தி.ஜானகிராமன் – வாழ்க்கைக் குறிப்பும், புத்தகங்களும்

thija-logo1தி.ஜானகிராமன் 1921-ஆம் வருடம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மன்னார்குடிக்கு அருகிலுள்ள தேவங்குடி கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தை தியாகராஜ சாஸ்திரிகள் நல்ல சமஸ்கிருதப் புலமையும், சங்கீத ஞானமும் உடையவர். இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்றவற்றை உபன்யாசம் செய்பவராக இருந்தார். அவர் குடும்பம் அங்கிருந்து இடம்பெயர்ந்து கும்பகோணம், தஞ்சை போன்ற ஊர்களில் கொஞ்சகாலம் வசித்தபின் – வலங்கைமானுக்கு அருகிலிருக்கும் கீழவிடையல் என்ற கிராமத்தில் நிலைபெற்றது. ஜானகிராமனின் தஞ்சாவூரிலும், கீழவிடையலுக்கு இடம்பெயர்ந்தபின் அருகிலிருந்த கருப்பூரிலும் பள்ளிக்கல்வி பெற்றார்.

கும்பகோணம் கல்லூரியில் கல்லூரிப்படிப்பும், சென்னையில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் படித்துப் பட்டங்களும் வாங்கினார். ஆசிரியர் பயிற்சிப்படிப்புக்குப் பின் 11 ஆண்டுகள் பள்ளியாசிரியராக வேலை பார்த்தார். இதில் ஓர் ஆண்டு சென்னையிலும், பத்தாண்டுகள் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையிலும், குத்தாலத்திலும் பணியாற்றினார். வேறு வேலைகள் கிடைக்கும் வாய்ப்புகள் இருந்தும், இலக்கியம், இசையில் ஈடுபடுவதற்கான நேரம் கிடைக்குமென்று ஆசிரியர் பணியில் இருந்திருக்கிறார். ஜானகிராமனின் சில சிறுகதைகள் இந்த ஆசிரியர் வேலையைப் பின்புலமாகக் கொண்டிருப்பவை. 1954-இல், தன்னுடைய 33-ஆவது வயதில், அகில இந்திய வானொலியின் சென்னை பிரிவில், கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பதவியேற்று, 1968 வரை – பதினான்கு ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தார். 1968-இல் பதவி உயர்வு பெற்று டில்லி வானொலி நிலையத்துக்கு மாற்றம் பெற்றார். 1979-இல் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். எனினும் அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி அவரை Emeritus Producer என்ற பதவி கொடுத்து ஆகாசவாணி கெளரவித்தது.

கல்வித்துறையில் பணியாற்றியபோது பிற நாடுகளின் கல்வித்திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். நம் நாட்டின் கல்வித்திட்டத்தையும், ஆசிரியர்களின் அக்கறையின்மையையும் குறித்து ஜானகிராமன் தொடர்ந்து தன் படைப்புகளில் பதிவு செய்தபடி இருந்திருக்கிறார். பள்ளிக்கல்வி தொடர்பான பல வானொலி ஒலிபரப்புகளில் ஜானகிராமனின் சிறப்பான ஒலிச்சித்திரங்கள் மிகுந்த புகழ்பெற்றவை.

புதுடெல்லியிலிருந்தபோது அங்கிருந்த இலக்கிய நண்பர்களோடு நட்பும், தொடர்பும் இருந்திருக்கிறது. கணையாழியின் வளர்ச்சியில் ஆர்வமும், அக்கறையும் கொண்டவராக இருந்திருக்கிறார். அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றபின் அசோகமித்திரனுக்குப் பின், ’கணையாழியி’ பத்திரிகையின் கெளரவ ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றியிருக்கிறார்.

column2-1

17 வயதில் கும்பகோணம் கல்லூரியில் படிக்கும்போதே கதைகள் எழுதத்தொடங்கி வெகுஜனப் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. அப்போது கல்லூரியில் சீனியரான எம்.வி.வெங்கட்ராமுடன் ஏற்பட்ட நட்பு, அவரை தீவிர இலக்கியம் நோக்கி கொண்டுசென்றது. கும்பகோணத்திலிருந்த மணிக்கொடி எழுத்தாளரான கு.ப.ராஜகோபாலனோடு நெருங்கிய நட்பு ஏற்பட்டிருக்கிறது. அவரது வழிகாட்டுதல் தி.ஜானகிராமனை நெறிப்படுத்தியது. அக்காலகட்டத்தில் கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி, ஸ்வாமிநாத ஆத்ரேயன் ஆகியோர் ஜானகிராமனின் நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த இளைஞர்கள் அனைவருக்கும் கு.ப.ரா நல்ல இலக்கிய வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.

ஜானகிராமனின் தீவிர இலக்கியச் செயல்பாடு கு.ப.ராவின் அறிமுகத்துக்குப் பின்னரே நிகழ்ந்திருக்கிறது. தன்னுடைய 24-ஆவது வயதில் அமிர்தம் என்ற முதல் நாவலை எழுதியிருக்கிறார். பத்து நாவல்களும், இரண்டு குறுநாவல்களும், மூன்று நாடகங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், மூன்று பயண நூல்களும் எழுதியிருக்கிறார். கடைசி நாவலான நளபாகம் 1982-இல் வெளியானது. 1979-ஆம் வருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது ‘சக்தி வைத்தியம்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக வழங்கப்பட்டது. காலச்சுவடு நிறுவனம் சில தேர்ந்தெடுத்த சிறுகதைகளை ‘சிலிர்ப்பு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

ஜானகிராமனுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உண்டு. இதில் மூத்தவர் சாகேத்ராமன் இப்போது உயிரோடு இல்லை.

1982-இல் ஜானகிராமன் தன்னுடைய 61-ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

தி.ஜானகிராமன் எழுதியவை:

நாவல்கள்:

அமிர்தம் மோகமுள் அம்மா வந்தாள் மலர் மஞ்சம் அன்பே ஆரமுதே உயிர்த்தேன் செம்பருத்தி மரப்பசு நளபாகம்

குறுநாவல்கள்:

கமலம் சிவஞானம் அடி

சிறுகதைத் தொகுப்புகள் (சில):

பிடிகருணை அக்பர்சாஸ்திரி சிவப்பு ரிக்‌ஷா சக்தி வைத்தியம் மேடை நாடகங்கள்:

நாலு வேலி நிலம் வடிவேலு வாத்தியார் டாக்டருக்கு மருந்து

பயண நூல்கள்:

உதய சூரியன் அடுத்த வீடு ஐம்பது மைல் கருங்கடலும் கலைக்கடலும் நடந்தாய் வாழி காவேரி (சிட்டியுடன் இணைந்து எழுதியது)

இந்நூல்களில் பலவற்றை ‘ஐந்திணை பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. இவை போக, நூற்று சொச்சம் ஜானகிராமன் சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக ‘ஜானகிராமன் படைப்புகள் பகுதி 1 & 2’ என்று வெளியிட்டுள்ளது. பகுதி 2-இல் சிறுகதைகள் போக, ஜானகிராமன் எழுதிய இரண்டு பயண நூல்களும் (உதய சூரியன், அடுத்த வீடு ஐம்பது மைல்), சில கட்டுரைகளும், ஜானகிராமன் குறித்து பிறர் எழுதிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஐந்திணைப் பதிக்கத்தின் முகவரி:

279, பைகிராஃப்ட்ஸ் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை – 600005 தொலைபேசி – (044)28549410

சிட்டியுடன் இணைந்து ஜானகிராமன் எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ 1971-இல் Bookventure நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. 2007-இல் இப்புத்தகம் ‘காலச்சுவடு’ நிறுவனத்தால் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

இந்நூல்களில் பலவற்றை இணையத்தில் உடுமலை.காம் தளத்தில் வாங்கலாம்.

One Reply to “தி.ஜானகிராமன் – வாழ்க்கைக் குறிப்பும், புத்தகங்களும்”

Comments are closed.