவேண்டியதில்லை.

சிலப்பதிகாரத்தில், புகார்க் காண்டத்தில் மங்கல வாழ்த்துப் பாடலை விடுத்து, கானல் வரி தவிர்த்து எட்டுக் காதைகள் மதுரைக் காண்டத்தில் வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, துன்ப மாலை, ஊர் சூழ் வரி, வஞ்சின மாலை விடுத்து எட்டு காதைகள். வஞ்சிக் காண்டத்தில் குன்றக் குரவை தவிர்த்து ஆறு காதைகள். இது சிலப்பதிகாரப் பகுப்பு எனில் கம்பன் ஆறு காண்டங்களில், சிறு அலகுகளாகப் படலம் எனும் பெயரைக் கையாள்கிறான். ஆறு காண்டங்களிலுமாக 118 படலங்கள். பால காண்டத்தில் 23, அயோத்தியா காண்டத்தில் 13, ஆரணிய காண்டத்தில் 13, கிட்கிந்தா காண்டத்தில் 16, சுந்தர காண்டத்தில் 14, யுத்த காண்டத்தில் 39 என. யுத்த காண்டம் அளவிலும் ஆளுமையிலும் பெரியது.

ஐம்பெருங்காப்பியங்களில் கம்பனுக்கு நிகரானதாக, காவிய அமைதி பெற்ற, கவித்துவமும் தீஞ்சுவையும் காமரசமும் செறிந்த 3145 பாடல்கள் அடங்கிய காப்பியம் சீவக சிந்தாமணி. கிட்டத்தட்ட கம்பனில் நாலில் ஒரு பங்கு. ஆனால் ஐம்பெருங்காப்பியங்களில் பெரியது.

ஆனால் திருத்தக்க தேவர், காண்டம் எனும் பெரும் பிரிவும் காதை அல்லது படலம் எனும் சிறு பிரிவும் கொள்ளாமல், இலம்பகம் என்று பிரிக்கிறார். நாமகள் இலம்பகம், கோவிந்தையார் இலம்பகம், காந்தருவதத்தையார் இலம்பகம், குணமாலையார் இலம்பகம், பதுமையார் இலம்பகம், கேமசரியார் இலம்பகம், கனகமாலையார் இலம்பகம், விமலையார் இலம்பகம், சுரமஞ்சரியார் இலம்பகம்,  மண்மகள் இலம்பகம், பூமகள் இலம்பகம், இலக்கணையார் இலம்பகம், முக்தி இலம்பகம் எனப் பதின்மூன்று. இதில் இரண்டு முதல் ஒன்பது வரையிலான இலம்பகங்கள், சிந்தாமணியின் நாயகன் சீவகனின் தேவியர் எண்மர் பெயரால் அமைந்தன. தேவியரில் குளித்துக் கரையேறி, துறவு பூண்டு, முக்தி பெற்ற கதைதான் சீவக சிந்தாமணி.

சற்றுப் பொறாமையாக- சற்று என்ன மிகவும் பொறாமையாக இல்லையா, தேவியர் எண்மர் எனும் போது?

பெருநூல்களை ‘உலகு’ என்று முதற் பாடலில் அமைத்துத் தொடங்குவது தமிழ் மரபு. சில தெய்வப் புலவர்களுக்கு இறைவனே அடியெடுத்துக் கொடுத்ததாகப் புராணங்கள் உண்டு. அடியெடுத்துக் கொடுப்பது என்பது இறைவன் நேரில் வந்து ஏடெடுத்து எழுத்தாணி கொண்டு எழுதி நீட்டுவதல்ல. புத்தியில் தோன்றும் சின்னப் பொறிதான். கும்பமுனி கூட ஒரு சிறுகதையை ‘உலகெலாம்’ என்றே எடுக்கிறார்.

பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் ‘உலகெலாம்’ என்று எடுத்து ‘உலகெலாம்’ என்று முடிக்கப் படுகிறது, சேக்கிழாரால்.

உலகுஎலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்,
நிலவு உலவிய நீர்மலி வேணியன்,
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்

என்று எடுக்கப்பெற்ற திருத்தொண்டர் புராணம், இறுதியில், கலிவிருத்தத்தில் அமைந்த பாடலால்,

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுஉளார் அடியார் அவர் வான்புகழ்
நின்றது;- எங்கும் நிலவி, உலகெலாம்

என்று முடிகிறது.

காவிய கர்த்தா எத்தனை பிரக்ஞை பூர்வமாகச் செயல் படுகிறார் பாருங்கள்.

எழுத ஆரம்பித்தபோது, ஆண்டுக்கு ஒரு முறை 21 நாள் விடுப்பில் மும்பையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம், அன்று நான் மதித்த படைப்பாளிகளை ஓடியோடிச் சென்று சந்திப்பது வழக்கம். சென்னையில் ஒரு நாவலாசிரியரைச் சந்தித்தபோது சொன்னார்- “என் நாவல்களின் கடைசி வரியை முதலில் எழுதி விடுவேன்” என்று. நான் விரித்த குடையைக் கண்ட மாடு போல மிரண்டு போனேன்.

திருவள்ளுவர் முதற் குறலிலேயே,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்றே முடிக்கிறார். ஆனால் ‘உலகு’ என்ற ஈற்றுச் சீர் என்றே வாய்ப்பாடு கொண்ட திருக்குறள்கள் மேலும் 24 உண்டு. அதாவது மொத்தம் 25 குறள்கள். இருபத்தைந்தாவது குரல் இன்பத்துப் பாலில்-

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
‘                 (1103)

தாமரைபோல் சிவந்த கண்கள் படைத்த திருமால் உலகு இனிதென்பார். காதல் நாயகியின் மெல் தோள்களில் மேவித் துயிலும் இன்பத்தை விடவும்  இனியதோ அது? (கவிஞர் சிற்பி உரை)

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எழுதிய முதல் பத்துப் பாட்டு நூலாகிய திருமுருகாற்றுப் படை –

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு

என்று தொடங்குகிறது.

“உலகம் மூன்றும்’ என்று அடியெடுத்து வைக்கிறது வளையாபதி என்கிறார்கள். கம்பனோ எனில்

உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்- அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே

என்று பெரிய எடுப்பாக எடுக்கிறான். கம்பன் பெரிதின் பெரிது கேட்பவன், கனவு காண்பவன். ஆகவேதான் பாரதி ‘எல்லை ஒன்றின்மை எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்’ தமிழை அமரச் சாதி என்கிறான்.

நன்றி : http://www.amarchitrakatha.com

இளங்கோவடிகள், மங்கல வாழ்த்துப் பாடல் முதலில்,

திங்களைப் போற்றுதும்; திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர்தார்ச் சென்னிக் குளிர்வெண் குடைபோன்று இவ்
அம்கண் உலகு அளித்தலான்
‘  என்கிறார்.

சீவக சிந்தாமணி ஆசிரியரோ, ‘மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த’ என்று முதற்பாடலில் இறைவணக்கம் செய்கிறார்.

தீப்பேறு யாதெனில் பன்னிரு திருமுறைகளைப் பேச சைவர்கள் இருந்தனர். திவ்யப் பிரபந்தம், கம்ப ராமாயணம் பாராட்ட வைணவர் இருந்தனர். திருக்குறள் உலகப் பொதுமறை என்று கூவி, எட்டறி கோடித் தமிழர்களும் தலைக்குச் சில குறள்களேனும் அறிந்து வைத்திருந்தனர். சிலப்பதிகாரத்துக்கு உயிர் கொடுக்க ம.போ.சி. இருந்தார். மணிமேகலை பௌத்த காப்பியம். சீவக சிந்தாமணி சமணக் காப்பியம். சீராட்டிப் பாராட்டிப் பேச ஆளில்லை. கற்க ஆளில்லை. பட்டி மன்ற தாசர்களும் துணியவில்லை.

திருவாவடுதுறை மடாதிபதி மூலச் சுவடிகளைக் கொடுத்து, பிற சுவடிகளையும் தேடித் தருவித்துக் கொடுத்து, அரும்பாடுபட்டு உ.வே. சாமிநாதைய்யர் சீவக சிந்தாமணியைப் பதிப்பித்தார், நச்சினார்க்கினியர் உரையுடன். இன்று அது மறு பதிப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் இது ‘செம்மொழியான தமிழ் மொழியே’. தேடிக் கண்டெடுத்தவை பலவற்றையும் மறுபடியும் தொலைக்கத் தயாராகி நிற்கிறோம் நாம்.

‘விதி வலியது. பிடர் பிடித்து உந்த நின்றது’

-o00o-

சிறு காப்பியங்கள் என ஐந்துண்டு நம்மிடம். ஐஞ்சிறு காப்பியங்களில் சில அளவிற் பெரியன. சிறு காப்பியம் என எதனால் அவற்றை அடக்கினர் என்பது தெரியவில்லை. சிலப்பதிகாரம், மணிமேகலையை விடவும் பெரியது சூளாமணி.

ஐஞ்சிறு காப்பியங்களில் முதலாவது சூளாமணி. சூடாமணி என்பதன் திரிபுதான் சூளாமணி. இது ஒரு தலை அணியாகும்.  தோலாமொழித் தேவர் அருளியது. ஏன் ‘அருளியது’ என்று நான் எழுதுகிறேன் என்று கேட்கலாம். ஒரு பீத்தல் சினிமாவை நாம் வழங்கும் என்றும் படைக்கும் என்றும் அளிக்கும் என்றும் விளம்பரப்படுத்தும்போது ஆயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு காப்பியத்தை இயற்றியவரை அருளியவர் என்று சொன்னால் என்ன?

தோலாமொழி என்பது கூட அவர் இயற்பெயராக இருக்க வழியில்லை. பாடல் வரியின் மூலம் அழைக்கப்படும் பெயராயிற்று. திட்டவட்டமாக வரையறை செய்யப்படவில்லை எனினும் இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர். மொத்தம் 2130 பாடல்கள், 12 சருக்கங்கள். இவர் காண்டமும் பகுக்கவில்லை, இலம்பகமும் பிரிக்கவில்லை, காதையும் செய்யவில்லை, படலமும் ஆக்கவில்லை. சருக்கம் என்கிறார் பாருங்கள்.

அறம், பொருள், இன்பம், வீடு பற்றிப் பேசும் சமணக் காப்பியம் இது. பல உரையாசிரியர்கள் இதன் செய்யுட்களை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். சிறு காப்பியம் எனக் கூறப்பட்டாலும் பெருங்காப்பியத்துக்கான சிறப்புகள் அனைத்தும் உடையது.

சீவக சிந்தாமணியைப் புரட்டிப் பார்க்க ஆளில்லை இன்று. சூளாமணியைத் தேடுவது யார்?

ஆனை துரப்ப அரவு உறை ஆழ்குழி
நாநவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடன் இன்பம் மதித்தனை கொள்நீ

என்ற ஒரு சூளாமணிப் பாடல் உலக வாழ்க்கையை விளக்குவது.

யானை துரத்துகிறது ஒருவனை. பாழுங்கிணற்றில் இறங்கித் தப்ப முயலுகிறான். கீழே பாம்புகள் படமெடுத்து ஆடுகின்றன. புற்கற்றைகளைப் பற்றி, பாழ்குழியில் விழாமல் தொங்குகிறான். ஒன்று யானையிடம் மிதிபட்டு சாகலாம். அன்றேல் அரவம் கொத்தி இறக்கலாம். எது நல்ல சாய்ஸ்? இந்நிலையில் பாழ்க்குழியின் பக்கத்தில் நிற்கும் மரத்தில் தொங்கும் தேன் கூட்டில் இருந்து கொட்டும் தேன்துளியை நக்க முயல்வது போல வாழ்க்கை என்பது பாடலின் பொருள். இதில் உரையாசிரியனின் ஓவர் ஸ்மார்ட்னெஸ் ஒன்றுண்டு. பற்றி நான்று கொண்டு கிடக்கும் புற்கற்றையை எலிகள் கத்தரிக்க முற்படுகின்றன என்பதது.

இரண்டாம் சிறு காப்பியம் நீலகேசி. இஃதோர் தத்துவ, தருக்க நூல் என்றும், காலம் கி.பி. 5ம் நூற்றாண்டு என்றும் சமண ஞானி எழுதியது என்றும் கருதுகிறார்கள். நூலாசிரியர் பெயர் கிடைத்திலது. ஈண்டு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, புலிகேசி ஆண்பால் பெயர் எனில் நீலகேசி பெண்பால் பெயர் என்பது.

பண்டைய சமண வரலாற்றில் நீலகேசி என்று ஒரு பெண் இருந்ததில்லை என்கிறார்கள். நீலகேசிக் காப்பியமும் கடவுள் வாழ்த்து, அவையடக்கம், பதிகம் நீங்கலாகப் பத்து சருக்கங்களால் ஆனது. 894 பாடல்கள். இந்நூலுக்கு சமய திவாகரர் எனும் பேராசிரியர் எழுதிய பழைய உரை உண்டு.

நீலகேசியில் இருந்து ஒரேயொரு பாடல் எடுத்துக்காட்டு.

தோற்றமும் நாற்றமும் சுவையுடன் ஊறு இவற்றால் தொடங்கி
ஆதரவும் ஆயிருவல்லார்கள் அஃது அறிந்துரைப்ப
மேற்குலத் தாரொடு இழிந்தவர் என்பது மெய்ம்மை பெறா
நூற்றிறம் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவு உடையவரே

உரையாசிரியர் கூற்று: மருத்துவ நூல் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் மலத்தின் நிறம், நாற்றம், சுவை, ஊறு என்னும் தன்மைகளால் ஆராய்ந்து, அது நோயாளியின் மலமா அல்லது நோயற்ற ஒருவனின் மலமா என்று கூறுவர். ஆனால் அம்மலம் மேல்குலத்தவனின் மலம் அல்லது கீழ்குலத்தவன் மலம் என்று அறிய இயலாது. அதுபோலவே, நுண்ணறிவுடைய சான்றோர், வேதத்தைச் செய்தவர் சிறந்த அறிவுடையோரா அல்லது அறிவில் குறைந்தவரா என்று நூலை ஆராய்ந்து அறிவர். ஆனால் அதனைச் செய்தவர் மேல்குலத்தோரா அல்லது கீழ்க்குலத்தோரா என்பதை அறிய இயலாது.

பாடலின் பொருளுக்குள் இருக்கும் குறிப்பு ஒன்று நம்மை வியப்படையச் செய்கிறது. ஸ்ட்டெதாஸ்கோப் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், எக்ஸ்-ரே, இரத்தப் பரிசோதனை, ஸ்கேனிங் என எதுவும் இல்லாத காலத்து, நாக்கைப் பார்த்தும் கண்ணைப் பார்த்தும், நாடி பிடித்துப் பார்த்தும், தோலைப் பார்த்தும், வயிற்றைத் தட்டி ஓசை பார்த்தும் மூச்சுக் காற்றின் வெப்பத்தைப் பார்த்தும் நோய் அறிய முற்பட்டதன்றியும் மலத்தின் நிறம், நாற்றம், சுவை, ஊறு கண்டு நோயறிய மருத்துவர் முனைந்திருக்கிறார் என்ற வியப்பு அது. அதாவது தன்னையே பரிசோதனைக் கூடமாகப் பயன்படுத்தி  நோய் கண்டு மருத்துவர் தேர்ந்திருக்கிறார் என்பது. தொட்டுப் பார்த்த உடன் சோப்புத் திரவத்தில் கை கழுவித் துண்டில் துடைப்பது போன்றதல்ல அது.

எனக்குள் எழும் கேள்வி யொன்றுண்டு இங்கே. ‘ஆயிரு வல்லார்கள்’ எனும் சொற்றொடரில் வரும் ‘ஆயிரு’ எனும் சொல் பின்பு ‘ஆயுர்’ என்றாகி, ஆயுர்வேதத்துக்கு மூலச்சொல் ஆயிற்றோ என்பதது.

மூன்றாம் சிறு காப்பியம் யசோதர காவியம். இதுவும் ஆசிரியர் பெயரறியாச் சமணக் காப்பியம்.

மத்வாச்சாரியார், உயிர்ப்பலியைத் தடுக்க யாக விதிகளில் மாற்றம் கொண்டு வந்தார். யாகத்தின் போது, உயிர்ப்பலிக்குப் பதில் அரிசி மாவினால் செய்த உருவங்களை தெய்வங்களுக்குப் பலியிட்டு அர்ப்பணிக்கலாம் என்பதது. அதனையும் மறுக்க எழுந்தது யசோதர காவியம். பாவனைக் கொலை கூட வினைக்குக் காரணமாகும் என்பதால், அதன் தீய பயன்கள் பல பிறவிகள் தொடர்ந்து வந்து துன்புறுத்தும் என்பதை இச்சிறு காப்பியம் வலியுறுத்துகிறது.

320 பாடல்கள், நான்கு சருக்கங்களால் ஆனது இந்நூல். வடமொழி மூல நூலின் மொழிபெயர்ப்பு இது என்கிறார்கள். மூல நூலின் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டின் முற்பகுதி என்றும் மூல நூலாசிரியர் வாதி ராஜ சூரி என்பவர் என்கிறார்கள்.

நான்காம் சிறு காப்பியம், ‘உதயண குமார காவியம்’. இது ஆறு காண்டங்களால் ஆனது. ஆசிரியர் பெயரும் இல்லை, காலம் பற்றிய குறிப்பும் இல்லை. கொங்கு வேளிர் இயற்றிய பெருங்காப்பியமான, இன்று முற்றும் கிடைத்திராத, பெருங்கதையின் உதயணன் வரலாறுதான் இச்சிறு காப்பியத்திலும் காணப்படுகிறது. இதன் மூலமும் வடமொழிக் காப்பியம்தான். 367 பாடல்கள். உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம், துறவுக் காண்டம் என ஆறு காண்டங்களால் ஆனது.

உதயண குமார காவியத்தின் காண்டங்களையும் உள் அமைந்த செய்யுள்களையும் கருத்தில் வைத்துக் கொள்ள அறுசீர்க் கழில்நெடிலடி ஆசிரிய விருத்தம் ஒன்றும் உள்ளது. இப்படித்தான் பதிகத்தில் நூல் பற்றிய சுருக்கத்தையும் ஆசிரியர் வரலாறும் கூறினார்கள். எத்தனை காண்டங்கள் எத்தனை பாடல்கள் என்று பாடல்களும் எழுதி வைத்தார்கள். சங்க இலக்கியத் தொகை நூற்களுக்கே இந்த மரபு உண்டு. பத்துப்பாட்டில் எத்தனை நூல்கள், எட்டுத்தொகையில் எத்தனை நூல்கள் என்பதற்குப் பாடல்களிலேயே பட்டியல் உண்டு.

ஐந்தாம் சிறு காப்பியம் ‘நாக குமார காவியம்’. இதுவும் சமணக் காப்பியம், நூலாசிரியன் பெயர் அறியோம். காலம் 12-ம் நூற்றாண்டுக்கு முன்னர் என்கிறார்கள். வட மொழியில் பஞ்சமி சரிதம், நாக குமார சரிதம் எனும் இந்த நாக பஞ்சமி சரிதம் உள்ளது. ஐந்து சருக்கங்கள் கொண்ட இந்த நூலின் பாடல்கள் 170.

சுவாரசியமான தகவல் ஒன்று. நாக குமாரனின் ஆயுட் காலம் 1164 ஆண்டுகள். இதில் குமார காலம் 300 ஆண்டுகள், பூமியை ஆண்ட காலம் 800 ஆண்டுகள், நற்றவம் புரிந்து வினைகளை வென்ற காலம் 64 ஆண்டுகள்.

இந்தக் கணக்கில் இந்தக் கட்டுரையை எழுதும் கணபதி-சரசுவதி குமாரனுக்கும் ஆயுள் இருக்குமானால் இன்னும் 1100 ஆண்டுகள் மிச்சமுண்டு. சொல்வனத்துக்கு மேலும் 5000 கட்டுரைகள் எழுதலாம். எழுதவும் தமிழில் சேதி உண்டு.

நாககுமார காவியம், தனது 170-வது பாடலில் அறிவுறுத்துவது,

அறமின்றிப் பின்னை ஒன்றும் உயிர்க்கு அரணில்லை என்றும்
மறமின்றி உயிர்க்கு இடர் மற்றொன்றில்லை

என்பதாகும்.

ஐம்பெருங் காப்பியங்களைத் தாண்டி, ஐஞ்சிறு காப்பியங்களைத் தாண்டி வந்தால் நமக்குக் கிடைக்கும் மாபெரும் காப்பியம் 9-ம் நூற்றாண்டு கம்பனின் இராம காதை என்ற கம்ப ராமாயணம். ஆறு காண்டங்கள், 118 படலங்கள், பன்னீராயிரத்துக்கும் அதிகமான பாடல்கள். கம்பன் பற்றி ஏராளமான வழிநூல்கள் உண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும். கம்பராமாயணத்துக்கு மிக முக்கியமான உரை வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் உரை. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து உரையொன்றும் கம்பன் கழக உரையும் இன்றும் வாங்கக் கிடைக்கின்றன. மேலும் பற்பல பதிப்புகளும் உண்டு. சக்தி வை. கோவிந்தன் பதிப்பித்த மூல நூல், பாலகாண்டமும் அயோத்தியா காண்டமும் சேர்ந்தது என்னிடம் இருந்தது. மர்ரே ராஜம் ஐயர் மூலம் மாத்திரம் பதிப்பித்தார். நான் அதை முன்னாள் வைத்துக் கொண்டு 35 ஆண்டுகள் முன்பு பாடம் கேட்டேன், கம்பன் முழுக்க. ஸ்ரீ வைகுண்டம் பதிப்பு ஒன்றிருந்தது. நான் கண்டதில்லை. ‘புலி நகக் கொன்றை’ நாவல் எழுதிய திரு P.A. கிருஷ்ணனின் தந்தையார், பக்ஷிராஜ ஐயங்கார் எனும் தென்கலை வைணவர், பண்டித நேருவின் தோழர், அந்தப் பதிப்பில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. மற்றும் ஏராளமான பதிப்புகள் வந்திருக்கின்றன. பழைய பதிப்புகளில் கலாக்ஷேத்திரம் பதிப்பும் ஒன்று.

கம்ப ராமாயண அகராதி ஒன்று தொகுக்கும் முயற்சி நடந்திருக்கிறது. அ.சே. சுந்தரராஜன், 1971-ல் தொகுத்து வெளியிட்டது. முதலாம் பாகம், அ-ஔ, என்னிடம் உண்டு. பிற பாகங்கள் வந்தனவா என்றோ, யாரிடமாவது உண்டோ என்றோ என்னிடம் தகவல்கள் இல்லை.

மேற்சொன்னவை தவிர முழுமையற்று நமக்குக் கிடைப்பன மிகவும் பிந்திய காலத்து மகாபாரதத் தமிழாக்கங்கள். நல்லாப் பிள்ளை, பெருந்தேவனார், வில்லிப்புத்தூரார் என்ற மூவர். பாரதத்தைத் தமிழில் தந்துள்ளனர். ஆனால் முழுமையாகத் தந்ததாகத் தெரியவில்லை. இவற்றுள் நல்லாப் பிள்ளை பாரதம் நான் கண்கொண்டு கூடப் பார்த்ததில்லை.

சேக்கிழார் எழுதிய திருத் தொண்டர் புராணம் எனப்படும் பெரிய புராணம் ஒரு வகையில் காப்பியம்தான். சைவ நாயன்மார்களின் வரலாறு பேசுவது. பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாவது திருமுறை.

சேக்கிழார், சீவக சிந்தாமணி மீது காழ்ப்புக் கொண்டு பெரிய புராணம் பாடினர் என்று கதை ஒன்றுண்டு. அதற்கு பெரியபுராணத்தில் ஆதாரமில்லை என்கிறார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.

“காவியங்கள் பல திறத்தான. அவைகளுள் சிலவற்றில் உலகைக் காணலாம், சிலவற்றில் உயிரைக் காணலாம், சிலவற்றில் கடவுளைக் காணலாம். மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியங்கள் மிகச் சில. அச்சிலவற்றுள் பெரிய புராணமும் ஒன்று” என்கிறார் திரு.வி.க.

பெரிய புராணத்தை ஒரு காவியம் என்றே கருதலாம். ‘பெரியபுராணம் பௌராணிகத்தை வித்தாகக் கொண்டு எழுந்த நூல் அன்று. அது சரித்திரத்தை வித்தாகக் கொண்டு எழுந்த காவியம்’ என்பது திரு.வி.க.வின் முடிவு.

பெரிய புராணத்தில் சைவத்தைப் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது என்றாலும் சைவர்களுக்கு மட்டுமேயான நூல் அல்ல என்கிறார் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன். எவ்விதம் கம்ப ராமாயணம் என்பது வைணவருக்கான நூல் மட்டுமே இல்லையோ அவ்விதம். பைபிள் என்ற சொல்லை நாம் கிருஸ்துவத்துக்கு மட்டுமே தொடர்பு படுத்திக் கொள்ளவும் இயலாது. சேலம் பகடால நரசிம்மலு நாயுடு ‘இந்து பைபிள்’ என்றொரு அரிய பெரிய தத்துவ நூல் எழுதியுள்ளார் என்பதை நாம் கருத்தில் கொள்ளலாம்.

கம்ப ராமாயணம் போல, அதற்கு முந்திய சீவக சிந்தாமணி போல, அதற்குப் பிந்திய வில்லி பாரதம் போல, பெரிய புராணமும் விருத்தப் பாக்களால் ஆனது. மா. துரைசாமி முதலியார் தொகுத்த யாப்புக் குறிப்பு அட்டவணை ஒன்று சுவாரசியமானது. பெரிய புராணத்தில் ஏழு வகையான விருத்தப் பாவினங்கள் கையாளப்பட்டிருக்கின்றன. அதிக எண்ணிக்கையில் கையாளப்பட்ட விருத்த வகை, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆகும்.

அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 1805
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்        75
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்        280
தரவு கொச்சகக் கலிப்பா             1207
கலி நிலைத் துறை     545
கலி விருத்தம்                  368
வஞ்சி விருத்தம்                           6

மொத்தம் 4286

ஏன் தமிழன் வசன கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் ஓடினான் பாய்ந்து என்பது நமக்குப் புலனாகிறது. மொழியும் தெரிய வேண்டாம் இலக்கணமும் அறிய வேண்டாம்.

மிகவும் பிந்திய காலத்தில் உமறுப் புலவர் யாத்த சீராபுராணமும், கிருஸ்துவக் கம்பர் என்றழைக்கப்பட்ட ஹென்றி ஆல்ஃபிரட் கிருஷ்ண பிள்ளை செய்த இரட்சணிய யாத்ரீகமும், வீரமா முனிவர் அருளிய தேம்பாவணியும் தமிழின் காப்பியங்களே!

-o00o-

இராமாயணமும் மகாபாரதமும் வடமொழி இதிகாசங்கள். ஒன்று சொன்னால் யாரும் வருத்தப்பட்டுக் கொள்ளக் கூடாது. மற்றவரை விடவும் தாய்மொழிப் பற்றும் தமிழ் நேசமும் மாற்றுக் குறைந்தவன் அல்லன் இந்தக் கட்டுரை ஆசிரியன். வலிக்கிறது என்றால் அதற்கு யாம் பொறுப்பல்ல. இந்தியாவுக்கே பொதுவான இதிகாசங்கள் இரண்டுதான். மேலும் இதிகாசம் இல்லை என்பது ஒரு மொழிக்கு இழுக்கும் அல்ல.

இதிகாசம் இல்லாவிட்டால் என்ன? நம்மிடம் இருப்பவற்றை நாம் கற்றுத் துறை போகி விட்டோமா, இதிகாசம் இல்லாத குறை நினைத்து வருந்த, இரங்க? நம்மிடம் இருக்கும் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் போல் வேறு எம்மொழியில் உண்டு? அவையாவும் நமக்கு கரதலப் பாடமா?

விருத்தப் பாக்களால் நெய்யப்பட்ட முதல் காவியம் சீவக சிந்தாமணி. பிற்காலத்தில் வில்லிபுத்தூராரும் விருத்தப் பாக்களாலேயே பாரதம் செய்கிறார். ஆனால் ‘விருத்தம் எனும் ஒண்பாவில் உயர் கம்பன்’ என்கிறார்கள். சீவக சிந்தாமணியில் திருத்தக்கதேவர் கையாண்ட அனைத்து விருத்தப்பா வகைகளையும் கம்பன் மேம்படுத்திக் கையாண்டான் என்கிறார்கள்.

வில்லியின் விருத்தங்கள் குதிரையின் நடையை ஒத்தது என்பார்கள். குதிரையின் நடையை ஐங்கதி, பஞ்ச கதி அல்லது அஸ்வ கதி என்பர். குதிரையின் ஐவகையான வேகங்கள். கதி எனில் வேகம். மேற்சொன்ன மூன்றுமே ஆதித் தமிழ் மூலக் காப்பியங்கள் அல்ல. எனினும் ஏன் உயர்கம்பன்? அது கம்பநாடனின் கவி ஆளுமை, தமிழ் ஆளுமை.

சிலப்பதிகாரம் செய்யுள் கட்டமைப்பின் சிகரம். ஆனால் இளங்கோ கையாண்ட பாவினங்கள் அனைத்தையும் கையாண்ட மணிமேகலையில் ஏன் சிலம்பில் உள்ளது போன்ற சுவை இல்லை. பெளத்த நீதி புகட்ட வந்த காப்பியம் என்பதாலா? தமிழ் அழகியலில் சிலப்பதிகாரம் முனைந்து முந்தி நிற்கின்ற காரணமா?

சிலம்பும் மணிமேகலையும் செய்யப்பட்ட பின் ஐந்து நூற்றாண்டுகள் சென்று செய்யப்பட்ட காப்பியம் சீவக சிந்தாமணி திருத்தக்கதேவர் ஏன் விருத்தப்பாக்களைத் தேர்ந்தெடுத்தார்? கம்பன் எங்ஙனம் அதை வழிமொழிந்தான்? பன்னீராயிரத்துக்கும் அதிகமான விருத்தப்பாக்கள்…

தமிழின் வனப்பு, உவமை நலன்கள், இயற்கை வளன், அலங்காரங்கள், அணிகள், அங்கதம், நாடகம், கருணை, போர், வீரம், காதல், விரகம், நட்பு, சகோதரத்துவம் என சகல உச்சங்களையும் தொட்டவன் கம்பன்.

பாரதி, கம்பனின் முயற்சியைப் போற்றுகிறான். ஆம், முயற்சி, அது மிக முக்கியமானது. எதை முயற்சி செய்கிறோம் என்பதும் முக்கியமானது.

’கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது’

என வள்ளுவன் எடுத்துக்காட்டுவது போல, கம்பன் செய்த முயற்சி, சாதனை, எண்ணியெண்ணி வியக்கத்தக்கது.

மற்றுமொன்று, இராமாயணமும், பாரதமும் வடமொழி இதிகாசங்களே ஆயினும் இந்திய மொழிகளில், மரபில், மக்களின் மனதில் பெற்றிருந்த செல்வாக்கு. அது அபரிமிதமானது. சங்க இலக்கியங்கள் இராமனையும் சிலப்பதிகாரம் திருமாலையும் பாடி இருக்கின்றன.

இவற்றுள் மகாபாரதம் மிக மிகச் சிக்கலான உறவுகளைப் பேசும் பெருங்காப்பியம். கதை, கிளைக்கதை, நுண்கதை என விரிந்து போவது. மனிதகுல வாழ்வியல் சிக்கல்கள் பலவற்றையும் ஆராய்வது. அந்த விதத்தில் இராமாயணத்துக்கு இரண்டாவது இடம்தான்.

ஆனால் மற்றெந்தக் காப்பியத்தை விடவும் தமிழில் கம்பராமாயணத்தின் செல்வாக்கு அதிகம்.

கம்பரசம் எழுதப்படலாம். கீமாயணம் எழுதப்படலாம். கொண்டு வந்து போட்டுக் கொளுத்து எனலாம். இராமனைச் செருப்பாலடிக்கலாம், செருப்பு மாலை போடலாம், சீதையின் மேலாக்கை மாநாட்டு ஊர்வலத்தில் விலக்கி விலக்கிக் காட்டலாம்.

ஆனால் கம்பனும் அவனது இராமாயணமும் யாவற்றையும் வென்று வாழும்.

(முற்றும்)