கற்க கசடற

அடுத்த பத்தி நெடிது. அனைத்து வாக்கியங்களும் கேள்விகள். ஒரு ஓய்வு நாளில், சாய்நாற்காலியில் கிடந்து, என்னைச் சுற்றி இயங்கும் ஊடகங்கள், பொருட்கள் சிந்தனைகளை வைத்து பத்து நிமிடத்தில் என்னால் எழுப்பமுடிந்தவை (நேர்த்தியாக மடினியில் தட்டச்சுவதற்கு அரைமணிக்குமேல் பிடித்தது). எனது நல்வாழ்விற்கு பதில் தேவையான கேள்விகளின் தொகுப்பு . படித்துப்பாருங்களேன்.

அணுக்கரு உலைகள் ஆபத்தா? ஜப்பானில் பழுதடைந்த அணுக்கரு உலையிலிருந்து வெளிப்பட்டிருக்ககூடிய கதிர்வீச்சினால் எவ்வளவு பேர் இறந்தார்கள்? விபத்திற்கு காரணகர்த்தாவான சுனாமியால்? சாலை விபத்துகளிலும் சிகரெட் புகையிலும் இறப்பவர் எண்ணிக்கையைவிட உலகில் அணுக்கரு உலையிலிருந்து வெளிப்படும் கதிரியக்கம் நேரடியாகத் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமா? கதிர்வீச்சில் மனிதனுக்கு பாதுகாப்பான அளவு என்பதே இல்லை என்கிறதே வாராந்திரி, சரியா? கதிர்வீச்சு உற்பத்தியாகுமிடத்திலிருந்து பாதிப்பிற்கான தூரம் என்பதே பொருட்டில்லையா? கல்பாக்கம் (அணுமின்நிலையம்) சுற்றியுள்ள கிராமங்களில் குழந்தைகளின் ஊனத்திற்கு கதிர்வீச்சுதான் காரணமா? முதல் கட்ட ருசுவாக, கல்பாக்கத்தின் கதிர்வீச்சு அண்டாத தமிழ்நாட்டின் ஏனைய கிராமங்களைக்காட்டிலும், கல்பாக்கம் சுற்றியுள்ள கிராமங்களில் குழந்தைகளின் ஊனம் மிகுதியாக இருப்பதன் ஆதாரம் இருக்கிறதா? அடுத்து, கதிர்வீச்சினால்தான் இவ்வகை ஊனம் மனிதனுக்கு ஏற்படும் என்பதற்கான மருத்துவ ருசு உலகில் வேறு எங்கு இருந்தாலும், நமக்கு கிடைத்துள்ளதா? அணுக்கரு கதிர்வீச்சு, தெய்வம்போல், நின்று கொல்கிறதா? தொடர்ந்து ஆட்கொள்ளப்படுவதினால்தான் கதிர்வீச்சினால் தீங்கா? எவ்வகை கதிரியக்கமும் இவ்வகையில் மனிதனுக்கு தீங்கா? வெய்யில்? டியூப்லைட் ஒளி? டிவி? மடினியின் திரையொளி? கொசுவர்த்தியின் புகையை சுவாசித்தா கொசு இறக்கிறது? சுவாசிக்க கொசுவிற்கு மூக்கு உண்டா? கொசுவின் கண்களுக்கு புகை எப்படி, எந்த உருவில் தெரியும்? அப்புகையை சுவாசிக்கும் நமக்கும் தீங்கா? எவ்வளவு சுவாசிக்கலாம் என்று எப்படித் தெரிந்துகொள்வது? ஸ்ப்ளிட் ஏஸிக்கும் சாதா ஏஸிக்கும் என்ன வித்தியாசம்? ஸ்ப்ளிட் ஏஸி மூடிய அறையினுள் இருக்கும் காற்றையே சுற்றிச் சுற்றி குளிரச்செய்கிறதா? அறையின் காற்று எந்த வெப்பநிலையில் இருக்குமாறு ஏஸியை வைக்கலாம்? நம் உடம்பிற்கு தோதான அறை வெப்பநிலை மதிப்பு உள்ளதா? எண்டோசல்ஃபான் பயிர்களுக்குத் தேவையா? மக்களுக்கு ஆபத்தா? செல்போன் பெருகியதால் சிட்டுக்குருவி அருகிவிட்டதா? தேனீக்களுக்கும் ஆபத்தாமே? நம் மூளையை செல்போன் கதிர்வீச்சு பாதிக்கிறதா? செல்போனில் பதியப்பட்டுள்ள தொடுதிரை எப்படி இயங்குகிறது? தொட்டால் ஏன் ஷாக் அடிப்பதில்லை? இதன் வழியே பின்னால் இருப்பதும் தெரிகிறதே, என்ன பொருள் இது? அனாசின் மாத்திரைக்கு தலைவலி இருக்கும் இடம் எப்படித் தெரிகிறது? சுப்பிரமணிக்கும் (நாய்குட்டி) தலைவலிக்குமா? அனாசின் ஒத்துக்கொள்ளுமா? வெயில் காலத்தில் வெள்ளை சட்டை அணிந்தால் உடலுக்கு குளிர்ச்சியா? பின் ஏன் முஸ்லீம் பெண்கள் – அரபு பாலைவன பெடூயின்கள் – சிலர் கருப்பு உடை அணிகிறார்கள்? மதக்காரணம் தாண்டிய அறிவியல் காரணம் உள்ளதா? வயதானதும் நம் தலை முடி நரைப்பதும், கொட்டிவிடுவதும் வெயில் காலத்திய உடல் குளிர்ச்சியுடன் தொடர்பு இருக்குமோ? வெள்ளிக்கிழமை என்று பாம்புப் புற்றுக்கு (பித்துக்கு) பால் தெளிக்க கிளம்புகிறாளே, பாம்பு பால் குடிக்குமா? பின் ஏன் குட்டிகளுக்கு பாலூட்டும் வகையில் அவைகள் இயற்கையில் சிருஷ்டிக்கப்படவில்லை? பாம்பிற்கு பால் கொடுப்பதால் நமக்கு நேரடியாக என்ன பயன்? அப்பயனை நிஜம் என்று சந்தேகங்களை நிவர்த்திசெய்து நம்பும்படி எப்படி நிரூபிப்பது? வாசலில் எதற்கெடுத்தாலும் தலையாட்டுகிறதே பூம் பூம் மாடு; பாகற்காய் சாப்பிடுகிறாயா என்று கேட்டால் என்ன சொல்லும்?
சிந்தையோடையாக தொடுக்கப்பட்டுள்ள இக்கேள்வித்தொகுப்பின் பதில்களை இங்கு விவாதிக்கப்போவதில்லை (தேவையெனில் தனியே செய்வோம்).

சார்பாக மற்றொரு கேள்வியும் அதன் விடைக்கான வாதங்களையே இக்கட்டுரைச் சிந்தையாக்குகிறேன்.

என் பள்ளி மற்றும் கல்லூரியில் நான் படித்த அறிவியல் (சார்ந்த) பாடங்களைவைத்து, மேலே கேள்வித்தொகுப்பிலுள்ள ஒரு சாதாரணா தினத்தில், சாதாரண சிந்தையில், சாதாரணமாக நமக்குத் தோன்றும் கேள்விகளுக்கான விடைகளை என்னால் காணமுடியுமா? உங்களால்?

கல்லூரியில் அறிவியல் சார்ந்த துறையில் படிக்கவில்லை என்றால், பள்ளியில் பத்தாவதுவரை படித்த அறிவியலை வைத்து எவ்வளவு கேள்விகளுக்கு விடை காண இயலும்? அநேக கேள்விகளுக்கு விடைகாண முடியாது என்றால், ஏன்? நாம் படித்தவர்கள் என்றால் என்ன பொருள்?

பயின்ற அறிவியல் பாடங்களின் உபயோகம் மேலுள்ள கேள்விகளுக்கு கேட்டமாத்திரத்தில் அறிவியல் தெளிவுரையுடன் நமக்குத் விடை தெரிந்துவிடவேண்டும் என்பதல்ல. அந்த கேள்விகள் பலவற்றிற்கு விடைகளை முறையாக அணுகுவதற்கே பல தகவல்கள் தேவை. அதைவிட முக்கியமாக, சில கேள்விகளுக்கு ஒரே சரியான விடை என்பதே இருக்கத் தேவையில்லை என்கிற புரிதல்.

பல வருடங்களாய் கல்வி என்று பயின்ற அறிவியல் பாடங்கள், முதலில் நம்மை இவ்வகை கேள்விகளை இயல்பாய் (நமக்குள்) கேட்கச்செய்யவேண்டும். அறிவியல் சிந்தையுடன் பதில்களை விடைகளை அணுகும் மனநிலையை வளர்த்திருக்க வேண்டும். தற்காலிகமாக கிடைக்கும் பதில்களை ஆராய்ந்து சரிபார்க்கும் பகுத்தறிவை வளர்த்திருக்க வேண்டும். படித்த அறிவியலின் தகவல்களை மறந்திருக்கலாம். அறிவியலின் நோக்கை உணர்ந்து மனதில் ஊறி நிலைத்திருக்கவேண்டும். அறிவியல் கல்வி, அனுபவக் கல்வியாகாமல் போகலாம். அனுபவத்திற்கு வேண்டிய கல்வியை சிந்தையை கொடுக்க முடியாமல் ஏட்டுச்சுரைக்காயாக நின்றுவிடக்கூடாது.

தனிமனிதன் படித்திருந்தும் கல்வியறிவு தந்திருக்கவேண்டிய தீர்க்கமும் மனத்திடமும் வளராமல் படித்தால் மட்டும் போதுமா என்று வாழ்வின் பல தருணங்களில் எள்ளலுக்குள்ளாகும் நிலைக்கு பல காரணங்கள் கூறலாம். நாம் ஒரு நூலை மட்டும் வருடுவோம்.

கி.மு. காலத்தில் அலெக்ஸாண்ட்ரியாவில் டாலமி ஆள்கையில் (மகா அலெக்ஸாண்டரின் மூன்று தளபதியொருள் ஒருவர்), யூக்ளிட் ஜியோமிதியின் கோட்பாடுகளை நிறுவினார். அவரிடம் கணித கல்வி கற்க விழைந்த பலரில் ஒருவன் நீங்கள் கண்டு, விளக்கும், இந்த வடிவியலை கற்பதால் என்ன பயன் என்று கேட்க, அருகிலிருந்த மாணவனிடம் தன்வீட்டினுள்ளே சென்று ஒரு பிடி பொற்காசுகளைக் கொண்டுவந்து கேட்டவனிடம் கொடுக்கச்சொன்னாராம். அப்பனே, உனக்குத் தேவையானதைக் கொடுத்திருக்கிறேன், போய்வா.

அறிவியலோ, கணிதமோ, இன்ன பிற அறிவுத்துறையோ, அவற்றின் கல்வி என்பது பொருளீட்டுவதற்கு அல்ல என்பது பண்டைய வாழ்வியல் சிந்தனையின் அடிநாதம். பிச்சை புகினும் கற்கை நன்றே என்று நம் மூதாட்டி கூறியதும் பொருளீட்டும் கல்வியையல்லவே.

இதன் நீட்சியாய் புரிவது, நம் இன்றைய கையில காசு வாயில தோசை நிலைக்கு ஆயகலைகள் பலவற்றின் பிறப்பிடமும் அனைத்தின் உறைவிடமுமான பண்டைய இந்தியாவின் கல்வித்திட்டங்கள் நிச்சயம் காரணமல்ல என்பதே.

வரலாற்றின் சமீபத்திய இருநூறு வருடங்களுக்குள் தோன்றிய, ஆங்கிலேயர்களின் கட்டுப்படுத்தலுக்கேற்ப வகுக்கப்பட்ட கல்வித்திட்டத்தின் நீட்சியான, ஏன் என்று கேள்விகேட்காத, மனதையொடுக்கிய சமர்த்துப்பிள்ளையாய், கைகட்டிய கணக்குப்பிள்ளையாய், போதனாசாலைகளில் அறிவுத்துறைகளை, பாடதிட்டங்களை நாம் இன்றும் அணுகுவது நிதர்சனம்.

படித்தால் பொருளீட்டும் வேலை என்கிற கூற்று சுதந்திர இந்தியாவில் இன்றளவும் தொழில்நுட்பக் கல்வியையே வளர்க்கிறது. முற்பகல் உழைத்தால் பிற்பகல் ஊதியம் என்பதையொத்த இந்த சமீபகால சிந்தையில் மேலோட்டமாக தவறில்லை. ஆனால் மறைமுகமாக தற்கால சமுதாய மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. படித்தால் வேலை எனும் கூற்றின் ஐம்பது வருடத் தொன்மையில், வேலை கிடைக்க எதை எவ்வளவு படிக்கவேண்டுமோ, அதைப் பாடமாய் அவ்வளவு படித்தால் போதும் என்கிற மனநிலை எழுச்சியுற்று நிலைபெற்றுள்ளது. மற்றதெல்லாம் பாடதிட்டத்திற்கு வெளியே. பொருளீட்டும் திறனற்ற சிந்தைமிகைகள், ஏட்டுச்சிதிலங்கள், நேரவிரயங்கள்.

தோல்வியுறுவது கல்வி என்பதன் நிஜப்பயன்.

அறிவியல் கல்வி, அடிப்படைக் கல்வி. அறிவியல் சிந்தையை வளர்க்கும் கல்வி. அறிவியல் சிந்தை என்பது ஒரு மனநிலை. அறிவியலை கற்பது அறிவியலாளனாய் ஆவதற்கு மட்டுமல்ல. குறைந்தபட்சப் பயனாய் அக்கல்வி கற்ற அனைவரும் அறிவியல் சிந்தை தரும் தெளிவில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவே.

அறிவியல் சிந்தையை விளக்க ஒரு தோற்ற மாயையை விவரிப்போம்.

எல் கிரக்கோ (El Greco) பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலிய மறுமலர்ச்சி காலத்து ஓவியர். இவர் வரைந்த கடைசி கால ஓவியங்களில் ஆண்கள், பெண்கள், குழத்தைகள், தேவதைகள் என்று பாரபட்சமின்றி அனைவரும் நிஜத்தைவிட நீண்டு இழுக்கப்பட்டு ஒல்லியாக இருந்தார்கள். (பார்க்க அருகில்: Adoration of the Shepherds).

adoracion_de_los_reyes_magos1

இவ்வோவியங்களை சென்ற நூற்றாண்டின் மத்தியில் கவனித்த இங்கிலாந்தை சேர்ந்த ஒரு கண் மருத்துவர் எல் கிரக்கோ இறுதிக்காலங்களில் கண் நோயால் அவதிப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு மக்களே இப்படித்தான் இழுக்கப்பட்டு தெரிந்திருக்கிறார்கள். அதனால் தான் இப்படி வரைந்துள்ளார் என்று காரணம் கூறினார்.

பூ, ஓவியம் இவற்றின் அழகை மட்டும் சிந்தனையொதுக்கி ரசித்து (அது எப்படியோ) நாம் ஒதுங்கிவிடாமல் சற்று விழிப்புடன் இருந்தால் கண் மருத்துவரின் அபத்தமான தர்கானுகூலததை கண்டுகொண்டுவிடலாம். அறிவியல் பாடங்கள் கற்றுத்தந்திருக்கவேண்டிய அறிவியல் சிந்தையும் இதுதான்.

நமக்கு அறிவியலாளன்ஆவதற்கு போதிய சாமர்த்தியம் இருக்கிறதா என்று பலர் யோசிப்பீர்கள்; உங்களுக்கு மேலே கண் மருத்துவர் கூறும் காரணம், கலையழகை ரசிக்கும் ரசிகஞானத்திலிருந்து மட்டுமல்ல, தர்க்க ரீதீயாகவும் அபத்தம் என்று படித்தவுடன் தெரிகிறது என்றால் நீர் அறிவியல் சிந்தையில் கெட்டி. ஏன் அபத்தம் என்று விளக்கிய பிறகும் புரியவில்லையெனின் நீர் மந்தம்.
மேற்கூறிய உதாரணத்தை விளக்கி இப்படிக் கூறியவர், கான்சர் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற ஸர் பீட்டர் மெடவார் என்ற இங்கிலாந்து விஞ்ஞானி.

கண் மருத்துவரது விளக்கத்தின் அபத்தம் என்ன?

தர்க்கத்திற்காக மருத்துவர் கூறுவது போல் ஒரு வியாதி இருக்கிறது என்றும், இதனால் பீடிக்கப்பட்டவர்களுக்கு பார்ப்பது எல்லாம் இரண்டாக தெரியும் என்றும் வைத்துக்கொள்ளுவோம். அழகான யுவதியை ஒருத்தியை ஓவியமாக தீட்டப் பணிக்கையில், பார்ப்பதை வரையும் இந்த ஓவியர், ஒருவரை இருவராக பார்ப்பதால், இரு யுவதிகளை ஓவியச்சீலையில் எழுதுகிறார் என்றும் வைத்துக்கொள்ளுவோம். எழுதி முடித்ததும் அவரே தன் ஓவியத்தை சரிபார்க்கையில், ஒவியத்தில் இருக்கும் இருவர் நால்வராக தெரிவார்களே. ஓவியத்தின் கோளாறு ஓவியருக்கே விளங்கிவிடும்.
ஒருவரை இருவராய் ஓவியர் பார்த்த நிஜத்துடன் ஒத்துப்போவது போல ஓவியம் சரியாக வரவேண்டும் என்றால், வரைகையிலும் ஒரு ஆளைத்தான் ஓவியர் வரைய வேண்டும். அப்பொழுதுதான் கண் கோளாருடன் இருக்கும் ஓவியருக்கும் ஓவியம் சரியாக இருக்கும். அப்படி அவர் ’சரியாக’ வரைந்த ஓவியம் பார்க்கும் மற்றவருக்கும் சரியாகத்தான் (ஒரு ஆளாகத்தான்) தெரியும்.

இதைப்போலத்தான் எல் கிரக்கோவின் ஓவியங்களும். எல் கிரக்கோ கண்கோளாறினால் பார்பவர்கள் நீண்டு தெரிவதால் இவ்வாறு தன் ஓவியத்தில் வரைந்திருந்தால், மீண்டும் தன் ஓவியத்தையே கவனிக்கையில் ஓவியத்தில் ஏற்கனவே நீண்டு இருப்பவர்கள் இவரது கண் கோளாறினால் இன்னமும் நீண்டு விகாரமாகத் தெரிந்திருப்பார்களே. எல் கிரக்கோவே கோளாறுணர்ந்து தன் ஓவியத்தையும் திருத்தித் தீட்டியிருப்பார்.

அவ்வோவியங்களில் மனித தேவ உடல் நீட்சிகள் எல் கிரக்கோ வேண்டும் என்றே செய்த கலைவடிவமே. அப்படி நீண்டுதான் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்று அவர் விரும்பியதால். கண் கோளாரால் இல்லை.

இப்படி எழுதிவிட்டு எனக்கு கண் மருத்துவரின் அபத்த விளக்கம் உடனே தெளிந்துவிட்டது என்று கூறமாட்டேன். சற்று யோசித்தபிறகுதான் புரிந்தது. சற்று யோசித்தபின் நாம் அனைவரும் அறிவியல் சிந்தையுள்ளவர்கள்தான்.

இப்படி அறிவியல் சிந்தையை வளர்த்துக்கொள்வதற்கு, முறையாக சிந்திப்பதற்கு, அழகு, அறிவு, கலை, அறிவியல் என்றெல்லாம் பிரித்தெழுதி நம்மை நாமே வகுத்துக்கொண்டு நான் கலைஞன், நான் விஞ்ஞானி, நான் எல் கிரக்கோ, நான் கண் மருத்துவர், நான் கடவுள் என்றெல்லாம் தேவையற்ற கவலைகள் அதிகம் படவேண்டியதில்லை.

அழகை, உலகை, அறிவியல் சிந்தையுடன் ரசித்தால் போதும்.

பள்ளிக் கல்லூரிகளில் தேர்வுகள், தேர்ச்சிகள், நல்ல வேலை என்று ஏதோ ஒரு முடிவை நோக்கி அறிவியல் சார்ந்த துறைகளை இவை பாடம் மட்டுமே என்று அவசரகதியில் பறிமாறிக் கொள்ளப்படுவதும் அறிவியல் சிந்தையமைவதற்கு இடையூறே.

அறிவியல் கற்பது கடினம். பாடமாய் கற்க முனைகையில் வாசலிலேயே செருப்பையும் சிரிப்பையும் கழட்டிவிட்டு, முகத்தையும் மனதையும் உக்கிரமாக்கிக்கொள்வது அவசியம். ஊடாடும் வேறு அறிவுத்துறைகளின், கலைகளின், வாழ்க்கை இயல்பின் தாக்கங்கள் அறிவியலை கற்கையில் கவனக்கலைப்பிலேயே முடியும். அறிவியலின் கடினத்தை பெருக்கி வெறுத்தொதுக்கவைத்துவிடும். இவ்வகை கருத்துகள் அறிவுப் பறிமாற்றங்களில் ஈடுபடும் மனங்களில் இருந்து, பரிட்சை அட்டையில் ஒட்டிய பெருமாள் படம் போல, லேசில் அகலாதவை. சற்றேனும் சேதாரமின்றி மொத்தமாக பிரித்தெடுக்க முடியாததாகிவிட்டது.

அறிவுத்துறையை, அறிவியலை, புரிந்துகொள்ள, பழகிக்கொள்ள, எனக்கும் இது புரியும் பழகும் என்ற மனத்திடம் வளரவேண்டும். நான் போதிக்கிறேன் நீ கேட்டுக்கொள் என்ற அதிகாரத்தினால், ஆச்சர்ய நோக்கிழந்தவர்களுக்கு அறிவூட்டமுடியாது. அதேபோல், கடிப்பதற்கு கடினம் என்பதால் அறிவுத்துறை கற்கண்டு கசக்காது.

அறிவியல் சிந்தையின் மூலதனமே கேள்விகள் நிரம்பிய, பதில்களின் நிரந்தரத்தை சந்தேகிக்கும் மனதே. நிரந்தரமற்ற அண்டத்தை, சில நிலைகளில் தெளிவான, பல நிலைகளில் தெளிவற்ற, மொத்தத்தில் நிச்சயமற்ற புரிதலாக்கிக்கொள்ள, நிரந்தரமற்ற கேள்விகேட்கும் மனதே ஏற்றது. இந்த மனநிலைக்கு முக்கியத்தேவை கூறியது யார் என்பதை விட்டு, கூறியதை தயங்காமல் சந்தேகித்து சுயபுரிதலுக்குட்படுத்துவது. இயற்கை நம் அனைவரையும் அடக்கியுள்ளதெனின், நம் அனைவருக்கும் அவரவர் முயற்சிக்கேற்ப புரியக்கூடியதே. இயற்கையின் ஒரு பகுதியான நமக்கு, ஏனைய பகுதிகளுடன் நிரந்தர புரிதல் உறவாட முடியாத என்ன?

மறைந்த பாதல் ஸர்கார் தன் பெங்காலி ஏவம் இந்திரஜித் நாடகத்தில் குறிப்பிடுவதுபோல, கேள்வியே நித்யம். அதில் எவ்வளவு பெரிய துண்டை உன் கேள்வியாக வைக்கிறாயோ, பதில் அவ்வளவு சிறியதாக, மிச்சமாக, எளிதாக ஸ்புரிக்கும்.

ஒரு அறிவுத்துறையை கற்பதே, பல்வேறு நியூரான்களும் சினேப்ஸுகளும் கிளர்ந்து தொகைந்து, குழைந்து செம்மையாகும் மனவிருத்திக்காக, விருத்தியில் விளையும் தெளிவிற்காக, தெளிவுதரும் மனத்திடத்திற்காக, பிரதிபலனற்ற ஆனந்தத்திற்காக என்கிற நோக்கு மறக்கப்பட்டுவிட்டது. அல்லது அந்நோக்கின் தேவை மறைந்துவிட்டதோ?

அறிவியல் கல்வியில் போதனாசாலைகளில் நமக்குள் இறங்கியிருக்கவேண்டிய இப்படிப்பட்ட அறிவியல் சிந்தையை, நம் கிராமத்து மூதாட்டியரிடம் கவனித்திருக்கிறோம். அன்றலர்ந்த தாமரையாய் முகம் மலர நீராடியபின் ”மஞ்சள் முதலிய பதினெட்டு வகை மூலிகைகள் சேர்த்து” தயாரித்த களிம்பை பூச எத்துணை விளம்பரம் செய்து இலவச தொலைகாட்சி வழியாக இவருக்கு ஊட்டினாலும், நீராடுகையில் மஞ்சளையே அரைத்து நேரிடையாக பூசிக்கொள்ளலாமே என்பது இவருக்கு தெரியும்.
ஸ்ப்ளிட் ஏஸியோ சாதா ஏஸியோ, வீட்டின் ஒரு அறையை குளிரவைக்கிறது என்றால், வீட்டிலிருந்து எடுத்த உஷ்ணத்தை, வீட்டிற்கு வெளியே, நாட்டில் கொட்டித்தான் ஆகவேண்டும், அண்டை அயலானை, அருமை உலகானை சூடுபடுத்தியாகவேண்டும் என்கிற அறிவியல் சிந்தையை இவருக்கு சுலபமாக புரியவைக்க பொருளீட்டும் இன்றைய ஏட்டுக் கல்வி அவசியமில்லை.

2 Replies to “கற்க கசடற”

Comments are closed.