மில் – ஒரு பார்வை

இந்த ஆண்டின் சுஜாதா விருது பெற்ற நாவல் – “மில்”.

ஒரு தொழிற்சாலை, ஒரு தொழில் அது சார்ந்த சந்தை – ஏற்படுத்தும் புற உலக மாற்றங்கள் நாம் எல்லோரும் அறிந்ததே. ஒரு மில் தன்னை சுற்றியுள்ள சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை, அதற்குள் நிகழும் மாற்றங்களை பதிவு செய்ய முயல்கிற ஒரு புனைவே “மில்” நாவல். நாவலின் தலைப்பே அதன் களத்தையும், ஓரளவு கதையையும் உங்களுக்குள் அதிக மெனக்கெடல் இன்றி உருவாக்கிவிடும். காலம் காலமாய் சொல்லப்பட்ட சிவப்பு சிந்தனை கதைதான். ஓரேயொரு மாற்றம். புதிதாய் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் புறப்பட்ட உலகமய பூதம் நாவலில் இடம் பெற்றிருக்கிறது. சமன்பாடுகள் மாற்றப்படவில்லை.

ஒரு மில் உருவாகிறது. ஊர் நிலம், முதலாளியின் முதல், ஊர்க்காரர்களின் உழைப்பு, சம்பள உயர்வு கேட்டு போராட்டம், காலம் உருவாக்குகிற கதாநாயகன், உழைப்பை பிழியும் நிர்வாகம், அவரால் ஏவிவிடப்பட்ட அடியாட்கள், பம்பு ஸெட்டு காதல், ஊர் பஞ்சாயத்து, மிலிட்டரி அங்கிள், விவசாயிகளுக்கு எதிரான முதலாளிகள் சிண்டிகேட், சீழ்படுகிற விவசாயம், மில் வேலைக்கு போனால் கிடைக்கிற புது மவுசு, என்று யூகித்து சொல்ல முடிகிற பழைய பாத்திரங்கள், கதைக்களங்கள் தான் – என்றாலும் அது சொல்லப்பட்ட புனைவின் விதம் ஒரு உயிர்ப்பை உருவாக்குகிறது, தொடர்ந்த வாசிப்புக்கு எந்த அலுப்பையும் கொடுக்காது, தத்துவ தரிசனங்கள் என்ற பெயரில் மன மோதல் கொடுக்காது, நேர் கோட்டு பாதையில் பயணத்தை எளிமையாய் பயணிக்கிறது.

இந்த நாவல் மாறிவருகிற தொழில் சுழலையும், வட்டார மொழியையும், வாழ்க்கையையும், தேவையான அழகியல் நயத்தோடு கலந்து கொடுத்திருப்பதாகவும், தொழிற் கண்ணியில் ஏற்பட்ட மாற்றங்களை கொஞ்சம் சாய்வான பார்வையாகயிருந்தாலும் ஓரளவு நேர்மையாக வைக்கிறதாகவுமே முதன் முறை படிக்கும்போது உணரமுடிகிறது.

ஊர் கொடுத்த நிலத்தில் தனது முதலை போட்டு அதற்கு மேல் ரிஸ்க் எடுக்கும் ஒருவர், மில்லின் முதலாளி வெறுமனே வந்து ஏப்பம் விட்டு கூட்டம் கேட்டு சொற்பொழிவு ஆற்றிவிட்டு போகும் ஒரு உதிரி கதாபாத்திரம்தான். அதுசரி, ஒரு தொழிலாளி பார்வை நாவலில் அவர் எவ்வளவு மென்மையாக சொல்லப்பட்டதே அதிகம்.

ஒரே சந்தோசம். என்ன சந்தோசம்? “நம்ம முதலாளி இப்ப முதலாளி இல்லா.. அவனும் நம்மள மாதிரி கூலிதான்… பெரிய கூலி பாவம்… “மானிட இரக்கம், நேயம் பெய்கிறது. அது சந்தோசமா, கழிவிரக்கமா, நன்மையா, தீமையா… புரியவில்லை… முதலாளிகள் பெரிய முதலாளிகளிடம் இடைத்தரகர்களாக மாற்றியது மட்டும்தான் இந்த ‘பெத்த’ உலகமயமாக்கத்தின் சாதனையா என்கிற கேள்வியை எழுப்புவதன் மூலம், உலகமயமாக்கத்தின் மாற்றத்தை நாவல் இப்படித்தான் புரிந்து கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.

காலம் காலமாய் கண்ணுக்கு தெரிந்த ஒருவனோடு சண்டை போட்டு கொண்டிருந்தோம். இப்போது காய்கள் எங்கோ நகற்றப்பட நம்மை நசுக்கிய நபும்சகனும் நசுக்கப்படுகிறான். நவீன முதலாளித்துவத்தின் வேர்கள் எங்கிருக்கின்றன? ’காம்ரேட்’.. என்று எங்கு போய் கூவ ? அவனுக்கும் நமக்குமான ஒரே பரிவத்தனை உற்பத்தி செய்யப்படும் பொருளும், வாங்கும் பணமும் தான். மனித உழைப்பு மட்டுமே அளவிடக்கூடிய உலகம். தொழிலாளி, முதலாளி சமன்பாட்டிற்குள் உலகத்தை சமன் செய்து விடும் கருப்பு வெள்ளை உலகம்.

உலகமயமாக்கம் எதற்கு உதவியிருக்கிறதோ இல்லையோ வறட்டுத்தனமான, முற்போக்கு கதை எழுதுபவர்களுக்கு புதிய தளத்தை அமைத்து கொடுத்திருக்கிறது என்றார் ஒரு நண்பர். அந்த வார்த்தைகளில் வெறும் வேடிக்கை மட்டும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.

ஒரு தொழிற்சாலை வெறும் கட்டடமல்ல. அது நிலத்தின் மீது உட்கார்ந்திருக்கும் வெறும் அசையாப் பொருளல்ல. அதற்கும் உயிரிருக்கிறது. அது நிறைய மாற்றங்களை விதைத்துக் கொண்டேயிருக்கிறது. வெறுமனே நடந்து செல்லும் ஒரு ஜென் குருவை போல அது கற்பித்துக் கொண்டேயிருக்கிறது. மாற்றத்தை நோக்கி தள்ளிக்கொண்டேயிருக்கிறது. அது வெறும் லாபம் ஈட்டும் இடமாக, தன் உழைப்பினால் மட்டுமே எல்லாம் உருவானதாய் சில கருத்துருவாக்கங்கள் கட்டமைக்கும்போது அந்த ஜீவராசி மடிந்து போகிறது.

அது போலவே முதலும், அதன் மீது எடுக்கப்படும் ரிஸ்கும், அது சம்பந்தமாய் மாறும் சந்தை காரணிகளும், அதனால் ஏற்பட்ட வளர்ச்சியும், அடுத்த கட்ட பொருளாதாரத்திற்கு சமூகத்திற்கு ஒரு தொழில்துறை ஆற்றும் பங்கு – மதிக்கப்படாத போது, எழுத்தில், புனைவில் பதிவிட முடியாத போது அது வெறும் ஒருபக்க மத்தளமாகவே மாறிப்போகிறது.

முற்போக்கு என்கிற பெயரில் எழுதப்படுகிற நாவலில் இந்த அறிவுக்கொலைகள் சர்வ சாதாரணம். மற்ற பக்கத்தின் மீதான அறிவின்மை, சகபுரிதல், ஒட்டுமொத்த புரிதலின்மை போன்றவற்றால் எழும் வெற்றிடத்தை மனித நேயக்குரல், மார்க்கீசியம் என்கிற வெறும் ஓலி அலைகளால் நிரப்புதலே முற்போக்கு இலக்கியம் என்கிற காலகட்டத்தை பின் தள்ளி எழுத்துக்கள் நகர்தல் அவசியம்.

ஆனால் எழுத்துலக சந்தையும் நுகர்வோர் சந்தையை போலத்தான். பரிசு பெறுதல், கவனம் பெறுதலும் முக்கியமும் கூட. பரிசு பெறத்தேவையான எல்லா கண்ணிகளையும் – நிறுவனப் படுத்தப்பட்ட முற்போக்கு பார்வை, அழகியல் பூச்சு, துன்பியல் கலவை, வட்டார வழக்கு, மக்கள் கூட்ட்த்திற்கான குரல் – என தன்னை சரியானபடி தொகுத்தவாறே முன்னகர்கிறது இந்நாவல். வெகுஜன தளத்தில் பரிசு பெற வேண்டிய அத்தனை தகுதிகளையும் அது கொண்டிருக்கிறது என்பதே அதன் கூடுதல் சிறப்பு.

எனினும், இந்த நாவலின் சில அடிப்படை வியாஞ்ஞான்ங்களிலிருந்து நான் கொஞ்சம் வேறுபடுவதாகத்தான் நினைக்கிறேன்.. உலகமயமாக்கலை இந்த நாவல் உள்வாங்கி உற்பத்தி செய்த விதம், அதீத பொதிப்புத்தி மற்றும் ஒரு பக்க சாய்வு கொண்டது. அது விவாதத்திற்கான கதவுகளை திறக்கவில்லை. அப்படிப்பட்ட எந்த கதவுகளும் இந்த நாவலில் இல்லை.

எனது சிந்தனைகளை கீழ்வருமாறு தொகுத்து கொள்கிறேன்.

அ) இந்த நாவல் என்னுள் எழுப்பிய மில் சம்பந்தமான அநுபவங்கள் மற்றும் கேள்விகள்

ஆ) உலகமயமாக்கம் பற்றிய மற்றொரு மாற்றுச் சிந்தனை

எனது மேற்கண்ட இரு தலைப்புகள் மேயும் பகுதி, நாவல் எழுதப்பட்ட சூழலை உணராத, உணர்ந்து கொள்ள முடியாத மெட்ரோ சிந்தனையின் எச்சமாக இருக்கலாம். பரவாயில்லை இருந்து விட்டு போகட்டும்.

மில் நாவலும், என் நினைவுகளும்

புலம் பெயர்வு, வேறு தள தொழில் என்கிற காரணத்தால் – வெகுதூரம் பயணப்பட்டு வந்த என்னுள் பழைய நினைவுகளை மீட்டியது. மில் நாவல். 70’களில் பார்த்த மில். மில் நாவலின் நான் ரசித்து வாசித்த பகுதி “தொழிற்சங்கம் உருவாகும்” பகுதி. அது சார்ந்து எனக்கு இரண்டு அநுபவங்கள் உண்டு. ஓன்று மோகன்மாமாவின் மில் மற்றும் அப்பா பற்றிய பாட்டியின் ஓப்பாரி; மற்றும் எனது பேராசிரியரால் வரையப்பட்ட மிகைப்படமும் அதன் முடைநாற்றமும்.

மோகன் மாமாவின் மில் பெயர் சுந்திர கைலாச ராமசாமி மில்லோ எதுவோ. அது மோகன் மாமாவின் மில் அல்ல. மாமா அங்கு வேலை பார்த்தார். ஆகவே எனக்கு அதன் பெயர் மோகன் மாமா மில். அந்த மில்லில் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் சின்னமில் பட்டியில் தங்கியிருந்தார்கள். சின்னமில் பட்டியின் அமைப்பே ஏற்கனவே அமைக்கப்பட்ட சமுதாய அமைப்புகளால் உருவான தெருக்களிலிருந்து வித்தியாசமாய் இருக்கும்.

ஒரு கோவில் தெரு, வணிகத்தெரு, தள்ளிவைக்கப்பட்டோர் அடங்கிய குடிசைத்தெரு என்றெல்லாம் இல்லாமல் எல்லாம் கலந்து கட்டிய சோறு போல சிதறிக் கிடக்கும் அந்த சின்னமில் பட்டி. அங்கிருந்த மோகன் மாமாவை யூனியன் வைக்கும் காரணத்திற்காக வீட்டிற்கு வந்து போவார். யூனியன் ஆரம்பிப்பது அவ்வளவு எளிதான வேலையல்ல.

அந்த மில்லின் வாசலில் நிறைய யூனியன் போர்டுகள் நின்றிருக்கும். ஏதோ ஒரு யூனியனில் மாமா இருந்தார். மாமா வீட்டில் இப்போது சிவப்பு கட்சிகளின் தலைவர்களாயிருந்த நிறைய தலைகள் வந்து சாப்பிட்டு, வகுப்பு எடுத்து தோழர்களை உற்சாகப்படுத்துவார்கள். ஒரு சின்ன பையில் வேட்டியும், ஒரு மாற்றுத்துணியும் கொண்டு அவர்கள் ஊர் சுற்றி பேசுவார்கள்.

யூனியன் ஆரம்பிக்க வைக்கும் பொறி எது, யாரை நம்புவது, எப்போது யாரை உள்ளேயிழுப்பது, யார் எப்போது வெளியே போவார்கள், எவ்வாறு இயக்கம் தனி மனிதர்களிடமிருந்து பெரிதாகி வளர்ந்து நிறுவனமாகிறது – போன்ற நிகழ்வுகளும், வளர்ச்சிகளும் எந்த வித்த்திற்கும் ஒரு நிறுவனம் நட்த்துவதற்கு குறைவில்லா பேரின்பம் அளிக்கும் சவால்கள்.

யூனியன் ஆரம்பிப்பது என்பது எவ்வளவு லேசான காரியமில்லையோ அதுபோல அதை தொடர்ந்து தக்கவைத்து கொள்வதும் எளிதான காரியமில்லை. அது நிறுவனத்தை அடுத்த கட்ட்த்திற்கு எடுத்து செல்லும் சவால்களுக்கு இணையான அட்ரிலினை சுரக்க வைக்கும்.

ஒரு தொழிற்சங்கம் உருவாவது ஒரு குழந்தை உருவாவது போல. மறைமுகமாக யாரும் போடப்படாத பாதையில் கூடியிருந்தவர்களை கூட நம்பமுடியாத நிலையில், தன் வாழ்க்கையை இழக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் உள்ளடக்கிய செயல் அது. குழந்தை பிறந்தபின் சர்வசாதரணமாய் நாம் மறந்து விடுகிற மருத்துவர்களை, செவிலியர்களை டாக்டர்களை போல நிறைய தோழர்கள் தள்ளப்படுவது வெகு இயல்பு. எல்லா போராட்ட வெற்றிக்கு பின்னும் அதை முன்னின்று நடத்திய சில தலைகள் யாகத்தில் பலியிடப்படுகின்றன.

அந்த மில்லில் வேலை நிறுத்தம் ஆகி, மோகன் மாமா ஜெயிலுக்கு போய்விட்டு வந்து போனபின்பு தான் நான் அடிக்கடி அவர் வீட்டிற்கு போக ஆரம்பித்தேன். அந்த நீண்ட நாள் கதவடைப்பில் அவர்களின் வாழ்க்கை திக்கு முக்காடி சீரழந்து போனதுதான் மிச்சம். பொன் கேட்ட இட்த்தில் பூ வைத்தது. நிறைய பேரின் வாழ்க்கைக்கு, வேலை வாய்ப்புக்கு வாக்கரிசி.

மில் கதவைடைப்பு நீடித்த கடைசி நாட்களில் மோகன் மாமா சாப்பிட வழியில்லாமல், கஷ்டப்பட்டு மற்றவர் வீட்டில் சாப்பிடும்போது தனது நண்பர்கள் சாப்பிடமால் இருப்பார்களே என்ற எண்ணத்தால் நிறைய தடவை கண் கலங்கியிருக்கிறார். அந்த சின்னமில் பட்டியின் ஒரு டூரிங் டாக்கிஸ் மூடிப்போனது. அந்த வயசில் மாமாவோடு பார்க்கும் ஓசி சினிமாவின் இழப்புதான் எனக்கு பெரிதாய் தோன்றியது. மில் மூடி, திறந்து பிறகு மூடியது. தொடர்ந்து ஏதாவதொரு போராட்டம். தொடர்ந்து நட்த்த முடியாமல் மூடி, மேனெஜ்மெண்ட் கைமாறி, 2000க்குபிறகு அது கோயம்புத்தூரின் ஒரு பெரிய மில்லுக்கு தேவையான சில உதிரிப்பொருட்களை தயாரித்துக் கொடுக்கிறது.

என் பாட்டி – யூனியன் போராட்ட்த்தால் இழந்த என் அப்பாவின் ஒரு வேலையை பற்றி – நிறைய தடவை சொல்லிக் கொண்டிருப்பாள். ”ஊர்க்காராளுக்கு கோசம் போட்டு என்னத்த கண்டது. மஞ்ச நோட்டீசுத்தான் கண்டது.. “

பேராசிரியரின் சங்கம்

என் கல்லூரி நேரத்தில் சம்பந்தமில்லாமல் சில மாணவர்கள் ஒரு போராட்ட்த்தை மாணவர் சங்கத்தின் மூலம் தொடங்கினர். அது சிவப்பு கட்சியின் மாணவர் அணி. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். சின்ன குழுவாய் எதிர்ப்பு தெரிவித்தோம். பின்னர் சில பேராசிரியர்களே அதற்கு துணை நிற்கிறார்கள் என்று உணர்ந்து அதிர்ச்சி அடைந்தேன். நான் பெரிதும் மதிக்கிற ஒரு பேராசிரியர் அப்போது என்னை தனியாய் அழைத்து நிறையப் பேசினார்.

தொழிற்சங்கம் தொடங்குதல் தொழிற்சாலைகளில் மட்டுமல்ல, எல்லாயிடங்களிலும் அது ஒர் வலியான பிரசவம். எங்களது தனியார் கல்லூரியில் ஒரு ஆசிரியர் சங்கம் நிறுவ தான் எவ்வளவு கஸ்டப்பட்டேன் என்று சொன்னார். போராட்டத்தால் தான் நீங்கள் கல்லூரியில் படிக்கீறீர்கள், இல்லையென்றால் இது சிறையாயிருக்கும் என்று சொன்னார்.

எழுபது பேர் இருக்கிற ஒரு கல்லூரியில் வெறும் நான்கு பேர் மட்டுமே தனியாக யாருக்கும் தெரியாமல் ஆரம்பித்து, தங்களது அடையாளங்களை யாருக்கும் காட்டாமலே பேசிப் பேசியே தங்கள் பக்கம் கொண்டு வந்து, அதற்குள் சிவப்பு கட்சியின் சிலரை தொடர்பு கொண்டு அவர்களது ஆலோசனை பெற்று, சட்ட ரீதியான அங்கீகாரம் பெற்று நிறைய வேலைகளை திரை மறைவில் செய்ய வேண்டியிருந்ததாம். கேட்க ஆச்சரியமாய் இருந்த்து.

சரி, சங்கம் அமைத்தது ஏன், அமைத்தார்கள் ?

கல்லூரி ஒரு மில் ஓனருக்கு சொந்தமானது.. பழைய தலைமுறையிலிருந்து வந்த நிர்வாகம் மில் போலவே கல்லூரியையும் நடத்த முனைந்தது. இரண்டும் வேறு வேறு விலங்குகள் என்று அவர்களுக்கு புரியவில்லை. படித்த பேராசிரியர்கள் பேண்டுக்கு மேலே உள்ளூடை அணிந்த சூப்பர்மேன்கள் என்று புரிந்து கொள்வதற்குள் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் தூண்டிவிடப்பட்ட, உற்பத்தி செய்யப்பட்ட போராட்டம். தொடர்ந்து உள்குத்தல்கள், இல்லை முரணியக்கங்கள்.

நிலத்தின் மீது பணம் போட்டு கல்விச் சாலை(இல்லை, அது தொழில் என்பார் எனது பேராசிரியர் ) நடத்திக்கொண்டிருந்த மேனெஜ்மெண்டை தூங்கவிடாமல் காதில் குடைவது தான் அவர்களது மாபெரும் சாகசம். தொழிற்சங்கம் அமைத்த பின், கல்லூரி முதல்வர்களை எப்போதும் குடைச்சல் கொடுத்துகொண்டு இருந்தார்கள். மாணவர்களை தூண்டி விடுதன் மூலம் நடக்கிற போராட்டங்களை ஊதி பெரிதாக்கி, தூணாக்கி கல்லூரியை அரசாங்கம் எடுத்து நடத்துவதற்கான முயற்சியை எடுத்தார்கள்.
மாணவர்களையும் போராட்ட களத்தில் ஏதோ ஒரு சின்ன காரியத்திற்காக குதிக்க சொன்னபோது ஒரு மாணவனாய் நான் அதை எதிர்த்தேன். என்னை மறைமுகமாக மூளைச்சலவை செய்ய அவர் அந்தக் கதையை சொல்ல வேண்டியிருந்த்து. அவரின் மீது இருந்த மாபெரும் மரியாதையினால் எனது எதிர்ப்புக் குரலை குறைத்து கொண்டேன். மற்ற வேலைகளை அவரது ஏற்கனவே பின்னப்பட்ட வலை செய்த்து.

சரி, சங்கம் அமைத்தது என்னதான் செய்தார்கள் ?

தனது உழைப்பின் பெரும்பாலான நேரத்தை முதலாளியத்தை எதிர்க்க போன இந்த பேராசிரியரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். அவர் இறந்திருக்க வாய்ப்புகள் அதிகம். தனது கல்லூரி ஏன் ஒரு ஐஐடி போலவோ, தங்களது கலைப்பகுதி டில்லி ஜென்யூ போலவே இல்லாமல் வெறும் அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் ஏன் சிந்திக்கவேயில்லை.
ஒரு ஆறுமாதத்தில் ஆங்கிலம் பேச தைரியம் தரும் தனியார் நிறுவனங்களைவிட கல்லூரியின் மூன்று அல்லது நான்கு வருடங்களில் அந்த அடிப்படையான தைரியத்தை நம்மால் ஏன் ஊட்ட முடியவில்லையே ஏன் – என்று இந்த தொழிற்சங்க சும்பன்கள் தங்களை கேட்டு கொள்ளவில்லை என்பதை யாரால் விளக்க முடியும்.

அதெல்லாம் பணம் எடுக்கிற முதலாளியத்தின் வேலை என்று முடிவெடுத்து விட்டார்களோ என்னவோ?
தங்களது ஓய்வூதியத்திற்காக, வேலை நேரத்திற்காக மாய்ந்து மாய்ந்து மார்க்சை பிராண்டியவர்கள் ஏன் தனது தொழிலை சார்ந்த ஒரு மானசீகமான கேள்வியை கேட்க மறந்துவிட்டார்கள் அல்லது மறுத்து விட்டார்கள் என்று புரியவில்லை.

உலகமயமாக்கம் ஒரு மாற்றுப்பார்வை

மாபெரும் நிறுவனங்களின் மனித உழைப்பு செலவை குறைக்க

அ) மற்ற தேசத்திலிருந்து குறைந்த விலையில் எதையெல்லாம் வாங்கி கொள்ள முடியுமோ, அதை வாங்கி

ஆ) அதிக பொருளை குறைந்த விலையில் உற்பத்தி செய்து,

இ) தேச எல்லை வேறுபாடின்றி சந்தைப்படுத்தும் முயற்சியாக

ஜீஈ போன்ற நிறுவனங்களால் சோதனை செய்யப்பட்ட அவுட்சோர்சிங் முயற்சி, தொழில்நுட்பத்தால் மேலும் இலகுவாகி ஒரு அங்கீகரிக்கப்பட்ட பேட்டனாக, செயல் திட்டமாக உருவானதே இப்போது பேசப்படுகிற உலகமயமாக்கத்தின் ஆரம்பக் கண்ணி. அவுட்சோர்சிங், தொழில்நுட்பம், எல்லை தாண்டிய கட்டற்ற வியாபாரம், ( boundryless business ), பிராண்டிங், உலகம் யாவும் தம்முள வாக்கும் நிறுவன ஆசை, தனக்கு சிறந்ததை மற்றும் செய்யும் குவி எண்ணம் – என்கிற நிறைய வளர்த்தெடுக்கப்பட்ட மேலாண்மை கருத்துருவாக்கத்தால் ஒரு உருவாக்கப்பட்ட அலையின் உச்சகட்டமே உலகமயமாக்கம்.
இது மில் தொழிலில் மட்டும் நடந்த மாற்றமல்ல. எல்லா வளரும் சந்தையிலும் நிகழப்போகிற ஒரு சந்தை நிகழ்வு. ஒரு வளர்ந்த நுகர் பொருளாதாரம் சந்திக்க வேண்டிய கன்னி வெடி.

இந்திய கணிப்பொறி துறையிலும் இது நடந்தேறியது. 90’களின் ஆரம்பத்தில் கணிப்பொறி தயாரித்து விற்றுக்கொண்டிருந்தவர்கள், இருபதாண்டின் இறுதியில் மைக்ரோசாப்ட்டுக்கும், இண்டெலுக்கும் இடைத்தரகர்களாகவும், அவர்களின் நிறுவன பொருட்களை விற்கும் இடைத்தரகர்களாகவும், அதை சந்தைப்படுத்தலுக்கு உதவும் இடை நிறுவனங்களாகவும் மாறிப்போன விந்தையும் உலகமயமாக்கத்தின் ஒரு கூறுதான். ஒரு சில நிறுவனங்களைத் தவிர மற்ற மீன்கள் எல்லாம் பெரிய மீன்களுக்கு இரையாகி, எருவாகி அவர்களின் முகமாகி போனது சந்தை வளர்ச்சியின் ஒரு முகம்.

உலகமயமாக்கம் அதிகமாக பேசப்பட்டு கொஞ்சமாய் புரிந்து கொள்ளப்பட்ட விசயம். இவை வெறும் வேறு நாடுகளோடு செய்து கொள்ளும் வியாபார ஓப்பந்தங்கள் மட்டுமல்ல. இரவு நேரங்களில் மற்றவர்களுக்கு உழைத்து தள்ளும் நேரம் சார்ந்ததோ, ஒரு சில மென்பொருள் கோடுகளால் மட்டுமானதோ அல்ல. கொஞ்சம் மக்கள் வேலை தேடி குடிபெயரும் சில கால நிகழ்வோ, ஒரு சில அறிவியல் கண்டுபிடிப்புகளின் குறுகிய கால கொந்தளிப்பாகவே இருக்கமுடியாது. ஏதோ ஒரு சில நாடுகள், ஒரு சில மனிதர்களின் சேம நலனுக்காக, ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து உருவான கருத்துருவாக்கமல்ல.

மேலும் மேற்சொன்ன எவையும் புதிதல்ல. யுக யுகமாய் ஏதோ ஒரு ரூபத்தில் புவியில் நடந்து வந்திருக்கிற செயல்கள் தான். எனில், உலகமயமாக்கத்தில் என்னதான் புதியது ?

இந்திய சூழலில் உலகமயமாக்கம் பற்றி, பொத்தம் பொதுவான மொக்கையான எதிர்ப்பு விமர்சனங்களை விடுத்து, ஆக்கப்பூர்வமாக வெளிவந்த வியாக்கியானங்கள் அரிது. அதை உட்செறித்து நமது விழுமியங்களோடு இணைக்க நடந்த ஆராய்ச்சி முயற்சிகளில் ராவ் செய்த பாட்டம் ஆப் பிரமீட் (bottom of pyramid) போன்ற வெகு சில சுதேச நிகழ்வுகள் விடுத்து மற்றவை எல்லாமே அதை காப்பியடித்து தோற்றுப்போனவை ; மற்றவை விமர்சனம் செய்து விலகிப்போனவை ; சில முதலில் பயந்து பின்னர் சுதாரித்து எழுந்தவை ; தமிழில் மிகவும் அரிது.

மெக்காலே படிப்பு இந்திய சமூக தட்டுகளை அசைத்து ஆட்டுவித்தது போல உலகின் வர்க்கத் தட்டுகளை மாற்றியமைக்கும் காரணியாகத்தான் உலகமயமாக்கம் பார்க்கப்படுகிறது. எல்லா மாபெரும் குலைக்கும் மாற்றங்களுக்கும் (disruptive changes) ஏற்படுகிற வளர்ச்சி, தேய்வு பாதையும் அதன் மீது எழுகிற விமர்சனங்களும் – உலகமயமாக்கலுக்கும் எழுப்படுவதில் ஆச்சரியப்பட ஓன்றுமில்லை.

உலகத்தில் எது சிறந்ததோ அவையெல்லாமே தேவை என்று விழைகிற மானுட ஆன்மாவின் ஒட்டு மொத்த புறவுலகு முயற்சியின் தொடக்க கண்ணிகளே உலகமயமாக்கம். அது நுகர்பொருள் கலாச்சாரம் என்கிற மேல் தோலில் தொடங்கியிருந்தாலும் அது முதிர முதிர சிறந்தவைகளால் ஆன ஒரு கனிந்த உலகத்திற்கு இட்டு செல்லும் என்று நம்புகிறவன் நான். ஓவ்வொரு மாபெரும் மாற்றங்களும் இருந்தவற்றை கலைத்துவிட்டு புதிய கோலம் எழுதியவை தான்.

இவற்றிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் இது தடுக்க முடியாத ஒரு கருத்துருவாக்கம் அதை அஜீரணமடையமால் எல்லா தேசியங்களும் பாதிப்படையாமல் எப்படி சமத்துவமின்மையை சமாளிப்பது என்றாவது ஆக்கப்பூர்வமாக யோசிக்க ஆரம்பிக்கலாம்.

உலகமயமாக்கத்தின் வேர்களை மறுபடி சுதேசி நிலத்தில் ஆழமாய பதிக்க வேண்டிய காலகட்டத்தை நோக்கி இந்த நாவல் நம்மை திருப்பியிருந்தால், அதை நோக்கி சில வினா விதைகளை தூவியிருந்தால் இன்னும் நன்றாகயிருந்திருக்குமே என்று யோசிக்க வைக்கிறது.