நடனமாடும் நாவலுலகம்

செய்தித்தாளுலகத்தை பின்னால் அலசுவோம். முதலில் நாவல் பிரசுரிக்கும் வெளியீட்டு உலகத்தை ஆராய்வோம். அச்சு எந்திரம் கண்டுபிடித்து 300 ஆண்டுகளுக்கு பின்பு தான் நாவல் அச்சடிக்கத் துவங்கினார்கள். நாவல் உலகம் ஒரு 200 ஆண்டுகளாகத் தான் வளர்ந்து வந்துள்ளது.

ஆரம்பத்தில் நாவல்கள் பெரிய புத்தகங்களாகத்தான் அச்சடித்தார்கள். பல வன் அட்டை (hard cover) நாவல்களில் காகித நுனிக்கும் அச்சிட்ட பகுதிக்கும் இடையே நிறைய இடம் இருக்கும். மேலும் ஒரு அத்தியாயம் முடிந்ததும் ‘Page left intentionally blank’ என்று வெற்றுப் பக்கமும் இருக்கும். பைண்டு செய்வதற்கு உபயோகமாய், எல்லா அத்தியாயங்களும் வலது பக்கத்திலிருந்துதான் தொடங்கும். இதைப்பற்றி எல்லாம் இங்கு எதற்கு எழுதுவானேன்? சற்று பொறுத்திருங்கள் – எல்லாம் ஒரு காரணத்திற்காகத் தான். ஆரம்ப நாட்களில் நாவல்கள் அவ்வளவு மலிவாக விற்கப்படவில்லை. படிப்பவர்கள், புத்தகத்தில் தங்களது கருத்துக்களை ஓரத்தில் எழுதுவதற்காக அத்தனை இடைவெளி விடப்பட்ட்து. புத்தகத்தின் கடைசியில் குறிப்பு எழுதுவதற்கென்றே சில வெற்றுப் பக்கங்களும் இணைக்கப்பட்டது. நம் கிராமங்களில் டீக்கடையில் ‘இன்னிக்கு என்ன சேதி தெரியுமா?’ என்று பேசித் திரியும் கூட்டத்தைப் போல, மேற்கத்திய கலாச்சாரத்தில் புத்தக விமர்சன மன்றங்கள் அங்கங்கே இருந்தனவாம். உதாரணத்திற்கு, ‘சார்லஸ் டிக்கன்ஸ்’ ரசிகர் மன்றத்தில் தங்களுடைய எழுதிய கருத்துக்களை நண்பர்களுடன் அலசுவார்களாம். நாவலாசிரியர்கள் பிரபலமடைய அதிக தொலைத் தொடர்பு இல்லாத காலத்தில் இப்படித்தான் கருத்துப் பரிமாற்றம் செய்தார்களாம்.

மென் அட்டை (paperback) என்ற வடிவு, ஒரு அச்சுப் புரட்சி.  இது நாவல்களை மிகவும் பிரபல/மலிவு படுத்தியது. அந்த விலையில் பல பதிப்பீட்டாளர்களும் பல கோடிப் புத்தகங்களை விற்றுத் தள்ளினார்கள். மிகவும் சின்ன எழுத்து அளவு மற்றும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடத்திலும் மறுபயன்பாட்டுக் காகிதத்தில் அச்சடித்தார்கள். இதனால் பல நாவலாசிரியர்கள் பயங்கர பணக்காரர்கள் ஆனார்கள். மேலும் அவர்களை சுற்றி ஒரு உலகமே உருவானது.  வட அமெரிக்கா மற்றும் யூரோப்பில் வருடத்திற்கு 60 பில்லியன் டாலர் வணிகம் இது! இன்றோ இவர்கள் தடுமாறும் நிலையில் உள்ளனர், அது ஏனென்று  ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

உலகிலேயே பைபிளுக்கு அடுத்தபடி அதிக அளவில் (80 கோடி பிரதிகள்) அச்சடிக்கப்பட்ட புத்தகம் ‘தலைவர் மா சே துங் மேற்கோள்கள்’. ஜே.கே. ரோலிங் (J.K.Rowling) எழுதிய ‘ஹாரி பாட்டர்’ கதைகள் 40 கோடி புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. இப்படி வளர்ந்துள்ள புத்தக வெளியீட்டுத் தொழில் எப்படி நடக்கிறது?

1. முதலில் எழுதும் எழுத்தாளருக்கு ஒரு ஏஜண்ட் தேவை. இவர், இத்தொழிலில் மிக முக்கியமானவர். முதலில் ஏஜண்டை எழுத்தாளர் கவர வேண்டும். இதிலேயே பல எழுத்தாளர்கள் அடிபட்டு போகிறார்கள். ஒரு ஏஜண்டுடன் ஒத்து வரவில்லையானால், மற்றவரை நாட வேண்டும்.

2. புத்தகத்தின் கருவை இவரிடம் எழுதுவதற்கு முன் விவரிக்க வேண்டும். இவர், பல வெளியீட்டாளர்களிடம் இந்த கருவை வைத்து வியாபார ஏற்பாடுகள் செய்வார். வெளியீட்டாளர்களின் தேவைகள் மாறுபடும், அவர்களின் வீச்சும் விற்பனை அளவுகளும் மாறுபடும் – இவர்கள் கொடுக்கும் ராய்ல்டியும் அதற்கேற்ப மாறுபடும்.

3. எல்லா வியாபார ஏற்பாடுகளும் ஒப்புக் கொள்ளப்பட்டால், எழுத்தாளர் தன்னுடைய படைப்பைப் பகுதி பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஏஜண்டுக்கு அனுப்பிவிடுவார். இதை மானுஸ்கிரிப்ட் (manuscript) என்கிறார்கள்.

4. ஏஜண்ட் இதை வெளியீட்டாளருக்கு அனுப்புவார். வெளியீட்டாளரின் நிறுவனம், இத்தொழிலின் நெளிவு சுளிவுகளை அறியும். எழுத்துக் கோர்வை (spelling/grammar) சரியாக இருக்கிறதா, எழுத்து நடை சரியாக இருக்கிறதா என்று பல நிபுணர்கள் ஆராய்ந்து எழுத்தாளருக்கு ஏஜண்டு மூலம் குறைகளைச் சுட்டிக் காட்டுவார்கள்.

5. திருத்திய படைப்பை, மதிப்பீடு செய்ய ஒரு சின்ன கமிட்டி உண்டு. அவர்கள், எழுத்துத் தொழிலில் இருப்பவர்கள். உள் முரண்பாடுகள், தகவல் பிழைகள் (factual errors) மற்றும் சுவாரசியக் குறைகளைச் சுட்டிக் காட்டுவார்கள்.

6. எல்லாம் திருத்திய, திருப்திகரமான பொருள் தயார். அச்சடிக்குமுன் விளம்பரம் தொடங்க வேண்டும். வெளியீட்டு நிறுவனம், ஏஜண்டுடன் சேர்ந்து வெளிவர இருக்கும் புத்தகத்தைக் கடைகள், சினிமாக்கள், இணைத்தளங்கள் என்று எல்லா இடத்திலும் இன்ன தேதிக்கு இப்படி ஒரு புத்தகம் வெளிவருகிறது என்று விளம்பரம் செய்யத் தொடங்குவார்கள்.

7. முதல் பதிப்பில் சில பிரதிகள், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சியில் புத்தக விமர்சனம் செய்யும் விமர்சகர்களுக்கு அனுப்பப்படும். உடனே ஏஜண்ட், பல பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளுக்கு ஏற்பாடு செய்வார்.

8. அடுத்தபடி, சொன்ன நாளில் எல்லாப் புத்தக கடைகளிலும் புத்தகம் வெளியிடப்படும். இதை ஒட்டி, சில புத்தகக் குழுமங்கள் எழுத்தாளரைக் குறிப்பிட்ட சில ஊர்களுக்கு தேர்ந்தெடுத்த புத்தகக் கடைகளுக்கு சொற்பொழிவாற்ற அழைக்கும் (புத்தகத்தைப் பற்றிப் பேசத்தான் அழைப்பு). எழுத்தாளரின் விசிறிகள் விளம்பரத்தைப் பார்த்து, எழுத்தாளரே கையெழுத்திட்ட பிரதிகளைப் பெற வரிசையில் நின்று வாங்கிச் செல்வார்கள்.

9. அதிகம் விற்கும் லிஸ்ட் -நம்மூர் சினிமா பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் போன்றது- ஒன்றை வாராவாரம்  நியூயார்க் டைம்ஸ் போன்ற செய்தித்தாள்கள் வெளியிடுகின்றன. இவற்றில் எதிலாவது இடம் பெறுவது மேன்மேலும் விற்பனை பெருகுவதற்கு அவசியம்.

10. அடுத்தபடி, புத்தகங்களை நூலகங்களுக்கு விற்கும் ஏற்பாடுகளை வெளியிடும் நிறுவனம் செய்து விடும்.

11. விற்கும் ஒவ்வொரு புத்தகத்திலிருந்தும் எழுத்தாளருக்கு பங்குத் தொகை (ராயல்டி) உண்டு. அதே போல ஒரு பங்கு ஏஜண்டுக்கும் உண்டு.

மேலே சொன்ன படிகள் அத்தனையும் பாட நூல் மற்றும் பிற ஜனரஞ்சகப் புத்தகங்களுக்கும் (popular non-fiction)  பொருந்தும். முன் சொன்னது போல இவையெல்லாம் மேலை உலகில் நடப்பவை.  நம் நாட்டிலோ இவ்வளவு விவரமான வகையில் பதிப்பிடும் அமைப்புகள் கிடையாது – ஆனால், ஏஜண்டு, விற்பனை முறைகளில் சில வேறுபாடுகள் உள்ளன. நமது எழுத்துப் படைப்புகளின் பரவலும் அளவானது என்பதை நாமறிவோம்.

சரி, மேற்கில் இப்படி செளக்கியமாக நடக்கும் தொழிலுக்கு என்ன தடை வர முடியும்? எல்லாம் தொழில்நுட்பம்தான். முதலில் புத்தகம் படிக்கும் கருவிகள், இரண்டாவது இணையம். இந்த இரு சக்திகளும் அச்சுப் புத்தகத் தொழிலை ஆட்டிப் படைக்கத் தொடங்கிவிட்டன. புத்தகம் படிக்கும் கருவிகள் அச்சுத் தொழிலால் உருவாக்கப் படும் பொருளுக்கு மட்டுமே சவாலாக வளர்ந்து வருகின்றன. ஆனால், இணையமோ, அதன் பல்வேறு சக்தி வாய்ந்த வீச்சால் இத்தொழிலுக்கே சவாலாக வளர்வது உண்மை. விவரமாக இந்த இரு சவால்களையும் ஆராய்வோம். எதிர்காலத்தில் இத்தொழில் எப்படி மாற இருக்கிறது என்று சில போக்குகளையும் ஆராய்வோம்.

புத்தகம் படிக்கும் கருவிகள் பற்றி சொல்வனத்தில் ‘ஒலி/ஒளி மயமான எதிர்காலம்’ என்ற தலைப்பில் ஏற்கனவே எழுதியாகிவிட்டது. இதன் சமூகத் தாக்கங்களைச் சற்று ஆராய்வோம். மின்னணு புத்தகங்கள் (e-book) காகிதப் புத்தகங்களுக்கு சவாலாக உள்ளன. ஏன் மின்னணு புத்தகங்கள் தோன்றின? காகிதப் புத்தகம் வாசகரை அடையுமுன், வெளியீட்டார் பதிப்பகத்திலிருந்து பல ஆயிரம் கி.மீ. பயணம் செய்கிறது. மேலும், அனேகப் புத்தகங்கள் ஒரு முறையே படிக்கப்படுகின்றன. உதாரணம், நம் காமிரா/குளிர்சாதன பெட்டி உபயோக முறை புத்தகத்தை எத்தனை முறை படிக்கிறோம்? எதற்காக காகிதத்தை வீணாக்க வேண்டும்?  எதற்கு மரங்களை அழிக்க வேண்டும்? மேலும் ஒரு நாவலைப் படித்த பின் நாட்டின் இன்னொரு மூலையில் இருப்பவருக்கு இரண்டாம் கையாக (second hand) அமேஸானில் விற்கிறோம். அப்புத்தகம் மீண்டும் டீசல் செலவழித்துப் பயணிக்கிறது. மின்னணு புத்தகங்களுக்கு இந்த பயணப் ப்ரச்னை கிடையாது. உதாரணத்திற்கு, எல்லா செல்பேசி கம்பெனிகளும் அவர்களுடைய செல்பேசி உபயோக முறையில் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய வசதி செய்துள்ளார்கள்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மின்னணு புத்தகங்கள் அதிகரிக்க தொடங்கின. பலர் ஆரம்பத்தில், இதை டிஜிட்டல் இசை போல கருதினார்கள். ஆனால் இக்கருவிகள் சற்று வேறுபட்ட்வை. ஐபாட் வாங்கியவுடன் முதலில் அனைவரும் செய்யும் காரியம், தன்னிடமுள்ள அத்தனை சிடிக்களையும் MP3 வடிவத்திற்கு மாற்றி, ஐபாட்டில் பதிவு செய்தல். அப்படிப் பார்த்தால், மின்னணுப் புத்தக தொழில்நுட்பம் வந்தவுடன், நம்மிடம் இருக்கும் அத்தனை புத்தகங்களையும் இந்த புதிய நியமத்திற்கு மாற்றுவதுதானே முதல் காரியமாக இருக்க வேண்டும்? அதில் தான் சிக்கல். அவ்வளவு எளிதல்ல மின்னணு புத்தக வடிவத்திற்கு மாற்றுவது. இதனால் காகித புத்தகங்கள் சற்று பிழைத்தன.

ஆனால், கல்லூரி மாணவர்கள் மின்னணு பாட புத்தகங்களையே விரும்புவார்கள் என பிரசுரகர்த்தர்கள் கருதுகிறார்கள். முதல் கட்டமாக இந்த வடிவம் மாணவரின் தோள் சுமையைக் குறைக்கிறது. ஐபேட், மற்றும் கிண்டில் போன்ற புத்தகம் படிக்கும் கருவி ஒன்றால் பல நூறு புத்தகங்களைப் படிக்க முடிகிறது. பாடப் புத்தக நூல் வெளியீட்டாளர்கள் இதனால் தங்களது முறைகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வன் அட்டைப் பாட நூல் ஒன்றை வாங்கினால், மின்னணுப் புத்தகம் இலவசம், அல்லது மின்னணு புத்தகம் குறைந்த விலைக்கு என்று அளிக்கத் தொடங்கினார்கள். இப்பொழுது மிகப் பெரிய போக்கு என்னவென்றால், கல்லூரிப் பாடப் புத்தகங்களை வாங்கினால், அத்துடன் தனியாகக் கேள்வி பதில் புத்தகங்கள் (நம்மூர் கோனார் புத்தகங்கள் போல) வாங்க வேண்டாம், அதற்கு பதில் பதிப்பாளரின் இணைத்தள கேள்வி பதில் பகுதிக்கு ஒரு வருட சந்தா இலவசம்!

இதே போல, இளைஞர்/ஞிகள் காதல் கதைகள், சில கவிதைத் தொகுப்புகள் (romantic novels/ poems) படிப்பதற்கு மின்னணு புத்தகங்களையே விரும்புகிறார்கள். ஏனென்றால், இப்புத்தகங்கள் ஒரு முறை படித்தபின் மறக்கப் படுகின்றன. மிக குறைந்த விலையில் மின்னணு புத்தகங்களாய் டிஜிட்டல் இசையைப் போல தரவிறக்கம் செய்து, படித்து, அடுத்த நாவலுக்குத் தாவ வேண்டியது தான், இதற்காக காகிதம், டீசல், மை, அச்சு எந்திரம் தேவையா?

மேலும் இன்றென்னவோ, ஒரு காகித புத்தகமும் மென்பொருள் கொண்டு, மின்னணு வடிவத்தில் தான் முதலில் உருவாக்கப்படுகிறது. இதனால், புத்தக வெளியீட்டாளருக்கு ஏற்கனவே மின் வடிவில் உள்ள புத்தகத் தகவலை, ஒரு மின்னணு புத்தகமாக வெளியிடுவது மிக எளிது. ஆனால், இதில் அதிகம் காசு பண்ண முடிவதில்லை. அத்துடன் மின்னணு புத்தகங்கள் எளிதில் கணினியில் நகல் எடுக்கப்படலாம். ஒரு காகித புத்தகத்தை ஒரு தருணத்தில் ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும்; ஆனால், ஒரு மின்னணு புத்தகத்தை ஒரே தருணத்தில், லட்சம் பேர்கள் இணையத்தில் தரவிறக்கம் செய்ய முடியும். இதனால், வெளியீட்டாளர்கள் மிகவும் அஞ்சுகிறார்கள். ஆனால், மின்னணுப் புத்தக வளர்ச்சியை தடுக்க முடியாமல் அரை மனதுடன் பல்வேறு விற்பனை முறைகளை கடைப்பிடித்து எப்படியாவது தங்களுடைய காகிதப் புத்தக விற்பனையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறார்கள்.

இதோடு, புத்தகம் படிக்கும் கருவிகள் (e-book readers) வந்து வெளியீட்டாளர்களை மிகவும் அச்சுறுத்துகின்றன. முதலில் இந்த வகை கருவிகளை அமேஸான் போன்ற பெரிய பன்னாட்டுப் புத்தக விற்பனை மையங்கள் தொடங்கின. அமேஸானின் பயங்கர தொழில்நுட்ப மற்றும் வியாபார பலம் சிறிய புத்தக நிறுவனங்களுக்கு பயம் காட்டத் தொடங்கியது. அமேஸான், தன்னுடைய கிண்டில் கருவியை விற்பதற்காக பல வெளியீட்டாளர்களையும் குறைந்த விலைக்கு மின்னணு புத்தகங்களை வெளியிடும்படி கட்டாயப்படுத்தியது. பரந்த சந்தை அமையும் என்று வெளியீட்டார்களும் சில புத்தகங்களை அப்படி குறைந்த விலையில் மின்னணு புத்தகங்களாய் வெளியிட ஒப்புக் கொண்டனர். ஆனால், இதுவே இன்று முறையாகிவிட்ட்து. மின்னணு புத்தகத்திற்கு காகித புத்தகத்தின் 10% விலை கூட கிடைப்பதில்லை. பல பதிப்பாளர்களும் அமேஸானை ஒரு ராட்சசனைப் போல பார்க்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் குறை அமேஸான் பக்கம் இல்லை – இது தொழில்நுட்ப வளர்ச்சியின் விலை. அமேஸானை தொடர்ந்து சோனி, பார்டர்ஸ் என்று பலரும் இதே வகைக் கருவிகளை விறகிறார்கள். படிக்கும் கருவிகளின் விலை குறைந்த வண்ணம் இருக்கிறது. அதனால், அதில் படிக்கும் புத்தகங்களின் விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்று நுகர்வோர் நினைப்பதில் என்ன தவறு? இதனால் ப்ரச்னை என்னவென்றால், மின்னணுப் புத்தகத்தின் விலை பூஜ்ஜியமாகி கொண்டு வருகிறது. அதனால், புத்தகம் சார்ந்த படைப்பாளி, பதிப்பகத்தார், இடை பதிப்பக தொழில்நுட்ப வல்லுனர்கள் எல்லோரும் நசுக்கப் படுவதாக நினைக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு இத்துடன் தலைவலி முடிவதாகத் தெரியவில்லை. தலைவலி போய் திருகுவலி என்பார்களே, அதைப்போல, இணையம் என்ற திருகுவலியையும் இவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

முன்பே சொன்னது போல, இணையத்தின் பாதிப்பு பல வகையிலும் புத்தக அச்சுத் தொழிலை ஆட்டிப் படைக்கிறது. முதலில் நாம் பார்க்க இருப்பது, ப்ளாக் என்ற வலைப்பூ புரட்சி. கவியரசர் கண்ணதாசனின் அருமையான ‘ஆலயமணி’ திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது:

சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை,
பொருள் என்றும் இல்லை
சொல்லிய (ல்லாத) சொல்லுக்கு விலை ஏதும் இல்லை,
விலை ஏதும் இல்லை.

யார் வேண்டுமானாலும் ப்ளாகிக்கலாம்! எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதித் தள்ளலாம். WordPress மற்றும் blogger போன்ற அமைப்புகளில் பல லட்சம் பேர்கள் காய்கறி வியாபாரம் முதல் காயத்ரி ஜபம் வரை எழுதிப் படிப்பவர்களுக்காக தவமிருக்கிறார்கள். ஏனென்றால், எழுதிய எழுத்துக்கு விலை ஏதுமில்லை. இடைத்தரகர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எடிட்டர்கள் இல்லை. பல வலைப்பூக்களில் எழுத்துப்/கருத்துப் பிழைகள் தாராளமாக உள்ளன. சிலருக்கு இது பொழுது போக்கு. சில நாட்கள் எழுதிவிட்டு ஓய்ந்து விடுவார்கள். இவர்களுக்கு உதவ கூகிள் போன்ற நிறுவனங்கள் தங்களது தேடல் என்ஜின்களோடு இணைக்க இலவச உதவி புரிகிறார்கள். விளம்பரங்கள் விற்க உதவினால் காசு கூட சம்பாதிக்கலாம். சுமாராக எழுதத் தெரிந்தால் போதும். இதில் செளகரியம் என்னவென்றால், படிப்பவர்கள், பதிவு வெளியான பல மாதங்கள், வருடங்களுக்கு பிறகு கூட படிக்கலாம், விமர்சிக்கலாம். விமர்சனத்தை பதிவுடன் படிக்க முடியும்; எழுத்தாளர், தன் நிலையை விளக்க முடியும்; மற்றவர்கள் அனைத்தையும் ஒரேடியாக படிக்க முடியும். புத்தகத்தில் இந்த செளகரியம் கிடையாது. அதுவும் இதெல்லாம் இலவசமாக அல்லவோ கிடைக்கின்றன!

புத்தகத்தில் இல்லாத இன்னொரு விஷயம் விடியோ மற்றும் ஒலித் துண்டுகளை வலைப்பூக்களில் எளிதில் இணைக்க முடியும். செயல் விளக்கம் மற்றும் இசை போன்ற விஷயங்களை விளக்குவதற்கு இது மிகச் சக்தி வாய்ந்த ஊடகம். கிண்டில் போன்ற புத்தகம் படிக்கும் கருவி சில சந்தா உடைய வலைப்பூக்களை படிக்க வழி செய்கிறது! இந்தப் புரட்சியால் நன்றாக எழுதும் பல எழுத்தாளர்கள் நேராக தங்களுக்கு வலைப்பூ அமைத்துக் கொண்டு செளகரியப்பட்ட பொழுது, பிடித்தவற்றை எழுதுகிறார்கள். சில வலைப்பூக்களுக்கு, பத்திரிகைகளைவிட, நாவல்களை விட அதிகம் படிப்போர்கள் உள்ளார்கள். ஒலி, விடியோவுடன் இவை இணையத்தில் சக்கை போடு போடுகின்றன. சிலர் விடியோ ப்ளாக் என்று விடியோவிலேயே அசத்துகிறார்கள். இவர்களின் பலம், எழுதியவுடன் வாசகனின் கருத்துக்களை அறிந்து கொள்ள முடிவதுதான். தபாலுக்கு காத்திருக்க வேண்டியதில்லை. தன்னுடைய படைப்புக்களில் எந்த படைப்பு அதிகம் விரும்பப்பட்ட்து, எது நிராகரிக்கப்பட்ட்து என்று நேரடியாக கணிக்கவும் முடியும். எல்லாவற்றையும் விட, உலகில் இணைய இணைப்பு எங்கிருந்தாலும் படிக்கலாம், பார்க்கலாம், கேட்கலாம். எங்கள் ஊருக்கு விகடன் வருவதில்லை என்பதெல்லாம் பழம் சமாச்சாரம்! உதாரணத்திற்கு, ‘சொல்வனம்’ எங்கிருந்தாலும் படிக்கலாம், பார்க்கலாம், கேட்கலாம். இணைய இணைப்பு இருந்தால் (மின்சாரமும் இருந்தால்) போதும்.

புத்தக உலகம் தொழில்ரீதியாக ”நீள உரை”த் (long text) தொழில் என்று அழைக்கப்படுகிறது. ட்விட்டர் (Twitter)  போன்ற சமூக வலையமைப்பு இணைய வசதிகள் இருப்பினும், ”நீள உரை” தொழிலுக்கு அது ஒரு பெரிய சவாலில்லை. நீள உரை எழுத நேரமில்லாதவர்கள்/திறமையில்லாதவர்கள் இது போன்ற புதிய வசதிகளை உபயோகப்படுத்துகிறார்கள். இதன் தாக்கம், செய்தித்தாள் உலகத்தில் அதிகம் உள்ளது. Twitter உலகில் 140 எழுத்துக்களுக்குள் ஒரு செய்தி அடங்க வேண்டும். அதே போல Facebook போன்ற சமூக வலையமைப்பு இணைய வசதிகள் நேரடியாக ”நீள உரை” தொழிலை பாதிப்பதில்லை என்பது என் கருத்து. இவை ”நீள உரை” தொழிலை சுற்றியுள்ள அமைப்புகளை மட்டுமே பாதிக்கின்றன. இதைப் பற்றி, இக்கட்டுரையில் பிறகு அலசுவோம்.

வேறு எந்த விதமான இணைய பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது? எதிர்பார்க்காத திசைகளிலிருந்தெல்லாம் பதிப்பு தொழிலை தலைகீழாக்க இணைய முயற்சிகள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சுவாரசியமான முன்னேற்றம். இதில் சில முயற்சிகளை இங்கு ஆராய்வோம். முதலில், உங்களுக்கு சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வி- ‘சொல்வனம்’ என்பது என்ன? அட, இதைப் போய் யாராவது சொல்வனத்திலேயே எழுதுவார்களா? உடனே வரும் பதில் – ‘சொல்வனம்’ ஒரு இணைய பத்திரிகை. இது உண்மையானாலும், பாதி உண்மையே. எழுதும் எனக்கு எழுத்தார்வம் கொண்ட நண்பர்கள்/உறவினர், படிக்கும் உங்களுக்கு நண்பர்கள்/உறவினர் உண்டு. பத்திரிகையை சேர்ந்தவர்களுக்கும் எழுத்தார்வம் கொண்ட நண்பர்/உறவினர் உண்டு. ஒரு படைப்பு ‘சொல்வனத்தில்’ வெளியாவதற்கு/படிக்கப்படுவதற்கு இந்த நீண்ட சமூக அமைப்பு ஒரு காரணம். மேலும், ‘சொல்வனம்’ என்பது இந்த சமூக அமைப்பு சங்கமிக்கும் இடம். பத்திரிகை வடிவத்தில் இந்த சங்கம்ம் ஏற்படுகிறது. இந்த சமூக அமைப்பில் ஒத்துப் போகின்ற ரசனையுடையவர்கள் இணைகிறார்கள். இதை காகித புத்தக வெளியீட்டாளர்களும் மெதுவாக அறிய முனைந்துள்ளார்கள். ஆனால், இந்த கருத்தை சில இணைய அறிவாளிகள் மிக அழகாக புரிந்து கொண்டு காகித புத்தக உலகத்துக்கு சவால் விட்டு வருகிறார்கள்.

பல மின்னணு புத்தக வெளியீட்டாளர்கள் உள்ளார்கள். இவர்களிடம் அச்சடித்த கதையை அனுப்பத் தேவையில்லை. மின்ன்ஞ்சல் வழியே அனுப்பிய கதை பதிப்புக்கு சரியாக வருமானால், உடனே உங்களுக்கு ஒரு சிறிய முன்பணம் தந்து விடுகிறார்கள். ஒரு காகித புத்தகத்திற்கு ராயல்டி கிடைக்க புத்தகம் வெளியாகி 18 முதல் 24 மாதம் வரை ஆகிறது (www.writersservices.com) . புத்தகத்தின் விலையில் 7.5% முதல் 15% வரை காகித புத்தகத்திற்கு ராயல்டி தருகிறார்கள். இவர்களுக்கு, விளம்பர, உற்பத்தி, போக்குவரத்து மற்றும் மேலாண்மை செலவுகள் அதிகம். மின்னணு புத்தகத்திலோ 35% முதல் 50% வரை ராயல்டி தருகிறார்கள். மேலும் அதிகம் காத்திருக்கத் தேவையில்லை. மாதம் தோறும், 3 மாதம் ஒரு முறை அல்லது 6 மாதம் ஒரு முறை கொடுத்து விடுகிறார்கள். மின்னணு புத்தக வெளியீட்டாளர்கள் அவர்களது காண்ட்ராக்டை அவர்களது இணைத்தளத்திலேயே வைத்திருப்பது இன்னும் செளகரியம். அத்துடன், நாங்கள் திகில் நாவல்கள் மட்டுமே வெளியிடுகிறோம் என்று பந்தா எல்லாம் கிடையாது. புது புது ரசனைக்கேற்ப எழுத முடிந்தால் எழுதித் தள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்தின் விலையும் காகித புத்தகத்தை விட குறைவுதான். ஆனால், வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இவர்கள் அதிவேக மார்கெடிங் செய்கிறார்கள்.

நாம் மேலே பார்த்த்து ஒரு எழுத்தாளரின் பார்வையிலிருந்து. எல்லா நாவல் எழுத்தாளர்களும் மின்னணு புத்தகம் வெளியிட துடிப்பதில்லை. ஆனால், தங்கள் படைப்புகளை வெளியிட இவர்களும் கஷ்டப்படத்தான் வேண்டியுள்ளது. காகித புத்தக விற்பனை தொழிலின் அமைப்பை மின்னணு மயமாக்கினால் எப்படியிருக்கும்? இதை (http://www.fastpencil.com/) ஒரு இணைத்தளம் செய்கிறது. எழுத்தாளர்கள், மற்றும் வெளியீடு சம்பந்தமுள்ளவர்கள் இணையத்தில் சங்கமிக்கும் இடம் இது. புதிய எழுத்தாளர் மற்ற எழுத்தாளர்களுடன் அளவளாவலாம். எழுத்து டெம்ப்ளேட் (அதாவது பக்க அமைப்பு) மற்றும் சில மின்னணு எழுத்துக்கு உதவும் கருவிகள், மற்ற எழுத்தாளர்களின் ஆலோசனை எல்லாம் பெறலாம். மிக முக்கியமாக எடிட்டிங், படம் வரைபவர்கள், புத்தக அட்டை டிசைன் செய்பவர்கள் என்று புத்தக சம்பந்தப்பட்ட அனைவரும் இங்கு ஆஜர். எழுதிய புத்தகத்தை கிண்டிலில், ஐஃபோனில், சோனி ரீடரில் வெளியிட என்ன செய்ய வெண்டும் என்று பல யோசனைகள் இங்கு உண்டு. மேலும் இங்கு வெளியீட்டர்களும் உண்டு. இந்த இணைத்தளம் ஒரு படி மேலே சென்று புத்தக வெளியீடு சம்பந்தப்பட்ட பல தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் எழுத்தாளர்களை இணையத்தில் சங்கமிக்க உதவுகிறார்கள். ஏஜண்டுடன் முட்டி மோதத் தேவையில்லை!

மேல் சொன்ன இணைத்தளத்தைப் போலல்லாமல் சற்று மாறுபட்ட இன்னொரு இணைத்தள முயற்சி (http://www.electricliterature.com/). இதன் நிறுவனர்கள், சற்று மாறுபட்டு யோசிக்கிறார்கள். இலக்கியத்தை டிவிட்டர் கெடுக்கிறது என்று புலம்புவானேன்? டிவிட்டரை வைத்துக் கொண்டே இலக்கியத்தையும் முன்னேற்றலாமே! இவர்கள் ஒரு பத்திரிகை நட்த்துகிறார்கள். பத்திரிகையில் வரும் ஒரு பதிவைப்பற்றி மிக வித்தியாசமாய் சிந்திக்கிறார்கள். ஒரு அனிமேட்டரை அழைத்து, சின்ன அனிமேஷன் ஒன்றை கதைக்கருவிற்கேற்ப செய்யச் சொல்கிறார்கள். பிறகு, ஒரு மின்னணு இசையமைப்பாளரை (electronic musician) அழைத்து அந்த அனிமேஷனுக்கு தகுந்தார்போல இசை க்ளிப் ஒன்றை தயாரிக்கிறார்கள். இரண்டையும் இணைத்து, யூடூயூபில் மேலேற்றி விடுகிறார்கள். டிவிட்டரில் இதைப் பற்றி டிவிட் செய்து விடுகிறார்கள். முடிந்த்து மின்னணு மார்கெடிங்! இவர்களின் ஒரு வாக்கிய அனிமேஷன்:

மேலே உள்ள விடியோ உங்களது ஆவலை ரிக் மூடியின் பதிப்பைத் தேடிப் படிக்கத் தூண்டும். நாவலுலகம் இணையத்தில் எப்படியெல்லாம் முன்னேற்றப்படுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சும்மா இலவச இணைப்பு சமாச்சாரம் ரொம்ப புளித்து போன பழைய விஷயம்! இவர்கள், தங்களுடைய பதிப்புகளை பெரும்பாலும் மின்னணு வடிவத்திலேயே வெளியிடுகிறார்கள். தேவைப்பட்டால், காகித அச்சு பிரதியும் உண்டு.

வழக்கமான காகித வெளியீட்டார்கள் என்ன செய்கிறார்கள் என்று அறிவதற்கு முன் சில புதிய காகித வெளியீட்டார்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். மிக வித்தியாசமான சிந்தனை இது. அதாவது, அச்சடிக்கும் நிலையம் எங்கோ நாட்டின் ஒரு கோடியில் இருந்தால்தானே பிரயாண செலவு? உங்கள் ஊரிலேயே, மார்கெட்டிலேயே உங்களுக்கு பிடித்த புத்தகத்தை அச்சடித்து உடனே உங்களுக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்? இதை காப்பி தயாரிக்கும் எந்திரம் போல ஏக்ஸ்ப்ரஸோ ப்ரிண்டர் என்கிறார்கள். ஷாப்பிங் மையத்தில் சில நிமிடம் காத்திருந்து காசு போட்டால், புத்தகத்தை அச்சடித்து, பைண்ட் செய்து உடனே படிக்க ரெடி. இந்த முறை அச்சில் இல்லாத சில பழைய புத்தகங்களை குறைந்த அளவு காப்பிகள் அச்சடிக்க உதவுகிறது. இதன் விலையும் குறைவாக இருப்பதால் ராட்ச்ச பதிப்பாளராக இருக்க வேண்டியதில்லை. சில சின்ன பதிப்பாளர்கள் தேவைக்கேற்ப அச்சடிப்பதை (Print on Demand) தொழிலாக கொண்டுள்ளார்கள்.

புத்தக தொழில் ஓரளவு இசைக் குழு போன்ற தொழில் என்று சொல்லலாம். முதலில் பீட்டில்ஸ் இசைத்தட்டாக வெளியிட்டார்கள். அனைவரும் கடைக்கு சென்று வாங்கினார்கள். பிறகு குறுந்தட்டு (CD) வந்தது. அதையும் கடைக்கு சென்று வாங்கினர். ஆனால், MP3 வந்தவுடன் கடைக்குப் போய் வாங்குவோரைக் காணோம். இசைக்குழுக்கள் நலியத் தொடங்கின. ஆனால், இன்றும் U2 போன்ற இசைக்குழுக்கள் வெற்றிகரமாக படைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நம் திரையிசைச் சி.டிக்களை அதிகம் யாரும் வாங்குவதில்லை. ரிங் டோன் வியாபாரம், சிடி வியாபாரத்தைவிட பெரியதாக உள்ளது. மேல்நாட்டு இசைகுழுக்கள் எப்படி பிழைக்கின்றன? முதலில், நேரடி நிகழ்ச்சிகளுக்கு, ரசிகர்கள் பணம் கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். ஆனால், இந்நிகழ்ச்சிகளோடு, ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த கலைஞரோடு சில மணி நேரம் செலவழிக்க நிறைய செலவழிக்க தயார். அதனால், நேரடி நிகழ்ச்சிகளோடு, இது போன்ற பக்கத்திலிருந்து ரசித்து, உரையாடி, விவாதிக்கும் முறை மிக லாபகரமாக உள்ள சமாச்சாரம். அதாவது, தங்களை ஒரு தனி ரசனையுள்ள குறுகிய சமூகத்தில் பங்கெடுக்க ரசிகர்கள் 10 மடங்கு செலவழிக்கத் தயார்.  [பண்டைக் காலத்தில் அரசர்கள், பெருவணிகர்கள், தனிகர்கள் தங்களுக்கும், நட்புக்கும், உறவினருக்கும் மட்டும் என்று சிறு அளவில் விசேஷ இசை நிகழ்ச்சி நடத்தி கலைஞருக்குப் பொற்கிழி அளிப்பார்களாமே, அது போன்ற நிகழ்ச்சிகள் திரும்ப வரும் போலிருக்கிறது!]

புத்தக உலகமும் ஏறக்குறைய அதே முறையில் இயங்கினால்தான் பிழைக்க முடியும் என்று பெரிய பதிப்பாளர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். தங்களுடைய தொழிலின் அடிப்படை ஒரே ரசனையுள்ள குழுக்கள் என்று மெதுவாக புரியத் தொடங்கிவிட்ட்து. இந்த குழுக்களை இணையம் மூலம் இணைப்பது ஒன்றுதான் அச்சுத் தொழிலை காப்பாற்ற முடியும். மிகவும் தரமுள்ள குழுவில் சேர படிப்பவர்கள் புத்தகத்தை விட அதிகம் செலவழிக்கத் தயார் என்பது இவர்களது கணிப்பு. இவர்களது பெரிய பயம், புத்தகம் மற்றும் சம்பந்தமான ஊடகங்களை விற்கும் அமேஸான் போன்ற நிறுவன்ங்கள் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை வாங்கி இவர்களை அழித்துவிடும் என்பது.

புத்தக வெளியீட்டாளர்கள் தங்ளுடைய அமைப்பில் உள்ள ப்ரச்னைகளை ஆராயத் தொடங்கிவிட்டார்கள். மேலும், ஏஜண்ட் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது போன்ற விஷயங்கள் தளரத் தொடங்கியுள்ளது. நல்ல திறமைகள் அமைப்பு கோளாறுகளால் நிராகரிக்கப்படக் கூடாது என்ற விழிப்புணர்ச்சி வந்துள்ளது. அடுத்தபடியாக, பல வெளியீட்டாளர்களும் மின்னணு புத்தகங்களை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று உணரத் தொடங்கியுள்ளார்கள். இதனால், ஒரு புத்தகம் காகித வெளியீட்டோடு, மின்னணு வடிவத்திலும் வெளிவருகிறது. இசைக்குழுக்கள் போல, வன் அட்டை, மென் அட்டை, ஒலி, மின்னணு என்று புத்தகத்தை எல்லா வடிவங்களிலும் வெளியிடுகிறார்கள். எல்லா வடிவங்களிலும் வாங்குவோருக்கு விலை சலுகைகளும் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு வடிவத்திற்கும் வெவ்வேறு விலை. இதில் வணிக ப்ரச்னைகள் இன்னும் கொஞ்சம் உள்ளது. உதாரணத்திற்கு, ஒரு புத்தகத்தின் ஒலி மற்றும் அச்சு பிரதிகளை ஒரே ஷாப்பிங் கூடையில் சலுகைகளுடன் வாங்குவது இன்றும் கடினம்!

சில பதிப்பாளர்கள் புதிய முறைகளைச் சோதித்தும் வருகிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு பிரபல பதிப்பாளர், ஒரு தொலக்காட்சி தொடரை, தொலைக்காட்சியில் வருவதற்கு முன்னமே தன்னுடைய இணைத்தளத்தில் இலவசமாக சொஞ்சம் சொஞ்சமாக வெளியிட்த் தொடங்கியது. பயங்கர வரவேற்பை அடுத்து, தொலைக்காட்சியில் தொடர் வெளி வந்த்தும், எழுத்துக்கும், தொலைக்காட்சிக்கும் எப்படி ஒத்து வந்தது, எங்கு சொதப்பல் என்று பதிப்பாளர் இணத்தளத்தில் சூடான விவாதம். திடீரென்று அப்பொழுதுதான் புரிந்த்து, பதிப்பாளருக்கு – இந்த தொடரை ரசிக்கும் குழுவுக்கு நாம் ஒரு பாலம் என்று. தொலைக்காட்சி தொடர் வெளிவந்து, முழு கதையும் அச்சடித்து விற்றதில் 2 லட்சம் புத்தகம் விற்பனையாகியது. தனியாக வெறும் புத்தகம் மட்டும் போட்டால், 2 லட்சம் பிரதிகள் விற்றிருக்க முடியாது.

இன்னொரு பதிப்பு நிறுவனம் ஒரு வினோத சோதனை செய்து வருகிறது. எடுக்கப்படாத தொலைக்காட்சி தொடரை இணைத்தளத்தில் பகுதி பகுதியாக வெளியிட்டு வருகிறது. சுவாரசியம் என்னவென்றால், பாத்திரங்களுக்குப் பல இணைய மேய்பவர்கள் விசிறிகளாகி விட்டார்களாம்! முழு தொடரும் வெளி வந்த பின் அதை ஒரு மின்னணு புத்தமாக வெளியிட திட்டமாம்.
இப்படி பதிப்பாளர்கள் பலவித சோதனை முயற்சியில் இறங்கி வருவதால், புத்தக உலகம் இன்னும் 10 வருடங்களில் அழிந்துவிடும் என்று பொருளில்லை. மின்னணு புத்தகங்கள் அச்சு புத்தகங்களின் விற்பனையில் 5%  தான். ஆனால், இவை வெகு வேகமாக வளர்ந்து வருகின்றன.

மின்னணு புத்தகங்களுக்கு குறைந்தபட்சம் படிக்கக்கூடிய திரையுடைய செல்பேசி தேவை. கணினி, செல்பேசி, புத்தகம் படிக்கும் கருவி என்று இவ்வுலகில் ஏறக்குறைய 150 கோடி கருவிகள் உள்ளன. 650 கோடி மனிதர்கள் வாழும் இப்பூமியில், இது பாதியளவு கூட இல்லை. மேலும் பல வளரும் நாடுகளில் மின்சாரமே பெரிய விஷயம். இதை எல்லாம் வைத்துப் பார்த்தால், புத்தகங்கள் நம்முடன் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளாவது இருக்கும் என்று தைரியமாக சொல்லாம். இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மிகத் தேவை புத்தகங்கள். அது எந்த வகையானாலும் சரி. மின்னணு பாட புத்தகங்கள் எளிதாக குழந்தைகளை சென்றடைய வாய்ப்புள்ளது. இதற்காக பிரயாண செலவு இல்லை. அத்தோடு, டீசல் போன்ற சுற்றுப்புற பகையான விஷயங்களும் தேவையான பிரயாண விஷயங்களுக்கு மட்டும் உபயோகிக்கலாம். சூரிய வெளிச்சத்தில் மின்னூட்டல் செய்து உபயோகிக்க கூடிய மின்னணு புத்தகங்கள் இந்திய படிப்பறிவு முன்னேற்றத்திற்கு மிகவும் உதவும்.

அடுத்தபடி, செய்தித்தாள் உலகம் எப்படி இணையுத்துடன் சமரசம் செய்து வருகிறது என்று பார்ப்போம்.

(தொடரும்)