’கதை என் மீது துள்ளியபடி இருக்கும்’

எழுத்தாளர் ரேமண்ட் கார்வருடனான இந்த செவ்வி 1985-ல் வெளியானது. தன்னுடைய எழுத்து குறித்தும், தன் சூழலின் பாதிப்புகள் குறித்தும் ரேமண்ட் இதில் பதிவு செய்கிறார். விரிவான செவ்வியை இந்த தளத்தில் வாசிக்கலாம்.

நீங்கள் எழுதத் துவங்கிய போது, பொருளாதார பிரச்சனைகள், குழந்தைவளர்க்கும் பொறுப்பு போன்ற பல தடங்கல்களோடு போராடிக்கொண்டிருந்தீர்கள். அனைத்தையும் தாண்டி உங்களை எழுதத் தூண்டியது எது?

உங்களுக்கு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. எனக்கே அது தெரியாது. வேறெதையும் விட எழுதுவதையே நான் விரும்பினேன். எழுத்தை மட்டுமே நான் பற்றியிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் அதுவும் என்னை விட்டு போனது. நான் எழுதுவதை முற்றிலும் நிறுத்தி, முற்றிலும் மதுவில் மூழ்கியிருந்த காலமும் உண்டு. ஆனால் எழுத்துடனான எனது உறவு மட்டுமே, அதை நான் முழுமையாக பற்றியிருக்கும் பட்சத்தில், வாழ்க்கை என்னும் மெழுவர்த்தியின் ஒளி மங்கிப்போனாலும், என் வாழ்க்கைக்கு சிறிதேனும் அர்த்தத்தை அளிக்கும் என்று நான் நம்பினேன். அது எனக்கு முக்கியமானதாக இருந்தது.

FIRES என்னும் உங்கள் முதல் கட்டுரையில், உங்கள் தந்தை குறித்தும் அவருடனான உங்கள் உறவு குறித்தும் பேசியிருந்தீர்கள். 1967-ல் இறந்துபோன அவர் இப்போது உயிரோடு இருந்தால், நீங்கள் தற்போது அடைந்திருக்கும் உச்சத்தை அவர் எப்படி அணுகியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

அவர் மிகவும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன். என் குடும்பம் குறித்து ஒரு விஷயம். என் குடும்பம் வாசிக்கும் பழக்கமற்றது; வாழ்வின் ‘மேலான விஷயங்கள்’ குறித்து அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. வீட்டில் ஒரு சில புத்தகங்கள் இருந்தன; பைபிள் மற்றும் நூலகத்திலிருந்து என் தந்தை கொண்டுவந்த இரண்டு அல்லது மூன்று ’westerns’ வகைத்தான புத்தகங்கள் இருந்தன. என் குடும்பம் அதன் ஜீவனத்திற்காக உழைப்பை மட்டுமே சார்ந்திருந்தது. நானும் வியர்வை சொட்ட உழைத்து, என் ஜீவனத்தை நடத்த வேண்டும் என்றே எதிர்பார்த்தார்கள். கல்லூரி செல்வது குறித்து யாரும் என்னை ஊக்குவிக்கவில்லை. கல்லூரிப் படிப்பை யாரும் நிராகரிக்கவுமில்லை. நான் உழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அதோடு மற்ற தொழில்களில் ஈடுபட்டால் அதில் பிரச்சனையில்லை. வாழ்வு குறித்த அவர்களின் பார்வை அப்படிப்பட்டதாகத்தான் இருந்தது. எழுத்து ஒரு பொழுதுபோக்கு, மீன் பிடிப்பதைப் போல. யாரும் அதைத் தீவிரமாக அணுகவில்லை. ஆனால் என் தந்தை என் இப்போதைய நிலை குறித்து மகிழ்வார். அது நிச்சயம். ஒரு விஷயத்தை அவர் நிச்சயம் அறிந்து கொள்ள விரும்புவார்: “எழுத்து மூலம் நீ எவ்வளவு வருமானம் ஈட்டுகிறாய்?”.

உங்களுடைய எந்தவொரு கதையையும் உங்கள் தந்தையிடம் காட்டியதில்லை என்று நீங்கள் அந்தக் கட்டுரையில் கூறுகிறீர்கள். ஏன்? அவரால் உங்கள் படைப்புகளை புரிந்து கொள்ள முடியாது என்று நினைத்தீர்களா?

ஒரு வகையில், ஆம், அவரால் என் படைப்புகளை புரிந்து கொள்ள முடியாது என்று நினைத்தேன். மற்றுமொரு காரணம், எங்களிடையே இருந்த தூரம். நான் அவர் இருப்பிடத்துக்கருகில் வசிக்கவில்லை. நான் எழுதியபோது அவர் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தார். Tess Gallagher-க்கு என்னுடைய படைப்புகளை படிக்கச் சொல்லி கொடுப்பதுண்டு. அதுவும் கதை எழுதிமுடித்தவுடன் கொடுத்ததில்லை. கொஞ்சம் ஆறப்போட்டு அதன் பின் தான் அவரிடம் அளிப்பேன். நான் எப்போதுமே அடுத்தவரிடம் என் படைப்பைக் காட்டவேண்டும் என்ற தீவிரத்துடன் இருப்பதில்லை. மேலும், நான் எழுதிக் கொண்டிருந்த சமயத்தில், எழுதத் துவங்கிய சமயத்தில், என் தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். அந்த நிலையில் அவரிடம் என் படைப்புகளை படிக்கச் சொல்லி கொடுப்பது சரியல்ல.

‘Fires’ கட்டுரையில் ஒரு எழுத்தாளராக உங்கள் குழந்தைகளிடமிருந்து நீங்கள் பெற்ற பாதிப்பைக் குறித்து பேசியிருக்கிறீர்கள். அவர்கள் தற்போது 30-களில் இருக்கக்கூடும். இன்றும் அவர்கள் உங்களை பாதிக்கிறார்களா?

ஆம், என் மகளுக்கு 27. என் மகனுக்கு 26. இன்னும் அவர்களால் உருவாக்கப்பட்ட மனிதனாகத்தான் நான் இருக்கிறான். ஆனால் சொல்லிக்கொள்ளும்படியான எந்த புதிய பாதிப்பும் இப்போதில்லை. நாங்கள் இப்போது நண்பர்கள். இந்த நிலை நான் மது அருந்திக்கொண்டிருந்த நாட்களில் இருந்ததில்லை. நாங்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்த போதும் அப்படித்தான். நான் மது அருந்துவதை நிறுத்திய பின்புதான் நாங்கள் நண்பர்கள் ஆனோம்.

1977 வரையிலான அந்த காலம் உங்களுடன் இன்னும் இருப்பதாக எண்ணுகிறீர்களா? அது குறித்து எழுத நினைக்கிறீர்களா?

ஆம். என்னுடைய 20 மற்றும் 30 வயதுகளின் அனுபவங்கள் உணர்வுப்பூர்வமாக மிக ஆழமான, முழுமையான மற்றும் எக்காலத்துக்கு நீடிக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. என்னுடைய உணர்வுப்பூர்வ கணங்களில் நிகழ்ந்த அழுத்தமான பாதிப்புகள் அவை. நான் இன்னும் அந்த காலத்திற்குச் சென்று விடவே நினைக்கிறேன். அந்த நினைவுகளை என்னால் முழுதாக கடந்து விட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் என்னுடைய அனைத்து கதைகளும் கவிதைகளும் அந்த காலத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டவையல்ல. என்னுடைய கதைகள் பெருமளவிற்கு அந்தப் பின்ணணியை விட்டு விலகிச் சென்றிருப்பதாகவே நினைக்கிறேன். ‘Cathedral’ தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும், என்னுடைய முந்தைய கதைகளை விட மாறுபட்டவை.

வாசகன் எழுத்தாளனின் வாழ்க்கையை அறிந்து கொள்வது முக்கியமானது என்று நினைக்கிறீர்களா?

முக்கியமென்று நான் நினைக்கவில்லை, ஆனால் அறிந்து கொள்வது பெரிதும் உதவும். நானே கூட, நான் மிகவும் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதில் எப்போதும் ஆவல் கொண்டிருந்திருக்கிறேன். நான் முதல் முறை ஜேம்ஸ் ஜாய்ஸை வாசித்தவுடன், அவரைக் குறித்து அறிந்து கொள்ள நினைத்தேன். அவருடைய வாழ்க்கை வரலாற்றை படித்தேன். மேலும் எனக்கு படிக்க கிடைத்த அவர் குறித்த எல்லா ஆக்கங்களையும் வாசித்தேன். நான் இந்த “புது விமர்சனம்” (New Criticism) என்று சொல்லப்படும் விஷயத்தை நம்பவில்லை. அதில் எழுத்தாளனை குறித்த கேள்வியே எழுப்பப்படுவதில்லை. பிரதியை மட்டுமே யோசிக்கிறீர்கள். படைப்பாளியை அவன் வாழ்ந்த காலத்தை, படைப்பாளி குறித்த மற்ற விஷயங்களை மறந்து விடுகிறீர்கள். இந்தப் போக்கை நான் ஏற்றுக் கொள்வதேயில்லை.

உங்கள் மற்றும் உங்கள் படைப்புகள் குறித்தும் நேர்காணல்களில் நீங்களே யோசித்திராத விஷயங்களைக் குறித்து யாரும் கேள்விகள் கேட்டிருக்கிறார்களா?
எப்போதாவது அப்படி நடப்பதுண்டு. நான் எழுதியதை பற்றி முற்றிலும் புதிய அர்த்தங்களுடன் என்னை கேள்வி கேட்பவர்களும் இருக்கிறார்கள். எப்போதாவது நிகழும் விஷயமிது.

உங்கள் தலைக்குள் பல எண்ணங்களை ஓட விட்டபடி வாழ்பவரா நீங்கள்?

ஆம் என் தலைக்குள் பல எண்ணங்கள் ஓடியபடி இருக்கும். இருந்தும் எந்த புதிய எண்ணங்களும் இல்லாததைப் போல பல தினங்கள் வெறுமே கழியும். ஆனால் எதையாவது எழுத துவங்கிவிட்டால் பித்து பிடித்ததைப் போல் ஒரு வாரத்தின் ஏழு நாட்களிலும், ஒரு நாளைக்கு பத்து அல்லது பதினைந்து மணிநேரங்கள் உழைப்பேன். இப்படி நடக்கும் நிகழ்வுகளே என் கதைகளை தீர்மானிக்கும்.

ஆக ஒரு முழு கதைக்கு ஒரு சிறு நிகழ்வு அல்லது ஒரு சிறு சொற்றொடர் கூட போதுமானது, இல்லையா?

எப்போதும் ஏதாவது ஒரு சிறு தெறிப்பே என்னை கதை எழுத உந்துவதாக இருக்கும். அந்த கதையை நான் எழுதத்துவங்கும் போதுதான், என் கதையை நான் தரிசிப்பேன். ஒருவகையில், அது என் மீது துள்ளியபடி இருக்கும்.

நீங்கள் கதை எழுதும் போது, நிஜத்தில் வாழாத உங்கள் கதாபாத்திரங்கள் குறித்து நீங்கள் எவ்வளவு அறிந்திருப்பீர்கள்?

நான் கதையை எழுதும் போது, என் கதாபாத்திரங்கள் ஏற்கனவே நான் நன்கறிந்தவர்களாகவே தோன்றும். இது எனக்கு விளங்காத மர்மமான விஷயம். என் கதை முடியும் முன்பே அவர்களை நான் வெகு நன்றாக அறிந்திருப்பேன். கதையை நான் முடிக்கும் முன்பே அவர்கள் இதயத்தில் மறைந்திருக்கும் ரகசியங்களை நான் அறிந்திருப்பேன்.

கார்வரைப் பொருத்தவரை வன்முறை அல்லது வன்முறைக்கான பீதி ஆகியவை இந்த உலகில் பெரும் பங்கு வகிக்கிறது; கதாபாத்திரங்கள் எப்போதும் வன்முறை கைகொள்கின்றனர்.

ஆபத்துகள் சூழ்ந்த போதும், சமூக தளத்தில் வன்முறைக்கான சாத்தியங்கள் விரவியிருக்கும் போதும், அவர்கள் எப்போதும் வன்முறையை கைகொள்வதில்லை. ஆனால் இந்த உலகம் ஆபத்துகளும் வன்முறையும் சூழ்ந்த இடம்தான். குறிப்பாக நீங்கள் உங்கள் வீட்டு வாடகைக்குக் கூட பணமில்லாமல் பயந்து கவலைப்படும் சூழ்நிலையில். “What is it?” எனும் கதையை குறித்து யோசித்தால், அந்த மனைவி வீட்டின் நிதிப்பற்றாக்குறை சமாளிக்க காரை விற்க வெளியே கிளம்பும் போது, அவள் குடிபோதையில் வீட்டிற்கு திரும்புகையில் அவள் கணவன் அவளை அடிக்க முற்படுதல், இது போன்ற இடங்கள் வன்முறைக்கு நெருக்கமாக அமைகின்றன. அங்கு ஒரு பீதி உள்ளது. ஆனால் அந்தக் கணவன் தன் வாழ்க்கையின் நுனியில் தத்தளித்தபடி இருக்கிறான். இது போன்ற சூழ்நிலையில் உள்ள எந்தவொரு மனிதனும் எதற்கும் தயாராக இருப்பான். எதுவும் சாத்தியம். எந்த கொடூரமும் சாத்தியம். இத்தகைய வன்முறைகள் எதுவும் முறையான காரணங்களற்றவை என்று நான் கருதவில்லை. இத்தகைய கதாபாத்திரங்களின் உலகம் எப்போதும் இன்பமயமாக இருப்பதில்லை.

உங்களின் ஒரு சில கதைகள், அவற்றை நான் நகைச்சுவை தன்மை கொண்டவை என்று கூறமாட்டேன், இருந்தும் ‘JERRY AND MOLLY AND SAM’ எனும் கதை, அதில் ஒரு மனிதன் தன் வளர்ப்பு நாயிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்த கதை அது. இந்த கதையும், இன்னும் சில கதைகளும் வேடிக்கையானவை.

என் கதைகளில் நிறைய நகைச்சுவை உண்டு. சில சமயங்களில், அவை அவல நகைச்சுவையாக (dark humour) அமைகின்றன. அசாதரணமான சந்தர்ப்பங்களில் நகைச்சுவை வெளிப்படும். தன்னுடைய காதிலிருந்து பிதுங்கி வெளியேறிய அழுக்குடன், ஷேம்பெய்ன் அருந்தும் ஒருவனைப் பற்றிய ‘Careful’ என்ற கதையை சென்ற மாதம் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் வாசித்தேன். முக்கால்வாசி கதையை நான் தாண்டியபோது அரங்கில் இருந்தவர்கள் வெடித்து சிரித்தனர். எனக்கு மிகவும் வேடிக்கையாகப்பட்டது. இருந்தும் அது நன்மையே. மக்கள் இது போன்ற நகைச்சுவையை ரசிக்கும் போது நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் பெரும்பாலான சமயங்களில் இத்தகைய சிரிப்புகள் வெறும் புன்னகையாகவே அமைகின்றன.

உங்கள் சூழல் மாறிவிட்டிருப்பதை, அதன் விளைவான எழுதுவதற்கான உங்கள் உந்துதல்கள் மாறிவிட்டிருப்பதை எப்படி காண்கிறீர்கள்?

என் எழுத்து மாறிவிட்டிருக்கிறது. அது குறித்து எந்த சந்தேகமும் எனக்கில்லை. சென்ற வருடம் நான் எழுதிய கவிதைகள் முற்றிலும் வேறு வகையாக இருக்கின்றன. இது வரையில் நான் எழுதிய எந்த கவிதையை போலவும் இல்லை. ஒப்பீட்டில் தற்போதைய கவிதைகளே சிறந்தவை என்று என்னால் தைரியமாக சொல்ல முடியும். இப்படி சொல்வதினால் ‘Fires’ தொகுப்பிலிருக்கும் கவிதையை நான் நன்றியற்றவனாக மாறவில்லை. நான் சொல்லவருவது, என் எழுத்து மாறியிருக்கிறது, மேலும் அது சிறப்பானதாகவும் இருக்கிறது. ஏனெனில் எழுத்தாளன் மாற்றமடைகிறான். அது நல்லதென்றே நினைக்கிறேன். ஏனெனில் ஒரு எழுத்தாளன் ஒரே கதையை, ஒரே கவிதையை திரும்ப திரும்ப எழுதிக் கொண்டிருக்க முடியாது.

என்னை பாதிக்கும் ஒரு விஷயம் என்னவெனில், நடைமுறையில் நம்மிருவருக்கும் (வாசகன் மற்றும் எழுத்தாளன்) இடையில் பொதுவான களமென்று ஒன்றுமில்லை. இந்த பரிமாறல், இது ஒரு அசாதாரணமான உறவு.

இது நல்லது என்றே நினைக்கிறேன். நாம் இருவரும் மனிதர்கள் என்ற விஷயமே நம் இருவருக்கும் பொதுவான உண்மை. இந்த உண்மையை மீண்டும் மீண்டும் சொல்வதே எழுத்தின் மற்ற பணிகளில் முக்கியமானது. எழுத்து என்பது இது குறித்துதான். எழுத்து நம் அனைவருக்குமான தொடர்பை உணர செய்கிறது. இசையிலும் இதேதான் நடக்கிறது. உங்களால் மொஸார்ட்டின் இசைக் கோர்வையை ரசிக்க முடியும். உங்களுக்கும் மொஸார்ட்டுக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருந்தும் சில இசைக் கோர்வைகளை நான் கேட்கும் போது, நாமனைவரும் இணைந்து விடுகிறோம். நம்மை ஏதோவொரு வகையில் அது பாதிக்கிறது. நம்மை அது அசைத்துப் பார்க்கிறது.