அன்புள்ள முதல்வருக்கு..

வணக்கம். மூன்றாம் முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். மிக அதிகமான எதிர்பார்ப்புகளைச் சுமந்து பதவிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இக்கணத்தில் தமிழகம் எதிர்நோக்கும் சவால்கள் பல. அவற்றுள் சிலவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லவே இக்கடிதம். உங்களுக்குத் தெரியாததல்ல. இருப்பினும், ஒரு சாதாரணக் குடிமகனின் எதிர்பார்ப்புகள் என்னவென்று சொல்லிவிட வேண்டுமென்னும் ஆவலில் இக்கடிதம் எழுதப் படுகிறது.

1. மின்சாரம்: மிக அவசரமாகச் சரி செய்யப் படவேண்டிய ஒரு சவால். குறுகிய காலத்தில் முடிப்பது கடினம். அதுவும், இந்த ஆண்டு கோடையில் ஒன்றும் செய்ய இயலாது. வெளியில் இருந்து வாங்கித் தான் கொடுக்க முடியும். ஆனால், அடுத்த கோடைக்குள் ஏதேனும் செய்தீர்களென்றால் நன்றாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தேவையான மின்சாரத்துக்கான திட்டங்கள் பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை மக்களின் பார்வைக்கு வைத்து, ஓராண்டுக்குள் திட்டங்களைச் செயல் படுத்தத் துவங்கலாம். மாவட்டத் தலைநகரங்களில், மாவட்ட ஆட்சியர்கள், அங்குள்ள மக்களின், நுகர்வோரின் எதிர்ப்பார்ப்புக்களை/ கருத்துக்களை கேட்டு, உங்களுக்குச் சொல்லலாம்.

2. திருப்பூர்: சாயக் கழிவுகளால் ஏற்படும் மாசுகள் ஒரு பெரும் பிரச்சினை. இப்பிரச்சினையினால் கிட்டத்தட்ட 4-5 லட்சம் தொழிலாளிகளின் வாழ்க்கை பாதிக்கப் படுகிறது. பல்வேறு காரணங்களால், மிக முக்கியமாக சுய லாப நோக்கினால், தொழிலதிபர்கள் ஒன்று சேர்ந்து செயல்படாமல் இருக்கிறார்கள். அரசே சாயக் கழிவுகளை ஆலைகளில் இருந்து எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் அவர்களுக்கு சரியான விலையில் கொடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மிகப் பெரும் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவும் போது, செலவுகள் குறைந்து, மிக குறைந்த விலையில் கொடுக்க முடியும். (லிட்டருக்கு 6-7 பைசாவுக்குள் செய்ய முடியும் என்கிறார்கள். உலக அளவில், இது ஒரு பெரும் திட்டமாக இருக்கும். மத்திய மற்றும் உலக மானியங்களைக் கொண்டு மிகக் குறைந்த செலவில் இதை நிறைவேற்றும் வாய்ப்புக்கள் அதிகம். இதை கட்டி, நடத்தும் பணியை உலகின் மிகச் சிறந்த நிறுவனங்கள் யாரிடமாவது விட்டு விடலாம். அரசு நடத்த வேண்டாம் – ஏனெனில், இதில் உபயோகப் படுத்தப் படும் ரசாயானங்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு அரசு நிறுவனம், அதைத் திறம்பட நடத்துதல் கடினம்) இதற்கான, புதுத் தொழில்நுட்பங்களும் இன்று வந்துள்ளன. வருடம் 12000 கோடி ஏற்றுமதி என்பது மிகப் பெரும் விஷயம். தயவு செய்து, இதை விட்டுவிடாதீர்கள்.

3. பாசன நீர்: தமிழகத்தின் பாசன நீர்த் தேவையில் 60 சதத்திற்கும் மேலாக நெல்லுக்கு உபயோகப் படுகிறது. திருந்திய நெற்சாகுபடி என்னும் புது முறையில், ஒரு குத்துக்கு ஒரு நாற்று உபயோகிப்பதும், நீர் நிறுத்திப் பாசனம் செய்யாமல், காய விட்டு, மற்ற பயிர்களைப் போல் நீர் பாய்ச்சுவதும் நல்லதென்று சொல்கிறார்கள். இதனால், தண்ணீர்த்தேவை 50 சதம் குறைகிறதென்றும், மகசூல் 25-40 சதம் அதிகரிக்கிறதென்றும் சொல்கிறார்கள். ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தும் முறை இது – உபரி நீரை அதிக நிலத்தில் பாசனம் செய்ய உபயோகிக்கலாம். நெல் உற்பத்தியை இரு மடங்காக்க முடியும். தேவைப் படும் விதை நெல்லும் குறையும். நீர் தேங்காமல் பாசனம் செய்வதால், நெல் வயல்களில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவின் அளவு குறைந்து, சுற்றுச் சூழல் மாசுபடுவதும் குறையும். வேளாண் துறை, இந்த ஒரு திட்டத்தை உருப்படியாக நிறைவேற்றினால் போதும், தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம். அப்படியே, பொதுப் பணித்துறையின் உதவியோடு, வாய்க்கால்களைச் சீரமைத்து, நீர்ப் பாசனம் பெறும் பரப்பளைவையும் அதிகரிக்கலாம். இதை, 2011 ஜூனில் இருந்தே துவங்கலாம். இதைச் சரியாகத் திட்டமிட்டு, நிறைவேற்றினால், இது உலகின் மிகப் பெரும் பசுமைத் திட்டமாக அமையும். உலக வங்கியின் மானியங்களும், நிதி உதவியும் பெற முடியும். 1960 களில் நடந்த பசுமைப் புரட்சிக்குப் பின் வந்த மிகப் பெரும் புரட்சி இதுவாகத்தான் இருக்க முடியும்.

4. சென்னை மெட்ரோ மற்றும் சென்னையின் வெளிச் சுற்றுச் சாலை (Outer ring road): தமிழகத்தின் தலைநகரம் ஒரு உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாறுவது மிக முக்கியம். அதற்கு, இவ்விரண்டும் நிறைவேறுவது இன்றியமையாதது. இவை நிறைவேற, நடுவன் அரசின் உதவி மிக முக்கியமான தேவை. அவர்களுடன் தொடர்புகொண்டு இதை நிறைவேற்ற ஒரு நல்ல அதிகாரியை – திறமையும், சாதுர்யமும் நிறைந்த ஒருவரை நியமித்து, அவருக்கு இதை ஒரு ஐந்தாண்டுக் குறிக்கோளாகக் கொடுத்துச் செய்ய வையுங்கள்.

5. மாம்பழம்: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிகப் பெரும் தானியங்கி பழப் பதனம் செய்யும் நிறுவனங்களை உருவாக்க ஒரு திட்டம் வகுத்துச் செயல்படலாம். சித்தூர்/ஹோஸூர்/கிருஷ்ணகிரி இந்தியாவின் மிக அதிகமாகப் பழம் பதனம் செய்யும் ஒரு மையம். ஒரு ஏக்கருக்கு அதிக மரங்களை நட்டு (high density plantation) வளர்ப்பதன் மூலம், ஒரு ஏக்கருக்கு 40% வரை அதிக மகசூல் பெற முடியும் என ஜெயின் சொட்டு நீர்ப் பாசன நிறுவனம் தன் ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளது. வேளாண் துறை இத்துடன், மானிய விலையில் சொட்டு நீர்ப் பாசன வசதிக் கருவிகளை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்யலாம். உலகின் மாம்பழத் தலைநகராகும் எல்லாத் தகுதியும் கிருஷ்ணகிரிக்கு உண்டு.

6. சாண எரிவாயுத் திட்டம்: தமிழகம் பால் உற்பத்தியில் முண்ணனியில் உள்ள ஒரு மாநிலம். சாண எரிவாயு, சாணத்தில் இருந்து உற்பத்தியாகும் மீத்தேன் வாயுவை சமையலுக்கு உபயோகிக்கும் ஒரு திட்டம். மீத்தேன் எரிவாயுவாக உபயோகப் படுத்துவது, சுற்றுச் சூழலுக்கும் நல்லது. இதை ஒரு “சுற்றுச் சூழல் மாசு குறைக்கும்” ஒரு திட்டமாகத் தயாரித்து, உலக சுற்றுச் சூழல் மாசு குறைக்கும் நிதி நிறுவனங்களிடம் அளித்து, அந்நிதியில், சாண எரிவாயுக் கிடங்குகளை இலவசமாகவே கட்டித் தரலாம். மாதம் ஒரு சிலிண்டர் மிச்சமாகிறதென்றாலும் கூட, வருடம் ரூபாய் 4000 ஒரு வீட்டுக்கு மிச்சமாகும். இந்தக் கிடங்கிலிருந்து வெளிவரும் சாணம் மிக நல்ல உரமாவது ஒரு கூடுதல் பயன். வருடம் கிட்டத் தட்ட 200 கோடி அளவு எரி வாயுவை மிச்சப் படுத்த முடியும். (5 லட்சம் அடுப்புகள் குறைந்த பட்சம் என்றாலும்.)

7. தானியங்கி காரிடார்: இந்தியாவின் மிகச் சிறந்த தானியங்கிக் குழுக்கள் தமிழகத்தில் உள்ளன. அவை அமையப் பெற்றதன் மிக முக்கியக் காரணம் – தேவையான உதிரிப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அருகில் இருப்பதும், படித்த வேலையாட்கள் கிடைப்பதுமாகும். இதில் சமீப காலங்களில், யூனியன் பிரச்சனைகள் எழத் துவங்கியுள்ளன. இவற்றை முளையிலேயே கிள்ளி எறிவது மிக முக்கியமானது. அது மட்டுமில்லாமல், ஒரு உலகத் தரம் வாய்ந்த ஆட்டோமொபைல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சென்னையில் ஏற்படுத்துவது, அந்த நிறுவனங்களுக்கு ஒரு பெரும் ஆதரவாக இருக்கும். சமீபத்தில் குஜராத் போன்ற மாநிலங்கள் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் தருகிறோம் என்றெல்லாம் பேசுகிறார்கள். கவனமாகக் கையாள வேண்டிய பிரச்சினை. தமிழகம் இத்துறையில் முண்ணனியில் உள்ளது. இத்தகுதியை நாம் கட்டிக் காத்து, மேலும் வளர்த்துக் கொள்வது மிக முக்கியம்.

8. சென்னை பெங்களூர் தொழிற் காரிடார்: மும்பை தில்லி தொழிற் காரிடார், ஜப்பானிய நாட்டின் உதவியோடு நிறைவேற்றப் படப் போகிறது. தில்லியில் இருந்து மும்பை வரை, ஒரு தனியான ரயில் பாதையும், அதையொட்டி, இரண்டு பெரும் திட்டமிட்ட நகரங்களும் உருவாக்கப் பட இருக்கின்றன. கிட்டத் தட்ட 3.6 லட்சம் கோடி செலவில் செயல்படுத்தப் போகும் இக்காரிடாரில், 9 தொழிற் நகரங்கள், 3 துறைமுகங்கள், ஆறு விமான நிலயங்களுடன் இணைக்கப் படப் போகின்றன. இத்திட்டம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு மிகப் பெரும் நன்மையாக அமையும் என்று சொல்லப் படுகிறது. இதே போல், சென்னை பெங்களூர் தொழிற்காரிடார் ஒன்றை நான் யோசிக்கலாம். ஹோஸூர், ஸ்ரீபெரும்புதூர் என்னும் இரு மாபெரும் தொழிற்பேட்டைகளோடு, ராணிப்பேட்டை தொழிற்பேட்டையயும் சேர்த்தால் ஒரு மாபெரும் தொழிற்காரிடாரை அமைக்க முடியும். ஆறு வழிப் பாதைச் சாலையும், சென்னை பெங்களூரை இணைக்கும் ஒரு மெட்ரோவும் கூடச் சாத்தியமே. ஒரு வேளை, இதற்கு கர்நாடகம் ஒத்து வரவில்லையெனில், தமிழகமே தனித்து யோசிக்கலாம், ஹோஸூர் வரை. இதனால், சென்னைத் துறைமுகமும், சென்னை சர்வ தேசம் விமான நிலையமும் மிகப் பெரும் பயன் பெறும்.

9. தென் தமிழகம்: கிட்டத் தட்ட கன்யாகுமரி வரை வான் பார்த்த, தண்ணீர் வளம் குறைந்த நிலங்கள் உள்ள பகுதி. இங்கே வேளாண்மை தொடர்பான தொழில்கள் ஏதாவது பெரும் அளவில் திட்டமிடப் படவேண்டியது மிக அவசியம். பனை, ஆடு மற்றும் மரம் வளர்த்தல் போன்ற திட்டங்களை மிக நூதனமான முறையில் செயல்படுத்துதல் சரியாக இருக்கும். இம்மாவட்டங்களில், நில உச்சவரம்புச் சட்டத்தைச் சற்றே தளர்த்தி, பெரும் தொழில் நிறுவனங்களை முதலீடு செய்ய அழைக்கலாம். நீர் வளம் குறைந்த பகுதியாகையால், சொட்டு நீர்ப் பாசனம் போன்ற முதலீடு அதிகமான தொழில்நுட்பங்களைத் தனியார் துறைதான் செய்ய இயலும்.

இலவசங்கள் பல அறிவிக்கப் பட்டாலும், இம்முறை, மக்கள் அதற்கு வாக்களிக்க வில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு, இலவசங்களை வழங்குங்கள். டாஸ்மாக்கின் வருமானம் அதற்கு உதவும். அதைத் தாண்டி, தொலைநோக்குடன் தமிழகம் முன்னேறும் திட்டங்களை, நல்ல ஆலோசகர்களைக் கொண்டு துவங்குங்கள். ஒரு நல்ல, திறமையான முதல்வருக்காக, தமிழகம் தவமிருக்கிறது. வாழ்த்துக்களுடன்..